உள்ளூர் பழக்கங்களும் உண்மை வணக்கமும்
1 மக்கள் சிநேகப்பான்மையுடன் பழகும்போது, அவர்களுடைய பாரம்பரிய பழக்கவழக்கங்களிலும் விசேஷ நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள பெரும்பாலும் நமக்கு அழைப்புவிடுக்கிறார்கள். இவை, குழந்தை பிறப்பு, திருமணங்கள், மரணத்துடன் சம்பந்தப்பட்ட துக்க நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவையாக இருக்கலாம். விசுவாசிகளாக இல்லாத நண்பர்களோ உறவினர்களோ இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஒரு கிறிஸ்தவரை அழைக்கையில் அவர் என்ன செய்ய வேண்டும்?
2 ஒரு குறிப்பிட்ட உள்ளூர் பழக்கவழக்கத்துடன் ஒத்துப் போவதா வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்கு முன் நன்கு சிந்தித்துப் பார்ப்பது எப்போதுமே சாலச் சிறந்தது. அப்படி சிந்திக்கையில் பின்வரும் அம்சங்களுக்கு கவனம் செலுத்த வேண்டும்: இந்தப் பழக்கவழக்கம் எப்படி ஆரம்பமானது அல்லது இப்போது அது எதை அர்த்தப்படுத்துகிறது? இவை கடவுளுடைய வார்த்தைக்கு முரணாக உள்ளனவா? இவற்றிற்கு வெறுமனே போய் தலையைக் காட்டிவிட்டு வர தீர்மானித்தால் நம்முடைய நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படுமா? சில பழக்கவழக்கங்களில் கலந்துகொள்வது அல்லது கலந்துகொள்ளாதிருப்பது மற்றவர்களை தேவையில்லாமல் சங்கடப்படுத்தவோ இடறலடையவோ செய்யுமா?
3 குழந்தை பிறப்பு: எல்லா குடும்பங்களுமே, புதிய குழந்தையின் வருகையால் குதூகலம் அடைகின்றன; ஆனால் சீக்கிரத்திலேயே நாமகரணம் அல்லது பெயர் சூட்டு விழாவிற்கு நண்பர்களும் உற்றார் உறவினர்களும் அழைக்கப்படலாம். இது இந்து சாஸ்திரப்படியான சடங்குகளுடன் பூஜாரிகள் அல்லது குருக்கள் நடத்தி வைக்கும் மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி; இதில் குழந்தையின் ஜாதகமும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
4 பொதுவாக குழந்தைக்கு ஏழு மாதமாகையில் மற்றொரு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்படும்; அது அன்னப்பிரசாதம் அல்லது முதல் தடவையாக பிள்ளைக்கு அன்னமுதூட்டும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் உட்படும் சடங்காச்சாரங்களும் எதிர்பார்ப்புகளும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டாலும் இது சமூக நிகழ்ச்சியாக அல்ல, ஆனால் மத சம்பந்தப்பட்ட ஒன்றாகவே எல்லா இடங்களிலும் கருதப்படுகிறது; சடங்குகளை நடத்துவதற்கு அல்லது குறிப்பிட்ட மந்திரங்களை ஓதுவதற்கு சில சமயங்களில் புரோகிதர்கள் அமர்த்தப்படுகிறார்கள். சில கிறிஸ்தவமண்டல பிரிவுகளில் உள்ளூர் மதகுரு இதை நடத்தி வைக்கிறார்.
5 பைபிள் காலங்களில் குழந்தைக்கு பெயர் சூட்டுவதும் பால் மறக்கப் பண்ணுவதும் முக்கியமான சம்பவங்களாக கருதப்பட்டன. சில சமயங்களில் அவை குதூகலமாக கொண்டாடப்பட்டன. (ஆதி. 21:8; லூக். 1:59; 2:21) எனினும் மேற்குறிப்பிடப்பட்ட பெயர் சூட்டு விழாவும், அன்னமுதூட்டும் விழாவும் உண்மையிலேயே மத நிகழ்ச்சிகளாக அல்லது பூசைகளாக இருப்பது தெளிவாகவே தெரிகிறது; இவற்றில் கலந்துகொள்பவர்கள் பார்வையாளர்களாக இருக்கிறார்கள் அல்லது சடங்குகளில் பங்கெடுக்கிறார்கள். இவற்றில் பைபிளுக்கு முரணான கருத்துக்களும் பழக்கவழக்கங்களும் உட்பட்டுள்ளன; இவற்றில் கலந்துகொள்பவர்களுக்கு பிரசாதம் கொடுக்கப்படலாம் அல்லது மற்றொரு மதத்தை சேர்ந்த குருவோ பூஜாரியோ நடத்தும் பிரார்த்தனையில் அவர்கள் பங்குகொள்ள வேண்டியிருக்கலாம். வெளிப்படுத்துதல் 18:4-லுள்ள கட்டளைப்படி இத்தகைய காரியங்களில் கிறிஸ்தவர்கள் பங்கெடுக்க முடியாது.
6 திருமணங்கள்: பொதுவாகவே, திருமண வைபவத்திலும் வரவேற்புகளிலும் கலந்துகொள்ளும்படி பெருமளவில் அழைப்பு கொடுக்கப்படுகிறது. வரவேற்பில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தி, மண விருந்தை சாப்பிட்டு விட்டுப் போகும்படி மட்டுமே பொதுவாக நண்பர்களிடமும் தூரத்து உறவினர்களிடமும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே இடத்தில் பல்வேறு சடங்காச்சாரங்களை பூஜாரி நடத்துவது பெரும்பாலும் சகஜம்; ஆனாலும் அவை நல்ல நேரம் பார்த்து நடத்தப்படுவதால் பொதுவாக திருமண வரவேற்பு நடத்தப்படும் நேரத்தில் இருக்காது; இதனால் அந்தச் சடங்காச்சாரங்களுக்கு வரும்படி மற்றவர்கள் அந்தளவு எதிர்பார்க்கப்படுவதில்லை. இருந்தாலும் நெருங்கிய குடும்ப அங்கத்தினர்கள், மத சடங்காச்சாரங்களை பின்பற்றுவது முதற்கொண்டு, சாதாரண பழக்கவழக்கங்களை பின்பற்றுவது வரை மற்ற எல்லா விதத்திலும் திருமண வைபவத்தை வைதீக முறைப்படி நடத்தி வைப்பதில் பெரும்பாலும் மூழ்கிவிடுகிறார்கள்; இந்த முறைமைகள் ஆரம்பத்தில் பின்பற்றப்பட்டதற்கான காரணங்கள் மறக்கப்பட்டு இப்போது சமுதாயத்தில் வெறும் சம்பிரதாயமாகவே நடத்தப்படுகின்றன. யெகோவா அல்லாமல் பிற தெய்வ வணக்கத்துடன், பொய் மத நம்பிக்கைகளுடன், அல்லது கெட்ட ஆவிகளிடமுள்ள பயத்துடன், அவற்றை சாந்தப்படுத்துவதற்கான முயற்சிகளுடன் சம்பந்தப்பட்ட எதிலும் கலந்துகொள்ளாமல் விலகியிருக்கவே நாம் விரும்புகிறோம்.
7 மரணத்துடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள்: இந்த சந்தர்ப்பங்களில், இழப்பால் துக்கிக்கும் நம்முடைய நண்பர்களையும் அன்பானவர்களையும் சந்தித்து, ஆறுதல் அளிப்பதற்கு அன்பும் அனுதாபமும் நம்மைத் தூண்டலாம். எனினும் சத்தியத்தில் இல்லாத நம் குடும்பத்தினர் அநேகர், பல்வேறு இறுதி சடங்குகளில் அல்லது அந்திமச் சடங்குகளில் நாம் கலந்துகொள்ளும்படி எதிர்பார்க்கலாம். ஒருவேளை அந்த நபர் இறந்த அன்று, அங்குள்ள உறவினர்களில் ஆண்கள் சவத்தை மயானம் வரை சுமந்து செல்லும்படி எதிர்பார்க்கப்படலாம்; அதன் பின்பு அஸ்தி சாம்பலை எடுத்து கலசத்தில் நிரப்பி அதை கங்கையில் அல்லது ஏதேனும் ஆற்றில் கரைக்கும்படி எதிர்பார்க்கப்படலாம். குறிப்பிட்ட நாட்களுக்கு நெருங்கிய உறவினர்கள் பிரத்தியேக உடை, உணவு, சடங்காச்சாரங்களுடன் துக்கம் அனுஷ்டிப்பார்கள். பொதுவாக 13-ம் நாள் இறுதி சடங்குகளுக்கு முடிவாக ஷ்ரத்தா நடத்தப்படும் அதாவது சாந்தி செய்யப்படும். அதன் பின்பு பொதுவாக குடும்பத்தார் பழையபடி உணவு சாப்பிட ஆரம்பிப்பார்கள், உற்றார் உறவினர்களும் நலவிரும்பிகளும் மறைந்த ஆத்துமாவிற்கு மரியாதை செலுத்த வரும்படி அழைக்கப்படுவார்கள். பூஜை முடிந்த பின்பு உணவருந்துவதற்கு அதாவது ஷ்ரத்தாவுக்கு அழைக்கப்படுவது வழக்கம்.
8 சுத்தமான மனசாட்சியைக் காத்துக்கொள்ளுதல்: மேற்குறிப்பிடப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் வேத மந்திரங்கள் ஓதி, ஆத்துமா அழியாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு பூஜாரியோ, ஒரு பிராமணரோ, அல்லது குடும்பத்திலுள்ள ஆண் மகனோ சடங்காச்சாரங்களை நடத்துகிறார். அதைப் போலவே, சர்ச்சுக்குப் போகிற குடும்பங்களில் நடக்கும் பெயர் சூட்டு விழாக்களின்போதும் திருமணங்களின்போதும் சவ அடக்கங்களின்போதும் கிறிஸ்தவமண்டல குருமார்கள் தலைமை தாங்குகிறார்கள்.
9 பிற தெய்வங்களை போற்றி புகழுகிற, பொல்லாத ஆவிகளை சாந்தப்படுத்துகிற, ஆத்துமா அழியாமை நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற சில குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்படி ஓர் உண்மை கிறிஸ்தவர் வற்புறுத்தப்படுவதாக உணருகையில் என்ன செய்யலாம்? இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்படி ஒரு மனைவியோ, மருமகளோ, வளர்ந்த மகனோ குடும்பத்தாரால் மிகவும் வற்புறுத்தப்படலாம்.
10 அப்போது ஒரு கிறிஸ்தவர் நாகமானின் உதாரணத்தை எண்ணிப் பார்க்க வாய்ப்பிருக்கிறது. குஷ்டரோகத்திலிருந்து சுகமடைந்த பின்பு யெகோவா தவிர வேறு எந்த தெய்வத்தையும் வணங்காதிருக்க அவர் தீர்மானமாய் இருந்தார். எனினும், ராஜாவுக்கு உதவியாக அவருடன் எப்போதும் செல்ல வேண்டியிருந்ததால் புறமத கடவுளாகிய ரிம்மோனுடைய கோவிலுக்கும் ராஜாவுடன் செல்ல நேர்ந்தது. ராஜா சிரம் தாழ்த்தி வணங்குவதில் அவருக்கு உதவ வேண்டியிருந்திருக்கலாம். எனவே அதை யெகோவா தேவன் மன்னிக்கும்படியும் அதற்காக அவர்மேல் கோபப்படாதிருக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். யெகோவாவின் வணக்கத்தாராக மாறிய நாகமான் இந்தப் பொய் கடவுளை வணங்கவில்லை; ஆணைக்கு அடிபணிவதற்காக மட்டுமே அவர் அங்கு சென்றார்.—2 இரா. 5:1-19.
11 அதே விதமாக நாமும் நடந்துகொள்ள நினைக்கலாம்—ஒப்புக்கு அந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றுவிட்டு, பொய் மத காரியங்கள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்துவிடலாம் என நினைக்கலாம். அவ்வாறு ஒருவர் செய்வதும் செய்யாதிருப்பதும் அவரவரது தனிப்பட்ட தீர்மானம். கணவருடைய அல்லது பெற்றோருடைய விருப்பங்களை மதித்து நடப்பதற்கும் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்து அவருடைய வார்த்தையால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சிக்கு கட்டுப்படுவதற்கும் இடையே நிகழும் போராட்டத்தை அவர்களே தீர்க்க வேண்டியிருக்கலாம்.—எபே. 6:1; 1 பே. 3:16.
12 மற்றவர்கள் உங்களை கவனிக்கலாம் என்பதை நினைவில் வையுங்கள்; உங்கள் நிலைநிற்கையை அறியாதபடியால், நீங்கள் சடங்காச்சாரங்கள் அனைத்திலும் பங்கெடுப்பதாக அல்லது அந்த நிகழ்ச்சி எதற்காக நடக்கிறதோ அதை அங்கீகரிப்பதாக அவர்கள் நினைத்துக் கொள்ளலாம். அப்போஸ்தலன் பவுல் உற்சாகப்படுத்தியது போல செய்வது எவ்வளவு ஞானமானதாக இருக்கும்: “கிறிஸ்துவின் நாளுக்கென்று கறையற்றவர்களாகவும் மற்றவர்களை இடறலடைய செய்யாதவர்களாகவும் இருக்கும்படி அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.”—பிலி. 1:10, NW.
13 நம்முடைய வேதப்பூர்வ நிலைநிற்கையைப் பற்றி நம்முடைய சொந்தபந்தங்களுக்கு விளக்க முயற்சி செய்வது சிறந்ததாக இருக்குமல்லவா? ஏதேனும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும்படி அழைக்கப்படுவதற்கு முன்பாகவே நம் நிலைநிற்கையை விளக்குவதற்கு பெரும்பாலும் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன; எஸ்தர் ராணியின் முன்மாதிரியைப் பின்பற்றி, மற்றவர்கள் சாவகாசமாக இருக்கும் நேரத்தை அல்லது நல்ல மனநிலையுடன் இருக்கும் நேரத்தை நாம் தேர்ந்தெடுக்கலாம். அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தங்கள் மனசாட்சி ஏன் இடமளிக்காது என்பதை சாதுரியமாக விளக்கி நம்முடைய நம்பிக்கைகளைக் குறித்து அப்போது சாட்சி கொடுக்கலாம். ஒருவேளை நாம் அவற்றில் பெயருக்கு கலந்துகொண்டு, எந்தச் சடங்காச்சாரத்திலும் பங்கெடுக்காவிட்டால் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படலாம் என்பதையும் அதோடு சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களையும் சுட்டிக்காட்டலாம்.—எஸ்தர் 5:1-8.
14 பைபிள் போதனைக்கு முரணாக இருப்பதாக தோன்றும் எந்த ஜெபங்களிலோ மத பழக்கவழக்கங்களிலோ மனசாட்சிப்பூர்வமாய் உண்மை கிறிஸ்தவர் பங்கெடுக்க முடியாது. வரம்பை மீறாமலேயே எந்தளவுக்கு விசுவாசதுரோக செயல்களில் ஈடுபடலாம் என முயன்று பார்க்க அவர் விரும்புவதும் இல்லை. “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? . . . அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? . . . ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்ற வேதப்பூர்வ கட்டளைக்கு அவர் கீழ்ப்படிகிறவராக இருக்க வேண்டும்.—2 கொ. 6:14-17.
15 இத்தகைய மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதிருக்கையில், நம்முடைய சொந்தபந்தங்களை நாம் புறக்கணிக்கிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாதிருக்கவும் வேண்டும். குடும்பத்தின் மீதுள்ள அக்கறையையும் அன்பையும் மற்ற வழிகளில் காட்டுவதற்கு கவனமாக இருக்க வேண்டும். குழந்தையைப் பெற்றெடுத்தவர்களுக்குப் பரிசுகளை அளிப்பது அக்குழந்தை பிறந்ததில் நமக்குள்ள சந்தோஷத்தைக் காட்ட எப்போதுமே சிறந்த வழியாக இருக்கும். இத்தகைய பரிசுகளைக் கொடுக்க ஏதேனும் ஒரு நிகழ்ச்சி வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. திருமண வரவேற்புக்கு தேவையானவற்றை தயார்படுத்துவதில் நம் உடல் உழைப்பையும் ஆதரவையும் கொடுப்பது அல்லது விருந்தினரும் உறவுக்காரர்களும் வருகையில் வரவேற்பது, திருமண காரியங்களில் நமக்கு ஆர்வமில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமலேயே பெரும்பாலும் மத சடங்காச்சாரங்களிலிருந்து விலகி இருக்க வழி செய்யும். யாராவது இறந்துவிட்டால் மற்றவர்கள் சடங்காச்சாரங்களில் மும்முரமாக ஈடுபட்டிருக்கையில் நாம் அவர்களுக்கு அநேக நடைமுறையான உதவிகளை செய்யலாம். விருந்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் தேவையானவற்றை கவனித்துக் கொள்ளலாம் அல்லது அவர்கள் தங்க வசதி செய்து கொடுக்கலாம், எப்போதும் போல சாப்பிட்டுவிட்டு, பள்ளிக்கு போய்வரும் குழந்தைகளுக்கு அல்லது பேரன்பேத்திகளுக்கு உணவைத் தயாரித்துக் கொடுக்கலாம். சட்டப்படியான காரியங்களிலும், பதிவு செய்வது சம்பந்தப்பட்ட காரியங்களிலும் நடைமுறை உதவி அளிக்கலாம். அப்படி செய்கையில், அன்னப்பிரசாதத்தில், ஷ்ரத்தாவில் அல்லது வேறு மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாததால் நமக்கு அன்பில்லை என குடும்பத்தார் நம்மைப் பற்றி தப்புக்கணக்குப் போடாதிருப்பார்கள்.