குடும்பத் தலைவர்களே—ஆன்மீக ஒழுங்கை தவறாமல் காத்துக்கொள்ளுங்கள்
1 பாபிலோனின் விக்கிரக ஆராதனை, ஊழல் ஆகியவற்றின் மத்தியில் பல பத்தாண்டுகளைக் கழித்த பிறகும், தானியேல் யெகோவாவை “இடைவிடாமல்” சேவித்தவர் என அறியப்பட்டிருந்தார். (தானி. 6:16, 20) அவர் தன் ஆன்மீகத்தை எப்படி காத்துக்கொண்டார்? மெய் வணக்கத்துடன் சம்பந்தப்பட்ட காரியங்களை பழக்கமாக செய்வதற்கு அவர் ஓர் ஒழுங்கை கடைப்பிடித்ததாக பைபிள் பதிவு குறிப்பிடுகிறது. உதாரணமாக, தானியேல் தன் மேல் அறையிலிருந்து வழக்கமாக ஒரு நாளைக்கு மூன்று முறை ஜெபம் செய்தார். (தானி. 6:10) நியாயப்பிரமாணத்தை வாசிப்பது போன்ற மற்ற ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதற்கும் அவர் திட்டவட்டமான ஒழுங்கை கடைப்பிடித்து வந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, உயிருக்கு அச்சுறுத்தலான ஒரு சோதனையை எதிர்ப்பட்டபோதும், தானியேல் யெகோவாவிடம் தனக்கு அசைக்க முடியாத பக்தி இருப்பதை காண்பித்தார்; அற்புதகரமாக விடுவிக்கப்பட்டார்.—தானி. 6:4-22.
2 அதே விதமாகவே இன்று நாம் ‘எப்போதும் விழித்திருக்க’ கடினமாக முயல வேண்டும். (எபே. 6:18, NW) நாம் வாழும் உலகம் ‘பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’ (1 யோ. 5:19) திடீரென்று வரும் எதிர்ப்போ சோதனைகளோ நம் விசுவாசத்தை பரீட்சிக்கலாம். மிகுந்த உபத்திரவத்தின்போது, மாகோகின் கோகு கடவுளுடைய ஊழியர்களை முழுமூச்சாக தாக்க வரும்போது தப்பிக்கவே முடியாததுபோல் தோன்றலாம். அப்போது யெகோவாவில் முழு நம்பிக்கை வைப்பது அவசியம்.—எசே. 38:14-16.
3 “ஒரு முக்கியமான அம்சம் என்னவெனில், திறம்பட்ட குடும்ப பைபிள் வாசிப்பையும் படிப்பையும் கலந்துரையாடலையும் வாழ்க்கை முறையாக ஆக்குவதே.” இதுவே, “குடும்பங்களே—அன்றாட பைபிள் வாசிப்பை உங்கள் வாழ்க்கை முறை ஆக்குங்கள்!” என்ற 1998 மாவட்ட மாநாட்டு நாடகத்தின் முன்னுரையில் சொல்லப்பட்டது. அது தொடர்ந்து சொன்னதாவது: “குடும்பங்கள் அப்படிப்பட்ட ஒரு கலந்துரையாடலை, தவறாமலும் பைபிளை தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டும் விதத்திலும் நடத்தினால், பைபிள் சார்ந்த இந்தப் பழக்கம் குடும்பத்தில் பிரமாதமான பலனைத் தரும். அது நம் அறிவை வளர்க்கும். நம் விசுவாசத்தை பலப்படுத்தும். மேலுமாக, அது, பலமான விசுவாசத்தைக் காட்டிய பண்டைய ஆண்கள், பெண்களுடைய லட்சிய முன்மாதிரிகளை நமக்குக் காட்டுகிறது; இவர்களே நமக்குத் தூண்டுதல் அளித்து, சத்தியத்துக்காக நிலைநிற்கை எடுக்க நம்மை உந்துவிப்பவர்கள்.” சிறந்த ஆன்மீக ஒழுங்கின் பல்வேறு அம்சங்களை இங்கே சிந்திக்கையில், குடும்பத் தலைவர்கள் தங்கள் குடும்பத்தின் ஆன்மீக திட்டத்தை மேம்படுத்த ஓரிரண்டு வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
4 தினமும் கடவுளுடைய வார்த்தையை சிந்தியுங்கள்: “எதிர்த்து நிற்போர் யாருமின்றி கடவுளின் ராஜ்ய ஆட்சி தொடருகையில், பரலோகத்தில் செய்யப்படுவதைப் போல அவருடைய சித்தம் பூமியிலேயும் செய்யப்படும். ‘தீங்குசெய்யவோ கேடுசெய்யவோ’ கொடூரமான மனிதரோ, ஏன் மிருகமோகூட இருக்காது. (ஏசா. 11:9; மத். 6:9, 10)” தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல்—2001 சிறுபுத்தகத்தில் செப்டம்பர் 11-ம் தேதிக்கான தினவசன குறிப்புகளில் இந்த வார்த்தைகள் இருந்தன. இந்த நினைவூட்டுதல் எவ்வளவு ஆறுதலளித்தது! ஒரு குடும்பத் தலைவராக, உங்கள் குடும்பத்தோடு தினவசனத்தையும் அதன் குறிப்புகளையும் தினமும் சிந்திப்பது உங்களுடைய பழக்கமா? இது மிகவும் பயனுள்ளது. காலையில் எல்லாருமாக சேர்ந்து படிக்க முடியாவிட்டால் ஒருவேளை வேறொரு சமயத்தில் இதைச் செய்யலாம். ஒரு தகப்பனார் சொன்னார்: “தினவசனத்தைக் கலந்துபேசுவதற்கு சாயங்கால நேரம் எங்களுக்கு சௌகரியமான சமயமாக இருந்திருக்கிறது.”
5 குடும்பமாக சேர்ந்து தினவசனத்தை கலந்தாலோசிக்கும் நல்ல பழக்கம் உங்களுக்கு ஏற்கெனவே இருக்கிறது என்றால் உங்களை பாராட்ட வேண்டும். அதே சமயத்தில் பைபிளிலிருந்து ஒரு பாகத்தையும் வாசிப்பதன்மூலம் நீங்கள் மேலும் நன்மை அடையலாம். தினவசனம் எடுக்கப்பட்ட முழு அதிகாரத்தையும் வாசிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. வேறு சிலர் தொடர்ச்சியான பைபிள் வாசிப்பு திட்டத்தை, அதாவது, பைபிளில் குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து கிரமமாக வாசித்து வரும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். தினமும் பைபிளை வாசிப்பது, யெகோவாவை பிரியப்படுத்தாமல் போய்விடுவோமோ என்ற ஆரோக்கியமான பயத்தை வளர்க்கவும் அவருடைய சித்தத்தை செய்வதற்கான ஆவலை அதிகரிக்கவும் உங்கள் குடும்பத்துக்கு உதவும்.—உபா. 17:18-20.
6 உங்கள் குடும்பத்தின் பைபிள் வாசிப்பு திட்டத்திலிருந்தும் தினவசன கலந்தாலோசிப்பிலிருந்தும் அதிக பயனடைய, அந்தத் தகவலை நடைமுறையில் எப்படி பொருத்தலாம் என்பது பற்றி சிந்திக்க சில நிமிடத்தை செலவிடுவது நல்லது. ஊழியப் பள்ளி பாடப்புத்தகம், பக்கம் 60-ல் இந்த ஆலோசனையை அளிக்கிறது: “அவ்வாரத்திற்குரிய பைபிள் வாசிப்பு பகுதியிலிருந்து சில வசனங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் அர்த்தத்தைக் குறித்து கலந்தாலோசித்து, அதன்பின் இதுபோன்ற கேள்விகளைக் கேட்கலாம்: ‘இது நமக்கு எப்படி வழிகாட்டுகிறது? இந்த வசனங்களை ஊழியத்தில் எப்படி பயன்படுத்தலாம்? யெகோவாவையும் அவர் செயல்படும் விதத்தையும் பற்றி இவை என்ன காட்டுகின்றன, இது நாம் அவரை இன்னுமதிகமாக போற்றுவதற்கு எப்படி உதவுகிறது?’” உங்கள் குடும்பத்திலுள்ள அனைவருமே ‘கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ள’ இதுபோன்ற ஆன்மீக உரையாடல்கள் உதவியாக இருக்கும்.—எபே. 5:17.
7 குடும்பப் படிப்பு: ஆன்மீக காரியங்களுக்குத்தான் முதலிடம் என்பதை குடும்பத் தலைவர்கள் பிள்ளைகளுக்கு காட்ட சிறந்த வழி வாராந்தவறாமல் குடும்பப் படிப்பை நடத்துவதே. ஓர் இளைஞன் இவ்வாறு நினைவுபடுத்திக் கூறுகிறான்: “சில சமயங்களில் அப்பா வேலையிலிருந்து வரும்போதே ரொம்ப களைப்பாக இருப்பார், விழித்திருப்பதே அவருக்கு கஷ்டமாக இருக்கும். ஆனாலும் படிப்பு நடக்கும், இதுவே அதன் முக்கியத்துவத்தை நாங்கள் மதித்துணர வைத்தது.” இந்த ஏற்பாட்டை வெற்றிகரமானதாக்க பிள்ளைகளும் தங்கள் பங்கை செய்யலாம். ஒன்பது பிள்ளைகளை உடைய ஒரு குடும்பத்தினர் குடும்பப் படிப்புக்காக தினமும் ஐந்து மணிக்கு எழுந்தார்கள், ஏனென்றால் வேறு எந்த நேரமும் அவர்களுக்கு ஒத்து வரவில்லை.
8 குடும்பப் படிப்பு பலன் தரத்தக்கதாக இருப்பதற்கு குடும்பத் தலைவர் ‘தன் போதனையைக் குறித்து எப்போதும் கவனமாக இருக்க’ வேண்டும். (1 தீ. 4:16, NW) ஊழியப் பள்ளி பாடப்புத்தகம், பக்கம் 32 இவ்வாறு குறிப்பிடுகிறது: “திறம்பட்ட குடும்பப் படிப்புக்கு முதல் படி, உங்கள் குடும்பத்தையே படிப்பதாகும். உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் ஆன்மீகத்தில் எப்படி முன்னேறுகிறார்கள்? . . . பிள்ளைகளோடு வெளி ஊழியத்திற்கு போகும்போது, நண்பர்கள் முன் தங்களை யெகோவாவின் சாட்சிகளாக அறிமுகப்படுத்திக்கொள்ள கூச்சப்படுவதாக தெரிகிறதா? குடும்பமாக பைபிள் வாசிப்பதையும் படிப்பதையும் அனுபவித்து மகிழ்கிறார்களா? உண்மையிலேயே யெகோவாவின் வழியில் நடக்க முயற்சி செய்கிறார்களா? கூர்ந்து கவனிப்பது, ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரிலும் ஆன்மீக குணங்களை விதைப்பதற்கும் வளர்ப்பதற்கும் குடும்பத் தலைவராக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும்.”
9 சபை கூட்டங்கள்: சபை கூட்டங்களுக்கு தயாரிப்பதும், அவற்றில் கலந்துகொள்வதும் நீங்கள் கடைப்பிடிக்கும் வாராந்தர ஒழுங்கின் முக்கிய பாகமாக இருக்க வேண்டும். (எபி. 10:24, 25) அவ்வப்போது நீங்கள் குடும்பமாக சில கூட்டங்களுக்கு தயாரிக்கலாம். கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், முன்னதாகவே தயாரிப்பதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா? இந்த விஷயத்தில், கிரமமாக ஓர் ஒழுங்கைப் பின்பற்றுவது, உங்கள் தயாரிப்பின் தரத்தை முன்னேற்றுவித்து கூட்டங்களிலிருந்து நீங்கள் அதிக நன்மைகளைப் பெறவும் வழிவகுக்கும்.—நீதி. 21:5.
10 பழக்கமாக கடைப்பிடித்து வரும் ஆவிக்குரிய ஒழுங்கு பலன்தரத்தக்கதாக இருப்பதற்கு தரமும் ஸ்திரமும் முக்கியமான அம்சங்கள். எல்லா கூட்டங்களுக்கும் தயாரிப்பதற்கு உங்கள் சூழ்நிலைகள் இடமளிக்காவிட்டால் என்ன செய்வது? ஊழியப் பள்ளி, பக்கம் 31, இந்த ஆலோசனையை தருகிறது: “ஏதோ கடமைக்கு அவசரமாக படித்து முடித்துவிடாதீர்கள்; அல்லது உங்களால் எல்லாவற்றையும் படிக்க முடியாது என்பதற்காக ஒன்றையுமே படிக்காமல் இருந்துவிடாதீர்கள். மாறாக, எவ்வளவு படிக்க முடியும் என்பதை முடிவு செய்து அதை நன்கு படியுங்கள். இதை வாராவாரம் செய்யுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக, மற்ற கூட்டங்களுக்கும் தயாரிக்க முயலுங்கள்.”
11 குடும்பங்கள் கூட்டங்களுக்கு முன்கூட்டியே வந்தால், யெகோவாவை துதிப்பதற்கும் அவர் அளிக்கும் போதனையிலிருந்து பயன் பெறுவதற்கும் சரியான மனநிலையில் இருக்க உதவும். உங்கள் குடும்பத்திற்கு இந்த பழக்கம் இருக்கிறதா? இதற்கு நல்ல திட்டமிடுதலும் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியம். உங்கள் குடும்பம் எப்போதுமே கூட்ட தினத்தன்று அரக்கப்பரக்க காரியங்களை செய்வதாக இருந்தால் உங்கள் வழக்கத்தில் ஏதாவது மாற்றங்களை செய்ய முடியுமா? எவற்றையாவது முன்கூட்டியே செய்து முடிக்க முடியுமா? குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே அதிக பளு இருந்தால், மற்றவர்கள் அதைப் பகிர்ந்துகொள்ள முடியுமா? கூட்டத்திற்கு செல்ல எல்லாருமே கொஞ்சம் முன்னதாக தயாரானால் பரபரப்பு குறையுமா? நன்கு திட்டமிடுவது குடும்பத்திலும் சபையிலும் அமைதியான மனநிலையை வளர்க்க உதவும்.—1 கொ. 14:33, 40.
12 வெளி ஊழியம்: ஊழியத்தில் பங்கெடுப்பதற்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது நல்ல ஆன்மீக ஒழுங்கை காப்பதில் மற்றொரு அம்சம். ஜேஸன் என்ற இளைஞன் இவ்வாறு நினைவுகூருகிறான்: “எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை, சனிக்கிழமைதோறும் காலைநேரத்தை வெளி ஊழியத்தில் செலவிட்டோம். இது எனக்கு நல்லதாக இருந்தது, ஏனெனில், நான் எந்தளவுக்கு வெளி ஊழியத்தில் கலந்துகொண்டேனோ அந்தளவுக்கு அதன் நன்மையைக் கண்டேன், மேலும் அதை அதிகமதிகமாக அனுபவித்தும் மகிழ்ந்தேன்.” ஒவ்வொரு வாரமும் ஊழியத்திற்கு என்று திட்டவட்டமான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது, கிறிஸ்தவ ஊழியராக முன்னேற தங்களுக்கு உதவியதாக சாட்சிகளின் குடும்பங்களில் வளர்க்கப்பட்ட அநேகர் குறிப்பிட்டிருக்கின்றனர்.
13 வெளி ஊழியத்தில் உங்கள் குடும்பம் செலவிடும் நேரத்தை அதிக மகிழ்ச்சியான, பலன்தரத்தக்க சமயமாக்கவும் ஒரு திட்டவட்டமான ஒழுங்கு உதவும். இதை எப்படி செய்யலாம்? காவற்கோபுரம், ஜூலை 1, 1999, பக்கம் 21 பின்வரும் ஆலோசனையை சொன்னது: “அந்த வார வெளி ஊழியத்திற்கு தயாராக உங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு உதவ அவ்வப்போது குடும்ப படிப்பில் நேரம் ஒதுக்குகிறீர்களா? அப்படி செய்வது சிறந்த பலன்களை தரும். (2 தீமோத்தேயு 2:15) அதோடு அவர்களுடைய ஊழியத்தை அர்த்தமுள்ளதாகவும் பலன்தரத்தக்கதாகவும் ஆக்கும். இடையிடையே, அந்த வார குடும்ப படிப்புக்கான நேரம் முழுவதையுமே ஊழியத்திற்காக தயாராவதற்கு ஒதுக்கலாம். வெளி ஊழியம் பற்றிய சில அம்சங்களை குடும்ப படிப்பின் முடிவில் சுருக்கமாக சிந்திக்கலாம். அல்லது அந்த வாரத்தில் வேறு ஏதாவது சமயத்திலும் இதைப் பற்றி சிந்திக்கலாம்.” உங்கள் குடும்பம் இதை முயன்று பார்த்ததுண்டா?
14 தொடர்ந்து முன்னேறுங்கள்: இப்போது சிந்தித்தவற்றிலிருந்து, உங்கள் குடும்பம் சிறப்பாக செயல்படும் அம்சங்களை கவனித்தீர்களா? உங்கள் குடும்பத்தாரை பாராட்டி, அவற்றில் மேலும் முன்னேற முயலுங்கள். பல அம்சங்களில் முன்னேற வேண்டியதிருந்தால், ஒன்று அல்லது இரண்டு அம்சங்களை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பழக்கமாக கடைப்பிடிக்கும் ஆன்மீக ஒழுங்கின் பாகமாக அவை ஆனதும் இன்னும் ஓரிரண்டு அம்சங்களில் உழையுங்கள். நம்பிக்கையான மனநிலையையும் நியாயத்தன்மையையும் காத்துக்கொள்ளுங்கள். (பிலி. 4:4, 5, NW) உங்கள் குடும்பத்தில் நல்ல ஆன்மீக ஒழுங்கை காத்துக்கொள்வதற்கு அதிக முயற்சி தேவை; ஆனால் அந்த முயற்சி தகுந்ததே, ஏனென்றால் யெகோவா இவ்வாறு நமக்கு உறுதி அளிக்கிறார்: “ஒரே சீரான வழியைக் காத்துக்கொள்ளுகிறவன், கடவுளிடமிருந்து இரட்சிப்பைக் காணும்படி செய்வேன்.”—சங். 50:23, NW.