நற்பழக்கங்கள்—கடவுள் பக்தியுள்ளவர்களின் தனிப்பண்பு
1 இக்காலத்தில் நற்பழக்கங்களை மருந்துக்குக்கூட காண்பது அரிது. ஏன் அப்படி? மக்களின் எந்திரம் போன்ற வாழ்க்கையால், “தயவுசெய்து,” “நன்றி,” “மன்னிக்கவும்,” என்ற சொற்களை உதிர்த்துவிடும் நினைப்பே அவர்களுக்கு இல்லாமல் போய்விடலாம். கடைசி காலங்களில் நற்பழக்கங்கள் சீரழிந்துவிடும் என பைபிள் முன்னறிவித்தது; அதாவது, மனிதர் ‘தற்பிரியராய், வீம்புக்காரராய், அகந்தையுள்ளவர்களாய், நன்றியறியாதவர்களாய், சுபாவ அன்பில்லாதவர்களாய், இச்சையடக்கமில்லாதவர்களாய், நல்லோரை [“நல்லவற்றை,” NW] பகைக்கிறவர்களாய், துணிகரமுள்ளவர்களாய்’ இருப்பார்கள். (2 தீ. 3:1-4) இது போன்ற பண்புகளே துர்ப்பழக்கங்களை உருவாக்குகின்றன. கடவுள் பயமுள்ள கிறிஸ்தவர்கள் பிறரை அவமதிக்கும் இவ்வுலக பழக்கங்கள் தங்களை தொற்றிக்கொள்ளாதவாறு காத்துக்கொள்ள வேண்டும்.
2 நற்பழக்கங்கள் என்றால் என்ன? மற்றவர்களின் உணர்ச்சிகளை நன்றாக புரிந்துவைத்திருப்பது, மற்றவர்களோடு சமாதானத்துடன் ஒத்துவாழ அறிந்திருப்பது என்பதாக நற்பழக்கங்களுக்கு விளக்கமளிக்கலாம். பிறரிடம் கரிசனை காட்டுதல், மரியாதையாக நடந்துகொள்ளுதல், தயவு காட்டுதல், சாதுரியமாய் நடந்துகொள்ளுதல், பிறர் நலன் கருதி செயல்படுதல் ஆகியவை நற்பழக்கங்களின் அம்சங்கள். கடவுளிடமும் அயலாரிடமும் ஒருவர் கொண்டுள்ள அன்பிலிருந்தே இந்தத் தனிப்பண்புகள் பிறக்கின்றன. (லூக். 10:27) இதற்கென காசு பணம் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் பிறருடன் நாம் பழகும் விஷயத்தில் நமக்கு மிகவும் உதவியாய் இருப்பதில் இக்குணங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை.
3 இவ்விஷயத்தில், இயேசு கிறிஸ்து பரிபூரண முன்மாதிரி வகித்தார். பின்வரும் பொன்விதியை அவர் எப்பொழுதும் கடைப்பிடித்தார்: “மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (லூக். 6:31) இயேசு தம் சீஷர்களின் நலன்கருதி அன்பாக நடந்துகொண்டதை அறிகையில் நமக்கு ஆச்சரியமாய் இல்லையா? (மத். 11:28-30) அவரது நற்பழக்கங்கள் நன்னெறி புத்தகத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளிலிருந்து தோன்றவில்லை. அவை எதார்த்தமான, பரந்த நெஞ்சத்திலிருந்து தோன்றின. அவருடைய நல்ல முன்மாதிரியை பின்பற்ற நாம் முயல வேண்டும்.
4 கிறிஸ்தவர்கள் தங்கள் நற்பழக்கங்களை எப்பொழுதெல்லாம் கடைப்பிடிப்பது அவசியம்? நற்பெயர் எடுக்க வேண்டுமே என்ற ஆவலுடன் விசேஷ சந்தர்ப்பங்களில் மட்டுமா? மற்றவர்களால் தங்களுக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டிய சந்தர்ப்பங்களில் மட்டுமா? இல்லவே இல்லை! எல்லா சந்தர்ப்பங்களிலும் நற்பழக்கங்களை நாம் வெளிக்காட்ட வேண்டும். சபையில் ஒருவரோடு ஒருவர் கூட்டுறவு கொள்ளும்போது என்னென்ன வழிகளில் இதைப் பற்றி குறிப்பாக சிந்திக்க வேண்டும்?
5 ராஜ்ய மன்றத்தில்: ராஜ்ய மன்றம் வணக்கத்திற்கான இடம். யெகோவா தேவனின் அழைப்பிற்கிணங்க நாம் அங்கு செல்கிறோம். அந்த அர்த்தத்தில் நாம் விருந்தினர். (சங். 15:1, NW) ராஜ்ய மன்றத்திற்கு வருகையில் மிகச் சிறந்த முன்மாதிரியான விருந்தினராய் நாம் இருக்கிறோமா? நம் உடைக்கும் சிகை அலங்காரத்திற்கும் போதிய கவனம் செலுத்துகிறோமா? நிச்சயமாகவே, ஏனோதானோ என்றோ மிதமிஞ்சியோ நம்மை அலங்கரித்துக்கொள்வதை தவிர்க்க வேண்டியது அவசியம். மாநாடுகளுக்குச் சென்றாலும்சரி, வாராந்தர சபை கூட்டங்களுக்குச் சென்றாலும்சரி, யெகோவாவின் ஜனங்கள், கடவுள் பயமுள்ளவர்கள் என்ற சொல்லுக்கு இணங்க கண்ணியமான தோற்றத்திற்கு பெயர்பெற்றவர்கள். (1 தீ. 2:9, 10) இவ்விதங்களில் பரலோகத்திலிருந்து நமக்கு விருந்தளிப்பவருக்கும், அழைக்கப்பட்டிருக்கும் மற்ற விருந்தினருக்கும் கரிசனையையும் மரியாதையையும் நாம் காட்டுகிறோம்.
6 கூட்டங்கள் சம்பந்தமாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய மற்றொரு நற்பழக்கம், சரியான நேரத்திற்கு செல்வது. இது எப்பொழுதும் எளிதல்ல என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயமே. சிலர் வெகு தொலைவில் இருந்து வரலாம்; பெரிய குடும்பமாய் இருப்பதால் எல்லாரும் புறப்பட்டு வருவதும் அவ்வளவு எளிதல்ல. என்றாலும் சில சபைகளில், பிரஸ்தாபிகளில் ஏறக்குறைய 25 சதவீதத்தினர் ஆரம்ப பாட்டும் ஜெபமும் முடிந்த பிறகு வருவதே வழக்கமாய் இருப்பதாக கவனிக்கப்பட்டுள்ளது. இது கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயம். நற்பழக்கங்கள் என்பது மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து நடந்துகொள்வதுடன் சம்பந்தப்பட்டது என்பதை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். நம்மை விருந்துக்கு அழைத்திருக்கும் கிருபை பொருந்தியவரான யெகோவா, நம் நன்மைக்காகவே இப்படிப்பட்ட ஆவிக்குரிய விருந்துகளை ஏற்பாடு செய்துள்ளார். காலந்தவறாமல் தக்க சமயத்தில் ஆஜராவதன் மூலம் அவருடைய எண்ணங்களுக்கு நம் போற்றுதலையும் கரிசனையையும் காட்டுகிறோம். அதே சமயத்தில், கூட்டங்களுக்கு தாமதமாக வருவது, ஏற்கெனவே ஆஜராகியிருப்பவர்களின் கவனத்தை சிதறடிப்பதுடன் அவர்களுக்கு அவமரியாதை காட்டுவதாகவும் இருக்கும்.
7 நாம் ஆஜராகியிருக்கையில், புதியவர்கள் வந்திருப்பதை கவனிக்கிறோமா? அவர்களை வரவேற்பது நற்பழக்கங்களில் ஒன்று. (மத். 5:47; ரோ. 15:7) கனிவுடன் வாழ்த்து தெரிவிப்பது, உள்ளப்பூர்வமாய் கைகுலுக்குவது, தயவான புன்னகை புரிவது—இவையெல்லாம் சிறுசிறு விஷயங்களாய் இருந்தாலும், உண்மை கிறிஸ்தவர்களை அடையாளம் காட்டும் அம்சங்களில் அடங்குபவை. (யோவா. 13:35) ராஜ்ய மன்றத்திற்கு முதலாவதாக சென்றுவந்த ஒருவர் இவ்வாறு கூறினார்: “காலங்காலமாய் நான் போய்வந்த சர்ச்சில் சந்தித்திருந்ததைவிட, ஒரே நாளில் முன்பின் அறிமுகமில்லாத, உண்மையிலேயே மிக அன்பான ஜனங்களை சந்தித்தேன். இதுதான் சத்திய பாதை என்பது தெளிவாக தெரிந்தது.” அதன் பயனாக, தன் வாழ்க்கை முறையை அவர் மாற்றினார்; ஏழு மாதங்களுக்குப் பிறகு முழுக்காட்டுதல் பெற்றார். ஆம், நற்பழக்கங்களால் மிக அதிக நன்மைகள் ஏற்படலாம்!
8 முன்பின் அறிமுகமில்லாதவர்களிடமே நன்றாக நடந்துகொள்ள வேண்டுமென்றால், ‘விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களிடம்’ நன்றாக நடந்துகொள்ள வேண்டாமா? (கலா. 6:10) பின்வரும் நியமமே பொருந்துகிறது: ‘முதிர்வயதுள்ளவன்[ள்] முகத்தைக் கனம்பண்ண வேண்டும்.’ (லேவி. 19:32) நம் கூட்டங்களில் அப்படிப்பட்டவர்களை ஒருபோதும் கவனியாமல் விட்டுவிடக் கூடாது.
9 கூர்ந்து கவனியுங்கள்: சபைக் கூட்டங்களின்போது, ஆவிக்குரிய வரங்களை அளித்து நம்மை பலப்படுத்துவதற்காகவே கடவுளுடைய கிறிஸ்தவ ஊழியர்கள் பேச்சு கொடுக்கின்றனர். (ரோ. 1:10) கூட்டம் நடக்கும்போது தூங்கி விழுவது, எதையாவது கொறிப்பது, சூவிங் கம் சவைப்பது, பக்கத்தில் இருப்பவர்களுடன் கிசுகிசுப்பது, கழிப்பறைக்கு அடிக்கடி தேவையில்லாமல் சென்றுவருவது, சம்பந்தமில்லாத விஷயங்களை வாசிப்பது, அல்லது வேறு எதையாவது செய்துகொண்டிருப்பது இவை யாவும் கெட்ட பழக்கங்கள். மூப்பர்கள் இந்த விஷயத்தில் சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும். பேச்சாளர் பேசும்போது அக்கம் பக்கம் திரும்பாமல் கூர்ந்து கவனிப்பதன் மூலம், பேச்சாளருக்கும் அவர் கொடுக்கும் பைபிள் அடிப்படையிலான செய்திக்கும் தக்க மரியாதை காட்ட நல்ல கிறிஸ்தவ பழக்கங்கள் நம்மை உந்துவிக்கும்.
10 அத்துடன், பேச்சாளருக்கும் அமர்ந்திருப்போருக்கும் கரிசனை காட்டும் வகையில், எலக்ட்ரானிக் பேஜர்கள், செல்லுலார் போன்கள் ஆகியவை கூட்டங்களுக்கு இடைஞ்சல் தராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
11 பிள்ளைகளும் நற்பழக்கங்களும்: பிள்ளைகளின் நடத்தையைக் குறித்து பெற்றோர் எப்பொழுதும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது குழந்தை அழ ஆரம்பித்தாலோ, ஒரு இடத்தில் உட்காராமல் துருதுருப்புடன் இருந்தாலோ, பிறருக்கு இடைஞ்சலாக இருக்கும்; எனவே அதை அமைதிப்படுத்த, முடிந்தவரை சீக்கிரமாக மன்றத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்ல வேண்டும். சில சமயங்களில் இவ்வாறு செய்வதில் சிரமம் இருக்கலாம்; ஆனால், பிறருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள ஜாக்கிரதையாய் இருக்கிறீர்கள் என்பதை இது காட்டுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். துருதுருவென்று இருக்கும் சிறு பிள்ளைகளை உடைய பெற்றோர் மன்றத்தின் பிற்பகுதியிலுள்ள இருக்கைகளில் உட்காருவதை தெரிந்துகொள்ளலாம்; ஏனெனில் ஒருவேளை கூட்டம் நடந்துகொண்டிருக்கையில் இடையில் எழுந்துபோக நேர்ந்தால் அது அநேகருக்கு இடைஞ்சலாய் இருப்பதை தவிர்க்க உதவும். தேவைப்பட்டால், அந்த குடும்பங்களுக்கென பின் இருக்கைகளை விட்டுக்கொடுப்பதன் மூலம் மற்றவர்கள் தக்க கரிசனை காட்டலாம்.
12 கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் பிள்ளைகள் நடந்துகொள்ளும் விதத்தையும் பெற்றோர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பிள்ளைகள் மன்றத்திற்கு உள்ளே ஓடியாடிக் கொண்டிருக்கக் கூடாது; ஏனெனில் விபத்துக்கள் நேரிட வாய்ப்புள்ளது. வெளியே ராஜ்ய மன்றத்தைச் சுற்றி ஓடுவது, குறிப்பாக எதையும் சரியாக பார்க்க முடியாத இருட்டில் அவ்வாறு ஓடியாடுவதும் ஆபத்தானது. மன்றத்திற்கு வெளியே சப்தமாக பேசுவதும் அக்கம்பக்கத்தாருக்கு தொந்தரவாக இருக்கலாம்; நம் வணக்கத்தைப் பற்றி எதிர்மறையான எண்ணத்தை அது வளர்க்கச் செய்யும். ராஜ்ய மன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாய் கண்காணிக்கும் பெற்றோர்கள் பாராட்டுக்குரியவர்கள்; ஏனெனில் இது நாம் ஒருமித்து வாசம்பண்ணும் இன்பத்தைக் கூட்டுகிறது.—சங். 133:1.
13 புத்தகப் படிப்பில்: தங்கள் வீடுகளில் சபைக் கூட்டங்கள் நடத்துவதற்கு இடமளித்திருக்கும் சகோதரர்களின் உபசரிப்பு குணத்தை நாம் போற்றுகிறோம். அப்படிப்பட்ட இடங்களில் ஆஜராகையில், அவர்களது உடைமைகளுக்கு உரிய மரியாதையையும் கரிசனையையும் காட்ட வேண்டும். உள்ளே நுழைவதற்கு முன்பு, தரையையும் கம்பள விரிப்புகளையும் அழுக்காக்கி விடாதவாறு ஷூக்களை கவனமாக தட்டிவிட்டுச் செல்ல வேண்டும். தங்கள் பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்; புத்தகப் படிப்பிற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்திலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சிறிய தொகுதியாகவும் வீட்டுச் சூழலாகவும் இருக்கிறதே என்பதற்காக மற்றவர்களின் வீட்டில் நம் இஷ்டம்போல் நடந்துகொள்ளக் கூடாது. சிறு பிள்ளை பாத்ரூம் செல்ல வேண்டியிருந்தால் பெற்றோர் ஒருவரும் கூடவே செல்ல வேண்டும். அத்துடன், புத்தகப் படிப்பும் சபைக் கூட்டங்களில் ஒன்று என்பதால், ராஜ்ய மன்றத்திற்குச் செல்லும்போது உடுத்துவதைப் போலவே உடை அணிய வேண்டும்.
14 நற்பழக்கங்கள் அவசியம்: கிறிஸ்தவ பழக்கங்களை கடைப்பிடிப்பது நம் ஊழியத்தின்பேரில் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதுடன், மற்றவர்களுடன் நல்ல உறவையும் வளர்க்கிறது. (2 கொ. 6:3, 4, 6) நித்தியானந்த தேவனை வணங்கும் நம் முகத்தில் இயல்பாகவே புன்னகை தவழ வேண்டும்; எளிதில் இணங்கிச் செல்பவர்களாய் இருக்க வேண்டும்; பிறரை மகிழ்விக்கும் சிறுசிறு, தயவான செயல்களை செய்ய தயாராய் இருக்க வேண்டும். நற்பழக்கங்களை வெளிக்காட்டும் இந்தத் தனிப்பண்புகள் கடவுள் பக்தியுள்ள ஜனங்களாக நம் வாழ்க்கையை அலங்கரிக்கும்.