“எங்கள் பிராந்தியத்தில் பலமுறை ஊழியம் செய்துவிட்டோம்!”
1 செம்மறி ஆடு போன்றவர்களே அங்கு இல்லை என்று சொல்லுமளவுக்கு உங்கள் பிராந்தியத்தில் அடிக்கடி ஊழியம் செய்திருப்பதாக நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? ‘மக்கள் கேட்பார்களா மாட்டார்களா என்று எனக்கு தெரியும். அக்கறை காட்டாதவர்களிடத்தில் ஏன் திரும்பத்திரும்ப போக வேண்டும்?’ என்பதாக ஒருவேளை நீங்கள் யோசித்திருக்கலாம். அநேக பிராந்தியங்களில் பலமுறை ஊழியம் செய்து முடிக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனாலும் இந்த உண்மையை எதிர்மறையாக நோக்காமல் நம்பிக்கையுடன் நோக்க வேண்டும். ஏன்? கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு காரணங்களை கவனியுங்கள்.
2 நம் ஜெபங்கள் கேட்கப்பட்டிருக்கின்றன: “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்” என இயேசு சொன்னார். (லூக். 10:2) அதிக உதவிக்காக பல பத்தாண்டுகளாக யெகோவாவிடம் மன்றாடி இருக்கிறோம். அநேக இடங்களில், தேவைப்பட்ட கூடுதலான வேலையாட்கள் இப்போது இருக்கிறார்கள்; மேலும் பிராந்தியத்தையும் அடிக்கடி முடித்துவிடுகிறோம். யெகோவா நம் ஜெபங்களுக்கு பதிலளித்திருக்கிறார் என்பது நம்மை சந்தோஷப்படுத்த வேண்டாமா?
3 விடாமுயற்சி நற்பலன் தருகிறது: அடிக்கடி ஊழியம் செய்யப்பட்ட பிராந்தியங்களில்கூட, மக்கள் ராஜ்ய செய்திக்கு செவிகொடுத்து, சத்தியத்தின் அறிவை பெறுகிறார்கள். ஆகவே, இன்னுமதிகமான நேர்மை இருதயமுள்ளவர்களை கண்டுபிடிக்கும் நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து அவர்களை சந்திக்க வேண்டும். (ஏசா. 6:8-11) இயேசுவின் ஆரம்பகால சீஷர்களைப் போலவே, உங்களுடைய பிராந்தியத்தில் உள்ளவர்களிலும் கடவுளுடைய ராஜ்யத்திடம் அக்கறையை தூண்டும்படி “தொடர்ந்து செல்லுங்கள்.”—மத். 10:6, 7, NW.
4 போர்த்துகலில் அநேக சபைகள் வாரா வாரம் தங்கள் பிராந்தியத்தை செய்து முடிக்கின்றன. ஆனால் அவர்கள் செம்மறியாடு போன்றவர்களை இன்னும் கண்டுபிடிக்கிறார்கள். குறிப்பாக ஒரு சகோதரி மிகவும் நம்பிக்கையான மனநிலையுடன் இருந்தார்கள். அவர்கள் சொல்வதாவது: “ஒவ்வொரு காலையும் ஊழியத்திற்கு போகும்போது, பைபிளைப் படிப்பதில் அக்கறையுள்ள யாரையாவது காண உதவும்படி யெகோவாவிடம் ஜெபிப்பேன்.” ஒரு நாள் முடி அலங்காரம் செய்யும் கடையில் வேலை செய்பவர்களோடு படிப்புக்காக ஏற்பாடு செய்தார்கள். ஆனாலும் பின்னர் ஒரே ஒருவர்தான் படிப்பதற்கு வந்தார். “மற்றவர்களுக்கு விருப்பமில்லை, ஆனால் எனக்கு விருப்பம்” என வந்தவர் சொன்னார். ஒரு மாதத்திற்குள் அந்தப் பெண் இரு பைபிள் படிப்புகளை நடத்தி வந்தார். சீக்கிரத்தில் அவர் முழுக்காட்டுதல் பெற்று, பின்னர் பயனியர் ஊழியத்தையும் செய்ய தொடங்கிவிட்டார்!
5 வேலை தொடருகிறது: இயேசு முன்னறிவித்தபடியே நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. (மத். 24:14) மக்கள் “[நமக்கு] செவிகொடுக்கமாட்டார்கள்” என்ற இடங்களில்கூட, பிரசங்க வேலையின் மூலம் எப்படியும் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுவிடுகிறது. சிலர் சத்தியத்தை ஏற்க மாட்டார்கள் அல்லது எதிர்ப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். இருந்தாலும், யெகோவாவிடமிருந்து வரும் நியாயத்தீர்ப்பைப் பற்றி அப்படிப்பட்டவர்களை தகுந்த விதத்தில் எச்சரிக்க வேண்டும்.—எசே. 2:4, 5; 3:7, 8, 19.
6 வேலை இன்னும் முடிவு பெறவில்லை: பிரசங்க வேலையை எப்போது நிறுத்த வேண்டும் என்று தீர்மானிப்பது நாமல்ல. அது சரியாக எப்போது முடிவடைய வேண்டுமென்று யெகோவா அறிந்திருக்கிறார். நற்செய்திக்கு செவிசாய்ப்பவர்கள் இன்னும் நம் பிராந்தியத்தில் இருக்கிறார்களா என்பது அவருக்கே தெரியும். இன்று, சிலர் தங்களுக்கு விருப்பமில்லை என்கிறார்கள், ஆனால் அவர்கள் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம்; வேலை இழப்பு, கடுமையான நோய், அன்பானவரின் மரணம் போன்ற நிலைமைகள் வேறொரு சமயம் செய்தியைக் கேட்கும்படி அவர்களைத் தூண்டலாம். தப்பெண்ணத்தினாலோ அதிக வேலையினாலோ நாம் எதை பிரசங்கிக்கிறோம் என்பதை அநேகர் கேட்டதே இல்லை. சிநேகப்பான்மையோடு திரும்பத்திரும்ப செல்வதை கவனித்து, அவர்கள் செவிசாய்க்கலாம்.
7 சமீப வருடங்களில் பெரியவர்களாகி, தங்களுக்கென்று குடும்பங்களை உடைய சிலர், வாழ்க்கையைப் பற்றி அதிகமாக சிந்திக்க ஆரம்பித்து, கடவுளுடைய வார்த்தை மட்டுமே பதிலளிக்கத்தக்க கேள்விகளை கேட்கிறார்கள். ஓர் இளம் தாய் இரு சாட்சிகளை வீட்டினுள் அழைத்து இவ்வாறு சொன்னார்: “நான் சின்ன பிள்ளையாக இருக்கையில், சாட்சிகள் வீட்டிற்கு வந்தபோது, விருப்பமில்லை என்று சொல்லி அம்மா ஏன் அவர்களை விரட்டினார்கள் என்று எனக்கு புரியவே இல்லை. அவர்கள் வந்ததோ பைபிளைப் பற்றி பேசுவதற்கே. நான் வளர்ந்து, மணமாகி, எனக்கென்று குடும்பம் அமையும்போது, யெகோவாவின் சாட்சிகளை வீட்டிற்குள் கூப்பிட்டு பைபிளை எனக்கு விளக்கும்படி கேட்பேன் என்று அப்போதே தீர்மானித்தேன்.” சாட்சிகளுக்கு சந்தோஷம் தரும்வகையில் அதைத்தான் இப்போது அவர் செய்தார்.
8 நீங்கள் இன்னுமதிக திறம்பட்டவராக முடியுமா? ஒரு பிராந்தியத்தில் அடிக்கடி வேலை செய்வதை கடினமாக்குவது எப்போதுமே அங்குள்ள மக்களல்ல. சில சமயங்களில் அதற்கு நாமே காரணம். எதிர்மறையான எண்ணங்களுடன் போகிறோமா? அது நம் மனநிலையையும், ஏன் நம் குரலையும் முகபாவனையையும்கூட பாதிக்கலாம். நம்பிக்கையான மனநிலையுடனும் இன்முகத்துடனும் செல்லுங்கள். புதிய அணுகுமுறையை பயன்படுத்தி பாருங்கள். நீங்கள் செய்தியை அளிக்கும் விதத்தை மாற்றியமைத்து, அதை இன்னும் சிறப்பாக அளிக்க முயலுங்கள். ஒருவேளை ஆரம்பத்தில் கேட்கும் கேள்வியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது உங்கள் உரையாடலில் வேறொரு வசனத்தை பயன்படுத்தி பார்க்கலாம். அந்த பிராந்தியத்தில் வெற்றி காண மற்ற சகோதர சகோதரிகள் என்ன செய்திருக்கிறார்கள் என்று கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். பல்வேறு பிரஸ்தாபிகளோடும் பயனியர்களோடும் ஊழியம் செய்யுங்கள். அவர்களுடைய ஊழியத்தை அதிக திறம்பட்டதாக்குவது எது என்பதை கவனியுங்கள்.
9 ராஜ்ய பிரசங்க வேலைக்கு யெகோவாவின் அங்கீகாரமும் ஆசீர்வாதமும் இருக்கிறது. அதில் பங்கெடுப்பதன் மூலம் அவர்மீதும் அயலார்மீதும் நம் அன்பை நிரூபிக்கிறோம். (மத். 22:37-39) ஆகவே நம் வேலை நிறைவுபெறும் வரையில் நம் பிராந்தியத்தில் திரும்பத்திரும்ப ஊழியம் செய்வதில் தளராமல் தொடருவோமாக.