இளைஞரின் சிலாக்கியம்
1 சிறுவயதிலிருந்தே சத்தியத்தில் வளர்ந்த பலர் இன்று பெற்றோராய் இருக்கின்றனர்; அப்போது அனுபவித்த ஒரு சிலாக்கியத்தைப் பற்றிய இனிய நினைவுகள் இப்போதும் அவர்களுக்கு உள்ளது. அந்த சிலாக்கியமே பத்திரிகை ஊழியம்! 1949-ல், எல்லா சபைகளிலும் இந்த ஊழியம் அறிமுகப்படுத்தப்பட்டது. வாரத்தில் ஒரு நாள், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை தெருக்களில், வீடுகளில், கடைகளில் இன்னும் பல வழிகளில் கொடுப்பதற்கு இந்த ஊழியம் எல்லாருக்கும் வாய்ப்பளித்தது. அச்சமயத்தில் முக்கியமாக, இளம் பிரஸ்தாபிகள் இதில் மிக ஆர்வத்தோடு ஈடுபட்டனர். ஏனென்றால், சபையில் உள்ள பெரியவர்களைப் போலவே இவர்களும் பிரசங்கத்தில் ஈடுபட இந்த ஊழியம் வாய்ப்பளித்தது. நீங்களும் சிறுவயதில் இப்படி செய்திருக்கிறீர்களா?
2 உங்கள் பிள்ளைகளையும் ஈடுபடுத்துங்கள்: பைபிளைப் பற்றி விளக்கமாக பேச முடியாத சிறுபிள்ளைகளும்கூட பத்திரிகைகளை சுலபமாக கொடுக்கலாம். சிறுசிறு வாக்கியங்களைப் பேசி பத்திரிகைகளை அளிக்க கற்றுக்கொண்டால் போதும். அட்டை படத்தை சுருக்கமாக விளக்கினாலே போதும். பிள்ளைகள் பத்திரிகைகளை கொடுக்கும்போது உடனடியாக அநேகர் வாங்கிக்கொள்கின்றனர். அந்த பிள்ளைகளுடைய நல்ல நடத்தையையும் நேர்மையையும் வீட்டுக்காரர்கள் பாராட்டுகின்றனர். பிள்ளைகளுக்கு கொஞ்சம் உதவினால்போதும், அவர்கள் இந்த சேவையை நன்றாக செய்ய முடியும். இப்படியாக, ராஜ்ய செய்தியை மற்றவர்களுக்கு சொல்வதில் அவர்களும் முக்கிய பாகம் வகிக்கலாம். பிள்ளைகள் வளர வளர, சாட்சி கொடுக்கும் திறமையை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு பெற்றோர் நிச்சயம் உதவுவர்.
3 மான்வெல் மூன்று வயதிலிருந்தே வீட்டுக்கு வீடு ஊழியத்தை செய்ய ஆரம்பித்தான். சுருக்கமாக பேசி, பிரசுரத்தை அளிக்க அவனுடைய பெற்றோர் கற்றுக்கொடுத்தார்கள். அவனும் அவர்களோடு சேர்ந்து ஊழியத்தில் உற்சாகமாக கலந்து கொள்கிறான். அநேக பத்திரிகைகளையும் சிற்றேடுகளையும் துண்டுப்பிரதிகளையும் அளிக்கிறான். சந்தர்ப்ப சாட்சியும் கொடுக்கிறான். ஒரு சமயம், பொழுதுபோக்கிற்காக அவனுடைய பெற்றோர் அவனை ஒரு பூங்காவிற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த ஜனங்களிடம் சில துண்டுப்பிரதிகளை அவனே போய் கொடுத்தான். சின்னஞ்சிறு வயதிலும், ஊழியத்திற்காக மான்வெல் காட்டும் வைராக்கியம் அவனுடைய பெற்றோருக்கும் முழு சபைக்கும் உண்மையிலேயே உற்சாகமூட்டுகிறது.—நீதி. 22:6.
4 யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர் 2000-ல் ஒவ்வொரு சனிக்கிழமையும் “பத்திரிகை ஊழியம்” என குறிக்கப்பட்டுள்ளது. பெற்றோரே, இந்த ஊழியத்தில் மீண்டும் புத்தார்வம் காட்டுங்கள்! சிலாக்கியமிக்க இந்த ஊழியத்தை எந்தளவு முடியுமோ அந்தளவு தவறாமல் செய்ய உங்கள் பிள்ளைகளுக்கும் உதவுங்கள்.