கிறிஸ்துவின் அன்புக்கு இசைய நீங்கள் நடக்கிறீர்களா?
1 தன்னுடைய எஜமானருடைய வாழ்க்கைக்குக் கவனம் செலுத்துபவராக அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு எழுதினார்: இயேசு, “இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.” (யோவா. 13:1) இந்த நினைவு ஆசரிப்பு சமயத்தில் கிறிஸ்து காட்டிய ஈடில்லா அன்பு நம்முடைய மனதிற்கு வருகிறது. கிரய பலியில் விசுவாசம் வைப்பதனாலும், பிரசங்க ஊழியத்தில் வைராக்கியத்துடன் ஈடுபடுவதனாலும் இயேசுவைப் போல் “முடிவுபரியந்தமும்” சகித்திருப்பதனாலும் நாம் அந்த அன்புக்கு இசைய நடக்கலாம்.—மத். 24:13; 28:19, 20; யோவா. 3:16.
2 கிறிஸ்துவின் அன்புக்கு இசைய நடப்பது: தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசி வாரத்தில் இயேசு செய்ய வேண்டிய வேலைகள் ஏராளமாக இருந்தன. (மத். 21:23; 23:1; 24:3) கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாக நாமும் அந்த அன்பால் தூண்டப்பட்டிருக்கிறோம்; எனவே யெகோவாவின் சேவையில் ‘மும்முரமாய் பிரயாசப்படுவோம்.’ (லூக். 13:24, NW) ஏப்ரல் மாதத்தில் கூடுதல் ஊழியம் செய்வதற்கான விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; ஊழியத்தில் நீங்கள் செலவிடும் நேரத்தை அதிகரிப்பதற்கு அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா?
3 இந்த வருடம் ஏப்ரல் 19, புதன்கிழமை மாலை கர்த்தருடைய இராப்போஜனம் ஆசரிக்கப்படும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்கு எத்தனை பேர் வருவார்கள்? இது பெருமளவு நம்மைப் பொறுத்ததே. யாரையெல்லாம் அழைக்கப் போகிறீர்கள் என்பதற்கான பட்டியலை தயாரித்துவிட்டீர்களா? அதில் உங்களோடு பைபிள் படிப்பு படிப்பவர்கள், ஆர்வம் காட்டுபவர்கள், சொந்தபந்தங்கள், தொழில் ரீதியில் பழக்கப்பட்டவர்கள், பள்ளித் தோழர்கள் அனைவரும் உள்ளனரா? அவர்களை எல்லாம் சந்தித்து, நினைவு ஆசரிப்புக்கு வரும்படி மனமார அழைப்பு கொடுத்திருக்கிறீர்களா? நினைவு ஆசரிப்புக்கு சில நாட்களுக்கு முன் சென்று மீண்டும் அவர்களுக்கு நினைப்பூட்டுவீர்களா? மன்றத்துக்கு வந்துசேருவதற்கு உங்கள் உதவி அவர்களுக்குத் தேவையா? ஊழியத்தில் செயலற்றுப் போனவர்களையும் மூப்பர்கள் வரும்படி அழைப்பார்கள். நினைவு ஆசரிப்பு நாள் வார இறுதியில் வராமல் வாராந்தர நாளில் வருவது எந்த விதத்திலும் அதன் முக்கியத்துவத்தைக் குறைக்காது; ஆகவே கலந்துகொள்ள வேண்டியதில்லை என்று யாரும் நினைக்கக்கூடாது.
4 தயாராய் வாருங்கள்: நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்ள, தயாராகவும் சரியான மனநிலையோடும் வருவது அவசியம். அந்தச் சமயத்தின் முக்கியத்துவத்தை மனதில் வைக்கும்படி உடன் விசுவாசிகளுக்கு பவுல் புத்திமதி கூறினார். (1 கொ. 11:20-26) யோவான் சுவிசேஷத்தில் 13 முதல் 17 வரையான அதிகாரங்களை உங்கள் குடும்ப படிப்பில் படிக்கலாம்; அதன்பின் குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் இயேசுவின் பலி தங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை சொல்லும்படி கேட்கலாம். நினைவு ஆசரிப்பு வாரத்திற்கான பைபிள் பகுதியையும் தினமும் வாசிக்க மறந்துவிடாதீர்கள்!
5 கிறிஸ்துவிடமான நம் அன்பு ஆழமானது; அது ஏப்ரல் 19-க்குப் பின்பும் தொடரும். அவரிடமுள்ள நம் அன்பை நாம் நித்தியத்திற்கும் வெளிப்படுத்திக் காட்டுவதே நம் தீர்மானம்! இவ்வருட நினைவு ஆசரிப்பு நிகழ்ச்சி அந்தத் தீர்மானத்தைக் கடைப்பிடிப்பதில் நமக்கு உதவும்.