தானியேல் தீர்க்கதரிசனத்தை படித்தல்
1 ஏப்ரல் 17-ல் துவங்கும் வாரம் முதற்கொண்டு, தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! என்ற புத்தகத்தை நாம் சபை புத்தகப் படிப்பில் படிப்போம். கிளர்ச்சியூட்டும் இப்புத்தகத்தை அநேகர் ஏற்கெனவே படித்து அனுபவித்திருக்கின்றனர். ஆனால் இதை ஒரு குழுவாக கூடி படித்து அதனால் வரும் பலன்களை சந்தோஷமாக அனுபவிக்கும் வாய்ப்பு இப்போது நமக்கு கிடைத்திருக்கிறது. இந்த படிப்பிற்கு எல்லா பிரஸ்தாபிகளும், ஆர்வமுடையவர்களும், பிள்ளைகளும் வரவேற்கப்படுகின்றனர். ஆம், பைபிள் புத்தகமாகிய தானியேலை ஆழமாக ஆராயும் இந்த படிப்பில் ஒவ்வொரு வாரமும் கலந்துகொள்ளும்படி எல்லோரும் உற்சாகப்படுத்தப்படுகின்றனர்.—உபா. 31:12, 13.
2 படிப்பு அட்டவணையும் குறிப்புகளும்: தானியேல் தீர்க்கதரிசனம் புத்தகத்திற்கான முழு படிப்பு அட்டவணையும் இந்த நம் ராஜ்ய ஊழிய இதழில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு பிரதியை உங்கள் படிப்பு புத்தகத்திலேயே வைத்துக்கொள்ள மறவாதீர்கள். அந்த புத்தகத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் நாம் படிக்கப்போகும் பகுதி அதாவது அதிகாரம் மற்றும் பாரா பற்றிய குறிப்புகள் இதில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் அந்த வாரத்திற்குரிய பகுதியில் சிந்திக்கப்படும் தானியேல் வசனங்களின் பட்டியலும் அதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த புத்தகத்திலுள்ள சில பகுதிகளை எப்படி எப்போது சிந்திக்க வேண்டும் என்பதை அதில் கொடுக்கப்பட்டிருக்கும் அடிக்குறிப்பு விளக்கும். ஒவ்வொரு வார படிப்பின் முடிவிலும், அட்டவணையில் அந்த வாரத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தானியேல் வசனங்களை மறுபார்வை செய்யும்படி படிப்பு நடத்துனர்கள் உற்சாகப்படுத்தப்படுகின்றனர். நேரமிருக்குமேயானால், வசனங்களை வாசித்து அதிலிருந்து குறிப்புகளை சொல்லலாம். சில வசனங்களுக்கு எவ்வாறெல்லாம் பொருத்தங்கள் உள்ளன என்பதை அநேக சமயங்களில் கலந்தாலோசிக்கப்போவதால், அதே வசனங்கள் அநேக வாரங்களுக்கு சிந்திக்கப்படும்.
3 முழுமையான படிப்பிற்கு நன்கு தயாரியுங்கள்: ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளை அவசர அவசரமாக சிந்திக்காமல் நிதானமாக கலந்தாலோசிக்க, போதுமான அளவு நேரத்தை ஒதுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த அட்டவணையில் நான்கு வாரங்கள் சிறுபகுதியே கலந்தாலோசிக்கப்படுகின்றன. ஆகவே, ஜூன் 5-ல் துவங்கும் வாரத்தினுடைய படிப்பின் முடிவில், தானியேல் 2:1-40-ஐ நடத்துனர் மறுபார்வை செய்யலாம். ஜூன் 26-ற்கான வாரத்தில், தானியேல் 3:1-30-ஐ மறுபார்வை செய்யலாம். செப்டம்பர் 4-ற்கான வாரத்தில், விளக்கப்படங்கள் மற்றும் பக்கம் 139-ல் உள்ள வசனங்களைப் பற்றிய முழுமையான கலந்தாலோசிப்பை சேர்த்துக் கொள்ளலாம். அக்டோபர் 2-ற்கான வாரத்தின் படிப்பில் பக்கங்கள் 188 மற்றும் 189-ல் காணப்படும் விளக்கப்படத்தை கலந்தாலோசிக்கலாம்.
4 ஒவ்வொரு வாரமும் படிப்பிற்கு நன்கு தயாரியுங்கள், பங்கேற்று மகிழுங்கள். யெகோவாவின் காணக்கூடிய அமைப்புடன் கூட்டுறவு கொள்ள உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த சிலாக்கியத்திற்கு மதித்துணர்வை காட்டுங்கள். உண்மையுள்ள அபிஷேகம் பண்ணப்பட்டவர்களால் கொடுக்கப்படும் உட்பார்வையிலிருந்தும் புரிந்துகொள்ளுதலிலிருந்தும் பலன்களை பெற்றுக்கொள்ளுங்கள். (தானி. 12:3, 4) புத்தகப் படிப்பிற்கு தவறாமல் வரும்படி மற்றவர்களையும் அன்பாய் உற்சாகப்படுத்துங்கள். வியப்பூட்டும் புத்தகமாகிய தானியேலில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு நாம் எல்லோரும் கவனமாய் செவிகொடுப்போமாக!—எபி. 10:23-25; 2 பே. 1:19.