பத்திரிகை மார்க்கத்தின் மூலம் “ராஜ்ய விதை விதைத்தல்”
1 யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் என்ற நம் பாட்டு புத்தகத்தில், பாடல் எண் 133-ன் தலைப்பு “ராஜ்ய விதை விதைத்தல்” என்பதே. இது, இயேசுவின் உவமையை அடிப்படையாகக் கொண்ட பாடல். அந்த உவமையில், சீஷராக்கும் வேலை விதை விதைத்தலுக்கு ஒப்பிடப்படுகிறது. (மத். 13:4-8, 19-23) அந்தப் பாடலின் வரிகள்: “விதை நல்ல நிலத்தில் விழுவது/உங்களையும் பொருத்தது.” அப்படியானால், ஊழியத்தில் நம்முடைய திறமைகளை எப்படி அதிகரிக்கலாம்? பத்திரிகை மார்க்கத்தை ஆரம்பித்து, அதைத் தவறாமல் கடைப்பிடிப்பது அதற்கு ஒரு வழி.
2 பத்திரிகை மார்க்கத்தின் மூலம் பல குறிக்கோள்களை நிறைவேற்ற முடியும். (1) ஆர்வம் காட்டும் நபரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சந்திப்பதால் அவரோடு நல்ல நட்புறவை வளர்க்க முடியும். (2) உயிர் காக்கும் தகவல்கள் நிறைந்த காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை அவருக்கு நீங்கள் தவறாமல் கொடுக்க முடியும். (3) உங்களுடைய சம்பாஷணைகள் மூலம் அவருக்கு சத்தியத்தின்பேரில் அதிக வாஞ்சையை உண்டாக்கி, முடிவில் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க முடியும்.—1 பே. 2:3.
3 பத்திரிகை மார்க்கத்தை துவக்குவது எப்படி: நம்முடைய பத்திரிகைகளுக்கு ஆர்வத்தை காண்பிக்கும் எல்லா ஆட்களிடமும், மனதைக் கவரும் பிரத்தியேகக் கட்டுரைகள் ஒவ்வொரு பிரதியிலும் வருகின்றன என்பதை விளக்குங்கள்; இவற்றை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வந்து கொடுக்க விரும்புவதாக தெரியப்படுத்துங்கள். அதன் பின்பு, அந்த நபருடைய பெயர், விலாசம், சந்தித்த தேதி, கொடுத்த பத்திரிகைகளின் தேதி, அதிலுள்ள சிறப்பு கட்டுரைகள், அவருடைய ஆர்வத்தைத் தூண்டிய கட்டுரைகள் ஆகியவற்றை குறித்துக்கொள்ளுங்கள்.
4 முதலில், ஓரிரு நபர்களின் பெயரோடு பத்திரிகை மார்க்கத்தை நீங்கள் ஆரம்பிக்கலாம். பிறகு அந்தப் பட்டியலை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். யாரிடமெல்லாம் பத்திரிகைகளை அளிக்கிறீர்களோ அவர்களுடைய பெயர்களை அந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்தப் பட்டியல் அதிகரிக்க அதிகரிக்க, பிராந்தியம் வாரியாக பிரித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம், பட்டியலில் உள்ள அனைவரையும் சந்திக்க முடியும். ஒவ்வொரு சந்திப்பின்போதும், எந்தப் பிரதியை கொடுத்தீர்கள், எப்பொழுது கொடுத்தீர்கள் என்பதைக் கவனமாக பதிவு செய்து கொள்ளுங்கள். மேலும், அவர்களிடம் என்ன பேசினீர்கள் என்பதையும் அடுத்த சந்திப்பில் சத்தியத்திற்கான அவருடைய ஆர்வத்தை எப்படி இன்னும் வளர்க்கலாம் என்பதற்கான குறிப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
5 வர்த்தகர்கள், தொழில்ரீதியான ஆட்களை சந்தியுங்கள்: வியாபாரிகளும் தொழில்ரீதியான ஆட்களும் நம் பத்திரிகைகளை பெரும்பாலும் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர் என்று அனுபவம் காட்டுகிறது. ஒரு மூப்பர் தான் வசித்துவந்த பட்டணத்தின் மேயரோடு பத்திரிகை மார்க்கம் வைத்திருந்தார். ஒரு பிரஸ்தாபி, கட்டிடப் பொருட்களை விநியோகிக்கும் ஒரு கம்பெனியின் சொந்தக்காரரோடு பத்திரிகை மார்க்கம் வைத்திருந்தார். 80 வயதான இவருக்கு இந்தப் பிரஸ்தாபி தொடர்ந்து பத்து வருடங்களாக பத்திரிகைகளை அளித்து வந்தார். இதன் பலனாக, முடிவில் அவரோடு ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்தார்!
6 ஒரு பயனியர் சகோதரி, கடையில் ஒரு தம்பதியை சந்தித்தார்; ஆனால், அவர்கள் இவரை அன்பாக வரவேற்கவில்லை. இருப்பினும், அவர்கள் பத்திரிகைகளை வாங்கிக்கொண்டார்கள்; அதனால் அவர்களை தன்னுடைய பத்திரிகை மார்க்கத்தில் சகோதரி சேர்த்துக்கொண்டார். ஆனால், அவர்களோ தொடர்ந்து அசிரத்தையாகவே இருந்தார்கள்; அவர்களுடைய மனநிலையை தெரிந்துகொள்ள சகோதரி கேட்கும் எந்தக் கேள்விக்கும் அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை. எனவே, சகோதரி தன்னுடைய பத்திரிகை மார்க்கத்திலிருந்து இந்தத் தம்பதியை நீக்கிவிட நினைத்தார். ஆனாலும், இந்தக் காரியத்தைக் குறித்து ஜெபம் செய்தார். கடைசியில், என்றும் வாழலாம் புத்தகத்தை அவர்களுக்குக் கொடுத்தார். அதைப் படித்த பிறகு, “சத்தியத்தை நான் கண்டுபிடிச்சிட்டேன்!” என்று அந்த மனைவி மிக்க மகிழ்ச்சியோடு சொன்னாள். உடனடியாக ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது; பின்னர், அந்த தம்பதி முழுக்காட்டுதல் பெற்றனர். அந்தப் பயனியரின் விடாமுயற்சிக்கு என்னே நல்ல பலன்!
7 மறுசந்திப்புகள் செய்யுங்கள்: புதிய பிரதி கிடைத்தவுடன் அதில் இருக்கும் எல்லா கட்டுரைகளையும் வாசியுங்கள். வாசிக்கும்போதே, உங்களுடைய பத்திரிகை மார்க்கத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஆர்வத்தைத் தூண்டுமென நீங்கள் நினைக்கும் குறிப்புகளை குறித்துக் கொள்ளுங்கள். பிறகு அவர்களை சந்திக்கும்போது, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “இந்தக் கட்டுரைய நான் படிக்கிறப்ப உங்களப்பத்தித்தான் யோசிச்சேன்; இது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு நினைச்சேன்.” பத்திரிகை மார்க்கம் வைத்திருப்பதற்கு வயது ஒரு தடை இல்லை. பிரஸ்தாபிகள் எந்த வயதினராய் இருந்தாலும் பத்திரிகை மார்க்கத்தின் மூலம் ஊழியத்தில் மகிழ்ச்சி காணலாம். சிறு பிள்ளைகள்கூட இவ்வாறு சொல்லலாம்: “நல்லா இருக்கீங்களா? . . . புது காவற்கோபுரம், விழித்தெழு! வந்துருக்கு. . . . தலைப்புல இருக்கிற இந்தக் கட்டுரை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு நினைக்கறேன்.”
8 “எமது அடுத்த இதழில்” என தலைப்பிடப்பட்டுள்ள பெட்டிக்கு கவனத்தைத் திருப்புங்கள். இதன் மூலம், வரப்போகிற கட்டுரைகளுக்கு அவர்களுடைய ஆவலைத் தூண்டுங்கள். தொடர் கட்டுரைகளாக வந்தால், அதைச் சுட்டிக்காட்டி எந்தப் பகுதியையும் தவறவிடாமல் படிப்பதற்கு உற்சாகப்படுத்துங்கள். உங்கள் பத்திரிகை மார்க்கத்தில் இருக்கிற ஒருவருக்கு பத்திரிகை கொடுக்கும் ஒவ்வொரு சந்திப்பையும் ஒரு மறுசந்திப்பாக கணக்கிட மறந்துவிடாதீர்கள். இந்த மறுசந்திப்புகளை எல்லாம் பைபிள் படிப்புகளாக்குவதே நம்முடைய இலக்கு என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.
9 உங்கள் பத்திரிகை மார்க்கத்தில் உள்ள நபர்களை தவறாமல் சந்தியுங்கள்: பத்திரிகை மார்க்கத்தில் உள்ளவர்களை உங்களுடைய சூழ்நிலைக்கு ஏற்ப எந்த நேரத்திலும் சந்திக்கலாம். அது, வார நாட்களில் காலையிலோ, பிற்பகலிலோ, மாலை நேரத்திலோ அல்லது வார இறுதி நாட்களில் வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கு பிறகோ இருக்கலாம். சில சமயங்களில், வியாதிப்பட்டதாலோ அல்லது வெளியூர் செல்ல வேண்டியதாலோ உங்களுடைய பத்திரிகை மார்க்கத்தை நீங்கள் செய்ய முடியாமல் போகலாம். ஆனால் அந்த சமயங்களில், உங்கள் குடும்பத்தில் அல்லது சபையில் இருக்கும் ஒரு பிரஸ்தாபியை செய்ய சொல்லுங்கள். இந்த முறையில், உங்கள் பத்திரிகை மார்க்கத்தில் உள்ளவர்கள் பத்திரிகைகளை தவறாமல் பெற்றுக் கொள்ள முடியும்.
10 பத்திரிகை மார்க்கத்தில் இருக்கும் அனைவருக்கும் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை தவறாமல் கொடுப்பதே ராஜ்ய விதை விதைப்பதற்கான ஒரு வழி. பைபிள் சத்தியங்களை நீங்கள் தொடர்ந்து போதிக்கையில், ராஜ்யத்தைப் பற்றி அவர்கள் முழுமையாக புரிந்து கொள்ள முடியும். பிறகு உங்களோடு சேர்ந்து அவர்களும் ராஜ்ய கனிகளை பிறப்பிப்பார்கள்.—மத். 13:8, 23.