ஒவ்வொரு நாளும் யெகோவாவைப் பற்றிப் பேசுங்கள்
1 மக்கள் தாங்கள் போற்றும் எந்தக் காரியத்தைக் குறித்தும் பேச விரும்புகிறார்கள்; ஏனென்றால், இருதயத்தின் நிறைவினால் வாய் பேசுகிறது. (லூக். 6:45ஆ) நம்முடைய இருதயத்திற்கு அருமையாக இருப்பது எது? சங்கீதக்காரன் எழுதினார்: “என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.” (சங். 35:28) யெகோவாவிடம் ஆழமான போற்றுதல் அவருக்கு இருந்தது; ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கடவுளைப் பற்றி பேசுவதையும் அவரைத் துதிப்பதையும் மதிப்புமிக்க சிலாக்கியமாக அவர் கருதினார். யெகோவாவோடு அன்யோன்யமாக இருந்ததால், சங்கீதக்காரனுக்கு மகிழ்ச்சியில் திளைக்க அநேக காரியங்கள் இருந்தன. (சங். 35:9) அவருடைய இந்தச் சிறந்த முன்மாதிரியை நாம் எப்படி பின்பற்றலாம்?
2 யெகோவாவைப் பற்றி உங்கள் வீட்டில் பேசுங்கள்: குடும்ப வட்டாரத்திற்குள் யெகோவாவைப் பற்றி தினந்தோறும் பேச வேண்டும். யெகோவாவிடம் ஆழமான அன்பு வைத்திருக்கும் பெற்றோர் தங்களுடைய எல்லா செயல் நடவடிக்கைகளிலும் இயல்பாகவே அவரைப் பற்றி பேசுவார்கள். (உபா. 6:5-7) அவர்கள் அவ்வாறு செய்கையில், பிள்ளைகள் தங்கள் தாயும் தகப்பனும் அவர்களுடைய விசுவாசத்திற்கேற்ப வாழ்கிறார்கள் என்பதையும் கடவுளுடைய சட்டங்களைப் போற்றுகிறார்கள் என்பதையும் கவனிப்பார்கள். அப்போது பிள்ளைகள், தங்கள் பெற்றோருடைய தேவபக்தி உண்மையில் வெளிக்காட்டப்படும் ஓர் அம்சமாக குடும்ப பைபிள் படிப்பைக் கருதுவார்கள்.—2 பே. 3:11.
3 யெகோவாவைப் பற்றி உங்கள் சகோதரர்களிடம் பேசுங்கள்: நாம் வாரந்தோறும் வழக்கமாய் ஈடுபடும் தேவராஜ்ய நடவடிக்கைகளில் நம்முடைய மனங்களையும் இருதயங்களையும் ஆவிக்குரிய ஆகாரத்தினால் நிரப்புவதற்கு நமக்கு அநேக வாய்ப்புகள் இருக்கின்றன. நாம் பேசுவதற்கு இருக்கும் நல்ல காரியங்களுக்குக் குறைவேயில்லை. (லூக். 6:45அ) உங்களுடைய தனிப்பட்ட படிப்பிலிருந்தோ வாராந்தர பைபிள் வாசிப்பிலிருந்தோ நீங்கள் கண்டுபிடித்த, விசேஷமாக அனுபவித்து மகிழ்ந்த ஏதேனும் குறிப்பு இருக்கிறதா? அதை உங்கள் சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதன்மூலம் யெகோவாவிடமுள்ள அன்பில் அவர்கள் பெருகுவதற்கு உதவுங்கள்.—சங். 35:18; எபி. 10:24.
4 யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசுங்கள்: நாம் அன்றாடம் ஆட்களுடன்—வேலை செய்யும் இடத்தில், பள்ளியில், விசுவாசத்தில் இல்லாத குடும்ப அங்கத்தினர்களிடத்தில்—செயல்தொடர்பு கொள்ளுகையில், யெகோவாவைக் குறித்து சாட்சி கொடுப்பதே நம்முடைய வாழ்க்கையில் முக்கியமான காரியம் என்பது பகிரங்கமாக தெரிய வேண்டும். உலகத்தின் பாணியை வெளிக்காட்டும் மரியாதையற்ற, முரட்டுத்தனமான பேச்சாக நம்முடைய பேச்சு இராமல், கடவுளுக்குத் துதிசேர்ப்பதாக அது இருக்க வேண்டும். தினமும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நாம் பிரசங்கிக்கும்படி அவர் பொறுப்பளித்திருக்கிற நற்செய்தியைப் பற்றி மற்றவர்களிடம் பேசவேண்டும்.—அப். 5:42; கொலோ. 4:6.
5 யெகோவாவின் உண்மையான வணக்கத்தாராக, நம்முடைய ஒப்பற்ற கடவுளாகிய யெகோவாவைப் பற்றி பேசுவதற்கான வாய்ப்புகளை தினந்தோறும் பிரயோஜனப்படுத்திக் கொள்ள கவனமாய் இருப்போமாக.—சங். 106:47.