நான்கு-வண்ண அச்சு இயந்திரங்கள்
ஜூலை 2, 1997 தேதியிட்ட எமது சுற்றுக் கடிதத்துக்கு ஏற்றவாறு செயல்பட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க நாங்கள் விரும்புகிறோம். அந்தக் கடிதத்தில், நாங்கள் நான்கு-வண்ண அச்சு இயந்திரங்கள் இரண்டை நிறுவி, காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை முழு வண்ணத்தில் அச்சிட ஆரம்பிக்கவிருப்பது பற்றிய நல்ல செய்தி தெரிவிக்கப்பட்டது. இந்த இயந்திரங்கள் இந்தியாவுக்கு இப்போது எந்த நேரத்திலும் வந்துசேர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது; அப்போது அவற்றிற்காக நாங்கள் பணம் செலுத்த வேண்டும். அதாவது, ஒவ்வொரு அச்சு இயந்திரத்தையும் பெறுவதற்கும் அதை நிறுவுவதற்கும் 70 லட்ச ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எமது கடிதத்தைப் பெற்ற பிறகு, பல சபைகளும் தனிநபர்களும் தாராளமாய் நன்கொடைகளை பிரஹரிதுர்க் பிரகாசன் சொஸைட்டிக்கு அச்சு இயந்திர செலவு தொடர்பாக அனுப்பினர். சிலர் இன்னும் தொடர்ந்து அனுப்பிவருகின்றனர்; அதற்காக நாங்கள் உண்மையிலேயே நன்றியுடன் இருக்கிறோம். இந்தக் குறிப்பிட்ட திட்டத்துக்காக நன்கொடை அளிக்கும் வாய்ப்பு இன்னும் திறந்திருக்கிறது; உங்களின் தொடர்ந்த ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம். நிபந்தனையற்ற நன்கொடைகளுக்கென்றோ, அல்லது சங்கத்திடம் வட்டியின்றி கொடுத்துவைப்பதற்கென்றோ, பணத்தை அனுப்ப விரும்பும் சபைகளும் தனிநபர்களும், ஜூலை 2, 1997 தேதியிட்ட எமது கடிதத்தைப் பார்த்து, அதில் கொடுக்கப்பட்டிருந்த அறிவுரைகளை அப்படியே பின்பற்ற வேண்டும். நான்கு-வண்ணத்தில் அச்சிடும் இந்த மாற்றம், வெளி ஊழியத்தில் பலன்தரும் விளைவை ஏற்படுத்த நாங்கள் ஜெபிக்கிறோம்; ஏனெனில் சத்தியத்தின் இதமான வார்த்தைகளை முழுவதுமாய் உள்ளடக்கிய நம் பத்திரிகைகள், நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்களை இன்னும் அதிகமாய்க் கவருபவையாகும்.—நீதி. 25:11; பிர. 12:10; அப். 13:48.