மேலானவைகளையே நாடுங்கள்
1 நம்மைச் சுற்றியிருக்கிற சந்ததியைப் பற்றியும் எதிர்காலத்தைக் குறித்த அதன் மனப்பாங்கைப் பற்றியும் குறிப்புசொல்கையில், டிசம்பர் 31, 1994, தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் உள்ள ஒரு கட்டுரை இவ்வாறு குறிப்பிட்டது: “அவர்கள் எதிர்காலத்தைக் குறித்து பயப்படுகின்றனர். வேலையைக் குறித்ததில், வியாதியைக் குறித்ததில், பொருளாதாரத்தைக் குறித்ததில், உலக நிலைமைகளைக் குறித்ததில் அவர்கள் பயப்படுகிறார்கள்.” நாம் எங்கு பார்த்தாலும் வாழ்க்கையைப் பற்றிய நிச்சயமின்மையின் உணர்வு காணப்படுகிறது. யெகோவாவின் சாட்சிகளாக நம்முடைய ஊழியம், இவ்விதமாக உணரும் ஆட்களோடு நம்மை தினமும் தொடர்புகொள்ளச் செய்கிறது. அவர்கள் எதிர்ப்படுவதைப் போன்ற அதே பிரச்சினைகளை நாம் எதிர்ப்பட்ட போதிலும் கடவுளுடைய வார்த்தையிலுள்ள நிச்சயமான வாக்குகளின் பேரிலான நம்முடைய விசுவாசமும் நம்பிக்கையும் வாழ்க்கையையும் மனிதவர்க்கத்தின் எதிர்காலத்தையும் குறித்து வெகு வித்தியாசமான மனப்பாங்கை நாம் கொண்டிருக்க உதவுகின்றன.—ஏசா. 65:13, 14, 17.
2 நம்முடைய நன்னம்பிக்கையான மனப்பான்மையும் உறுதியான நம்பிக்கைக்கான மனப்பாங்கும் நாம் கொண்டுசெல்லும் செய்திக்கு நேர்மை இருதயமுள்ள மக்கள் அநேகர் செவிசாய்க்கும்படி செய்கிறது. மனச்சோர்வை உணரும், கொடுமைக்குட்படுத்தப்பட்ட அநேகர் நம்முடன் பேசுவதை ஆறுதலளிப்பதாகக் கண்டிருக்கின்றனர். தாங்கள் கேட்பவற்றை அவர்கள் விரும்புவதால் சிலர் நம்முடன் பைபிளைப் படிக்க ஒப்புக்கொண்டிருக்கின்றனர். எனினும், சில சமயங்களில், முதலில் ஆட்கள் தங்களுடைய சொந்தப் பிரச்சினைகளை நம்மிடம் கொட்டித்தீர்த்துவிட விரும்புகின்றனர். ஒருவருடைய சொந்தக் கவலைகளைப் பற்றிக் கேட்க கொஞ்ச நேரத்தை ஒதுக்கினாலும், கடவுளுடைய வார்த்தையில் உள்ள உடன்பாடான சத்தியங்களை மக்களுக்குப் போதிக்கும் நம்முடைய நோக்கத்தைத் தவறவிட்டுவிடக்கூடாது.
3 துயரச் சுமையின்கீழ் இருக்கும் ஆட்களிடம் பரிவிரக்கம் காட்ட நாம் விரும்புகிறோம். மத்தேயு 11:28-ல் பின்வருமாறு பதிவுசெய்யப்பட்டதைச் சொல்கையில் இயேசு முன்மாதிரியை வைத்தார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்.” இதே விதமாக நாம் ஆட்களை உற்சாகப்படுத்த விரும்புகிறோம். எனினும், 28-ம் வசனத்தின் கடைசியில் உள்ளதைக் கவனியுங்கள், இயேசு இவ்வாறு சொன்னார்: “நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” அதுவே நம்முடைய நோக்கமாயிருக்கவேண்டும். கடவுளுடைய வார்த்தையிலிருந்து புத்துயிரளிக்கும் வாக்குகளைப் பகிர்ந்துகொள்வதன்மூலம் நாம் அதைச் செய்கிறோம். நன்கு செவிசாய்ப்பவர்களாய் இருப்பது நம்முடைய தனிப்பட்ட அக்கறையையும் மதிப்பையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது, இது கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் நம்முடைய பொறுப்பை நிறைவேற்றுவதற்கும், மனிதவர்க்கத்தின் எல்லா பிரச்சினைகளுக்கும் நிச்சயமான பரிகாரம் ராஜ்யம் மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவுவதற்கும் இன்றியமையாததாக இருக்கிறது.—மத். 24:14.
4 நம்முடைய வேலை, வாழ்க்கைமுறைப் பணி செய்யும் உடல்நல வல்லுநர்களுடையதைப் போன்றதல்ல. மாறாக, அப்போஸ்தலனாகிய பவுல் விவரித்ததுபோல, 1 தீமோத்தேயு 4:6-ல் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல, “நற்போதக”த்திடம்—கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் போதனைகளிடம்—ஒருமுகப்படுத்தும் ஓர் ஊழியமாக இது இருக்கிறது. சொந்த அல்லது உணர்ச்சி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைக் கொண்டிருக்கிறவர்கள் யெகோவாவில் சார்ந்திருக்க உற்சாகப்படுத்தப்பட வேண்டியிருக்கலாம். “மேலானவைகளையே நாடு”ம்படி, ராஜ்ய நம்பிக்கையுடன் சம்பந்தப்பட்ட காரியங்களிலேயே கவனம்செலுத்த அவர்களுக்குப் போதியுங்கள். (கொலோ. 3:2) கடவுளுடைய வார்த்தையிடமாக ஆட்கள் தங்களுடைய கவனத்தை ஒருமுகப்படுத்தும்போது தங்களுடைய வாழ்க்கையில் அது செலுத்தும் வலிமைவாய்ந்த செல்வாக்கின் பலனாக அவர்கள் கட்டியெழுப்பப்படலாம்.—எபி. 4:12.
5 எனவே, ஆட்கள் தங்களுடைய சிந்தனையை ‘நீதியுள்ள, கற்புள்ள, அன்புள்ள, நற்கீர்த்தியுள்ள’ காரியங்களிடமாகத் திருப்ப உதவுவதே நம்முடைய இலக்காக இருக்கிறது. (பிலி. 4:8) ராஜ்ய நம்பிக்கையிடமாக அவர்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தினால் நம்மைப் போலவே அவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பர். யெகோவா தம்முடைய ராஜ்யத்தின்மூலமாக அவர்களுடைய எல்லா பிரச்சினைகளையும் இறுதியில் தீர்ப்பார் என்று அறிவதால் வரும் மகிழ்ச்சியை அவர்களும் அனுபவிப்பார்கள்.—சங். 145:16.