சபை புத்தகப்படிப்பு கல்வி புகட்டும் நடவடிக்கைகளை ஆதரிக்கிறது
1 யெகோவாவின் அமைப்புடைய கல்விபுகட்டும் திட்டத்தில் சபை புத்தகப்படிப்பு ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. புத்தகப்படிப்புத் தொகுதிகள் ஆங்காங்கே பிராந்தியம் முழுவதிலும் இருக்கின்றன. இது அனைவரும் ஆஜராவதற்கு வசதியாக இருக்கிறது. தங்களுடைய சொந்த வட்டாரத்தில் ஒரு படிப்பு நடத்தப்படுவதால், அக்கறைகாட்டும் ஆட்கள் ஆஜராவதற்கான அழைப்பை தயக்கமின்றி உடனடியாக ஏற்றுக்கொள்ளலாம்.
2 ஒவ்வொரு தொகுதியையும் அளவில் சிறியதாக வைத்துக்கொள்ள முயற்சி எடுக்கப்படுகிறது. நடத்துனர் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உதவி அளிப்பதற்கு இது ஏதுவாக இருக்கிறது. எல்லாருமே அதே வேகத்தில் கற்றுக்கொள்வதில்லை. படிப்புக்கான பகுதியை முன்கூட்டியே படித்த பிறகும் ஒரு குறிப்பை புரிந்துகொள்வது ஒருவருக்கு கடினமாக இருக்குமானால், படிப்பு முடிந்தபிறகு நடத்துனர் அதை மேலும் கலந்தாலோசிக்கலாம். மேலும், ஒரு சிறிய தொகுதியாக இருப்பதால், குறிப்பு சொல்வதற்கும் வசனங்களை வாசிப்பதில் பங்கெடுப்பதற்கும் அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. தவறாது குறிப்பு சொல்வதன்மூலம் நீங்கள் கலந்தாலோசிப்புக்குப் பங்களிக்கிறீர்களா? உங்கள் சொந்த வார்த்தைகளில் பதில் அளிக்க முயற்சிக்கிறீர்களா? பங்குகொள்ள உங்களுக்கு இருக்கும் விருப்பம் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயனளிப்பதாய் இருக்கலாம். தயார் செய்யும்போதே, பாடத்தில் உள்ள குறிப்பிட்ட சில குறிப்புகளை நீங்கள் எவ்வாறு சொந்தமாக பொருத்தலாம் என்பதைப் புரிந்துகொள்ள உங்களுடைய பகுத்தறிவை உபயோகியுங்கள்.—எபி. 5:14.
3 புத்தகப்படிப்பு நடத்துனரால் கையாளப்படும் போதனை முறைகளைக் கவனிப்பதன் மூலம், அதிக அக்கறையைத் தூண்டத்தக்க முறையிலும், போதனையளிக்கும் முறையிலும் வீட்டு பைபிள் படிப்புகளை நடத்துவது எவ்வாறு என்று நீங்கள் கற்றுக்கொள்ளலாம். தகுதிவாய்ந்த ஒரு சகோதரரால் பாராக்கள் வாசிக்கப்பட்டபின், கேள்விகள் கலந்தாலோசிக்கப்படுகின்றன. படிப்பு நடத்துனர் எல்லாரையும் பேசுவதற்கு உற்சாகப்படுத்துகிறார். நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து, கொடுக்கப்பட்டுள்ள வசனங்களின் பேரில் குறிப்புகளை சொல்லவைக்க அவர் முயற்சிக்கிறார். இது அவ்வசனங்கள் எவ்வாறு பொருந்துகின்றன என்று புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. (நெகேமியா 8:8-ஐ ஒப்பிடவும்.) சிலசமயங்களில் அவர் விளக்கம் தரும் சுருக்கமான தன்னுடைய சொந்த குறிப்புகளைக் கொடுக்கலாம். அல்லது ஒரு முக்கியமான குறிப்பை சொல்லவைப்பதற்காக துணைக் கேள்விகளை அவர் உபயோகிக்கலாம். அந்தத் தகவல் நம்முடைய வாழ்க்கைக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதைக் காண ஓர் உதாரணமோ ஓர் எடுத்துக்காட்டோ நமக்கு உதவலாம்.
4 சில சபை புத்தகப்படிப்புகளில் கூட்டத்துக்கு ஆஜராவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. நீங்கள் தவறாது ஆஜராகிறீர்களா? இல்லையென்றால், ஒரு முக்கியமான ஏற்பாட்டை நீங்கள் தவறவிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். யெகோவா நம்மீது வைத்திருக்கும் கரிசனையை வெளிக்காட்டும் வழிகளில் ஒன்று புத்தகப்படிப்பு ஏற்பாடாக இருக்கிறது. (1 பே. 5:7) ஆவிக்குரிய விதத்தில் உறுதியுள்ளவர்களாக இருக்கும்பொருட்டு, நாம் அறிவிலும் ஞானத்திலும் வளரவேண்டும் என்று அவர் விரும்புகிறார். மறுபட்சத்தில், நாம் யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் அவ்வளவாக பிரயோஜனப்படாத வகையில் நம்மை ஆவிக்குரிய வளர்ச்சியில் குன்றிப்போகச்செய்து பலவீனமடையச் செய்ய சாத்தான் விரும்புகிறான். இது நடக்கும்படி அனுமதித்துவிடாதீர்கள்! இந்த நெருங்கிய உறவான தொகுதியில் நிலவியிருக்கும் அனலான, அன்பான சூழ்நிலை உங்களுடைய இருதயத்தைத் தொட்டு, தொடர்ந்து யெகோவாவைத் துதிக்க உங்களைத் தூண்டுவிப்பதாக.—சங்கீதம் 111:1-ஐ ஒப்பிடவும்.
5 புத்தகப்படிப்பு நடக்கும் பெரும்பாலான இடங்களில், பிரஸ்தாபிகளுக்கு வசதியாக ஊழியத்துக்கான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இவை வாரத்தின் மத்திப, இறுதி, அல்லது மாலை சாட்சிகொடுத்தலுக்காக இருக்கலாம். போதுமான பிராந்தியம் இருக்கிறதா என்பதையும் வெளி ஊழியத்தில் முன்னின்று வழிநடத்த யாராவது ஒருவர் இருக்கிறாரா என்றும் புத்தகப்படிப்பு நடத்துனர் நிச்சயப்படுத்திக்கொள்கிறார். வெளி ஊழியத்துக்கான கூட்டங்கள் 10-15 நிமிடங்களுக்குமேல் நீடிக்கக்கூடாது. தினவசனம் நம்முடைய பிரசங்க வேலையோடு சம்பந்தப்பட்டிருந்தால், நடத்துனர் அதைச் சுருக்கமாக சிந்தித்துவிட்டு, குறிப்பான ஓரிரண்டு வெளி ஊழிய ஆலோசனைகளைக் கொடுக்கலாம். அல்லது அம்மாத அளிப்பைப்பற்றி சுருக்கமாக நடித்துக்காட்டலாம்.
6 காலப்போக்கில், தொகுதியில் உள்ள ஒவ்வொருவரோடும் தனிப்பட்டவகையில் ஊழியம் செய்ய நடத்துனர் முயற்சிக்கிறார். அவ்வாறு செய்கையில் பொருத்தமான உற்சாகத்தையும் பயிற்சியையும் கொடுக்கிறார்.—ஒப்பிடவும்: மாற்கு 3:14; லூக்கா 8:1.