உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w11 6/15 பக். 7-11
  • எல்லாருக்கும் தேவையான நற்செய்தி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எல்லாருக்கும் தேவையான நற்செய்தி
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ரோமக் கிறிஸ்தவர்கள் அறிய வேண்டியிருந்த விஷயம்
  • பாவிகள் என்பதைப் புரிந்துகொள்ளுதல்
  • ‘சாட்சி தரும்’ ஒன்று
  • இயேசுவை மையமாகக் கொண்ட நற்செய்தி
  • பைபிள் புத்தக எண் 45—ரோமர்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • ரோமர்கள் செய்திகளில் மிகச்சிறந்ததைப் பெறுகிறார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • ‘மேலான ஒன்றைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தல்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • “நற்செய்தியைக் குறித்து வெட்கப்படேன்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
w11 6/15 பக். 7-11

எல்லாருக்கும் தேவையான நற்செய்தி

“நற்செய்தி . . . கடவுளுடைய வல்லமையின் வெளிக்காட்டாக இருக்கிறது; . . . அது மீட்புக்கு வழிநடத்துகிறது.”—ரோ. 1:16.

1, 2. ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை’ நீங்கள் ஏன் அறிவிக்கிறீர்கள், அப்போது எதையெல்லாம் வலியுறுத்துவீர்கள்?

‘தினமும் நற்செய்தியை அறிவிப்பது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது.’ நீங்கள் ஒருவேளை இவ்வாறு நினைத்திருக்கலாம் அல்லது சொல்லியிருக்கலாம். ஒரு யெகோவாவின் சாட்சியாக, ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை’ அறிவிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அதைக் குறித்த இயேசுவின் தீர்க்கதரிசனத்தை நீங்கள் மனப்பாடமாகக்கூடத் தெரிந்து வைத்திருக்கலாம்.—மத். 24:14.

2 இயேசு ஆரம்பித்து வைத்த ஊழியத்தை, அதாவது ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை’ அறிவிக்கும் ஊழியத்தை, நீங்கள் தொடர்ந்து செய்து வருகிறீர்கள். (லூக்கா 4:43-ஐ வாசியுங்கள்.) சீக்கிரத்தில் கடவுள் மனித விவகாரங்களில் தலையிடுவார் என்ற குறிப்பை ஊழியத்தில் நீங்கள் நிச்சயமாக வலியுறுத்துவீர்கள். அதாவது, ‘மிகுந்த உபத்திரவத்தில்’ அவர் பொய் மதங்களை அழித்து, துன்மார்க்கத்தைப் பூமியிலிருந்து நீக்கிவிடுவார் என்று சொல்வீர்கள். (மத். 24:21) கடவுளுடைய அரசாங்கம் பூமியைப் பூஞ்சோலையாக மாற்றி, சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அள்ளி வழங்கும் என்றும்கூட நீங்கள் அறிவிப்பீர்கள். சொல்லப்போனால், “உன் மூலம் எல்லாத் தேசத்தாரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என்று ‘ஆபிரகாமுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி,’ ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியின்’ ஓர் அம்சமாகும்.—கலா. 3:8.

3. ரோமர் புத்தகத்தில் அப்போஸ்தலன் பவுல் நற்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்தாரென ஏன் சொல்லலாம்?

3 இருந்தாலும், மக்களுக்குத் தேவையான நற்செய்தியின் மிக முக்கியமான ஓர் அம்சத்திற்கு நாம் கவனம் செலுத்தாமல் போகிறோமா? கிரேக்க மூலப்பிரதியின்படி, ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தில் ‘கடவுளுடைய அரசாங்கம்’ என்ற வார்த்தைகளை அப்போஸ்தலன் பவுல் ஒரேவொரு முறைதான் குறிப்பிட்டார்; ஆனால் “நற்செய்தி” என்ற வார்த்தையை 12 முறை குறிப்பிட்டார். (ரோமர் 14:17-ஐ வாசியுங்கள்.) அந்தக் கடிதத்தில் நற்செய்தியின் எந்த அம்சத்தைப் பற்றி அவ்வளவு அடிக்கடி பேசினார்? நற்செய்தியின் அந்த அம்சம் ஏன் மிக முக்கியமானது? “கடவுளைப் பற்றிய நற்செய்தியை” நம் பிராந்தியத்தில் அறிவிக்கும்போது அந்த அம்சத்தை நாம் ஏன் மனதில் வைக்க வேண்டும்?—மாற். 1:14; ரோ. 15:16; 1 தெ. 2:2.

ரோமக் கிறிஸ்தவர்கள் அறிய வேண்டியிருந்த விஷயம்

4. ரோமாபுரியில் பவுல் முதன்முறை சிறைப்பட்டபோது என்ன விஷயங்களைக் குறித்துப் பேசினார்?

4 ரோமாபுரியில் பவுல் முதன்முறை சிறைப்பட்டபோது அநேக யூதர்களை வரவழைத்துப் பேசினார்; அவர்களிடம் அவர் என்ன விஷயங்களைக் குறித்துப் பேசினார் என்பதைக் கவனிப்பது பயனுள்ளதாய் இருக்கும். பதிவு சொல்கிறபடி, (1) ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்களிடம் அவர் முழுமையாகச் சாட்சி கொடுத்தார்; அதோடு, . . . (2) இயேசுவைப் பற்றிய விஷயங்களைப் பக்குவமாக எடுத்துச் சொன்னார்.’ விளைவு? “சிலர் அவர் சொன்ன விஷயங்களை நம்பி ஏற்றுக்கொண்டார்கள்; மற்றவர்களோ நம்ப மறுத்தார்கள்.” அதன் பின்பு பவுல், ‘தன்னைப் பார்க்க வந்த எல்லாரையும் அன்பாக வரவேற்று, . . . (1) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்களுக்குப் பிரசங்கித்து வந்தார்; அதோடு, (2) எஜமானராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விஷயங்களைச் சிறிதும் தயக்கமில்லாமல் கற்பித்து வந்தார்.’ (அப். 28:17, 23-31) உண்மைதான், கடவுளுடைய அரசாங்கத்தைக் குறித்து பவுல் பேசினார். ஆனால், வேறு எதையும் அவர் வலியுறுத்தினார்? கடவுளுடைய அரசாங்கத்திற்கு மையமாக விளங்குகிற ஒன்றைக் குறித்து, அதாவது கடவுளுடைய நோக்கத்தில் இயேசு வகிக்கிற பங்கைக் குறித்து, பேசினார்.

5. எந்த முக்கியமான தேவையைக் குறித்து பவுல் ரோமர் புத்தகத்தில் எழுதினார்?

5 எல்லா மக்களுமே இயேசுவைப் பற்றித் தெரிந்துகொண்டு அவர்மீது விசுவாசம் வைக்க வேண்டும். இந்தத் தேவையைக் குறித்து ரோமர் புத்தகத்தில் பவுல் எழுதினார். ஆரம்பத்தில் அவர், “இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதன் மூலம்” கடவுளுக்கு ‘முழுமனதோடு பரிசுத்த சேவை செய்து வருவதாக’ எழுதினார். அதோடு, “நற்செய்தியை அறிவிப்பதற்கு நான் வெட்கப்படுவதில்லை; ஏனென்றால், அது கடவுளுடைய வல்லமையின் வெளிக்காட்டாக இருக்கிறது; . . . அது மீட்புக்கு வழிநடத்துகிறது” என்றும் எழுதினார். பிற்பாடு, ‘நான் அறிவிக்கிற நற்செய்தியின்படியே, மனிதர்களுடைய ரகசியமான காரியங்களைக் கிறிஸ்து இயேசுவைக் கொண்டு கடவுள் நியாயந்தீர்க்கப்போகிறார்’ என்று குறிப்பிட்டார். பின்பு, “நான் எருசலேமிலிருந்து இல்லிரிக்கம்வரை சுற்றிலும் போய், கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை முழுமையாகப் பிரசங்கித்திருக்கிறேன்” என்றார்.a (ரோ. 1:9, 16; 2:16; 15:19) பவுல் ஏன் திரும்பத் திரும்ப இயேசு கிறிஸ்துவைக் குறித்து ரோமர்களுக்கு எழுதினார்?

6, 7. ரோமாபுரியில் சபை உருவானதைப் பற்றியும் அதில் இருந்தவர்களைப் பற்றியும் நமக்கு என்ன தெரியும்?

6 ரோமாபுரியில் கிறிஸ்தவச் சபை எப்படி உருவானதென நமக்குத் தெரியாது. கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளன்று யூதர்களும் யூத மதத்திற்கு மாறியவர்களும் ரோமாபுரியிலிருந்து எருசலேமுக்கு வந்தார்கள்; அவர்களில் கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் திரும்பிச் சென்று சத்தியத்தைப் பரப்பினார்களா? (அப். 2:10) அல்லது, கிறிஸ்தவர்களாக இருந்த வியாபாரிகளோ பயணிகளோ ரோமாபுரிக்குச் சென்றபோது சத்தியத்தைப் பரப்பினார்களா? எது எப்படியிருந்தாலும், சுமார் கி.பி. 56-ல் பவுல் ரோமர் புத்தகத்தை எழுதிய சமயத்தில் அங்கு சபை உருவாக்கப்பட்டு நீண்ட காலம் ஆகியிருந்தது. (ரோ. 1:8) அந்தச் சபையில் எப்படிப்பட்ட பின்னணியைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்?

7 சிலர் யூதர்களாக இருந்தார்கள். அன்றோனீக்குவையும் யூனியாவையும் ‘என் உறவினர்கள்’ என குறிப்பிட்டு பவுல் வாழ்த்துத் தெரிவித்தார்; அப்படியென்றால், அவருடைய சொந்தக்காரர்களான அவர்களும் யூதர்களாக இருந்திருக்க வேண்டும். ரோமாபுரியில் கூடாரத் தொழில் செய்துவந்த ஆக்கில்லாவும் அவரது மனைவியான பிரிஸ்கில்லாளும்கூட யூதர்களாக இருந்தார்கள். (ரோ. 4:1; 9:3, 4; 16:3, 7; அப். 18:2) ஆனால், பவுல் வாழ்த்துத் தெரிவித்த இன்னும் பல சகோதர சகோதரிகள் புறதேசத்தாராக இருந்திருக்கலாம். அவர்களில் சிலர் ‘ரோம அரசனுடைய வீட்டாராக’ இருந்திருக்கலாம்; அந்த வீட்டார் ரோம அரசனுடைய அடிமைகளையும் சில அதிகாரிகளையும் குறித்திருக்கலாம்.—பிலி. 4:22; ரோ. 1:7; 11:13.

8. ரோமாபுரியிலிருந்த கிறிஸ்தவர்கள் என்ன இக்கட்டான நிலையில் இருந்தார்கள்?

8 ரோமாபுரியிலிருந்த எல்லாக் கிறிஸ்தவர்களும் ஓர் இக்கட்டான நிலையில் இருந்தார்கள். நாமும் அந்நிலையில்தான் இருக்கிறோம். அதைக் குறித்து பவுல் சொல்லுகையில், “எல்லாருமே பாவம் செய்து கடவுளுடைய மகிமையான குணங்களைப் பிரதிபலிக்கத் தவறியிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். (ரோ. 3:23) பவுலுடைய கடிதத்தை வாசித்த எல்லாருமே தாங்கள் பாவிகள் என்பதைப் புரிந்துகொள்ளவும், பாவத்திலிருந்து விடுபட கடவுள் செய்திருக்கிற ஏற்பாட்டின்மீது விசுவாசம் வைக்கவும் வேண்டியிருந்தது.

பாவிகள் என்பதைப் புரிந்துகொள்ளுதல்

9. நற்செய்தியால் கிடைக்கவிருந்த என்ன பலனைப் பற்றி பவுல் எழுதினார்?

9 ரோமர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்தின் ஆரம்பத்தில், தான் அடிக்கடி குறிப்பிட்ட நற்செய்தியால் கிடைக்கவிருந்த அருமையான பலனைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “நற்செய்தியை அறிவிப்பதற்கு நான் வெட்கப்படுவதில்லை; ஏனென்றால், அது கடவுளுடைய வல்லமையின் வெளிக்காட்டாக இருக்கிறது; முதலில் யூதர்களையும் பின்பு கிரேக்கர்களையும், ஏன், விசுவாசிக்கிற அனைவரையுமே அது மீட்புக்கு வழிநடத்துகிறது.” ஆம், மீட்பு கிடைப்பதற்கு வாய்ப்பிருந்தது; ஆனால், அதற்கு விசுவாசம் தேவைப்பட்டது. இதைச் சுட்டிக்காட்டியே, “விசுவாசத்தினால் நீதிமான் வாழ்வு பெறுவான்” என்ற கருத்தாழமிக்க சத்தியத்தை ஆபகூக் 2:4-லிருந்து அவர் மேற்கோள் காட்டினார். (ரோ. 1:16, 17; கலா. 3:11; எபி. 10:38) ஆனால், நற்செய்தி மீட்புக்கு வழிநடத்தும் என்பதற்கும் ‘எல்லாருமே பாவம் செய்தவர்கள்’ என்பதற்கும் என்ன சம்பந்தம்?

10, 11. ரோமர் 3:23-லுள்ள கருத்து ஏன் சிலருக்கு விநோதமாக இருக்காது, மற்றவர்களுக்கு விநோதமாக இருக்கலாம்?

10 உயிர்காக்கும் விசுவாசத்தை ஒரு நபர் வளர்த்துக்கொள்வதற்கு முன்பாக தான் ஒரு பாவி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சிறுவயதிலிருந்தே கடவுள்மீது நம்பிக்கை வைத்திருக்கிற, பைபிளைப் பற்றி ஓரளவு அறிந்திருக்கிற நபர்களுக்கு இந்தக் கருத்து விநோதமாக இருக்காது. (பிரசங்கி 7:20-ஐ வாசியுங்கள்.) ‘எல்லாருமே பாவம் செய்தவர்கள்’ என்று பவுல் குறிப்பிட்டதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ அதன் அர்த்தத்தை ஓரளவாவது புரிந்திருப்பார்கள். (ரோ. 3:23) என்றாலும், அதன் அர்த்தமே புரியாத அநேகரை நாம் ஊழியத்தில் சந்திக்கலாம்.

11 சில நாடுகளிலுள்ள மக்கள், தாங்கள் பிறவியிலேயே பாவிகள், பாவத்தை வழிவழியாகப் பெற்றவர்கள் என்ற எண்ணத்தோடு பொதுவாக வளர்க்கப்படுவதில்லை. ஆனாலும், ‘நான் தவறுகள் செய்பவன்தான், என்னிடம் கெட்ட குணங்கள் இருக்கிறதுதான், நான் சில மோசமான காரியங்களைச் செய்திருக்கலாம்தான்’ என்று அவர்கள் ஒத்துக்கொள்ளலாம். இதுபோன்ற குறைகள் மற்றவர்களிடமும் இருப்பதை அவர்கள் பார்க்கலாம். என்றாலும், தாங்களும் மற்றவர்களும் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்பதைத் தங்களுடைய பின்னணியின் காரணமாகப் புரிந்துகொள்ளாதிருக்கலாம். சில மொழிகளில், ஒருவர் பாவி என்று குறிப்பிடப்படும்போது, அவர் குற்றவாளி என்றோ விதிமுறைகளை மீறுபவர் என்றோ நினைக்கப்படலாம். ஆகவே, இதுபோன்ற சூழ்நிலையில் வளர்ந்த ஒரு நபர், பவுல் குறிப்பிட்ட அர்த்தத்தில் தன்னைப் பாவியாக நினைக்க மாட்டார்.

12. நாம் எல்லாருமே பாவிகள் என்ற கருத்தை அநேகர் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை?

12 கிறிஸ்தவமண்டல நாடுகளில்கூட, தாங்கள் பாவிகள் என்ற கருத்தை அநேகர் ஏற்றுக்கொள்வதில்லை. ஏன்? அவ்வப்போது அவர்கள் சர்ச்சுக்குப் போனாலும்கூட ஆதாம் ஏவாள் பற்றிய பைபிள் பதிவை வெறும் கட்டுக்கதை என்றே கருதுகிறார்கள். இன்னும் சிலர் கடவுளை வெறுப்பவர்களின் மத்தியில் வளர்கிறார்கள். அவர்கள் கடவுள் இருப்பதை நம்புவதில்லை; எனவே, மனிதர்களுக்குக் கடவுள் ஒழுக்கநெறிகளை வகுத்திருக்கிறார் என்பதையும் அவற்றைக் கடைப்பிடிக்கத் தவறுவது பாவம் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. ஒரு கருத்தில், முதல் நூற்றாண்டிலிருந்த சில நபர்களைப் போல் அவர்கள் இருக்கிறார்கள்; அந்த நபர்கள், ‘நம்பிக்கை இல்லாதவர்களாகவும் கடவுளை அறியாதவர்களாகவும் இந்த உலகத்தில் வாழ்ந்து வந்ததாக’ பவுல் குறிப்பிட்டார்.—எபே. 2:12.

13, 14. (அ) கடவுள் இருக்கிறார் என்பதையும் தாங்கள் பாவிகள் என்பதையும் நம்பாதவர்கள் சாக்குப்போக்கு சொல்ல முடியாததற்கு ஒரு காரணம் என்ன? (ஆ) எப்படிப்பட்ட காரியங்களைச் செய்தவர்கள் சாக்குப்போக்கு சொல்ல இடமில்லாதிருந்தது?

13 அன்றும்சரி இன்றும்சரி, அத்தகைய காரணங்களைக் காட்டி ஏன் யாரும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது என்பதற்கு இரண்டு காரணங்களை ரோமர் புத்தகத்தில் பவுல் குறிப்பிட்டார். முதல் காரணம்: படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதற்கு படைப்புகளே சாட்சி பகருகின்றன. (ரோமர் 1:19, 20-ஐ வாசியுங்கள்.) எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் ரோமாபுரியிலிருந்து கடிதம் எழுதியபோது குறிப்பிட்ட பின்வரும் விஷயத்திற்கு இது ஒத்திருக்கிறது: “ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவரால் உண்டாக்கப்படுகிறது, ஆனால் எல்லாவற்றையும் உண்டாக்கியவர் கடவுளே.” (எபி. 3:4) இந்த நியாயவிவாதம், இப்பிரபஞ்சம் முழுவதையும் ஒரு படைப்பாளர் உண்டாக்கியிருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

14 ஆகவே, பூர்வ இஸ்ரவேலர் உட்பட உயிரற்ற சிலைகளை வழிபட்ட எவரும் “சாக்குப்போக்கு சொல்ல இடமில்லை” என ரோமர்களுக்கு பவுல் எழுதியபோது வலுவான ஆதாரத்தோடுதான் எழுதினார். இயல்புக்கு மாறான முறையில் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட ஆண்களும் பெண்களும்கூட சாக்குப்போக்கு சொல்ல இடமில்லாதிருந்தது. (ரோ. 1:22-27) இதை பவுல் விளக்கிய பிறகு, ‘யூதர்கள், கிரேக்கர்கள் ஆகிய எல்லாருமே பாவத்தின் பிடியில் இருக்கிறார்கள்’ என்ற உண்மையை முடிவாகக் குறிப்பிட்டார்.—ரோ. 3:9.

‘சாட்சி தரும்’ ஒன்று

15. எல்லாருக்கும் என்ன இருக்கிறது, அதன் விளைவு என்ன?

15 தாங்கள் பாவிகள் என்பதையும், அதிலிருந்து விடுபட உதவி தேவை என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டியதற்கான இன்னொரு காரணத்தை ரோமர் புத்தகம் குறிப்பிடுகிறது. பூர்வ இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்திருந்த திருச்சட்டத்தைக் குறித்து பவுல் இவ்வாறு எழுதினார்: “திருச்சட்டத்தின்கீழ் பாவம் செய்த அனைவரும் திருச்சட்டத்தினால் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.” (ரோ. 2:12) இந்தத் திருச்சட்டத்தை அறியாத புறதேசத்தார், ‘இயல்பாகவே திருச்சட்டத்தின்படி நடக்கிறார்கள்’ என்று அவர் தொடர்ந்து விளக்கினார். அவர்கள் ஏன் பாலியல் முறைகேடு, கொலை, திருட்டு ஆகியவை தவறான காரியங்களெனப் பொதுவாகக் கருதுகிறார்கள்? அவர்களுக்கு மனசாட்சி இருப்பதால் என்று பவுல் சொன்னார்.—ரோமர் 2:14, 15-ஐ வாசியுங்கள்.

16. ஒருவருக்கு மனசாட்சி இருப்பதால் அவர் பாவம் செய்ய மாட்டாரென ஏன் நினைக்க முடியாது?

16 என்றாலும், ஒருவருடைய மனசாட்சி அவரது உள்மனதின் குரலாகச் செயல்படுகிறது என்பதற்காக அது சொல்கிறபடி அவர் நடப்பாரென நினைக்க முடியாது. இதைப் பூர்வ இஸ்ரவேலரின் அனுபவம் காட்டுகிறது. அவர்களுக்குக் கடவுள் மனசாட்சியையும் கொடுத்திருந்தார், திருட்டு, பாலியல் முறைகேடு ஆகியவற்றுக்கு எதிரான திருச்சட்டத்தையும் கொடுத்திருந்தார்; என்றாலும், அவர்கள் அடிக்கடி தங்கள் மனசாட்சிக்கும் திருச்சட்டத்திற்கும் விரோதமாக நடந்தார்கள். (ரோ. 2:21-23) இப்படி இரண்டு குற்றங்களைச் செய்திருந்ததால் கடவுளுடைய நெறிகளையும் சித்தத்தையும் செய்யத் தவறிய பாவிகளாக அவர்கள் இருந்ததில் சந்தேகமே இல்லை. இது படைப்பாளருடன் அவர்களுக்கிருந்த பந்தத்தைப் பெருமளவு பாதித்தது.—லேவி. 19:11; 20:10; ரோ. 3:20.

17. ரோமர் புத்தகத்தில் என்ன ஊக்கமூட்டும் விஷயத்தை நாம் வாசிக்கிறோம்?

17 ரோமர் புத்தகத்திலிருந்து நாம் சிந்தித்த விஷயங்கள், சர்வவல்லவர் முன்னிலையில் மனிதர்களாகிய நாம் எப்படிப்பட்ட மோசமான நிலையில் இருக்கிறோம் என்பதை ஓரளவு படம்பிடித்துக் காட்டலாம். ஆனால், நம் பாவ நிலையை விவரிப்பதோடு பவுல் நிறுத்திக்கொள்ளவில்லை. சங்கீதம் 32:1, 2-லுள்ள தாவீதின் வார்த்தைகளை அவர் மேற்கோள் காட்டி இவ்வாறு எழுதினார்: “எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ அவர்கள் சந்தோஷமானவர்கள்; எந்த மனிதனுடைய பாவத்தை யெகோவா ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டாரோ அந்த மனிதன் சந்தோஷமானவன்.” (ரோ. 4:7, 8) ஆம், பாவங்களை மன்னிப்பதற்குக் கடவுள் ஓர் ஏற்பாட்டை முறைப்படி செய்திருக்கிறார்.

இயேசுவை மையமாகக் கொண்ட நற்செய்தி

18, 19. (அ) ரோமர் புத்தகத்தில் பவுல் நற்செய்தியின் எந்த அம்சத்திடம் கவனத்தைத் திருப்பினார்? (ஆ) கடவுளுடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்க எவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்?

18 யெகோவா செய்திருக்கும் அந்த ஏற்பாட்டைப் பற்றி யோசிக்கையில், “அது உண்மையிலேயே ஒரு நற்செய்தி!” என்று நீங்கள் சொல்லலாம். அது நற்செய்தி என்பது நிஜம்தான்; ரோமர் புத்தகத்தில் பவுல் சிறப்பித்துக்காட்டிய நற்செய்தியின் முக்கிய அம்சத்திற்கு இப்போது மீண்டும் வருகிறோம். நாம் ஏற்கெனவே பார்த்தபடி பவுல் இவ்வாறு எழுதினார்: “நற்செய்தியை அறிவிப்பதற்கு நான் வெட்கப்படுவதில்லை; ஏனென்றால், அது கடவுளுடைய வல்லமையின் வெளிக்காட்டாக இருக்கிறது; . . . அது மீட்புக்கு வழிநடத்துகிறது.”—ரோ. 1:15, 16.

19 அந்த நற்செய்தி, கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் இயேசு வகிக்கும் பங்கை மையமாகக் கொண்டிருந்தது. ‘நற்செய்தியின்படியே, மனிதர்களுடைய ரகசியமான காரியங்களைக் கிறிஸ்து இயேசுவைக் கொண்டு கடவுள் நியாயந்தீர்க்கப்போகிற நாளை’ பவுல் எதிர்நோக்கியிருந்தார். (ரோ. 2:16) என்றாலும், ‘கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசாங்கத்தின்’ அல்லது அந்த அரசாங்கத்தின் மூலம் கடவுள் செய்யப்போகிற காரியங்களின் முக்கியத்துவத்தை அவர் குறைவாக மதிப்பிடவில்லை. (எபே. 5:5) மாறாக, கடவுளுடைய அரசாங்கத்தில் வாழவும் அதன் ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர் சொன்னார்; அதாவது, (1) கடவுளுடைய பார்வையில் நாம் பாவிகளாக இருக்கிறோம் என்பதையும், (2) நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட நாம் இயேசு கிறிஸ்துவின்மீது விசுவாசம் வைப்பது அவசியம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னார். கடவுளுடைய நோக்கத்தின் இந்த அம்சங்களை ஒருவர் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு, அதனால் ஒளிமயமான எதிர்கால நம்பிக்கையைப் பெறும்போது, “ஆம், இது உண்மையிலேயே நற்செய்திதான்!” என்று பொருத்தமாகவே சொல்ல முடியும்.

20, 21. ஊழியத்தின்போது, ரோமர் புத்தகத்தில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ள இயேசுவின் பங்கை நாம் ஏன் விவரமாக எடுத்துச்சொல்ல வேண்டும், அதனால் என்ன பலன் கிடைக்கலாம்?

20 கிறிஸ்தவ ஊழியத்தைச் செய்கையில் நற்செய்தியின் இந்த அம்சத்தை நாம் கண்டிப்பாக மனதில் வைக்க வேண்டும். இயேசுவைக் குறித்து, “அவர்மீது விசுவாசம் வைக்கிற யாருமே ஏமாற்றமடைய மாட்டார்கள்” என்று ஏசாயா சொன்ன வார்த்தைகளை பவுல் மேற்கோள் காட்டினார். (ரோ. 10:11; ஏசா. 28:16) பாவத்தைப் பற்றி பைபிள் சொல்வதை அறிந்திருக்கிற ஆட்களுக்கு இயேசு பற்றிய அடிப்படை செய்தி விநோதமாக இருக்காது. மற்றவர்களுக்கோ இந்தச் செய்தி, தங்கள் கலாச்சாரத்தில் அறியப்படாத அல்லது நம்பப்படாத புதுமையான விஷயமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் கடவுள் மீதும் பைபிள் மீதும் நம்பிக்கை வைக்கும்போது அவர்களுக்கு இயேசுவின் பங்கை நாம் விவரமாக எடுத்துச்சொல்ல வேண்டும். நற்செய்தியின் இந்த அம்சத்தை ரோமர் 5-ஆம் அதிகாரம் எப்படி விளக்குகிறதென அடுத்த கட்டுரை சிந்திக்கும். அந்தக் கட்டுரை ஊழியத்தில் உங்களுக்குப் பயனுள்ளதாய் இருக்கும்.

21 ரோமர் புத்தகத்தில் திரும்பத் திரும்பக் குறிப்பிடப்பட்டுள்ள நற்செய்தியைப் புரிந்துகொள்ள நல்மனமுள்ளவர்களுக்கு உதவுவது எவ்வளவாய் திருப்தியளிக்கும்! அந்த நற்செய்தி உண்மையிலேயே “கடவுளுடைய வல்லமையின் வெளிக்காட்டாக இருக்கிறது; . . . அது மீட்புக்கு வழிநடத்துகிறது.” (ரோ. 1:16) நமக்குத் திருப்தி கிடைப்பது மட்டுமல்லாமல், ரோமர் 10:15-ல் பவுல் மேற்கோள் காட்டிய பின்வரும் வார்த்தைகளை மற்றவர்கள் ஒப்புக்கொள்வதையும் காண்போம்: “நற்காரியங்களை நற்செய்தியாக அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!”—ஏசா. 52:7.

[அடிக்குறிப்பு]

a இதே போன்ற சொற்றொடர்கள் பைபிளின் மற்ற புத்தகங்களிலும் காணப்படுகின்றன.—மாற். 1:1; அப். 5:42; 1 கொ. 9:12; பிலி. 1:27.

நினைவிருக்கிறதா?

• நற்செய்தியின் எந்த அம்சத்தை ரோமர் புத்தகம் சிறப்பித்துக் காட்டுகிறது?

• என்ன உண்மையைப் புரிந்துகொள்ள நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்?

• “கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி” நமக்கும் மற்றவர்களுக்கும் எப்படி ஆசீர்வாதமாய் அமையும்?

[பக்கம் 8-ன் சிறுகுறிப்பு]

ரோமர் புத்தகத்தில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ள நற்செய்தி, கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் இயேசு வகிக்கும் முக்கியப் பங்கை உட்படுத்துகிறது

[பக்கம் 9-ன் படம்]

பாவம் என்ற விஷக்கிருமியுடன் நாம் எல்லாரும் பிறந்திருக்கிறோம்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்