சீஷராக்கும் வேலையில் சந்தோஷம் காணுங்கள்
‘நீங்கள் புறப்பட்டுப் போய், சீஷராக்குங்கள்.’—மத். 28:19.
1-3. (அ) பைபிள் படிப்புகள் நடத்துவதைக் குறித்து அநேகர் எப்படி உணருகிறார்கள்? (ஆ) என்னென்ன கேள்விகளை நாம் சிந்திப்போம்?
அமெரிக்காவில், ஹிந்தி தொகுதியினரோடு சேர்ந்து ஊழியம் செய்கிற ஒரு சகோதரி இவ்வாறு எழுதினார்: “பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு 11 வாரங்களாக நான் பைபிள் படிப்பு நடத்தி வருகிறேன். நாங்கள் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். சீக்கிரத்தில் அவர்கள் பாகிஸ்தானுக்கே திரும்பிவிடப் போவதை யோசித்தால் என் கண் கலங்குகிறது. அவர்களுடைய பிரிவை நினைத்து மட்டுமல்ல, யெகோவாவைப் பற்றி அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தபோது நான் அனுபவித்த சந்தோஷத்தை நினைத்தும் கண் கலங்குகிறேன்.”
2 அந்தச் சகோதரியைப் போலவே நீங்களும், ஒருவருக்கு பைபிளைக் கற்றுக்கொடுப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவித்திருக்கிறீர்களா? சீஷராக்கும் வேலையில் இயேசுவும் முதல் நூற்றாண்டிலிருந்த அவரது சீஷர்களும் மிகுந்த மகிழ்ச்சி கண்டார்கள். இயேசுவிடம் பயிற்சி பெற்றிருந்த 70 சீஷர்கள், ஊழியத்தில் தாங்கள் கண்ட பலனைப் பற்றி அவரிடம் வந்து சந்தோஷமாக விவரித்தபோது அவரும் ‘ஆவியிலே களிகூர்ந்தார்.’ (லூக். 10:17–21) அவ்வாறே, இன்றும் அநேகர் சீஷராக்கும் வேலையில் மிகுந்த மகிழ்ச்சி காண்கிறார்கள். சொல்லப்போனால், 2007-ல், சந்தோஷமாகவும் மும்முரமாகவும் இந்த வேலையில் ஈடுபட்ட பிரஸ்தாபிகள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 65 லட்சம் பைபிள் படிப்புகளை நடத்தினார்கள்!
3 ஆனால், பைபிள் படிப்பை நடத்தும் இனிய அனுபவத்தை சில பிரஸ்தாபிகள் இன்னும் ருசித்துப் பார்த்ததில்லை. இன்னும் சிலர் சமீப வருடங்களில் யாருக்கும் பைபிள் படிப்பை நடத்தாமல் இருந்திருக்கலாம். அப்படியென்றால், பைபிள் படிப்பை நடத்தும்போது என்னென்ன சவால்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்? அவற்றை எப்படிச் சமாளிக்கலாம்? ‘நீங்கள் புறப்பட்டுப் போய், சீஷராக்குங்கள்’ என்ற இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிய நம்மாலான அனைத்தையும் செய்யும்போது என்னென்ன பலன்களைப் பெறுவோம்?—மத். 28:19.
நம் சந்தோஷத்தைப் பறிக்கும் சவால்கள்
4, 5. (அ) உலகின் சில பகுதிகளில் மக்கள் நம் செய்திக்கு எந்தளவு ஆர்வம் காட்டுகிறார்கள்? (ஆ) மற்ற இடங்களில் பிரஸ்தாபிகள் என்ன சவால்களைச் சந்திக்கிறார்கள்?
4 உலகின் சில பகுதிகளில், மக்கள் நம்மிடமிருந்து பிரசுரங்களை ஆர்வமாய் வாங்கி வாசிக்கிறார்கள், நம்மோடு சேர்ந்து பைபிளைப் படிக்கவும் விரும்புகிறார்கள். கொஞ்ச காலத்திற்கு ஜாம்பியாவில் ஊழியம் செய்துவந்த ஓர் ஆஸ்திரேலியத் தம்பதியர் இவ்வாறு எழுதினார்கள்: “நீங்கள் கேட்பதெல்லாம் உண்மை. ஜாம்பியாவில் பிரசங்க வேலை செழித்தோங்குகிறது. தெரு ஊழியம் அமோக பலன் தருகிறது! மக்களே எங்களிடம் வந்து பேசுகிறார்கள், குறிப்பிட்ட சில பத்திரிகைகளைக் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள்.” சமீப வருடத்தில் ஜாம்பியாவில் உள்ள சகோதர சகோதரிகள் 2,00,000-க்கும் அதிகமான பைபிள் படிப்புகளை நடத்தினார்கள்; அதாவது, சராசரியாக ஒவ்வொரு பிரஸ்தாபியும் ஒன்றுக்கும் அதிகமான பைபிள் படிப்புகளை நடத்தினார்கள்.
5 என்றாலும், மற்ற இடங்களில் உள்ள நிலைமை வேறு; அங்கு மக்களுக்குப் பிரசுரங்களை அளிப்பதும், தவறாமல் பைபிள் படிப்புகளை நடத்துவதும் பிரஸ்தாபிகளுக்குப் பெரும் பாடாக இருக்கிறது. ஏன்? ஏனென்றால், மக்கள் பெரும்பாலும் வீடுகளில் இருப்பதில்லை; அப்படியே இருந்தாலும், மதத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் மதப்பற்று இல்லாத குடும்பத்தில் வளர்ந்திருக்கலாம் அல்லது பொய் மதத்தில் உள்ள மாய்மாலத்தைப் பார்த்து வெறுப்படைந்திருக்கலாம். உண்மையில், அநேகர் போலி மேய்ப்பர்களால் புண்படுத்தப்பட்டு, தொய்ந்துபோய், சிதறப்பட்டிருக்கிறார்கள். (மத். 9:36) ஆகவே, அப்படிப்பட்டவர்கள் பைபிளைப் பற்றி கலந்துபேச ஏன் ஒத்துக்கொள்வதில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
6. சிலருக்கு என்ன வரம்புகள் இருக்கலாம்?
6 உண்மையோடு சேவை செய்கிற சில பிரஸ்தாபிகள், சந்தோஷத்தைப் பறிக்கும் வேறு விதமான சவால்களைச் சந்திக்கிறார்கள். சீஷராக்கும் வேலையில் ஒருசமயம் அவர்கள் மிக மும்முரமாக ஈடுபட்டு வந்திருக்கலாம்; ஆனால், இப்போது சுகவீனத்தின் அல்லது வயோதிகத்தின் வரம்புகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். சிலசமயங்களில் நமக்குச் சில வரம்புகள் இருப்பதாக நாமே நினைத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, பைபிள் படிப்பை நடத்த உங்களுக்குத் தகுதியில்லை என்று நினைக்கிறீர்களா? பார்வோனிடம் பேசும்படி மோசேக்கு யெகோவா கட்டளையிட்டபோது மோசே உணர்ந்த விதமாகவே நீங்களும் உணரலாம். அவர், “கர்த்தாவே, நான் உமக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் தேர்ந்த பேச்சாளன் அல்ல. நான் சிறப்பாக எப்போதும் பேசியதில்லை. இப்போது உம்மிடம் பேசிய பிறகும்கூட, நான் சிறந்த பேச்சாளனாக மாறவில்லை” என்றார். (யாத். 4:10, ஈஸி டு ரீட் வர்ஷன்) பொதுவாக, நமக்குத் தகுதியில்லை என்று நாம் நினைப்பதோடு, தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்குமோ என்றும் பயப்படலாம். ‘எனக்குத்தான் நன்றாகக் கற்றுக்கொடுக்கும் திறமை இல்லையே; அப்படியிருக்கும்போது நான் ஒருவருக்குக் கற்றுக்கொடுத்தால் அவர் எப்படி சீஷராக முடியும்’ என்று நினைத்து நாம் கவலைப்படலாம். ஆகவே, ‘எதற்கு இந்த வம்பு, பைபிள் படிப்பு நடத்தாமலேயே இருந்துவிடலாம்’ என்ற தீர்மானத்திற்கு வரலாம். இப்படிப்பட்ட சவால்களையெல்லாம் நாம் எப்படிச் சமாளிக்கலாம்?
உங்கள் இருதயத்தைப் பக்குவப்படுத்துங்கள்
7. ஊழியம் செய்ய இயேசுவுக்குத் தூண்டுகோலாக இருந்தது எது?
7 நம் இருதயத்தைப் பக்குவப்படுத்துவதுதான் நாம் எடுக்க வேண்டிய முதல் படி. “இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்” என்று இயேசு சொன்னார். (லூக். 6:45) மற்றவர்களுடைய நலனில் இயேசுவுக்கு இருந்த இருதயப்பூர்வ அக்கறைதான் ஊழியம் செய்ய அவருக்குத் தூண்டுகோலாக இருந்தது. உதாரணத்திற்கு, சக யூதர்களின் ஆன்மீக நிலை பரிதாபத்திற்குரியதாக இருந்ததை அவர் கண்டு, ‘அவர்கள்மேல் மனதுருகினார்.’ ஆகவே தம் சீஷர்களிடம், “அறுப்பு மிகுதி, . . . அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார்.—மத். 9:36–38.
8. (அ) நாம் எதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்? (ஆ) பைபிளைப் படிக்கும் ஒரு பெண் எழுதிய கடிதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
8 நாம் சீஷராக்கும் வேலையைச் செய்யும்போது, நமக்கு பைபிள் படிப்பை நடத்த ஒருவர் நேரம் செலவழித்ததால் நாம் எந்தளவுக்கு நன்மை அடைந்திருக்கிறோம் என்பதை நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஊழியத்தில் நாம் சந்திக்கப்போகும் மக்களைப் பற்றியும் நம் செய்தியை கேட்பதால் அவர்கள் பெறப்போகும் நன்மைகளைப் பற்றியும்கூட சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பெண், அவள் வசிக்கும் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்திற்கு இவ்வாறு எழுதினாள்: “என் வீட்டிற்கு வந்து எனக்குக் கற்றுக்கொடுக்கிற சாட்சிகளுக்கு நான் எந்தளவுக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். சிலசமயங்களில், நான் அவர்களைப் பாடாய் படுத்துகிறேனென நினைக்கிறேன்; ஏனென்றால், அவர்களிடம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பேன், ஒருநாளும் அவர்களை நேரத்திற்குப் போக விடவும் மாட்டேன். ஆனால், அவர்கள் என்னிடம் ரொம்பவே பொறுமையாக இருக்கிறார்கள்; அவர்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை எனக்கு ஆர்வத்தோடு சொல்லித்தருகிறார்கள். என் வாழ்க்கையில் இவர்களைச் சந்தித்ததற்காக யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் நன்றி சொல்கிறேன்.”
9. இயேசு எதன்மீது தம் கவனத்தைப் பதித்திருந்தார், நாம் எவ்வாறு அவரைப் பின்பற்றலாம்?
9 எல்லாருமே இயேசுவின் செய்திக்குச் செவிகொடுக்கவில்லை என்பது உண்மைதான். (மத். 23:37) சிலர் கொஞ்ச காலத்திற்கு மட்டும் அவரைப் பின்பற்றினார்கள்; பிற்பாடு, அவரது போதனைகளை ஏற்க மறுத்து, “அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்.” (யோவா. 6:66) என்றாலும், தம் செய்தியை சிலர் கேட்காமல் போனதற்காக அந்தச் செய்திக்கே மதிப்பில்லையென இயேசு நினைக்கவில்லை. அவர் விதைத்த பல விதைகள் வளராமல் போய்விட்டபோதிலும், அவரது கவனமெல்லாம் அவர் செய்த நல்ல வேலைமீதே பதிந்திருந்தது. வயல்நிலங்கள் அறுப்புக்கு தயாராக இருந்ததை அவர் கவனித்தார்; அந்த அறுப்பு வேலையில் கலந்துகொண்டு மிகுந்த சந்தோஷம் கண்டார். (யோவான் 4:35, 36-ஐ வாசியுங்கள்.) நாமும் நமக்கு நியமிக்கப்பட்டுள்ள நிலத்தில், ஆங்காங்கே உள்ள வெட்டாந்தரையை மட்டும் பார்க்காமல், அறுவடைக்குத் தயாராகப்போகும் பயிர்கள்மீது ஏன் நம் கவனத்தைப் பதிக்கக் கூடாது? நாம் எப்போதும் இதுபோன்ற நம்பிக்கையான மனநிலையுடன் எப்படி இருக்கலாமென பார்க்கலாம்.
அறுவடை செய்யும் குறிக்கோளோடு விதையுங்கள்
10, 11. ஊழியத்தில் சந்தோஷத்தை இழக்காதிருக்க நீங்கள் என்ன செய்யலாம்?
10 ஒரு விவசாயி, அறுவடை செய்யும் குறிக்கோளோடு விதைகளை விதைக்கிறார். அவ்வாறே நாமும், பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கும் குறிக்கோளோடு பிரசங்க வேலையைச் செய்ய வேண்டும். ஆனால், நீங்கள் வெளி ஊழியத்திற்குத் தவறாமல் செல்கிறபோதிலும் வெகு சிலரையே வீடுகளில் சந்திக்க முடிகிறதா? அல்லது, மறுசந்திப்புக்கு செல்லும்போது ஆட்களைப் பார்க்க முடிவதில்லையா? இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் விரக்தியடையலாம். அதற்காக வீட்டுக்கு வீடு ஊழியத்தையே விட்டுவிடலாமா? கூடவே கூடாது! காலங்காலமாக பலன் தந்திருக்கும் இந்த வகையான ஊழியத்தில்தான் இன்றும்கூட அநேகர் முதல்முதலாக சத்தியத்தைக் கேட்கிறார்கள்.
11 என்றாலும், ஊழியத்தில் சந்தோஷத்தை இழக்காதிருக்க நீங்கள் வேறு விதங்களிலும் மக்களிடம் பிரசங்கிக்க முடியுமா? உதாரணத்திற்கு, மக்களைத் தெருக்களில் அல்லது வேலை செய்யும் இடங்களில் சந்தித்துச் சாட்சி கொடுக்க நீங்கள் முயற்சி செய்திருக்கிறீர்களா? ஃபோன் மூலமாக சாட்சி கொடுத்திருக்கிறீர்களா? அல்லது, ஏற்கெனவே நீங்கள் சந்தித்துப் பேசியவர்களை மீண்டும் தொடர்புகொள்வதற்காக அவர்களுடைய ஃபோன் நம்பரைக் கேட்டு வாங்கியிருக்கிறீர்களா? நீங்கள் விடாமுயற்சியுடனும் சூழ்நிலைக்கு ஏற்பவும் ஊழியம் செய்யும்போது, ராஜ்ய செய்திக்குச் செவிசாய்ப்போரைச் சந்திக்கும் சந்தோஷத்தைப் பெறுவீர்கள்.
ஆர்வமில்லாதவர்களைச் சந்திக்கையில்
12. நம் பிராந்தியத்தில் நிறைய பேர் ஆர்வம் காட்டாதவர்களாக இருந்தால் என்ன செய்யலாம்?
12 உங்கள் பிராந்தியத்திலுள்ள நிறைய பேர் மதத்தில் ஆர்வம் காட்டாதவர்களாக இருந்தால் என்ன செய்யலாம்? அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதைப் பற்றிப் பேசலாம். கொரிந்துவிலிருந்த சக கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘யூதருக்கு யூதனைப்போலானேன். . . . நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாய் இல்லை.’ பவுலின் குறிக்கோள் என்ன? “எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்” என்று அவர் சொன்னார். (1 கொ. 9:20–22) நம் பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கு எந்த விஷயத்தில் ஆர்வம் இருக்கிறதெனத் தெரிந்துகொள்கிறோமா? மதத்தில் அக்கறை காட்டாத அநேகர் தங்களுடைய குடும்ப நலனில் அக்கறை காட்டலாம். அவர்கள் வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிக்கவும் முயன்றுகொண்டிருக்கலாம். அப்படிப்பட்டவர்களுடைய மனதைத் தொடும் விதத்தில் ராஜ்ய செய்தியை நம்மால் சொல்ல முடியுமா?
13, 14. சீஷராக்கும் வேலையின் மூலம் நாம் எவ்வாறு அதிக சந்தோஷத்தைப் பெறலாம்?
13 ஆர்வம் காட்டுகிறவர்களைச் சந்திப்பது அபூர்வமாக இருக்கும் பகுதிகளில்கூட சீஷராக்கும் வேலையைச் செய்வதில் அநேக பிரஸ்தாபிகள் மகிழ்ச்சி காண்கிறார்கள். எப்படி? வேறொரு மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம். 60 வயதைத் தாண்டிய ஒரு தம்பதியர், தங்களுடைய சபையின் பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான சீன மாணவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் வசித்து வருவதை அறிந்தார்கள். “இதனால் சீன மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் எங்களுக்கு வந்தது” என்கிறார் கணவர். “அந்த மொழியைக் கற்றுக்கொள்வதற்குத் தினமும் மணிக்கணக்காக நேரம் செலவிட வேண்டியிருந்தாலும், எங்கள் பகுதியிலிருந்த நிறைய சீன மக்களுக்கு பைபிள் படிப்பு நடத்த முடிந்தது” என்றும் அவர் சொல்கிறார்.
14 உங்களால் வேறொரு மொழியைக் கற்றுக்கொள்ள முடியாவிட்டாலும்கூட சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி என்ற சிற்றேட்டைப் பயன்படுத்தி வேறு மொழி பேசுகிறவர்களுக்குச் சாட்சி கொடுக்கலாம். அவர்களுடைய மொழியிலுள்ள பிரசுரங்களைக்கூட நீங்கள் கைவசம் வைத்திருக்கலாம். வேறு மொழியையும் கலாச்சாரத்தையும் சேர்ந்தவர்களிடம் பேசுவதற்குக் கூடுதலான நேரமும் முயற்சியும் தேவைப்படும் என்பது உண்மைதான். என்றாலும் கடவுளுடைய வார்த்தையில் காணப்படுகிற இந்த நியமத்தை நினைவில் வையுங்கள்: “சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.”—2 கொ. 9:6.
சபையின் கூட்டு முயற்சி
15, 16. (அ) சீஷர்களை உண்டாக்குவதற்கு சபையிலுள்ள அனைவரின் முயற்சியும் ஏன் தேவை? (ஆ) இதில் வயதானவர்களின் பங்கு என்ன?
15 சீஷர்களை உண்டாக்குவது ஒரே ஒருவருடைய முயற்சியை மட்டும் சார்ந்திருப்பதில்லை, சபையிலுள்ள அனைவருடைய முயற்சியையும் சார்ந்திருக்கிறது. ஏன் அப்படிச் சொல்லலாம்? “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று இயேசு சொன்னார். (யோவா. 13:35) ஆம், பைபிள் மாணாக்கர்கள் கூட்டங்களுக்கு வரும்போது அங்கு நிலவும் அன்பைக் கண்டு அசந்துபோகிறார்கள். பைபிள் படிக்கும் ஒரு பெண் இவ்வாறு எழுதினார்: “கூட்டங்கள் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அங்கிருக்கிறவர்கள் என்னோடு ரொம்ப இனிமையாகப் பழகுகிறார்கள்.” தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு சொந்த குடும்பத்தாரிடமிருந்தே எதிர்ப்பு வரலாம் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 10:35–37-ஐ வாசியுங்கள்.) என்றாலும், சபையில் அவர்களுக்கு எண்ணற்ற ஆன்மீக ‘சகோதரர்களும், சகோதரிகளும், தாய்களும், பிள்ளைகளும்” கிடைப்பார்கள் என்று அவர் வாக்குக் கொடுத்தார்.—மாற். 10:30.
16 பைபிள் மாணாக்கர்கள் முன்னேறுவதில், முக்கியமாக நம்முடைய வயதான சகோதர சகோதரிகள் பெரும் பங்கு வகிக்கிறார்கள். எவ்விதத்தில்? வயதானவர்கள் சிலரால் பைபிள் படிப்பு நடத்த முடியாவிட்டாலும் கூட்டங்களில் உற்சாகமளிக்கும் பதில்களைச் சொல்வதன் மூலம் மற்றவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிறார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக “நீதியின் வழியில்” நடந்து வருவது, சபைக்கு மகிமை சேர்ப்பதோடு நல்மனமுள்ளவர்களை கடவுளுடைய அமைப்பிடம் கவர்ந்திழுக்கிறது.—நீதி. 16:31.
பயத்தை விரட்டுங்கள்
17. பைபிள் படிப்பு நடத்த நமக்குத் திறமையில்லை என்று நினைத்தால் என்ன செய்யலாம்?
17 பைபிள் படிப்பு நடத்த உங்களுக்குத் திறமையில்லை என்று நினைத்துக் கவலைப்படுகிறீர்களா? அப்படியென்றால், மோசேக்கு யெகோவா உதவிய விதத்தை யோசித்துப் பாருங்கள்; மோசேக்குத் தம்முடைய சக்தியைக் கொடுத்ததோடு அவருடைய அண்ணன் ஆரோனையும் துணைக்கு அனுப்பினார். (யாத். 4:10–17) சாட்சிக் கொடுக்கும் வேலைக்கு கடவுளுடைய சக்தியின் ஆதரவு இருக்கும் என இயேசு உறுதியளித்தார். (அப். 1:8) அதுமட்டுமல்ல, அவர் தம் சீஷர்களை இரண்டிரண்டு பேராக ஊழியத்திற்கு அனுப்பினார். (லூக். 10:1) ஆகவே, பைபிள் படிப்பு நடத்துவது உங்களுக்கு கடினமாக இருந்தால் கடவுளுடைய சக்திக்காகவும் ஞானத்திற்காகவும் ஜெபம் செய்யுங்கள்; அதோடு, சக ஊழியரின் உதவியை நாடுங்கள். அவர் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கலாம், அவருடைய அனுபவமும் உங்களுக்கு உதவலாம். யெகோவா இந்த “உலகத்தில் பலவீனமானவைகளை,” அதாவது சாதாரண மக்களை, தேர்ந்தெடுத்து இந்த அசாதாரண வேலையை நிறைவேற்றி வருகிறார் என்பதை நினைவில் வைப்பது உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தும்.—1 கொ. 1:26–29.
18. தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற பயத்தை நாம் எப்படி விரட்டலாம்?
18 தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற பயத்தை எப்படி விரட்டலாம்? சீஷராக்கும் வேலை சமையல் வேலையைப் போன்றது அல்ல என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்; சமையலைப் பொறுத்தவரை அதன் வெற்றியோ தோல்வியோ ஒருவரை மட்டுமே, அதாவது சமைக்கிறவரை மட்டுமே சார்ந்திருக்கிறது. ஆனால், ஒரு சீஷரை உருவாக்குவதில் குறைந்தது மூன்று சாராரின் முயற்சி தேவைப்படுகிறது. முதலாவதாக யெகோவா இதில் பெரும் பங்கு வகித்து, ஒருவரைத் தம் பக்கம் இழுத்துக்கொள்கிறார். (யோவா. 6:44) நாமும் சபையிலுள்ள மற்றவர்களும், கற்பிக்கும் கலையை முடிந்தளவுக்குப் பயன்படுத்தி மாணாக்கர் முன்னேறுவதற்கு உதவுகிறோம். (2 தீமோத்தேயு 2:15-ஐ வாசியுங்கள்.) மாணாக்கரும் தான் கற்றுக்கொள்கிறபடி நடக்க வேண்டும். (மத். 7:24–27) ஒருவர் பைபிள் படிப்பை நிறுத்திவிட்டால் அது நமக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். மாணாக்கர் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்; ஆனால், அவரவர்தான் ‘தங்களைக் குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிக்க’ வேண்டும்.—ரோ. 14:12.
பலன்கள் என்ன?
19-21. (அ) பைபிள் படிப்புகள் நடத்துவதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றன? (ஆ) பிரசங்க வேலையைச் செய்கிற அனைவரையும் யெகோவா எவ்வாறு கருதுகிறார்?
19 பைபிள் படிப்புகளை நடத்துவது, ராஜ்யத்தை முதலாவது தேடுவதிலேயே நம் முழு கவனத்தையும் செலுத்த உதவுகிறது. அதோடு, கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியங்களை நம்முடைய மனதிலும் இருதயத்திலும் ஆழமாகப் பதிய வைக்கிறது. ஏன் அப்படிச் சொல்லலாம்? பாராக் என்ற பயனியர் சொல்வதைக் கேளுங்கள்: “பைபிள் படிப்புகளை நடத்துவது கடவுளுடைய வார்த்தையை இன்னும் நன்றாகப் படித்துத் தெரிந்துகொள்ளத் தூண்டும் என்பது உறுதி. மற்றவர்களுக்கு நன்றாகச் சொல்லிக்கொடுப்பதற்கு முன், என்னுடைய நம்பிக்கைகளைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.”
20 உங்களுக்கு ஒரு பைபிள் படிப்பு இல்லையென்றால் உங்கள் ஊழியமே வீணென கடவுள் நினைப்பாரா? இல்லவே இல்லை! மாறாக, அவரைத் துதிப்பதற்கு நாம் எடுக்கும் முயற்சிகளைப் பெரிதும் போற்றுவார். பிரசங்க வேலையைச் செய்கிற அனைவரும் ‘தேவனுக்கு உடன்வேலையாட்கள்.’ என்றாலும், பைபிள் படிப்பை நடத்தும்போது, நாம் விதைத்த விதையைக் கடவுள் வளரச்செய்யும் விதத்தைப் பார்த்து மகிழ முடியும். (1 கொ. 3:6, 9) ஏமி என்ற பயனியர் இப்படிச் சொல்கிறார்: “பைபிள் மாணாக்கர் முன்னேறுவதைப் பார்க்கையில், யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கும் அவருக்கு அருமையான வாய்ப்பளிக்க யெகோவா நம்மைப் பயன்படுத்தியதை நினைத்து நம் உள்ளம் நன்றியால் பூரிக்கும்.”
21 பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கவும் நடத்தவும் நாம் முழு முயற்சி எடுப்பது, கடவுளை சேவிப்பதிலேயே நம் கவனத்தையெல்லாம் செலுத்த உதவும்; அதுமட்டுமல்ல, நாம் தப்பிப்பிழைத்து புதிய உலகில் வாழ்வோம் என்ற நம்பிக்கையைப் பலப்படுத்தும். யெகோவாவின் துணையோடு, கேட்போரும் இரட்சிப்படைவதற்கு நம்மால் உதவ முடியும். (1 தீமோத்தேயு 4:16-ஐ வாசியுங்கள்.) அது எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தைத் தரும்!
சிந்திப்பதற்கு
• சிலருக்கு என்னென்ன சவால்கள் பைபிள் படிப்புகளை நடத்தத் தடையாக இருக்கலாம்?
• நம் பிராந்தியத்தில் நிறைய பேர் ஆர்வம் காட்டாதவர்களாக இருந்தால் என்ன செய்யலாம்?
• பைபிள் படிப்புகள் நடத்துவதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றன?
[பக்கம் 9-ன் படங்கள்]
நல்மனமுள்ளவர்களைக் கண்டுபிடிக்க வெவ்வேறு விதங்களில் பிரசங்கிக்கிறீர்களா?