பவுலின் மாதிரியைப் பின்பற்றி ஆன்மீக முன்னேற்றம் செய்யுங்கள்
“நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.”—2 தீ. 4:7.
1, 2. தர்சு பட்டணத்தைச் சேர்ந்த சவுல் வாழ்க்கையில் என்ன மாற்றங்களைச் செய்தார், என்ன முக்கியமான வேலையில் இறங்கினார்?
அவர் படுபுத்திசாலியாக, சிந்தித்து செயல்படுபவராக இருந்தார். எனினும், அவர் தன் ‘மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்தார்.’ (எபே. 2:3) பின்னர், தன்னைப்பற்றி சொல்லுகையில், “தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்” என்றார். (1 தீ. 1:13) அவர்தான் தர்சு பட்டணத்தைச் சேர்ந்த சவுல்.
2 சவுல் பின்னர் தன் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைச் செய்தார். தன்னுடைய பழக்கவழக்கங்களை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். ‘சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேட’ அவர் கடினமாய்ப் பாடுபட்டார். (1 கொ. 10:32) அவர் மென்மையானவராய் ஆனார். தான் முன்பு துன்புறுத்தினவர்களிடம் கனிவுடன் நடந்துகொண்டார். (1 தெசலோனிக்கேயர் 2:7, 8-ஐ வாசியுங்கள்.) “ஊழியக்காரனானேன்” என்று அவர் குறிப்பிட்ட பிறகு, “பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது” என்று எழுதினார்.—எபே. 3:7, 8.
3. பவுலுடைய கடிதங்களையும் ஊழியத்தில் அவர் செய்தவற்றையும் கருத்தூன்றி படிப்பது நமக்கு எந்த விதத்தில் உதவும்?
3 பவுல் என்றும் அறியப்பட்ட சவுல், ஆன்மீக ரீதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் செய்தார். (அப். 13:9) அவரைப் போலவே நாமும் சத்தியத்தில் முன்னேற ஒரு வழி இருக்கிறது. அது, பவுலுடைய கடிதங்களையும் ஊழியத்தில் அவர் செய்தவற்றையும் கருத்தூன்றி படித்து, விசுவாசத்தில் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதாகும். (1 கொரிந்தியர் 11:1; எபிரெயர் 13:7-ஐ வாசியுங்கள்.) அப்படிச் செய்வது, தனிப்பட்ட படிப்புக்காக நல்ல அட்டவணையைப் பின்பற்றுவதற்கும் ஜனங்களிடம் உண்மையான அன்பை வளர்த்துக்கொள்வதற்கும் நம்மைக் குறித்து மட்டுக்குமீறி எண்ணாதிருப்பதற்கும் தூண்டுதலை அளிக்கும். இவற்றைக் குறித்து இனி சிந்திப்போம்.
படிப்பதைப் பழக்கப்படுத்திக்கொண்டார்
4, 5. தனிப்பட்ட படிப்பு பவுலுக்கு எவ்வாறு உதவியது?
4 ஒரு பரிசேயனாக அவர், ‘கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டார்’; அதனால், வேதவாக்கியங்களை அவர் ஓரளவு அறிந்திருந்தார். (அப். 22:1-3; பிலி. 3:4-6) முழுக்காட்டுதல் பெற்ற கையோடு அவர் ‘அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போனார்.’ இது சீரியா வனாந்தரமாக அல்லது அரேபிய தீபகற்பத்தில் தியானிப்பதற்குரிய அமைதியான ஓர் இடமாக இருந்திருக்கலாம். (கலா. 1:17) இயேசுவே மேசியா என்பதைச் சுட்டிக்காட்டும் பைபிள் பகுதிகளைத் தியானிக்க பவுல் விரும்பியதாகத் தெரிகிறது. மேலும், தான் செய்யவிருந்த வேலைக்குத் தன்னை தயார்படுத்திக்கொள்ளவும் விரும்பினார். (அப்போஸ்தலர் 9:15, 16, 20, 22-ஐ வாசியுங்கள்.) கடவுள் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தியானிப்பதற்கு பவுல் முயற்சி எடுத்தார்.
5 தனிப்பட்ட படிப்பிலிருந்து பைபிள் அறிவையும் ஆழமான புரிந்துகொள்ளுதலையும் பவுல் பெற்றார். இது சத்தியத்தைத் திறம்பட்ட விதத்தில் கற்பிக்க அவருக்கு உதவியது. உதாரணத்திற்கு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவிலிருந்த ஜெப ஆலயத்தில், இயேசுதான் மேசியா என்பதை நிரூபிக்க எபிரெய வேதாகமத்திலிருந்து பவுல் குறைந்தபட்சம் ஐந்து மேற்கோள்களைக் காட்டினார். அதிலுள்ள தகவலையும் பல முறை பயன்படுத்தினார். பைபிள் விஷயங்களில் அவருடைய நியாய விவாதங்கள் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வலிமைவாய்ந்தவையாய் இருந்தன. எனவே, இன்னுமதிகமாய் கற்றுக்கொள்ள, “யூதரிலும் யூதமார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள்.” (அப். 13:14-44) பல வருடங்களுக்குப் பிறகு ரோமிலிருந்த யூதர்களின் ஒரு தொகுதியினர் பவுல் தங்கியிருந்த இடத்திற்கு வந்தார்கள். அப்போது அவர், ‘மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்து விஸ்தரித்துப் பேசினார்.’—அப். 28:17, 22, 23.
6. துன்பங்களை எதிர்ப்பட்டபோது சத்தியத்தில் உறுதியாய் நிலைத்திருக்க பவுலுக்கு எது உதவியது?
6 துன்பங்களை எதிர்ப்பட்டபோது பவுல் வேதவசனங்களைத் தவறாமல் ஆராய்ந்தார்; பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்ட செய்திகளைப் படித்து பலத்தைப் பெற்றார். (எபி. 4:12) மரண தண்டனையைப் பெறுவதற்கு முன் ரோமில் அவர் சிறைப்பட்டிருந்த சமயத்தில், “புஸ்தகங்களையும்,” “தோற்சுருள்களையும்” எடுத்துவரும்படி தீமோத்தேயுவிடம் சொன்னார். (2 தீ. 4:13) இவை, கருத்தூன்றிப் படிப்பதற்கு பவுல் பயன்படுத்திய எபிரெய வேதாகமத்தின் பகுதிகளாக இருக்கலாம். இப்படித் தவறாமல் பைபிளைப் படிப்பது வேதவசனங்களைப் பற்றிய அறிவைப் பெற அவருக்கு அவசியமாய் இருந்தது. சத்தியத்தில் உறுதியாய் நிலைத்திருக்க இது அவருக்கு உதவியது.
7. தவறாமல் பைபிளைக் கருத்தூன்றி படிப்பதால் கிடைக்கும் பயன்களைக் குறிப்பிடுங்கள்.
7 தவறாமல் பைபிளைப் படித்து, பயனுள்ள விதத்தில் தியானிப்பது ஆன்மீக முன்னேற்றம் செய்ய நமக்கு உதவும். (எபி. 5:12-14) கடவுளுடைய வார்த்தை எந்தளவு மதிப்புமிக்கது என்பதைக் குறித்து சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.” (சங். 119:72, 98, 101) தவறாமல் பைபிளைக் கருத்தூன்றி படிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? எதிர்காலத்தில் கடவுளுடைய சேவையில் உங்களுக்குக் கிடைக்கவிருக்கும் பொறுப்புகளுக்காக இப்போதே உங்களைத் தயார்படுத்திக்கொள்கிறீர்களா? அதற்காக பைபிளைப் படித்து, தியானிக்கிறீர்களா?
மக்களிடம் அன்புகாட்ட கற்றுக்கொண்டார்
8. பிற மதத்தவரிடம் சவுல் எவ்வாறு நடந்துகொண்டார்?
8 கிறிஸ்தவராக ஆவதற்கு முன்பு சவுல் யூத மதத்தில் பற்றுமிக்கவராய் இருந்தார். பிற மதத்தவரை துளியும் மதிக்காதிருந்தார். (அப். 26:4, 5) ஸ்தேவானைச் சில யூதர்கள் கல்லெறிந்து கொன்றதைப் பார்த்தபோது அவர் அதைத் தடுக்கவில்லை. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவது சரியென்றே சவுல் நினைத்திருக்க வேண்டும். ஸ்தேவான் கொலை செய்யப்பட்டபோது அத்தகைய தண்டனை அவருக்குத் தேவைதான் என்று அவர் நினைத்திருக்கலாம். (அப். 6:8-14; 7:54–8:1) ‘சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக் கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தார்’ என்று கடவுளுடைய வழிநடத்துதலால் எழுதப்பட்ட பதிவு சொல்கிறது. (அப். 8:3) அவர் ‘அந்நிய பட்டணங்கள் வரைக்கும் [சென்று] அவர்களைத் துன்பப்படுத்தினார்.’—அப். 26:11.
9. சவுலின் வாழ்க்கையில் நடந்த எந்தச் சம்பவம், மற்றவர்களிடம் அவர் நடந்துகொண்ட விதத்தை மாற்றிக்கொள்ளச் செய்தது?
9 கிறிஸ்துவின் சீஷர்களைத் துன்பப்படுத்துவதற்காக சவுல் தமஸ்குவிற்குச் செல்லும் வழியில் கர்த்தராகிய இயேசு அவருக்குத் தரிசனமானார். கடவுளுடைய குமாரனிடமிருந்து வந்த பிரகாசமான ஒளியினால் சவுல் கண்பார்வையை இழந்து மற்றவர்களுடைய உதவியை நாடினார். யெகோவா, அனனியாவைப் பயன்படுத்தி சவுலுக்குப் பார்வை அளிப்பதற்குள் அவருக்கு மக்கள் மீதிருந்த மனப்பான்மை அடியோடு மாறிவிட்டது. (அப். 9:1-30) கிறிஸ்துவின் சீஷராய் ஆன பிறகு, இயேசுவைப் போலவே எல்லாரிடமும் நடந்துகொள்ள அவர் பாடுபட்டார். அதாவது, யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல் ‘எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருந்தார்.’—ரோமர் 12:17-21-ஐ வாசியுங்கள்.
10, 11. மக்களிடம் பவுல் எப்படி உண்மையான அன்பைக் காட்டினார்?
10 மற்றவர்களுடன் சமாதானமாய் இருந்தாலே போதுமென்று பவுல் நினைக்கவில்லை. அவர்களிடம் உண்மையான அன்புகாட்ட விரும்பினார். அதற்கான வாய்ப்பைக் கிறிஸ்தவ ஊழியம் அவருக்கு அளித்தது. முதல் மிஷனரி பயணத்தின்போது அவர் ஆசியா மைனரில் நற்செய்தியைப் பிரசங்கித்தார். கடும் எதிர்ப்பு வந்தபோதிலும் பவுலும் அவருடைய சக ஊழியர்களும், சாந்தகுணமுள்ளவர்கள் கிறிஸ்தவர்களாக ஆவதற்கு உதவி செய்வதில் குறியாய் இருந்தார்கள். லீஸ்திராவிலும் இக்கோனியாவிலும் இருந்த எதிரிகள் பவுலைக் கொலைசெய்ய முயற்சி செய்தபோதிலும் அவர்கள் மறுபடியும் அந்தப் பட்டணங்களுக்குச் சென்றார்கள்.—அப். 13:1-3; 14:1-7, 19-23.
11 பிறகு, மக்கெதோனியாவைச் சேர்ந்த பிலிப்பு பட்டணத்தில் உண்மை மனதுள்ளோரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் பவுலும் அவருடைய கூட்டாளிகளும் இறங்கினார்கள். யூத மதத்திற்கு மாறியிருந்த லீதியாள் நற்செய்திக்குச் செவிசாய்த்து கிறிஸ்தவராக ஆனார். அரசதிகாரிகள் பவுலையும் சீலாவையும் அநேக அடி அடித்த பின்பு அவர்களைச் சிறையில் தள்ளினார்கள். இருந்தாலும், பவுல் சிறைச்சாலைக்காரனிடம் பிரசங்கித்தார். அதனால், அவரும் அவருடைய குடும்பத்தாரும் முழுக்காட்டுதல் பெற்று யெகோவாவை வழிபடுகிறவர்களாக ஆனார்கள்.—அப். 16:11-34.
12. பிறரை அலட்சியமாக நடத்திய சவுல், இயேசு கிறிஸ்துவின் அன்பு நிறைந்த அப்போஸ்தலனாக மாற அவரை எது தூண்டியது?
12 ஒருகாலத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திவந்த சவுல் பின்னர் ஏன் கிறிஸ்தவராக ஆனார்? பிறரை அலட்சியமாக நடத்திய அந்த மனிதர் அன்பும் கனிவும் நிறைந்த அப்போஸ்தலனாக மாறுவதற்கு எது காரணமாக இருந்தது? கடவுளையும் கிறிஸ்துவையும் பற்றிய சத்தியத்தை மற்றவர்கள் கற்றுக்கொள்ள தன்னுடைய உயிரையே தியாகம் செய்ய முன்வருவதற்கு அவரை எது தூண்டியது? இந்தக் கேள்விகளுக்கு பவுலே பின்வருமாறு பதிலளிக்கிறார்: ‘[என்னை] தம்முடைய கிருபையினால் [அதாவது, அளவற்ற தயவினால்] அழைத்த தேவன், தம்முடைய குமாரனை . . . எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தார்.’ (கலா. 1:15, 16) “நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும் பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்” என்று தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதினார். (1 தீ. 1:16) பவுலை யெகோவா மன்னித்தார். இப்படி அளவற்ற தயவையும் இரக்கத்தையும் கடவுளிடமிருந்து பெற்றதால், நற்செய்தியைப் பிரசங்கிப்பதன்மூலம் மற்றவர்களிடம் அன்புகாட்ட தூண்டப்பட்டார்.
13. மற்றவர்களிடம் அன்புகாட்ட நம்மை எது தூண்ட வேண்டும், நாம் எவ்வாறு அன்புகாட்டலாம்?
13 யெகோவா நம்முடைய பாவங்களையும் தவறுகளையும்கூட மன்னிக்கிறார். (சங். 103:8-14) “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே” என்று சங்கீதக்காரன் கேட்டார். (சங். 130:3) கடவுள் மட்டும் நமக்கு இரக்கம் காட்டாமல் இருந்திருந்தால், நாம் பரிசுத்த சேவையின் சந்தோஷத்தைப் பெற்றிருக்க முடியாது; அதோடு, எதிர்காலத்தில் நித்திய ஜீவனைப் பெறுவோம் என்ற நம்பிக்கையையும் பெற்றிருக்க முடியாது. கடவுள் நம் அனைவரிடமும் அளவற்ற தயவை தாராளமாய்க் காண்பித்திருக்கிறார். அதனால், பிரசங்கித்து சத்தியத்தைப் போதிப்பதன் மூலமும் சக விசுவாசிகளைப் பலப்படுத்துவதன் மூலமும் பவுலைப் போல அன்புகாட்ட நாமும் விரும்ப வேண்டும்.—அப்போஸ்தலர் 14:21-23-ஐ வாசியுங்கள்.
14. ஊழியத்தில் நாம் எப்படி இன்னும் அதிகமாய் ஈடுபட்டு, திறம்பட்ட விதத்தில் பிரசங்கிக்கலாம்?
14 ஊழியத்தில் அதிகளவு ஈடுபட்டு, திறம்பட்ட விதத்தில் பிரசங்கிக்க பவுல் விரும்பினார். இந்த விஷயத்தில் இயேசுவின் முன்மாதிரி அவர் மனதைத் தொட்டது. கடவுளுடைய குமாரன் பல வழிகளில் மக்களிடம் ஈடிணையற்ற அன்பைக் காண்பித்தார்; அவற்றில் ஒரு வழி, பிரசங்கித்தல் ஆகும். “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்” என்று இயேசு கூறினார். (மத். 9:35-38) பவுலும் அதிக வேலையாட்களுக்காக இதேபோல யெகோவாவிடம் விண்ணப்பித்திருக்கலாம். அதற்கு இசைவாக, அவர் அதிக ஊக்கமிக்க ஊழியராகவும் ஆனார். உங்களைப்பற்றி என்ன? இன்னும் திறம்பட்ட விதத்தில் உங்களால் ஊழியம் செய்ய முடியுமா? அல்லது பிரசங்க வேலையில் இன்னும் அதிகளவு பங்குகொள்ள முடியுமா? உங்கள் வாழ்க்கையில் பயனியர் ஊழியம் செய்வதற்கும்கூட மாற்றங்களைச் செய்ய முடியுமா? உறுதியாய் ‘ஜீவவசனத்தைப் பிடித்துக்கொள்ள’ மக்களுக்கு உதவுவதன்மூலம் அவர்களிடம் நாம் உண்மையான அன்பைக் காட்டுவோமாக.—பிலி. 2:14.
தன்னைக் குறித்து மட்டுக்குமீறி எண்ணாதிருந்தார்
15. சக கிறிஸ்தவர்களோடு ஒப்பிடுகையில் பவுல் தன்னை எவ்வாறு கருதினார்?
15 கிறிஸ்தவ ஊழியராக, பவுல் இன்னொரு விதத்திலும் குறிப்பிடத்தக்க முன்மாதிரி வைத்தார். கிறிஸ்தவ சபையில் அவருக்கு நிறைய பொறுப்புகள் கிடைத்தபோதிலும், அவற்றைத் தன்னுடைய முயற்சியாலோ திறமையாலோ பெறவில்லை என்பதை அவர் நன்றாகவே அறிந்திருந்தார். இந்த ஆசீர்வாதங்களை எல்லாம் கடவுளுடைய அளவற்ற தயவாலேயே தான் பெற்றிருப்பதாக அவர் உணர்ந்தார். சபையிலிருந்த மற்ற கிறிஸ்தவர்களும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் திறம்பட்டவர்களாக இருப்பதை அவர் புரிந்துகொண்டார். கடவுளுடைய மக்கள் மத்தியில் பொறுப்புள்ள ஸ்தானத்தில் இருந்தபோதிலும் அவர் மனத்தாழ்மையாகவே நடந்துகொண்டார்.—1 கொரிந்தியர் 15:9-11-ஐ வாசியுங்கள்.
16. விருத்தசேதனம் சம்பந்தப்பட்ட பிரச்சினையைக் கையாண்டதில் பவுல் எவ்வாறு மனத்தாழ்மையுடனும் அடக்கத்துடனும் நடந்துகொண்டார்?
16 சீரிய நாட்டிலுள்ள அந்தியோகியா பட்டணத்தில் எழுந்த ஒரு பிரச்சினையை பவுல் எவ்வாறு கையாண்டார் என்பதைக் கவனியுங்கள். அங்கிருந்த கிறிஸ்தவ சபையில் விருத்தசேதனம் சம்பந்தமாக கருத்து வேறுபாடு நிலவியது. (அப். 14:26–15:2) விருத்தசேதனம் செய்யப்படாத பிற தேசத்தாருக்குப் பிரசங்கிக்கும் வேலையை முன்நின்று நடத்த பவுல் நியமிக்கப்பட்டிருந்தார்; அதனால், யூதரல்லாதவர்களுக்குப் போதிப்பதில் தான் திறம்பட்டவர் என்றோ, அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தான் முழு தகுதி பெற்றவர் என்றோ அவர் ஒருவேளை நினைத்திருக்கலாம். (கலாத்தியர் 2:8, 9-ஐ வாசியுங்கள்.) என்றாலும், அவருடைய முயற்சி பயன் அளிக்காமல் போனபோது அந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண எருசலேமிலிருந்த ஆளும் குழுவை அணுகுவதற்கான ஏற்பாட்டுடன் ஒத்துழைத்தார். இதிலிருந்து அவர் மனத்தாழ்மையுடனும் அடக்கத்துடனும் நடந்துகொண்டது தெரியவருகிறது. ஆளும் குழுவினர் பிரச்சினையை விசாரித்து, ஒரு தீர்மானத்தை எடுத்தார்கள்; அதைச் சபைகளுக்குத் தெரியப்படுத்த அனுப்பிய நபர்களில் ஒருவராய் பவுலும் இருந்தார். ஆளும் குழுவின் இந்த எல்லா ஏற்பாடுகளுக்கும் பவுல் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். (அப். 15:22-31) இவ்வாறு பவுல், சக ஊழியர்களை ‘கனம்பண்ணுவதில் . . . முந்திக்கொண்டார்.’—ரோ. 12:10 பிற்பகுதி.
17, 18. (அ) சபையிலிருந்தவர்களிடம் பவுல் எப்படிப் பழகினார்? (ஆ) பவுலின் பிரிவைக் குறித்து எபேசுவிலிருந்த மூப்பர்கள் வருத்தப்பட்டது எதைச் சுட்டிக்காட்டுகிறது?
17 மனத்தாழ்மைமிக்க பவுல் சபையிலிருந்த கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடமிருந்து தன்னை விலக்கி வைத்துக்கொள்ளவில்லை. மாறாக, அவர்களுடன் நெருங்கிப் பழகினார். ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தின் முடிவில் 20-க்கும் அதிகமானோரின் பேரைக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார். அவர்களில் அநேகருடைய பெயர்கள் பைபிளில் வேறெங்குமே காணப்படுவதில்லை. அவர்களில் சிலரே விசேஷ பொறுப்புகளைப் பெற்றவர்கள். ஆனால், அவர்கள் அனைவருமே யெகோவாவை உண்மையுடன் சேவித்தார்கள். பவுல் அவர்களை நெஞ்சார நேசித்தார்.—ரோ. 16:1-16.
18 மனத்தாழ்மையோடும் நட்புணர்வோடும் பவுல் நடந்துகொண்டது சபைகளைக் கட்டிக்காத்தது. உதாரணத்திற்கு, எபேசுவிலிருந்து வந்த மூப்பர்களை அவர் கடைசி முறையாகச் சந்தித்தபோது என்ன நடந்ததென்று கவனியுங்கள். ‘என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்க மாட்டீர்களென்று அவர் சொன்ன வார்த்தையைக் குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு, பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவரை முத்தஞ்செய்தார்கள்.’ ஒருவேளை பவுல் யாருடனும் ஒட்டாமல், பெருமையோடு நடந்துகொண்டிருந்தால், அவருடைய பிரிவைக் குறித்து யாருமே அந்தளவு வருத்தப்பட்டிருக்க மாட்டார்கள்.—அப். 20:37, 38.
19. சக கிறிஸ்தவர்களுடன் பழகுகையில் நாம் எவ்வாறு ‘மனத்தாழ்மையாய்’ நடந்துகொள்ளலாம்?
19 ஆன்மீக முன்னேற்றம் செய்ய விரும்புகிற அனைவருமே பவுலைப் போல் மனத்தாழ்மையாய் நடந்துகொள்ள வேண்டும். “ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” என்று சக கிறிஸ்தவர்களுக்கு அவர் அறிவுரை கூறினார். (பிலி. 2:3) இந்த அறிவுரையை நாம் எவ்வாறு பின்பற்றலாம்? சபையிலுள்ள மூப்பர்களுடன் ஒத்துழைத்து, அவர்களுடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு, நியாய விசாரணைக் குழு எடுக்கும் தீர்மானத்திற்கு இணங்கிச் செல்வது அதற்கு ஒரு வழியாகும். (எபிரெயர் 13:17-ஐ வாசியுங்கள்.) சபையிலுள்ள அனைத்து சகோதர சகோதரிகளையும் உயர்வாய் மதிப்பது இன்னொரு வழியாகும். பொதுவாக, யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் வெவ்வேறு நாட்டையும் கலாச்சாரத்தையும் இனத்தையும் குலத்தையும் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அப்படியானால், பவுலைப்போல் இவர்கள் எல்லாரிடமும் பாரபட்சமின்றி, பாசத்துடன் பழக நாம் கற்றுக்கொள்ள வேண்டுமல்லவா? (அப். 17:26; ரோ. 12:10 முற்பகுதி) எனவே, ‘தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, . . . ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளும்படி’ நாமும் தூண்டப்படுகிறோம்.—ரோ. 15:7.
ஜீவனுக்குரிய ஓட்டத்தில் “பொறுமையோடே ஓடக்கடவோம்”
20, 21. ஜீவனுக்கான ஓட்டப் பந்தயத்தை வெற்றிகரமாக முடிக்க நமக்கு எது துணைபுரியும்?
20 ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையை நீண்ட தூர ஓட்டப் பந்தயத்துக்கு ஒப்பிடலாம். “ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்” என்று பவுல் எழுதினார்.—2 தீ. 4:7, 8.
21 பவுலின் மாதிரியைப் பின்பற்றுவது நித்திய ஜீவனுக்கான ஓட்டப் பந்தயத்தை வெற்றிகரமாக முடிக்க நமக்குத் துணைபுரியும். (எபி. 12:1) எனவே, தனிப்பட்ட படிப்பைப் பழக்கப்படுத்திக்கொண்டு, மக்களிடம் ஆழமான அன்பை வளர்த்துக்கொண்டு, எப்போதும் மனத்தாழ்மையாய் நடப்பதன்மூலம் தொடர்ந்து ஆன்மீக முன்னேற்றம் செய்வோமாக.
• வேதவசனங்களைத் தவறாமல் படித்ததால் பவுல் எவ்வாறு பயன் அடைந்தார்?
• உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏன் மக்களிடம் ஆழமான அன்புகாட்ட வேண்டும்?
• மற்றவர்களை நீங்கள் பாரபட்சமின்றி நடத்த என்னென்ன குணங்கள் உதவும்?
• சபை மூப்பர்களுடன் ஒத்துழைக்க பவுலின் முன்மாதிரி உங்களுக்கு எவ்வாறு துணைபுரியலாம்?
[கேள்விகள்]
[பக்கம் 23-ன் படம்]
வேதவசனங்களைப் படிப்பதன்மூலம் பவுலைப் போல உங்களைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள்
[பக்கம் 24-ன் படம்]
மற்றவர்களிடம் நற்செய்தியைச் சொல்வதன்மூலம் அன்பு காட்டுங்கள்
[பக்கம் 25-ன் படம்]
பவுலின் எந்தக் குணம் சகோதரர்களை அவரிடம் கவர்ந்திழுத்தது?