வாழ்க்கை சரிதை
யெகோவாவை மலைபோல் நம்ப கற்றுக்கொண்டேன்
ஆப்ரி பேக்ஸ்டர் சொன்னபடி
1940-ஆம் வருடம், ஒரு சனிக்கிழமை மாலை இரண்டு பேர் என்னைத் தாக்கினார்கள். அவர்கள் அடித்த வேகத்தில் நான் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டேன். என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த இரண்டு போலீஸ்காரர்கள் என்னை காப்பாற்றுவதற்குப் பதிலாக என்னை கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டினார்கள். ஆனால், என்னை அடித்தவர்களையோ பாராட்டி புகழ்ந்தார்கள். அவர்கள் இப்படி என்னைக் கொடூரமாக நடத்தியதற்குக் காரணமும் இருக்கிறது. அதைச் சொல்ல வேண்டுமென்றால் ஐந்து வருடங்களுக்கு முன் நடந்ததை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அப்போது நடந்த சம்பவங்களே இந்த அடிதடிக்கு வழிவகுத்தன. அப்போது நான் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தேன். அதைக் குறித்து விவரமாய் சொல்கிறேன், கேளுங்கள்.
ஆ ஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸிலுள்ள ஸ்வான்ஸீ என்ற கடலோர கிராமத்தில் 1913-ல் பிறந்தேன். என் அப்பா அம்மாவுக்கு நான்கு பையன்கள், அவர்களில் நான் மூன்றாவது. எனக்கு ஐந்து வயதாக இருந்த சமயத்தில் ஸ்பானிஷ் ஃப்ளு உலகத்தையே உலுக்கியெடுத்தது. கோடிக்கணக்கானோர் அந்த நோய்க்கு இரையானார்கள். எங்கள் குடும்பத்தையும் அந்த நோய் தாக்கியது. ஆனால், நல்லவேளை நாங்கள் அனைவரும் உயிர் தப்பினோம். இருந்தாலும், 1933-ல் என் அம்மாவுக்கு 47 வயதாக இருந்தபோது அவர் காலமானார். இது எங்கள் குடும்பத்தில் இடிவிழுந்ததுபோல் இருந்தது. அம்மாவுக்கு கடவுள் பக்தி அதிகம். அவர், முன்பு ஒரு சமயம் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து ஒளி என்ற ஆங்கில புத்தகத்தின் இரு தொகுதிகளையும் பெற்றிருந்தார். அவை, பைபிளைப் புரிந்துகொள்ள உதவும் புத்தகங்களாக இருந்தன.
அம்மாவுக்கு அந்தப் புத்தகம் கிடைத்த சமயத்தில் நான் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தேன். அந்த வேலையில், சில சமயங்களில் மூச்சு விடக்கூட நேரமிருக்காது. ஆனால், சில சமயங்களில் ஓய்வு நேரமும் கிடைக்கும். எனவே, என் அம்மா வாங்கி வைத்திருந்த புத்தகங்களை வேலை செய்யும் இடத்திற்கு எடுத்து சென்று என் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கார்பைட் விளக்கின் வெளிச்சத்தில் வாசிப்பேன். சீக்கிரத்தில் இதுதான் சத்தியம் என்பதைப் புரிந்துகொண்டேன். சாட்சிகளால் ரேடியோவில் ஒலிபரப்பப்பட்ட பைபிள் பேச்சுகளையும் கேட்க ஆரம்பித்தேன். என் அப்பா, சகோதரர்கள் எல்லாருமே பைபிள் சத்தியத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்கள். இதைக் கண்டு சந்தோஷத்தில் மிதந்தேன்.
1935-ல் மற்றொரு இடி எங்கள் குடும்பத்தைத் தாக்கியது. என் தம்பி பில்லி, நிமோனியா என்ற சளிக்காய்ச்சலால் இறந்துவிட்டான். அப்போது அவனுக்கு 16 வயதுதான். ஆனால், இந்தச் சமயம் உயிர்த்தெழுதல் நம்பிக்கை எங்களுக்கு ஆறுதல் அளித்தது. (அப்போஸ்தலர் 24:15) இதன் பிறகு என் அப்பாவும் என் அண்ணன்களான வெர்னரும் ஹெரல்டும் அதோடு அவர்களுடைய மனைவிகளும் தங்களைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தார்கள். ஆனால், இப்போது என் குடும்பத்தில் நான் மட்டும்தான் உயிரோடு இருக்கிறேன். என் அப்பாவும் அண்ணன்களும் இறந்துவிட்டார்கள். இருந்தாலும், வெர்னரின் இரண்டாவது மனைவி மார்ஜரியும், ஹெரல்டின் மனைவி எலிசபெத்தும் இன்றும் யெகோவாவைச் சுறுசுறுப்பாகச் சேவித்து வருகிறார்கள்.
யெகோவாவை நம்பியிருக்கக் கற்றுக்கொண்டேன்
அது 1935-ஆம் வருடம். ஒரு நாள் சைக்கிளில் வந்த ஓர் உக்ரைன் பெண்மணி எங்கள் கதவைத் தட்டினார். ஒரு யெகோவாவின் சாட்சியை நான் முதல் முறையாக நேருக்கு நேர் சந்தித்தது அப்போதுதான். அதே ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக கிறிஸ்தவ கூட்டத்திற்குச் சென்றேன். ஒரு வாரம் கழித்து வெளி ஊழியத்திற்கும் சென்றேன். வெளி ஊழிய கூட்டத்தை நடத்தியவர் என்னிடம் சில சிறு புத்தகங்களைக் கொடுத்து, ஊழியத்திற்கு அனுப்பிவைத்தார், அதுவும் தனியாக! எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முதல் வீட்டில் கதவைத் தட்டியபோது எனக்கு வியர்த்து விறுவிறுத்து கை காலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. தரை பிளந்து என்னை விழுங்கிவிடக்கூடாதா என்று யோசித்தேன்! ஆனால், அந்த வீட்டுக்காரர் ரொம்ப இனிமையானவர், நான் சொல்வதை பொறுமையாகக் கேட்டு, சில பிரசுரங்களையும் வாங்கிக்கொண்டார்.
பிரசங்கி 12:1, மத்தேயு 28:19, 20 போன்ற வசனங்கள் என்மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதால், நான் பயனியராக அதாவது, முழு நேர ஊழியராக ஆவதற்கு தீர்மானித்தேன். அப்பாவுக்கு அதில் பூர்ண சம்மதம். அந்தச் சமயம் நான் முழுக்காட்டுதல் எடுக்கவில்லை என்றாலும், 1936-ஆம் வருடம் ஜூலை 15-ஆம் தேதியன்று பயனியர் சேவையை ஆரம்பிக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். அன்று சிட்னியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்குச் சென்றேன். 12 பயனியர்களுடன் சேர்ந்து சிட்னியின் புறநகர் பகுதியான டலிச் ஹில் என்ற இடத்தில் ஊழியம் செய்ய அனுப்பப்பட்டேன். கையால் இயக்கும் கோதுமை கிரைண்டரை உபயோகிக்க அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள். கோதுமையை அரைக்க அந்தச் சமயத்தில் பயனியர்கள் இதைத்தான் பயன்படுத்தினார்கள். இது பணத்தை மிச்சப்படுத்தியது.
புதர் காடுகளில் பயனியர் ஊழியம்
அந்த வருடத்தின் இறுதியில் நான் முழுக்காட்டுதல் எடுத்தேன். அதன் பிறகு ஆப்ரி வில்ஸ் மற்றும் கிளைவ் ஷேட் என்ற இரு பயனியர் சகோதரர்களோடு சேர்ந்து மத்திய குயின்ஸ்லாந்து பகுதியில் ஊழியம் செய்ய அனுப்பப்பட்டேன். நாங்கள் அப்படிச் சென்றபோது எங்களிடம் ஆப்ரியின் வேன், சில சைக்கிள்கள், பைபிள் பேச்சுகளை ஒலிபரப்புவதற்காக ஆங்காங்கே எடுத்துச்செல்லக்கூடிய ஒரு ஃபோனோகிராப், அடுத்த மூன்று வருடங்களுக்கு எங்களுக்கு கூரையாக இருந்த ஒரு கூடாரம், மூன்று படுக்கைகள், ஒரு மேசை, இரும்பினால் ஆன ஒரு சமையல் பாத்திரம் ஆகியவை இருந்தன. ஒரு நாள் மாலை எல்லாருக்காகவும் நான் சமைக்கவேண்டியிருந்தது. “வாய்க்கு ருசியாக” ஏதாவது சமைக்கலாம் என்று நினைத்தேன். கோதுமை கஞ்சி செய்து, காய்கறிகளைச் சமைத்தேன். எங்களால் அதை வாயில் வைக்கவே முடியவில்லை. வெளியில் இருந்த ஒரு குதிரைக்காவது அதைப் போடலாம் என்று பார்த்தால் அதுவும் மோப்பம் பிடித்துவிட்டு, வேண்டாம் என்று சொல்வதுபோல் தலையசைத்து நடையைக் கட்டியது! அத்துடன் என் சமையல் சாகசங்களை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டேன்.
பிறகு எங்களுடைய பிராந்தியத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதை மூன்று பாகங்களாகப் பிரித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாகத்தை எடுத்து ஊழியம் செய்தோம். பொதுவாக, ஊழியம் செய்து முடிப்பதற்குள் ரொம்ப நேரம் ஆகிவிடும். அப்போது எங்கள் கூடாரத்திலிருந்து நான் மிகத் தொலைவில் இருப்பேன். அதனால் நான் ஊழியம் செய்யும் கிராமத்து மக்களுடனே சில சமயங்களில் இரவு தங்கிவிடுவேன். அவர்கள் என்னை நன்றாகக் கவனித்துக்கொள்வார்கள். ஒரு நாள் ஒரு கால்நடை பண்ணையைச் சேர்ந்த விருந்தினர் அறையிலிருந்த சொகுசான மெத்தையில் தூங்கியிருக்கிறேன். அடுத்த நாளோ கங்காரு வேட்டைக்காரனுடைய குடிசையில் தோல்களின் துர்நாற்றத்திற்கு மத்தியில், அழுக்குத் தரையிலும் தூங்கியிருக்கிறேன். நான் அடிக்கடி புதர்களிலும் படுத்து தூங்கியிருக்கிறேன். அப்படி ஒரு சமயம் தூங்கிக்கொண்டு இருந்தபோது என்னைச் சுற்றி டிங்கோ என்று அழைக்கப்படும் காட்டு நாய்கள் இருந்தன. ஆனால், அவை வெகு தொலைவில் இருந்ததால் அந்தக் கும்மிருட்டில் என்னால் அவற்றைப் பார்க்க முடியவில்லை. அவை ஊளையிடும் சத்தத்தை மட்டுமே கேட்க முடிந்தது. திகிலூட்டும் அந்தச் சத்தத்தின் மத்தியில் இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை. காலையில்தான் தெரிந்தது அவை என்னைக் குறிவைக்கவில்லை. மாறாக அருகில் குவியலாக இருந்த மிருகங்களின் வேண்டாத மிச்ச மீதி பாகங்களுக்காக ஊளையிட்டன என்று.
சவுண்ட் காரும் ஊழியமும்
அநேகருக்கு கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி சொல்ல இந்தக் கார் ரொம்பவே உதவியாக இருந்தது. வடக்கு குயின்ஸ்லாந்து நகரமான டவுன்ஸ்வில்லெயில், நகர மையத்திலிருந்து பேச்சை ஒலிபரப்ப போலீஸ் எங்களுக்கு அனுமதி அளித்தது. பதிவு செய்யப்பட்ட பேச்சைக் கேட்டு ‘சால்வேஷன் ஆர்மி’ என்ற மதத்தொகுதியைச் சேர்ந்த சிலர் ஆவேசத்தில் பொங்கி எழுந்தார்கள். அந்த இடத்தை உடனே காலிசெய்யும்படி சொன்னார்கள். அதற்கு நாங்கள் மறுத்ததால் அவர்களில் ஐந்து பேர் எங்கள் வேனை பயங்கரமாக அசைத்தார்கள். அந்தச் சமயம் பார்த்து நான் உள்ளுக்குள்ளிருந்து ஒலிபரப்பும் சாதனத்தை இயக்கிக்கொண்டு இருந்தேன்! இப்படிப் பேச்சை ஒலிபரப்ப எங்களுக்கு அனுமதி இருக்கிறது என்று எடுத்துச் சொல்லி அவர்களுக்குப் புரியவைப்பதெல்லாம் ஒத்துவராது என்பது தெரிந்தது. எனவே, அவர்கள் நிறுத்தினவுடன் அந்த இடத்தை விட்டு புறப்பட்டோம்.
புந்தாபெர்க் என்ற பட்டணத்தில், ஆர்வம் காட்டிய ஒரு நபர் நாங்கள் பயன்படுத்திக்கொள்ள ஒரு படகைக் கொடுத்தார். அதனால் அந்தப் பட்டணத்தின் ஊடே ஓடும் பர்னட் நதியிலிருந்து பேச்சை ஒலிபரப்ப முடிந்தது. ஒலிபரப்பும் சாதனத்துடன் ஆப்ரியும், கிளைவும் படகில் சென்றார்கள். நானோ வாடகைக்கு எடுத்த மன்றத்திலேயே தங்கிவிட்டேன். யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த ஜோசஃப் எஃப். ரதர்ஃபோர்டின் பதிவு செய்யப்பட்ட பேச்சு அன்றிரவு அந்தக் கிராமமெங்கும் கணீர் கணீர் என்று ஒலித்துக்கொண்டிருந்தது. அது சக்திவாய்ந்த பைபிள் செய்தியாக இருந்தது. உண்மையிலேயே அது பரப்பரப்பூட்டும் காலப்பகுதியாக இருந்தது. கடவுளுடைய ஜனங்களின் தைரியத்தையும் விசுவாசத்தையும் சோதித்த காலம் அது.
போர் காரணமாக பல சவால்கள்
செப்டம்பர் 1939-ல் இரண்டாம் உலக போர் தொடங்கிய உடனேயே வெளிவந்த நவம்பர் 1 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகை அரசியலிலும் போரிலும் எப்படி நடுநிலையைக் காத்துக்கொள்ளலாம் என்பதைப்பற்றி கலந்தாலோசித்தது. அது காலத்திற்கு ஏற்ற ஒரு கட்டுரை. அந்தக் கட்டுரையைப் படித்தது, பிறகு எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. இதற்கிடையில், மூன்று வருடங்கள் ஒன்று சேர்ந்து வேலை செய்த ஆப்ரியும் கிளைவும் நானும் வெவ்வேறு நியமிப்புகள் காரணமாக வெவ்வேறு இடங்களுக்குப் பிரிந்து சென்றோம். நான் வடக்கு குயின்ஸ்லாந்தில் பயணக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். இது யெகோவாமீது நான் வைத்திருந்த நம்பிக்கையைப் பல முறை பதம்பார்த்த ஒரு நியமிப்பாக இருந்தது.
ஆகஸ்ட் 1940-ல் டவுன்ஸ்வில்லெயில் இருந்த சபையில் சேவை செய்தேன். அந்தச் சபையில் நான்கு பயனியர்கள் இருந்தார்கள். அவர்கள் பெர்ஸி இஸ்லாப்,a இல்மா இஸ்லாப் மற்றும் அண்ணன் தங்கையான நார்மன் பெலாட்டி, பீயட்ரஸ் பெலாட்டி. ஆறு வருடங்களுக்குப் பிறகு பீயட்ரஸை நான் மணம் முடித்தேன். ஒரு நாள் சனிக்கிழமை மாலை எங்களில் கொஞ்சம் பேர் தெரு ஊழியம் முடித்துவிட்டு திரும்பியபோதுதான் நான் ஆரம்பத்தில் சொன்ன தாக்குதல் நடந்தது. ஆனால், அந்த அநியாய செயல் யெகோவாவின் சேவையை இன்னும் மும்முரமாகச் செய்வதற்கே என்னை உந்துவித்தது.
வடக்கில் யூனா கில்பாட்ரிக் மற்றும் மார்ல் கில்பாட்ரிக் என்ற இரு பயனியர் சகோதரிகள் சுறுசுறுப்பாக ஊழியத்தில் ஈடுபட்டுவந்தார்கள். ஒரு நாள் அவர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக ஊழியம் செய்து முடித்த பிறகு, ஆற்றைக் கடந்துசெல்ல தங்களுக்கு உதவுமாறு அவர்கள் என்னிடம் கேட்டார்கள். ஆற்றுக்கு அப்பால் உள்ள ஆர்வம் காட்டிய ஒரு குடும்பத்தைச் சந்திப்பதற்காக அவர்கள் அங்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், படகோ ஆற்றின் அக்கரையில் இருந்தது. எனவே, நான் முதலில் நீந்தி சென்று படகை எடுத்துக்கொண்டு இக்கரைக்கு வந்து அந்தச் சகோதரிகளை படகில் ஏற்றிக்கொண்டு மீண்டும் அக்கரைக்குப் போக வேண்டியிருந்தது. ஆனால், நான் படகின் அருகில் சென்றபோதோ அதில் துடுப்புகள் இருக்கவில்லை! எங்களைப் பகைத்த ஒருவர்தான் துடுப்புகளை ஒளித்து வைத்துவிட்டார் என்று பிறகுதான் தெரிந்தது. ஆனால், அவருடைய தந்திரம் எங்களைத் தடுத்து நிறுத்தவில்லை. தண்ணீரில் சிக்கிக்கொள்பவர்களைக் காப்பாற்றும் வேலையை பல வருடங்களாகச் செய்து வந்த என்னால் நன்றாக நீச்சலடிக்க முடிந்தது. எனவே, நங்கூரக் கயிறை என் இடுப்பில் கட்டிக்கொண்டு, படகை இக்கரைக்கு இழுத்துவந்து அந்த இரு சகோதரிகளையும் ஏற்றிக்கொண்டு மீண்டும் அக்கரைக்கு இழுத்துச் சென்றேன். யெகோவா எங்கள் முயற்சிகளை ஆசீர்வதித்தார். ஏனெனில், ஆர்வம் காட்டிய அந்தக் குடும்பத்தினர் சில காலத்திற்குப் பிறகு சாட்சிகள் ஆனார்கள்.
யெகோவாவின் கரங்களில் பத்திரமாக . . .
இன்னஸ்ஃபேல் என்ற பட்டணத்திற்கு சற்று முன்பு பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினர் சோதனை சாவடியை அமைத்தனர். ஆனால், நான் அதே பகுதியில் வசித்து வந்ததால் உள்ளே செல்ல எனக்கு அனுமதி கிடைத்தது. எங்களைச் சந்திப்பதற்காக யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திலிருந்து வரும் சகோதரர்களுக்கு இது ரொம்ப வசதியாக இருந்தது. சோதனை செய்பவர்களின் கண்ணில்படாமலிருக்க அவர்களை என் காரின் பின் சீட்டிற்கு கீழ் பத்திரமாக ஒளித்து வைத்தேன்.
அந்தச் சமயத்தில் பெட்ரோல் அளவாகத்தான் கிடைத்தது. எனவே, பெரும்பாலான வாகனங்களில் வாயுவை உற்பத்தி செய்யும் சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. கரி எரிக்கப்பட்டு அதிலிருந்து வரும் வாயு என்ஜினுக்கு தேவையான எரிபொருளை அளித்தது. இரவில் பயணம் செய்யும்போது சகோதரர்கள் ஒளிந்திருக்கும் இடத்திற்கு மேல் நான் பை பையாக கரியை அடுக்கி வைத்துவிடுவேன். சோதனை சாவடியில் நிற்கும் காவலாளிகளின் கவனத்தைத் திருப்புவதற்காக என்ஜினை வேகமாக ஓட விடுவேன். இப்படிச் செய்வதன்மூலம் கரி இருக்கும் கொள்கலம் மிகவும் சூடாக இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். அப்படித்தான் ஒரு நாள் இரவு, என்ஜினை வேகமாக ஓடவிட்டு “நான் என்ஜினை நிறுத்தினால் அவ்வளவுதான், வாயுவும் காற்றும் கலக்கும் வீதம் மாறுபட்டுவிடும், அப்போது என்ஜினை மீண்டும் கிளப்புவது ரொம்ப கஷ்டமாகிவிடும்” என்று காவலாளிகளிடம் சப்தமாகச் சொன்னேன். ஒருபக்கம் அனல், இன்னொரு பக்கம் வண்டியின் சத்தம், அதற்கிடையில் கரியின் புகை வேறு, இதையெல்லாம் தாங்க முடியாமல் காவலாளிகள் காரை மேலோட்டமாக சோதனை செய்துவிட்டு என்னை அனுப்பிவிட்டார்கள்.
அந்த நாட்களில் டவுன்ஸ்வில்லெயில் உள்ள சாட்சிகளுக்காக மாநாட்டை ஏற்பாடு செய்யும் வேலை எனக்கு கொடுக்கப்பட்டது. உணவு அளவாகவே வழங்கப்பட்டதால் எங்களுக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்ள அந்தப் பகுதியிலுள்ள நீதிபதியிடம் அனுமதி வாங்க வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில் நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்கள் நடுநிலையைக் காத்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். எனவே, நீதிபதியை சந்திப்பதற்காக அனுமதி வாங்கியதை எண்ணி பயந்தேன். ‘நான் செய்வது சரிதானா, அல்லது வம்பை விலைக்கு வாங்குகிறேனா?’ என்று யோசித்தேன். இருந்தாலும் எனக்குச் சொல்லப்பட்டபடி நான் அவரைச் சென்று சந்தித்தேன்.
ஒரு பெரிய மேசைக்குப் பின் அமர்ந்திருந்த நீதிபதி என்னை உட்காரும்படி சொன்னார். நான் வந்ததற்கான காரணத்தை சொன்னதும் அவர் கடுகடுவென்று ஆகிவிட்டார். என்னை கோபமாக முறைத்துப் பார்த்தார். கொஞ்ச நேரத்திற்கு பிறகு “எவ்வளவு உணவு வேண்டும்?” என்று சாதாரணமாகவே கேட்டார். உணவு பட்டியலை அவரிடம் தந்தேன். அதில் எங்களுக்கு தேவையான பொருள்களின் மிக குறைந்த அளவே குறிப்பிடப்பட்டிருந்தது. அதை முழுவதும் படித்துப் பார்த்துவிட்டு “இது எப்படிப் போதுமானதாக இருக்கும்? எல்லாவற்றையும் இரண்டு மடங்காக வாங்கிக்கொள்ளுங்கள்” என்று அவர் சொன்னார். அங்கிருந்து வெளியே வந்தபோது யெகோவாவுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை. அவர்மீது நம்பிக்கை வைப்பதற்கு மீண்டும் ஒரு பாடம்!
ஜனவரி 1941-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டது. அநேகர் எங்களைச் சந்தேக கண்களோடு பார்த்தார்கள். ஜப்பானியர்களுக்காக உளவு பார்க்கிறோம் என்று எங்கள்மீது அபாண்டமாக பழி சுமத்தினார்கள்! ஒரு சமயம் இரண்டு வண்டி நிறைய போலீஸ்காரர்கள் கிங்டம் ஃபார்மிற்கு படையெடுத்து வந்தார்கள். ஏத்தர்டன் பீடபூமியில் உணவு பொருள்களை பயிர் செய்வதற்காக வாங்கப்பட்ட சிறிய இடம்தான் இந்த கிங்டம் ஃபார்ம். எதிரிகளை எச்சரிப்பதற்காக நாங்கள் ஒரு விளக்கைப் பயன்படுத்தியதாகச் சந்தேகப்பட்டு கிங்டம் பார்மில் சோதனை நடத்தினார்கள். அதோடு, விமானத்திலிருந்து பார்த்தால் நாங்கள் மக்காச்சோளத்தை பயிர் செய்திருக்கும் வடிவத்திலிருந்து எதிரிகளுக்கு ஏதோ தகவல் தெரிவிக்கிறோம் என்றும் எங்கள்மீது குற்றம்சாட்டினார்கள்! ஆனால், அவர்கள் சுமத்தின குற்றச்சாட்டுகளெல்லாம் பொய் என நிரூபிக்கப்பட்டன.
எங்கள் வேலை தடை செய்யப்பட்டிருந்ததால் பிரசுரங்களை எடுத்துச் செல்லும் சமயத்தில் நாங்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருந்தது. அதே சமயத்தில் அப்படி எடுத்து செல்ல புதுபுது உத்திகளையும் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், பிள்ளைகள் என்ற ஆங்கில புத்தகம் வெளியான சமயத்தில் பிரிஸ்பேனிலிருந்து ஒரு அட்டைப்பெட்டி நிறைய இந்தப் புத்தகங்களைப் பெற்று, ரயிலில் வடக்கே பயணம் செய்து எந்தெந்த இடங்களில் சபைகள் இருந்ததோ அங்கெல்லாம் அவற்றை விட்டுவரவேண்டியிருந்தது. அந்த அட்டைப்பெட்டியை போலீஸ்காரர்களும் இராணுவத்தினரும் திறக்காமலிருப்பதற்காக இறங்குவதற்கு முன் பெட்டியின் மீது ஒரு வட்டமான ரம்பத்தை வைத்து கட்டினேன். இது சின்ன விஷயம்தான், இருந்தாலும் நாங்கள் போட்ட திட்டம் பலித்தது. ஒருவழியாக தடை உத்தரவு ஜூன் 1943-ல் நீங்கியபோது யெகோவாவின் சாட்சிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். இவர்கள்மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவு, “அநியாயமானது, ஏறுமாறானது, கொடியது” என்று ஒரு கோர்ட் நீதிபதி கூறினார்.
இராணுவத்தில் சேர அழைப்பு
அதற்கு அடுத்த வருடத்தில் ஆப்ரி வில்ஸும் நார்மன் பெலாட்டியும் நானும் இரணுவத்தில் சேர வேண்டும் என்று சொல்லப்பட்டோம். ஆப்ரிக்கும் நார்மனுக்கும் சம்மன் அனுப்பிவைக்கப்பட்டது. ஒரு வாரம் கழித்து எனக்கும் சம்மன் அனுப்பிவைக்கப்பட்டது. அவர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் சாட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட காவற்கோபுர பத்திரிகைகளை அஞ்சல் நிலையம் பறிமுதல் செய்தது. ஆனால், சாட்சிகள் அல்லாத மற்ற சந்தாதாரர்களுக்கு வந்த பத்திரிகைகளை பறிமுதல் செய்யவில்லை. அதனால், நாங்களோ ஒரு சந்தாதாரரை கண்டுபிடித்து அவரிடமுள்ள பத்திரிகையை நகல் எடுத்து சாட்சிகளுக்குக் கொடுத்தோம். இப்படிச் செய்வதன்மூலம் ஆன்மீக உணவை தங்குதடையின்றி தவறாமல் பெற்று வந்தோம்.
நான் எதிர்பார்த்தபடியே எனக்கும் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உடனே, சிட்னியிலுள்ள கிளை அலுவலகத்தின் ஆலோசனையின்படி நான் மேல்முறையீடு செய்தேன். இந்த வேலையைப் பொறுப்பாக எடுத்துச் செய்யும் ஒருவர் கிடைக்கும்வரை இந்தத் தண்டனையை தள்ளிப்போட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். அந்தக் கொஞ்ச நாள் சுதந்திரத்தில், வடக்கு குயின்ஸ்லாந்தில் சிறைவைக்கப்பட்டிருந்த 21 சாட்சிகளில் சிலரைச் சந்திக்க சென்றேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அந்தச் சிறை வார்டனுக்கு எங்களைப் பிடிக்கவில்லை. ‘மற்ற மத குருக்கள் தங்களுடைய அங்கத்தினர்களை வந்து சந்திக்கிறார்களே’ என்று அவரிடம் கேட்டேன். அப்படிக் கேட்டதும் அவருக்கு கோபம் தலைக்கேறிவிட்டது. “எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் யெகோவாவின் சாட்சிகளை வரிசையாக நிற்க வைத்து சுட்டுத்தள்ளிவிடுவேன்!” என்று காட்டு கூச்சல் போட்டார். காவலாளிகள் வந்து உடனே என்னை வெளியே அழைத்துச் சென்றார்கள்.
என் மேல்முறையீடு விசாரணைக்கு வந்தபோது அரசாங்க விதிகளின்படி எனக்கு ஒரு அரசு வக்கீல் நியமிக்கப்பட்டார். ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், என் வழக்கை நானே வாதாடினேன். அதற்கு யெகோவாவை மலைபோல் நம்பியிருந்தேன். அவரும் என்னைக் கைவிடவில்லை. (லூக்கா 12:11, 12; பிலிப்பியர் 4:6, 7) குற்றப்பத்திரிகையைப் பூர்த்தி செய்தபோது கிளர்க் சில பிழைகளைச் செய்துவிட்டதால் வழக்கில் எனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. எனக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருந்தது!
1944-ல் தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியாவின் வடக்கு பகுதி மற்றும் நியூ சௌத் வேல்ஸைச் சேர்ந்த சிட்னி நகரம் ஆகிய அனைத்து இடங்களும் உள்ளடங்கிய ஒரு பெரிய வட்டாரத்தில் சேவை செய்யும்படி நியமிக்கப்பட்டேன். 1945-ல், உலகமுழுவதும் பொது பேச்சு கொடுக்கப்படும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு பேச்சாளருக்கும் ஒருபக்க குறிப்புத்தாள் கொடுக்கப்பட்டது. அதை வைத்து அவர் சொந்தமாக ஒரு பேச்சை தயாரிக்க வேண்டியிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு தொடர்ந்து பேச்சு கொடுக்க வேண்டுமென்பது ஒரு சவாலாக இருந்தது. ஆனால், அதற்கு நாங்கள் யெகோவாவையே நம்பி இருந்தோம். அவர் எங்கள் முயற்சிகளை ஆசீர்வதித்தார்.
திருமணமும் புதிய பொறுப்புகளும்
ஜூலை 1946-ல் பீயட்ரஸ் பெலாட்டியை திருமணம் செய்துகொண்டேன். நாங்கள் இருவரும் ஒன்றாக பயனியர் ஊழியம் செய்தோம். ஒட்டுப்பலகையால் செய்யப்பட்ட ஒரு ட்ரெய்லர்தான் எங்கள் வீடு. எங்களுடைய ஒரே மகள் ஜேனஸ் (ஜேன்) டிசம்பர் 1950-ல் பிறந்தாள். நியூ சௌத் வேல்ஸில் உள்ள கெம்ப்ஸி என்ற பட்டணம் உட்பட நாங்கள் பல இடங்களில் பயனியர் ஊழியம் செய்தோம். கெம்ப்ஸியில் எங்களைத் தவிர வேறு சாட்சிகள் இருக்கவில்லை. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாங்கள் அந்தப் பகுதியிலுள்ள சமுதாய மன்றத்திற்குச் செல்வோம். நாங்கள் முன்பே கைப்பிரதிகள்மூலம் விளம்பரம் செய்த தலைப்பில் நான் பொது பேச்சு கொடுப்பேன். சில மாதங்களுக்கு என் பொது பேச்சைக் கேட்பதற்கு பீயட்ரஸும் கைக்குழந்தையாக இருந்த ஜேனும் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர ஆரம்பித்தது. இன்றோ கெம்ப்ஸியில் செழித்தோங்கும் இரண்டு சபைகள் இருக்கின்றன.
ஜேனுக்கு இரண்டு வயதாக இருந்தபோது நாங்கள் பிரிஸ்பேனில் குடியேறினோம். அங்கே அவள் பள்ளி படிப்பு முடித்ததும், நாங்கள் முழு குடும்பமாக நியூ சௌத் வேல்ஸிலுள்ள செஸ்நாக் என்ற பட்டணத்தில் நான்கு வருடங்கள் பயனியராக சேவை செய்தோம். பீயட்ரஸின் அம்மாவுக்கு உடல்நிலை மோசமாகியிருந்ததால் அவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக பிரிஸ்பேனுக்கே திரும்பி வந்துவிட்டோம். இப்போது நான் சர்ம்ஸைட் சபையில் மூப்பராக சேவை செய்யும் பாக்கியத்தை பெற்றிருக்கிறேன்.
யெகோவா வாரிவழங்கியுள்ள ஆசீர்வாதங்களுக்காக நானும் பீயட்ரஸும் நன்றி சொல்லி மாளாது. 32 பேருக்கு அவரைப்பற்றி சொல்லித்தர உதவும் பாக்கியத்தையும் அவர் எங்களுக்கு அளித்திருக்கிறார். தனிப்பட்ட விதமாக என்னுடைய அருமை மனைவிக்காகவும் நான் யெகோவாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவளிடம் சாந்தமும் அமைதியும் குடிகொண்டிருந்தாலும் பைபிள் சத்தியத்திற்காக அவள் எதையும் தைரியமாக எதிர்த்து நிற்பவள். யெகோவாமீது அவளுக்கிருக்கும் அன்பும் நம்பிக்கையும், அவளுடைய ‘தெளிவான கண்ணும்’ அதாவது எளிமையான வாழ்க்கை முறையும் அவளை சிறந்த மனைவியாகவும் நல்ல தாயாகவும் ஆக்கியிருக்கிறது. (மத்தேயு 6:22, 23; நீதிமொழிகள் 12:4) நானும் என் மனைவியும் உள்ளத்தில் நன்றி பொங்க இவ்வாறு சொல்கிறோம்: “கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.”—எரேமியா 17:7.
[அடிக்குறிப்பு]
a பெர்ஸி இஸ்லாபின் வாழ்கை சரிதை 1981 மே 15 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுர பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
[பக்கம் 9-ன் படம்]
வடக்கு குயின்ஸ்லாந்தில் நாங்கள் உபயோகித்த சவுண்ட் கார்
[பக்கம் 10-ன் படம்]
வடக்கு குயின்ஸ்லாந்தில் மழை காலத்தில் கில்பாட்ரிக் சகோதரிகளுடைய வண்டியைத் தள்ளிக்கொண்டிருக்கும் சமயத்தில் . . .
[பக்கம் 12-ன் படம்]
எங்களுடைய திருமண நாளன்று