உள்மனதின் குரலுக்குச் செவிகொடுங்கள்
‘நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறார்கள்.’ —ரோமர் 2:14.
1, 2. (அ) மற்றவர்கள் மீதுள்ள அன்பின் காரணமாக அநேகர் என்னென்ன செய்திருக்கிறார்கள்? (ஆ) இது சம்பந்தமாக பைபிளில் என்ன உதாரணங்கள் இருக்கின்றன?
சு ரங்க ரயில் நிலைய பிளாட்ஃபாரத்தில் 20 வயது நிரம்பிய ஒரு வாலிபனுக்குத் திடீரென காக்காய்வலிப்பு வந்து, தண்டவாளத்தில் விழுந்துவிட்டான். அதைப் பார்த்த இன்னொருவர் தன் மகள்களின் கைகளை விட்டுவிட்டு கீழே குதித்து அந்த வாலிபனை தண்டவாளங்களுக்கு இடையே இழுத்துப் போட்டார். ரயில் “கிரீச்” என்று வந்து ப்ளாட்ஃபாரத்தில் நிற்கிற வரையில் அவன் அசையாதபடி அவன்மீது படுத்துக்கொண்டார். இப்படியாக அவன் உயிரைக் காப்பாற்றிய அவரைச் சிலர் ‘ஹீரோ’ எனலாம். ஆனால், அவர் சொன்னதாவது: “எது சரியோ அதைத்தான் செய்ய வேண்டும். நானும் அப்படித்தான் செய்தேன். எனக்கு பெயரோ புகழோ கிடைக்க வேண்டுமென்பதற்காக அல்ல, மாறாக அன்பின் காரணமாகவே அப்படிச் செய்தேன்.”
2 தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றிய ஒருவரை நீங்கள் அறிந்திருக்கலாம். இரண்டாம் உலக யுத்தத்தின்போது அநேகர் அப்படிச் செய்தார்கள்; வேறு இனத்தைச் சேர்ந்த மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்தார்கள். சிசிலிக்கு அருகேயுள்ள மால்டா தீவில் கப்பற் சேதமடைந்தபோது அப்போஸ்தலன் பவுலுக்கும் அவருடன் இருந்த 275 பேருக்கும் அத்தீவு மக்கள் உதவியதைச் சற்று நினைவுக்குக் கொண்டுவாருங்கள். அத்தீவு மக்கள் முன்பின் அறியாத இவர்களிடம் ‘மிகுந்த மனித நேயத்துடன் நடந்து கொண்டார்கள்.’ (அப்போஸ்தலர் [திருத்தூதர் பணிகள்] 27:27-28:2, பொது மொழிபெயர்ப்பு) ஏன், இஸ்ரவேல் சிறுமியும்கூட இதற்கு ஓர் உதாரணமாக இருக்கிறாள். அவள் தன் உயிரைப் பணயம் வைக்கவில்லை என்றாலும் தன்னை சிறைபிடித்துவந்த ஒரு சீரியனின் நலனில் அக்கறை காட்டி தயவுடன் நடந்துகொண்டாள். (2 இராஜாக்கள் 5:1-4) அதோடு, நல்ல சமாரியன் பற்றிய இயேசுவின் பிரபல உவமையையும் சிந்தித்துப் பாருங்கள். ஓர் ஆசாரியனும் லேவியனும் சாகக்கிடந்த சக யூதனைக் கண்டும் காணாமலே சென்றபோதிலும் ஒரு சமாரியன் விசேஷ முயற்சி எடுத்து அந்த யூதனுக்கு உதவினான். இந்த உவமை பல நூற்றாண்டுகளாக பல கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களின் மனதைக் கவர்ந்திருக்கிறது.—லூக்கா 10:29-37.
3, 4. அநேகர் தன்னலமின்றி செயல்படுவது பரிணாமத்தைக் குறித்து நமக்கு என்ன சொல்கிறது?
3 நாம் ‘கொடியகாலங்களில்’ வாழ்கிறோம் என்பது உண்மைதான். அநேகர், “கொடுமையுள்ளவர்களாயும்” ‘நன்மையை விரும்பாதவர்களாயும்’ [பொ.மொ.] இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1-3) இருந்தாலும், கருணை காட்டுகிற நபர்களை நாம் இன்றும் பார்க்கிறோம், அல்லவா? ஒருவேளை நம்மிடம்கூட யாராவது கருணை காட்டியிருக்கலாம். தங்கள் பங்கில் தியாகங்களைச் செய்து மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் பெரும்பாலோரிடம் காணப்படுவதால் சிலர் அதை “மனிதநேயம்” என்கிறார்கள்.
4 இப்படித் தங்கள் பங்கில் தியாகங்களைச் செய்து மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வரும் தன்மை எல்லா இனங்களிலும் எல்லா கலாச்சாரங்களிலும் காணப்படுகிறது. இது, விலங்கினங்களுக்குப் பொருந்துகிற “வல்லவன வாழ்தல்” (“the survival of the fittest”) எனச் சொல்லப்படும் நியமத்தின்படி மனிதன் உருவானான் என்ற கருத்துக்கு எதிர்மறையாக இருக்கிறது. மனித ஜீனோமின் (டிஎன்ஏ) சிக்கலான தன்மையைப் புரிந்துகொள்ள அமெரிக்க அரசாங்கம் நடத்திய ஆராய்ச்சியைத் தலைமை தாங்கிய ஃபிரான்ஸஸ் எஸ். காலன்ஸ் என்ற மரபியல் நிபுணர் இவ்வாறு கூறினார்: “தன்னலமற்ற மனப்பான்மைக்கு விடையளிக்க முடியாமல் பரிணாமவாதிகள் திணறுகிறார்கள். . . . தனது வளர்ச்சியில் மட்டுமே குறியாய் இருக்கும் தன்னல ஜீன்கள் மனிதனிடம் இருந்தால், தன்னலமற்ற குணம் எங்கிருந்து வந்திருக்கும் என்பதற்கு விளக்கமளிக்க முடியாது.” “மற்றவர்களுடைய மதம், மொழி, இனம், நிறம் என்று எதுவும் பாராமல் சிலர் உதவி செய்ய முன்வருவார்கள். மொத்தத்தில் தங்களுக்கும் அவர்களுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லையென்றாலும் தன்னலம் கருதாமல் உதவுவார்கள். . . . இதை டார்வினின் கோட்பாட்டால் விளக்க முடியும்போல் தோன்றவில்லை” என்று அவர் மேலுமாகக் கூறினார்.
“மனசாட்சியின் குரல்”
5. மக்கள் மத்தியில் எதைப் பொதுவாகப் பார்க்க முடிகிறது?
5 தன்னலமற்ற விதத்தில் நாம் நடந்துகொள்வதைக் குறித்து டாக்டர் காலன்ஸ் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார்: “நமக்கு எந்தப் பிரதிபலனும் கிடைக்காவிட்டாலும்கூட மற்றவர்களுக்கு உதவி செய்யும்படி நம் மனசாட்சியின் குரல் நம்மைத் தூண்டுகிறது.”a “மனசாட்சி”யைக் குறித்து அவர் சொன்னது, அப்போஸ்தலன் பவுல் வலியுறுத்திய ஓர் உண்மையை நம் நினைவுக்குக் கொண்டுவரக்கூடும்: “நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, [“செய்கிறபோதெல்லாம்,” NW] நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.”—ரோமர் 2:14, 15.
6. எல்லா மக்களும் ஏன் கடவுளுக்குக் கணக்கு கொடுக்க வேண்டும்?
6 மனிதர்கள் கடவுளுக்குக் கணக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், கடவுள் இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சியையும் அவருடைய குணங்களையும் அவர்களால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ரோமர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்தில் இது தெளிவாக உள்ளது. “உலகமுண்டானது முதற்கொண்டு” இதுவே உண்மையாக இருந்திருக்கிறது. (ரோமர் 1:18-20; சங்கீதம் 19:1-4) என்றாலும், அநேகர் படைப்பாளரைப் புறக்கணித்துவிட்டு சீர்கெட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால், மனிதர்கள் கடவுளுடைய நீதியான வழிகளை ஏற்றுக்கொண்டு தவறான பழக்கங்களை விட்டுவிட வேண்டும் என்பதே அவரது சித்தம். (ரோமர் 1:22-2:6) யூதர்கள் அப்படிச் செய்வதற்கு மறுக்கமுடியாத காரணம் இருந்தது. ஆம், மோசேயின் மூலமாக அவர்களுக்குக் கடவுளுடைய நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. இருந்தாலும், “தேவனுடைய வாக்கியங்கள்” இல்லாத மக்கள்கூட கடவுள் இருக்கிறார் என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.—ரோமர் 2:8-13; 3:2.
7, 8. நியாய உணர்வு எந்தளவு பரவலாகக் காணப்படுகிறது? இது எதைச் சுட்டிக்காட்டுகிறது?
7 எல்லா மக்களுமே கடவுள் இருக்கிறார் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டியதற்கான முக்கிய காரணம், நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியும் உள்ளுணர்வு அவர்கள் அனைவருக்குள்ளும் இருப்பதுதான். நம்மிடமுள்ள நியாய உணர்வு, நமக்கு மனசாட்சி இருக்கிறது என்பதற்கு ஓர் அத்தாட்சி. இதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்: சில குழந்தைகள் ஊஞ்சலில் விளையாடுவதற்காக வரிசையில் காத்துக்கொண்டிருக்கிறார்கள், ஒரு பிள்ளை மட்டும் அவர்களைக் கண்டுகொள்ளாமல் நேராக முன்னால் சென்றபோது, ‘இது நியாயமே இல்லை!’ என்று அவர்களில் அநேகர் சொல்கிறார்கள். இப்போது உங்களை நீங்களே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்தச் சின்னஞ்சிறிய பிள்ளைகள் பலரும்கூட தங்களுக்கு நியாய உணர்வு இருப்பதை உடனடியாக வெளிப்படுத்தினார்களே, அது எப்படி?’ அவர்கள் இப்படிக் கேட்டது அவர்களுடைய தார்மீக உள்ளுணர்வை பிரதிபலிக்கிறது. ‘நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, [“செய்கிறபோதெல்லாம்,” NW]’ என்று பவுல் எழுதினார். “எப்போதாவது செய்தால்” என்று அவர் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால், அரிதாகவே அப்படிச் செய்தார்கள் என்ற அர்த்தத்தை அது கொடுத்துவிடும். மாறாக, “செய்கிறபோதெல்லாம்” அல்லது “செய்கிறபோது” என்று அவர் கூறுவதன்மூலம் அவர்கள் அடிக்கடி அப்படிச் செய்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார். அதாவது, மக்கள் ‘சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறார்கள்’ என்றால், எழுத்தில் பதிவாகியுள்ள கடவுளுடைய சட்டத்திற்கு இசைவாக நடக்கும்படி தங்களுடைய தார்மீக உள்ளுணர்வாலேயே அவர்கள் தூண்டப்படுகிறார்கள் என்று அர்த்தம்.
8 இந்தத் தார்மீக உள்ளுணர்வு பல தேசத்து மக்களிடமும் காணப்படுகிறது. பாபிலோனியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ஆஸ்திரேலிய பழங்குடியினர், அமெரிக்க இந்தியர்கள் ஆகியோரின் தராதரங்களில் “ஒடுக்குதல், கொலை, துரோகம், போலித்தனம் ஆகியவை கண்டனம் செய்யப்படுகிறது. அதோடு, முதியவர்கள், இளம் பிள்ளைகள், வசதி வாய்ப்பில்லாதவர்கள் ஆகிய அனைவருமே அன்பாக நடத்தப்படவேண்டுமென்ற நியதியும்” அதில் உட்படுகிறது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ஒரு பேராசிரியர் எழுதினார். “சரி தவறை பிரித்தறியும் உணர்வு மனித குடும்பம் முழுவதிலும் பரவலாகக் காணப்படுகிறது” என்று டாக்டர் காலன்ஸ் எழுதினார். இது உங்களுக்கு ரோமர் 2:14-ஐ நினைவுக்குக் கொண்டுவருகிறது, அல்லவா?
உங்கள் மனசாட்சி—அது எப்படிச் செயல்படுகிறது?
9. மனசாட்சி என்றால் என்ன, நீங்கள் செயல்படுவதற்கு முன்பே அது உங்களுக்கு எவ்வாறு உதவலாம்?
9 நீங்கள் செய்யும் காரியங்களைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்காக உங்களுக்குள் இருக்கும் திறனையே பைபிள் மனசாட்சி என்கிறது. உங்களுக்குள்ளிருந்து பேசும் ஒரு குரலைப்போல் அது கேட்கும். நீங்கள் செய்வது சரியா தவறா என சொல்லும். இந்த உள்மனதின் குரலைக் குறித்து பவுல் இவ்வாறு சொன்னார்: “பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.” (ரோமர் 9:2) உதாரணத்திற்கு, தார்மீக நெறிகள் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நினைக்கும் காரியத்தைச் செய்வதற்கு முன்பே அந்தக் குரல் உங்களிடம் பேசுவதைக் கேட்பீர்கள். நீங்கள் செய்யப் போகும் காரியத்தைச் சீர்தூக்கிப் பார்க்கவும், அதைச் செய்தால் பிற்பாடு எப்படி உணருவீர்கள் என்பதை முன்னமே தெரிந்துகொள்ளவும் அது உங்களுக்கு உதவி செய்யலாம்.
10. பொதுவாக மனசாட்சி எவ்வாறு செயல்படுகிறது?
10 பொதுவாக நீங்கள் எதையாவது செய்து முடித்த பிறகே உங்கள் மனசாட்சி செயல்படுகிறது. சவுலிடமிருந்து தப்பி தலைமறைவாகத் திரிந்த சமயத்தில் கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்ட இந்த ராஜாவை அவமதிக்கும் ஒரு செயலை செய்யும் நிலையில் தாவீது இருந்தார். அதைச் செய்தும் முடித்தார். அதன்பிறகு, ‘தாவீதின் மனது அடித்துக்கொண்டிருந்தது.’ (1 சாமுவேல் 24:1-5; சங்கீதம் 32:3, 5) இந்தப் பதிவில் “மனசாட்சி” என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை; என்றாலும், தாவீதின் மனசாட்சியின் பிரதிபலிப்புதான் அது. இதுபோன்ற அனுபவம் நம் அனைவருக்குமே இருக்கிறது. நாம் எதையாவது செய்துவிட்டபோது ரொம்ப வேதனைப்பட்டிருப்போம், ‘ஏன்தான் அப்படிச் செய்தோமோ’ என்று வருத்தப்பட்டிருப்போம். உதாரணத்திற்கு, வரிகளைச் செலுத்தாமல் இருந்த சிலரின் மனசாட்சி, அவர்களைப் பாடாய்ப்படுத்தியதால் கடைசியில் அவர்கள் போய் வரிகளைச் செலுத்தியிருக்கிறார்கள். இன்னும் சிலர், தாங்கள் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டதை தங்கள் துணையிடம் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். (எபிரெயர் 13:4) ஆகவே, ஒருவர் தன் மனசாட்சிக்குச் செவிகொடுத்து நடக்கையில், அவருக்கு ஒருவித திருப்தியும் சமாதானமும் கிடைக்கலாம்.
11. ‘உங்கள் மனசாட்சி சொல்வதை மட்டுமே கேட்டு நடப்பது’ ஏன் ஆபத்தாக இருக்கலாம்? விளக்குங்கள்.
11 அப்படியென்றால், ‘நம் மனசாட்சி சொல்வதை மட்டுமே கேட்டு நடந்தால் போதுமா’? நம் மனசாட்சிக்குச் செவிகொடுப்பது நல்லதுதான். ஆனால், அது சில சமயங்களில் நாம் மிகப் பெரிய தவறைச் செய்துவிட அனுமதிக்கலாம். ஆம், நமது ‘உள்ளான மனுஷனின்’ குரல் நம்மைத் தவறாக வழிநடத்தலாம். (2 கொரிந்தியர் 4:16) ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். ஸ்தேவான் “விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய்” இயேசுவை பக்திவைராக்கியத்தோடு பின்பற்றியதாக பைபிள் சொல்கிறது. சில யூதர்கள் ஸ்தேவானை எருசலேமுக்கு வெளியே தள்ளி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். சவுல் (பின்பு அப்போஸ்தலன் பவுலாக மாறியவர்) அவர்கள் அருகே நின்றுகொண்டு, ஸ்தேவானைக் ‘கொலை செய்கிறதற்குச் . . . சம்மதித்தார்.’ தாங்கள் செய்தது சரியே என அந்த யூதர்கள் முழுமையாக நம்பியதாகத் தெரிகிறது. அதனால்தான் அவர்களுடைய மனசாட்சி அவர்களை உறுத்தவே இல்லை. சவுலும்கூட அப்படியே நினைத்திருக்கலாம். ஏனெனில், சவுல் ‘இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிக்கொண்டிருந்தார்.’ இதிலிருந்து, அவருடைய மனசாட்சி அந்தச் சமயத்தில் சரியான குரலில் பேசவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.—அப்போஸ்தலர் 6:8; 7:57-8:1; 9:1.
12. நம் மனசாட்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு விஷயம் என்ன?
12 சவுலின் மனசாட்சியை எது பாதித்திருக்கலாம்? அவர் மற்றவர்களுடன் வைத்திருந்த நெருக்கமான கூட்டுறவு அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தொலைபேசியில் கிட்டத்தட்ட தன் அப்பாவைப் போலவே தொனிக்கும் மகனின் குரலை நம்மில் அநேகர் கேட்டிருக்கிறோம். பிறக்கும்போதே அந்த மகன் தன் அப்பாவிடமிருந்து அந்தத் தொனியை ஓரளவுக்குப் பெற்றிருந்தாலும் தன் அப்பா பேசுவதைக் கேட்டுக் கேட்டு அவனும் அதே மாதிரி பேசவும் வாய்ப்பிருக்கிறது. அதேபோலத்தான், இயேசுவையும் அவருடைய போதனைகளையும் எதிர்த்த யூதர்களுடன் சவுல் நெருங்கிப் பழகியதால் அவர்களுடைய மனநிலை இவரையும் தொற்றியிருக்கலாம். (யோவான் 11:47-50; 18:14; அப்போஸ்தலர் 5:27, 28, 33) ஆம், சவுலின் கூட்டாளிகளால் அவருடைய உள்மனதின் குரல், அதாவது, அவருடைய மனசாட்சி பாதிக்கப்பட்டிருக்கலாம்.
13. ஒருவர் வளர்ந்துவரும் சூழல் எப்படி அவருடைய மனசாட்சியைப் பாதிக்கலாம்?
13 ஒருவரைச் சுற்றியுள்ள சூழல் அவரது பேச்சையும் உச்சரிப்பையும் எப்படிப் பாதிக்கிறதோ அதேபோல் ஒருவர் வளர்ந்து வரும் சூழலும் கலாச்சாரமும் அவரது மனசாட்சியைப் பாதிக்கலாம். (மத்தேயு 26:73) பூர்வ அசீரியர்களின் விஷயத்தில் இதுவே நடந்திருக்க வேண்டும். கொடூரமாக நடந்துகொள்வதற்கு அவர்கள் பேர்போனவர்கள். அவர்கள் கைதிகளைச் சித்திரவதை செய்ததை அவர்களுடைய கல்வெட்டுகள் சித்தரிக்கின்றன. (நாகூம் 2:11, 12; 3:1) யோனா காலத்தில் வாழ்ந்த நினிவே மக்கள், “வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத”வர்களாக விவரிக்கப்படுகிறார்கள். அதாவது, கடவுளுடைய பார்வையில் எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிப்பதற்கு எந்த ஒரு திட்டவட்டமான நியதியும் அவர்களுக்கு இருக்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழல், நினிவேயில் வளர்ந்துவரும் ஒருவரின் மனசாட்சியை எப்படிப் பாதித்திருக்கும் என சற்று சிந்தித்துப் பாருங்கள்! (யோனா 3:4, 5; 4:11) அதுபோலவே, இன்றும்கூட ஒரு நபருடைய மனசாட்சி அவரைச் சுற்றி இருப்பவர்களின் மனப்பான்மையால் பாதிக்கப்படலாம்.
உள்மனதின் குரல் இன்னும் நன்றாகச் செயல்பட . . .
14. ஆதியாகமம் 1:27 சொல்வதை நம் மனசாட்சி எவ்வாறு பிரதிபலிக்கிறது?
14 ஆதாம் ஏவாளுக்கு மனசாட்சி எனும் பரிசை யெகோவா கொடுத்தார். நாம் அந்தப் பரிசை அவர்களிடமிருந்து சுதந்தரித்துக்கொண்டோம். மனிதர்கள் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதாக ஆதியாகமம் 1:27 சொல்கிறது. இங்குக் கடவுளுடைய சாயல் என்பது அவருடைய உடலின் சாயலை அர்த்தப்படுத்துவதில்லை, ஏனெனில், அவர் ஆவி சிருஷ்டி, நாமோ மாமிச ஜீவிகள். அப்படியானால் அதன் அர்த்தம், அவருடைய குணங்கள் நம்மில் இருக்கின்றன என்பதே. மனசாட்சியைச் செயல்பட வைக்கும் தார்மீக உள்ளுணர்வும் அதில் அடங்குகிறது. ஆகவே, நம் மனசாட்சியை இன்னும் நன்றாகச் செயல்பட வைத்து, அதை நம்பகமான வழிக்காட்டியாக மாற்றுவதற்கு ஒரு வழி இருக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. அது என்ன வழி என்றால், சிருஷ்டிகரைப்பற்றி அதிகம் கற்றுக்கொண்டு அவரிடம் இன்னும் நெருங்கிவருவதே.
15. நம் பிதாவை அறிந்துகொண்டு பயனடைவதற்கான ஒரு வழி என்ன?
15 ஒரு விதத்தில் யெகோவா நம் அனைவருக்கும் பிதாவாக இருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 64:8) உண்மை கிறிஸ்தவர்களின் நம்பிக்கை பரலோகத்திற்குச் செல்வதாக இருந்தாலும் சரி பரதீஸ் பூமியில் வாழ்வதாக இருந்தாலும் சரி, கடவுளை அவர்கள் பிதா என அழைக்கலாம். (மத்தேயு 6:9) நம் பிதாவிடம் மேன்மேலும் நெருங்கிச் செல்ல நாம் விரும்ப வேண்டும். இதன்மூலம் அவருடைய எண்ணங்களையும் நெறிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். (யாக்கோபு 4:8) இதைச் செய்ய அநேகர் விரும்புவதில்லை. இவர்கள் இயேசு குறிப்பிட்ட யூதர்களைப்போல் இருக்கிறார்கள். அவர்களிடம் இயேசு இவ்வாறு கூறினார்: “நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. . . . அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை.” (யோவான் 5:37, 38) நாம் கடவுளுடைய உண்மையான குரலை கேட்டதில்லை, என்றாலும், அவருடைய வார்த்தையை வாசித்து அவரது சிந்தனைகளைத் தெரிந்துகொள்ளலாம். இப்படிச் செய்வதன்மூலம் நாம் அவரைப்போல் ஆகவும் முடியும், உணரவும் முடியும்.
16. நம்முடைய மனசாட்சியைப் பயிற்றுவிப்பதும் அதற்குச் செவிகொடுப்பதும் மிகமிக முக்கியம் என்பதை யோசேப்பின் முன்மாதிரி எவ்வாறு காண்பிக்கிறது?
16 போத்திபாரின் வீட்டில் யோசேப்புக்கு நடந்த சம்பவம் இதற்கு உதாரணமாக இருக்கிறது. போத்திபாரின் மனைவி யோசேப்பை தன் வலையில் சிக்கவைக்க முயற்சி செய்தாள். யோசேப்பு வாழ்ந்த காலத்தில் பைபிள் புத்தகங்கள் எதுவும் எழுதப்படவில்லை. பத்து கட்டளைகள்கூட அப்போது கொடுக்கப்படவில்லை. இருந்தாலும், யோசேப்பு எப்படிப் பிரதிபலித்தார்? “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி” என்று கேட்டார். (ஆதியாகமம் 39:9) தன் குடும்பத்தினரைப் பிரியப்படுத்துவதற்காக அவர் அவ்வாறு சொல்லவில்லை; அவர்கள் வெகு தொலைவில் வசித்து வந்தார்கள். அவர் கடவுளைப் பிரியப்படுத்த விரும்பியதாலேயே அப்படிக் கூறினார். திருமணத்தைக் குறித்ததில் கடவுளுடைய நியமத்தை அவர் அறிந்திருந்தார். அதாவது, ஒருவனுக்கு ஒருத்தி, அவர்கள் இருவரும் “ஒரே மாம்சமாயிருப்பார்கள்” என்பதை அவர் அறிந்திருந்தார். மேலும், ரெபெக்காளுக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்ததை அறிந்ததும் அபிமெலேக்கு அவளை அடைவது தவறு என்று உணர்ந்ததோடு, தனது மக்கள் பழிபாவத்திற்கு உட்படாதபடி பார்த்துக்கொண்டார் என்பதையும் அவர் கேள்விப்பட்டிருக்கலாம். இந்தச் சம்பவத்தின் முடிவை யெகோவா, ஆசீர்வதித்ததிலிருந்து விபச்சாரத்தைக் குறித்து அவருடைய கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த விஷயங்களையெல்லாம் யோசேப்பு அறிந்திருந்தது, அவருடைய மனசாட்சி இன்னும் நன்றாகச் செயல்பட தூண்டியிருக்கலாம். ஆகவே, ஒழுக்கங்கெட்ட நடத்தையில் விழாமல் இருக்க அது அவரை உந்துவித்திருக்கும்.—ஆதியாகமம் 2:24; 12:17-19; 20:1-18; 26:7-14.
17. நம் பிதாவைப்போல் இருக்கும் விஷயத்தில் யோசேப்புடன் ஒப்பிட நம்முடைய நிலைமை ஏன் மேம்பட்டதாக இருக்கிறது?
17 யோசேப்புடன் ஒப்பிட நம்முடைய நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. நம்முடைய பிதாவின் சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் அவருடைய விருப்புவெறுப்புகளையும் தெரிந்துகொள்ள நம்மிடம் முழு பைபிள் இருக்கிறது. நாம் எவ்வளவு அதிகமாக பைபிளை அறிந்திருக்கிறோமோ அந்தளவுக்கு கடவுளிடம் நெருங்கி வந்து அவரைப்போல் இருக்க முடியும். நாம் அப்படிச் செய்துவருகையில் நம் பிதாவின் சிந்தனைகளை இன்னும் சிறந்த விதத்தில் பிரதிபலிக்க நம் மனசாட்சி நம்மைத் தூண்டும். அது முடிந்தளவு அவருடைய சித்தத்துடன் ஒத்திசைந்திருக்கும்.—எபேசியர் 5:1-5.
18. முன்பு நம் மனசாட்சி தவறான விதத்தில் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதன் நம்பகத்தன்மையை அதிகரிக்க நாம் என்ன செய்யலாம்?
18 நம்மைச் சுற்றியுள்ள சூழல் நம் மனசாட்சிமீது ஏற்படுத்தும் பாதிப்பைக் குறித்து என்ன சொல்லலாம்? நம் உறவினர்களுடைய சிந்தனைகள், செயல்கள், நாம் வளர்ந்துவந்த சூழல் ஆகியவை நம்மீது செல்வாக்கு செலுத்தியிருக்கலாம். அதன் காரணமாக, நம் மனசாட்சி ஒருவேளை மரத்துப்போயிருக்கலாம் அல்லது மழுங்கிப்போயிருக்கலாம். அது மற்றவர்களுடைய “குரலில்” நம்மிடம் பேசியிருந்திருக்கலாம். நம்முடைய முந்தைய வாழ்க்கையை நம்மால் மாற்ற முடியாதுதான்; இருந்தாலும், நம்முடைய மனசாட்சியின் மீது நல்ல பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நண்பர்களையும் சரியான சூழலையும் தேர்ந்தெடுக்க நாம் தீர்மானமாயிருக்கலாம். அதற்கு நாம் எடுக்க வேண்டிய முக்கிய படி? தங்களுடைய பிதாவைப்போல் இருப்பதற்கு பல காலமாக முயற்சி செய்துகொண்டிருக்கும் உண்மையுள்ள கிறிஸ்தவர்களுடன் தவறாமல் நேரம் செலவிட வேண்டும். அதற்குச் சபை கூட்டங்கள், அவற்றுக்கு முன்பும் பின்பும் நாம் அனுபவிக்கும் கூட்டுறவு ஆகியவை நல்ல வாய்ப்புகளாக அமைகின்றன. சக கிறிஸ்தவர்கள் பைபிள் நியமங்களின் அடிப்படையில் சிந்திப்பதையும், செயல்படுவதையும் அங்குக் கவனிக்க முடிகிறது; அதோடு, கடவுளுடைய கண்ணோட்டத்தையும் வழிகளையும் தங்களுடைய மனசாட்சி ஒலிக்கையில் அதற்கு அவர்கள் உடனே செவிகொடுப்பதையும் நம்மால் கவனிக்க முடிகிறது. காலப்போக்கில், நாமும் நம் மனசாட்சியை பைபிள் நியமங்களுக்கு இசைவாகச் செயல்பட வைக்கவும், கடவுளுடைய சாயலை நாம் இன்னும் நன்றாகப் பிரதிபலிக்கவும் இது உதவியாக இருக்கும். நாம் எப்போது நம் பிதாவின் நியமங்களுக்கு இசைவாக நம் உள்மனதின் குரலைச் செயல்பட வைத்து, சக கிறிஸ்தவர்களின் நல்ல முன்மாதிரியைப் பின்பற்றுகிறோமோ அப்போது நம்முடைய மனசாட்சி இன்னும் நம்பத்தகுந்ததாக இருக்கும். நாமும் அது சொல்வதைக் கேட்க இன்னும் மனமுள்ளவர்களாய் இருப்போம்.—ஏசாயா 30:21.
19. மனசாட்சி குறித்து வேறென்ன அம்சங்களை நாம் இன்னும் சிந்திக்க வேண்டியிருக்கிறது?
19 என்றாலும், சிலருக்குத் தங்கள் மனசாட்சிக்குச் செவிகொடுப்பது ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருக்கிறது. இது சம்பந்தமாக கிறிஸ்தவர்கள் எதிர்ப்பட்டிருக்கும் சில சந்தர்ப்பங்களை அடுத்த கட்டுரை கலந்தாலோசிக்கிறது. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை நாம் அலசி ஆராய்வதன்மூலம் மனசாட்சியின் பங்கு என்ன, அது ஏன் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது, நாம் எப்படி அதற்கு இன்னும் அதிகமாகச் செவிகொடுக்கலாம் ஆகிய விஷயங்களை நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.—எபிரெயர் 6:11, 12.
[அடிக்குறிப்பு]
a ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வானவியல் பேராசிரியரான ஓயன் கிங்க்ரிச்சும்கூட இதுபோன்ற ஒரு கருத்தை எழுதினார்: “தன்னலமற்ற குணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு . . . விலங்குலகைச் சுட்டிக்காட்டி விஞ்ஞானத்தால் பதிலளிக்க முடியாது. திருப்திகரமான பதில் கிடைக்க வேண்டுமென்றால் விஞ்ஞானத் துறையில் அல்லாமல் வேறு துறையில் தேட வேண்டியிருக்கலாம். ஆம், மனிதநேயம் கடவுளிடமிருந்து கிடைத்த பண்புகளில் ஒன்று, அதில் மனசாட்சியும் உள்ளடங்குகிறது.”
என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• எது சரி, எது தவறு என்பதைச் சுட்டிக்காட்டும் உள்ளுணர்வு, அதாவது, மனசாட்சி ஏன் எல்லா கலாச்சாரங்களிலும் காணப்படுகிறது?
• நம் மனசாட்சி சொல்வதை மட்டுமே கேட்டு நடப்பது ஏன் ஆபத்தானது?
• நம் உள்மனதின் குரலை இன்னும் நன்றாகச் செயல்பட வைப்பதற்கு என்ன சில வழிகள் உள்ளன?
[பக்கம் 23-ன் படங்கள்]
தாவீதின் மனசாட்சி அவரைக் குத்திக்கொண்டே இருந்தது . . .
ஆனால், தர்சு பட்டணத்து சவுலின் விஷயத்தில் அப்படியல்ல
[பக்கம் 24-ன் படம்]
நம் மனசாட்சியை நாம் பயிற்றுவிக்க முடியும்