தடைகளைத் தாண்டினோம் நற்செய்திக்காக!
சோ தனைச் சாவடியை நெருங்கியது எங்கள் ட்ரக். ஆயுதமேந்திய ஆண்கள், பெண்கள், பருவ வயதினர் என சுமார் 60 பேர் அங்கு கூடியிருந்தார்கள். அவர்களில் சிலர் சீருடை அணிந்திருந்தார்கள்; மற்றவர்கள் சாதாரண உடையில் இருந்தார்கள். பலர் தானியங்கி ஆயுதங்களைக் காட்டி எங்களைப் பயமுறுத்தினார்கள். அவர்களைப் பார்த்தால் எங்களுக்காகவே காத்திருந்ததுபோல் தெரிந்தது. அது உள்நாட்டு கிளர்ச்சி நடந்து வந்த சமயம்.
நாங்கள் பயணத்தைத் தொடங்கி நான்கு நாட்கள் ஆகிவிட்டிருந்தது. பத்து டன் எடையுள்ள பைபிள் பிரசுரங்கள் எங்களிடம் இருந்தன. இந்தக் கும்பல் எங்களைப் போக விடுமா என்று எங்களுக்கு ஒரே சந்தேகம். பணம் கேட்பார்களோ? நாங்கள் ஓர் அமைதிப் பணிக்காகப் போவதை அவர்களுக்குப் புரிய வைக்க எவ்வளவு நேரமாகுமோ? கேள்விகள் எங்கள் மனதில் அலைமோதின.
சுடுவதற்குத் தயங்காத ஒருவன் திடீரென வானத்தை நோக்கி சுட்டான். இதன்மூலம், தானே அந்தக் கூட்டத்தின் தலைவன் என்பதை எங்களுக்கு அவன் மறைமுகமாய்ச் சொன்னான். எங்களுடைய மொபைல் ஃபோன்கள் அவன் கண்களில் பட்டுவிட்டன. அவ்வளவுதான்! உடனே அவற்றைத் தரும்படி மிரட்டினான். நாங்கள் ஒரு நிமிடம் தயங்கினோம்; ‘தராவிட்டால் கழுத்தை அறுத்துவிடுவேன்’ என்பது போல் சைகை காட்டினான். இனியும் தாமதித்தால் தலை தப்பாது என்பது தெளிவாகிவிட்டது. வேறு வழியின்றி, ஃபோன்களைக் கொடுத்தோம்.
திடீரென, சீருடை அணிந்த பெண் ஒருத்தி துப்பாக்கியோடு எங்களிடம் வந்தாள். அவள்தான் “செயலாளர்.” நாங்கள் அவளுக்கும் ஏதாவது தர வேண்டும் என்று எதிர்பார்த்தாள். கஷ்ட ஜீவனம் நடத்தி வருவதால், சின்னதாய் ஏதேனும் கொடுத்தால்கூட ‘கிடைத்தவரை லாபம்’ என்று சந்தோஷப்பட்டுக்கொள்கிறாள். தன்னுடைய பாட்டிலில் பெட்ரோலை நிரப்பிக்கொள்ள மற்றொரு போர்வீரன் எங்களுடைய ட்ரக்கினுடைய டாங்கைத் திறந்தான். நாங்கள் ஆட்சேபித்தும், தலைவன் இட்ட ஆணையை நிறைவேற்றுவதே தன் கடமை என்று கூறிவிட்டு தன் காரியத்தை கச்சிதமாய் முடித்துக்கொண்டான். எங்களுக்குக் கையை கட்டிப்போட்டது போல் இருந்தது. மற்றவர்களும் இதையே செய்யாமல் இருக்க வேண்டுமே என்று மனம் படபடக்க நின்றிருந்தோம்.
சாலையின் குறுக்கே போடப்பட்டிருந்த தடைவேலி ஒருவழியாய் திறக்கப்பட, நாங்களும் பயணத்தைத் தொடர்ந்தோம். ‘அப்பாடா’ என்று நானும் என் நண்பனும் நிம்மதி பெருமூச்சுவிட்டோம். கடந்துபோன நிமிடங்கள் எங்கள் இதயத்துடிப்பை எகிறச் செய்திருந்தாலும் இத்தகைய சோதனைச் சாவடி பரபரப்புகள் எல்லாம் எங்களுக்கு பழகிவிட்டன. ஏப்ரல் 2002-க்கும் ஜனவரி 2004-க்கும் இடைப்பட்ட காலத்தில் கேமரூனில் உள்ள டூயாலா துறைமுகத்திலிருந்து மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரான பங்குய் நகருக்கு 18 முறை பயணித்திருக்கிறோம். இந்த 1,600 கிலோமீட்டர் தூர பயணத்தில் எங்களுக்குக் காத்திருக்கும் ஆபத்துகளுக்கும் ஆச்சரியங்களுக்கும் அளவே இல்லை.a
“இத்தகைய பயணங்களிலிருந்து பல பாடங்களைக் கற்றிருக்கிறோம்” என்று ஜோஸெஃப்பும் எமான்வெல்லும் சொல்கிறார்கள். இந்தப் பயணங்களில் எப்போதும் இவர்கள் இருவருமே ஓட்டுனர்களாகப் பணிபுரிந்திருக்கிறார்கள். “கணக்குவழக்கில்லாமல் மனதுக்குள்ளே ஜெபித்துவிட்டு, அமைதியாய் இருப்பதே புத்திசாலித்தனம். ‘தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?’ என்று சங்கீதக்காரன் எழுதினார். நாங்களும் அதே மனநிலையோடிருக்க முயற்சி செய்கிறோம். ஜனங்களுக்கு அவசியம் தேவைப்படுகிற நம்பிக்கையின் செய்தி அடங்கிய பிரசுரங்களை எங்கள் வாகனம் சுமந்து செல்வதை யெகோவா அறிந்திருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறோம்.”—சங்கீதம் 56:11.
ஆன்மீக உணவளிக்க உலகளாவிய உதவி
ஆப்பிரிக்காவின் இந்தப் பகுதியில் வாழும் அநேகருக்கு கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைக் கேட்பதென்றால் கொள்ளைப் பிரியம். நாங்கள் எடுத்துச் செல்லும் பிரசுரங்கள், அவர்களுடைய ஆன்மீக தேவையைப் பூர்த்திசெய்யும் விதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. (மத்தேயு 5:3, NW; 24:14) யெகோவாவின் சாட்சிகளுடைய கேமரூன் கிளை அலுவலகம் டூயாலாவில் அமைந்துள்ளது. கேமரூனிலும் அதன் நான்கு அண்டை நாடுகளிலும் வசிக்கிற 30,000-க்கும் அதிகமான ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கும் சத்தியத்தில் ஆர்வம் காட்டுவோருக்கும் தேவையான பிரசுரங்களை இந்தக் கிளை அலுவலகம் தவறாமல் அளித்து வருகிறது.
நாங்கள் ஏற்றிச்சென்ற பிரசுரங்கள், எங்கள் கையில் கிடைக்கும் முன்பே பல கிலோமீட்டர் தூரத்தைத் தாண்டி வந்திருந்தன. ஆம், அவற்றில் பெரும்பாலானவை இங்கிலாந்து, இத்தாலி, பின்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அச்சடிக்கப்பட்டவை. அந்த நாடுகளிலிருந்து பிரான்சுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து கப்பலில் இங்கு வந்து சேருகின்றன. பொதுவாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பைபிள் பிரசுரங்கள் நிறைந்த பெட்டி டூயாலா துறைமுகத்திற்கு வந்து சேருகிறது.
அந்தப் பெட்டி ஒரு ட்ரக்கில் ஏற்றப்பட்டு, கிளை அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது. ஷிப்பிங் இலாகாவில் பணிபுரிவோர் இந்தப் பிரசுரங்களை உரிய இடங்களுக்கு அனுப்புவதற்கு ஏற்ப பிரித்து அடுக்குகிறார்கள். இந்த நாடுகளில் உள்ள தொலைதூரப் பிராந்தியங்களுக்குப் பிரசுரங்களை எடுத்துச் செல்வது சாதாரண வேலையல்ல. எனினும், “பூமியின் கடைசிபரியந்தமும்” நற்செய்தியை அறிவிப்பதில் இந்தப் பணியும் உட்பட்டிருக்கிறது. (அப்போஸ்தலர் 1:8) இந்தப் பயணங்கள் ஆபத்தானவை; எனினும், தங்கள் சுகங்களைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் வாலண்டியர்களையே கிளை அலுவலகம் இவ்விஷயத்தில் பெரிதும் சார்ந்திருக்கிறது. இவ்விதமாய், ஆப்பிரிக்காவின் மத்தியப் பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கானோருக்கு பைபிள் பிரசுரங்கள் தவறாமல் எடுத்துச் செல்லப்படுகின்றன.
பயணிக்கலாம் வாங்க!
ஈக்குவிடோரியல் கினி, காபோன், கேமரூன், சாட், மத்திய ஆப்பிரிக்க குடியரசு ஆகிய நாடுகளுக்கு பிரசுரங்கள் ட்ரக் மூலமாக அனுப்பப்படுகின்றன. இப்போது நாமும் ஒரு ட்ரக்கில் ஏறி, ஓட்டுனர்களோடு சேர்ந்து பயணிக்கலாம் வாருங்கள். ஓட்டுனர்களின் அருகே நீங்களும் உட்கார்ந்திருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். ஆபத்தான இந்தப் பயணம் பத்து நாட்களோ அதற்கும் மேலோ நீடிக்கும், நீங்கள் தயார்தானே?
இந்தப் பயணத்தின்போது ஆறு பேர் வாகனத்தை ஓட்டுகிறார்கள். பலசாலியான, திறமையான, பொறுமையான, நேர்த்தியாய் உடையணிந்த நபர்களே இந்த வேலைக்குத் தேவை. ஆப்பிரிக்க பாணி உடையையோ சட்டையையும் டையையுமோ அவர்கள் அணிகிறார்கள். முன்னொரு சமயம், இதைப் பார்த்து சுங்க அதிகாரிகள் இவ்வாறு பாராட்டியிருக்கிறார்கள்: “இந்த ட்ரக் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது, பாருங்கள். ஓட்டுனர்கள் பளிச்சென உடையணிந்திருக்கிறார்கள். இவர்களுடைய பிரசுரங்களில் உள்ள புகைப்படங்களில் என்ன பார்க்கிறோமோ அதை இப்போது நேரில் பார்க்கிறோம்.” ஓட்டுனர்களின் தோற்றம் முக்கியமே. அதைவிட, மற்றவர்களுக்கு உதவ அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போகத் தயாராக இருப்பது மிக முக்கியம்.—சங்கீதம் 110:3.
காலையில் சூரியன் முகம் காட்டியதுமே, சுமார் ஆறு மணிக்கு டூயாலாவில் இருந்து புறப்படுகிறோம். இல்லாவிட்டால், பரந்து விரிந்த இந்நகரத்தின் மோசமான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வோம். கிளை அலுவலகத்திற்கு அருகிலுள்ள பாலத்தையும், பரபரப்பாக இயங்கும் நகரத்தையும் கடந்து, கிழக்கு நோக்கிப் பயணிக்கிறோம். கேமரூனின் தலைநகரான யான்டாதான் நாம் செல்ல வேண்டிய முதல் இடம்.
பத்து டன் புத்தகங்களைச் சுமந்துசெல்கிற ட்ரக்கை ஓட்டுவது எவ்வளவு சிரமம் என்பதுபற்றி அந்த ஆறு ஓட்டுனர்களும் உங்களுக்குக் கதைகதையாய்ச் சொல்வார்கள். முதல் மூன்று நாட்கள் கல் பாவிய சாலைகளில் பயணிக்கிறோம். பெரிதாக எந்தப் பிரச்சினையும் இல்லை. எனினும், அதிக கவனமாகவே ஓட்ட வேண்டியிருக்கிறது. திடீரென, மழை கொட்டத் தொடங்குகிறது. இதற்கு மேல் மண் சாலையில்தான் பயணம். எல்லாமே மங்கலாகத் தெரிகிறது, சாலை வழுக்குகிறது, பாதை கரடுமுரடாக இருப்பதால் மெதுவாக பயணிக்கிறோம். அந்திசாயும் வேளை நெருங்குகிறது. இப்போது வண்டியை நிறுத்திவிட்டு, ஏதாவது சாப்பிட வேண்டும். வண்டியின் டேஷ்போர்டு மேல் காலை நீட்டிக்கொண்டு தூங்க வேண்டும். இந்தப் பயணங்களில் இதெல்லாம் சகஜம்!
மறுநாள் விடிந்ததும், பயணம் தொடருகிறது. சாலை சீராக இருக்கிறதா என்று ஓட்டுனர்களில் ஒருவர் சதா கண்காணிக்கிறார். சாலையோர சாக்கடையை ஒட்டிப்போகும்போது உடனடியாக எச்சரிக்கிறார். சாக்கடைக்குள் வண்டி சரிந்தால் அவ்வளவுதான், அதை வெளியே எடுக்க பல நாட்கள் ஆகும் என்பது ஓட்டுனர்களுக்கு நன்றாகவே தெரியும். மத்திய ஆப்பிரிக்க குடியரசின் எல்லையைக் கடந்து உள்ளே செல்லும்போதும் சாலை ஒன்றும் சொல்லிக்கொள்கிற அளவுக்கு இல்லை. அடுத்த 650 கிலோமீட்டர் தூரத்திற்கு, பச்சை பசேலென்று கண்ணுக்கு விருந்தளிக்கும் மலைகள் நிறைந்த நாட்டுப்புறங்களில்தான் பயணம். இந்தக் கிராமங்களில் பயணிக்கையில் பிள்ளைகள், முதியவர்கள், குழந்தைகளை முதுகில் சுமந்திருக்கும் தாய்மார்கள் என எல்லாரும் நம்மைப் பார்த்து கையசைக்கிறார்கள். உள்நாட்டு கலவரத்தால் இப்போதெல்லாம் அங்கே வாகனங்களைப் பார்ப்பதே குதிரைக் கொம்பாக இருப்பதால், மக்கள் நம்மை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.
ஆனந்தமான அனுபவங்கள்
ஓட்டுனர்களுக்கு நேரம் கிடைப்பதே அபூர்வம்; எனினும், குக்கிராமங்களில் அடிக்கடி வண்டியை நிறுத்தி, கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு, பைபிள் பிரசுரங்களை வினியோகிப்பதாக அவர்களில் ஒருவரான ஜான்வியா நம்மிடம் சொல்கிறார். “பாபூவாவுக்குச் செல்லும்போதெல்லாம் அங்கிருக்கும் ஓர் ஆஸ்பத்திரியில் உதவியாளராக வேலை செய்கிற ஒருவரிடம் சத்தியத்தைப்பற்றி பேசுவோம். அவர் ராஜ்ய நற்செய்தியை ஆர்வமாகக் கேட்பார். அவருக்குக் கொஞ்ச நேரம் நாங்கள் பைபிள் படிப்பு நடத்துவோம். ஒருநாள் அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் நோவா வீடியோவையும்கூட போட்டுக் காட்டினோம். நண்பர்களும் அக்கம்பக்கத்தாரும் அதைப் பார்ப்பதற்கு ஆர்வத்தோடு வர ஆரம்பித்தார்கள். சீக்கிரத்தில் அவர் வீடே நிரம்பிவிட்டது. எல்லாருமே நோவாவைப்பற்றி கேள்விப்பட்டிருந்தார்கள். ஆனால், இப்போது அவருடைய கதையை டிவியில் பார்க்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் ரசித்துப் பார்த்ததைக் கண்டபோது எங்களுக்கும் ஒரே சந்தோஷம். அதன் பிறகு, எங்களுக்கு நன்றி சொல்லும் விதமாக விசேஷ விருந்திற்கு ஏற்பாடு செய்தார்கள். இரவு தங்கிவிட்டு போகும்படியும் வற்புறுத்தினார்கள். ஆனால், எங்களுக்கோ நிற்கக்கூட நேரமில்லை. உடனடியாக அங்கிருந்து கிளம்பி எங்களுடைய நீண்ட, நெடும் பயணத்தைத் தொடர்ந்தோம். சாதாரண நிலையிலிருக்கும் இந்த ஜனங்களுக்கு சத்தியத்தைச் சொன்னதில் எங்களுக்கு சந்தோஷம்” என்கிறார் அவர்.
தற்போது செல்கிற பங்குய் நகருக்கு இதற்கு முன் சென்றபோது கிடைத்த அனுபவங்களை மற்றொரு ஓட்டுனரான ஈஸ்ராயெல் சொல்கிறார். “பங்குய் நகரை நெருங்க நெருங்க, சாலை அடைப்புகளை அதிகமாய் எதிர்ப்பட்டோம். நல்லவேளை, ராணுவ வீரர்கள் பலர் அன்பாகப் பழகினார்கள்; நம் ட்ரக்கை ஏற்கெனவே பல முறை அவர்கள் பார்த்திருந்ததால் நன்கு ஞாபகம் வைத்திருந்தார்கள். தங்களோடு வந்து உட்காரும்படி சொன்னார்கள், பைபிள் பிரசுரங்களையும் சந்தோஷமாய்ப் பெற்றுக்கொண்டார்கள். புத்தகங்களை அவர்கள் பொக்கிஷமாகக் கருதுகிறார்கள். ஆகவே, தாங்கள் பெற்றுக்கொண்ட புத்தகங்களில் தங்கள் பெயரையும் புத்தகம் கிடைத்த தேதியையும் அதைக் கொடுத்த நபரின் பெயரையும் எழுதி வைக்கிறார்கள். அவர்களில் சிலருடைய உறவினர்கள் யெகோவாவின் சாட்சிகளாய் இருப்பது, அவர்கள் நேசக்கரம் நீட்டியதற்கு இன்னொரு காரணம்.”
அந்த ஓட்டுனர்களிலேயே ஜோஸெஃப்தான் அதிக அனுபவசாலி. பயணத்தின் சிறப்பம்சமே போய்ச் சேர வேண்டிய இடத்தை அடைவதுதான் என்கிறார் அவர். ஒரு குறிப்பிட்ட பயணத்தைப்பற்றி இவ்வாறு சொல்கிறார்: “பங்குய் நகருக்குப் போய்ச் சேர ஒரு சில கிலோமீட்ட தூரம்தான் இருந்தது. சீக்கிரத்தில் வந்துவிடுவோம் என்று நம் சகோதரர்களுக்கு ஃபோன் செய்து தகவல் தெரிவித்தோம். நகரத்திற்குள் பயணிக்கையில் அவர்கள் எங்களுக்குத் துணையாக வந்தார்கள். சட்டரீதியாகத் தேவைப்பட்டவற்றைச் செய்ய அவர்கள் எங்களுக்கு உதவினார்கள். கிளை அலுவலகத்தை அடைந்தவுடன், அங்கிருந்த அனைவரும் எங்களை அன்போடு கட்டியணைத்து வரவேற்றார்கள். அருகிலிருந்த சபைகளைச் சேர்ந்தவர்கள் உதவி செய்ய ஓடோடி வந்தார்கள். சில மணிநேரங்களில், பைபிள்கள், புத்தகங்கள், சிறுபுத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவை வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பெட்டிகள் ட்ரக்கிலிருந்து இறக்கப்பட்டு, கிடங்கில் அடுக்கப்பட்டன.”
“சில சமயங்களில், நன்கொடையாக அளிக்கப்பட்ட உடைகளையும் ஷூக்களையும் குழந்தைகளுக்கான பொருள்களையும் நாங்கள் எடுத்துச் சென்றோம். இவற்றை அருகிலிருந்த ஜனநாயக காங்கோ குடியரசில் உள்ள சகோதரர்களிடம் கொடுத்தோம். நன்றிப் பெருக்கால் அவர்கள் முகங்களில் அரும்பிய புன்னகையைப் பார்ப்பதே ஒரு தனி சந்தோஷம்!” என்கிறார் ஜோஸெஃப்.
களைப்பு தீர ஒருநாள் ஓய்வெடுக்கிறோம். மறுநாள், ட்ரக்கைத் தயார்படுத்திக்கொண்டு, வந்தவழியே திரும்புகிறோம். இனியும் இடையூறுகள் வரும்தான். எனினும், பயணத்தில் கிடைத்த ஆனந்தமான அனுபவங்களுடன் ஒப்பிட நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றுமே இல்லை.
தொலைதூரப் பயணம், கொட்டித் தீர்க்கும் மழை, குண்டும் குழியுமான சாலைகள், பஞ்சராகும் டயர்கள், பழுதடையும் வண்டி என நீளுகிற சிரமங்களின் பட்டியல் எரிச்சலூட்டலாம். அடாவடித்தனம் செய்கிற போர்வீரர்களைச் சமாளிப்பது பயணத்தின் ஓர் அம்சமாகவே ஆகிவிட்டது. இருப்பினும், ஆப்பிரிக்காவின் தொலைதூரப் பிராந்தியங்களுக்கு நற்செய்தி அடங்கிய பிரசுரங்களைக் கொண்டு செல்வதிலும், அதைப் பெற்றுக்கொள்கிறவர்கள் வாழ்க்கையை அது மாற்றுவதைப் பார்ப்பதிலும் கிடைக்கும் திருப்தியே அலாதிதான். இந்த ஓட்டுனர்களுக்கு வேறெதுவும் இந்தளவு திருப்தியை அளிப்பதில்லை.
உதாரணமாக, மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தொலைதூர கிராமம் ஒன்று சூடானின் எல்லையோரத்தில் அமைந்துள்ளது; இங்கிருக்கும் கிராமவாசி ஒருவர் சகோதரர்களின் உதவியால் பைபிளின் சமீப மொழிபெயர்ப்பை இப்போது வாசிக்கிறார். இவருடைய மனைவி புதுப்புது காவற்கோபுர பத்திரிகைகளை சுடச்சுட படிக்கிறார். பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை படித்து இவருடைய பிள்ளைகளும் பயன் அடைகிறார்கள்.b இவரைப் போன்று கிராமப்புறத்தில் வசிக்கும் அநேகர், பெருநகரங்களில் வசிக்கிற தங்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் பெற்றுக்கொள்ளும் அதே ஆன்மீக உணவைப் பெற்றுக்கொள்கிறார்கள். இது எல்லையில்லா மனதிருப்தியைத் தருகிறது.
[அடிக்குறிப்புகள்]
a அந்தச் சமயம் முதற்கொண்டு, டூயாலாவுக்கும் பங்குய் நகருக்கும் இடையிலான பாதையில் பாதுகாப்பைப் பலப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.
[பக்கம் 9-ன் தேசப்படங்கள்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
கேமரூன்
டூயாலா
மத்திய ஆப்பிரிக்க குடியரசு
பங்குய்
[பக்கம் 9-ன் படம்]
ஜோஸெஃப்
[பக்கம் 9-ன் படம்]
எமான்வெல்
[பக்கம் 10-ன் படம்]
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் கிளை அலுவலகம், பங்குய்
[பக்கம் 10-ன் படம்]
பங்குய் நகரில் ட்ரக்கிலிருந்து பெட்டிகள் இறக்கப்படுகின்றன