யெகோவாவைப்போல் மற்றவர்கள்மீது அக்கறை காட்டுகிறீர்களா?
‘கடவுள் உங்களை விசாரிக்கிறவரானபடியால், [அதாவது, உங்கள்மீது அக்கறை காட்டுகிறவரானபடியால்], உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.’ (1 பேதுரு 5:7) என்னே கனிவான வேண்டுகோள்! யெகோவா தேவன் தமது ஜனங்கள் ஒவ்வொருவர் மீதும் அக்கறை காட்டுகிறார். அவருடைய அரவணைக்கும் கரங்களில் நாம் பாதுகாப்பை உணரலாம்.
அவரைப் போலவே, நாமும் மற்றவர்கள்மீது அக்கறை கொள்வதோடு அதைச் செயலிலும் காட்ட வேண்டும். ஆயினும் நாம் அபூரணர்களாய் இருப்பதால், மற்றவர்கள்மீது அக்கறை காட்டும்போது ஏற்படுகிற ஆபத்துகளைப்பற்றியும் அறிந்திருக்க வேண்டும். அவற்றில் சிலவற்றைச் சிந்திப்பதற்கு முன், யெகோவா தமது ஜனங்கள்மீது அக்கறை காட்டுகிற சில வழிகளைக் காண்போம்.
ஒரு மேய்ப்பனின் உதாரணத்தைப் பயன்படுத்தி, கடவுள் காட்டும் அக்கறையை சங்கீதக்காரனாகிய தாவீது பின்வருமாறு வர்ணித்தார்: “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்[றுகிறார்]. . . . நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்.”—சங்கீதம் 23:1-4.
தாவீது ஒரு மேய்ப்பனாக இருந்ததால், மந்தையைப் பாதுகாக்க என்னவெல்லாம் செய்யவேண்டுமென்பது அவருக்குத் தெரிந்திருந்தது. ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளை சிங்கம், கரடி, ஓநாய் போன்ற கொடிய மிருகங்களிடமிருந்து பாதுகாப்பான். மந்தையைவிட்டு ஆடுகள் சிதறிப்போய்விடாதபடி பார்த்துக்கொள்வான். தொலைந்துபோன ஆடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பான். சோர்ந்துபோன ஆட்டுக்குட்டிகளைத் தன் மடியில் வைத்துச் சுமந்துசெல்வான். நோயுற்ற, காயமடைந்த ஆடுகளைக் கவனித்துக்கொள்வான். தினந்தோறும் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவான். அதற்காக, ஆடுகளின் ஒவ்வொரு அசைவையும் அவன் கட்டுப்படுத்துகிறான் என்று சொல்லிவிடமுடியாது. ஆடுகள் சுதந்திரமாக இருக்கின்றன, அதோடு பாதுகாப்பாகவும் இருக்கின்றன.
அப்படித்தான் யெகோவாவும் தமது ஜனங்கள்மீது அக்கறை காட்டுகிறார். அப்போஸ்தலன் பேதுரு அதை இவ்வாறு விளக்கினார்: ‘தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிறீர்கள்.’ இவ்வசனத்தில், “காக்கப்பட்டிருக்கிறீர்கள்” என்பது, “ஜாக்கிரதையாய் கவனிக்கப்பட்டு வருகிறீர்கள்” என்றே நேரடியாகப் பொருள்படுகிறது. (1 பேதுரு 1:5, NW அடிக்குறிப்பு) யெகோவாவுக்கு உண்மையான அக்கறை இருப்பதால், அவர் நம்மை எப்போதும் ஜாக்கிரதையாய் கவனிக்கிறார், நாம் உதவி கேட்கும்போதெல்லாம் நமக்கு உதவத் தயாராய் இருக்கிறார். என்றாலும், தெரிவுசெய்யும் சுயாதீனத்துடன் யெகோவா நம்மைப் படைத்திருப்பதால், நம்முடைய ஒவ்வொரு செயலிலும் தீர்மானத்திலும் அவர் தலையிடுவதில்லை. இவ்விஷயத்தில் நாம் எவ்வாறு யெகோவாவைப் பின்பற்றலாம்?
உங்கள் பிள்ளைகள்மீது அக்கறை காட்டுவதில் கடவுளைப் பின்பற்றுங்கள்
“பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்.” ஆகவே, தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும். (சங்கீதம் 127:4) பிள்ளைகள் தங்களுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் மனம்விட்டுச் சொல்லும்படி பெற்றோர் ஊக்கப்படுத்தி, அவர்கள் சொல்வதைக் கருத்தில்கொண்டு அவர்களை நடத்துவதும் பாதுகாத்துப் பராமரிப்பதில் உட்படலாம். பிள்ளைகளின் விருப்புவெறுப்புகளைச் சிறிதும் பொருட்படுத்தாமல், ‘இதைச் செய்,’ ‘அதைச் செய்யாதே’ என்று அவர்களது ஒவ்வொரு செயலையும் பெற்றோர்கள் கட்டுப்படுத்தினால் அது எப்படி இருக்கும்? ஆடுகளின் கழுத்தில் கயிற்றைக் கட்டி மேய்ப்பது போலவே இருக்கும். எந்தவொரு மேய்ப்பனும் தன் மந்தையை அவ்வாறு மேய்க்க மாட்டான்; யெகோவாவும் நம்மை அவ்வாறு மேய்ப்பதில்லை.
இது உண்மை என்பதை மாரிக்கோa ஒப்புக்கொள்கிறார்: “நான் ரொம்ப காலமாக என் பிள்ளைகளிடம், ‘இப்படித்தான் செய்ய வேண்டும்,’ ‘அப்படியெல்லாம் செய்யக் கூடாது’ என்றே எப்போதும் சொல்லிவந்தேன். அதுதான் ஒரு தாயாக எனது கடமை என்று நினைத்து வந்தேன். என் பிள்ளைகளை நான் ஒருபோதும் பாராட்டினதில்லை, அவர்களோடு மனந்திறந்து பேசினதுமில்லை.” மாரிக்கோவின் மகள் தன் நண்பர்களுடன் போனில் மணிக்கணக்காக அரட்டை அடிப்பாள், ஆனால் தன் அம்மாவோடு சுருக்கமாக நாலு வார்த்தைதான் பேசுவாள். “அப்புறம்தான் எனக்கு விஷயம் புரிந்தது” என்று தொடர்கிறார் மாரிக்கோ. “என் மகள், அவளுடைய நண்பர்களோடு பேசும்போது, ‘அது சரிதான்,’ ‘எனக்கும் அப்படித்தான் படுகிறது’ என்றெல்லாம் அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து பேசுவாள். அவள் உள்ளத்தில் இருக்கிற உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்துகொள்வதற்காக, அவளைப் போலவே நானும் பேச ஆரம்பித்தேன்; அதன் பிறகு சொல்லவா வேண்டும், நாங்கள் ரொம்ப நேரம் பேச ஆரம்பித்தோம், ரொம்பவே சுவாரஸ்யமாகவும் பேசி மகிழ்ந்தோம்.” நல்ல பேச்சுத்தொடர்பு எவ்வளவு முக்கியம் என்பதையே இந்த உதாரணம் வலியுறுத்துகிறது; ஒருவராய்ப் பேசிக்கொண்டே போகாமல், பரஸ்பர உரையாடலில் ஈடுபடுவதே நல்ல பேச்சுத்தொடர்பாகும்.
பிள்ளைகளின் உணர்வுகளையும் எண்ணங்களையும் மனம்விட்டுச் சொல்லும்படி பெற்றோர் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்; அதே சமயத்தில், பெற்றோர் தங்கள்மீது தனிக்கவனம் காட்டுவது தங்கள் பாதுகாப்புக்குத்தான் என்பதைப் பிள்ளைகளும் புரிந்துகொள்ள வேண்டும். பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று பைபிள் புத்திமதி கூறுகிறது; “உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்” என்று சொல்வதன் மூலம், அதற்கான காரணத்தையும் அது குறிப்பிடுகிறது. (எபேசியர் 6:1, 2) கீழ்ப்படிவதால் நன்மையே விளையுமென்று உறுதியாய் நம்புகிற பிள்ளைகள், பெற்றோர் சொல்லைத் தட்டுவதே இல்லை.
யெகோவாவின் மந்தைமீது அக்கறை காட்டுதல்
யெகோவா காட்டும் அக்கறை கிறிஸ்தவ சபையில் பளிச்சிடுகிறது. சபைக்குத் தலைவரான இயேசு கிறிஸ்து, தமது மந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை மூப்பர்களிடம் ஒப்படைத்திருக்கிறார். (யோவான் 21:15-17) கண்காணி என்பதற்கான கிரேக்க வார்த்தை, “கவனமாகப் பார்த்துக்கொள்” என்ற வினைச்சொல்லுடன் தொடர்புடையது. இதைச் செய்ய வேண்டிய விதத்தை வலியுறுத்துகையில், பேதுரு பின்வருமாறு மூப்பர்களை அறிவுறுத்துகிறார்: “உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.”—1 பேதுரு 5:2, 3.
ஆம், மூப்பர்களின் பொறுப்பு, மேய்ப்பர்களின் பொறுப்பைப் போன்றதே. ஆன்மீக ரீதியில் நோயுற்றவர்களுக்கு மூப்பர்கள் உதவி செய்து அவர்களைச் சீர்ப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வது மீண்டும் நீதியான நெறிகளின்படி வாழ அவர்களுக்கு உதவி செய்யும். சபை சம்பந்தமான காரியங்களை ஒழுங்கமைப்பது, சபை கூட்டங்களை நடத்துவது, சபையில் ஒழுங்கைக் காப்பது போன்ற காரியங்களைக் கவனிப்பதும் மூப்பர்களின் பொறுப்பாகும்.—1 கொரிந்தியர் 14:33.
என்றாலும், மேற்கூறப்பட்ட பேதுருவின் வார்த்தைகள், ஓர் ஆபத்தைக் குறித்தும், அதாவது, சபையை மூப்பர்கள் ‘இறுமாப்பாய் ஆளும்’ ஆபத்தைக் குறித்தும் எச்சரிக்கின்றன. ஒரு மூப்பர் தேவையற்ற சட்டங்களைப் போடுகிறாரென்றால், அவர் சபையை ‘இறுமாப்பாய் ஆளுகிறார்’ என்பதை ஒருவிதத்தில் காட்டுகிறார். மந்தையைக் காக்கும் கடமையுணர்வு மேலோங்கும்போது ஒரு மூப்பர் மிதமிஞ்சிப் போய்விடலாம். கிழக்கத்திய நாடுகளைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகளது சபை ஒன்றில், கூட்டங்களுக்கு வருவோர் ஒருவரையொருவர் எப்படி வரவேற்க வேண்டும், அதாவது யார் முதலில் பேச வேண்டும் என்று மூப்பர்கள் சட்டங்களை இயற்றினார்கள்; சபையில் சமாதானம் நிலவ இச்சட்டங்கள் உதவுமென்பதே அவர்களது நம்பிக்கை. நல்ல உள்ளெண்ணங்களோடுதான் சட்டங்களை அவர்கள் உருவாக்கினார்கள்; ஆனாலும், யெகோவா அக்கறை காட்டுகிறபடியே சபையார்மீது அந்த மூப்பர்கள் அக்கறை காட்டினார்களா? இதுசம்பந்தமாக, அப்போஸ்தலன் பவுலின் மனோபாவத்தை பின்வரும் வார்த்தைகளிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்: “உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்; விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே.” (2 கொரிந்தியர் 1:24) ஆம், யெகோவா தம் ஜனங்களை நம்புகிறார்.
ஆகவே, அக்கறையுள்ள மூப்பர்கள், பைபிள் சொல்லாத சட்டங்களை உருவாக்குவதைத் தவிர்க்கிறார்கள். அதோடு, மற்றவர்களின் இரகசியத்தை வெளியில் சொல்லாமல் இருப்பதன் மூலமும் உண்மையான கரிசனை காட்டுகிறார்கள். “[மற்றவர்களின்] இரகசியத்தை வெளிப்படுத்தாதே” என்று கடவுள் கொடுக்கிற எச்சரிக்கைக்கு அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.—நீதிமொழிகள் 25:9.
அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அடங்கிய சபையை அப்போஸ்தலன் பவுல் மனித உடலுக்கு ஒப்பிட்டுப் பின்வருமாறு சொன்னார்: “சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் . . . இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.” (1 கொரிந்தியர் 12:12, 25, 26) ஆகவே, கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்.—பிலிப்பியர் 2:4.
‘ஒருவருக்கொருவர் அக்கறையாய்’ இருப்பதை உண்மைக் கிறிஸ்தவர்கள் எவ்வாறு வெளிக்காட்டலாம்? சபையின் மற்ற அங்கத்தினர்கள்மீது தங்களுக்குக் கரிசனை இருப்பதை, ஜெபங்களின் மூலமாகவும், உதவி தேவைப்படுவோருக்கு நடைமுறையான உதவிகளைச் செய்வதன் மூலமாகவும் அவர்கள் காட்டலாம். இது, மற்றவர்கள் தங்களிடமுள்ள நல்ல அம்சங்களை வெளிக்காட்ட உதவுகிறது. அப்படிப்பட்ட கரிசனை டாடாட்டாக்கா என்ற ஒரு கிறிஸ்தவருக்கு எவ்வாறு உதவியது என்பதைக் கவனியுங்கள். முழுக்காட்டுதல் பெற்றபோது அவருக்கு 17 வயது. அவருடைய குடும்பத்தில் வேறு யாரும் சத்தியத்தில் இருக்கவில்லை. அவர் விவரிப்பதாவது: “எங்கள் சபையிலிருந்த ஒரு குடும்பத்தார் அடிக்கடி என்னைச் சாப்பாட்டிற்கு அழைத்தார்கள்; ஏதாவது விசேஷ நிகழ்ச்சிக்கு மற்றவர்களை அழைக்கும்போது என்னையும் அழைத்தார்கள். தினமும் காலையில் நான் பள்ளிக்குச் செல்கிற வழியில் பெரும்பாலும் அவர்களுடைய வீட்டிற்குப்போய் தினவசனத்தை அவர்களோடு கலந்தாலோசித்தேன். பள்ளியில் நான் எதிர்ப்பட்ட பிரச்சினைகளைச் சமாளிப்பது சம்பந்தமாக அவர்கள் எனக்கு ஆலோசனை தந்தார்கள், அந்தப் பிரச்சினைகளைக் குறித்து என்னோடு சேர்ந்து ஜெபித்தார்கள். கொடுக்கும் மனப்பான்மையை இந்தக் குடும்பத்தாரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்.” தான் கற்றுக்கொண்டவற்றை டாடாட்டாக்கா இப்போது கடைப்பிடித்து வருகிறார். எப்படி? யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்கள் ஒன்றில் சேவை செய்வதன் மூலம்.
மற்றவர்கள்மீது அக்கறை காட்டுவது சம்பந்தமாக, இன்னொரு முக்கியமான ஓர் ஆபத்தைக் குறித்தும் அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். ‘அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும், தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயும்’ இருந்த சில பெண்களை அவர் குறிப்பிட்டார். (1 தீமோத்தேயு 5:13) மற்றவர்கள்மீது அக்கறை காட்டுவது நல்லதுதான்; இருந்தாலும் அவர்களுடைய சொந்த விஷயத்தில் வீணாகத் தலையிடும் அளவுக்குச் சென்றுவிடாதபடி நாம் கவனமாய் இருக்க வேண்டும். நாம் இப்படித் தலையிடுகிறோமா என எப்படிக் கண்டுகொள்ளலாம்? நாம் ‘தகாத காரியங்களைப் பேசுவதிலிருந்தே’ கண்டுகொள்ளலாம்; அதாவது, பிறரைக் குற்றஞ்சாட்டும் பாணியில் பேசுவதிலிருந்தே கண்டுகொள்ளலாம்.
சொந்தக் காரியங்களை எவ்வாறு செய்கிறார்கள், எந்தப் பொருள்களை விரும்பிச் சாப்பிடுகிறார்கள், ஆரோக்கியமான பொழுதுபோக்குகளில் எவற்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள் போன்ற விஷயங்களில் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பைபிள் நியமங்களை மீறாத வரையில், தங்கள் விருப்பப்படி தீர்மானம் எடுக்க ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு. ரோம கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு அறிவுரை வழங்கினார்: “இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. . . . சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.” (ரோமர் 14:13, 19) ஆகவே, சபையில் நாம் ஒருவருக்கொருவர் உள்ளப்பூர்வமாகக் கொண்டிருக்கிற கரிசனையை, மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் அநாவசியமாகத் தலையிடுவதன் மூலம் அல்ல, அவர்களுக்கு உதவத் தயாராயிருப்பதன் மூலமே காட்டவேண்டும். நாம் ஒருவருக்கொருவர் இவ்வாறு அக்கறை காட்டினால், குடும்பத்திலும் சரி சபையிலும் சரி, அன்பும் ஐக்கியமும் செழித்தோங்குவது நிச்சயம்.
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 19-ன் படம்]
பாராட்டு தெரிவித்துப் பரிவோடு பேசி உங்கள் பிள்ளைகளின் உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்துகொள்ளுங்கள்