எர்ன்ஸ்ட் க்ளூக்கின் இமாலயப் பணி
முன்னூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர் எர்ன்ஸ்ட் க்ளூக் ஒரு பணியில் இறங்கினார். தனக்குத் தெரியாத ஒரு மொழியில் பைபிளை மொழிபெயர்க்க அவர் முடிவு செய்தார். அது சரித்திரத்தில் வெகுசிலரே செய்யத் துணிந்த பணியாகும்.
ஜெர்மனியிலுள்ள ஹாலா நகரத்திற்கு அருகில் அமைந்த வெட்டின் என்ற சிற்றூரில் சுமார் 1654-ஆம் ஆண்டில் க்ளூக் பிறந்தார். அவருடைய அப்பா லூத்தரன் பாஸ்டராக இருந்தார். க்ளூக்கின் குடும்பத்தினர் மதப் பற்றுள்ளவர்களாக இருந்தார்கள். அதனால் கடவுளைப்பற்றி கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் சிறுவயதிலேயே அவருக்கு ஏற்பட்டது. தனது 21-ஆம் வயதில் இறையியல் படிப்பை ஜெர்மனியில் முடித்துவிட்டு லாட்வியா என இப்போது அழைக்கப்படுகிற நாட்டுக்கு அவர் குடிபெயர்ந்தார். அச்சமயத்தில், அங்கிருந்த பெரும்பாலான மக்களுக்கு பள்ளி செல்லும் வாய்ப்பே கிடைக்கவில்லை, அதோடு அவர்களுடைய மொழியில் சொற்ப புத்தகங்களே இருந்தன. க்ளூக் இவ்வாறு எழுதினார்: “என் இளவயதில் இந்த நாட்டுக்குள் காலெடுத்து வைத்தபோது, லாட்வியன் சர்ச்சில் பைபிள் இல்லையென்ற பெருங்குறையைத்தான் முதலில் கவனித்தேன். . . . இந்த [லாட்வியன்] மொழியைப் படித்து அதில் புலமைபெற வேண்டுமென்று கடவுள் முன் தீர்மானம் செய்ய அது என்னைத் தூண்டியது.” ஆகவே, அந்நாட்டு மக்களுக்கு லாட்வியன் மொழியில் பைபிளை மொழிபெயர்த்துத் தர வேண்டுமென்று அவர் உறுதிபூண்டார்.
மொழிபெயர்ப்புக்குத் தயாராதல்
க்ளூக் குடியேறிய பகுதி அப்போது லிவோனியா என்றழைக்கப்பட்டது; அது ஸ்வீடனின் ஆதிக்கத்தில் இருந்தது. யோஹானஸ் ஃபிஷெர், ஸ்வீடன் அரசரின் பிரதிநிதியாக இருந்தார். அவர் அந்நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துவதோடுகூட, பணம் சம்பாதிக்கவும் ஆசைப்பட்டார். லாட்வியன் மொழியில் பைபிளை மொழிபெயர்ப்பது குறித்து ஃபிஷெரிடம் க்ளூக் தெரிவித்தார். தலைநகர் ரிகாவில் ஃபிஷெருக்குச் சொந்தமான ஓர் அச்சகம் இருந்தது. லாட்வியன் மொழியில் பைபிளை அச்சடிப்பதன் மூலம் கல்விப் பணியில் இன்னுமதிகத்தைச் சாதிக்க முடியுமென்றும் அதே சமயத்தில் கொழுத்த லாபத்தைச் சம்பாதிக்க முடியுமென்றும் ஃபிஷெர் நம்பினார். பைபிளை மொழிபெயர்க்க அனுமதியளிக்கும்படி ஸ்வீடன் நாட்டு அரசரான பதினொன்றாம் சார்லஸிடம் ஃபிஷெர் கேட்டார். அரசர் அதற்கு அனுமதி வழங்கியதோடு நிதியுதவி அளிக்கவும் முன்வந்தார். ஆகஸ்ட் 31, 1681-ல் அத்தீர்மானத்தில் அரசர் கையெழுத்திட்டு, மொழிபெயர்க்கும் வேலையைத் துவங்க அனுமதியளித்தார்.
இதற்கிடையே, மொழிபெயர்ப்பு வேலைக்கு க்ளூக் தயாராகிக் கொண்டிருந்தார். அவர் ஜெர்மனியில் பிறந்து வளர்ந்து அங்கேயே படித்திருந்ததால், மார்டின் லூதருடைய மொழிபெயர்ப்பை அடிப்படையாக வைத்து லாட்வியன் மொழியில் பைபிளை மொழிபெயர்த்திருக்கலாம். ஆனால், தன்னால் முடிந்த மிகச் சிறந்த மொழிபெயர்ப்பை உருவாக்க க்ளூக் விரும்பினார். எனவே, மூலமொழிகளான எபிரெயுவிலிருந்தும் கிரேக்கிலிருந்தும் நேரடியாக மொழிபெயர்க்கத் தீர்மானித்தார். ஆனால் இந்த இரண்டு மொழிகளையும் க்ளூக் ஓரளவுக்குத்தான் அறிந்திருந்தார். எனவே எபிரெயு, கிரேக்கு மொழிகளை நன்கு கற்பதற்காக ஜெர்மனியிலுள்ள ஹேம்பர்க்கிற்குச் சென்றார். அங்கே யானிஸ் ரேட்டர்ஸ் என்ற லிவோனிய பாதிரி, பைபிள் எழுதப்பட்ட கிரேக்க மொழியையும் லாட்வியன் மொழியையும் கற்றுக்கொள்ள அவருக்கு உதவியதாகத் தெரிகிறது.
வருடக்கணக்கில் உழைத்ததும் காத்திருந்ததும்
1680-ஆம் ஆண்டு க்ளூக் இம்மொழிகளில் புலமைபெற்று லாட்வியாவுக்குத் திரும்பினார். அங்கே பாஸ்டராக சேவை செய்யத் துவங்கினார். சீக்கிரத்தில் தன்னுடைய மொழிபெயர்ப்பு வேலையை ஆரம்பித்தார். 1683-ஆம் வருடம் அலூக்ஸ்னியைச் சேர்ந்த பெரிய பங்கிற்குட்பட்ட சர்ச்சில் பாஸ்டராக புதிய நியமிப்பைப் பெற்றார். அவருடைய மொழிபெயர்ப்பு வேலையும் இந்த இடத்தில்தான் நடைபெற்றது.
அச்சமயத்தில், பைபிள் சொற்றொடர்கள், கருத்துகள் பலவற்றிற்கு இணையான பதங்கள் லாட்வியன் மொழியில் இருக்கவில்லை. எனவே, க்ளூக் தன்னுடைய மொழிபெயர்ப்பில் ஜெர்மன் வார்த்தைகள் சிலவற்றைப் பயன்படுத்தினார். பைபிளை லாட்வியன் மொழியில் சிறப்பாக மொழிபெயர்க்க அவர் அரும்பாடுபட்டார். அவருடைய மொழிபெயர்ப்பு உயர்தரமானது என்பதை அறிஞர்களே ஒப்புக்கொள்கிறார்கள். க்ளூக் புதுப்புது வார்த்தைகளையும் புனைந்தார். அப்படிப்பட்ட அநேக வார்த்தைகள் இன்றும்கூட லாட்வியன் மொழியில் பரவலாகப் புழக்கத்தில் உள்ளன. “மாதிரி,” “விருந்து,” “இராட்சதன்,” “உளவு பார்த்தல்,” “சான்றளித்தல்” ஆகிய லாட்வியன் சொற்கள் இதில் அடக்கம்.
மொழிபெயர்ப்பு வேலை எந்தளவுக்கு முன்னேறியுள்ளது என்பதைக் குறித்து ஸ்வீடன் அரசருக்கு யோஹானஸ் ஃபிஷெர் அவ்வப்போது தகவல் தெரிவித்தார். க்ளூக் 1683-ஆம் வருடத்தில் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை மொழிபெயர்த்து முடித்ததாக ஃபிஷெரும் அரசரும் எழுதிக்கொண்ட கடிதங்கள் தெரிவிக்கின்றன. க்ளூக் 1689-ஆம் ஆண்டில் முழு பைபிளையும் மொழிபெயர்த்து முடித்தார். எட்டே வருடங்களில் இந்த இமாலயப் பணியை நிறைவுசெய்தார்.a மொழிபெயர்க்கப்பட்ட பைபிளைப் பிரசுரிப்பதற்கோ அதிக காலம் எடுத்தது. இருந்தாலும் 1694-ஆம் ஆண்டில் அவருடைய லட்சியக்கனவு நனவானது. லாட்வியன் பைபிளைப் பொதுமக்களுக்கு விநியோகிக்க அரசு அனுமதி அளித்தது.
இந்த பைபிள் மொழிபெயர்ப்பு முழுக்கமுழுக்க க்ளூக்கின் கைவண்ணத்தில் உருவானதுதானா என்பதைக் குறித்து சரித்திராசிரியர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். லூத்தரின் மொழிபெயர்ப்பை அவர் ஆராய்ந்து பார்த்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அதோடு, லாட்வியன் மொழியில் ஏற்கெனவே இருந்த பைபிள் பகுதிகள் சிலவற்றில் ஒருசில மாற்றங்களைச் செய்து தன்னுடைய மொழிபெயர்ப்பில் சேர்த்திருப்பார். இருந்தபோதிலும், அவ்வாறு சேர்க்கப்பட்ட பகுதிகள் அற்பசொற்பமே. வேறு யாராவது அவருடன் சேர்ந்து மொழிபெயர்த்தார்களா? மொழிபெயர்ப்பு வேலையின்போது ஒருவரைத் தனக்கு உதவியாளராக க்ளூக் வைத்துக்கொண்டார் என்பது உண்மையே; பிழைகளைத் திருத்துவதற்கும் மொழிபெயர்ப்பின் தரத்தைச் சரிபார்ப்பதற்கும் வேறுசிலர் உதவினார்கள் என்பதும் உண்மையே. இருந்தபோதிலும், இவர்கள் யாருமே மொழிபெயர்ப்பில் நேரடியாக ஈடுபட்டதாகத் தெரியவில்லை. எனவே, மொழிபெயர்ப்பை முழுக்கமுழுக்க க்ளூக்தான் செய்திருப்பார் எனத் தெரிகிறது.
க்ளூக்கின் மொழிபெயர்ப்பு, லாட்விய மொழிக்குரிய எழுத்து நடையின் முன்னேற்றத்தில் ஒரு மைல்கல்லாக இருந்தது. ஆனால் அதைவிட மிக முக்கியமான நன்மையும் விளைந்திருக்கிறது. அது என்னவெனில், லாட்விய மக்கள் தங்களது தாய்மொழியில் கடவுளுடைய வார்த்தையைப் படித்து அதிலுள்ள உயிரளிக்கும் போதனைகளைப் பெற முடிந்திருக்கிறது. எர்ன்ஸ்ட் க்ளூக் தங்களுக்குச் செய்த உதவியை அந்நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை. எப்படி? 300-க்கும் அதிகமான ஆண்டுகளாக அலூக்ஸ்னி மக்கள் க்ளிக்கா ஆஸாலி அதாவது க்ளூக்கின் ஓக் மரங்கள் என்றழைக்கப்படுகிற இரண்டு ஓக் மரங்களை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்திருக்கிறார்கள். லாட்வியன் பைபிளின் நினைவாக க்ளூக் அவற்றை நட்டிருந்தார். பல்வேறு பைபிள் மொழிபெயர்ப்புகளை உடைய ஒரு சிறிய அருங்காட்சியகம் அலூக்ஸ்னியில் உள்ளது; அதில் க்ளூக் மொழிபெயர்த்த பைபிளின் முதல் அச்சுப்பிரதிகளில் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. அதோடு, அலூக்ஸ்னியின் வீர மரபுச்சின்னத்தில் அந்த பைபிளின் வடிவமும் 1689 என்ற வருடமும் காணப்படுகின்றன; க்ளூக் அந்த பைபிளை மொழிபெயர்த்து முடித்த வருடமே அது.
அவருடைய பிற்காலப் பணி
லாட்வியாவிற்குத் திரும்பியவுடனேயே க்ளூக் ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார். ரஷ்ய மொழியில் பைபிளை மொழிபெயர்க்க வேண்டுமென்ற தனது மற்றொரு ஆசையை நிறைவேற்றி வருவதாக 1699-ல் அவர் எழுதினார். லாட்வியன் பைபிளைத் திருத்தியமைக்கும் பணியைத் துவங்கியிருந்ததாக 1702-ஆம் ஆண்டில் எழுதிய ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிட்டார். ஆனால், பைபிள் மொழிபெயர்ப்பிற்குச் சூழ்நிலைகள் முன்புபோல் சாதகமாக இருக்கவில்லை. பல வருடங்களாக அமைதிப் பூங்காவாய்த் திகழ்ந்த லாட்வியா இப்போது யுத்தக்களமாய் மாறியது. 1702-ஆம் ஆண்டு ரஷ்யப் படைகள் லாட்வியாவிலுள்ள ஸ்வீடியர்களைத் தோற்கடித்து அலூக்ஸ்னியைக் கைப்பற்றின. க்ளூக்கும் அவருடைய குடும்பத்தாரும் ரஷ்யாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள்.b கொந்தளிப்புமிக்க அச்சமயத்தில், தான் எழுதி வைத்திருந்த புதிய லாட்வியன் பைபிளையும் ரஷ்ய மொழிபெயர்ப்பையும் க்ளூக் இழந்துவிட்டார். 1705-ம் ஆண்டு மாஸ்கோவில் அவர் காலமானார்.
லாட்வியன் மற்றும் ரஷ்ய மொழியின் பிந்தைய பதிப்புகள் காணாமல் போனது மாபெரும் இழப்பாக இருந்தது. இன்றுவரை லாட்வியன் பைபிளை வாசிக்கும் எல்லாருமே க்ளூக்கின் மூல மொழிபெயர்ப்பிலிருந்து பயனடைகிறார்கள்.
சாமானிய மக்களின் மொழிகளில் பைபிளை மொழிபெயர்க்கும் இமாலயப் பணியில் க்ளூக்கைப்போல் ஈடுபட்டிருப்போர் பலர். அதன் விளைவாக, உலகிலுள்ள கிட்டத்தட்ட எல்லா மொழியினராலும் கடவுளுடைய வார்த்தையை வாசிக்க முடிகிறது; அதன் வாயிலாக ஈடிணையற்ற ஜீவத்தண்ணீரைப் பருக முடிகிறது. ஆம், 2,000-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கும் பைபிள் பதிப்புகளின் மூலம் பாரெங்குமுள்ள மக்களுக்கு யெகோவா தம்மைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
[அடிக்குறிப்புகள்]
a இவருடைய பணியோடு ஒப்பிடுகையில், 1611-ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட ஆங்கில ஆத்தரைஸ்டு வர்ஷன், அதாவது கிங் ஜேம்ஸ் வர்ஷன், ஏழாண்டு காலம் கடுமையாக உழைத்த 47 அறிஞர்கள் அடங்கிய குழுவினரால் மொழிபெயர்க்கப்பட்டது.
b க்ளூக் மறைந்த பின்பு அவருடைய வளர்ப்பு மகள் ரஷ்யப் பேரரசரான மகா பீட்டரை மணந்தார். 1725-ஆம் ஆண்டு பீட்டர் இறந்தபிறகு, முதலாம் கேத்தரின் என்ற பெயரில் ரஷ்யப் பேரரசி ஆனார்.
[பக்கம் 13-ன் படம்]
க்ளூக்கின் மொழிபெயர்ப்பு
[பக்கம் 14-ன் படம்]
பைபிளை க்ளூக் மொழிபெயர்த்த நகரத்தில் யெகோவாவின் சாட்சிகள் பைபிளைக் கற்பிக்கிறார்கள்