நன்றியுணர்வைத் தொடர்ந்து வளர்த்திடுங்கள்
“தேவனே உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.”—சங்கீதம் 139:17.
1, 2. கடவுளுடைய வார்த்தைக்கு நாம் ஏன் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும், சங்கீதக்காரன் தன் நன்றியுணர்வை எப்படி வெளிக்காட்டினார்?
யாரும் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. அது என்ன? “மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை” பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா கண்டெடுத்தார். எருசலேமிலிருந்த யெகோவாவின் ஆலயத்தைப் பழுதுபார்க்கும் வேலை நடந்துகொண்டிருந்தபோது அதை அவர் கண்டெடுத்தார். சுமார் 800 வருடங்களுக்கு முன்பு எழுதி முடிக்கப்பட்ட மூலப்பிரதிதான் அது! கடவுள் பக்திமிக்க யோசியா ராஜா அதைப் பார்த்தபோது என்ன செய்திருப்பார் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? சந்தேகமின்றி, அவர் அதைப் பொக்கிஷமாகப் போற்றினார்; அத்துடன் செயலராய் இருந்த சாப்பானிடம் அதைக் கொடுத்து, உடனே வாசிக்கச் சொல்லிக் கேட்டார்.—2 நாளாகமம் 34:14-18.
2 இன்று கோடிக்கணக்கானோர் கடவுளுடைய வார்த்தையை முழுமையாகவோ, பகுதியாகவோ வாசிக்க முடிகிறது. அதற்காக, வேதாகமம் மதிப்பற்றது என்றோ முக்கியமற்றது என்றோ சொல்லிவிட முடியுமா? அப்படிச் சொல்லிவிட முடியாது! உண்மை என்னவென்றால், சர்வ வல்லவரின் எண்ணங்கள் அதில் உள்ளன; அவை நமது நன்மைக்காகவே எழுதப்பட்டுள்ளன. (2 தீமோத்தேயு 3:16) கடவுளுடைய வார்த்தையைக் குறித்து தன் உணர்வுகளை வெளிப்படுத்தி சங்கீதக்காரனாகிய தாவீது இவ்வாறு எழுதினார்: “தேவனே உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.”—சங்கீதம் 139:17.
3. ஆன்மீக விஷயங்களில் தாவீது கரைகண்டவராய் இருந்ததை எது காட்டுகிறது?
3 யெகோவாவிடமும், அவருடைய வார்த்தையிடமும், மெய் வணக்கம் தழைத்தோங்குவதற்கு யெகோவா செய்திருந்த எல்லா ஏற்பாடுகளிடமும் தாவீதுக்கு இருந்த மதிப்பு மங்கவே இல்லை. தாவீது இயற்றிய ஏராளமான, இனிய சங்கீதங்களே அவருடைய உணர்வுகளை வெளிப்படுத்தின. உதாரணமாக, சங்கீதம் 27:4-ல் அவர் இவ்வாறு எழுதினார்: “கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.” “ஆராய்ச்சி செய்யும்படியாக” என்பதற்கு மூல மொழியான எபிரெயுவில், தியானித்துக்கொண்டே இருப்பது, ஆழ்ந்து ஆராய்வது, மகிழ்ச்சியோடும் பிரியத்தோடும் விருப்பத்தோடும் பார்ப்பது என்று அர்த்தமாகும். ஆன்மீக விஷயங்களில் தாவீது கரைகண்டவராக இருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, யெகோவா செய்திருந்த ஆன்மீக ஏற்பாடுகளுக்கு அவர் மிகவும் நன்றியுள்ளவராக இருந்தார், கடவுள் வெளிப்படுத்திய ஆன்மீக சத்தியத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் இன்பம் கண்டார். இவ்வாறு, பின்பற்றத்தக்க முன்மாதிரியை வைத்தார்.—சங்கீதம் 19:7-11.
பைபிள் சத்தியத்தை அறிந்திருப்பதற்கு நன்றியுள்ளவர்களாய் இருங்கள்
4. இயேசு ‘[பரிசுத்த] ஆவியிலே களிகூர’ காரணமாயிருந்தது எது?
4 கடவுளுடைய வார்த்தையை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு உலக கல்வியோ புத்திக்கூர்மையோ தேவையில்லை; இவையெல்லாம் பெருமையை வித்திட்டு வளர்ப்பவையே. மாறாக, யெகோவாவின் தகுதியற்ற தயவே மிக அவசியம். இதை அவர் தாழ்மையான, நல்மனமுள்ள, ஆன்மீக உணர்வுள்ள ஆட்களுக்குக் காட்டுகிறார். (மத்தேயு 5:3; 1 யோவான் 5:20) அபூரண மனிதர்களில் சிலரது பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருந்ததை இயேசு எண்ணிப்பார்த்து, “[பரிசுத்த] ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்” என்றார்.—லூக்கா 10:17-21.
5. தங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட ராஜ்ய சத்தியங்களை சீஷர்கள் ஏன் அற்பமாகக் கருதிவிடக் கூடாதிருந்தது?
5 இதயப்பூர்வமான அந்த ஜெபத்தைச் சொன்னபிறகு, இயேசு தம் சீஷர்களிடம் திரும்பி இவ்வாறு கூறினார்: “நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள். அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” ஆம், தங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட ஒப்பற்ற ராஜ்ய சத்தியங்களை அற்பமாகக் கருதிவிடாதபடி தம்மை உண்மையோடு பின்பற்றியவர்களை இயேசு ஊக்கப்படுத்தினார். கடவுளுடைய பூர்வகால ஊழியர்களுக்கு இச்சத்தியங்கள் வெளிப்படுத்தப்படவில்லை; இயேசுவின் காலத்திலிருந்த “ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும்கூட” வெளிப்படுத்தப்படவில்லை!—லூக்கா 10:23, 24.
6, 7. (அ) கடவுளைப் பற்றிய சத்தியங்களுக்காக நாம் நன்றியுடன் இருப்பதற்கு என்ன காரணங்கள் உள்ளன? (ஆ) உண்மை மதத்திற்கும் பொய் மதத்திற்கும் இடையே என்ன முரண்பாடு காணப்படுகிறது?
6 நம் காலத்தில், கடவுளைப் பற்றிய சத்தியங்களுக்காக நாம் நன்றியுடன் இருப்பதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன. ஏனெனில், தம்முடைய மக்கள் தம் வார்த்தையை ஆழமாகப் புரிந்துகொள்ள “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் மூலமாக யெகோவா உதவியிருக்கிறார். (மத்தேயு 24:45, NW; தானியேல் 12:10) முடிவுகாலத்தைக் குறித்து தானியேல் தீர்க்கதரிசி இவ்வாறு எழுதினார்: “அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம்.” (தானியேல் 12:4) கடவுளைப்பற்றிய அறிவு இன்று ‘பெருகியிருக்கிறது’ என்பதையும் யெகோவாவின் ஊழியர்கள் ஆன்மீக உணவால் அபரிமிதமாக போஷிக்கப்படுகிறார்கள் என்பதையும் நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா?
7 கடவுளுடைய ஜனங்களின் ஆன்மீக செழுமைக்கும், மகா பாபிலோனின் மதக் குழப்பத்திற்கும் இடையே எவ்வளவு முரண்பாடு! இதனால், பொய் மதத்தில் நம்பிக்கை இழந்து, வெறுப்படைந்திருக்கும் அநேகர் உண்மை வணக்கத்திற்குத் திரும்புகிறார்கள். அவர்கள், செம்மறி ஆட்டைப் போன்றவர்கள்; ‘[மகா பாபிலோனின்] பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்க’ விரும்புகிறவர்கள். அப்படிப்பட்ட எல்லாரும் உண்மையான கிறிஸ்தவ சபைக்குள் வரும்படி யெகோவாவும் அவருடைய ஊழியர்களும் அழைக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 18:2-4; 22:17.
நன்றியுள்ளவர்கள் கடவுளிடம் சேருகிறார்கள்
8, 9. ஆகாய் 2:7-ல் உள்ள வார்த்தைகள் இன்று எவ்வாறு நிறைவேறி வருகின்றன?
8 தம்முடைய அடையாளப்பூர்வ ஆலயத்தைக் குறித்து யெகோவா இவ்வாறு முன்னுரைத்தார்: ‘சகல தேசங்களையும் அசையப் பண்ணுவேன், சகல தேசங்களிலும் உள்ள விரும்பப்பட்டவர்கள் வருவார்கள்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப் பண்ணுவேன்.’ (ஆகாய் 2:7, NW) ஆகாயின் காலத்தில், கடவுளுடைய ஜனங்களில் தாயகம் திரும்பியவர்கள் எருசலேமிலிருந்த ஆலயத்தை மீண்டும் கட்டிய சமயத்தில் இந்தத் தீர்க்கதரிசனம் அற்புதமாக நிறைவேறியது. ஆகாய் கூறிய வார்த்தைகள், யெகோவாவின் மாபெரும் ஆன்மீக ஆலயம் சம்பந்தமாக இன்னொரு விதத்தில் இன்று நிறைவேறி வருகின்றன.
9 இந்த அடையாளப்பூர்வ ஆலயத்தில் கடவுளை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்குவதற்காக லட்சக்கணக்கானோர் ஏற்கெனவே வந்திருக்கிறார்கள். அத்துடன், ‘சகல தேசங்களிலும் உள்ள விரும்பப்பட்ட’ மக்கள், ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்துகொண்டே இருக்கிறார்கள். (யோவான் 4:23, 24) உதாரணமாக, 2006 ஊழிய ஆண்டுக்கான உலகளாவிய அறிக்கையின்படி, 2,48,327 பேர் யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்திருப்பதற்கு அடையாளமாக முழுக்காட்டுதல் பெற்றார்கள். இது, ஒவ்வொரு நாளும் சராசரியாக 680 புதியவர்கள் வந்ததைக் குறிக்கிறது! சத்தியத்தின் மீது அவர்களுக்குள்ள விருப்பமும், ராஜ்ய பிரஸ்தாபிகளாக யெகோவாவுக்குச் சேவை செய்ய அவர்களுக்குள்ள ஆவலும், அவர்களைக் கடவுள் இழுத்திருக்கிறார் என்பதற்கே அத்தாட்சி அளிக்கின்றன.—யோவான் 6:44, 65.
10, 11. பைபிள் சத்தியத்தை மக்கள் எவ்வாறு பொக்கிஷமாகப் போற்றுகிறார்கள் என்பதற்கு ஓர் அனுபவத்தைச் சொல்லுங்கள்.
10 இப்படிப்பட்ட நல்மனமுள்ளவர்களில் அநேகர் சத்தியத்தினிடம் கவரப்பட்டதற்குக் காரணம், “நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தை” கண்டதுதான். (மல்கியா 3:18) ஓர் அனுபவத்தைக் கவனியுங்கள். வேன், வர்ஜின்யா என்ற தம்பதியர் புராட்டஸ்டன்ட் சர்ச்சைச் சேர்ந்தவர்களாய் இருந்தார்கள். அவர்களுக்கு நிறைய கேள்விகள் இருந்தன, அவற்றுக்குத் திருப்தியான பதில்கள் கிடைக்கவில்லை. அவர்கள் போரை வெறுத்தார்கள்; எனவே, போர்வீரர்களையும் போராயுதங்களையும் மத குருமாரே ஆசீர்வதிப்பதைக் கண்டபோது அவர்கள் குழம்பிப்போனதுடன் வேதனையும் அடைந்தார்கள். அவர்கள் முதுமையடைந்தபோது, சர்ச்சிலுள்ளவர்கள் யாரும் தங்களைப் பொருட்படுத்தவில்லை என்பதாகவே உணர்ந்தார்கள்; இத்தனைக்கும் வர்ஜின்யா பல வருடங்களாக சர்ச்சில் சன்டே கிளாஸ் நடத்தி வந்திருந்தார். “யாருமே எங்களை வந்து பார்க்கவில்லை, ஆன்மீக ரீதியில் நாங்கள் எப்படி இருக்கிறோம் என்றுகூட யாரும் கவலைப்படவில்லை” என்றார்கள். “சர்ச்சுக்கு வேண்டியதெல்லாம் எங்கள் பணம்தான். என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை” என்றும் சொன்னார்கள். போதாக்குறைக்கு, ஓரினச்சேர்க்கைக்கு அவர்களுடைய சர்ச் ‘பச்சைக்கொடி’ காட்டியபோது செய்வதறியாமல் ரொம்பவே தவித்தார்கள்.
11 இதற்கிடையில், வேன்-வர்ஜின்யா தம்பதியரின் பேத்தியும் பின்னர் மகளும் யெகோவாவின் சாட்சிகளானார்கள். முதலில் வேன்-வர்ஜின்யா தம்பதியர் சற்று நிலைகுலைந்துதான் போனார்கள், ஆனால் பின்பு தங்கள் மனதை மாற்றிக்கொண்டு அவர்களும் பைபிள் படிப்பிற்கு ஒப்புக்கொண்டார்கள். வேன் இவ்வாறு கூறினார்: “மூன்றே மாதங்களில் பைபிளிலிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டோம்; கடந்த 70 வருடங்களுக்கும் மேல் கற்றிருந்ததைவிட அதிகத்தைக் கற்றுக்கொண்டோம்! அதற்கு முன், கடவுளுடைய பெயர் யெகோவா என எங்களுக்குத் தெரியவே தெரியாது. ராஜ்யத்தைப் பற்றியோ, பூங்காவனப் பரதீஸ் பூமியைப் பற்றியோ எங்களுக்கு ஒன்றுமே தெரியாது.” நல்மனமுள்ள இந்தத் தம்பதியர் சீக்கிரத்திலேயே கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வரவும், ஊழியத்தில் கலந்துகொள்ளவும் ஆரம்பித்தார்கள். “சத்தியத்தைப்பற்றி ஒவ்வொருவருக்கும் சொல்ல விரும்புகிறோம்” என்றார் வர்ஜின்யா. இருவரும் 80 வயதைத் தாண்டிவிட்டார்கள், 2005-ல் முழுக்காட்டுதல் பெற்றார்கள். “ஓர் உண்மையான கிறிஸ்தவக் குடும்பத்தைக் கண்டுபிடித்துவிட்டோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
‘எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதி’ பெற்றிருப்பதற்கு நன்றியோடு இருங்கள்
12. தம் ஊழியர்களுக்கு யெகோவா எப்போதும் எதை அளிக்கிறார், அதிலிருந்து நன்மை பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
12 தம் சித்தத்தைச் செய்ய தம்முடைய ஊழியர்களுக்கு யெகோவா எப்போதும் உதவி அளிக்கிறார். உதாரணத்திற்கு நோவாவை எடுத்துக்கொள்ளுங்கள். பேழையை எப்படிக் கட்டவேண்டும் என்பது குறித்து நோவா குறிப்பான அறிவுரைகளைத் தெளிவாகப் பெற்றார். அந்தக் கட்டுமான வேலை எப்படிப்பட்டது? அது அவருடைய வாழ்க்கையில் செய்யவிருந்த முதல் கட்டுமான வேலை, அதுவும் மிகத் துல்லியமாகச் செய்ய வேண்டிய வேலை! அது அவ்வாறே செய்து முடிக்கப்பட்டது. அதற்குக் காரணம்? நோவா, ‘அப்படியே செய்தார்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்து முடித்தார்.’ (ஆதியாகமம் 6:14-22) இன்றும்கூட, தம் சித்தத்தைச் செய்ய யெகோவா தம்முடைய ஊழியர்களை முற்றிலும் தகுதியுள்ளவர்களாக்குகிறார். நம்முடைய முக்கிய வேலை, ஸ்தாபிக்கப்பட்ட கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதும், இயேசு கிறிஸ்துவின் சீஷராக நல்மனமுள்ளவர்களுக்கு உதவுவதுமே. எனினும், நோவாவைப் போல நாமும் கீழ்ப்படிந்தால் இவ்வேலையில் வெற்றி பெறுவோம். ஆகவே, தம் வார்த்தையின் மூலமாகவும் தம் அமைப்பின் மூலமாகவும் யெகோவா அளிக்கிற அறிவுரைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்.—மத்தேயு 24:14; 28:19, 20.
13. எதன் மூலம் யெகோவா நமக்குப் பயிற்சி அளிக்கிறார்?
13 ராஜ்யத்தைப் பற்றி அறிவிக்கும் வேலையில் நாம் உபயோகிக்கும் முக்கியக் கருவி கடவுளுடைய வார்த்தையாகும். இந்த முக்கியக் கருவியைப் பயன்படுத்தி ‘நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கும்’ திறமையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இதுவே ‘தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, . . . உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவையாய்’ இருக்கிறது. (2 தீமோத்தேயு 2:15; 3:16, 17) முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பயிற்சி பெற்ற விதமாகவே, நமக்கும் கிறிஸ்தவ சபை மூலம் யெகோவா அருமையான பயிற்சி அளிக்கிறார். இன்று, ஊழியத்தில் நமக்கு உதவுவதற்காக, உலகெங்குமுள்ள 99,770 சபைகளில் வாரந்தோறும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியும் ஊழியக் கூட்டமும் நடைபெறுகின்றன. முக்கியமான இக்கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு, இவற்றிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் உங்கள் நன்றியை வெளிக்காட்டுகிறீர்களா?—எபிரெயர் 10:24, 25.
14. கடவுளை வணங்கும் பாக்கியத்திற்குத் தங்கள் நன்றியை யெகோவாவின் ஊழியர்கள் எவ்வாறு காட்டுகிறார்கள்? (பக்கங்கள் 27-30-ல் உள்ள அட்டவணையிலுள்ள குறிப்புகள் உட்பட.)
14 உலகெங்கும் கடவுளை வணங்கிவரும் லட்சக்கணக்கானோர், ஊழியத்தில் மும்முரமாக ஈடுபடுவதன் மூலம் தாங்கள் பெற்று வருகிற பயிற்சிக்குத் தங்கள் நன்றியை வெளிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, 2006 ஊழிய ஆண்டின்போது, 67,41,444 ராஜ்ய பிரஸ்தாபிகள், ஊழியத்தின் எல்லா அம்சங்களிலும் மொத்தமாக 133,39,66,199 மணிநேரங்களைச் செலவிட்டிருக்கிறார்கள். இதில் அவர்கள் நடத்தி வருகிற 62,86,618 பைபிள் படிப்புகளும் அடங்கும். உலகளாவிய அறிக்கையில் காணப்படுகிற ஊக்கமூட்டும் விவரங்களில் இவை சில மட்டுமே. இந்த அறிக்கையை உன்னிப்பாகக் கவனித்து, ஊக்கம் பெறுமாறு உங்களைத் தயவுடன் அழைக்கிறோம். முதல் நூற்றாண்டில் வாழ்ந்த சகோதரர்கள், தங்கள் காலத்தில் ராஜ்ய பிரசங்க வேலையின் விஸ்தரிப்பைப் பற்றிய அறிக்கைகளைக் கேட்டு ஊக்கம் பெற்றிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை, அல்லவா? அவ்வாறே நீங்களும் ஊக்கம் பெறலாம்.—அப்போஸ்தலர் 1:15; 2:5-11, 41, 47; 4:4; 6:7.
15. யெகோவாவுக்குச் செய்யும் முழு ஆத்தும சேவையைக் குறித்து ஏன் யாருமே சோர்ந்துவிட வேண்டியதில்லை?
15 கடவுளுக்கு மாபெரும் துதி முழக்கம் ஒவ்வொரு வருடமும் ஏறெடுக்கப்படுவது எதைக் காட்டுகிறது? யெகோவாவின் ஊழியர்களது ஆழ்ந்த நன்றியுணர்வையே அது காட்டுகிறது; அவர்கள் யெகோவாவை அறிந்திருக்கும் பாக்கியத்திற்காகவும், அவரைக் குறித்து மற்றவர்களுக்கு அறிவிக்கும் பாக்கியத்திற்காகவும் நன்றியுடன் இருக்கிறார்கள் என்பதையே அது காட்டுகிறது. (ஏசாயா 43:10) அதே சமயத்தில் வயோதிகராய், வியாதிப்பட்டவராய், பலவீனராய் நம் மத்தியில் இருக்கும் சகோதர சகோதரிகள் சிலர் செலுத்தி வருகிற துதியின் பலியை விதவை போட்ட இரண்டு காசுகளுக்கு ஒப்பிடலாம். ஆனாலும் தங்களால் முடிந்த அனைத்தையும் அவர்கள் முழு ஆத்துமாவோடு செய்கையில், யெகோவாவும் அவருடைய குமாரனும் அவர்களைப் பொக்கிஷமாகப் போற்றுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடாதிருப்போமாக.—லூக்கா 21:1-4; கலாத்தியர் 6:4.
16. சமீப காலங்களில் போதிப்பதற்கு எந்தக் கருவிகளைக் கடவுள் அளித்திருக்கிறார்?
16 ஊழியத்தில் நமக்குப் பயிற்சி அளிப்பதோடுகூட, போதிப்பதற்கு மிகச் சிறந்த கருவிகளையும் யெகோவா தம்முடைய அமைப்பின் மூலம் அளித்திருக்கிறார். சமீப காலங்களில் வெளியிடப்பட்டிருந்த நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு ஆகிய புத்தகங்களோடுகூட, தற்போது வெளியிடப்பட்ட பைபிள் உண்மையில் என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகமும் இவற்றில் அடங்கும். இந்தக் கருவிகளுக்காக உள்ளப்பூர்வமாய் நன்றியுள்ளவர்கள் இவற்றை ஊழியத்தில் நன்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை நன்கு பயன்படுத்துங்கள்
17, 18. (அ) பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் எந்தப் பகுதிகளை ஊழியத்தில் நீங்கள் சிறப்பித்துக் காட்டுவீர்கள்? (ஆ) பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் குறித்து ஒரு வட்டாரக் கண்காணி என்ன அறிக்கை செய்திருக்கிறார்?
17 பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகம் ஊழியத்தில் பயன்படுத்துவதற்காக நமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் எனலாம். ஏன் அப்படிச் சொல்கிறோம்? அதிலுள்ள 19 அதிகாரங்கள், விலாவாரியான பிற்சேர்க்கை, தெள்ளத் தெளிவான எளிய மொழிநடை ஆகியவற்றை வைத்துத்தான். உதாரணமாக, அதில் 12-வது அதிகாரம், “கடவுளுக்குப் பிரியமாக வாழ்தல்” என்ற பொருளை மையமாகக் கொண்டுள்ளது. பைபிள் மாணாக்கர் எப்படிக் கடவுளுக்கு நண்பராகலாம் என்பதை இது விளக்குகிறது. கடவுளுக்கு நண்பராக முடியும் என்பதை அநேகர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். (யாக்கோபு 2:23) இந்த பைபிள் உதவிப் புத்தகத்தைக் குறித்து மக்களின் கருத்து?
18 பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் குறித்து ஆஸ்திரேலியாவில் ஒரு வட்டாரக் கண்காணி, “கண்ணைப் பறிக்கும் இந்தப் புத்தகம் வீட்டுக்காரர்களுடன் உடனே உரையாடலில் ஈடுபட வைக்கிறது” என்று அறிக்கை செய்திருக்கிறார். இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்துவதும் எளிதாய் இருப்பதாகக் கூறுகிறார். அதனால்தான், “அநேக ராஜ்ய பிரஸ்தாபிகள் ஊழியத்தில் இழந்திருந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் இது புதுப்பித்திருக்கிறது. இந்தப் புத்தகத்தைச் சிலர் தங்கக்கட்டி என்பதாகவும் அழைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!” என்கிறார் அவர்.
19-21. பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தின் அருமை பெருமைகளைச் சிறப்பித்துக் காட்டுகிற அனுபவங்கள் சிலவற்றைக் கூறுங்கள்.
19 “கடவுள்தான் உங்களை அனுப்பியிருக்கிறார்” என்றார் கயானாவில் ஒரு பெண். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அவளை ஒரு பயனியர் சந்தித்திருந்தார். திருமணம் செய்துகொள்ளாமல் அந்தப் பெண்ணோடு சேர்ந்து வாழ்ந்தவர் சமீபத்தில் அவளையும் அவர்களுடைய இரண்டு பிள்ளைகளையும் அம்போவென விட்டுப் பிரிந்துவிட்டார். அவளைச் சந்தித்த பயனியர் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை முதல் அதிகாரத்திற்குத் திருப்பி, “நமக்கு இழைக்கப்படுகிற அநியாயங்களைக் குறித்து கடவுள் எப்படி உணருகிறார்?” என்ற உபதலைப்பின் கீழிருந்த 11-வது பாராவை வாசித்துக் காட்டினார். “அதிலிருந்த குறிப்புகள் அவள் நெஞ்சத்தை நெகிழ வைத்தன” என்றார் அந்தப் பயனியர். “நடந்தது என்னவென்றால், அதைக் கேட்ட அவள் எழுந்து, தன் கடைக்குள் சென்று, தேம்பித் தேம்பி அழுதுவிட்டுத் திரும்பி வந்தாள்” என்றும் அவர் சொன்னார். முறைப்படியான பைபிள் படிப்பிற்கு அந்தப் பெண் ஒப்புக்கொண்டாள். இந்தப் படிப்பை உள்ளூர் சகோதரி ஒருவர் அவளுக்கு நடத்திவருகிறார், அவளும் முன்னேற்றம் செய்துவருகிறாள்.
20 ஹோஸே என்பவர் ஸ்பெயினில் வசிக்கிறார். வாகன விபத்தில் தன் மனைவியை இழந்துவிட்டார். ஆறுதல் தேடி போதைப் பொருள்களை நாடினார். மனவியல் நிபுணர்களின் உதவியையும் பெற்றார். என்றாலும், அவருடைய மனதை வாட்டி வதைத்த கேள்விக்கு மனவியல் நிபுணர்களால் பதில் தர முடியவில்லை. அவருடைய கேள்வி: “என் மனைவி சாவதற்குக் கடவுள் ஏன் அனுமதித்தார்?” தான் வேலை பார்த்துவந்த அதே கம்பெனியைச் சேர்ந்த ஃப்ரான்செஸ்க் என்பவரை ஹோஸே ஒருநாள் சந்தித்தார். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில், “கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?” என்ற தலைப்பிலிருந்த 11-வது அதிகாரத்திலுள்ள விஷயங்களை இருவருமாகக் கலந்துபேசத் தீர்மானித்தார்கள். அதிலிருந்த வேதப்பூர்வ விளக்கமும், ஓர் ஆசிரியரையும் ஒரு மாணவனையும் பற்றிய உதாரணமும் ஹோஸேயை மிகவும் கவர்ந்தன. மெய்யார்வத்துடன் அவர் பைபிள் படிப்பில் கலந்துகொண்டார், ஒரு வட்டார மாநாட்டிற்கும் சென்றார். இப்போது உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்கும் செல்கிறார்.
21 ராமான் என்ற 40 வயது தொழிலதிபர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் கடவுளுடைய வார்த்தைமீது எப்போதும் மதிப்பு வைத்திருந்தார். ஆனால், அவரது தொழில் காரணமாக, பைபிள் படிப்பில் ஓரளவே முன்னேற்றம் செய்திருந்தார். என்றாலும், அவர் ஒரு மாவட்ட மாநாட்டிற்குச் சென்றிருந்தபோது, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் பெற்றார். அதன் பிறகு, அவர் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்தார். “ஜிக்சா புதிர் விளையாட்டில், எல்லாத் துண்டுகளையும் சேர்க்கும்போது முழுமையான படத்தைப் பார்க்க முடிவதைப் போலவே, இந்தப் புத்தகத்தின் உதவியுடன், பைபிளின் அடிப்படைப் போதனைகள் எல்லாவற்றையும் சேர்த்து முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று அவர் கூறினார். இப்போது ராமான் பைபிள் படிப்பில் தவறாமல் கலந்துகொண்டு நல்ல முன்னேற்றம் செய்து வருகிறார்.
நன்றியுணர்வைத் தொடர்ந்து வளர்த்திடுங்கள்
22, 23. நமக்கிருக்கும் எதிர்கால நம்பிக்கைக்கு நம் நன்றியுணர்வை எப்படித் தொடர்ந்து வளர்க்கலாம்?
22 “மீட்பு விரைவில்!” என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட மாநாடுகள் உள்ளத்திற்கு உற்சாகம் அளித்தன. அவற்றில் விளக்கப்பட்டபடியே, இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் அடிப்படையில் ‘நித்திய மீட்பை’ தரப்போவதாகக் கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார். இதற்காக உண்மைக் கிறிஸ்தவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த ஒப்பற்ற நம்பிக்கைக்கு நம் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவிக்க எது மிகச் சிறந்த வழி? தொடர்ந்து ‘தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு . . . செத்த கிரியைகளற [நம்மைச்] சுத்திகரிப்பதே’ மிகச் சிறந்த வழி.—எபிரெயர் 9:12, 14.
23 ஆம், தன்னல வாழ்க்கைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிற இக்காலத்தில், அறுபது லட்சத்துக்கும் அதிகமான யெகோவாவின் ஊழியர்கள் உண்மையுடன் சகித்து கடவுளுடைய சேவையைச் செய்துவருவது ஓர் அற்புதமே. அத்துடன், பெருமதிப்புமிக்க இந்தச் சேவைக்காக அவர்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருப்பதற்கும் அது அத்தாட்சி அளிக்கிறது. ஏனெனில், ‘கர்த்தருக்குள் [தாங்கள்] படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்றும்’ அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்த நன்றியுணர்வு தொடர்ந்து வளரட்டும்!—1 கொரிந்தியர் 15:58; சங்கீதம் 110:3.
உங்கள் பதில்?
• கடவுளுக்கும் அவருடைய ஆன்மீக ஏற்பாட்டிற்கும் நன்றியோடு இருக்க சங்கீதக்காரன் நமக்கு என்ன முன்மாதிரி வைக்கிறார்?
• ஆகாய் 2:7-ல் கூறப்பட்ட வார்த்தைகள் இன்று எப்படி நிறைவேறி வருகின்றன?
• தம் ஊழியர்கள் தமக்குச் செய்யும் சேவையில் பலனைக் காண யெகோவா எவ்வாறு அவர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார்?
• யெகோவாவின் நற்குணத்திற்கு உங்கள் நன்றியுணர்வை நீங்கள் எவ்வாறு வெளிக்காட்டலாம்?
[பக்கம் 27-30-ன் அட்டவணை]
2006 உலகளாவிய யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய ஆண்டு அறிக்கை
(அச்சிடப்பட்ட பிரதியைப் பார்க்கவும்)
[பக்கம் 25-ன் படங்கள்]
தம் சித்தத்தைச் செய்ய யெகோவா நம்மை முற்றிலும் தகுதியுள்ளவர்களாக்குகிறார்