வண்ணமயமான ஹெய்டியில் நற்செய்தியைப் பரப்புதல்
ஹெய்டியும் டொமினிகன் குடியரசும் கரீபியன் கடலில் இருக்கும் வெப்பமண்டலத் தீவான ஹீஸ்பானியோலாவில் இருக்கின்றன. கரீபியன் பகுதியிலேயே மிக உயரமான மலைகள் இங்குதான் இருக்கின்றன. அவற்றுள் பல 2,400 மீட்டருக்கும் அதிக உயரமுள்ளவை. “குளிர்” மாதங்களின்போது உயரமான பகுதிகளில் இருக்கும் சிறிய குளங்களில் உறைபனியும், மெல்லிய பனிப்படலமும் உண்டாகலாம்.
ஹெய்டியின் தென்பகுதியில் உள்ள மலைகளும் பள்ளத்தாக்குகளும் வளமான வெப்பமண்டலக் காடுகளால் மூடப்பட்டிருக்கின்றன. காடுகள் அழிக்கப்பட்டுவிட்டதால் மற்ற இடங்களில் உள்ள மலைகள் பெரும்பாலும் வெறுமையாகவும், கரடுமுரடாகவும், செதுக்கப்பட்டது போலவும் காட்சியளிக்கின்றன. நீங்கள் வடக்கிலோ தெற்கிலோ பயணம் செய்தால், ஹெய்டியில் கண்ணைக் கவரும் அழகிய காட்சிகள் நிறைந்திருப்பதை உங்களால் காண முடியும். சில குறுகலான, வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதைகளிலிருந்து பார்க்கும்போது, பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பகுதியும் கடலும் பல கோணங்களில் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். பளிச்சிடும் வண்ணங்களைக் கொண்ட பலவிதமான பூக்களை எல்லா இடங்களிலும் உங்களால் பார்க்க முடியும்.
இந்த அழகான இடத்தில் வசிக்கும் 83 லட்சம் மக்களில் பெரும்பாலோர் ஆப்பிரிக்க வம்சத்தைச் சேர்ந்த கிராமவாசிகளே. அவர்களில் அநேகர் ஏழைகளாக இருந்தாலும்கூட, அன்பானவர்களாகவும், உபசரிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். சுமார் 60 வருடங்களாக யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அவர்களுக்குச் சொல்லும் சந்தோஷத்தை அனுபவித்திருக்கிறார்கள், அன்பான வரவேற்பையும் பெற்றிருக்கிறார்கள்.—மத்தேயு 24:14.
ஒரு சிறிய நகரத்தில் பிரசங்கம்
ஒரு சிறிய நகரத்திற்குச் சென்ற ஒரு மிஷனரியின் அனுபவம் சிறந்த உதாரணமாக இருக்கிறது. அவர் இவ்வாறு எழுதுகிறார்:
“2003-ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில் ஒருநாள் கஸல் என்ற சிறிய நகரத்திற்குப் பிரசங்கிக்கச் சென்றோம். இது, தற்போது நம்முடைய மிஷனரி இல்லம் இருக்கிற கபரே நகரத்திலிருந்து அரைமணிநேர பயணத்தூரத்தில் இருக்கிறது. இந்த இல்லம், தலைநகரமான போர்ட் ஆ பிரின்ஸுக்கு வடக்கில் 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. சாட்சிகள் கஸல் நகரில் கடைசியாக 1999-ல் பிரசங்கித்திருந்தார்கள், அதனால் நாங்கள் பேராவலோடு காலை 7 மணிக்கு எங்களுடைய பயணத்தை ஆரம்பித்தோம். எங்களில் இருபத்திரண்டு பேருமே, கிட்டத்தட்ட முழு சபையுமே இரண்டு வேன்களில் ஏறிக்கொண்டோம். வேன்கள் சரிவான புழுதிச் சாலைகளில் சென்றுகொண்டிருந்தன; எல்லாரும் சந்தோஷமாய் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சென்றோம். பெரிய பெரிய மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கிற்கு வந்தோம். அந்தப் பள்ளத்தாக்கினூடே ஆறு ஒன்று பாய்ந்தோடுகிறது, கஸல் நகரம் ஆற்றின் இருமருங்குகளிலும் இருக்கிறது.
“இந்த அமைதியான நகரின் சரித்திரம் 1800-களின் தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறது; இந்த ஆண்டுகளில் போலந்து நாட்டு இராணுவ வீரர்கள், முன்னால் அடிமைகளாக இருந்த ஹெய்டி மக்களின் விடுதலைக்கு உதவுவதற்காக அங்கு வந்தார்கள். பிறகு தங்களுடைய ஹெய்டிய மனைவிகளோடு இந்தச் செழுமையான பள்ளதாக்கிலேயே தங்கிவிட்டனர். இவர்களுடைய சந்ததியில் வந்த மக்கள் அழகுள்ளவர்களாய், வித்தியாசமானவர்களாய் இருக்கிறார்கள். வெள்ளை, மஞ்சள் பழுப்பு, பொன்னிறத் தோல்களுடன் பச்சைநிற, கரும்பழுப்பு நிறக் கண்களுடனும், இன்னும் பல அம்சங்களையுடைய அந்த மக்களைப் பார்க்கையில் உள்ளம் கொள்ளைபோகிறது.
“நாங்கள் முதலில் சந்தித்த வீட்டுக்காரருக்கு ஆர்வமில்லை. நாங்கள் அந்த வீட்டைவிட்டுத் திரும்பிச் செல்லுகையில், எங்களைச் சந்திப்பதற்காக ஒருவர் வந்தார். இயேசுவுக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் இருக்கிறது என நாங்கள் நம்புகிறோமா என்பதை அறிந்துகொள்ள அவர் விரும்பினார். எங்களுடைய வேண்டுகோளின்படி, அவருடைய பைபிளை எடுத்துவந்தார். அடுத்து வந்த பைபிள்பூர்வ கலந்துரையாடல் மூலம், இயேசு கடவுளுடைய குமாரனென்றும், யெகோவா ‘ஒரே உண்மையான கடவுளென்றும்’ ஏற்றுக்கொண்டார். (யோவான் 17:3) உட்கார்ந்து தங்களோடு பேசுவதற்கு அநேக மக்கள் எங்களை அழைத்தனர். ‘எப்பொழுது திரும்பி வந்து எங்களுக்கு பைபிளைப் பற்றிச் சொல்லிக்கொடுப்பீர்கள்?’ என்று சிலர் கேட்டனர்.
“உச்சிவேளையில், நிழல்தரும் இதமான ஓர் இடத்தைக் கண்டு, மதிய உணவுக்குத் தயாரானோம். இரண்டு சகோதரிகள் ஒரு பெரிய பானையில் மீன்களைச் சமைத்து வந்திருந்தனர். அது எவ்வளவு சுவையாக இருந்தது! சாப்பிட்டுக் கொண்டும் பேசிக்கொண்டும் அதேசமயத்தில் அந்தப் பக்கம் போவோர் வருவோரிடம் பிரசங்கித்துக் கொண்டும் அங்கேயே கொஞ்ச நேரம் இருந்தோம். பிறகு, ஆற்றைக் கடந்து, நகரின் மற்றொரு பகுதிக்குச் சென்றோம். சிறிய வீடுகளுக்கு அருகில் இருக்கும் மரங்களுக்கடியில் அமர்ந்திருந்த அன்பான மக்களோடு பேசுவதை நாங்கள் அனுபவித்தோம். விளையாடுகிற பிள்ளைகளின் சத்தமும், ஆற்றில் பெண்கள் துணிகளைத் துவைக்கிற சத்தமும், பாட்டிகள் காபி கொட்டைகளை அரைக்கிற சத்தமும் கேட்பதற்கு எவ்வளவு இனிமையாயிருந்தது!
“விரைவில் நான்கு மணியாகிவிட்டது, சந்தோஷமாயிருந்த நாங்கள் கபரேவுக்குப் போவதற்காக வேன்களை நோக்கிச் சென்றோம். உபசரிக்கும் தன்மையும், சிநேக மனப்பான்மையும் நிறைந்த மக்கள் வாழும் கஸலுக்குச் சென்றதை நானும் என் கணவரும் உண்மையில் அனுபவித்து மகிழ்ந்தோம்.”
யெகோவாவின் சாட்சிகளுடைய மிஷனரிகள் முதன்முதலாக 1945-ல் ஹெய்டிக்கு வந்ததிலிருந்து, ராஜ்ய அறிவிப்பாளர்களின் எண்ணிக்கை இங்கே தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. அதனால் இப்போது சுமார் 14,000 பேர் பிரசங்க வேலையில் ஈடுபடுகிறார்கள், 22,000-க்கும் அதிகமான பைபிள் படிப்புகளை நடத்துகிறார்கள். 2005-ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில் நடந்த நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்த 59,372 பேருடைய இருதயங்களை இவர்கள் தூண்டியிருக்கிறார்கள். மேலும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை வெளிப்படையாகத் தொடர்ந்து அறிவித்து வருகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளின் வேலை மக்கள் மீது எப்படியெல்லாம் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது என்பதை இப்பொழுது கவனிக்கலாம்.
வண்ண ஓவியங்களில் நற்செய்தி
ஹெய்டியில் வாழும் பெரும்பாலான மக்கள் நிறங்களை விரும்புகிறார்கள். இதை அவர்களுடைய ஆடைகளிலும், வண்ணம் தீட்டப்பட்ட அவர்களுடைய வீடுகளிலும், தோட்டத்திலுள்ள பலவிதமான பூக்களிலும், அவர்களுடைய ஓவியங்களிலும் காணலாம். லார் ஆயீஸியென் எனப்பட்ட உள்ளூர் பாணியில் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் தீட்டப்பட்ட முரட்டுத் துணிகள் போர்ட் ஆ பிரின்ஸின் வீதிகளெங்கும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை வாங்க உலகின் பல பகுதிகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்.
கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள் துணிகளில் மட்டுமல்ல வாகனங்களிலும் காணப்படுகின்றன. கமீயோநெட் அல்லது டாப்டாப் என்றழைக்கப்படுகிற பயணிகளின் வாகனங்களால் போர்ட் ஆ பிரின்ஸின் வீதிகள் நிரம்பிவழிகின்றன. கற்பனையாக தீட்டப்பட்ட ஓவியங்கள் அந்த வாகனங்களை அலங்கரிக்கின்றன. பைபிளில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களின் அடிப்படையில் வரையப்பட்ட ஓவியங்களை அவற்றில் அடிக்கடி பார்க்க முடியும்.
நீங்கள் வீதிகளில் நடந்துபோகையில், ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் இருப்பதுபோன்ற, உங்களுக்கு நன்றாகத் தெரிந்த இந்தக் காட்சி சட்டென உங்கள் கண்களில் படலாம். ஆம், கமீயோநெட் வாகனம் கடந்துபோகையில், அதன் பின்பக்க ஜன்னலில் இந்த ஓவியத்தை நீங்கள் பார்க்கலாம். யெகோவா என்ற பெயர் இந்த வாகனங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்களில் அல்லது வாசகங்களில் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும் அல்லது வணிக நிறுவனங்களின் பெயர்களுடன் சேர்ந்திருப்பதைப் பார்க்க முடியும்.
பள்ளியில் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்
ஹெய்டியிலுள்ள இளம் சாட்சிகள், தங்களுடைய சக மாணவர்கள் பைபிளைப் பற்றிக் கற்றுக்கொள்ள உதவி செய்வதற்கு நல்ல வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக, யெகோவாவின் சாட்சியான 17 வயது பெண்ணின் அனுபவம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
“ஒரு நாள் என்கூட படிக்கிற ஒருவன் என்னிடம் வந்து ‘வேசித்தனம்’ என்றால் என்னவென்று கேட்டான். என்னோடு சரசமாகப் பேச விரும்பினான் என்று நினைத்து, நான் பதில் சொல்வதைத் தவிர்த்து விட்டேன். ஆனால் இதே கேள்வியை ஒரு மாணவனிடம் அவன் கேட்டபோது, வகுப்பிலுள்ள எல்லாரும் ஆர்வமாகிவிட்டார்கள். அதனால் அடுத்துவந்த வாரத்தில், அந்த விஷயத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்தபிறகு, வகுப்பில் பேசினேன். அதில் யெகோவாவின் சாட்சிகள் ஏன் ஒழுக்க சம்பந்தமாகவும், ஆன்மீக சம்பந்தமாகவும், உடல் சம்பந்தமாகவும் சுத்தமாக இருப்பதற்குக் கடும்முயற்சி எடுக்கிறார்கள் என்பதை விளக்கினேன்.
“மாணவர்கள் நிறைய கேள்விகள் கேட்டனர்; பைபிளிலிருந்து நான் சொன்ன பதில்களை ஏற்றுக்கொண்டனர். முதலில் தயங்கிய தலைமை ஆசிரியர்கூட, நிறைய கேள்விகளைக் கேட்டார், மற்ற வகுப்புகளிலும் நான் பேசுவதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள்a புத்தகத்தை அவர்களிடம் காட்டினேன், நிறைய பேர் அந்தப் புத்தகத்தைக் கேட்டனர். அடுத்த நாள், பள்ளியில் 45 புத்தகங்களைக் கொடுத்தேன். நிறைய பேர் வேகமாக அதை படித்து முடித்துவிட்டனர், சில பேர் தங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் சாட்சிகளுடன் தற்போது பைபிளைப் படித்து வருகிறார்கள். எங்கள் பகுதியில் குடியிருக்கும் ஒரு மாணவன் இப்போது எல்லாக் கூட்டங்களுக்கும் ஆஜராகிறான்.”
கிரியோல் மொழியைப் பயன்படுத்தி . . .
ஹெய்டியிலுள்ள மக்கள் பலதரப்பட்டவர்களாயும் கவனத்தைக் கவருகிறவர்களாயும் இருக்கிறார்கள்; அவர்கள் மட்டுமல்ல அவர்களுடைய நாடும் மொழியும்கூட நம் கவனத்தைக் கவருகின்றன. அவர்களுடைய கிரியோல் மொழியில், மேற்கு ஆப்பிரிக்க இலக்கணமும் பிரெஞ்சு வார்த்தைகளும் கலந்திருக்கின்றன. இதுதான் அவர்களுடைய தாய்மொழி; அவர்களுடைய இருதயங்களைத் தொடும் மொழி. முக்கியமாக, இந்த மொழியில்தான் யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிக்கிறார்கள். அதோடு, ஹெய்டியன் கிரியோல் மொழியில் அதிகமான பைபிள் பிரசுரங்களைத் தயாரிக்க ஏற்பாடுகளையும் செய்துவருகிறார்கள்.
பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! என்ற சிற்றேடு 1987-ல் ஹெய்டியன் கிரியோலில் மொழிபெயர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகமும் கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? சிற்றேடும் மொழிபெயர்க்கப்பட்டன. புதிதாக பைபிளைப் படிப்பவர்கள் கடவுளுடைய வார்த்தையிலுள்ள அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொள்ள இந்தப் பிரசுரங்கள் பேருதவியாக இருந்திருக்கின்றன. 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-லிருந்து, காவற்கோபுரமும் ஹெய்டியன் கிரியோலில் வெளியிடப்படுகிறது. பிரெஞ்சு மொழி பிரசுரங்கள் இன்னும் பயன்படுத்தப்பட்டாலும், அநேகர் தங்களுடைய சொந்த மொழியிலேயே பிரசுரங்களைப் படிக்க விரும்புகிறார்கள்.
சிறையில் இருப்பவர்களுக்கு நற்செய்தி
யெகோவாவின் சாட்சிகள் சமீப காலங்களில் சிறையில் உள்ள ஆண்களிடமும் பெண்களிடமும் நற்செய்தியைப்பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். மிகவும் நொந்துபோயிருக்கும் இவர்களுக்கு ஆறுதலான செய்தியை சாட்சிகள் சந்தோஷமாகச் சொல்கிறார்கள். ஒரு சகோதரர் இவ்வாறு சொல்கிறார்:
“நாங்கள் ஒரு சிறைச்சாலைக்கு முதல்முதலாகச் சென்றபோது, எங்களைச் சந்திக்க அங்கிருந்தவர்கள் ஒரு பெரிய அறைக்குள் கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் எப்படிப் பிரதிபலிப்பார்களோ என்று நினைத்தோம். பைபிளைப் பற்றி புரிந்துகொள்ள உதவுவதற்கு வந்ததாக நாங்கள் விளக்கிச் சொன்னபோது, அங்கிருந்த 50 பேரும் எங்களுக்கு ஆதரவளித்தனர். நாங்கள் கிரியோல் மொழியிலிருந்த, வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் சிரத்தையுடன் முயலுங்கள், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! ஆகிய சிற்றேடுகளைக் கொடுத்தோம்; அவர்களில் 26 பேரிடம் பைபிள் படிப்புகளை ஆரம்பித்தோம். அங்கிருந்த பத்து பேர் படிக்கத் தெரியாதவர்கள். ஆனால் சிற்றேடுகளில் உள்ள படங்களைப் பயன்படுத்தி வார்த்தைகளை எப்படிப் புரிந்துகொள்ளலாம் என்பதை விளக்கிக் காட்டியபோது அவர்களும் ஆர்வம் காட்டினார்கள்.”
சாட்சிகள் திரும்பவும் அங்கே சென்றபோது, ஒரு நபர் இவ்வாறு சொன்னார்: “நான் அந்தச் சிற்றேட்டைத் திரும்பத் திரும்பப் படித்தேன். அது என்ன சொல்கிறது என ஓயாமல் யோசித்துக்கொண்டிருந்தேன், நீங்கள் எப்பொழுது வருவீர்களென ஆவலோடு காத்திருந்தேன்.” கொள்ளையடித்ததற்காகக் கைதுசெய்யப்பட்ட ஒரு நபர், தான் மனம் மாற விரும்புவதாகச் சொன்னார்; தன் மனைவிக்கும் பைபிள் படிப்பு நடத்த யாரையாவது அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான ஒரு நபர் சிறையிலிருந்தார், அவரும் இதைப்போலவே கேட்டுக்கொண்டார்; அதன்மூலம், உண்மையான நம்பிக்கைகளுக்கும் பொய்யான நம்பிக்கைகளுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தன்னுடைய மனைவி புரிந்துகொள்ள முடியுமென்று சொன்னார். பணவிஷயத்தில் தன் சர்ச் அங்கத்தினர்களை ஏமாற்றிய குற்றத்திற்காகச் சிறையிலிருந்த புராட்டஸ்டன்ட் பாதிரி ஒருவர், இப்பொழுது தான் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டதாகவும், தண்டனை முடிந்தபிறகு தன்னுடைய சர்ச் அங்கத்தினர்கள் யெகோவாவின் சாட்சிகளாக மாறுவதற்கு உதவப்போவதாகவும் சொன்னார்.
கிரியோல் மொழியில் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டைச் சொந்தமாகக் கொண்டிராத ஒரு கைதி, தன்னுடன் இருக்கும் கைதிக்குச் சொந்தமான சிற்றேட்டை முழுவதுமாக நகலெடுத்து, மனப்பாடம் செய்துவைத்திருந்தார். ஒரு பெண் கைதி, தான் கற்றுக்கொண்டதை தன்கூட இருந்த 9 பெண் கைதிகளிடம் பகிர்ந்துகொண்டு, அவர்களுக்கு பைபிளைக் கற்றுக்கொடுக்கவும் அவர்களுடன் பைபிளைப் படிக்கவும்கூட ஆரம்பித்துவிட்டார். ஒரு கைதி அந்தச் சிற்றேட்டைப் படித்து முடித்து, அறிவு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்துவிட்டார்; மற்ற கைதிகளுக்கு பிரசங்கிக்கவும் ஆரம்பித்துவிட்டார். விரைவில், அவர்களில் நான்கு பேருக்கு அவர் பைபிள் படிப்புகளை நடத்திக் கொண்டிருந்தார்.
மெர்கனீb என்பவருக்கு பைபிளைப் படிக்கும் வழக்கம் இருந்தது. அவருடைய உறவினர்கள் சிலர் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தனர். அவர்கள் தனக்குக் கொடுத்த பைபிள் பிரசுரங்களைப் படிக்கும்படி மற்ற கைதிகளை அவர் உற்சாகப்படுத்தினார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “நான் அவர்களுக்குப் பிரசுரங்களைக் கொடுத்தபோது, அவர்கள் என்னை யெகோவாவின் சாட்சி என்றழைத்தார்கள். அவர்களிடம் நான் யெகோவாவின் சாட்சி இல்லையென்று சொன்னேன். ஏனென்றால், யெகோவாவின் சாட்சியாக இருப்பதன் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியும். முழுக்காட்டுதல் பெறுவதற்கு உதவும் பைபிள் படிப்பை இப்பொழுது நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். நான் இளைஞனாக இருந்தபோது, என்னுடைய அண்ணன்களைப் பின்பற்றியிருந்தால், இப்போது சிறையில் இருந்திருக்க மாட்டேன்.”
மெர்கனீயிடமிருந்து பிரசுரத்தைப் பெற்ற கைதிகளில் ஒருவர், தன்னைப் பார்க்க வந்த சாட்சியிடம் இவ்வாறு கூறினார்: “நீங்கள் கடந்த திங்கள் கிழமை வருவதற்கு முன்னால், வாழ்க்கையே வெறுத்துப்போய், தற்கொலை செய்துகொள்ளலாம் என்றிருந்தேன். ஆனால் பத்திரிகைகளைப் படித்தபிறகு, நான் செய்த மோசமான காரியங்களை மன்னிக்கும்படியும், சரியான பாதையைக் காட்டுவதற்கு யாரையாவது அனுப்பும்படியும் கடவுளிடம் வேண்டினேன். மறுநாள் கைதிகளுக்கு பைபிளைப் பற்றிச் சொல்லிக்கொடுக்க நீங்கள் வந்தபோது நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா! யெகோவாவுக்குச் சேவை செய்ய நீங்கள் எனக்குக் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன்.”
அநேகருக்கு நற்செய்தியைச் சொல்லும் விழித்தெழு!
நவம்பர் 8, 2000, தேதியிட்ட விழித்தெழு! வெளியீடு நர்ஸ் பணியைச் சிறப்பித்துக் காட்டியது. ஒரு பெண் 2,000 பிரதிகளை வாங்கினாள், அவற்றை போர்ட் ஆ பிரின்ஸில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட நர்ஸ்களுக்குக் கொடுத்தாள். ஜூலை 8, 2002, விழித்தெழு!-வில் போலீஸைப் பற்றியும் அவர்களுடைய வேலையைப் பற்றியும் கட்டுரைகள் வெளிவந்திருந்தன; இப்பத்திரிகை போர்ட் ஆ பிரின்ஸிலுள்ள காவலர்களுக்கு பெருமளவில் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்தப் பத்திரிகையை மிகவும் பாராட்டினார்கள். இப்பொழுதும்கூட காவலர்களில் சிலர் சாட்சிகளைத் தெருவில் பார்த்தாலும் அந்தப் பத்திரிகைகளைக் கேட்கின்றனர்.
சமீபத்தில், உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி, மக்களுக்கு எய்ட்ஸ் பிரச்சினைபற்றி கல்விப்புகட்ட ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அவர் யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். அந்த விஷயத்தைப் பற்றி விழித்தெழு!-வில் வெளியான தகவல் அவருக்குக் காட்டப்பட்டது. எய்ட்ஸைத் தடுக்க மிகச் சிறந்த வழியைப் பற்றியும், தங்களுடைய சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எப்படி உதவலாம் என்பதைப் பற்றியும் பைபிளின் அடிப்படையில் விளக்கிய கட்டுரைகளைப் பார்த்து அவர் பெரிதும் கவரப்பட்டார். அந்த விஷயத்தின் பேரில் தகவலை அளிப்பதில் விழித்தெழு! முன்னிலையில் இருக்கிறது எனப் பாராட்டினார்.
ஆம், யெகோவாவின் சாட்சிகள் மற்ற 234 நாடுகளில் செய்துவருகிறதுபோல, வண்ணமிகு ஹெய்டியிலும் ராஜ்யத்தின் நற்செய்தியை அநேக வழிகளில் பரப்பி வருகிறார்கள். இந்த நம்பிக்கையின் செய்திக்கு அநேகர் செவிகொடுக்கிறார்கள். தற்போது இருக்கும் பிரச்சினைகளைப் பற்றியே சதா கவலைப்பட்டுக் கொண்டிராமல் இருக்க இந்தச் செய்தி அவர்களுக்கு உதவுகிறது. அதோடு, எல்லோரும் உண்மையான கடவுளாகிய யெகோவாவை வணங்கி, பரிபூரண வாழ்க்கையை அபிரிமிதமாய் அனுபவிக்கும் புதிய உலகை எதிர்நோக்கியிருப்பதற்கும் அநேகருக்கு உதவுகிறது.—வெளிப்படுத்துதல் 21:4.
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் பிரசுரங்கள் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.
b பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.
[பக்கம் 9-ன் படத்திற்கான நன்றி]
பின்னணி: ©Adalberto Rios Szalay/photodisc/age fotostock