உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 8/15 பக். 8-11
  • அழகிய தீவில் அபார அதிகரிப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அழகிய தீவில் அபார அதிகரிப்பு
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • துணை தலைப்புகள்
  • புது விதமான அதிகரிப்பு
  • இளைஞர்கள் மத்தியில் ஆன்மீக அதிகரிப்பு
  • இளைஞர்கள் பெரியவர்களாகையில்
  • அதிகரிப்புக்குத் தடையாய் இருப்பவற்றைச் சமாளித்தல்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 8/15 பக். 8-11

அழகிய தீவில் அபார அதிகரிப்பு

தைவான் தீவுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள், திரும்பிய பக்கமெல்லாம் பச்சைக் கம்பளம் விரிக்கப்பட்டிருப்பதைப் போன்ற பசுமையின் வனப்பில் சொக்கிப் போகிறார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. பச்சைப் பசேலென்று கம்பீரமாய் நிற்கும் இளம் நெற்பயிர்கள் அறுவடைக் காலத்தில் பொன் நிறமாய் மாறுகின்றன. அடர்த்தியான, வளமான காடுகள் மலைச் சரிவுகளை எல்லாம் மூடியிருக்கின்றன. நெரிசல்மிக்க நகரங்களோடு ஒப்பிட வயல்வெளிகளிலும் மலைகளிலும் காணப்படும் வளம் கொழிக்கும் பசுமை மனதிற்கு இதமாக இருக்கிறது. சொல்லப்போனால், முதன்முதலில் இத்தீவிற்கு விஜயம் செய்த மேலை நாட்டவர் ஒருவர் இத்தீவின் அழகில் மயங்கினார்; அதன் காரணமாகவே அவர், இல்ஹ ஃபார்மோசா, அதாவது “அழகிய தீவு,” என்ற பெயரை இதற்கு சூட்டினார்.

ஆம், தைவான் ஓர் அழகிய தீவு, ஆனால் சிறிய தீவு; இதன் நீளம் 390 கிலோமீட்டர், அதிகபட்ச அகலம் 160 கிலோமீட்டர். இத்தீவின் பெரும் பகுதியை உயரமான மலைகள் ஆக்கிரமித்திருக்கின்றன. இங்குள்ள யூ ஷான் மலை (மாரீஸன் மலை) மிகவும் உயரமானது; இது, ஜப்பானிலுள்ள ஃபூஜி மலையைவிடவும் அல்லது நியுஜிலாந்திலுள்ள குக் மலையைவிடவும் உயரமானது. மத்தியிலுள்ள மலைகளின் அடிவாரத்திலிருந்து கடல் வரையில் குறுகலான கடற்கரை சமவெளிகள் உள்ளன; அவற்றில் மக்கள் நிறைந்திருக்கிறார்கள். தற்போது தைவானின் மக்கள்தொகை 2 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமாகும்.

புது விதமான அதிகரிப்பு

எனினும், தைவானில் இன்னொரு விதமான அதிகரிப்பு எல்லார் கண்ணிலும் பளிச்செனத் தென்படுகிறது. அதுதான் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு. இளைஞர்களும்சரி, முதியவர்களும்சரி, மெய்க் கடவுளாகிய யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்டவுடன் பக்திவைராக்கியத்தோடு ஊழியத்தில் ஈடுபடுவதால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. யெகோவாவையும் அவருடைய நோக்கத்தையும் பற்றி மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க முழுமூச்சாய் பாடுபடுபவர்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கும் விதத்தில் அதிகரித்திருக்கிறது.

அதிகரிப்பு ஏற்படுகையில் விரிவாக்கமும் தேவைப்படுகிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தை விரிவுபடுத்துவதற்காக, 1990, டிசம்பர் மாதத்தில் நிலம் வாங்கப்பட்டது. தைவானில் உள்ள தைபீ நகரில் அதுவரை கிளை அலுவலகமாக செயல்பட்டு வந்த இடம் வெகு சிறியதாக இருந்தது. அப்போதிருந்த 1,777 ராஜ்ய பிரஸ்தாபிகள் செய்துவந்த வேலைகளை மேற்பார்வையிடுவதற்கு அது போதுமானதாக இருக்கவில்லை. எனவே, சர்வதேச வாலண்டியர்களும் பெரியோர், சிறியோரான உள்நாட்டு வாலண்டியர்களும் சேர்ந்து பல வருடங்கள் அரும்பாடுபட்டதால், சின்வியூ நகரில் அருமையான, புதிய வளாகம் கட்டப்பட்டது; 1994, ஆகஸ்ட் மாதத்திலிருந்து அது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தச் சமயத்தில் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலுள்ள நற்செய்தியை 2,515 பேர் பிரசங்கித்து வந்தார்கள். இப்போது, பத்து வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் அவர்களுடைய எண்ணிக்கை இரண்டு மடங்கை, அதாவது 5,500-யும் தாண்டிவிட்டது; இதில் கால்வாசிப் பேர் ஒவ்வொரு மாதமும் முழுநேர ஊழியத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்களில் இளைஞர்கள் விசேஷ கவனத்திற்கு உரியவர்கள்; இவர்கள் புத்துணர்ச்சி அளிக்கும் விடியற்காலத்துப் “பனிக்கு” ஒப்பானவர்கள்.​—⁠சங்கீதம் 110:3.

இளைஞர்கள் மத்தியில் ஆன்மீக அதிகரிப்பு

நற்செய்தியை பக்திவைராக்கியத்துடன் அறிவிப்பவர்களில் அநேகர் இளைஞர்கள். சிலர் ஆரம்பப் பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியர். உதாரணத்திற்கு, வடக்கு தைவானிலுள்ள ஒரு நகரத்தில், தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடைபெறும் கூட்டத்திற்கு வரும்படி ஒரு தம்பதியர் முதன்முறையாக அழைக்கப்பட்டார்கள்; இப்பள்ளியில்தான் பைபிள் சத்தியங்களை மற்றவர்களுக்குக் கற்பிக்கும் முறையை யெகோவாவின் சாட்சிகள் கற்றுக்கொள்கிறார்கள். வேஜ்ஜூயன் என்ற சிறுவன் மேடையிலிருந்து பைபிளை வாசித்தான்; அநேக பெரியவர்களைவிடவும் அதிக திறம்பட்ட விதத்தில் அவன் வாசித்ததைப் பார்த்து இந்தத் தம்பதியர் மலைத்துவிட்டார்கள். சபையில் நடைபெறும் வேறு கூட்டங்களிலும் இவர்கள் கலந்துகொண்டார்கள். நர்சரியில் படிக்கும் பிள்ளைகள்கூட அழகாக, நன்கு யோசித்து பதில் சொல்வதைப் பார்த்து பெரிதும் மனங்கவரப்பட்டார்கள். ராஜ்ய மன்றத்தில் பிள்ளைகள் மரியாதையோடு நடந்துகொள்வதைக் கண்டு அவர்கள் வாயாரப் பாராட்டினார்கள்.

புத்த மதமும் தாவோ மதமும் செல்வாக்கு செலுத்தும் இத்தீவில் இந்த இளைஞர்கள் பைபிள் கல்வியில் ஏன் இந்தளவு ஆர்வம் காட்டுகிறார்கள்? ஏனெனில் இவர்களுடைய கிறிஸ்தவ பெற்றோர்கள் பைபிள் நியமங்களைப் பின்பற்றுகிறார்கள், யெகோவாவின் உறவை மையமாகக் கொண்ட சந்தோஷமான குடும்பங்களை அமைத்திருக்கிறார்கள். வேஜ்ஜூயனின் பெற்றோர் குடும்பமாக பைபிள் படிப்பதையும் வெளி ஊழியத்திற்குச் செல்வதையும் மகிழ்ச்சிமிக்கதாய் ஆக்க முயற்சி செய்திருக்கிறார்கள்; இதனால், இவனுடைய அக்காவும், அண்ணனும் ஏற்கெனவே முழுக்காட்டுதல் பெற்று யெகோவாவின் சாட்சிகளாய் ஆகியிருக்கிறார்கள். பிரசங்க ஊழியத்தில் கலந்துகொள்ள வேஜ்ஜூயன் சமீபத்தில் தகுதிபெற்றான்; அந்த மாதம் அவனுடைய வீட்டிலுள்ள எல்லாரும் அளித்த மொத்த பத்திரிகைகளைவிடவும் அதிக பத்திரிகைகளை அவன் அளித்திருந்ததாக அவனுடைய அம்மா சொன்னார்கள். உண்மையிலேயே அவன் ஆர்வத்தோடு சத்தியத்தைப் பற்றி பேசுகிறான், சபைக் கூட்டங்களில் பதில் சொல்கிறான், கற்றுக்கொள்கிற விஷயங்களை மற்றவர்களிடம் சொல்கிறான்.

இளைஞர்கள் பெரியவர்களாகையில்

இந்த இளைஞர்கள் பெரியவர்களாகையில் எப்படி இருக்கிறார்கள்? பெரும்பாலோர் யெகோவாவிடமும் ஊழியத்திடமும் தொடர்ந்து மெய் அன்பைக் காட்டிவருகிறார்கள். உதாரணமாக, ஹ்வேபிங் என்பவள் ஒரு மாணவி. ஒருநாள் வகுப்பு நடக்கையில், ஒரு மதத் தொகுதியினர் இரத்தமேற்றிக்கொள்ள மறுக்கிறார்கள் என்றும் அவர்கள் யாரென்று தனக்குத் தெரியாது என்றும் ஆசிரியர் சொன்னார். அந்த வகுப்பு முடிந்ததும் இந்த இளம் யெகோவாவின் சாட்சி ஆசிரியரிடம் போய், இரத்தமேற்றிக்கொள்ள மறுப்பவர்கள் யெகோவாவின் சாட்சிகள்தான் என்றும் அவர்கள் அப்படி மறுப்பதற்குக் காரணம் என்னவென்றும் விளக்கினாள்.

மற்றொரு ஆசிரியர் பாலியல் மூலம் பரவும் நோய்களைப் பற்றிய வீடியோவைக் காட்டினார். அதில், 1 கொரிந்தியர் 6:9-லுள்ள பைபிள் வசனம் குறிப்பிடப்பட்டது; ஆனாலும், ஓரினச் சேர்க்கையை பைபிள் கண்டனம் செய்வதில்லை என அந்த ஆசிரியர் சொன்னார். இந்தச் சந்தர்ப்பத்திலும் ஆசிரியரிடம் சென்று, இதைக் கடவுள் எப்படிக் கருதுகிறார் என்பதை ஹ்வேபிங் விளக்கினாள்.

ஹ்வேபிங்குடன் படிக்கும் ஷூஷா என்ற பெண், குடும்ப வன்முறை பற்றிய கட்டுரையைத் தயார் செய்தாள்; அப்போது ஹ்வேபிங், “அடிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவு” என்ற தலைப்பில் வெளிவந்த 2001, டிசம்பர் 8 விழித்தெழு! பத்திரிகையை அவளுக்குக் கொடுத்தாள்; அதில், இவ்விஷயம் சம்பந்தமாக, பைபிள் அடிப்படையில் பெருமளவு தகவல் இருப்பதாக விளக்கினாள். இறுதியில், ஷூஷாவும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக ஆனாள். இப்போது ஹ்வேபிங்கும் ஷூஷாவும் சேர்ந்து மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவித்து வருகிறார்கள்.

பைபிள் நியமங்களின்படி நடப்பவர்கள் என்ற பெயரெடுப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பள்ளியில் படிக்கும் கிறிஸ்தவர்கள் அநேகர் அறிந்திருக்கிறார்கள். குறிப்பாக, சிறிய கிராமங்களில் உள்ள கிறிஸ்தவ பிள்ளைகளுக்கு இது கடினமாக இருக்கிறது. ஷிஹாவு என்ற இளைஞன் தன் மத நம்பிக்கைக்கேற்ப நடந்துகொண்டபோதும் ஊழியத்தில் ஈடுபட்டபோதும் நண்பர்களுடைய தொல்லைகளைச் சகிக்க வேண்டியிருந்தது. அவன் இவ்வாறு சொல்கிறான்: “நான் ரொம்பவே விரக்தியடைந்திருந்ததால், வெளி ஊழியம் செய்யும்போது என்கூட படிக்கும் மாணவர்களைப் பார்த்துவிடுவேனோ என பயந்தேன். சில சமயங்களில் பத்து பேர் சேர்ந்துகொண்டு என்னைக் கேலி செய்வார்கள்!” ஒருநாள் ஷிஹாவுவின் ஆசிரியர் வகுப்பில் அவனுடைய மதத்தைப் பற்றி பேசும்படி சொன்னார். “முதலாவதாக, ஆதியாகமம் 1-⁠ம் அதிகாரத்திலிருந்து பேச தீர்மானித்தேன்; பிறகு, பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்தவர் யார்? மனிதன் எப்படி உருவாக்கப்பட்டான்? போன்ற கேள்விகளின் அடிப்படையில் தொடர்ந்து பேச முடிவுசெய்தேன். பைபிள் வசனங்களை நான் வாசித்த உடனேயே சிலர் எனக்கு மூடநம்பிக்கை இருப்பதாகச் சொல்லிக் கேலிசெய்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும் இடையே நிறுத்தாமல் என் பேச்சை முழுமையாகக் கொடுத்து முடித்தேன். பின்னர், வாய்ப்பு கிடைத்தபோது வகுப்பிலிருந்த சில மாணவர்களைத் தனியாகச் சந்தித்து ஊழியத்தைப் பற்றியும் என் மத நம்பிக்கையைப் பற்றியும் பேசினேன். இப்போது ஊழியம் செய்யும்போது அவர்கள் என்னை பார்த்தால்கூட கேலிசெய்வதில்லை!”

ஷிஹாவு தொடர்ந்து சொல்கிறான்: “என் அப்பா, அம்மா யெகோவாவின் சாட்சிகளாக இருப்பதால் தினமும் காலையில் நாங்கள் எல்லாரும் சேர்ந்து தினவசனத்தை வாசிப்போம். அதோடு, பைபிளையும் படிப்போம், தவறாமல் சபை கூட்டங்களுக்குப் போவோம். அதனால்தான், புத்துணர்ச்சி அளிக்கும் பைபிள் சத்தியங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது இப்போது யாராவது என்னைக் கேலிசெய்தால் சமாளிக்க முடிகிறது.”

டிங்மே என்பவள் மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவி. ஒருசமயம் இவளுடன் படிக்கும் மாணவிகள் சிலரும் ஆண்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலரும் சேர்ந்துகொண்டு ஒரு ‘பிக்னிக்’ செல்லவிருந்தார்கள்; இவளையும் வரும்படி அழைத்தார்கள். இப்படிச் சேர்ந்து போகும்போது ஒழுக்க விஷயத்தில் அத்துமீறிப் போவதற்கு வாய்ப்பிருப்பதை அறிந்து அவர்களுடன் செல்ல டிங்மே மறுத்துவிட்டாள். இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள்a புத்தகத்திலுள்ள அருமையான விஷயங்களைப் பற்றி ஏற்கெனவே தன்கூடப் படிக்கும் மாணவிகளிடம் இவள் பேசியிருக்கிறாள்; இருந்தாலும், தங்களுடன் ‘பிக்னிக்’ வரும்படி அவளைப் பல முறை அழைத்தார்கள். அதற்குச் சம்மதிக்காதபோது, பத்தாம்பசலி என்று சொல்லி இவளைக் கேலி செய்தார்கள். ஆனாலும், பைபிள் நியமங்களைப் பின்பற்றுவது எவ்வளவு புத்திசாலித்தனமானது என்பது சீக்கிரத்திலேயே தெளிவானது; ‘பிக்னிக்’ சென்ற ஒரு மாணவி கருவுற்று, கருக்கலைப்பையும் செய்துகொண்டபோது அது தெளிவானது. டிங்மே இவ்வாறு சொல்கிறாள்: “யெகோவாவின் சொல்படி நடப்பதால், என் மனசாட்சி சுத்தமாக இருக்கிறது. இதனால், என் மனதுக்கு சந்தோஷமும் பூரண திருப்தியும் கிடைத்திருக்கிறது.”

அதிகரிப்புக்குத் தடையாய் இருப்பவற்றைச் சமாளித்தல்

டிங்மேயின் நெருங்கிய தோழியின் பெயர் ரேவன். இவள் சிறுமியாக இருந்தபோது, கிறிஸ்தவக் கூட்டங்களுக்குப் போவதையும் வெளி ஊழியத்தில் கலந்துகொள்வதையும் ‘சுத்த போர்’ என கருதினாள். ஆனால், தன் சபையிலிருந்தவர்கள் காட்டிய உண்மையான அன்புக்கும் வகுப்பு தோழிகள் காட்டிய மேலோட்டமான அன்புக்கும் வித்தியாசம் இருந்ததைப் புரிந்துகொண்டாள்; எனவே, தன்னுடைய வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்தாக வேண்டுமென உறுதிபூண்டாள். அவள் தன் தோழிகளிடம் பிரசங்கிக்க ஆரம்பித்தாள், இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமென்பதை அவள் சீக்கிரத்திலேயே தெளிவாகப் புரிந்துகொண்டாள். முதலாவது, துணைப் பயனியர் ஊழியம்செய்ய ஆரம்பித்தாள்; மாதத்திற்கு 50 மணிநேரத்திற்கும் அதிகமாக ஊழியத்தில் செலவிட்டாள். பின்னர், ஒழுங்கான பயனியர் ஊழியம்செய்ய ஆரம்பித்தாள்; மாதத்திற்கு 70 மணிநேரத்திற்கும் அதிகமாக ஊழியத்தில் செலவிட்டாள். அவள் இவ்வாறு கூறுகிறாள்: “யெகோவாவுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. அவர் என்னை ஒருபோதும் கைவிட்டதில்லை. அவருக்கு வேதனை தரும் காரியங்களை நான் செய்திருந்தபோதிலும்கூட அவர் என்னிடம் அன்பாகவே இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட அன்பை, என் அம்மாவும் சபையிலுள்ள மற்றவர்களும் என்னிடம் காட்டியிருக்கிறார்கள். இப்போது நான் ஐந்து பேருக்கு பைபிள் படிப்பு நடத்தி வருகிறேன், இது பூரண திருப்தி தரும் வேலை என்று மனதார நம்புகிறேன்.”

புறநகர் பகுதியிலுள்ள உயர்நிலை பள்ளியில் படிக்கும் யெகோவாவின் சாட்சிகளான இரண்டு இளைஞர்கள், பள்ளி சார்பாக நாட்டுப்புற நடன போட்டியில் கலந்துகொள்ளும்படி சொல்லப்பட்டார்கள். அது எத்தகைய போட்டி என்பதை அவர்கள் அறிந்துகொண்டபோது, அதில் கலந்துகொள்ள அவர்களுடைய கிறிஸ்தவ மனசாட்சி இடங்கொடுக்கவில்லை. அதனால், தங்கள் கருத்தை ஆசிரியர்களிடம் எடுத்துச்சொல்லி, அதிலிருந்து விலகிக்கொள்ள அனுமதி கேட்டார்கள். ஆசிரியர்களோ மறுத்துவிட்டார்கள். மாறாக, அவர்களை ஏற்கெனவே தேர்ந்தெடுத்துவிட்டதால் அவர்கள் போய்த்தான் ஆக வேண்டுமென ஆசிரியர்கள் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள். இணங்கிப்போக மனமில்லாத இந்த இளைஞர்கள் கல்வித் துறை வெப்சைட்டிற்குப் போய், தங்கள் பிரச்சினையைக் குறிப்பிட்டு ஈ-மெயில் ஒன்றை அனுப்பினார்கள். தனிப்பட்ட விதத்தில் அவர்களுக்கு எந்தப் பதிலும் வராவிட்டாலும், இத்தகைய போட்டிகளில் கலந்துகொள்ளும்படி யாரையும் வற்புறுத்தக்கூடாதென கல்வித் துறை சீக்கிரத்திலேயே பள்ளிக்குக் கட்டளையிட்டது. பைபிள் பயிற்சி தங்களுடைய மனசாட்சியை செதுக்கிச் சீர்படுத்தியதோடு, சரியானதைச் செய்ய பலத்தையும் அளித்ததை அறிந்து இந்த இரண்டு இளைஞர்களும் ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள்!

உடல் குறைபாடுகள் உள்ளவர்கள்கூட பைபிள் தரும் நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதில் அதிக மகிழ்ச்சி காண்கிறார்கள். மின்யூ என்பவள் பிறவியிலேயே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவள். தன் கைகளைப் பயன்படுத்த முடியாததால், பைபிள் வசனங்களை வாசிப்பதற்கு அதன் பக்கங்களை தன் நாவினால் திருப்புகிறாள். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் அவள் படுத்துக்கொண்டு பேச்சுகளைக் கொடுக்கும்போது அவளுடன் உரையாடுபவர் தாழ்வான இருக்கையில் உட்கார்ந்துகொண்டு அவளுக்கு மைக் பிடிப்பார். இத்தகைய பேச்சுகளைக் கொடுக்க மின்யூ எடுக்கும் முயற்சிகளைப் பார்க்கும்போது அது நெஞ்சை நெகிழ வைக்கிறது!

இவள் ராஜ்ய பிரஸ்தாபியாய் ஆக ஆசைப்பட்டபோது, இவளுக்கு உதவுவதற்காகச் சபையிலுள்ள சகோதரிகள் சிலர் டெலிபோனில் சாட்சிகொடுக்கக் கற்றுக்கொண்டார்கள். டெலிபோனில் பேசுவதற்காக இவள் தன் நாவினால் எண்களை அழுத்துகிறாள், யாரிடமெல்லாம் இவள் பேசினாள் என்ற விவரங்களை எழுதி வைக்க சகோதரிகள் உதவுகிறார்கள். இந்த வகை ஊழியம் இவளுக்கு அந்தளவு மகிழ்ச்சி அளிப்பதால், துணைப் பயனியர் ஊழியம் செய்து வருகிறாள்; கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களிடம் டெலிபோனில் பேசுவதற்கு மாதாமாதம் 50 முதல் 60 மணிநேரம்வரை செலவழிக்கிறாள். இவளோடு பேசியவர்களில் சிலர் பைபிள் பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறார்கள், சிலர் டெலிபோனில் “மறுசந்திப்புக்கு” ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்த விதத்தில் சாட்சிகொடுத்து இப்போது மூன்று பைபிள் படிப்புகளை இவள் நடத்தி வருகிறாள்.

உண்மைதான், தைவானிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய 78 சபைகளில், புத்துணர்ச்சி அளிக்கும் பனித்துளி போன்ற இளம் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள்; நெரிசல்மிக்க இந்தத் தீவில் குடியிருக்கும் கோடிக்கணக்கானோருக்கு உயிர்காக்கும் ராஜ்ய நற்செய்தியை இவர்கள் மனப்பூர்வமாகவும், பக்திவைராக்கியத்தோடும் அறிவித்து வருகிறார்கள். உலகெங்கும் நிறைவேறி வருகிற பின்வரும் பைபிள் தீர்க்கதரிசனத்தில் இவர்களும் ஒரு சிறிய பங்கு வகிக்கிறார்கள்: “உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யெளவன ஜனம் உமக்குப் பிறக்கும்.” (சங்கீதம் 110:3) இந்த இளைஞர்கள் தங்கள் மத்தியிலுள்ள பெரியவர்களுக்கு எப்பேர்ப்பட்ட புத்துணர்ச்சி அளிக்கிறார்கள்! எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்கள் தங்களது பரலோகத் தகப்பனாகிய யெகோவா தேவனுக்கு எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை அளிக்கிறார்கள்!​—⁠நீதிமொழிகள் 27:11.

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 10-ன் பெட்டி/படம்]

அதிக ராஜ்ய மன்றங்கள் தேவை

தைவானில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதிக ராஜ்ய மன்றங்கள் தேவைப்படுகின்றன; இத்தேவையைப் பூர்த்தி செய்வது பெரும் சவாலை முன்வைக்கிறது. ஏன்? ஏனென்றால் ராஜ்ய மன்றங்கள் கட்டுவதற்குத் தகுந்த இடங்கள் புறநகர் பகுதிகள் சிலவற்றில் மட்டுமே உள்ளன. நிலத்தின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருவதோடு, கட்டுமான சட்டங்களும் கெடுபிடிமிக்கவையாய் உள்ளன. பெருநகரங்களிலும் மாநகரங்களிலும் அலுவலகங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை வேண்டுமானால் வாங்கி, அவற்றை ராஜ்ய மன்றமாக மாற்றி அமைக்க முடியும்; வேறு வழியே இல்லை. அப்படியே செய்தாலும் பெரும்பாலான அலுவலகங்களின் கூரைகள் வெகு தாழ்வாக உள்ளன, பராமரிப்பு செலவும் மிக அதிகமாக இருக்கின்றன, பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிற இடங்களாக உள்ளன, அல்லது வேறு சில காரணங்களும் அவற்றை ராஜ்ய மன்றங்களாகப் பயன்படுத்த முடியாதபடி செய்துவிடுகின்றன.

ஆனாலும், சமீப வருடங்களில் தைவானிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் அநேக ராஜ்ய மன்றங்களைப் புதிதாகப் பெற்றிருக்கிறார்கள். கூடுதல் பணச் செலவை ஏற்றுக்கொள்ளவும், கட்டுமான திறமையையும் வளர்த்துக்கொள்ளவும் இவர்கள் தயாராய் இருப்பதால், ராஜ்ய மன்றங்களுக்காகத் தொடர்ந்து இடங்களைத் தேடி வருகிறார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்