உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 4/15 பக். 8-12
  • பனாமாவில் தடைகளைத் தகர்த்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பனாமாவில் தடைகளைத் தகர்த்தல்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • துணை தலைப்புகள்
  • வேறுபட்ட பின்னணிகள் எனும் தடையைத் தகர்த்தல்
  • கோமார்காவில் தடைகளைத் தகர்த்தல்
  • இருதயத்தைச் சென்றெட்ட கட்டுமரப் பயணம்
  • எழுத்தறிவின்மை எனும் தடையைத் தகர்த்தல்
  • காதுகேளாமை எனும் தடையைத் தகர்த்தல்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 4/15 பக். 8-12

பனாமாவில் தடைகளைத் தகர்த்தல்

“பனாமா, உலகை இணைக்கும் பாலம்.” 50 வருடங்களுக்கு முன், மத்திய அமெரிக்க நாடாகிய பனாமாவை அந்நாட்டின் பிரபல ரேடியோ நிகழ்ச்சி ஒன்று இவ்வாறுதான் விவரித்தது. இப்போது, மற்ற அநேகரும் பனாமாவை இப்படியே கருதுகிறார்கள்.

பனாமா எவ்விதங்களில் பாலம்போல் இருக்கிறது? முதலாவதாக, அந்நாடு வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் பாலம்போல் இருக்கிறது; இவ்வாறு, அவற்றை இணைப்பதில் உள்ள தடையைத் தகர்க்கிறது. இரண்டாவதாக, அந்நாட்டிலுள்ள கால்வாயும்கூட பாலம்போல் செயல்படுகிறது. எப்படியெனில், அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைத்து, அவற்றைக் கடக்கும் தடையைத் தகர்க்கிறது. இதனால் உலகெங்கிலுமிருந்து வருகிற கப்பல்கள், பனாமா கால்வாய் வழியாகச் சில மணி நேரங்களுக்குள் கடந்து செல்ல முடிகிறது. இல்லையெனில் அவை பல நாட்கள் அல்லது பல வாரங்கள் பயணிக்க வேண்டியிருக்கும். அதோடு, பொறியியல் சாதனையாக விளங்கும் இந்தக் கால்வாய்மீது ஒரு நிஜப் பாலம்கூட (பிரிட்ஜ் ஆஃப் தி அமெரிக்காஸ்) அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறெல்லாம், பனாமா உலகின் பெரும்பாலான பாகங்களை இணைத்து, தடைகளைத் தகர்க்கிறது. அதேசமயத்தில் அங்கு வேறு பல தடைகளும் தகர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றை இப்போது சிந்திக்கலாம்.

வேறுபட்ட பின்னணிகள் எனும் தடையைத் தகர்த்தல்

பனாமாவில் வசிப்பது அந்நாட்டு மக்கள் மட்டுமல்ல. மற்ற பல நாடுகளையும் இனங்களையும் சேர்ந்த மக்கள்கூட நாடெங்கும் பரவியிருக்கிறார்கள். வேறுபட்ட பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் இவர்கள். ஆம், சமுதாயத்திலும், கலாச்சாரத்திலும், மதத்திலும், மொழியிலும் இவர்கள் வேறுபட்டிருக்கிறார்கள். இந்த வேற்றுமை எனும் தடையைத் தகர்க்க முடியுமா? கடவுளுடைய வார்த்தையிலுள்ள மதிப்புவாய்ந்த சத்தியத்தைக் கொண்டு மக்களுடைய சிந்தனையையும் நோக்கத்தையும் ஒன்றிணைக்க முடியுமா?

நிச்சயமாக முடியும். எபேசியர் 2:17, 18-⁠ல் அப்போஸ்தலன் பவுல் சொல்கிறபடி, யூதரும் யூதரல்லாதவருமான கிறிஸ்தவர்கள் மத்தியில் இதே போன்ற ஒரு வேற்றுமை முதல் நூற்றாண்டில் நிலவியது. ஆனால், கிறிஸ்துவுடைய பலியின் அடிப்படையில் ஐக்கியமாவதன் மூலம் அந்த வேற்றுமையை அவர்கள் முறியடித்தார்கள். பவுல் இவ்வாறு எழுதினார்: “அல்லாமலும் அவர் [இயேசு] வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். அந்தப்படியே நாம் இரு திறத்தாரும் [அதாவது, இனத்தவரும்] ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.”

அதேவிதமாக, பனாமாவில்கூட இன்று யெகோவாவின் சாட்சிகள், “சமாதானத்தைச் சுவிசேஷமாக” அறிவிக்கிறார்கள். யாரிடம்? முற்றிலும் வித்தியாசமான மதங்களிலிருந்தும் தொலைதூர இடங்களிலிருந்தும் வந்திருக்கும் தனிநபர்களிடமும் தொகுதிகளிடமும் அதை அறிவிக்கிறார்கள். யெகோவாவிடத்தில் “சேரும்” மக்கள் மத்தியில் ஐக்கியம் என்ற அருமையான பண்பு வளர்கிறது. அதன் விளைவாக, பனாமாவில் ஆறு மொழிகளில் கிறிஸ்தவ சபைகள் உருவாகியுள்ளன. ஸ்பானிஷ், காண்டோனீஸ், பனாமா சைகை மொழி, ஆங்கிலம் ஆகியவற்றிலும் கூனா, கொபெரி (கவைமி) ஆகிய உள்ளூர் மொழிகளிலும் சபைகள் உருவாகியுள்ளன. மொழிகளில் வேறுபட்டிருக்கும் இவர்களெல்லாரும் யெகோவாவை வணங்குவதில் ஒன்றுபட்டிருப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்வது நமக்கு உற்சாகமளிக்கும்.

கோமார்காவில் தடைகளைத் தகர்த்தல்

பனாமாவில் எட்டு பழங்குடி தொகுதிகள் உள்ளன. அதில் கொபெ பழங்குடி தொகுதிதான் மிகப் பெரியது. இந்தத் தொகுதியில் சுமார் 1,70,000 பேர் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் கோமார்காவில், அதாவது இவர்களுக்கென சமீபத்தில் ஒதுக்கப்பட்ட பகுதியில் வசிக்கிறார்கள். பரந்துவிரிந்த இப்பகுதியின் பெரும்பாலான பாகத்தை கரடுமுரடான மலைகள் ஆக்கிரமித்துள்ளன. அதனால் நடந்துதான் அங்கு செல்ல முடியும். அதோடு, அங்குள்ள அழகான கடற்கரை பகுதிகளுக்குக் கடல்வழியாகத்தான் செல்ல முடியும். மக்கள் பெரும்பாலும் ஆற்றங்கரைகளிலும் கடற்கரைப் பகுதிகளிலுமே குடியிருக்கிறார்கள். இந்த ஆறுகள் போக்குவரத்திற்குப் பேருதவி புரிகின்றன. கோமார்காவில் வசிக்கிற மக்கள் மலைப் பகுதிகளில் காப்பிச் செடிகளைப் பயிரிடுகிறார்கள், மீன் பிடிக்கிறார்கள், விவசாயம் செய்கிறார்கள். இவற்றில் கிடைக்கும் கொஞ்சநஞ்ச பணத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். அநேகர் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இருப்பினும், மாமா டாடா எனும் உள்ளூர் மதத்தைப் பின்பற்றுகிற சிலரும் இருக்கிறார்கள். வேறு சிலர், நோய்வாய்ப்படும்போது அல்லது அசுத்த ஆவிகளின் தொந்தரவுக்கு ஆளாவதுபோல் உணரும்போது உள்ளூரிலுள்ள ஸூகியாஸ்களிடம் (ஷாமான் என்ற மதத் தலைவர்களிடம்) செல்கிறார்கள். அநேகர் ஸ்பானிஷ் மொழி பேசினாலும் எல்லாரும் நன்கு புரிந்துகொள்வது கொபெரி மொழிதான்.

இருதயத்தைச் சென்றெட்ட கட்டுமரப் பயணம்

சத்தியம் மக்களின் மனதை மட்டுமல்ல, இருதயத்தையும் எட்ட வேண்டும்; அப்போதுதான் பைபிளுக்கு இசைவாக தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள மக்கள் தூண்டப்படுவார்கள் என்பதை யெகோவாவின் சாட்சிகள் அறிந்திருக்கிறார்கள். அதனால், கோமார்கா பகுதியிலுள்ள எட்டு வித்தியாசமான தொகுதிகளுக்கு அனுப்பப்பட்ட விசேஷப் பயனியர்கள் உள்ளூர் சாட்சிகளிடமிருந்து கொபெரி மொழியைக் கற்றிருக்கிறார்கள்.

இந்தப் பகுதியில் 14 சபைகள் உருவாகியிருப்பது எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும் என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறது. உதாரணத்திற்கு, விசேஷப் பயனியர்களான டிமஸ், ஹிஸெலா என்ற தம்பதியர் சில வருடங்களுக்கு முன்பாக டோபோபெ என்ற கடற்கரைப் பகுதியிலுள்ள சிறிய சபைக்கு நியமிக்கப்பட்டார்கள்; அங்கு 40 பிரஸ்தாபிகள் இருந்தார்கள். எளிமையான மக்கள் வசித்துவந்த அட்லாண்டிக் கடற்கரை நெடுக ஊழியம் செய்வதற்கு அவர்கள் பலமுறை கட்டுமரப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. பழக்கமாகும்வரை அது ரொம்பக் கடினமாக இருந்தது. அமைதியான கடல் திடீரென கொந்தளித்து ஆட்களையே அமிழ்த்திவிடும் ஆபத்து வேறு இருந்தது. அதோடு, கிராமம் கிராமமாகச் செல்ல கட்டுமரத்தில் துடுப்பு போட்டுப்போட்டு அவர்களுடைய கையும் முதுகும் உடைந்துவிடும்போல் ஆகிவிட்டன. போதாததற்கு, அந்த ஊர்மக்கள் பேசின மொழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. என்றாலும், அவர்களுடைய தியாகங்களுக்கும் விடாமுயற்சிக்கும் நல்ல பலன் கிடைத்தது. ஆம், 2001-⁠ல் கிறிஸ்துவின் மரண நினைவுநாள் ஆசரிப்புக்கு 552 பேர் வந்திருந்தார்கள்.

டோபோபெ கடற்கரைக்கு அப்பால் புன்டா எஸ்கோன்டிடா என்ற கிராமம் இருக்கிறது. பிரஸ்தாபிகள் கொஞ்ச பேர் கூட்டங்களுக்காக வாராவாரம் அங்கிருந்து டோபோபெவிற்கு படகில் பயணித்தார்கள்; சீதோஷ்ண நிலை நன்றாக இருந்தபோதெல்லாம் அவ்வாறு பயணம் செய்து கூட்டங்களுக்குச் சென்றார்கள். ஆனால், இந்தக் கிராமத்தில் புதிய சபை உருவாவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. எனவே, டிமஸும் ஹிஸெலாவும் புன்டா எஸ்கோன்டிடா கிராமத்திற்குப் போகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இரண்டு வருடங்களுக்குள் அங்கிருந்த சிறிய தொகுதி 28 பிரஸ்தாபிகள் உடைய ஒரு சபையாக வளர்ந்தது. வாராந்தர பொதுப்பேச்சிற்கு 114 பேர் வந்தார்கள். 2004-⁠ல் கிறிஸ்துவின் மரண நினைவுநாள் ஆசரிப்புக்கு 458 பேர் வந்திருந்தபோது, அந்தப் புதிய சபையினருக்குச் சந்தோஷம் தாளவில்லை.

எழுத்தறிவின்மை எனும் தடையைத் தகர்த்தல்

படிப்பறிவில்லாத, ஆனால் நேர்மை மனமுள்ள மக்களில் அநேகர் எழுத படிக்க கற்றுக்கொள்வதன் மூலம் யெகோவாவுடன் நெருங்கிய உறவை வளர்த்திருக்கிறார்கள். கோமார்கா மலைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஃபெர்மினா என்ற இளம் பெண்ணின் விஷயத்தில் இதுவே நடந்தது. மிஷனரிகள் அவளைச் சந்தித்தபோது, ராஜ்ய செய்தியை அவள் அதிக ஆர்வத்துடன் கேட்டாள். பைபிள் படிப்பைப் பற்றி அவர்கள் சொன்னபோது இன்னும் நிறைய தெரிந்துகொள்ள விரும்பியதாகக் கூறினாள். ஆனால், ஒரு பிரச்சினை. ஸ்பானிஷ் மொழியும் கொபெரி மொழியும் அவளுக்குப் பேசத் தெரிந்திருந்தாலும் அவற்றை எழுதவோ படிக்கவோ தெரியவில்லை. வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் சிரத்தையுடன் முயலுங்கள் என்ற சிற்றேட்டைப் பயன்படுத்தி அந்த மிஷனரிகளில் ஒருவர் அவளுக்குப் பாடம் நடத்த முன்வந்தார்.a

ஃபெர்மினா, படிப்பதில் கெட்டிக்காரியாக இருந்தாள்; சிற்றேட்டிலுள்ள பாடங்களை ஆர்வமாகப் படித்தாள். கொடுக்கப்பட்ட வீட்டுப் பாடங்கள் எல்லாவற்றையும் செய்தாள், பிழையில்லாமல் எழுதுவதற்கும் பழகினாள். ஒரே வருடத்திற்குள், நீங்கள் கடவுளுடைய நண்பராகலாம்!b என்ற சிற்றேட்டைப் படிக்குமளவுக்கு முன்னேறினாள். பிறகு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டபோது அவற்றிற்கு வந்தாள். அவள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள்; எனவே, பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு கூட்டங்களுக்கு வர காசில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டாள். அவளுடைய நிலைமையை அறிந்த ஒரு பயனியர், பழங்குடி பெண்களின் பாரம்பரிய உடையைத் தைத்து விற்கும்படி ஃபெர்மினாவிற்கு ஓர் ஆலோசனை கொடுத்தார். அவளும் அப்படியே செய்தாள். அவளுக்கு மற்ற தேவைகள் இருந்தபோதிலும், கிடைத்த பணத்தைக் கூட்டங்களுக்கு வருவதற்கு மட்டுமே பயன்படுத்தினாள். அவளும் அவள் குடும்பமும் இப்போது இன்னொரு இடத்திற்கு மாறிச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் எழுத படிக்க கற்றுக்கொண்டதற்காக, அதுவும் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொண்டதற்காக மிகவும் சந்தோஷப்படுகிறார்கள். ஃபெர்மினா தொடர்ந்து முன்னேற்றம் செய்துவருகிறாள்.

காதுகேளாமை எனும் தடையைத் தகர்த்தல்

பனாமாவில், அநேக குடும்பங்களில் காதுகேளாதவர்கள் இருக்கிறார்கள். இந்தக் குடும்பங்கள் அதைக் குறித்து சங்கடப்படுவதுபோல் தெரிகிறது. சில சமயங்களில் காதுகேளாதவர்களுக்கு எவ்வித கல்வியும் தரப்படுவதில்லை. காதுகேளாதவர்களுடன் பேசுவது மிகக் கடினமாக இருப்பதால் அவர்களில் அநேகர் ஒதுக்கப்பட்டவர்களாய் உணருகிறார்கள், தனிமையில் வாடுகிறார்கள்.

எனவே, காதுகேளாதவர்கள் நற்செய்தியைக் ‘கேட்பதற்கு’ ஏதாவது ஏற்பாடு செய்தாக வேண்டியிருந்தது. பயணக் கண்காணி ஒருவர், பனாமா சைகை மொழியைக் கற்றுக்கொள்ளும்படி பயனியர்களை உற்சாகப்படுத்தியதால் ஆர்வமுள்ள சில பயனியர்களும் மற்ற சகோதர சகோதரிகளும் அதைக் கற்றுக்கொள்ள தொடங்கினார்கள். காதுகேளாதவர்களுக்கு உதவ அவர்கள் எடுத்த முயற்சி பலன் தந்தது.

2001-⁠ன் இறுதியில் பனாமா சிட்டியில் ஒரு சைகை மொழி தொகுதி உருவானது. கூட்டத்திற்கு சுமார் 20 பேர் வரத் தொடங்கினார்கள். சகோதர சகோதரிகள் அந்த மொழியை நன்கு கற்றுக்கொண்டபோது காதுகேளாத நிறைய பேருக்கு பைபிள் சத்தியத்தைச் சொல்ல முடிந்தது. இதனால், காதுகேளாதவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் முதன்முறையாக பைபிள் சத்தியத்தை தங்கள் சொந்த பாஷையில் “கேட்க” முடிந்தது. காதுகேளாத பிள்ளைகளை உடைய அநேக சாட்சிகள் தங்கள் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்கள். பிள்ளைகள் பைபிள் சத்தியத்தை சீக்கிரமாகப் புரிந்துகொண்டதையும் சத்தியத்தில் அதிக ஆர்வம் காட்டியதையும் அவர்கள் கவனித்தார்கள். அநேக பெற்றோர் சைகை மொழியைக் கற்றுக்கொண்டு தங்கள் பிள்ளைகளுடன் முன்பைவிட நன்றாகப் பேசினார்கள். ஆன்மீக ரீதியிலும் அவர்களால் பிள்ளைகளுக்கு உதவ முடிந்தது; இவ்வாறு அவர்களுடைய குடும்பம் ஸ்திரப்பட்டது. எல்ஸா மற்றும் அவருடைய மகள் இரைடாவின் அனுபவம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

சைகை மொழி தொகுதியுடன் சேர்ந்து சேவை செய்த ஒரு சாட்சி இரைடாவைப் பற்றி கேள்விப்பட்டபோது அவளைப் போய்ச் சந்தித்தார்; பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!c என்ற சிற்றேட்டையும் கொடுத்தார். அந்தச் சிற்றேட்டில் புதிய உலகத்தை விளக்கும் படங்களைப் பார்த்தபோது அவளுக்கு ரொம்பவே ஆசையாகிவிட்டது. அதனால் அந்தச் சிற்றேட்டிலிருந்து அவளுக்கு ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு கடவுள் நம்மிடமிருந்து எதை தேவைப்படுத்துகிறார்?d என்ற சிற்றேட்டிலிருந்து படிப்பு நடத்தப்பட்டது. இந்தச் சிற்றேட்டைப் படித்து தயார்செய்வதற்கும் விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கும் அவள் தன் அம்மா எல்சாவிடம் உதவிகேட்க ஆரம்பித்தாள்.

எல்சா இரண்டு சவால்களை எதிர்ப்பட்டார்: ஒன்று, அவர் ஒரு யெகோவாவின் சாட்சியாக இல்லாததால் பைபிள் சத்தியங்கள் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை; மற்றொன்று, அவருக்கு சைகை மொழி தெரிந்திருக்கவில்லை. அதுமட்டுமல்ல, அவர், இரைடாவிடம் சைகைகள் செய்வதற்குப் பதிலாக அவளைப் பேச வைக்க வேண்டும் என்றும் அவருக்கு சொல்லப்பட்டிருந்தது. இதனால் அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே அவ்வளவாகப் பேச்சுத்தொடர்பு இல்லாமற்போனது. ஆனால், உதவிசெய்யும்படி இரைடா கெஞ்சியதில் மனம் நெகிழ்ந்துபோன எல்சா தனக்கு பைபிள் படிப்பு நடத்தும்படி ஒரு சகோதரியைக் கேட்டுக்கொண்டார். எல்சா சொல்கிறார்: “என் மகளுக்காகத்தான் நான் அப்படி கேட்டேன். ஏனென்றால், அவள் வேறு எதிலும் இந்தளவு ஆர்வம் காட்டினதை நான் பார்த்ததே இல்லை.” தன் மகள் பைபிள் படித்தபோது எல்சாவும் அதில் கலந்துகொண்டு சைகை மொழியைக் கற்றுக்கொண்டார். எல்சா தன் மகளுடன் அதிக நேரம் செலவிட்டதால் அவர்கள் இருவரும் நிறைய ‘பேசிக்கொள்ள’ முடிந்தது. இரைடா கவனமாகத் தன் நண்பர்களைத் தேர்ந்தெடுத்தாள், சபை கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தாள். இப்போது அம்மாவும் மகளும் கூட்டங்களுக்குத் தவறாமல் வருகிறார்கள். எல்சா சமீபத்தில்தான் முழுக்காட்டப்பட்டார், இரைடாவும் அதற்காக முயற்சி செய்துவருகிறாள். எல்சா, இப்போதுதான் தன் மகளைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார். அதோடு, இப்போதெல்லாம் தங்களுக்குப் பிடித்தமான அநேக விஷயங்களைப் பற்றிப் பேச முடிகிறது என்றும் சொல்கிறார்.

இந்த சைகை மொழி தொகுதி ஏப்ரல் 2003-⁠ல் ஒரு சபையாக மாறியது. இப்போது அதில் சுமார் 50 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். ஆனால் அதற்கும் அதிகமானோர் கூட்டங்களுக்கு வருகிறார்கள். இவர்களில் மூன்றில் ஒரு பாகத்தினர் காதுகேளாதவர்கள். இந்த பனாமா சிட்டிக்கு வெளியே மூன்று இடங்களில் சைகை மொழி தொகுதிகள் உருவாகியிருக்கின்றன. காதுகேளாத இன்னும் அநேகருக்கு உதவ வேண்டியிருக்கிறது; என்றாலும், காதுகேளாத நல்மனமுள்ள ஆட்களுக்கும் அவர்களுடைய அன்புள்ள படைப்பாளரான யெகோவா தேவனுக்கும் இடையே உள்ள “மெளனம்” எனும் தடையைத் தகர்த்தெறிவதற்கு முதல் படி எடுக்கப்பட்டிருக்கிறது.

பனாமா முழுவதிலும் இதுபோன்ற நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. பனாமாவில் மக்கள் பல்வேறு கலாச்சாரங்களிலிருந்தும் மொழிகளிலிருந்தும் பின்னணிகளிலிருந்தும் வந்திருந்தாலும் அநேகர் ஒரே மெய்த் தேவனை வணங்குவதில் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள். இன்று “உலகின் பாலமாக” கருதப்படுகிற இந்நாட்டில், யெகோவாவின் சத்திய வார்த்தையும் ஒரு பாலம்போல் செயல்பட்டு, பேச்சுத்தொடர்பு தடைகளைத் தகர்த்திருக்கிறது.​—⁠எபேசியர் 4:4.

[அடிக்குறிப்புகள்]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

c யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

d யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 8-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

கரிபியன் கடல்

பனாமா

டோபோபெ

பசிபிக் பெருங்கடல்

பனாமா கால்வாய்

[பக்கம் 8-ன் படம்]

எம்ப்ராய்டரி துணிகளைப் பிடித்துக்கொண்டு நிற்கும் கூனா இனப் பெண்கள்

[பக்கம் 9-ன் படம்]

கொபெ பெண்மணியிடம் மிஷனரி ஒருவர் நற்செய்தி சொல்கிறார்

[பக்கம் 10-ன் படம்]

கொபெவைச் சேர்ந்த சாட்சிகள் ஒரு விசேஷ மாநாட்டிற்கு செல்ல படகில் ஏறுகிறார்கள்

[பக்கம் 11-ன் படங்கள்]

கலாச்சார, மொழி வேறுபாடுகள் மத்தியிலும் பனாமாவில் பைபிள் சத்தியம் மக்களை ஒன்றிணைத்திருக்கிறது

[பக்கம் 12-ன் படம்]

சைகை மொழியில் “காவற்கோபுர” படிப்பு

[பக்கம் 12-ன் படம்]

எல்சாவும் அவருடைய மகளும் நிறைய விஷயங் களைப் ‘பேசி’ மகிழ்கிறார்கள்

[பக்கம் 8-ன் படங்களுக்கான நன்றி]

கப்பலும் கூனா இனப் பெண்களும்: © William Floyd Holdman/Index Stock Imagery; கிராமம்: © Timothy O’Keefe/Index Stock Imagery

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்