பொலிவியாவின் ஒதுக்குப்புற நகரங்களில் நற்செய்தி பரவுகிறது
நாங்கள் சுமார் 20 பேர் ஆற்றங்கரையில் கூடிவந்திருக்கிறோம். அந்த ஆறு உற்பத்தியாகும் இடத்தை நோக்கிப் பயணம் செய்ய ஆவலோடு காத்திருக்கிறோம். அங்குள்ள கிராமங்களைப் போய் பார்ப்பதுதான் எங்கள் நோக்கம். நாங்கள் ஆண்டிஸ் மலைத்தொடரின் அடிவாரத்தில் இருக்கிறோம், அமேசான் ஆற்றுப் பள்ளத்தாக்கை பேனியாறு சந்திக்கும் இடமே அது. அந்த இடத்தின் அழகே தனிதான்.
ஆனால், நாங்கள் உல்லாசப் பயணிகள் அல்ல. எங்களில் சிலர் அதே ஊரைச் சேர்ந்தவர்கள், மற்ற பலர் ரூரநாபாகீ நகரில் வசிப்பதற்காக தொலைதூர மாநகரங்களிலிருந்து வந்தவர்கள். இந்த அழகான சிறிய நகரத்தில், பூத்துக்குலுங்கும் மரங்களும் ஓலைக் குடிசைகளும் இருக்கின்றன. அமைதியான தெருக்களில், மோட்டார் வாகனத்தின் சத்தம் மட்டுமே எப்போதாவது கேட்கிறது. நாங்கள் ஏன் அங்கு சென்றோம் தெரியுமா?
பொலிவியாவின் மற்ற பாகங்களிலும் எங்களைப் போன்ற யெகோவாவின் சாட்சிகள் இப்படிப் பயணம் செய்வது வழக்கம்தான். அவர்கள் பல மாநகரங்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் வந்து, இந்தச் சிறு நகரங்களில் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்கின்றனர்.—மத்தேயு 24:14.
தென் அமெரிக்காவின் மத்தியில் பொலிவியா இருக்கிறது. பிரான்சைவிட இந்நாட்டின் நிலப்பரப்பு இரு மடங்காகும், ஆனால் மக்கள்தொகையோ பிரான்சின் மக்கள்தொகையில் ஏறக்குறைய பத்து சதவீதம் மட்டுமே. பொலிவியாவில், பெரும்பாலான மக்கள் மிகவும் உயரத்தில் அமைந்துள்ள மாநகரங்களிலும் சுரங்கப் பட்டணங்களிலும் குடியிருக்கின்றனர் அல்லது விவசாயம் செய்யப்படும் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கின்றனர். என்றாலும், வெப்பமண்டல தாழ்நிலங்களில், பரந்துவிரிந்து கிடக்கும் அநேக காடுகளின் காரணமாக நகரங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக அமைந்திருக்கின்றன.
1950-களிலும் 1960-களிலும், பெட்டி ஜேக்ஸன், எல்ஸி மையன்பர்க், பமெலா மோஸ்லி, ஷார்லட் டாமாஷாஃபெஸ்கி ஆகிய தைரியமிக்க மிஷனரிகள் அநேக ஒதுக்குப்புற நகரங்களில் முதன்முதலாகச் சென்று ஊழியம் செய்தனர். நல்மனமுள்ளோருக்கு பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொடுத்து, சிறுசிறு சபைகளை உருவாக்க உதவினர். 1980-களிலும் 1990-களிலும், யெகோவாவின் சாட்சிகளது எண்ணிக்கை குறிப்பாக மாநகரங்களில் ஆறு மடங்காக உயர்ந்தது. இப்போது அந்த மாநகரங்களின் ஒவ்வொரு பகுதியிலும் சபைகள் இருக்கின்றன. அச்சபைகளை செல்வச் செழிப்பான மாவட்டங்களில் நீங்கள் காணலாம்—அடுக்குமாடி ஆபீஸ்களும் மாடமாளிகைகளும் சூப்பர் மார்க்கெட்டுகளும் நிறைந்த மாவட்டங்களில் காணலாம். அதேசமயத்தில், குக்கிராமங்களிலும் சபைகளைக் காணலாம்—திறந்தவெளி சந்தைகளும் வண்ணவண்ண பாரம்பரிய ஆடைகளை அணியும் மக்களும் களிமண் குடிசைகளும் உள்ள குக்கிராமங்களிலும் காணலாம். ஆனால், யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்ள ஒதுக்குப்புற இடங்களில் வாழும் இன்னும் அநேகருக்கு எப்படி உதவலாம்?
நகர வாழ்க்கையின் வசதிகளைத் தியாகம் செய்தல்
கடந்த இருபது ஆண்டுகளில், பொலிவியாவின் சுரங்க நகரங்களிலிருந்தும் கிராமப்புறங்களிலிருந்தும் மக்கள் மாநகரங்களுக்கு திரண்டு வந்திருக்கின்றனர். நகரத்திலிருந்து கிராமத்திற்கு மக்கள் குடிமாறிச் செல்வதைப் பார்ப்பது அபூர்வம். அநேக கிராமங்களில் ஒரேவொரு தொலைபேசிதான் இருக்கும்; போதாக்குறைக்கு, ஒரு நாளில் சில மணிநேரமே மின்சாரம் இருக்கும். இக்கிராமங்களில் வாழும் சாட்சிகள் தங்கள் சக வணக்கத்தாரை வருடாந்தர மாநாட்டில்தான் பார்க்க முடியும்; அதுவும், அதிக செலவு, ஆபத்து, களைப்பு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அங்கு சென்றால்தான் பார்க்க முடியும். கிராமப் பள்ளிகளில் அடிப்படைக் கல்வி மட்டுமே புகட்டப்படுகிறது. இப்படியிருக்க, நகரங்களிலிருந்து கிராமத்தில் குடியேற அநேக யெகோவாவின் சாட்சிகளைத் தூண்டுவது எது?
சமீபத்தில் லூயீஸ் இவ்வாறு சொன்னார்: “லாபாஸ் நகரத்தில் நல்ல வேலை கிடைக்க எனக்கு வாய்ப்பிருந்தது. ஆனால் சீஷராக்கும் வேலைதான் மிகச் சிறந்தது என்று என் பெற்றோர் எப்போதுமே சொல்வார்கள். அதனால், கொஞ்ச காலத்திற்கு நான் கட்டடக் கலையைப் படித்தேன். விடுமுறையில் ரூரநாபாகீ நகருக்குச் சென்றபோது, அங்குள்ள மக்கள் நற்செய்தியைக் கேட்க ரொம்பவே ஆர்வமுள்ளவர்களாக இருந்ததைக் கவனித்தேன். அங்கு வெகு சில சகோதரர்களே இருந்ததைப் பார்த்ததும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று தீர்மானித்தேன். இப்போது 12 பைபிள் படிப்புகளை நடத்துகிறேன். உதாரணமாக, ஓர் இளம் நபரோடும் அவருடைய மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளோடும் பைபிள் படிப்பு நடத்துகிறேன். அவர் முன்பெல்லாம் அதிகமாகக் குடிப்பார், சூதாடுவார், ஆனால் இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டார். அதுமட்டுமல்ல, யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்பவற்றை தன் நண்பர்களிடம் சொல்லத் தொடங்கிவிட்டார். எப்போதும் படிப்பிற்கு முன்னதாகவே தயாரித்து வைப்பார். மூன்று, நான்கு நாட்கள் காட்டில் மரம்வெட்ட செல்ல வேண்டியிருக்கும்போது, மிகவும் வருத்தப்படுவார்; காரணம், கிறிஸ்தவ நடவடிக்கைகள் எதையுமே தவறவிட அவருக்குப் பிடிக்காது. இவர்கள் எல்லாரையும் கிறிஸ்தவக் கூட்டங்களில் பார்க்கும்போது, இங்கு வர நான் செய்த தியாகத்திற்கெல்லாம் பலன் கிடைத்ததைப் போல் உணருகிறேன்.”
ஹுவானா ஓர் ஒற்றைத்தாய். அவர் சொல்கிறார்: “லாபாஸ் நகரில் வீடுகளில் வேலை செய்துகொண்டிருந்தேன். என் மகன் சிறியவனாக இருந்தபோது, அந்நகரில் முழுநேர ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். ஒருமுறை ரூரநாபாகீ நகருக்கு சென்றபோது, அங்கு குடியேறினால் இன்னும் அதிக ஊழியம் செய்யலாம் என்று உணர்ந்தேன். அதனால் அங்கு போனோம், வீட்டுவேலையும் எனக்குக் கிடைத்தது. தொடக்கத்தில், சுட்டுப்பொசுக்கும் வெயிலையும், பூச்சிகளின் தொல்லையையும் சகிப்பது பெரும்பாடாக இருந்தது. ஆனால், இப்போது நாங்கள் இங்கு வந்து ஏழு வருடங்கள் ஓடிவிட்டன. வாராவாரம் நிறைய பைபிள் படிப்புகளை நடத்துகிறேன், அதில் அநேகர் கூட்டங்களுக்கு வந்து தங்கள் நன்றியுணர்வைக் காட்டுகின்றனர்.” இப்போது, ஹுவானாவும் அவர் மகனும் எங்களோடு சேர்ந்து படகில் ஏறுகின்றனர். நீங்களும் வாருங்களேன்!
ஆற்றுமூலத்தை நோக்கிப் பயணம்
மலைகளுக்கிடையே உள்ள குறுகிய வழியை நெருங்க நெருங்க படகிலுள்ள மோட்டார் எஞ்சின் அலறுகிறது. கிளிக் கூட்டம் ஒன்று, ‘இது எங்கள் இடம்’ என்று சொல்வதுபோல் கீச்கீச் என்று கத்துகிறது. மலைகளிலிருந்து கொடகொடவென்று கொட்டும் கலங்கலான தண்ணீர் படகை சுழற்றுகிறது. ஆனால், படகோட்டி திறமையாக அந்த நீரோட்டத்தைச் சமாளித்து படகை ஓட்டுகிறார். அந்தச் சிறிய கிராமத்திற்கு முற்பகலில் வந்துசேர்கிறோம். அங்கு ரூரநாபாகீ சபையின் மூப்பரைச் சந்திக்கிறோம், நாங்கள் எங்கு பிரசங்கிக்க வேண்டும் என்று அவர் காட்டுகிறார்.
அந்தக் கிராமத்தில் எங்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது; மரத்தடிக்கு அல்லது மூங்கிலால் கட்டப்பட்ட ஓலைக் குடிசைக்கு மக்கள் எங்களை அழைக்கின்றனர். கொஞ்சநேரத்தில், ஓர் இளம் தம்பதியரைப் பார்க்கிறோம், அவர்கள் அந்த ஊரில் தயாரிக்கப்பட்ட ஒரு மரக் கருவியால் மும்முரமாக கரும்பைப் பிழிந்துகொண்டிருக்கின்றனர். அதன் சாறு செம்புப் பாத்திரத்தில் பீறிடுகிறது. பிற்பாடு அந்தச் சாற்றை பாகாகக் காய்ச்சி அதனை அந்நகரில் விற்பனை செய்வார்களாம். அவர்கள் எங்களை வீட்டிற்குள் அழைத்து, பைபிளைப் பற்றி அநேக கேள்விகளைக் கேட்கின்றனர்.
நாங்கள் மறுபடியும் படகில் கிராமம் கிராமமாகப் போய் பிரசங்கிக்கிறோம். நோய்க்கும் மரணத்திற்கும் முடிவு வரப்போவதாக பைபிளில் சொல்லப்பட்டிருப்பதைக் கேட்டு, அநேகர் சந்தோஷப்படுகின்றனர். (ஏசாயா 25:8; 33:24) இங்கு, மருத்துவ வசதி அதிகம் இல்லாததால், தங்கள் பிள்ளையை பறிகொடுத்த சோகத்தில் பெரும்பாலான குடும்பங்கள் தவிக்கின்றன. ஏழை விவசாயியாகவோ மீனவராகவோ வாழ்க்கையைத் தள்ளுவது பயங்கர கஷ்டமாகவும், பாதுகாப்பற்றதாகவும் இருக்கிறது. அதனால், வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் ஓர் அரசாங்கத்தைப் பற்றி சங்கீதம் 72-ல் கடவுள் அளித்துள்ள வாக்குறுதியைக் கேட்டு அநேகர் ஆர்வமடைகின்றனர். இவ்வளவு தொலைதூர இடங்களில் வசிக்கும் ஆர்வமுள்ள இந்த ஜனங்கள், கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வர முயற்சி எடுப்பார்கள் என நினைக்கிறீர்களா? இந்தக் கேள்வி, அமேசான் ஆற்றுப் பள்ளத்தாக்கில் மூன்று மணிநேரப் பிரயாண தூரத்தில் அமைந்திருக்கும் சான்டா ரோசாவில் முழுநேர ஊழியர்களாய் சேவை செய்யும் எரிக், விக்கி தம்பதியரின் மனதிலிருந்தது.
ஆர்வம் உள்ளவர்கள் வருவார்களா?
12 வருடங்களுக்கு முன், கலிபோர்னியாவிலிருந்து எரிக், விக்கி தம்பதியர் பொலிவியாவிற்கு வந்தனர். அவர்களை சான்டா ரோசாவுக்குப் போகும்படி ஒரு பயணக் கண்காணி ஆலோசனை கூறினார். “இந்நகரத்தில் இரண்டே இரண்டு தொலைபேசிகள்தான் இருக்கின்றன, இன்டர்நெட் வசதியும் இல்லை” என்று விக்கி சொல்கிறார். “இங்கு காட்டு விலங்குகள் ஏராளமாக இருக்கின்றன. நாங்கள் மோட்டார் சைக்கிளில் ஒதுக்குப்புற இடங்களுக்குப் போகும்போது முதலைகள், நெருப்புக்கோழிகள், பெரிய பெரிய பாம்புகளையெல்லாம் அடிக்கடி பார்ப்போம். மிருகங்களைவிடவும், அதிக ஆர்வத்தைத் தூண்டுவது அந்த மக்கள்தான். நான்கு சிறு பிள்ளைகளையுடைய வாகா என்ற இளம் தம்பதியருடன் நாங்கள் பைபிளைப் படிக்கிறோம். நகரத்திலிருந்து அவர்கள் சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கின்றனர். அந்த அப்பா முன்பு ஒரு குடிகாரராக இருந்தார், ஆனால் இப்போது மாறிவிட்டார். ஒவ்வொரு வாரமும் தன் முழு குடும்பத்தையும் தன் தங்கையையும் ராஜ்ய மன்றத்திற்கு அழைத்து வருவார். அவருடைய பெரிய சைக்கிளில் மனைவியையும் கடைக்குட்டியையும் உட்காரவைத்து கூட்டி வருவார். வேறொரு சைக்கிளில் ஒன்பது வயது மகன் தன் தங்கையைக் கூட்டி வருவான், எட்டு வயதான மகனோ இன்னொரு சைக்கிளை தானே ஓட்டிக்கொண்டு வருவான். அவர்கள் அங்கு வந்துசேர மூன்று மணிநேரம் பிடிக்கும்.” அந்தக் குடும்பத்தார் யெகோவாவை மனதார நேசிக்கின்றனர், அதனால் சபையோடு கூட்டுறவுகொள்வதற்காக தங்களால் முடிந்த எல்லா முயற்சியும் எடுக்கின்றனர்.
சான்டா ரோசாவில், பதினெட்டே மாதங்களில் 3 பேர் முழுக்காட்டுதலுக்குத் தயாராயினர், சுமார் 25 பேர் அங்குள்ள புதிய ராஜ்ய மன்றத்திற்கு வந்தனர். அநேகர் பைபிளைப் பற்றி கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்தாலும், யெகோவாவை வணங்குவதற்கு பெருந்தடைகளை பலர் கடந்துவர வேண்டியிருந்தது.
திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கும் சவால்
பொலிவியாவுக்கும் பிரேசிலுக்கும் இடைப்பட்ட எல்லை அருகேயுள்ள ஒரு ஒதுக்குப்புற நகரத்தில் மிஷனரிகளான மாரீனா மற்றும் ஆஸ்னீ தம்பதியர் சேவை செய்கின்றனர்; இங்கு அநேகர் திருமணத்தை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு பந்தமாகக் கருதுவதில்லை, தங்கள் துணைகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர் என்று அவர்கள் விளக்குகின்றனர். “ஆன்மீக முன்னேற்றம் செய்ய இதுதான் அவர்களுக்குப் பெரிய முட்டுக்கட்டை” என்று சொல்கிறார் ஆஸ்னீ. “அந்த மக்கள் உண்மை கிறிஸ்தவர்களாக ஆக விரும்பினாலும், அது ரொம்ப சிக்கலானதாக இருக்கிறது, அதிக செலவும் பிடிக்கிறது. ஆம், சிலர் முன்பிருந்த உறவுகளை உதறிவிட்டு, ஒரே ஒருவருடன் சட்டப்பூர்வமாக திருமணம் செய்ய வேண்டியிருந்தது. என்றாலும், திருமணத்தை சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்வதைப் புரிந்துகொண்ட சிலர், பதிவுக் கட்டணத்திற்குத் தேவைப்படும் பணத்தை சம்பாதிக்க கடுமையாக உழைத்தனர்.”—ரோமர் 13:1, 2; எபிரெயர் 13:4.
நார்பெர்டோ என்பவரின் அனுபவத்தை மாரீனா சொல்கிறார்: “அவர் பல பெண்களுடன் வாழ்ந்துவிட்டு கடைசியாக பேக்கரித் தொழில் செய்த ஒரு பெண்ணுடன் வாழத் தொடங்கினார். அவரைவிட 35 வயது குறைவான அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே ஒரு மகன் இருந்தான்; நார்பெர்டோ அவனைத் தத்தெடுத்தார். அந்தப் பையன் வளர வளர, அவனுக்கு நல்ல உதாரணமாக இருக்க விரும்பினார். அதனால், நார்பெர்டோவுக்கு 70 வயது தாண்டிவிட்டிருந்தும், படிக்கத் தெரியாதிருந்தும், பேக்கரிக்கு ஒரு யெகோவாவின் சாட்சி வந்து இலவசமான பைபிள் படிப்பைப் பற்றி சொன்னபோது, அதை ஏற்றுக்கொண்டார். கடவுள் தங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நார்பெர்டோவும் அவர் மனைவியும் கற்றுக்கொண்டதும், அவர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொண்டனர், அதன் பின்பு முழுக்காட்டுதலும் பெற்றனர். நார்பெர்டோ தத்தெடுத்த அந்தப் பையன், அவர் எதிர்பார்த்தபடியே பொறுப்பான கிறிஸ்தவ இளைஞனாக ஆகியிருக்கிறான். நார்பெர்டோ இப்போது வாசிக்கக் கற்றுக்கொண்டு, சபை கூட்டங்களில் பேச்சும் கொடுக்கிறார். வயது காரணமாக அவர் சற்று தளர்ந்திருந்தாலும், நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் வைராக்கியமாகவே இருக்கிறார்.”
யெகோவாவின் ஆவியால் பலப்படுகின்றனர்
“பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து . . . பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என்று ஆரம்பகால சீஷர்களிடம் இயேசு சொன்னார். (அப்போஸ்தலர் 1:8) பூமியின் பல்வேறு பாகங்களுக்குச் செல்லும்படி கிறிஸ்தவ ஆண்களையும் பெண்களையும் கடவுளுடைய ஆவி தூண்டுவதைப் பார்ப்பது எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது! உதாரணத்திற்கு, 2004-ல் பொலிவியாவிலுள்ள வைராக்கியமான கிறிஸ்தவர்கள் சுமார் 30 பேர், ஒதுக்குப்புற பிராந்தியங்களில் விசேஷப் பயனியர்களாக தற்காலிகமாய் நியமிக்கப்பட்டனர். பயனியர்களாக, வட்டாரக் கண்காணிகளாக, பெத்தேல் ஊழியர்களாக, அல்லது மிஷனரிகளாக சேவைசெய்ய வெளிநாட்டிலிருந்து பொலிவியாவிற்கு வந்த 180 பேரின் முன்மாதிரிக்கு அவர்கள் அதிக நன்றியுள்ளவர்களாக இருக்கின்றனர். பொலிவியாவில் உள்ள 17,000 ராஜ்ய பிரஸ்தாபிகள் ஆர்வமுள்ளவர்களின் வீடுகளில் 22,000 பைபிள் படிப்புகளை நடத்துகின்றனர்.
யெகோவாவின் ஆவியால் தாங்கள் வழிநடத்தப்படுவதை உணரும்போது இந்தச் சகோதரர்கள் பூரிப்படைகின்றனர். உதாரணத்திற்கு, ராபர்ட் மற்றும் காத்தி, காமீரியில் மிஷனரிகளாக சேவை செய்யும் அழைப்பை ஏற்றுக்கொண்டனர். நதிக்கு அருகில் பச்சைக் கம்பளம் விரிக்கப்பட்டது போன்ற மலைச்சரிவுகளின் மத்தியில் காமீரி அமைந்துள்ளதால், அது எப்போதும் ஒதுக்குப்புற நகரமாகவே இருக்கிறது. “நாங்கள் சரியான சமயத்தில்தான் அங்கு சென்றோம் போலிருக்கிறது, இரண்டே வருடத்தில் கிட்டத்தட்ட 40 பேர் நற்செய்தியைப் பிரசங்கிப்பவர்களாக ஆனார்கள்” என்று ராபர்ட் சொல்கிறார்
குடிகார சூதாடி செவிகொடுக்கிறார்
பைபிளைப் படிப்பவர்கள் செய்த மாற்றத்தைப் பார்த்து நகரவாசிகள் அநேகர் கவரப்பட்டனர். உதாரணத்திற்கு, நான்கு வருடங்களுக்கு முன், ஒருநாள் அரீயெல் என்ற குடிகாரர் போதை தெளியாமல் வீட்டில் படுத்துக்கிடந்தார். சூதாட்டம் அவரை பிரபலமாக ஆக்கியிருந்தாலும், மலைபோல் ஏறிவிட்ட கடன், நிம்மதியற்ற மண வாழ்க்கை, கைவிடப்பட்ட மகள்கள் போன்ற பிரச்சினைகள் அவர் மனதை சதா வாட்டிக்கொண்டே இருந்தன. இந்நிலையில் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஒரு யெகோவாவின் சாட்சி அவரைச் சந்தித்தார். அந்தச் சகோதரர் வசனங்களை விளக்கியபோது அதை அவர் உற்று கவனித்தார். பிறகு, சந்தோஷமான குடும்ப வாழ்க்கை, பரதீஸ், கடவுளுடைய சேவை போன்ற விஷயங்களைப் பற்றி பிரசுரங்களிலிருந்து படிக்க ஆரம்பித்தார். அதன்பின், பைபிளைப் படிக்கச் சம்மதித்தார்.
மிஷனரிகள் காமீரிக்கு வந்த சமயத்திற்குள், அரீயெலின் மனைவி ஆர்மின்டாவும் பைபிளைப் படிக்கத் தொடங்கினார், ஆனால் ரொம்ப ஆர்வத்தோடு அல்ல. “அவர் குடிப்பதை நிறுத்துவதற்கு நான் எதையும் செய்யத் தயார், எனக்கு என்னவோ அவர் திருந்துவார் என்ற நம்பிக்கை இல்லை. அவரைத் திருத்தவே முடியாது” என்று அவர் சொன்னார். என்றபோதிலும், பைபிள் படிப்பு அவர் எதிர்பார்த்ததைவிட அதிக சுவாரஸ்யமாக இருந்ததால், ஒரு வருடத்திற்குள் அவர் முழுக்காட்டுதல் பெற்று தன் உறவினர்களுக்கும் சாட்சி கொடுக்க ஆரம்பித்தார். விரைவில், அந்த உறவினர்கள் பலர் யெகோவாவுக்கு தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தனர்.
குடிப்பது, புகைபிடிப்பது, சூதாடுவது ஆகியவற்றை விட்டுவிடுவது அரீயெலுக்கு பெரும் போராட்டமாக இருந்தது. இயேசுவின் மரண நினைவு ஆசரிப்பிற்கு நண்பர்கள் அனைவரையும் அவர் அழைத்தபோது, ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. “யாரெல்லாம் கூட்டத்திற்கு வரவில்லையோ அவர்களோடு பழகுவதை நிறுத்திவிடுவேன், யாரெல்லாம் வருகிறார்களோ அவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்துவேன்” என தன் மனதில் அவர் முடிவு செய்திருந்தார். இவ்விதமாக அவர் மூன்று பைபிள் படிப்புகளை ஆரம்பித்தார். சபை அங்கத்தினராக ஆவதற்கு முன்பே அரீயெல் தன் உறவினர் ஒருவருக்கு பைபிள் படிப்பு நடத்தினார்; அவரும் நல்ல முன்னேற்றம் செய்தார், இருவரும் ஒன்றாக முழுக்காட்டுதல் பெற்றனர். “என் கணவர் முன்புபோல் இல்லை, அவர் அடியோடு மாறிவிட்டார்” என்கிறார் ஆர்மின்டா.
ராபர்ட் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இதுவரை, இந்தக் குடும்பத்திலிருந்து மொத்தம் 24 பேர் கூட்டங்களுக்கு தவறாமல் வருகின்றனர். பத்துப் பேர் முழுக்காட்டப்பட்டிருக்கின்றனர், எட்டுப்பேர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக ஆகியிருக்கின்றனர். அவர்களுடைய நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்த சிலர், இப்போது பைபிளைப் படிக்கவும் கூட்டங்களுக்கு வரவும் தொடங்கியுள்ளனர். கூட்டங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 100-லிருந்து 190-ஆக உயர்ந்துள்ளது. கேத்தியும் நானும் சுமார் 30 பைபிள் படிப்புகளை நடத்துகிறோம், அவர்கள் எல்லாரும் கூட்டங்களுக்கு வருகின்றனர். எனக்கு இங்கிருப்பது ரொம்பவே மனநிறைவாக இருக்கிறது.”
“கர்த்தருடைய நாளில்,” கூட்டிச்சேர்க்கும் வேலை உலகம் முழுவதும் நடைபெறும் என்றும், அப்படிக் கூட்டிச்சேர்க்கப்படுகிறவர்கள் மகா உபத்திரவத்தில் தப்பிப் பிழைப்பார்கள் என்றும் வெளிப்படுத்துதல் 7-ஆம் அதிகாரம் முன்னுரைத்தது. பொலிவியாவின் ஒதுக்குப்புற நகரங்களில் செய்யப்படும் ஊழியம் அந்தக் கூட்டிச்சேர்க்கும் வேலையில் ஒரு சிறிய பாகம்தான். (வெளிப்படுத்துதல் 1:10; 7:9-14) மனித சரித்திரத்தில் முன்னொருபோதும் நடந்திராத அளவுக்கு, எல்லா தேசங்களிலிருந்தும் லட்சோப லட்சம் பேர் ஒரே உண்மையான கடவுளை வணங்குவதில் ஐக்கியப்பட்டிருக்கின்றனர். கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறும் காலம் அருகில் வந்துவிட்டது என்பதற்கு இது எப்பேர்ப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் ஆதாரம்!
[பக்கம் 9-ன் படம்]
பெட்டி ஜேக்ஸன்
[பக்கம் 9-ன் படம்]
எல்ஸி மையான்பர்க்
[பக்கம் 9-ன் படம்]
பமெலா மொசெலி
[பக்கம் 9-ன் படம்]
ஷார்லட் டாமாஷாஃபெஸ்கி, வலக்கோடியில்
[பக்கம் 10-ன் படம்]
வாகா குடும்பத்தினர் ஒவ்வொரு வாரமும் மூன்று மணிநேரம் சைக்கிள்களில் ராஜ்ய மன்றத்திற்குச் செல்கின்றனர்
[பக்கம் 10-ன் படம்]
ராஜ்ய பிரஸ்தாபிகள் அதிகம் தேவைப்பட்ட இடத்திற்கு எரிக், விக்கி தம்பதியர் சென்றனர்
[பக்கம் 11-ன் படம்]
பேனி ஆற்றுக்கருகில் கிராமவாசிகள் நற்செய்தியை உன்னிப்பாகக் கேட்கின்றனர்
[பக்கம் 12-ன் படம்]
ராபர்ட்டும் காத்தியும் காமீரியில் மிஷனரிகளாக சேவை செய்கின்றனர்