மெனனைட்டுகள் பைபிள் சத்தியத்தைத் தேடி
நவம்பர் 2000, ஒரு காலைப்பொழுது; பொலிவியாவிலிருந்த யெகோவாவின் சாட்சிகளைச் சேர்ந்த சில மிஷனரிகள் தங்களுடைய சிறிய வீட்டின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார்கள். வெளி கேட்டுக்குப் பக்கத்தில் மிக எளிமையான உடையில் சில ஆண்களும் பெண்களும் ஒன்றாக நின்றுகொண்டிருந்தார்கள், சற்று படபடப்புடன் காணப்பட்டார்கள். மிஷனரிகள் கேட்டை திறந்துவிட்டபோது, அந்த விருந்தாளிகள் சொன்ன முதல் வார்த்தைகள், “பைபிளிலிருந்து நாங்கள் சத்தியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.” அந்த விருந்தாளிகள் மெனனைட்டுகள். வேலை செய்யும்போது போடுகிற தொளதொள மேலாடையை அந்த ஆண்கள் அணிந்திருந்தார்கள், பெண்கள் மங்கலான நிறங்களில் ஏப்ரன் அணிந்திருந்தார்கள். ஒருவித ஜெர்மன் பாஷையில் பேசிக்கொண்டார்கள். கண்களில் பயம் தெரிந்தது. யாராவது தங்களைப் பின்தொடர்கிறார்களா என்பதை உறுதிசெய்ய திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டார்கள். ஆனாலும், வீட்டுக்குள் செல்ல மாடிப் படிக்கட்டில் ஏறும்போதே அந்த இளைஞர்களில் ஒருவன், “கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தும் ஆட்களை நான் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றான்.
வீட்டுக்குள் வந்ததும், சாப்பிட கொஞ்சம் பட்சணங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன, அதன்பின் அந்த விருந்தாளிகள் பதட்டம் தணிந்து சற்று நிதானத்திற்கு வந்தார்கள். தொலைதூரத்திலுள்ள ஒதுக்குப்புறமான பண்ணைக் குடியிருப்பிலிருந்து அவர்கள் வந்திருந்தார்கள். அங்கு ஆறு வருடங்களாக காவற்கோபுர பத்திரிகையைத் தபாலில் பெற்று வந்திருந்தார்கள். “இந்தப் பூமி ஒரு பரதீஸாக மாறப்போகிறதென்று நாங்கள் வாசித்தோம். அது உண்மையா?” என்று கேட்டார்கள். இந்தக் கேள்விக்கான விடையை அந்த மிஷனரி சாட்சிகள் பைபிளிலிருந்தே காட்டினார்கள். (ஏசாயா 11:9; லூக்கா 23:43; 2 பேதுரு 3:7, 13; வெளிப்படுத்துதல் 21:3, 4) “பார்த்தீர்களா! அது உண்மைதான். இந்தப் பூமி நிச்சயம் ஒரு பரதீஸாக மாறப்போகிறது” என்று ஒரு விவசாயி மற்றவர்களிடம் சொன்னார். பிறகு அவர்கள், “சத்தியத்தைக் கண்டுபிடித்து விட்டோம் போலிருக்கிறது” என ஒருவருக்கொருவர் மாறிமாறி சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
மெனனைட்டுகள் யார்? அவர்களுடைய நம்பிக்கைகள் என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடை காண, நாம் 16-ம் நூற்றாண்டுக்குப் பின்நோக்கிச் செல்ல வேண்டும்.
மெனனைட்டுகள் யார்?
1500-களின்போது, ஐரோப்பிய பொதுமொழிகளில் மிகத் தீவிரமாக பைபிள் மொழிபெயர்க்கப்பட்டதும் அச்சடிக்கப்பட்டதும், பைபிளைக் கற்றுக்கொள்வதற்கான ஆர்வத்திற்கு ஒரு புதிய உத்வேகமளித்தது. மார்ட்டின் லூத்தரும் மற்ற சீர்திருத்தவாதிகளும் கத்தோலிக்க சர்ச்சின் ஏராளமான போதனைகளை ஒதுக்கித் தள்ளினார்கள். என்றாலும், புதிதாக உருவாக்கப்பட்ட அந்த புராட்டஸ்டன்ட் சர்ச்சுகள் பைபிளில் இல்லாத அநேகப் பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தன. உதாரணத்திற்கு, புதிதாகப் பிறந்த எல்லாக் குழந்தைகளும் சர்ச்சில் முழுக்காட்டப்பட வேண்டுமென்று அவற்றில் பெரும்பாலானவை எதிர்பார்த்தன. ஆனால், முழுக்காட்டுதலுக்கு முன்னர் பெற்றுக்கொண்ட பைபிள் அறிவின் அடிப்படையில் தீர்மானமெடுப்பதன் மூலமே ஒரு நபர் கிறிஸ்தவ சபையில் அங்கத்தினராக ஆக முடியுமென்பதை பைபிள் சத்தியத்தைத் தேடிய சிலர் புரிந்துகொண்டார்கள். (மத்தேயு 28:19, 20) இந்த நம்பிக்கையைப் பெற்றிருந்த வைராக்கியமான பிரசங்க ஊழியர்கள் பலர் நகரங்களிலும் கிராமங்களிலும் பயணம் செய்து பைபிளைக் கற்றுக்கொடுத்தார்கள், பெரியவர்களுக்கு முழுக்காட்டுதல் [ஆங்கிலத்தில், பாப்டிஸம்] கொடுத்தார்கள். இதன் காரணமாக, அவர்கள் அனபாப்டிஸ்ட்டுகள் என்று அழைக்கப்பட்டார்கள், அந்தப் பெயரின் அர்த்தம் “இரண்டாவது முறையாக பாப்டிஸம் கொடுப்பவர்கள்” என்பதாகும்.
நெதர்லாந்தின் வட பகுதியிலிருந்த விட்மார்ஸம் என்ற கிராமத்தில் வசித்த மென்னோ ஸைமன்ஸ் என்ற கத்தோலிக்க பாதிரி ஒருவர், சத்தியத்துக்கான தனது தேடலில் அனபாப்டிஸ்ட்டுகளின் உதவியை நாடினார். 1536-க்குள்ளாக சர்ச்சோடு தனக்கிருந்த எல்லா உறவுகளையும் துண்டித்துக்கொண்டார், அதன் பிறகு சர்ச் அதிகாரிகளால் வலைவீசப்பட்டார். 1542-ல், மென்னோவைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 100 கில்டர்கள் ரொக்கப் பரிசாகத் தரப்போவதாய் புனித ரோமப் பேரரசரான ஐந்தாம் சார்ல்ஸ் வாக்குக் கொடுத்தார். இருந்தபோதிலும், மென்னோ சில அனபாப்டிஸ்ட்டுகளை ஒன்றுதிரட்டி சபைகளாக உருவாக்கினார். கொஞ்ச நாளைக்குப் பின், அவரும் அவரைப் பின்பற்றியவர்களும் மெனனைட்டுகள் என அழைக்கப்பட்டார்கள்.
இன்றைய மெனனைட்டுகள்
காலப்போக்கில் ஏற்பட்ட கடும் துன்புறுத்தல், ஆயிரக்கணக்கான மெனனைட்டுகளை மேற்கு ஐரோப்பாவிலிருந்து வட அமெரிக்காவுக்குத் துரத்தியது. அங்கு சென்றதும் சத்தியத்திற்கான தங்கள் தேடலை அவர்கள் தொடர்ந்தார்கள், தங்களுடைய நம்பிக்கைகளை இன்னும் பல பேரிடம் பரப்பினார்கள். என்றாலும், பைபிள் அறிவை அதிகமதிகமாகப் பெற்றுக்கொள்வதற்கும் பிரசங்க ஊழியத்தில் ஈடுபடுவதற்குமான தீவிர ஆர்வம் அவர்களுடைய மூதாதையர்களுக்கு இருந்தளவு இவர்களுக்கு இருக்கவில்லை. இவர்களில் பெரும்பாலோர், திரித்துவம், அழியாத ஆத்துமா, எரிநரகம் போன்ற பைபிளில் இல்லாத சில போதனைகளை விடாப்பிடியாக நம்பிக்கொண்டிருந்தார்கள். (பிரசங்கி 9:5; எசேக்கியேல் 18:4; மாற்கு 12:29) இன்று, மெனனைட்டுகளின் மிஷனரிகள் மருத்துவ மற்றும் சமூகத்தொண்டு புரிவதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள், நற்செய்தியைப் பரப்புவதில் அல்ல.
இன்று 65 நாடுகளில் சுமார் 13,00,000 மெனனைட்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. என்றாலும், தன் சபையாரிடையே இருந்த ஒற்றுமையின்மையைக் குறித்து மென்னோ ஸைமன்ஸ் புலம்பியதைப் போலவே இன்றைய மெனனைட்டுகளும் புலம்புகிறார்கள். முதல் உலகப் போரின்போது, உலகச் சச்சரவுகளைக் குறித்த கருத்து வேறுபாடுகள் பெரும் பிளவுகளை உண்டாக்கின. வட அமெரிக்காவிலிருந்த மெனனைட்டுகள் அநேகர் பைபிளின் அடிப்படையில் இராணுவ சேவை செய்ய மறுத்தார்கள். ஆனால் மெனனைட்டு சரித்திரத்திற்கான ஒரு முகவுரை என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “1914-க்குள்ளாக, இராணுவ சேவையை மறுப்பது மேற்கு ஐரோப்பாவிலிருந்த மெனனைட்டு சர்ச்சுகளுக்கு கடந்த கால செயலாகவே ஆகிவிட்டிருந்தது.” மெனனைட்டுகளின் சில தொகுதிகள், பெரியளவிலோ சிறியளவிலோ நவீன பாணிகளை இன்று ஏற்றுக்கொண்டிருக்கின்றன. மற்ற தொகுதியினரோ இன்னமும் தங்கள் உடைகளில் பட்டன்களுக்குப் பதிலாக கொக்கிகளையே பயன்படுத்தி வருகிறார்கள், அதோடு ஆண்கள் தங்களுடைய தாடியை ஷேவ் செய்துகொள்ளக் கூடாது என்றும் நம்பி வருகிறார்கள்.
மெனனைட்டுகளின் வேறு சில தொகுதிகள், இந்த நவீன உலகிலிருந்து தனித்திருக்க வேண்டுமென்ற தீர்மானத்தின் காரணமாக தங்கள் அங்கத்தினர்களை எந்தவொரு தொந்தரவும் இல்லாதபடி வசிப்பதற்கு உள்ளூர் அரசாங்கங்கள் அனுமதித்துள்ள இடங்களுக்குக் குடிபெயரச் செய்திருக்கின்றன. உதாரணமாக, பொலிவியாவில், சுமார் 38,000 மெனனைட்டுகள் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள ஏராளமான காலனிகளில் வசிக்கிறார்கள், நடத்தை சம்பந்தப்பட்ட விதிமுறைகள் காலனிக்கு காலனி வித்தியாசப்படுகிறது. சில காலனிகள் மோட்டார் வாகனங்களைத் தடை செய்கின்றன, குதிரைகளையும் ஒற்றைக்குதிரை வண்டிகளையும் மட்டுமே அனுமதிக்கின்றன. சில காலனிகள் ரேடியோ, டி.வி, மியூஸிக் ஆகியவற்றை தடை செய்கின்றன. சில காலனிகள் தாங்கள் வசிக்கிற நாட்டின் மொழியைக் கற்றுக்கொள்ளக்கூட தடை விதிக்கின்றன. “மதப்பிரசங்கம் செய்பவர்கள் எங்களை அவர்களுடைய கட்டுப்பாட்டில் வைப்பதற்காகவே ஸ்பானிய மொழியைக் கற்றுக்கொள்ள எங்களை விடுவதில்லை” என்கிறார் ஒரு காலனிவாசி. அவர்களில் ஏராளமானோர் அடக்கி ஒடுக்கப்படுவது போல் உணருகிறார்கள், தங்கள் சமுதாயத்தைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுவோமோ என்ற பயத்திலேயே காலத்தை ஓட்டுகிறார்கள்; வெளி உலக அனுபவம் துளிகூட இல்லாத ஒருவருக்கு அப்படி ஒதுக்கி வைக்கப்படுவது படுபயங்கரம்தான்.
சத்திய விதை ஒன்று விதைக்கப்பட்ட விதம்
இத்தகைய சூழ்நிலையில்தான், யோஹான் என்ற மெனனைட்டு விவசாயி ஒருவர் தன் பக்கத்து வீட்டில் காவற்கோபுர பத்திரிகையின் ஓர் இதழைப் பார்த்தார். யோஹான் தன் குடும்பத்தோடு கனடாவிலிருந்து மெக்சிகோவில் குடியேறியிருந்தார், அதன் பிறகு பொலிவியாவில் குடியேறியிருந்தார். ஆனால், பைபிள் சத்தியத்திற்கான தன்னுடைய தேடலில் தனக்கு உதவி வேண்டுமென்றுதான் அவர் எப்போதும் விரும்பியிருந்தார். எனவே, அந்தப் பத்திரிகையை இரவல் வாங்கிச் சென்றார்.
பிற்பாடு, யோஹான் தன் பண்ணைப் பொருள்களை விற்பதற்காக நகரத்திற்குச் சென்றிருந்தபோது, மார்க்கெட்டில் காவற்கோபுர பத்திரிகைகளை அளித்துக் கொண்டிருந்த யெகோவாவின் சாட்சி ஒருவரைப் பார்த்து, அவரை அணுகினார். அந்தச் சகோதரி, ஜெர்மன் மொழி பேசுகிற ஒரு மிஷனரியிடம் அவரை அனுப்பினார், அதன்பின் யோஹான் சீக்கிரத்திலேயே ஜெர்மன் மொழி காவற்கோபுர பத்திரிகைகளை தபால் மூலம் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அதன் ஒவ்வொரு இதழும் நைந்துபோகும்வரை அவருடைய காலனியிலிருந்த குடும்பங்கள் அதை ஒன்றன்பின் ஒன்றாக மிகக் கவனமாய் படித்தார்கள். சில குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து, அந்த காவற்கோபுர பத்திரிகைகளை நடுநிசிவரை படிப்பார்கள், அதில் கொடுக்கப்பட்டுள்ள பைபிள் வசனங்களையெல்லாம்கூட எடுத்துப் பார்ப்பார்கள். அப்படிப் படித்ததில், உலகம் முழுக்க கடவுளுடைய சித்தத்தை ஒன்றுபட்டு செய்கிறவர்கள் யெகோவாவின் சாட்சிகள்தான் என்பதை யோஹான் ஆணித்தரமாகப் புரிந்துகொண்டார். சாவதற்கு முன், தன் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் அவர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் எல்லாரும் காவற்கோபுர பத்திரிகையைப் படிப்பதை ஒருநாளும் விட்டுவிடக் கூடாது. பைபிளைப் புரிந்துகொள்ள அது உங்களுக்குக் கண்டிப்பாக உதவும்.”
யோஹானின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் தாங்கள் பைபிளிலிருந்து கற்றுவந்த விஷயங்களைப் பற்றி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேச ஆரம்பித்தார்கள். “பூமி அழியவே அழியாது. அதற்குப் பதிலாக, கடவுள் அதை ஒரு பரதீஸாக மாற்றப் போகிறார்.” “ஜனங்களைக் கடவுள் நரகத்தில் வதைப்பதில்லை” என்றெல்லாம் சொன்னார்கள். இப்படி அவர்கள் பேசிய விஷயம் சீக்கிரத்திலேயே சர்ச் போதனையாளர்களின் காதுகளை எட்டியது; உடனே அவர்கள் யோஹானின் குடும்பத்தை அழைத்து இனி அவர்கள் வாய்திறக்கக் கூடாதென்றும், அப்படி மீறினால் சமுதாயத்தைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்றும் மிரட்டினார்கள். பிற்பாடு, மெனனைட்டு மூப்பர்கள் தங்களுக்குக் கொடுக்கும் தொந்தரவுகளைப் பற்றி குடும்பமாகப் பேசிக்கொண்டிருந்த வேளையில், ஓர் இளைஞன் தைரியமாக இவ்வாறு சொன்னான்: “நம்முடைய சர்ச் மூப்பர்களைப் பற்றி நாம் ஏன் இப்படி முணுமுணுக்கிறோம் என்று எனக்குப் புரியவில்லை. எது உண்மையான மதம் என்று நம் எல்லாருக்குமே தெரிந்துவிட்டது, தெரிந்த பிறகும் அதற்காக இதுவரை நாம் ஒன்றுமே செய்யவில்லை.” இப்படி அவன் பேசியது அவனுடைய அப்பாவின் மனதைத் தொட்டது. அதன்பின் சீக்கிரத்தில், அந்தக் குடும்பத்திலிருந்து பத்து பேர், யெகோவாவின் சாட்சிகளைத் தேடி இரகசிய பயணம் மேற்கொண்டார்கள், இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி மிஷனரிகளின் வீட்டை கடைசியில் கண்டுபிடித்தார்கள்.
மறுநாள், அந்த மிஷனரிகள் தங்களுடைய புதிய நண்பர்களைச் சந்திப்பதற்காக அவர்கள் வசிக்கும் காலனிக்கே சென்றார்கள். அந்த ரோட்டில் இருந்தவற்றிலேயே மிஷனரிகளுடையது மட்டும்தான் மோட்டார் வண்டி. ஒற்றைக்குதிரை வண்டிகளை மெதுவாகத் தாண்டிச் செல்கையில், அவர்கள் அந்த உள்ளூர்காரர்களை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள், அவர்களும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். பிறகு, மெனனைட்டுகளின் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த பத்து பேருடன் சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள்.
நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில் முதல் அதிகாரத்தைப் படித்து முடிக்க அவர்களுக்கு அன்று நான்கு மணிநேரம் ஆனது.a ஒவ்வொரு பாராவுக்கும், அந்த விவசாயிகள் கூடுதலான பைபிள் வசனங்களைப் பார்த்து வைத்திருந்தார்கள், வசனங்களைச் சரியாகப் பொருத்துகிறார்களா என்று கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். படிப்பின்போது கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பிறகு பல நிமிடங்கள் நிறுத்தப்படும், அப்போது அவர்கள் வட ஜெர்மனியில் பேசப்படும் ஒருவித ஜெர்மன் பாஷையில் ஒருவருக்கொருவர் கலந்துபேசுவார்கள், கடைசியில் அவர்கள் சார்பாக ஒருவர் ஸ்பானிய மொழியில் பதில் சொல்வார். மறக்க முடியாத தினமாக அது இருந்தது, ஆனால் புயல் போன்ற பிரச்சினைகள் சீக்கிரத்தில் எழவிருந்தன. கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன், மென்னோ ஸைமன்ஸ் பைபிள் சத்தியத்தைத் தேட ஆரம்பித்தபோது எதிர்ப்பட்ட சோதனைகளைப் போலவே அவர்களும் எதிர்ப்பட இருந்தார்கள்.
சத்தியத்துக்காக சோதனைகளை எதிர்ப்படுதல்
சில நாட்கள் கழித்து, சர்ச் மூப்பர்கள் யோஹானின் வீட்டிற்கு வந்து, அந்தக் குடும்பத்தாருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடன் உரையாடுகிற மற்றவர்களுக்கும் இறுதி எச்சரிப்பைக் கொடுத்தார்கள்: “யெகோவாவின் சாட்சிகள் இங்கு வந்ததாக நாங்கள் கேள்விப்பட்டோம். மறுபடியும் அவர்கள் இந்தப் பக்கம் வரக்கூடாதென்று சொல்லி வையுங்கள், அவர்களுடைய பிரசுரங்களையெல்லாம் எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள், அவற்றை எரிக்கப் போகிறோம்; அப்படி ஒப்படைக்காவிட்டால், ஊரைவிட்டே ஒதுக்கி வைக்கப்படுவீர்கள்.” அவர்கள் ஒரேவொரு முறைதான் யெகோவாவின் சாட்சிகளுடன் படித்திருந்தார்கள்; ஆகவே, அது அவர்களுக்கு மாபெரும் ஒரு சோதனையாகவே இருந்தது.
“நீங்கள் சொல்கிறபடியெல்லாம் எங்களால் செய்ய முடியாது” என ஒரு குடும்பத் தலைவர் பதிலளித்தார். “எங்களுக்கு பைபிளைச் சொல்லித் தருவதற்குத்தான் அந்த ஆட்கள் இங்கு வந்தார்கள்” என்றார் அவர். அதற்கு அந்த மூப்பர்கள் என்ன செய்தார்கள்? பைபிளைப் படித்ததற்காக அவர்களை ஒதுக்கி வைத்தார்கள்! அது ஈவிரக்கமற்ற கொடூரச் செயலாகவே இருந்தது. மறுநாளிலிருந்து காலனியின் சீஸ் ஃபாக்டரி வண்டி அவர்களுடைய வீட்டிலிருந்து பாலை எடுத்துக் கொள்ளாமல் சென்றது; இதனால் அவர்களுக்குக் கிடைத்துவந்த ஒரே வருவாயும் இல்லாமல் போனது. மற்றொரு குடும்பத்தின் தலைவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். மற்றுமொருவர் காலனியின் கடையிலிருந்து பொருள்களை வாங்க தடை செய்யப்பட்டார், அவருடைய பத்து வயது மகள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டாள். அக்கம்பக்கத்தார் ஓர் இளவயதுக்காரருடைய வீட்டைச் சுற்றிவளைத்து, அவருடைய மனைவியைத் தங்களோடு கூட்டிச்செல்ல முயன்றார்கள், ஏன்? ஒதுக்கி வைக்கப்பட்ட கணவனோடு அவளால் இனி வாழ முடியாது என்று காரணங்காட்டினார்கள். இதெல்லாம் நடந்தபோதும்கூட, பைபிளை படித்த அந்தக் குடும்பங்கள் சத்தியத்தைத் தேடுவதற்கான தங்கள் முயற்சியைக் கைவிடவில்லை.
இவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்துவதற்காக அந்த மிஷனரிகள் வாரா வாரம் தொடர்ந்து நெடுந்தூரத்திற்கு தங்கள் வண்டியில் சென்றார்கள். அத்தகைய படிப்பு நேரங்கள் அந்தக் குடும்பங்களுக்கு எவ்வளவாய் பலமூட்டின! சில குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டு மணிநேரம் குதிரை வண்டியில் பயணம் செய்து அந்தப் படிப்பில் கலந்துகொண்டார்கள். ஜெபம் செய்யும்படி அந்தக் குடும்பத்தினர் ஒருமுறை மிஷனரிகளைக் கேட்டுக்கொண்டார்கள், அது ஓர் உருக்கமான சமயமாக இருந்தது. இந்தக் காலனிகளில் மெனனைட்டுகள் சப்தமாக ஜெபிப்பது கிடையாது, அதனால் தங்களுக்காக ஒருவர் ஜெபிப்பதை முன்னொருபோதும் அவர்கள் கேட்டதில்லை. எனவே, அந்த ஜெபத்தைக் கேட்டதில் அங்கிருந்த ஆண்களின் கண்கள் குளமாயின. அதுமட்டுமல்ல, மிஷனரிகள் கொண்டு வந்திருந்த ஒரு டேப் ரெக்கார்டரை முதன்முதலாகக் கண்டதில், அவர்கள் முகத்தில் ஆச்சரியத்தைப் பார்க்க வேண்டுமே! அவர்களுடைய காலனியில் மியூஸிக் ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதில்லை. ராஜ்ய இன்னிசையைக் கேட்டதில் அவர்கள் ரொம்பவே மகிழ்ந்ததால், படிப்பு முடிந்த ஒவ்வொரு முறையும் ராஜ்யப் பாடல்களைப் பாட அவர்கள் தீர்மானித்தார்கள்! என்றாலும், ஒரு கேள்வி பதிலளிக்கப்பட வேண்டியிருந்தது: தாங்கள் எதிர்ப்படுகிற புதிய சூழ்நிலைகளை அவர்கள் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள்?
அன்பான சகோதரத்துவத்தைக் கண்டடைதல்
சமுதாயத்திலிருந்து பிரித்து வைக்கப்பட்டதால், அந்தக் குடும்பங்கள் தாங்களே சொந்தமாக சீஸ் தயாரிக்க ஆரம்பித்தார்கள். மிஷனரிகள் வாடிக்கையாளர்களைப் பிடித்துக் கொடுத்தார்கள். தென் அமெரிக்க மெனனைட்டு காலனியில் வளர்ந்த ஒருவர் வட அமெரிக்காவில் பல வருடங்களாக ஒரு யெகோவாவின் சாட்சியாய் இருக்கிறார்; இந்தக் குடும்பங்கள் படும்பாட்டைக் கேள்விப்பட்டபோது, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற ஒரு தனி விருப்பம் அவருக்கு ஏற்பட்டது. ஒரு வாரத்திற்குள்ளாகவே, அவர்களைச் சந்திக்க பொலிவியாவுக்கு பிளேனில் வந்து இறங்கினார். ஆன்மீக ரீதியில் ஏகப்பட்ட உற்சாகத்தை அளித்தது மட்டுமல்லாமல், அந்தக் குடும்பங்களுக்குச் சொந்தமாக ஒரு பிக் அப் வண்டியை வாங்குவதற்கும் உதவி செய்தார்; இதன் மூலம் அவர்கள் குடும்பங்களாக ராஜ்ய மன்றத்திற்குப் போய்வரலாம், அதோடு தங்கள் பண்ணைப் பொருள்களை விற்பதற்காக மார்க்கெட்டிற்கும் கொண்டு போய்வரலாம்.
“சமுதாயத்திலிருந்து நாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு பிறகு ரொம்பவே கஷ்டப்பட்டோம். ராஜ்ய மன்றத்துக்குப் போகும்போது சோகமான முகத்துடன் போனோம், ஆனால் சந்தோஷக் களையுடன் திரும்பி வந்தோம்” என்கிறார் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி. ஆம், அவர்களுடைய கஷ்ட காலத்தில் உள்ளூர் யெகோவாவின் சாட்சிகள் கைதூக்கிவிட முன்வந்தார்கள். அவர்களில் சிலர் ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொண்டார்கள்; ஜெர்மன் மொழி பேசும் ஏராளமான யெகோவாவின் சாட்சிகளும் ஐரோப்பாவிலிருந்து பொலிவியாவுக்கு வந்து ஜெர்மன் மொழியில் கிறிஸ்தவக் கூட்டங்களை நடத்த உதவினார்கள். சீக்கிரத்தில், மெனனைட்டு சமுதாயத்திலிருந்து 14 பேர் ராஜ்ய நற்செய்தியை மற்றவர்களிடம் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள்.
அன்று மிஷனரிகளுடைய வீட்டில் நடைபெற்ற முதல் சந்திப்பிலிருந்து ஒரு வருடத்திற்குள்ளாக, அதாவது அக்டோபர் 12, 2001-ல் முன்னாள் அனபாப்டிஸ்டுகளான 11 பேர் மீண்டும் பாப்டிஸம் பெற்றார்கள், அதாவது முழுக்காட்டுதல் பெற்றார்கள்; இந்த முறை யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக முழுக்காட்டுதல் பெற்றார்கள். அதற்குப் பிறகு, இன்னும் நிறைய பேர் இதுவரை முழுக்காட்டப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் இவ்வாறு சொன்னார்: “பைபிளிலிருந்து சத்தியத்தைக் கற்றுக்கொண்டிருக்கும் நாங்கள், அடிமைத்தனத்திலிருந்து விடுதலையானவர்களைப் போல் உணருகிறோம்.” மற்றொருவர் இப்படிச் சொன்னார்: “மெனனைட்டுகளில் அநேகர் தங்கள் மத்தியில் அன்பு இல்லாததைப் பற்றி குறைபட்டுக் கொள்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளோ ஒருவர்மீது ஒருவர் அக்கறை காண்பிக்கிறார்கள். அவர்களோடு இருக்கும்போது பாதுகாப்பாக உணருகிறேன்.” பைபிளிலுள்ள சத்தியத்தை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்களும்கூட ஒருவேளை கஷ்டங்களை எதிர்ப்படலாம். ஆனாலும், யெகோவாவின் உதவியை நாடி, இந்தக் குடும்பங்களைப் போல விசுவாசத்தையும் தைரியத்தையும் காண்பித்தீர்களென்றால், நிச்சயம் நீங்களும்கூட வெற்றி பெறுவீர்கள், சந்தோஷத்தைக் கண்டடைவீர்கள்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 25-ன் படம்]
ஜெர்மன் மொழியில் பைபிள் பிரசுரங்களைப் பெற்ற சந்தோஷத்தில்
[பக்கம் 26-ன் படம்]
மியூஸிக் தடை செய்யப்பட்டிருந்த போதிலும், இப்போது பைபிள் படிப்பு முடிந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் பாட்டுப் பாடுகிறார்கள்