யெகோவா உங்கள் ‘தலையிலுள்ள மயிரையெல்லாம் எண்ணியிருக்கிறார்’
“உங்கள் பிதாவின் சித்தமில்லாமல் அவைகளில் [அடைக்கலான் குருவிகளில்] ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.”—மத்தேயு 10:29, 30.
1, 2. (அ) தன்னைக் கடவுள் கைவிட்டுவிட்டார் என்று யோபு ஏன் நினைத்தார்? (ஆ) யோபுவின் வார்த்தைகள் அவர் யெகோவாவுக்கு எதிரியாகிவிட்டதைக் காட்டினவா? விளக்கவும்.
“உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர்; கெஞ்சி நிற்கிறேன், என்மேல் பாரா முகமாயிருக்கிறீர். என்மேல் கொடூரமுள்ளவராக மாறினீர்; உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர்.” இந்த வார்த்தைகளைச் சொன்ன நபர் துயரக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார்; ஏனெனில் அவர் தன்னுடைய சொத்து சுகங்களையெல்லாம் இழந்திருந்தார், வினோதமாக ஏற்பட்ட மிகப் பெரிய இயற்கைப் பேரழிவில் தன்னுடைய பிள்ளைகளைப் பறிகொடுத்திருந்தார், அதுமட்டுமா, கடைசியில் உடலை உருக்குலைக்கும் ஒரு வியாதியால் பீடிக்கப்பட்டும் இருந்தார், எனவே அவர் துயரக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததில் ஆச்சரியமே இல்லை! அந்த நபரின் பெயர் யோபு, அவருடைய கஷ்டங்களைப் பற்றிய நெஞ்சை உருக்கும் சம்பவங்கள் நம்முடைய நன்மைக்காக பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.—யோபு 30:20, 21.
2 யோபுவின் வார்த்தைகளை வாசிக்கும்போது, அவர் ஏதோ கடவுளுக்கு எதிரியாகிவிட்டதைப் போல் தோன்றலாம், ஆனால் உண்மை அதுவல்ல. யோபு தன் இருதயத்திலிருந்த துக்கத்தைத்தான் கொட்டிக் கொண்டிருந்தார். (யோபு 6:2, 3) தன்னுடைய வேதனைகளுக்குக் காரணம் சாத்தான் என்பதை அவர் அறியாதிருந்தார், அதனால் கடவுள் தன்னைக் கைவிட்டுவிட்டார் என்று தவறாக நினைத்தார். ஒரு கட்டத்தில், அவர் யெகோவாவிடம், “நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்?” என்றும்கூட கேட்டார்.a—யோபு 13:24.
3. துயரங்களைச் சந்திக்கும்போது, நாம் ஒருவேளை என்ன நினைக்கலாம்?
3 போர்கள், அரசியல் அல்லது சமூகப் போராட்டங்கள், இயற்கைப் பேரழிவுகள், வயோதிகம், வியாதி, கொடிய வறுமை, அரசாங்கத் தடையுத்தரவுகள் ஆகிய காரணங்களால் யெகோவாவின் மக்களில் அநேகர் இன்று அலை அலையாய்த் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். ஒருவேளை நீங்களும்கூட இப்போது ஏதோவொரு சோதனையை அனுபவித்து வரலாம். யெகோவா தமது முகத்தை உங்களிடமிருந்து மறைப்பதாகக்கூட சில சமயம் நீங்கள் நினைக்கலாம். “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை . . . தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்று யோவான் 3:16-ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் உங்களுக்கு நன்கு தெரிந்திருந்தாலும், துயரத்திற்கு மேல் துயரத்தைச் சந்திக்கும்போது, ஒருவேளை நீங்கள் இவ்வாறு நினைக்கலாம்: ‘கடவுளுக்கு உண்மையிலேயே என்மீது அன்பிருக்கிறதா? நான் இப்படிக் கஷ்டப்படுவதை அவர் பார்க்கிறாரா? தனிப்பட்ட விதமாக அவருக்கு என்மீது அக்கறை இருக்கிறதா?’
4. பவுல் எத்தகைய சூழ்நிலையில் தொடர்ந்து சகித்திருக்க வேண்டியிருந்தது, அத்தகைய ஒரு சூழ்நிலை நம்மை எந்த விதங்களில் பாதிக்கலாம்?
4 அப்போஸ்தலன் பவுலுக்கு என்ன நடந்தது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். “என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; . . . அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்று தரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்” என்று அவர் கூறினார். அவருடைய வேண்டுதலை யெகோவா கேட்டார். இருந்தாலும், ஏதோ அற்புதத்தின் மூலம் அந்தப் பிரச்சினையைத் தாம் தீர்த்து வைக்கப் போவதில்லை என்றும், அதற்குப் பதிலாக பவுல் தன்னுடைய ‘மாம்சத்திலே இருந்த முள்ளைச்’ சமாளிக்க தம்முடைய வல்லமையின் மீதே சார்ந்திருக்க வேண்டுமென்றும் அவரிடம் சொன்னார்.b (2 கொரிந்தியர் 12:7-9) பவுலைப் போலவே, நீங்களும்கூட ஏதோவொரு தீராத பிரச்சினையை எதிர்ப்பட்டுக் கொண்டிருக்கலாம். அத்தகைய சூழலில், ‘என்னுடைய பிரச்சினையைத் தீர்க்க யெகோவா இதுவரை எதுவுமே செய்யாதது போல் இருக்கிறதே, அப்படியானால் நான் என்ன நிலைமையில் இருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியாதா அல்லது என்மீது அவருக்கு அக்கறை கிடையாதா?’ என்றெல்லாம் ஒருவேளை உங்களையே நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல் அவர் அப்படி இல்லவே இல்லை! இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, கொஞ்ச நாட்கள் கழித்து அவர்களிடம் சொன்ன ஒரு விஷயம், தமது உண்மையுள்ள ஊழியர்கள் ஒவ்வொருவர் மீதும் யெகோவாவுக்கு எந்தளவு அக்கறை இருக்கிறதென்பதைச் சிறப்பித்துக் காட்டுகிறது. அன்று அவர் சொன்ன விஷயம் இன்று நம்மை எப்படி ஊக்குவிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
“பயப்படாதிருங்கள்”—ஏன்?
5, 6. (அ) நடக்கவிருக்கும் சம்பவங்களைக் குறித்து அப்போஸ்தலர்கள் பயப்படாதிருப்பதற்கு இயேசு என்ன சொன்னார்? (ஆ) தன்மீது யெகோவா அக்கறை காட்டுகிறார் என்பதில் பவுல் எவ்வாறு நம்பிக்கையுடன் இருந்தார்?
5 அப்போஸ்தலர்களுக்கு இயேசு அசாத்திய வல்லமையை அளித்திருந்தார்; ‘அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்திருந்தார்.’ ஆனால் அதற்காக வாழ்க்கையில் எந்தவொரு சோதனையையோ கஷ்டத்தையோ அவர்கள் அனுபவிக்க மாட்டார்கள் என்று அர்த்தமல்ல. மாறாக, அவர்களுக்கு நேரிடப் போகிற சில காரிங்களைப் பற்றி இயேசு விவரமாகச் சொன்னார். என்றாலும், “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே [கெஹென்னாவிலே] அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்” என்று அவர்களுக்கு அறிவுரை கூறினார்.—மத்தேயு 10:1, 16-22, 28.
6 தம்முடைய அப்போஸ்தலர்கள் ஏன் ஒருபோதும் பயப்படத் தேவையில்லை என்பதைப் புரிந்துகொள்ள இயேசு இரண்டு உதாரணங்களைக் கொடுத்தார். “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல் [பிதாவுக்குத் தெரியாமல்], அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” என்று அவர்களிடம் சொன்னார். (மத்தேயு 10:29-31) சோதனைகளைச் சந்திக்கும்போது பயப்படாமல் இருப்பதற்கும் யெகோவா நம்மீது தனிப்பட்ட அக்கறை காட்டுகிறார் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதற்கும் இடையே சம்பந்தமிருப்பதை இயேசு இங்கே சுட்டிக்காட்டுவதைக் கவனியுங்கள். அப்போஸ்தலன் பவுலுக்கும் அத்தகைய நம்பிக்கை இருந்ததாகவே தெரிகிறது. அவர் இவ்வாறு எழுதினார்: “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” (ரோமர் 8:31, 32) எவ்விதமான பிரச்சினைகளை நீங்கள் சகித்து வந்தாலும், யெகோவாவுக்கு உத்தமமாக இருக்கும்வரை அவர் உங்கள்மீது தனிப்பட்ட அக்கறை காட்டுவார் என்பதில் பவுலைப் போலவே நீங்களும் நம்பிக்கையுடன் இருக்கலாம். இயேசு தமது அப்போஸ்தலர்களுக்கு அளித்த அறிவுரையைச் சற்று ஆழமாக ஆராயும்போது இது உங்களுக்கு இன்னும் தெளிவாகும்.
ஓர் அடைக்கலான் குருவியின் விலை
7, 8. (அ) இயேசுவின் நாட்களில், அடைக்கலான் குருவிகள் எவ்வாறு கருதப்பட்டன? (ஆ) மத்தேயு 10:29-ல், ‘அடைக்கலான் குருவிகள்’ என்பதற்குச் சின்னஞ்சிறிய அடைக்கலான் குருவிகள் என்ற அர்த்தத்தை தரும் கிரேக்க வார்த்தை ஏன் பயன்படுத்தப்பட்டுள்ளது?
7 தம்முடைய ஊழியர்கள் ஒவ்வொருவர் மீதும் யெகோவாவுக்கு அக்கறை இருப்பதை இயேசு சொன்ன உதாரணங்கள் மிகச் சிறந்த விதத்தில் விளக்கிக் காட்டுகின்றன. முதலாவது, அடைக்கலான் குருவிகளைப் பற்றிய விஷயத்தை எடுத்துக்கொள்வோம். இயேசுவின் நாட்களில், அடைக்கலான் குருவிகள் உணவுக்காகப் பயன்படுத்தப்பட்டன, ஆனால் அவை பயிர்களை நாசப்படுத்தி வந்ததால், மிகவும் தொல்லைப் பிடித்த பறவைகளாகவே கருதப்பட்டன. அவை எக்கச்சக்கமாக இருந்ததாலும் மலிவாகக் கிடைத்ததாலும், இரண்டு அடைக்கலான் குருவிகளைத் தற்போதைய மதிப்பின்படி, இரண்டு ரூபாய்க்கும் குறைவான விலைக்கு வாங்க முடிந்தது. இரண்டு மடங்கு காசு கொடுத்தால் நான்கு குருவிகளை அல்ல, ஆனால் ஐந்து குருவிகளை வாங்க முடிந்தது—இனாமாகக் கொடுக்கப்பட்ட அந்த ஐந்தாவது குருவிக்கு எந்த மதிப்பும் இல்லாதது போல் சேர்த்துக் கொடுக்கப்பட்டது.—லூக்கா 12:6.
8 சகஜமாகக் காணப்படுகிற இக்குருவியின் உருவ அமைப்பைப் பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். முழு வளர்ச்சியடைந்த குருவியும்கூட, மற்ற பறவைகளைக் காட்டிலும் சின்னஞ்சிறியதாக இருக்கும். என்றாலும், ‘அடைக்கலான் குருவிகள்’ என்று மத்தேயு 10:29-ல் மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, சின்னஞ்சிறிய அடைக்கலான் குருவிகளையே குறிப்பிடுகிறது. மிகமிக அற்பமான ஒரு பறவையைத் தம்முடைய அப்போஸ்தலர்கள் கற்பனை செய்துபார்க்க வேண்டும் என்பதற்காகவே இயேசு இதைச் சொன்னார்போலும். ஒரு புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “இயேசு மிகச் சிறிய பறவை ஒன்றைப் பற்றியே இங்கு குறிப்பிடுகிறார், அதிலும் அதை விவரிக்க ‘சின்னஞ்சிறிய’ என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்.”
9. அடைக்கலான் குருவிகளைப் பற்றிய இயேசுவின் ஒப்புமை என்ன வலிமைமிக்க குறிப்பை உணர்த்துகிறது?
9 அடைக்கலான் குருவிகளைப் பற்றிய இயேசுவின் ஒப்புமை வலிமைமிக்க ஒரு குறிப்பை உணர்த்துகிறது: மனிதர்களுக்கு மதிப்பற்றதாகத் தோன்றும் ஒன்று யெகோவா தேவனுக்கு முக்கியமானதாய் இருக்கிறது. இந்த உண்மையை மேலும் வலியுறுத்துவதற்காக, யெகோவாவுக்குத் தெரியாமல் ஓர் அடைக்கலான் குருவிகூட “தரையிலே விழாது” என்ற கூடுதலான குறிப்பையும் இயேசு சொன்னார்.c பாடம் தெளிவாக இருக்கிறது. மிகச் சிறிய, மிகமிக அற்பமான ஒரு பறவையையே யெகோவா தேவன் இந்தளவுக்குக் கவனிக்கிறார் என்றால், அவருக்குச் சேவை செய்ய தெரிவு செய்திருக்கும் ஒருவரை அவர் இன்னும் எந்தளவுக்கு அக்கறையோடு கவனித்துக்கொள்வார்!
10. “உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது” என்ற வாக்கியத்தின் உட்கருத்து என்ன?
10 அடைக்கலான் குருவிகளைப் பற்றிய ஒப்புமையைச் சொன்னதோடு, “உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது” என்றும் இயேசு சொன்னார். (மத்தேயு 10:30) சுருக்கமான, ஆனால் அர்த்தம் பொதிந்த இந்த வாக்கியம் குருவிகளைப் பற்றி இயேசு சொன்ன உதாரணத்தின் முக்கிய குறிப்பை மேலும் விளக்குகிறது. இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒருவருடைய தலையில் சராசரியாக 1,00,000 மயிரிழைகள் உள்ளன. கிட்டத்தட்ட எல்லாமே ஒன்றுபோல் இருக்கின்றன, ஒரேவொரு மயிரிழைக்கு மட்டும் நாம் எந்த விசேஷ கவனமும் செலுத்துவதில்லை. ஆனால், யெகோவா தேவன் நம் தலையிலுள்ள ஒவ்வொரு மயிரையும் கவனிக்கிறார், எண்ணியும் வைத்திருக்கிறார். அப்படியிருக்கும்போது, நம் வாழ்க்கையில் நடக்கும் எந்தச் சம்பவமாவது அவருக்குத் தெரியாமல் போகுமா என்ன? தமது ஊழியர்கள் ஒவ்வொருவரும் உருவத்திலும் உள்ளத்திலும் எப்படிப்பட்டவர்கள் என்பதை யெகோவா புரிந்து வைத்திருக்கிறார், இதில் சந்தேகமே இல்லை. சொல்லப்போனால், அவர் அவர்களுடைய “இருதயத்தைப் பார்க்கிறார்.”—1 சாமுவேல் 16:7.
11. தன்மீது யெகோவா தனிப்பட்ட அக்கறை காட்டுகிறார் என்ற நம்பிக்கையை தாவீது எவ்வாறு தெரிவித்தார்?
11 மிகுந்த கஷ்டங்களை அனுபவித்த தாவீதுக்கும்கூட, தன்னை யெகோவா கவனிக்கிறார் என்ற நம்பிக்கை இருந்தது. “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்” என்று அவர் எழுதினார். (சங்கீதம் 139:1, 2) யெகோவா உங்களைத் தனிப்பட்ட விதமாக அறிந்து வைத்திருக்கிறார் என்பதைத் தாராளமாக நம்பலாம். (எரேமியா 17:10) எனவே, சகலத்தையும் கவனித்துக்கொண்டிருக்கிற யெகோவாவின் கண்களில் படமுடியாதளவுக்கு நீங்கள் மிகமிக அற்பமானவர்கள் என்ற முடிவுக்குச் சட்டென வந்துவிடாதீர்கள்!
“என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்”
12. தம்முடைய மக்கள் எதிர்ப்படுகிற துன்பங்களை யெகோவா நன்கு அறிந்திருக்கிறார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
12 யெகோவா தம்முடைய ஊழியர்கள் ஒவ்வொருவரையும் அறிந்திருப்பதோடு, அவர்கள் ஒவ்வொருவரும் எதிர்ப்படுகிற துன்பங்களையும் நன்கு அறிந்திருக்கிறார். உதாரணத்திற்கு, இஸ்ரவேலர் அடிமைகளாக ஒடுக்கப்பட்டு வந்தபோது, மோசேயிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.” (யாத்திராகமம் 3:7) நாம் ஒரு சோதனையைச் சகித்துக் கொண்டிருப்பதை யெகோவா பார்க்கிறார், நம்முடைய கதறல்களைக் கேட்கிறார் என்பதையெல்லாம் அறிவது எவ்வளவாய் ஆறுதலளிக்கிறது! நாம் துன்பப்படும்போது நிச்சயமாகவே அவர் பாராமுகமாய் இருப்பதில்லை.
13. தமது ஊழியர்கள்மீது யெகோவாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்பதை எது காட்டுகிறது?
13 யெகோவாவுடன் ஒரு பந்தத்திற்குள் இருப்பவர்கள்மீது அவருக்குள்ள அக்கறையை, இஸ்ரவேலரைக் குறித்து அவர் சொன்ன வார்த்தைகள் மேலும் தெளிவுபடுத்துகின்றன. இஸ்ரவேலர் பெரும்பாலும் தங்களுடைய சொந்த பிடிவாதத்தாலேயே துன்பங்களை அனுபவித்தார்கள்; இருந்தாலும், “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” என்று யெகோவாவைக் குறித்து ஏசாயா எழுதினார். (ஏசாயா 63:9) அப்படியானால், யெகோவாவின் உண்மை ஊழியரான நீங்கள் வேதனைப்படும்போது, அவரும் வேதனைப்படுகிறார் என்பதை உறுதியாக நம்பலாம். எந்தவொரு துன்பத்தையும் பயமில்லாமல் சந்திப்பதற்கும் மிகச் சிறந்த விதத்தில் அவருக்குத் தொடர்ந்து சேவை செய்வதற்கும் இது உங்களைத் தூண்டவில்லையா?—1 பேதுரு 5:6, 7.
14. சங்கீதம் 56 எத்தகைய சூழலில் எழுதப்பட்டது?
14 கொலை வெறியுடன் தன்னைத் துரத்தி வந்த அரசனாகிய சவுலிடமிருந்து தப்பியோடியபோது தாவீது சங்கீதம் 56-ஐ எழுதினார்; அதில், தன்மீது யெகோவாவுக்கு அக்கறை இருந்ததாகவும் தான் வேதனைப்பட்டபோது அவர் வேதனைப்பட்டதாகவும் அவர் நம்பிக்கையுடன் எழுதியிருந்தார். காத் என்ற இடத்திற்கு அவர் தப்பிப்போனார், ஆனால் அங்கு இவர் யாரென பெலிஸ்தருக்குத் தெரிந்துபோனபோது, எங்கே பிடிபட்டு விடுவோமோ என்று பயந்தார். ஆகவே, அவர் இவ்வாறு எழுதினார்: “என் சத்துருக்கள் நாள் தோறும் என்னை விழுங்கப் பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர் செய்கிறவர்கள் அநேகர்.” ஆபத்துமிக்க சூழ்நிலையில் இருந்ததால், யெகோவாவிடம் உதவிகேட்டு தாவீது ஜெபித்தார். “நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது.”—சங்கீதம் 56:2, 5.
15. (அ) தன்னுடைய கண்ணீரை ஒரு துருத்தியில் சேகரிக்கும்படி அல்லது ஒரு புஸ்தகத்தில் எழுதி வைக்கும்படி தாவீது எந்த அர்த்தத்தில் யெகோவாவிடம் கேட்டுக்கொண்டார்? (ஆ) நம்முடைய விசுவாசத்தினிமித்தம் ஏதோவொரு சோதனையைச் சகித்துக் கொண்டிருக்கும்போது, எதைக் குறித்து நாம் நிச்சயமாய் இருக்கலாம்?
15 அதன்பின், தாவீது சொன்ன மிக அருமையான கூற்றுகள் சங்கீதம் 56:8-ல் பதிவு செய்யப்பட்டுள்ளன. “என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் [“புஸ்தகத்தில்,” NW] அல்லவோ இருக்கிறது?” யெகோவாவின் கனிவான அக்கறைக்கு நெஞ்சைத் தொடும் எப்பேர்ப்பட்ட ஒரு விளக்கம்! மனவேதனையில் துடியாய் துடிக்கும்போது, ஒருவேளை நாம் யெகோவாவிடம் கண்ணீர்விட்டுக் கதறி அழலாம். பரிபூரணராக இருந்த இயேசுவும்கூட அப்படிக் கண்ணீர்விட்டார். (எபிரெயர் 5:7) தன் கண்ணீரைத் துருத்தியில் சேகரித்து வைப்பது போல் அல்லது ஒரு புஸ்தகத்தில் எழுதி வைப்பது போல் தன்னுடைய கடுந்துயரத்தை ஞாபகம் வைத்திருக்கிறார் என்பதிலும், யெகோவா தன்னைக் கவனிக்கிறார் என்பதிலும் தாவீதுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.d அந்தத் துருத்தியில் உங்கள் கண்ணீர் பெரும் பாகத்தை நிரம்பியிருப்பது போல் அல்லது அத்தகைய புஸ்தகத்தில் உங்கள் சோகக் கதை பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருப்பது போல் ஒருவேளை நீங்களும்கூட உணரலாம். அப்படியானால், ஆறுதலடையுங்கள். ஏனெனில் பைபிள் இவ்வாறு நம்மைத் தேற்றுகிறது: “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.”—சங்கீதம் 34:18.
கடவுளுடைய நெருங்கிய நண்பராதல்
16, 17. (அ) தம்முடைய மக்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளைக் கண்டு யெகோவா பாராமுகமாய் இருப்பதில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) மக்கள் தம்மோடு அன்யோன்யமாக இருப்பதற்கு யெகோவா என்ன செய்திருக்கிறார்?
16 ‘நம்முடைய தலையிலுள்ள மயிரையெல்லாம்’ யெகோவா எண்ணி வைத்திருக்கிறார் என்ற உண்மை, எந்தளவு அவர் நம்மைக் கூர்ந்து கவனிக்கிறார், நம்மீது அக்கறை காட்டுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள ஓரளவு உதவுகிறது; இப்படிப்பட்ட கடவுளை வணங்க நாம் பாக்கியம் பெற்றிருக்கிறோம். எல்லா வேதனைகளும் துன்பங்களும் முடிவுறுவதற்கு, வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகம் வரும்வரை நாம் காத்திருக்க வேண்டியிருந்தாலும், தம்முடைய மக்களுக்காக யெகோவா இப்போதே அருமையான ஒன்றைச் செய்து வருகிறார். தாவீது இவ்வாறு எழுதினார்: “கர்த்தருடைய இரகசியம் [“யெகோவாவோடு அன்யோன்யம்,” NW] அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.”—சங்கீதம் 25:14.
17 “யெகோவாவோடு அன்யோன்யம்.” அபூரண மனிதர்களான நமக்கு இந்தக் கருத்து கற்பனைக்கு எட்டாததாய் இருக்கிறது! என்றாலும், தமக்குப் பயந்தவர்களைத் தம்முடைய கூடாரத்திலே விருந்தினர்களாக வந்து தங்குமாறு யெகோவா அழைக்கிறார். (சங்கீதம் 15:1-5) தம்முடைய விருந்தினருக்கு யெகோவா என்ன செய்கிறார்? தாவீது சொன்னபடி, தம்முடைய உடன்படிக்கையை அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறார். விஷயங்களை அவர்களிடம் நம்பிக்கையுடன் பகிர்ந்துகொள்கிறார்; ஆம், “தமது இரகசியத்தை” தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்துகிறார், இதன் மூலம் அவருடைய நோக்கங்களையும், அவற்றிற்கிசைய வாழ்வதையும் பற்றி அவர்களால் தெரிந்துகொள்ள முடிகிறது.—ஆமோஸ் 3:7.
18. நாம் யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் விரும்புவது நமக்கு எப்படித் தெரியும்?
18 அபூரண மனிதர்களான நாம் உன்னத தேவனான யெகோவாவின் நெருங்கிய நண்பராகலாம் என்பதை அறிவது இதயத்திற்கு உண்மையிலேயே இதமூட்டுகிறது. சொல்லப்போனால், அவருடைய நண்பராகும்படி அவரே நம்மை அழைக்கிறார். “தேவனிடத்தில் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடத்தில் நெருங்கி வருவார்” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 4:8, NW) அவரோடு நெருங்கிய பந்தத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் விரும்புகிறார். சொல்லப்போனால், அதற்கான நடவடிக்கைகளை அவர் ஏற்கெனவே எடுத்திருக்கிறார். இயேசுவின் மீட்கும் பலி, சர்வவல்லமையுள்ள கடவுளோடு நாம் நட்பு வைத்துக்கொள்வதற்கான வழியைத் திறந்துவிட்டிருக்கிறது. “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்” என பைபிள் கூறுகிறது.—1 யோவான் 4:19.
19. சோதனைகளில் சகித்திருப்பது யெகோவாவோடு உள்ள நம் பந்தத்தை எப்படிப் பலப்படுத்துகிறது?
19 மோசமான சூழ்நிலைகளில் நாம் சகித்திருக்கும்போது, யெகோவாவோடு உள்ள அந்த நெருங்கிய பந்தம் மேலுமாகப் பலப்படுகிறது. சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது [“சகிப்புத்தன்மையானது,” NW] பூரண கிரியை செய்யக்கடவது.” (யாக்கோபு 1:4) கஷ்டங்களில் சகித்திருக்கும்போது என்ன “கிரியை” செய்து முடிக்கப்படுகிறது? பவுலுடைய ‘மாம்சத்திலே இருந்த முள்ளைப்’ பற்றிச் சற்று யோசித்துப் பாருங்கள். அவருடைய விஷயத்தில், சகித்திருந்தது எப்படி உதவியது? தன் சோதனைகளைப் பற்றி பவுல் இவ்வாறு சொன்னார்: “கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.” (2 கொரிந்தியர் 12:9, 10) சோதனைகளில் சகித்திருப்பதற்கான பலத்தை, “இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியை,” தேவைப்படும்போதெல்லாம் பவுலுக்கு யெகோவா கொடுத்தார். இதன் காரணமாக, கிறிஸ்துவோடும் யெகோவா தேவனோடும் அவரால் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ள முடிந்தது.—2 கொரிந்தியர் 4:7, NW; பிலிப்பியர் 4:11-13.
20. கஷ்டங்களின்போது, யெகோவா நமக்கு ஆதரவையும் அரவணைப்பையும் அளிப்பார் என்பதில் நாம் எப்படி நிச்சயமாய் இருக்கலாம்?
20 ஒருவேளை உங்களுக்கு மாறிமாறி சோதனைகள் வர யெகோவா அனுமதித்திருக்கலாம். அப்படியானால், “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று தமக்குப் பயந்தவர்களிடம் அவர் கொடுக்கும் வாக்குறுதியை எப்போதும் மனதில் வையுங்கள். (எபிரெயர் 13:5) அத்தகைய ஆதரவையும் அரவணைப்பையும் தனிப்பட்ட விதத்தில் நீங்கள் அனுபவிப்பீர்கள். ஆம், ‘உங்கள் தலையிலுள்ள மயிரையெல்லாம்’ அவர் எண்ணி வைத்திருக்கிறார். சோதனைகளில் நீங்கள் சகித்திருப்பதைப் பார்க்கிறார். உங்களுடைய வேதனைகளை உணருகிறார். உங்கள்மீது உள்ளப்பூர்வமான அக்கறையைக் காட்டுகிறார். அதுமட்டுமல்ல, ‘தமது நாமத்திற்காக நீங்கள் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தை ஒருபோதும் மறந்துவிடாமலும்’ இருக்கிறார்.—எபிரெயர் 6:10.
[அடிக்குறிப்புகள்]
a நீதிமானான தாவீதும், கோராகின் விசுவாசமிக்க குமாரர்களும்கூட இதுபோன்ற வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.—சங்கீதம் 10:1; 44:24.
b பவுலுடைய ‘மாம்சத்திலே இருந்த முள்’ எதுவென்று பைபிள் துல்லியமாகக் குறிப்பிடுவதில்லை. ஒருவேளை அது மங்கிய கண்பார்வை போன்ற ஏதோவொரு சரீர உபாதையாக இருந்திருக்கலாம். அல்லது அப்போஸ்தலனாக பவுலுக்கு இருந்த உரிமையையும் அவருடைய ஊழியத்தையும் குறித்து விவாதித்த கள்ள அப்போஸ்தலர்களாலும் மற்றவர்களாலும் வந்த பிரச்சினையாக இருந்திருக்கலாம்.—2 கொரிந்தியர் 11:6, 13-15; கலாத்தியர் 4:15; 6:11.
c குருவி தரையிலே விழுவது என்பது, அது இறந்துபோவதை மட்டுமே குறிப்பதில்லை எனச் சில அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அதன் மூலமொழி சொற்றொடர், உணவைக் கொத்திச் செல்வதற்காக அந்தப் பறவை தரையில் வந்து அமருவதைக்கூட ஒருவேளை அர்த்தப்படுத்தலாம் என அவர்கள் சொல்கிறார்கள். இது சரியென்றால், ஒரு பறவை இறக்கும்போது மட்டுமல்ல, ஆனால் அது அன்றாடம் செய்கிற ஒவ்வொன்றையும் கடவுள் கவனித்து, அதன்மீது அக்கறை காட்டுகிறார் என்று அந்தச் சொற்றொடர் அர்த்தப்படுகிறது.—மத்தேயு 6:26.
d பண்டைய காலங்களில் செம்மறி ஆடு, வெள்ளாடு, மாடு ஆகியவற்றின் பதப்படுத்தப்பட்ட தோல்களினால் துருத்திகள் தயாரிக்கப்பட்டன. பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி, அல்லது தண்ணீர் வைப்பதற்காக அவை பயன்படுத்தப்பட்டன. எண்ணெய்யை அல்லது திராட்சரசத்தை வைப்பதற்கு அந்தத் தோல்கள் இன்னும் நன்றாகப் பதப்படுத்தப்பட்டன.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• கடவுள் தங்களைக் கைவிட்டுவிட்டதாகச் சிலர் நினைப்பதற்கான காரணங்கள் யாவை?
• அடைக்கலான் குருவிகளைப் பற்றியும், நம் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருப்பதைப் பற்றியும் இயேசு சொன்ன உதாரணங்களிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?
• ஒருவருடைய கண்ணீர் யெகோவாவின் “துருத்தியில்” வைக்கப்படுவது அல்லது அவருடைய “புஸ்தகத்தில்” எழுதப்படுவது எதை அர்த்தப்படுத்துகிறது?
• நாம் எவ்வாறு ‘யெகோவாவோடு அன்யோன்யத்தை’ அனுபவிக்கலாம்?
[பக்கம் 22-ன் படம்]
பவுலுடைய ‘மாம்சத்திலிருந்த முள்ளை’ யெகோவா ஏன் நீக்கிப் போடவில்லை?
[பக்கம் 23-ன் படம்]
அடைக்கலான் குருவிகளைப் பற்றி இயேசு சொன்ன உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
[படத்திற்கான நன்றி]
© J. Heidecker/VIREO
[பக்கம் 25-ன் படம்]
தவறாமல் பைபிளை வாசிப்பதன் மூலம், யெகோவாவுக்கு நம்மீது தனிப்பட்ட அக்கறை இருக்கிறது என்ற உறுதியை நாம் பெற்றுக்கொள்ள முடியும்