பூர்வ கிறிஸ்தவம் தழைத்தோங்கிய இடத்தில் அதிகரிப்பு
இத்தாலி—‘பூட் ஷூ’ வடிவிலுள்ள இந்தத் தீபகற்பம் மத்தியதரைக் கடலுக்குள் நீண்டு கிடக்கிறது. இங்கு நடைபெற்றிருக்கும் மத, கலாச்சார நிகழ்ச்சிகள் உலக வரலாற்றில் செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன. இந்நாட்டின் எழில் கொஞ்சும் விதவிதமான இயற்கை காட்சிகளும், பிரபலமான கலை வேலைப்பாடுகளும், அறுசுவையான உணவு வகைகளும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கின்றன. இந்த நாட்டில் பைபிள் கல்வி புகட்டும் வேலையும் செழித்தோங்குகிறது.
யூதர்களும் யூத மதத்திற்கு மாறியவர்களும் பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு எருசலேமிலிருந்து வீடு திரும்பினார்கள்; அச்சமயத்தில்தான் அப்போதைய உலக வல்லரசின் தலைநகராக விளங்கிய ரோமில் உண்மை கிறிஸ்தவம் முதலில் சென்றெட்டியிருக்கலாம். சுமார் பொ.ச. 59-ல் அப்போஸ்தலன் பவுல் முதல் முறையாக இத்தாலிக்குச் சென்றார். அவர் கடற்கரையோரத்திலிருந்த புத்தேயோலி பட்டணத்தில் கிறிஸ்தவ ‘சகோதரர்களைக் கண்டார்.’—அப்போஸ்தலர் 2:5-11; 28:11-16.
இயேசுவும் அவருடைய சீஷர்களும் முன்னறிவித்தபடி, பொ.ச. முதல் நூற்றாண்டிற்குள்ளாகவே விசுவாசதுரோகிகள் உண்மை கிறிஸ்தவத்திலிருந்து படிப்படியாக விலகிச் சென்றார்கள். ஆனால் இயேசுவின் உண்மை சீஷர்களோ, இந்தப் பொல்லாத ஒழுங்கு முறையின் முடிவு வருவதற்கு முன்பே நற்செய்தியை உலகமுழுவதிலும், ஏன் இத்தாலியிலும்கூட பிரசங்கித்திருக்கிறார்கள்.—மத்தேயு 13:36-43; அப்போஸ்தலர் 20:29, 30; 2 தெசலோனிக்கேயர் 2:3-8; 2 பேதுரு 2:1-3.
ஏமாற்றமான தொடக்கம்
1891-ல் சார்ல்ஸ் டேஸ் ரஸல் என்பவர் முதல் முறையாக சில இத்தாலிய பட்டணங்களுக்குச் சென்றார். இவர் பைபிள் மாணாக்கர்களுடைய (இப்போது யெகோவாவின் சாட்சிகளென அறியப்படுகிறார்கள்) உலகளாவிய பிரசங்க வேலையை அப்போது தலைமை தாங்கி நடத்தி வந்தார். ஆனால் அங்கு அவருடைய ஊழியம் நல்ல பலன்களைத் தரப்போவதாகத் தெரியவில்லை என்றார்; “இத்தாலியில் ஊழியம் முன்னேறும் என நம்புவதற்கு எந்த அத்தாட்சியையும் நாங்கள் பார்க்கவில்லை” என அவர் ஒத்துக்கொண்டார். 1910-ம் வருடம் இளவேனிற் காலத்தில் சகோதரர் ரஸல் மறுபடியும் இத்தாலிக்குச் சென்று ரோமின் மத்திபத்தில் அமைந்துள்ள ஜிம்னேஸியத்தில் ஒரு பைபிள் பேச்சைக் கொடுத்தார். அதன் விளைவு? “அக்கூட்டம் மொத்தத்தில் ஏமாற்றத்தையே அளித்தது” என்று அறிவித்தார்.
சொல்லப்போனால், சில பத்தாண்டுகளுக்கு இத்தாலியில் பிரசங்க வேலை மெதுவாகத்தான் முன்னேறியது. அதற்கு ஒரு காரணம், யெகோவாவின் சாட்சிகளை ஃபாசிஸ சர்வாதிகாரம் துன்புறுத்தியது. அச்சமயத்தில் இத்தாலி முழுவதிலும் வெறும் 150 யெகோவாவின் சாட்சிகளே இருந்தார்கள். அவர்களில் அநேகர் வெளி நாடுகளில் இருந்த உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் பைபிள் சத்தியங்களைக் கற்றவர்கள்.
எதிர்பாரா முன்னேற்றம்
இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து அநேக மிஷனரிகள் இத்தாலிக்கு அனுப்பப்பட்டார்கள். ஆனால் வாடிகன் குருவர்க்கத்தில் உயர் பதவியிலிருந்த ஆட்கள், அந்த மிஷனரிகளை வெளியேற்றும்படி அரசாங்கத்திடம் கோரினார்கள்; இவ்விஷயம், தேசிய பொது ஆவணப் பெட்டகத்திலுள்ள கடிதங்களின் மூலம் தெரிய வருகிறது. எனவே சிலரைத் தவிர மற்ற அனைத்து மிஷனரிகளும் நாட்டை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டார்கள்.
இப்படிப்பட்ட தடைகள் மத்தியிலும், யெகோவாவின் வணக்கமாகிய ‘பர்வதத்திற்கு’ இத்தாலிய மக்கள் திரண்டு செல்ல ஆரம்பித்தார்கள். (ஏசாயா 2:2-4) எதிர்பாராத அளவில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. 2004-ல் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 2,33,527 என்ற உச்சநிலையை எட்டியது; அதாவது, 248 ஆட்களுக்கு ஒரு யெகோவாவின் சாட்சி என்ற விகிதம் இருந்தது. கிறிஸ்துவின் நினைவு ஆசரிப்பு தினத்திற்கு 4,33,242 பேர் வந்திருந்தார்கள். மொத்தம் 3,049 சபைகள் இருந்தன. யெகோவாவின் சாட்சிகள் சபைக் கூட்டங்களுக்காக வசதியான ராஜ்ய மன்றங்களில் கூடிவந்தார்கள்.
பன்மொழிகளில் பிரசங்கித்தல்
சமீபத்தில், முக்கியமாக, குறிப்பிட்ட சில தொகுதியினர் மத்தியில் நல்ல அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்கா, ஆசியா, மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து அநேக மக்கள் இத்தாலியில் குடியேறியிருக்கிறார்கள். வேலைக்காக, வசதியான வாழ்க்கைக்காக, அல்லது சில சமயங்களில் பயங்கரமான சூழ்நிலைகளிலிருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு குடியேறியிருக்கிறார்கள். லட்சக்கணக்கான இந்த மக்களுக்கு எப்படி ஆன்மீக உதவி அளிக்கப்படுகிறது?
இத்தாலியிலுள்ள அநேக சாட்சிகள் அம்ஹாரிக், அரபிக், அல்பேனியன், சிங்களம், சைனீஸ், டாகலாக், பஞ்சாபி, வங்காளி போன்ற கடினமான மொழிகளைக் கற்கும் சவாலை ஏற்றிருக்கிறார்கள். வேற்றுநாட்டு மொழிகளில் சாட்சிகொடுப்பதற்கான பயிற்சி வகுப்புகள் இவர்களுக்காக 2001-லிருந்து நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் 17 வித்தியாசமான மொழிகளில் நடைபெற்ற 79 வகுப்புகளில் 3,711 சாட்சிகள் கலந்துகொண்டார்கள். இதனால் 25 வித்தியாசப்பட்ட மொழிகளில் 146 சபைகளும் 274 தொகுதிகளும் உருவாக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்படி உண்மை மனமுள்ள ஆட்கள் அநேகர் நற்செய்தியைக் கேட்டு பைபிளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பெரும்பாலும் வியக்கத்தக்க பலன்கள் கிடைத்திருக்கின்றன.
மலையாள மொழி பேசும் ஜார்ஜ் என்ற இந்தியரிடம் யெகோவாவின் சாட்சி ஒருவர் பைபிளைப் பற்றி பேசினார். அவருக்கு வேலையில் நிறைய சிக்கல்கள் இருந்தபோதிலும் சந்தோஷமாக பைபிள் படிப்பிற்கு ஒத்துக்கொண்டார். சில நாட்களுக்குப் பின் ஜார்ஜின் நண்பரான கில் ராஜ்ய மன்றத்திற்கு சென்றார். அவர் பஞ்சாபி மொழி பேசும் இந்தியர். அவரிடமும் பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. தெலுங்கு மொழி பேசும் டேவிட் என்ற இந்தியரை யெகோவாவின் சாட்சிகளுக்கு கில் அறிமுகப்படுத்தினார். டேவிட்டும் சீக்கிரத்தில் பைபிளைப் படிக்கத் தொடங்கினார். டேவிட் தங்கிய அறையிலேயே ஸன்னி, சுபாஷ் என்று இருவர் தங்கியிருந்தார்கள். அவர்களும் பைபிள் படிப்பில் கலந்துகொண்டார்கள்.
சில வாரங்களுக்குப் பின் மராத்தி மொழி பேசும் திலீப் என்ற நபர் யெகோவாவின் சாட்சிகளுக்கு ஃபோன் செய்து, “நான் ஜார்ஜுடைய நண்பன். எனக்கு பைபிள் கற்றுத்தருவீர்களா?” என்று கேட்டார். பிறகு தமிழ் மொழி பேசும் ஸுமித் என்ற நபரும் பைபிள் படிக்க வந்தார். கடைசியாக ஜார்ஜின் இன்னொரு நண்பரும் பைபிளைக் கற்றுத்தரும்படி ஃபோனில் கேட்டார். மாக்ஸ் என்ற இன்னொரு இளம் நபரை ராஜ்ய மன்றத்திற்கு ஜார்ஜ் அழைத்து வந்தார். அவரும் பைபிள் படிப்பு வேண்டும் என்றார். இன்று வரை ஆறு பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்னும் நான்கு பைபிள் படிப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பைபிள் படிப்பு ஆங்கிலத்தில் நடத்தப்படுகிறபோதிலும் உருது, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பிரசுரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
காது கேளாதோர் நற்செய்தியைக் “கேட்கிறார்கள்”
இத்தாலியில் காது கேளாதோர் 90,000-க்கும் அதிகமாக இருக்கிறார்கள். 1970-களின் மத்திபத்தில் சாட்சிகள் அவர்களுக்கு பைபிள் சத்தியங்களை போதிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். இந்த வேலையைச் செய்ய மனமுள்ளவர்களாக இருந்த சாட்சிகளுக்கு காதுகேளாத மற்ற சாட்சிகள் இத்தாலிய சைகை மொழியைக் கற்பித்தார்கள். இதன் பிறகு காது கேளாதோர் அநேகர் பைபிளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்கள். இன்று, இத்தாலிய சைகை மொழி பேசும் 1,400-க்கும் அதிகமானோர் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வருகிறார்கள். 15 சபைகளும் 52 தொகுதிகளும் இத்தாலிய சைகை மொழியில் கூட்டங்களை நடத்துகின்றன.
ஆரம்பத்தில், சாட்சிகள் தாங்களாகவே முயற்சி செய்துதான் காது கேளாதோருக்கு பிரசங்கிக்க வேண்டியிருந்தது. ஆனால் 1978-ல் இத்தாலியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகம் காது கேளாதோருக்காக மாவட்ட மாநாடுகளை ஏற்பாடு செய்தது. அவ்வருடம் மே மாதம் மிலான் நகரில் நடக்கவிருந்த சர்வதேச மாநாட்டில் காது கேளாதோருக்கு சைகை மொழியில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காது கேளாதோருக்கான முதல் வட்டார மாநாடு 1979, பிப்ரவரி மாதம் மிலானிலுள்ள ஒரு மாநாட்டு மன்றத்தில் நடைபெற்றது.
அப்போதிலிருந்து காது கேளாதோரின் ஆன்மீக நலனிற்கு கிளை அலுவலகம் அதிக கவனம் செலுத்துகிறது. எனவே சைகை மொழியை கற்றுக்கொள்ளும்படி, எண்ணிக்கையில் பெருகிவரும் பிரசங்கிப்பாளர்களை கிளை அலுவலகம் உற்சாகப்படுத்துகிறது. 1995 முதல், காதுகேளாத சாட்சிகளை ஊழியத்தில் பயிற்றுவிக்கவும் அவர்களுக்காக கிறிஸ்தவக் கூட்டங்களை ஒழுங்கமைக்கவும் விசேஷ பயனியர்கள் (முழுநேர சுவிசேஷகர்கள்) சில தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். மாநாட்டு நிகழ்ச்சிநிரலை நன்றாக பார்த்து ரசிப்பதற்காக மூன்று மாநாட்டு மன்றங்களில் நவீன வீடியோ சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. காது கேளாத மக்களுக்கு ஆன்மீக உணவளிக்க பைபிள் பிரசுரங்கள், வீடியோ கேஸட்டுகளாக வெளியிடப்பட்டிருக்கின்றன.
காது கேளாதோரின் ஆன்மீகத் தேவைகளை யெகோவாவின் சாட்சிகள் நன்றாக பூர்த்தி செய்கிறார்கள் என்பதை மற்றவர்கள் கவனித்திருக்கிறார்கள். கத்தோலிக்க தலைமை குரு ஒருவரிடமிருந்து வந்த கடிதத்தின் சில வரிகளை இத்தாலிய காது கேளாதோர் சங்கம் பிரசுரித்த பாரோலி ஏ ஸேன்யி பத்திரிகை இவ்வாறு குறிப்பிட்டது: “காது கேளாதோராக இருப்பது சங்கடமான விஷயம். ஏனென்றால் அவர்களுக்கு எப்போதும் கவனிப்பு தேவை. உதாரணமாக, சர்ச்சுக்கு எந்தக் கஷ்டமும் இல்லாமல் எப்படியோ தனியாக வந்துவிடுகிறார்கள். ஆனால் ஆராதனையின்போது என்ன சொல்லப்படுகிறது, என்ன வாசிக்கப்படுகிறது, என்ன பாடப்படுகிறது என்பதையெல்லாம் விளக்க இன்னொருவருடைய உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது.” அந்தப் பத்திரிகை தொடர்ந்து சொல்வதாவது: “வருத்தகரமாக சர்ச்சுகளில் காது கேளாதவர்களை கவனித்துக்கொள்ள எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை” என்று அந்தத் தலைமை குரு ஒப்புக்கொள்கிறார். “சர்ச்சுகளைவிட யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றங்களில் கேளாதவர்களுக்கு சிறந்த கவனம் செலுத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.”
சிறைக்கைதிகளுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது
ஒருவர் சிறையில் இருந்துகொண்டே விடுதலை உணர்வைப் பெற்றிருக்க முடியுமா? முடியும். கடவுளுடைய வார்த்தைக்கு “விடுதலையாக்கும்” சக்தி இருக்கிறது. அதைப் படித்து கடைப்பிடிக்கிறவர்களுக்கு அந்த விடுதலை கிடைக்கும். பாவத்திலிருந்தும் பொய் மதத்திலிருந்தும் கிடைக்கும் விடுதலையைப் பற்றி “சிறைப்பட்டவர்களுக்கு” இயேசு சொன்னார். (யோவான் 8:32; லூக்கா 4:16-19) இத்தாலியில், சிறைக்கைதிகளிடம் பிரசங்கித்ததால் நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. அவர்களுக்கு ஆன்மீக உதவியளிக்க அரசாங்கம் கிட்டத்தட்ட 400 யெகோவாவின் சாட்சிகளுக்கு அனுமதி அளித்திருக்கிறது. கத்தோலிக்கர் அல்லாதவர்களில் இப்படிப்பட்ட அனுமதியை முதன்முதலாக கேட்டு பெற்றவர்கள் யெகோவாவின் சாட்சிகள்தான்.
பைபிள் செய்தி எதிர்பாராத விதங்களில் பரவலாம். யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் கல்வி புகட்டும் வேலையைப் பற்றி கைதிகள் சக கைதிகளிடம் பேசுகிறார்கள். அதன் விளைவாக சாட்சிகள் தங்களை வந்து சந்திக்கும்படி சில கைதிகள் கேட்டிருக்கிறார்கள். அல்லது கைதிகளின் குடும்பத்தார் ஏற்கெனவே பைபிளை படிக்க தொடங்கியிருந்தால், கைதிகளையும் அவ்வாறு படிக்க உற்சாகப்படுத்துகிறார்கள். கொலை செய்ததற்காக அல்லது வேறு பயங்கரமான குற்றங்களை செய்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் கைதிகள்கூட இப்போது மனந்திரும்பி பெரும் மாற்றங்களை செய்திருக்கிறார்கள். இவ்வாறு யெகோவாவிற்கு தங்களை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற அவர்கள் தயாராகிறார்கள்.
அநேக சிறைச்சாலைகளில் பைபிளின் அடிப்படையில் பேச்சுக்கள் கொடுப்பதற்கும், இயேசுவின் நினைவு நாளை ஆசரிப்பதற்கும், யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் சார்ந்த வீடியோ கேஸட்டுகளை காண்பிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பொதுவாக இந்தக் கூட்டங்களுக்கு நிறைய கைதிகள் வருவார்கள்.
கைதிகளுக்கு நடைமுறையான உதவி அளிப்பதற்காக, அவர்களுக்கு பயனளிக்கும் விஷயங்களைக் கொண்ட பத்திரிகைகளை சாட்சிகள் அதிகளவில் வினியோகித்திருக்கிறார்கள். அதில் ஒரு பத்திரிகைதான் “கைதிகள் திருந்த முடியுமா?” என்ற விஷயத்தைப் பற்றி கலந்தாலோசித்த மே 8, 2001, விழித்தெழு! (ஆங்கிலம்). மற்றொன்று, “குடும்பத்தில் போதை மருந்து துஷ்பிரயோகம்—நீங்கள் என்ன செய்யலாம்?” என்ற தலைப்பில் வெளிவந்த ஏப்ரல் 8, 2003 ஆங்கில வெளியீடு ஆகும். கைதிகளிடம் ஆயிரக்கணக்கான பிரதிகள் விநியோகிக்கப்பட்டதன் விளைவாக நூற்றுக்கணக்கான பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிறைக் காவலர்கள் சிலரும்கூட பைபிள் செய்தியில் அக்கறை காண்பித்திருக்கிறார்கள்.
காஸ்டான்டினோ என்ற கைதி, அதிகாரிகளிடமிருந்து விசேஷ அனுமதி பெற்ற பிறகு ஸான் ரிமோ என்ற நகரிலுள்ள ஒரு ராஜ்ய மன்றத்தில் முழுக்காட்டப்பட்டார். அவருடைய முழுக்காட்டுதலுக்கு உள்ளூரிலிருந்து 138 யெகோவாவின் சாட்சிகள் வந்திருந்தார்கள். “அவர்களுடைய பாச மழையில் நனைந்தது போல் உணருகிறேன்” என்று காஸ்டான்டினோ மனம் நெகிழ்ந்து சொன்னார். சிறை வார்டன் என்ன சொன்னார் என்பதை உள்ளூர் செய்தித்தாள் ஒன்று இவ்வாறு வெளியிட்டது: “ரொம்ப சந்தோஷமாக . . . இந்த அனுமதியை நாங்கள் கொடுத்தோம். ஒரு கைதி—சமுதாயத்திலும் சொந்த வாழ்க்கையிலும் ஆன்மீக வாழ்க்கையிலும்—திருந்தி வாழ்வதற்கு உதவும் எந்தவொரு காரியமும் முக்கியமாக கருதப்பட வேண்டும்.” பைபிளின் திருத்தமான அறிவு காஸ்டான்டினோவின் வாழ்க்கையை பெரியளவில் மாற்றியதை அவருடைய மனைவியும் மகளும் பார்த்து மனம் கவரப்பட்டு இவ்வாறு சொன்னார்கள்: “அவர் செய்திருக்கும் மாற்றங்களைப் பார்க்கும்போது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அவர் சாந்தமாக ஆகிவிட்டார். எங்கள் மீது அதிக அக்கறை காண்பிக்கிறார். எங்களுக்கு அவர் மீது நம்பிக்கையும் மரியாதையும் வந்திருக்கிறது.” இப்போது இவர்களும் பைபிளை படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள், கிறிஸ்தவக் கூட்டங்களுக்கும் வருகிறார்கள்.
ஸெர்ஜோ என்ற நபர் திருட்டு, துப்பாக்கி முனையில் கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், கொலை ஆகிய குற்றங்களுக்கு 2024-ம் வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டார். அவரோ மூன்று வருடங்கள் பைபிளை ஆராய்ந்து படித்தார். வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைச் செய்தார். யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டுதல் பெற வேண்டும் என்றும் தீர்மானித்தார். எல்பா தீவிலுள்ள போர்டோ ஆட்ஸுரோ சிறைச்சாலையில் யெகோவாவின் சாட்சியாக அதுவரை முழுக்காட்டப்பட்ட கைதிகளில் இவர் 15-வது நபர். சிறைச்சாலையின் விளையாட்டு மைதானத்தில் தயார் செய்யப்பட்டிருந்த தண்ணீர்த் தொட்டியில் அவருக்கு முழுக்காட்டுதல் கொடுக்கப்பட்டது. கைதிகளில் அநேகர் அதைப் பார்க்க வந்திருந்தார்கள்.
20 வருட சிறை தண்டனை பெற்றிருக்கும் லேயோநார்டோ என்ற நபர் பார்மா நகரத்திலுள்ள ராஜ்ய மன்றத்தில் முழுக்காட்டுதல் பெற விசேஷ அனுமதி பெற்றார். உள்ளூர் செய்தித்தாள் நிருபர் பேட்டி கண்டபோது, அவர் “ஒரு யெகோவாவின் சாட்சியாக மாறியது, சிறைச்சாலைப் பிடியிலிருந்து தப்புவதற்காக அல்ல, ஆனால் தன்னுடைய அதிமுக்கியமான ஆன்மீகத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே என்பதை தெளிவாக்க” விரும்பியதாகச் சொன்னார். அவர் சொன்னதாவது: “என்னுடைய பழைய வாழ்க்கையில் நிறைய தவறுகளைச் செய்திருக்கிறேன். ஆனால் அந்த வாழ்க்கையைக் குழி தோண்டி புதைத்துவிட்டேன். இப்போது நிறைய மாற்றங்களை செய்திருக்கிறேன். ஆனால் எல்லாவற்றையும் இரவோடு இரவாக செய்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. இனிமேலும்கூட உத்தமனாகவே இருப்பதற்கு நான் தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும்.”
ஸால்வாடோரே என்பவர் கொலைக் குற்றத்திற்காக ஸ்போலேடோ நகரிலுள்ள கடுங்காவல் சிறையில் வைக்கப்பட்டார். சிறைக்குள்ளேயே நடந்த அவருடைய முழுக்காட்டுதல் அநேகரின் மனதைத் தொட்டது. சிறை வார்டன் இவ்வாறு சொன்னார்: “மற்றவர்களிடம் நல்லபடியாக நடந்துகொள்வதற்கு கைதி எடுக்கும் முடிவை சமுதாயத்தில் மதிக்க வேண்டியது அவசியம். அது சிறைவாசிகளுக்கும் நல்லது, சமுதாயத்திற்கும் நல்லது.” ஸால்வாடோரே வாழ்க்கையில் மாற்றங்களை செய்ததால் அவருடைய மனைவியும் மகளும் இப்போது யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு செல்கிறார்கள். ஸால்வாடோரே வேறொரு கைதியிடம் பிரசங்கித்தார். பிற்பாடு அந்தக் கைதியும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த சாட்சியாக முழுக்காட்டுதல் பெற்றார்.
பூர்வத்தில் கிறிஸ்தவம் பரவி தழைத்தோங்கிய இடங்களில் இத்தாலியும் ஒன்று. (அப்போஸ்தலர் 2:10; ரோமர் 1:2) பவுலும் அவருடைய சக கிறிஸ்தவ ஊழியர்களும் நற்செய்தியை பிரசங்கிக்க பாடுபட்ட அதே இடங்களில் இப்போது தொடர்ந்து ஆன்மீக முன்னேற்றமும் அதிகரிப்பும் ஏற்பட்டு வருகிறது.—அப்போஸ்தலர் 23:11; அப்போஸ்தலர் 28:14-16.
[பக்கம் 13-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
இத்தாலி
ரோம்
[பக்கம் 15-ன் படங்கள்]
பீடான்டோ மாநாட்டு மன்றமும் ரோமிலுள்ள இத்தாலிய சைகை மொழி சபையும்
[பக்கம் 16-ன் படம்]
பைபிள் சத்தியத்தால் கைதிகள் ‘விடுதலை’
[பக்கம் 17-ன் படம்]
பூர்வ கிறிஸ்தவம் தழைத்தோங்கிய இடத்தில் அதிகரிப்பு தொடர்கிறது