புத்தி—நடைமுறைவாழ்க்கையில் இல்லாதிருப்பது ஏன்?
“அவனுக்கு என்ன ஆச்சு? இந்த மாதிரி செய்யக்கூடாதுன்னு தெரியாதா?” என்று சொல்கிறார் ஒருவர். “கொஞ்சமாவது புத்தியிருந்தா அவன் இதை செய்திருக்கவே மாட்டான்” என முணுமுணுத்துக்கொண்டே அங்கிருந்து நடக்க ஆரம்பிக்கிறார் இன்னொருவர். இதுபோன்ற பேச்சுக்களை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? முதலாவதாக, “புத்தி” (common sense) என்பது என்ன?
“புத்தி” என்பது “கூர் மதி,” “புரிந்துகொள்ளும் ஆற்றல்,” “நடைமுறை ஞானம் அல்லது விவேகம்” என்றெல்லாம் வரையறுக்கப்படுகிறது. இது, சீர்தூக்கிப் பார்த்து, அறிவாற்றலுடன் தீர்மானிக்கும் திறனைக் குறிக்கிறது. எனவே புத்தியைப் பெற, சிந்திக்கும் திறனைப் பயன்படுத்துவது அவசியம் என்பது தெளிவாகத் தெரிகிறது. மாறாக அநேகர், சொந்தமாக சிந்திக்காமல் மற்றவர்கள் சொல்வதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு செய்கிறார்கள். தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மீடியாவோ, சக தோழர்களோ, பிரபல கருத்தோ தீர்மானிக்கும்படி விட்டுவிடுகிறார்கள்.
புத்தி இன்றைய உலகில் வெகு அரிதாகிவிட்டதாகத் தோன்றுகிறது; பொதுவாக எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கும் ஒரு நபர் ஒருமுறை இவ்வாறு சொன்னார்: ‘புத்தி என்பது நடைமுறை வாழ்க்கையில் நிஜமாகவே அபூர்வமாகிவிட்டது.’ அப்படியென்றால் அந்தப் புத்தியை நாம் எப்படிப் பெறலாம்? அதனால் என்ன பயன்?
எப்படிப் பெறுவது?
புத்தியைப் பெறுவதற்குக் காலமெடுக்கும் என்பது உண்மைதான், ஆனால் எல்லாக் கோணத்திலிருந்தும் காரியங்களைக் கவனமாக சீர்தூக்கிப் பார்த்து, நல்லறிவையும் விவேகத்தையும் வளர்த்துக்கொள்ள தொடர்ந்து முயன்றால் நிச்சயம் புத்தியைப் பெற முடியும். அதற்கு உதவும் மூன்று அம்சங்களை இப்போது சிந்திப்போம்.
பைபிளைப் படித்து, அதன் அறிவுரையைப் பின்பற்றுங்கள். நேர்த்தியான மொழிநடையிலும் தர்க்க ரீதியில் தெளிவாகவும் எழுதப்பட்டிருக்கும் பைபிள், ஞானத்தையும் நல்லறிவையும் பெறுவதற்கு உதவும் அருமையான கருவியாகும். (எபேசியர் 1:8, NW) உதாரணமாக, அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு சக கிறிஸ்தவர்களுக்குப் புத்திமதி கூறினார்: “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்.” (பிலிப்பியர் 4:8) இந்தப் புத்திமதியை எப்போதும் பின்பற்றினால் சரிவர தீர்மானம் எடுப்போம், விவேகமாக நடந்துகொள்வோம்.
அனுபவ பாடம் படியுங்கள். சுவிட்சர்லாந்து நாட்டு கவிஞர் ஒருவர், புத்தியை வாழ்க்கை அனுபவத்துடன் தொடர்புபடுத்தி இவ்வாறு சொன்னார்: “புத்தி என்பது . . . அனுபவமும், முன்னறியும் திறனும் சேர்ந்த கலவை ஆகும்.” பைபிள் சொல்கிறபடி, “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” என்பது மிகவும் உண்மை. (நீதிமொழிகள் 14:15) கூர்ந்து கவனித்தல், பயிற்சி, அனுபவம் ஆகியவற்றின் மூலம் புத்தியைப் படிப்படியாகப் பெறலாம். காலப்போக்கில் காரியங்களை இன்னும் நன்றாகச் செய்ய கற்றுக்கொள்ளலாம். எனினும் நம் தப்பிதங்களிலிருந்தே பாடம் படிக்க மனத்தாழ்மையும் பணிவும் வேண்டும். இந்தக் கடைசி நாட்களில், ஜனங்களிடம் காணப்படும் வீம்பு, கர்வம், பிடிவாதம் ஆகியவை புத்தியாய் நடப்பவர்களுக்கு அடையாளமான குணாம்சங்கள் அல்ல.—2 தீமோத்தேயு 3:1-5.
நண்பர்களை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள். ஞானத்தையும் புத்தியையும் பயன்படுத்துவதில் நம் நண்பர்கள் கையும் கொடுக்கலாம், காலையும் வாரலாம். “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்” என நீதிமொழிகள் 13:20 சொல்கிறது. கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் அவருடைய வார்த்தையை அசட்டை செய்கிறவர்களின் மனப்பான்மையை அல்லது கருத்துகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதை நீதிமொழிகள் 17:12 இவ்வாறு சொல்கிறது: “தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப் பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி.”
என்ன பயன்?
புத்தியைப் பெறுவது பயனுள்ளது. அது வாழ்க்கையை அதிக சுவாரஸ்யமாக்கி, நம் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. அதோடு, காரியங்களை முட்டாள்தனமாக செய்துவிட்டு, பின்னர் எண்ணி வருந்துவதிலிருந்து நம்மைப் பெருமளவு காக்கிறது. சரியான தீர்மானத்தை எடுக்காதவர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே கடினமாக்கிக் கொள்கிறார்கள். “மூடர் அளவுமீறி உழைத்துத் தளர்ந்து போவார்” என பைபிள் குறிப்பிடுகிறது. (பிரசங்கி [சபை உரையாளர்] 10:15, பொது மொழிபெயர்ப்பு) இத்தகைய ஆட்கள் சதா பாடுபட்டு, சோர்ந்துவிடுவார்கள்; ஆனால் உண்மையில் பயனுள்ள எதையும் சாதித்திருக்க மாட்டார்கள்.
சுத்தம், பேச்சுத்தொடர்பு, சுறுசுறுப்பு, வறுமையைச் சமாளித்தல் போன்றவற்றின் பேரிலும் வாழ்க்கையின் இன்னும் பல அம்சங்களின் பேரிலும் நடைமுறையான புத்திமதிகளை பைபிள் ஏராளமாக அளிக்கிறது. வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும், ஞானத்தை வெளிக்காட்ட உதவும் பைபிள் நியமங்களை எந்தளவுக்குப் பின்பற்றுகிறோம் என்பதைப் பொறுத்ததே; இது, லட்சக்கணக்கானோர் அனுபவத்தில் கண்ட உண்மை.
புத்தி, விவரமான அறிவுரைகளை அல்லது சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், நம் பொறுப்புகளை சரிவர செய்து முடிப்பதற்கும் உதவுகிறது. இருந்தாலும் புத்தியைப் பெற்றால் அறிவைப் பெற வேண்டியதில்லை என நினைத்துவிட முடியாது. “புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்” என நீதிமொழிகள் 1:5 குறிப்பிடுகிறது. மேலும், நாம் சேகரித்த தகவலை ஆராய்வதற்கும், அதிலிருந்து சரியான முடிவுக்கு வருவதற்கும்கூட கற்றுக்கொள்ள வேண்டும். இது ‘ஞானமாய் நடப்பதற்கு’ நமக்கு உதவுகிறது.—நீதிமொழிகள் 28:26.
அடக்கத்திற்கும் புத்திக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பல பொறுப்புகளை ஏற்க நாம் ஆசைப்பட்டாலும் காரியங்களை நன்கு ஆராய்ந்து, நம் சக்திக்குட்பட்டதை மட்டுமே செய்ய வேண்டும். ‘கர்த்தருடைய கிரியையிலே . . . பெருகுகிறவர்களாக இருக்கும்படி’ அப்போஸ்தலன் பவுல் நமக்குச் சொல்வது உண்மைதான். (1 கொரிந்தியர் 15:58) இருந்தாலும், “செத்த சிங்கத்தைப் பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி” என சொல்லும் பிரசங்கி 9:4-லுள்ள நியமத்தையும் மறந்துவிடக் கூடாது. யெகோவாவைச் சேவிக்கையில் நம் உடல்நலத்தை சரிவர கவனித்துக்கொள்வது, நீண்ட நாள் வாழ்வதற்கும் தொடர்ந்து சுறுசுறுப்பாய் செயல்படுவதற்கும் உதவலாம். நியாயமான சமநிலையைப் பெற புத்தி நமக்கு உதவ முடியும்; இது நம் சந்தோஷத்தை இழக்காமலேயே அவசியமானவற்றைச் செய்து முடிக்க வழிசெய்யும். ஆம், புத்தியாய் நடக்கையில் பயன்கள் பல உண்டு.
[பக்கம் 14-ன் படம்]
பைபிளில் சரியான புத்திமதி ஏராளம் உள்ளது
[பக்கம் 15-ன் படம்]
கூர்ந்து கவனிப்பது, பயிற்சி, அனுபவம் ஆகியவற்றின் மூலம் புத்தியைப் பெறலாம்