துயரத்தின் மத்தியில் நம்பிக்கை அகதிகள் முகாமில் ஒரு மாநாடு
காகூமா அகதிகள் முகாம் கென்யாவின் வட பகுதியில், அதாவது சூடான் நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. 86,000-க்கும் அதிகமான மக்கள் அங்கே வாழ்கிறார்கள். வறட்சி மிகுந்த அப்பகுதியின் பகல் வெப்பநிலை 120° ஃபாரன்ஹீட். அகதிகள் மத்தியில் அங்கே சர்வசாதாரணமாக வன்முறை வெடிக்கிறது. அங்கிருக்கும் பலரை பொறுத்தவரை, துயரத்தின் இருப்பிடமே அந்த முகாம். ஆனால் சிலர் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
ராஜ்ய நற்செய்தியை ஆர்வத்துடன் அறிவிக்கும் யெகோவாவின் சாட்சிகள் சிலர் அந்த அகதிகள் மத்தியில் இருக்கிறார்கள். இவர்கள் அந்த முகாமுக்குத் தெற்கே 120 கிலோமீட்டர் தொலைவில் லாட்வார் என்ற இடத்திலுள்ள ஒரு சிறிய சபையுடன் கூட்டுறவு கொள்கிறார்கள். அதற்கு அருகிலிருக்கும் அடுத்த சபை எட்டு மணிநேர பயண தூரத்தில் இருக்கிறது.
அகதிகள் தங்கள் முகாமை விட்டு வெளியே செல்ல வாய்ப்பு இல்லாததால், யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் மாநாடுகளில் கலந்துகொள்ள முடிவதில்லை. அதனால், முகாமிலேயே ஒரு விசேஷ மாநாட்டு தினத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
வடக்கு நோக்கி பயணம்
அந்த மாநாட்டுக்கு ஆதரவளிக்க 15 சாட்சிகள் முன்வந்தனர்; அதற்காக அவர்கள் முகாமுக்குத் தெற்கே 480 கிலோமீட்டர் தொலைவிலுள்ள எல்டரெட் நகரிலிருந்து வறண்ட பிரதேசமான வடக்கு நோக்கி கடும் பயணத்தை மேற்கொண்டனர். பைபிள் மாணாக்கர் ஒருவரும் அவர்களோடு மாநாட்டுக்கு வந்திருந்தார்; அவர் இந்தப் பயணத்திற்காக தன்னுடைய மினி பஸ்ஸையும் டிரைவரையும் கொடுத்து உதவினார். தங்கள் சகோதரர்களை உற்சாகப்படுத்தி பலப்படுத்த வேண்டும் என்ற விருப்பமே அவர்களுடைய நெஞ்சில் நிறைந்திருந்தது.
அதிகாலை குளிரில், கென்யாவிற்கு மேற்கேயிருந்த மேட்டுநிலத்திலிருந்து பயணம் ஆரம்பமானது. கரடுமுரடான அப்பாதை மேட்டுநிலப் பகுதியிலிருந்த வயல் நிலங்கள், காடுகள் வழியாக அனல் பறக்கும் பாலைவன புதர்நிலத்திற்கு வந்திறங்கியது. அந்த வறண்ட நிலத்தில் ஆடுகளும் ஒட்டகங்களும் மந்தை மந்தையாக மேய்ந்தன. பாரம்பரிய உடையணிந்த பழங்குடியினர் பலர் கையில் தடி, வில், அம்பு ஆகியவற்றோடு நடந்து சென்றனர். இந்தப் பாதையில் 11 மணிநேரம் பயணித்த பிறகு அந்த சாட்சிகள் லாட்வாரை சென்றடைந்தனர். அனலும் புழுதியுமிக்க அந்நகரில் கிட்டத்தட்ட 20,000 மக்கள் குடியிருக்கின்றனர். அங்கிருந்த சாட்சிகள் அவர்களை அன்புடன் வரவேற்ற பிறகு, களைப்பாயிருந்த சகோதரர்கள் சற்று ஓய்வெடுக்க சென்றனர். அப்போதுதான் அந்த வார இறுதி நாட்களின் வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும்.
அடுத்த நாள் காலை, அந்த 15 சாட்சிகளும் அவ்விடத்தை சுற்றிப்பார்க்கச் சென்றனர். கென்யாவின் மிகப் பெரிய ஏரியான டர்கனா ஏரி முக்கிய சுற்றுலா தலமாக இருந்தது. சுற்றிலும் பல மைல் தூரத்திற்கு பாலைவன புதர்களால் சூழப்பட்டிருந்த இந்த ஏரியில்தான் உலகிலேயே அதிகளவான முதலைகள் குடியிருக்கின்றன. அந்த ஏரியின் காரத்தன்மையுள்ள தண்ணீர் கரையோரத்தில் குடியிருக்கும் சிலருக்கு பயன்படுகிறது. இடங்களைச் சுற்றிப் பார்த்த பிறகு, அங்கிருந்த சபையில் தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலும் ஊழியக் கூட்டத்திலும் கலந்துகொண்டு அன்றைய மாலைப்பொழுதை ஆனந்தமாகக் கழித்தனர். அந்த அழகிய ராஜ்ய மன்றம், ஏழை நாடுகளுக்கு உதவுவதற்கான சாட்சிகளின் கட்டுமான திட்டத்தின் மூலம் 2003-ல் கட்டப்பட்டதாகும்.
விசேஷ மாநாட்டு தினம்
விசேஷ மாநாட்டை ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. லாட்வார் சபையாரும் அங்கு விஜயம் செய்திருந்த 15 சாட்சிகளும் காலை 8:00 மணியளவில் முகாமிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆகவே நிகழ்ச்சியை விரைவாகத் துவங்க சாட்சிகள் விரும்பினர். அவர்கள் சென்ற வளைவான பாதை வறண்ட நிலப்பரப்பின் வழியாக சூடான் நாட்டின் எல்லையருகே கொண்டுபோய் விட்டது. சாலையருகே கரடுமுரடான மலைகள் கம்பீரமாக உயர்ந்து நின்றன. சீக்கிரத்தில் காகூமா கிராமம் தெரிந்தது. அங்கு மழை பெய்து கொண்டிருந்தது, ஆகவே முகாமுக்குச் செல்லும் புழுதிபடிந்த சாலையின் பல பகுதிகளில் வெள்ளம் ஓடியது. அங்கிருந்த பெரும்பாலான வீடுகள் செங்கல் வைத்து கட்டப்பட்டு, தகரத்தால் அல்லது தார்பாலீனால் கூரை அமைக்கப்பட்டிருந்தது. எத்தியோப்பியர், சோமாலியர், சூடானியர் போன்றோர் தனித்தனி பிராந்தியங்களில் வசிக்கிறார்கள். விஜயம் செய்த சாட்சிகளை அங்கிருந்த அகதிகள் உற்சாகமாக வாழ்த்தி வரவேற்றனர்.
பயிற்சி மையம் ஒன்றில்தான் மாநாடு நடைபெற்றது. அந்த மையத்தின் சுவர்களில் இருந்த சித்திரங்கள் அகதிகளுடைய வாழ்க்கையின் அவலங்களைச் சித்தரித்தன. ஆனால் அன்று அங்கே நிலவிய சூழல் நம்பிக்கையூட்டுவதாய் இருந்தது. ஒவ்வொரு பேச்சும் ஆங்கிலம் மற்றும் ஸ்வாஹிலியில் கொடுக்கப்பட்டது. இரண்டு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த சகோதரர்கள் சிலர் தங்களுடைய பேச்சை தாங்களே மொழிபெயர்த்தனர். “நம்முடைய அடையாளப்பூர்வ இருதயத்தை ஆராய்தல்” என்ற ஆரம்பப் பேச்சை, அகதியாய் இருந்த சூடானிய சகோதரர் அளித்தார். அங்கே விஜயம் செய்திருந்த மூப்பர்கள் மற்ற பேச்சுக்களை அளித்தனர்.
முழுக்காட்டுதல் நிகழ்ச்சியே ஒவ்வொரு மாநாட்டின் சிறப்பு அம்சமாக விளங்குகிறது. முழுக்காட்டுதல் பேச்சு முடிந்தவுடன், அங்கே எழுந்து நின்ற ஒரேவொரு சகோதரரை அனைவருடைய கண்களும் நோக்கின. கில்பர்ட் என்ற அந்தச் சகோதரர் 1994-ல் ஏற்பட்ட இனக் கலவரத்தின்போது தனது தாயகத்திலிருந்து தன் அப்பாவோடு தப்பி ஓடியவர். முதலில் புருண்டியில் பாதுகாப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்பினர். ஆனால் தாங்கள் ஆபத்திலிருந்ததை அவர்கள் சீக்கிரத்தில் உணர்ந்தனர். அதனால் ஜயர் என்ற இடத்திற்கு கில்பர்ட் ஓடினார். அங்கிருந்து டான்ஜானியாவுக்குச் சென்றார். சில சமயங்களில் காடுகளிலும் ஒளிந்திருந்தார். கடைசியாக கென்யாவுக்கு வந்து சேர்ந்தார். அவரை சபையில் ஒரு சகோதரராக பேச்சாளர் வரவேற்றபோது பலருடைய கண்கள் குளமாயின. அந்தச் சிறு மாநாட்டில் கூடிவந்திருந்த 95 பேருக்கு முன்பாக, பேச்சாளர் கேட்ட இரு கேள்விகளுக்கும் கில்பர்ட் தெளிவாகவும், உறுதியாகவும் ஸ்வாஹிலியில் “ந்டையோ!” என்று கூறினார், அதற்கு “ஆம்!” என்று அர்த்தம். அவரும் இன்னும் சில சகோதரர்களும் சேர்ந்து ஏற்கெனவே ஒரு சிறு குளத்தை வெட்டி, முகாமில் முன்பு அவருடைய கூரையாக உபயோகித்திருந்த தார்பாலீனை அக்குளத்தின் உட்புறத்தில் பொருத்தியிருந்தனர். முழுக்காட்டுதல் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், அன்று காலை அவர் அக்குளத்தில் பக்கெட் பக்கெட்டாக தண்ணீரை தனியாளாக நிரப்பினார்!
மதிய நிகழ்ச்சி நிரலின் ஒரு சிறப்பு அம்சம்தான் அகதிகளாயிருந்த சாட்சிகளின் வித்தியாசமான சூழ்நிலையைப் பற்றிய அனுபவங்கள். ஒரு மரத்தின் கீழே இளைப்பாறிக் கொண்டிருந்தவரை தான் எப்படி அணுகினார் என ஒரு சகோதரர் விவரித்தார்.
“மரத்தடியில உட்கார்ந்திருப்பது எப்பவுமே பாதுகாப்பா இருக்கும்னு சொல்ல முடியுமா?”
முதலில் “முடியும்” என்று சொன்னவர் பிறகு “இல்லையில்லை, ராத்திரியிலே உட்கார முடியாது” என்றார்.
சகோதரர் அவருக்கு மீகா 4:3, 4-ஐ வாசித்து காண்பித்தார்: “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.” “பாருங்க, கடவுளுடைய புதிய உலகத்தில் எப்பவுமே அப்படி பாதுகாப்பா இருக்க முடியும்” என்று அவர் விளக்கினார். அந்த மனிதர் பைபிள் படிப்பிற்கான பிரசுரத்தை ஏற்றுக்கொண்டார்.
காகூமாவுக்கு பயணித்திருந்த ஒரு சகோதரி, நெருங்கிய குடும்ப அங்கத்தினர்கள் மூவரை சமீபத்தில் மரணத்தில் இழந்திருந்தார். முகாமிலிருந்த சகோதரர்களைப் பற்றி அவர் இவ்வாறு கூறினார்: “கஷ்டங்கள் நிறைந்த இடம் இது. இருந்தாலும் இவர்கள் விசுவாசத்தில் உறுதியாக இருக்கிறார்கள். சந்தோஷமில்லாத இடத்தில் இவர்கள் வாழ்ந்தாலும், சந்தோஷமாக யெகோவாவை சேவிக்கிறார்கள். கடவுளோடு சமாதான உறவை வைத்திருக்கிறார்கள். நானும் அதே சமாதானத்தோடு யெகோவாவுக்கு சேவை செய்ய உற்சாகம் கிடைத்துள்ளது. நான் எதைப் பற்றியும் குறை கூறுவதற்கில்லை!”
அந்த மாநாட்டு தினம் முடிவுக்கு வந்தது, நேரம் போனதே தெரியவில்லை. கடைசிப் பேச்சைக் கொடுத்த சகோதரர், எட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கே கூடியிருந்ததாக குறிப்பிட்டார். பிளவுபட்ட இவ்வுலகில் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் நிலவும் ஒற்றுமைக்கும் அன்புக்கும் இந்த மாநாடு ஓர் அத்தாட்சியாக இருந்ததென முகாமில் வசித்த சாட்சி ஒருவர் குறிப்பிட்டார். அவர்களுடையது ஓர் உண்மையான கிறிஸ்தவ சகோதரத்துவம்.—யோவான் 13:35.
[பக்கம் 25-ன் பெட்டி/படம்]
பிரிந்துபோன சூடான் சிறுவர்கள்
1983-ல் உள்நாட்டுக் கலவரம் சூடானில் வெடித்த சமயம் முதற்கொண்டு 50 லட்சம் மக்கள் வீடு வாசலை இழந்திருக்கிறார்கள். இவர்களில் 26,000 பேர், குடும்பங்களை விட்டுப் பிரிந்த பிள்ளைகள். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் எத்தியோப்பியாவில் உள்ள அகதிகள் முகாமுக்கு ஓடிப் போய், அங்கே சுமார் மூன்று வருடங்கள் தங்கியிருந்தனர். அங்கிருந்து விரட்டப்பட்டதால், ஒரு வருடம் நடந்து சூடான் வழியாக வட கென்யாவை சென்றடைந்தார்கள். போர்வீரர்கள், கொள்ளைக்காரர்கள், வியாதிகள், காட்டு விலங்குகள் ஆகியவற்றால் அலைக்கழிக்கப்பட்ட இந்தக் கடினமான பயணத்தில் பாதி பிள்ளைகள்தான் உயிர்பிழைத்தனர். இவர்களே காகூமா முகாமின் ‘முக்கிய அங்கத்தினர்களாக’ ஆனார்கள். பிரிந்துபோன சூடான் சிறுவர்கள் என மீட்புக் குழுவினர் இவர்களை அழைக்கின்றனர்.
சூடான், சோமாலியா, எத்தியோப்பியா, இன்னும் பிற நாடுகளைச் சேர்ந்த அகதிகளின் பன்னாட்டு வீடாக விளங்குகிறது இந்த காகூமா முகாம். முகாமுக்கு வரும் ஒரு அகதிக்கு வீடு கட்டுவதற்கு அத்தியாவசிய பொருட்களும், கூரை போடுவதற்கு தார்பாலீனும் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு அகதிக்கும் சுமார் 6 கிலோ மாவு, 1 கிலோ பீன்ஸ், கொஞ்சம் சமையல் எண்ணெய், உப்பு ஆகியவை மாதம் இருமுறை கொடுக்கப்படுகிறது. அகதிகள் பலர் தங்களுக்குக் கிடைக்கும் பொருட்களில் சிலவற்றை விற்று மற்ற பொருட்களை வாங்குகிறார்கள்.
இந்தச் சிறுவர்களில் சிலர் அவர்களுடைய குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்திருக்கிறார்கள் அல்லது வேறு நாடுகளில் குடியேற்றப்பட்டு இருக்கிறார்கள். “ஆயிரக்கணக்கான மற்றவர்களோ புழுதி படிந்த, ஈக்கள் நிறைந்த காகூமா முகாமில் தங்கியிருக்கின்றனர். அங்கே உணவுக்காக அலைந்து, படிப்பிற்காக போராட வேண்டியிருக்கிறது” என அகதிகள் குடியேற்ற அலுவலகம் குறிப்பிடுகிறது.
[படத்திற்கான நன்றி]
Courtesy Refugees International
[பக்கம் 23-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
கென்யா
காகூமா முகாம்
டர்கனா ஏரி
லாட்வார்
எல்டரெட்
நைரோபி
[பக்கம் 23-ன் படம்]
முகாமிலுள்ள வாழ்க்கைச் சூழல் சவாலாக இருக்கிறது
[பக்கம் 23-ன் படம்]
காகூமா முகாமில் தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது
[பக்கம் 23-ன் படம்]
கென்யாவைச் சேர்ந்த சாட்சிகள் தங்கள் சகோதரர்களை உற்சாகப்படுத்த வடக்கிற்கு கடினமான பயணத்தை மேற்கொள்கிறார்கள்
[பக்கம் 24-ன் படம்]
உள்ளூரில் உள்ள விசேஷ பயனியரின் பேச்சை ஒரு மிஷனரி மொழிபெயர்க்கிறார்
[பக்கம் 24-ன் படம்]
முழுக்காட்டுதல் குளம்
[பக்கம் 23-ன் படத்திற்கான நன்றி]
தண்ணீர் பங்கீடு மற்றும் காகூமா அகதிகள் முகாம்: Courtesy Refugees International