உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 3/1 பக். 30-31
  • ஜோதிடர்களும் பைபிளும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜோதிடர்களும் பைபிளும்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • துணை தலைப்புகள்
  • இஸ்ரவேலில் மோளேகும் ஜோதிடமும்
  • இளம் பிள்ளையான இயேசுவை சந்தித்த வானசாஸ்திரிகள்
  • ஜோதிடத்தை பற்றிய தெய்வீக கண்டனம்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 3/1 பக். 30-31

ஜோதிடர்களும் பைபிளும்

ஜோதிடர்களின் நடவடிக்கைகளைப் பற்றி பைபிள் அடிக்கடி குறிப்பிடுகிறது. உதாரணமாக, பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில், அழிவுக்கென்று நியமிக்கப்பட்ட பாபிலோன் நகரத்தை திராணியிருந்தால் பாதுகாக்கும்படி அங்கிருந்த நட்சத்திர ஜோதிடர்களிடம் ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு சவால் விட்டார்: “உன் [பாபிலோனின்] திரளான யோசனைகளினால் நீ இளைத்துப் போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.”​—⁠ஏசாயா 47:13.

என்றாலும், எபிரெய வேதாகமத்தில், ‘ஜோசியர்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தையான காசெரின், தானியேல் புத்தகத்தில் அராமிய மொழியில் எழுதப்பட்ட இப்பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. (தானியேல் 2:4ஆ–7:28) “வெட்டி எடுத்தல்” என்பது இதன் நேர் பொருளாகும். இது, வானத்தை பல்வேறு உருவமைப்புகளாக பிரிப்பவர்களை குறிப்பதாக கருதப்படுகிறது. “ஒருவர் பிறக்கும் நேரத்தில் நட்சத்திரங்களின் நிலை எப்படியிருந்தது என்பதையும், பல்வேறு கணக்கிடும் முறைகளையும் கணிப்புகளையும் பயன்படுத்தியும் ஆட்களின் எதிர்காலத்தை தீர்மானித்தவர்களே” இந்த ஜோதிட உட்பிரிவில் இருந்தனர். (ஜெசீனியஸின் எபிரெய மற்றும் கல்தேய அகராதி, 166, 167) அடிப்படையில், ஜோதிடம் பல-தெய்வ வணக்கத்தைச் சார்ந்தது. ஜலப்பிரளயத்திற்குச் சற்று பிறகு மனிதர்கள் யெகோவாவின் உண்மை வணக்கத்தை விட்டு விலகிய சமயத்தில் மெசபொத்தேமிய பள்ளத்தாக்கின் கீழ்ப்பகுதியில் இது தோன்றியிருக்கலாம். காலப்போக்கில், கல்தேயர் என்ற வார்த்தை “ஜோசியர்” என்பதற்கு மறுவார்த்தையாக ஆகிவிட்டது.

உண்மைக்குப் புறம்பான இந்த ஜோதிட அறிவியலில், வானத்தின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு கடவுள் ஆட்சி செய்ததாக நம்பப்பட்டது. சூரியோதயம், அஸ்தமனம், சூரியன் நிலநடுக்கோட்டை கடந்து செல்வது, கடக மகர ரேகைகளுக்கு நேராய் சூரியன் ஒளி வீசுவது, வளர்பிறை, தேய்பிறை, கிரகணங்கள், எரிகற்கள் போன்று விண்ணில் ஏற்படும் ஒவ்வொரு இடப்பெயர்ச்சியும் நிகழ்ச்சியும் இந்தக் கடவுட்களின் செயல்களாக கருதப்பட்டன. ஆகவே, பிரபஞ்சத்தில் ஏற்பட்ட இத்தகைய இடப்பெயர்ச்சிகள் தவறாமல் குறித்து வைக்கப்பட்டு, அவை ஏற்பட்ட சமயத்தைப் பற்றிய விரிவான வரைபடங்களும் பட்டியல்களும் தயாரிக்கப்பட்டன. இவற்றின் அடிப்படையில் மனித நடவடிக்கைகளும் பூமிக்குரிய நிகழ்வுகளும் முன்னுரைக்கப்பட்டன. தனிப்பட்ட மற்றும் பொது விஷயங்கள் எல்லாமே இந்த விண்ணகத்து தெய்வங்களால் கட்டுப்படுத்தப்பட்டதாக நம்பப்பட்டது. இதனால், ஜோதிடர்கள் சகுனங்களை ஆராய்ந்து அறிவுரை வழங்கும் வரை எந்த அரசியல் அல்லது ராணுவ தீர்மானங்களும் எடுக்கப்படாதிருந்தன. இப்படியாக, ஆசாரிய வகுப்பார் மக்களுடைய வாழ்வில் மிகுந்த அதிகாரமும் செல்வாக்கும் செலுத்த ஆரம்பித்தனர். மனிதர்களை மிஞ்சிய சக்தியும் உட்பார்வையும் மகா ஞானமும் தங்களுக்கு இருப்பதாக இவர்கள் சொல்லிக்கொண்டனர். வானிலை ஆய்வுக்கூடமின்றி எந்தவொரு பெரிய கோவிலையும் பாபிலோனியர் கட்டவில்லை.

ஒரு காலப்பகுதியில் தானியேலும் அவருடைய மூன்று நண்பர்களும் இந்த ஜோதிடர்களின் தேசத்தில் கைதிகளாக இருந்தார்கள். பாபிலோனின் ராஜா இந்த எபிரெயர்களைத் “தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான்.” (தானியேல் 1:20) அதனால், “சாஸ்திரிகளின் அதிபதி” என தானியேல் பிற்பாடு அழைக்கப்பட்டார். (தானியேல் 4:9) இருந்தபோதிலும், யெகோவாவின் வணக்கத்தை விட்டுக்கொடுத்துவிட்டு, ‘வானங்களை வெட்டி’ நட்சத்திரங்களை நோக்குபவராக அவர் ஒருபோதும் ஆகிவிடவில்லை. ஜோதிடர்களும் பிற “ஞானிகளும்” நேபுகாத்நேச்சாருடைய கனவை விவரிக்க முடியாமல் போனபோது, தானியேல் அவருக்கு முன்பாக கொண்டுவரப்பட்டார். அப்போது இவ்வாறு கூறினார்: ‘பரலோகத்திலிருக்கிற தேவனே மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர், உயிரோடிருக்கிற எல்லாரைப் பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்படவில்லை.’​—⁠தானியேல் 2:28, 30.

இஸ்ரவேலில் மோளேகும் ஜோதிடமும்

சிலசமயங்களில் எருது தலையுடன் சித்தரித்துக் காட்டப்பட்ட மோளேகு என்ற கடவுளின் வணக்கத்திற்கும் ஜோதிடத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததென அத்தாட்சிகள் காட்டுகின்றன. பாபிலோனியரும் கானானியரும் எகிப்தியரும் மற்ற பலரும் எருதை வணங்கினர்; அது .மார்துக், மோளேகு, பாகால் போன்ற தங்கள் கடவுட்களை குறிக்கும் சின்னமாக இருந்தது. அது, மிக முக்கியமான ரிஷப ராசியின் சின்னமாக இருந்தது. இந்த எருது சின்னம் சூரியக் கடவுளையும் பிரதிநிதித்தும் செய்தது. அதன் கொம்புகள் சூரிய கதிர்களை குறிப்பதாகவும், அதன் பலமான இனப்பெருக்க திறன், “உயிரை அளிக்கும்” சூரியனின் திறனை குறிப்பதாகவும் கருதப்பட்டது. பசு, இஷ்டார் அல்லது அஸ்டார்டி என பலவாறு அழைக்கப்பட்ட தேவதையின் சின்னமாக கருதப்பட்டதால் அதற்கும் சரிசமமான மதிப்பு அளிக்கப்பட்டது. ஆகவே ஆரோனும் யெரொபெயாமும் எருது (கன்றுக்குட்டி) வணக்கத்தை இஸ்ரவேலில் அறிமுகப்படுத்தியபோது அது யெகோவாவின் பார்வையில் மிகப் பெரிய பாவமாக இருந்தது.​—⁠யாத்திராகமம் 32:4, 8; உபாகமம் 9:16; 1 இராஜாக்கள் 12:28-30; 2 இராஜாக்கள் 10:29.

விசுவாசதுரோக பத்து கோத்திர இஸ்ரவேல் ராஜ்யம் இந்த ஜோதிடர்களின் பிரிவோடு சேர்ந்து கொண்டதற்காக கண்டனம் செய்யப்பட்டது. தெற்கிலிருந்த இரண்டு கோத்திர ராஜ்யத்தை ஆண்ட பொல்லாத அரசன் ஆகாசும் அவனுடைய பேரன் மனாசேயும் வான சேனைகளை வணங்குவதிலும், பிள்ளைகளைக் கொடூரமாக உயிரோடு பலியாக எரிப்பதிலும் முன்னின்று செயல்பட்டார்கள். (2 இராஜாக்கள் 16:3, 4; 2 இராஜாக்கள் 21:3, 6; 2 நாளாகமம் 28:3, 4; 2 நாளாகமம் 33:3, 6) என்றாலும், நல்ல அரசனாகிய யோசியா, ‘பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபங்காட்டிய பூஜாசாரிகளை அகற்றிவிட்டான்.’​—⁠2 இராஜாக்கள் 23:5, 10, 24.

மோளேகு வழிபாடு, கன்றுக்குட்டி வழிபாடு, ஜோதிடம் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதை வனாந்திரத்தில் இஸ்ரவேலர் செய்த கலகத்தை பற்றிய ஸ்தேவானின் பதிவு காட்டுகிறது. “எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும்” என்று அவர்கள் ஆரோனிடம் சொன்னபோது, “வானசேனைக்கு ஆராதனை செய்ய [யெகோவா] அவர்களை ஒப்புக்கொடுத்தார்”; ‘காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ . . . மோளேகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே என்று தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி’ இது நடந்தது.​—⁠அப்போஸ்தலர் 7:40-43.

இளம் பிள்ளையான இயேசுவை சந்தித்த வானசாஸ்திரிகள்

இளம் பிள்ளையான இயேசுவுக்கு ஜோதிடர்கள் பரிசுகளை கொண்டுவந்தார்கள். கிரேக்க மொழியில் அவர்கள் மேகோய் என்று அழைக்கப்பட்டார்கள். (மத்தேயு 2:1) இந்த மேகோய் யார் என்பதை தி இம்பீரியல் பைபிள் அகராதி (தொகுதி 2, பக். 139) இவ்வாறு குறிப்பிடுகிறது: “இந்த வானசாஸ்திரிகள் (மேஜய்) மேதியர்களின் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என ஹெரடாட்டஸ் கூறினார். இவர்கள் கனவுகளுக்கு அர்த்தம் சொல்பவர்களாகவும், புனித சடங்குகளை நடத்துவதற்கு அதிகாரப்பூர்வ உரிமை பெற்றவர்களாகவும் இருந்தார்கள் . . . சுருக்கமாக சொல்லப்போனால், அவர்கள் படித்த, மதகுரு வகுப்பாராக இருந்தார்கள். புத்தகங்களையும் நட்சத்திரங்களையும் ஆராய்ந்து, நடக்கப்போகும் சம்பவங்களைப் பற்றி முன்னரே அறியக்கூடிய அற்புத சக்தி படைத்த ஆட்களாக கருதப்பட்டனர் . . . மேதியா மற்றும் பெர்சியாவைவிட பாபிலோனே முழு அளவில் வானசாஸ்திரத்தின் மையமாக விளங்கியது என்பதைப் பிற்பாடு செய்யப்பட்ட ஆய்வுகள் சுட்டிக் காட்டின. ‘எப்படியிருந்தாலும், கல்தேயர்களிடம் இருந்துதான் தங்களுடைய மதகுரு வகுப்பாரின் பெயரான மேஜய் என்பதை மேதியர்கள் பெற்றுக் கொண்டனர். மேஜய் ஒரு மேதிய வகுப்பார் என்று ஹெரடாட்டஸ் சொன்னதை நாம் இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்.’”

சூழ்நிலைகளை ஆராய்கையில், இளம் பிள்ளையாகிய இயேசுவை சந்தித்த மேகோய், ஜோதிடர்கள்தான் என்பது தெளிவாக தெரிகிறது. ஆகவே, அவர்கள் பொய் கடவுட்களை வணங்கியவர்கள். நகருகிற “நட்சத்திரம்” போல தோன்றிய ஒன்றால் தெரிந்தோ தெரியாமலோ வழிநடத்தப்பட்டார்கள். “யூதர்களின் ராஜா” பிறந்திருக்கிறார் என்ற உண்மையை ஏரோதுவுக்குத் தெரியப்படுத்தினார்கள். அதன் காரணமாக, இயேசுவைக் கொல்ல ஏரோது வகை தேடினான். ஆனால் அத்திட்டம் தோல்வியடைந்தது; ஏனென்றால் அந்த ஜோதிடர்களின் பேய் தெய்வங்களைவிட தாம் வல்லமை படைத்தவர் என்பதை யெகோவா நிரூபித்தார். ஏரோதுவிடம் திரும்பிப் போவதற்கு பதில், ‘சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டதால்’ அந்த ஜோதிடர்கள் வேறு வழியாய் தங்களுடைய வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள்.​—⁠மத்தேயு 2:2, 12.

ஜோதிடத்தை பற்றிய தெய்வீக கண்டனம்

மிகப் பெரிய உண்மை ஒன்று மிக எளிய வார்த்தைகளில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.” இது நம் சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களையும் அதன் நட்சத்திர குழுக்களில் உள்ள அசையாத நட்சத்திரங்களையும் உள்ளடக்குகிறது. (ஆதியாகமம் 1:1, 16; யோபு 9:7-10) ஆனால், இப்பேர்ப்பட்ட பிரம்மாண்டமான படைப்பில் உள்ளவற்றை மனிதன் வணங்க வேண்டும் என்பது யெகோவாவின் நோக்கமல்ல. ஆகவே, ‘மேலே வானத்தில் . . . உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தைக்கூட’ வணங்கக் கூடாதென்று தமது மக்களுக்குக் கட்டளையிட்டார். (யாத்திராகமம் 20:3, 4) எல்லா வகையான ஜோதிடத்தையும் தடை செய்தார்.​—⁠உபாகமம் 18:10-12.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்