கடவுள் மீதுள்ள அன்பினால் ஒன்றுபடுதல்
பொது சகாப்தம் முதல் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட கிறிஸ்தவ சபையின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றுதான் ஒற்றுமை. அதன் அங்கத்தினர்கள் பல்வேறு வகையானவர்களாக இருந்தபோதிலும் அங்கு ஒற்றுமை நிலவியது. மெய்க் கடவுளை வணங்கிய இவர்கள் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற தேசங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பல்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள், அதாவது ஆசாரியர்களாக, போர்வீரர்களாக, அடிமைகளாக, அகதிகளாக, கைவினைஞர்களாக, தொழில் வல்லுநர்களாக, வியாபாரிகளாக இருந்தவர்கள். சிலர் யூதர்களாக இருந்தவர்கள், வேறு சிலரோ புறமதத்தவர்களாக இருந்தவர்கள். பலர் விபச்சாரக்காரர்களாக, ஓரினப்புணர்ச்சிக்காரர்களாக, குடிவெறியர்களாக, திருடர்களாக அல்லது கொள்ளைக்காரர்களாக இருந்தவர்கள். என்றாலும், அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறியபோது கெட்ட பழக்க வழக்கங்களையெல்லாம் விட்டொழித்து விசுவாசத்தில் மிகவும் ஐக்கியப்பட்டவர்களாக ஆனார்கள்.
முதல் நூற்றாண்டில் இவர்கள் அனைவரும் கிறிஸ்தவத்தில் ஒன்றுபடுவதற்கு எது உதவியது? இவர்கள் ஒருவருக்கொருவரும் பொது மக்களுடனும் ஏன் சமாதானமாக இருந்தார்கள்? கலகத்தனமான காரியங்களிலும் சண்டை சச்சரவுகளிலும் ஏன் ஈடுபடவில்லை? இன்றைய முக்கிய மதங்களிலிருந்து ஏன் ஆரம்பகால கிறிஸ்தவம் மிகவும் வித்தியாசப்பட்டதாக இருந்தது?
சபை அங்கத்தினர்கள் நெருங்கிவர எது உதவியது?
கடவுள் மீதிருந்த அன்பே முதல் நூற்றாண்டில் வாழ்ந்த சக விசுவாசிகளை ஒன்றுபடுத்திய மிக முக்கியமான காரணியாகும். உண்மை கடவுளான யெகோவாவில் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் மனதோடும் அன்புகூருவது பிரதான கடமை என்பதை அந்தக் கிறிஸ்தவர்கள் உணர்ந்திருந்தார்கள். உதாரணமாக, புறமதத்தைச் சேர்ந்த ஒருவருடைய வீட்டிற்கு, அதாவது யூதர்கள் பொதுவாக நெருங்கிய கூட்டுறவு வைத்துக்கொள்ளாத ஒருவருடைய வீட்டிற்குச் செல்லும்படி யூதனாகிய அப்போஸ்தலன் பேதுருவுக்கு அறிவுரை கொடுக்கப்பட்டது. முக்கியமாக, யெகோவா மீதிருந்த அன்பே கீழ்ப்படியும்படி அவரை உந்துவித்தது. பேதுருவும் ஆரம்பகால பிற கிறிஸ்தவர்களும் கடவுளுடன் நெருங்கிய உறவை அனுபவித்து வந்தார்கள், கடவுளுடைய ஆள்தன்மையையும் விருப்பு வெறுப்புகளையும் பற்றிய திருத்தமான அறிவின் அடிப்படையில் அந்த உறவு அமைந்திருந்தது. அவர்கள் ‘ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்க வேண்டுமென்பதே யெகோவாவின் சித்தம்’ என்பதை காலப்போக்கில் சகல வணக்கத்தாரும் புரிந்துகொண்டார்கள்.—1 கொரிந்தியர் 1:10; மத்தேயு 22:37; அப்போஸ்தலர் 10:1-35.
விசுவாசிகள் இயேசு கிறிஸ்துவின் மீதிருந்த விசுவாசத்தினாலும் இன்னும் ஒன்றாக நெருங்கி வந்தார்கள். அவருடைய அடிச்சுவடுகளை அப்படியே அச்சுப்பிசகாமல் பின்பற்ற விரும்பினார்கள். அவர்களுக்கு இவ்வாறு அவர் கட்டளையிட்டார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்தது போல . . . நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:34, 35) இது ஏதோ மேற்போக்கான உணர்ச்சி அல்ல, ஆனால் சுயதியாக அன்பாக இருந்தது. அதன் விளைவு என்ன? தம் மீது விசுவாசம் வைத்தவர்களுக்காக இயேசு இவ்வாறு ஜெபித்தார்: “அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, . . . நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக் கொள்ளுகிறேன்.”—யோவான் 17:20, 21; 1 பேதுரு 2:21.
யெகோவா தமது பரிசுத்த ஆவியை, அதாவது செயல் நடப்பிக்கும் சக்தியை உண்மையுள்ள ஊழியர்கள் மீது பொழிந்தார். இந்த ஆவி அவர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்த்தது. எல்லா சபைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பைபிள் போதனைகளைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவியது. யெகோவாவை வணங்குகிறவர்கள் அதே செய்தியைப் பிரசங்கித்தார்கள், அதாவது கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தின் வாயிலாக—முழு மனிதகுலத்தையும் ஆட்சி செய்யப்போகும் பரலோக அரசாங்கத்தின் வாயிலாக—யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படும் என்ற செய்தியைப் பிரசங்கித்தார்கள். ‘இந்த உலகத்தின் பாகமல்லாதவர்களாக’ இருப்பதன் அவசியத்தை ஆரம்பகால கிறிஸ்தவர்கள் புரிந்துகொண்டார்கள். ஆகவே, உள்நாட்டில் கொந்தளிப்புகளோ இராணுவ சண்டைகளோ ஏற்பட்ட சமயத்தில் கிறிஸ்தவர்கள் எதிலும் சேராமல் நடுநிலைமை வகித்தார்கள். எல்லாருடனும் சமாதானத்தை நாடினார்கள்.—யோவான் 14:26; 18:36; மத்தேயு 6:9, 10; அப்போஸ்தலர் 2:1-4; ரோமர் 12:17-21.
ஒற்றுமையை வளர்ப்பது தங்களுடைய பொறுப்பு என்பதை எல்லா விசுவாசிகளும் புரிந்திருந்தார்கள். எப்படி? தங்களுடைய நடத்தை பைபிளுக்கு இசைவாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலமே. ஆகவே, கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி,” “புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள்.”—எபேசியர் 4:22-32, பொது மொழிபெயர்ப்பு.
ஒற்றுமையைக் காத்துக்கொள்ளுதல்
ஆனால் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த விசுவாசிகள் அபூரணராகத்தான் இருந்தார்கள், அந்தச் சமயத்தில் நடந்த சம்பவங்கள் அவர்களுடைய ஒற்றுமைக்குச் சவாலாகத்தான் இருந்தன. உதாரணமாக, கிரேக்க மொழி பேசிய யூத கிறிஸ்தவர்களுக்கும் எபிரெய மொழி பேசிய யூத கிறிஸ்தவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது என அப்போஸ்தலர் 6:1-6 விவரிக்கிறது; ஏனென்றால் தாங்கள் ஓரங்கட்டப்பட்டதாக கிரேக்க மொழி பேசியவர்கள் உணர்ந்தார்கள். இருந்தாலும், இந்த விஷயத்தைப் பற்றி அப்போஸ்தலர்களுக்கு அறிவிக்கப்பட்ட பிறகு, அது உடனடியாக கவனிக்கப்பட்டு நியாயமாக தீர்க்கப்பட்டது. பிற்பாடு, கிறிஸ்தவ சபையில் யூதரல்லாதவர்களுடைய கடமைகளைப் பற்றி எழுந்த கோட்பாடு சம்பந்தமான ஒரு கேள்வி சர்ச்சைக்கு வழிவகுத்தது. பைபிள் நியமங்களின் அடிப்படையில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது, அதை அனைவரும் ஏகமனதுடன் ஏற்றுக் கொண்டார்கள்.—அப்போஸ்தலர் 15:1-29.
கருத்து வேறுபாடுகள் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையில் இனப் பிரிவினைகளுக்கோ அல்லது கோட்பாட்டில் ஒற்றுமையின்மைக்கோ வழிநடத்தவில்லை என்பதை இந்த உதாரணங்கள் காட்டுகின்றன. ஏன் அப்படி நடக்கவில்லை? ஏனென்றால் ஆரம்பகால சபையை ஐக்கியமாகவும் சமாதானமாகவும் வைத்துக்கொள்வதற்கு ஒன்றுபடுத்தும் காரணிகள், அதாவது யெகோவா மீதிருந்த அன்பு, இயேசு கிறிஸ்துவின் மீதிருந்த விசுவாசம், ஒருவருக்கொருவர் காட்டிய சுயதியாக அன்பு, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளுதல், பைபிள் போதனைகளைப் பற்றிய ஒரேவிதமான புரிந்துகொள்ளுதல், உடனடியாக நடத்தையை மாற்றிக்கொள்வதற்குத் தயாராயிருத்தல் ஆகிய காரணிகள் மிக வலிமையாக இருந்தன.
நவீன காலங்களில் வணக்கத்தில் ஒன்றுபட்டிருத்தல்
அதே போல் இன்றும் ஒற்றுமையாக இருக்க முடியுமா? இதே காரணிகள் இன்றும் ஒரு மதத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களை ஒன்றுசேர்த்து உலகில் எல்லா இடங்களிலும் உள்ள எல்லா இனத்தவர்களுடனும் சமாதானமாக இருக்க அவர்களுக்கு உதவ முடியுமா? ஆம், முடியும்! யெகோவாவின் சாட்சிகள் உலகெங்கிலும் 230-க்கும் அதிகமான நாடுகளில், தீவுகளில், பிராந்தியங்களில் ஒரு சகோதரத்துவமாக ஒன்றுபட்டிருக்கிறார்கள். முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை ஒன்றுபடுத்திய அதே காரணிகள் அவர்களையும் ஒன்றுபடுத்தியிருக்கின்றன.
யெகோவாவின் சாட்சிகள் அனுபவித்து வரும் ஐக்கியத்திற்கு அதிகமாக பங்களிப்பது எதுவென்றால், யெகோவா தேவனிடம் அவர்கள் கொண்டுள்ள பக்தியே. எல்லா சூழ்நிலைகளிலும் அவருக்கு விசுவாசமாயிருக்க அவர்கள் அரும்பாடு படுகிறார்கள் என்பதை இது குறிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மீதும் அவருடைய போதனைகளின் மீதும் யெகோவாவின் சாட்சிகள் நம்பிக்கை வைக்கிறார்கள். இந்தக் கிறிஸ்தவர்கள் சக விசுவாசிகளிடம் சுயதியாக அன்பு காட்டுகிறார்கள், தாங்கள் வசிக்கும் நாடுகளில் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய அதே நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள். எல்லா மதத்தாருக்கும் இனத்தாருக்கும் தேசத்தாருக்கும் சமுதாயத்தாருக்கும் இந்த ராஜ்யத்தைப் பற்றி பேச விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள். உலக விவகாரங்களில் யெகோவாவின் சாட்சிகள் நடுநிலை வகிக்கிறார்கள்; இன்று மனிதர் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் மாறுபட்ட அரசியல், கலாச்சார, சமுக மற்றும் வர்த்தக அழுத்தங்களைத் தாங்கிநிற்க அவர்களுக்கு இது உதவுகிறது. பைபிள் தராதரங்களுக்கு இசைவாக நடப்பதன் மூலம் ஒற்றுமையை வளர்க்க வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதை யெகோவாவின் சாட்சிகள் எல்லாரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஒற்றுமை மற்றவர்களைக் கவர்ந்திழுக்கிறது
இந்த ஒற்றுமை யெகோவாவின் சாட்சிகளல்லாத ஆட்களின் ஆர்வத்தை அடிக்கடி தூண்டியிருக்கிறது. உதாரணமாக, இல்ஸாa என்பவர் ஜெர்மனியிலுள்ள ஒரு கான்வென்ட்டில் கத்தோலிக்க கன்னிகாஸ்திரீயாக ஒரு காலத்தில் இருந்தார். யெகோவாவின் சாட்சிகளிடம் அவரைக் கவர்ந்தது எது? இல்ஸா கூறுகிறார்: “நான் சந்தித்த ஆட்களிலேயே மிகச் சிறந்த ஆட்கள் அவர்கள்தான். அவர்கள் போருக்குச் செல்வதில்லை, யாருக்கும் எந்தத் தீங்கும் செய்வதில்லை. கடவுளுடைய ராஜ்யத்தில் பரதீஸிய பூமியில் மகிழ்ச்சியுடன் வாழ எல்லாருக்கும் உதவி செய்யவே அவர்கள் விரும்புகிறார்கள்.”
குந்தர் என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள், இவர் இரண்டாம் உலகப் போரின்போது பிரான்சு நாட்டிற்கு அனுப்பப்பட்ட ஜெர்மன் படைவீரர். குந்தருடைய படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்களுக்காக புராட்டஸ்டன்ட் பாதிரி ஒருநாள் ஆராதனை நடத்தினார். ஆசீர்வாதத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் வெற்றிக்காகவும் அந்தப் பாதிரியார் ஜெபம் செய்தார். அந்த ஆராதனை முடிந்தப்பின், காவற்காரராக குந்தர் நியமிக்கப்பட்டார். தனது பைனாக்குலர் வழியாக எதிர்பக்கத்திலுள்ள படைகளை அவர் பார்த்தார்; அங்கேயும் ஒரு பாதிரி ஆராதனை நடத்திக் கொண்டிருந்தார். குந்தர் பிற்பாடு இவ்வாறு கூறினார்: “ஒருவேளை அந்தப் பாதிரியும் ஆசீர்வாதத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் வெற்றிக்காகவும் ஜெபம் செய்திருக்கலாம். ஒரே போரின் எதிரெதிர் முனையில் கிறிஸ்தவ சர்ச்சுகள் எப்படி ஈடுபட முடியும் என யோசித்தேன்.” இவை குந்தருடைய மனதில் ஆழப் பதிந்தன. போரில் ஈடுபடாத யெகோவாவின் சாட்சிகளைப் பிற்பாடு குந்தரும் சந்தித்து, அவர்களுடைய உலகளாவிய சகோதரத்துவத்தின் பாகமானார்.
அசோக்கும் ஃபீமாவும் ஒரு சமயம் கிழக்கத்திய மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய வீட்டில் தெய்வத்திற்கென்று ஒரு பூஜை அறை இருந்தது. அவர்களுடைய குடும்பத்தினரைப் பயங்கர வியாதி தாக்கியபோது, அவர்கள் தங்களுடைய மதத்தை ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்தார்கள். யெகோவாவின் சாட்சிகளுடன் உரையாடியபோது, பைபிளின் போதனைகளும் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் நிலவிய அன்பும் அவர்களைக் கவர்ந்தன. இப்பொழுது இவர்கள் யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை ஆர்வத்துடன் அறிவிக்கும் பிரஸ்தாபிகளாக இருக்கிறார்கள்.
இல்ஸா, குந்தர், அசோக், ஃபீமா ஆகிய அனைவரும் லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளுடன் சேர்ந்து ஓர் உலகளாவிய சகோதரத்துவத்தின் பாகமாக ஒன்றுபட்டவர்களாக ஆகியிருக்கிறார்கள். இன்று வணக்கத்தில் அவர்களை ஒன்றுபடுத்திய அதே அம்சங்கள் கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் அனைவரையும் விரைவில் ஒன்றுபடுத்தும் என்ற பைபிளின் வாக்குறுதியை அவர்கள் நம்புகிறார்கள். அப்பொழுது, மதத்தின் பெயரில் செய்யப்படும் எந்தவித கொடுமைகளோ ஒற்றுமையின்மையோ பிரிவினையோ இருக்காது. முழு உலகமும் உண்மை கடவுளான யெகோவாவை வழிபடுவதில் ஒன்றுபட்டிருக்கும்.—வெளிப்படுத்துதல் 21:4, 5.
[அடிக்குறிப்பு]
a இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள பெயர்கள் சில மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 4, 5-ன் படங்கள்]
பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், ஆரம்பகால கிறிஸ்தவர்கள் ஒன்றுபட்டிருந்தார்கள்