துன்புறுத்தப்பட்டாலும் மகிழ்ச்சியோடு இருப்பவர்கள்
‘என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருப்பீர்கள்.’—மத்தேயு 5:11.
1. மகிழ்ச்சியையும் துன்புறுத்தலையும் பற்றி இயேசு என்ன உறுதியை சீஷர்களுக்கு அளித்தார்?
ராஜ்யத்தைப் பிரசங்கிப்பதற்கு தம் அப்போஸ்தலர்களை முதன்முதலாக அனுப்பியபோது, அவர்களுக்கு எதிர்ப்பு வரும் என இயேசு எச்சரித்தார். “என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்” என்று அவர்களுக்குச் சொன்னார். (மத்தேயு 10:5-18, 22) ஆனால், அப்படிப்பட்ட எதிர்ப்பு அவர்களுடைய உள்ளார்ந்த மகிழ்ச்சியைப் பறித்துவிடாது என்பதை அதற்கும் முன்பே மலைப் பிரசங்கத்தில் தம் அப்போஸ்தலர்களுக்கும் பிறருக்கும் அவர் உறுதியளித்தார். சொல்லப்போனால், கிறிஸ்தவர்களாக துன்புறுத்தலை அனுபவிக்கையில் மகிழ்ச்சியாயிருப்போம் என இயேசு கூறினார். துன்புறுத்தல் எப்படி மகிழ்ச்சியைத் தரும்?
நீதியினிமித்தம் துன்பப்படுதல்
2. இயேசுவும் அப்போஸ்தலன் பேதுருவும் சொன்னபடி, எப்படிப்பட்ட துன்புறுத்தல் மகிழ்ச்சியைத் தருகிறது?
2 மகிழ்ச்சிக்கான எட்டாவது காரணத்தை இயேசு இவ்வாறு குறிப்பிட்டார்: ‘நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.’ (மத்தேயு 5:10) துன்பப்படுவதுதானே மெச்சத்தக்க ஒன்றல்ல. அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்.” அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக் கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக் கூடாது. ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.” (1 பேதுரு 2:20; 4:15, 16) இயேசு சொன்ன வார்த்தைகளின்படி, நீதியினிமித்தம் துன்புறுத்தலைச் சகிக்கும்போது மகிழ்ச்சி கிடைக்கிறது.
3. (அ) நீதியினிமித்தம் துன்பப்படுதல் என்பதன் அர்த்தம் என்ன? (ஆ) ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு இந்தத் துன்புறுத்தல் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது?
3 கடவுளுடைய சித்தத்தைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் அடிப்படையிலேயே உண்மையான நீதி மதிப்பிடப்படுகிறது. அப்படியானால், நீதியினிமித்தம் துன்பப்படுதல் என்பது, கடவுளுடைய தராதரங்களையோ நியமங்களையோ மீறும்படியான அழுத்தத்தை ஏற்க மறுப்பதால் வரும் துன்புறுத்தலையே குறிக்கிறது. அப்போஸ்தலர்கள், இயேசுவின் நாமத்தில் பிரசங்கிப்பதை நிறுத்த மறுத்ததாலேயே யூத தலைவர்களால் துன்புறுத்தப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 4:18-20; 5:27-29, 40) அது அவர்களுடைய மகிழ்ச்சியைக் குலைத்துப்போட்டதா அல்லது அவர்களுடைய பிரசங்க வேலையை நிறுத்திப்போட்டதா? நிச்சயமாக இல்லை. “அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தை விட்டுப் புறப்பட்டுப் போய், தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.” (அப்போஸ்தலர் 5:41, 42) இந்தத் துன்புறுத்தல் அவர்களுக்கு மகிழ்ச்சியையே அளித்தது, அதோடு பிரசங்க வேலையில் அவர்களுடைய ஆர்வத்தையும் இன்னுமதிகமாக தூண்டிவிட்டது. பிற்பாடு, ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பேரரசனை வணங்க மறுத்ததன் காரணமாக ரோமர்களால் துன்புறுத்தப்பட்டனர்.
4. இன்று கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதற்குச் சில காரணங்கள் யாவை?
4 நவீன காலங்களில், யெகோவாவின் சாட்சிகள் ‘ராஜ்ய நற்செய்தியைப்’ பிரசங்கிப்பதை நிறுத்திவிட மறுத்ததால் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். (மத்தேயு 24:14, NW) அவர்கள் நடத்தும் கிறிஸ்தவ கூட்டங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டால் ஒன்றுகூடிவரும்படி பைபிள் சொல்கிற கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதைவிட துன்பப்படவே விரும்புகிறார்கள். (எபிரெயர் 10:24, 25) உலக விவகாரங்களில் நடுநிலை வகித்ததால் அல்லது இரத்தத்தை ஏற்க மறுத்ததால் அவர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். (யோவான் 17:14; அப்போஸ்தலர் 15:28, 29) என்றாலும், நீதியின் பக்கம் நிற்பது இன்று கடவுளுடைய மக்களுக்கு மன சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.—1 பேதுரு 3:14.
கிறிஸ்துவினிமித்தம் நிந்திக்கப்படுதல்
5. என்ன முக்கிய காரணத்திற்காக இன்று யெகோவாவின் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்?
5 இயேசு தம்முடைய மலைப் பிரசங்கத்தில் குறிப்பிட்ட மகிழ்ச்சிக்கான ஒன்பதாவது காரணமும்கூட துன்புறுத்தல் சம்பந்தப்பட்டதே. ‘என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருப்பீர்கள்’ என்று அவர் குறிப்பிட்டார். (மத்தேயு 5:11) யெகோவாவின் மக்கள் துன்புறுத்தப்படுவதற்கு அடிப்படைக் காரணம், அவர்கள் இந்தப் பொல்லாத உலகின் பாகமாக இல்லாதிருப்பதே. “நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது” என தம் சீஷர்களிடம் இயேசு சொன்னார். (யோவான் 15:19) இது போலவே, அப்போஸ்தலன் பேதுருவும் இவ்வாறு குறிப்பிட்டார்: “அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள்.”—1 பேதுரு 4:4.
6. (அ) மீதியானோரும் அவர்களது தோழர்களும் ஏன் நிந்தையையும் துன்புறுத்தலையும் அனுபவிக்கிறார்கள்? (ஆ) இப்படிப்பட்ட நிந்தை நம் மகிழ்ச்சியைக் குலைத்துப் போடுகிறதா?
6 ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இயேசுவின் பெயரில் பிரசங்கிப்பதை நிறுத்திவிட மறுத்ததால் துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். நீங்கள் “பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம் சொல்லியிருந்தார். (அப்போஸ்தலர் 1:8) கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சகோதரர்களில் மீதியானோர், தங்களுடைய உண்மைத் தோழர்களான ‘வேறே ஆடுகளின்’ உதவியோடு இந்த வேலையை வைராக்கியத்துடன் செய்து வந்திருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9) ஆகவே, ‘தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான [கடவுளுடைய அமைப்பின் பரலோக பாகமான, “ஸ்திரீயின்” வித்தான] மற்றவர்களுடன்,’ அதாவது மீதியானோருடன் சாத்தான் யுத்தம் செய்கிறான். (வெளிப்படுத்துதல் 12:9, 17) யெகோவாவின் சாட்சிகளான நாம் ராஜ்ய அரசாங்கத்தின் அரசராய் இப்போது ஆட்சி செய்து வரும் இயேசுவைக் குறித்து சாட்சி கொடுத்து வருகிறோம்; அதாவது, கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகிற்குச் செல்ல தடையாக இருக்கும் மனித அரசாங்கங்களை அழிக்கப்போகும் அவரது ராஜ்யத்திற்குச் சாட்சி கொடுத்து வருகிறோம். (தானியேல் 2:44; 2 பேதுரு 3:13) இவ்வாறு சாட்சி கொடுப்பதால் நாம் நிந்தையையும் துன்புறுத்தலையும் அனுபவிக்கிறோம்; ஆனாலும் கிறிஸ்துவின் பெயருக்காகத் துன்பப்படுவதில் நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கிறோம்.—1 பேதுரு 4:14.
7, 8. ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு எதிராக விரோதிகள் என்ன பொய்களைச் சொன்னார்கள்?
7 தம்முடைய பெயரினிமித்தம் மக்கள் ‘பலவித தீமையான மொழிகளையும் பொய்யாய்ச் சொன்னாலும்’கூட தம்மைப் பின்பற்றுபவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்க வேண்டுமென இயேசு குறிப்பிட்டார். (மத்தேயு 5:11) ஆரம்பகால கிறிஸ்தவர்களின் விஷயத்தில் இது உண்மையாக இருந்தது. சுமார் பொ.ச. 59-61-ல் ரோம் நகரில் அப்போஸ்தலன் பவுல் காவலில் இருந்தபோது கிறிஸ்தவர்களைப் பற்றி அங்கிருந்த யூத தலைவர்கள் சொன்னது இதுதான்: ‘இந்த மதப் பிரிவுக்கு விரோதமாய் எங்கும் பேசிக்கொள்ளப்படுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறோம்.’ (அப்போஸ்தலர் 28:22, திருத்திய மொழிபெயர்ப்பு) பவுலும் சீலாவும் ‘உலகத்தையே கலக்கிவிட்டதாகவும்’ ‘இராயனுடைய கட்டளைகளுக்கு விரோதமாக’ செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்கள்.—அப்போஸ்தலர் 17:6, 7.
8 ரோம பேரரசின் காலத்தில் கிறிஸ்தவர்களைப் பற்றி எழுதுகையில் சரித்திராசிரியர் கே. எஸ். லாட்யூரட் இவ்வாறு குறிப்பிட்டார்: “பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. புறமத சடங்குகளில் கிறிஸ்தவர்கள் கலந்துகொள்ள மறுத்ததால் நாத்திகர்கள் என முத்திரை குத்தப்பட்டார்கள். சமுதாய நிகழ்ச்சிகளில்—புறமத பண்டிகைகளிலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் . . .—கலந்துகொள்ளாததால் மனித இனத்துக்கே பகைவர்கள் என கேலி செய்யப்பட்டனர். . . . [கிறிஸ்தவ] ஆண்களும் பெண்களும் இரவில் ஒன்றுகூடி வந்து பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது. . . . விசுவாசிகள் [கிறிஸ்துவின் மரண நினைவுநாள் ஆசரிப்பை] தங்களுக்குள் மட்டுமே கொண்டாடியதால், அவர்கள் எப்போதும் ஒரு குழந்தையைப் பலிசெலுத்தி அதன் இரத்தத்தையும் மாமிசத்தையும் சாப்பிட்டார்கள் என்ற வதந்தி கிளம்பியது.” அதுமட்டுமல்ல, ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பேரரசரை வழிபட மறுத்ததால் தேச துரோகிகள் எனவும் குற்றம் சாட்டப்பட்டார்கள்.
9. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் எப்படி பிரதிபலித்தார்கள், இன்றைய சூழ்நிலை என்ன?
9 ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு பயந்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை நிறுத்திவிடவில்லை. பொ.ச. 60-61-ல், ‘நற்செய்தி உலகமெங்கும் பரவி பலன் தந்துகொண்டிருக்கிறது’ எனவும், அது ‘வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது’ எனவும் பவுல் சொன்னார். (கொலோசெயர் 1:4, 6, 23) இன்றும் அதுவே நடக்கிறது. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போல, யெகோவாவின் சாட்சிகளும் பொய்க் குற்றம் சாட்டப்படுகிறார்கள். இருந்தாலும், ராஜ்ய செய்தியைப் பிரசங்கிக்கும் இந்த வேலை இன்று வெற்றிநடை போடுகிறது, அதில் ஈடுபடுகிறவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
தீர்க்கதரிசிகளைப் போல துன்புறுத்தப்படுகையில் மகிழ்தல்
10, 11. (அ) மகிழ்ச்சிக்கான ஒன்பதாவது காரணத்தை இயேசு எவ்வாறு கூறி முடிக்கிறார்? (ஆ) தீர்க்கதரிசிகள் ஏன் துன்புறுத்தப்பட்டார்கள்? உதாரணங்கள் தருக.
10 மகிழ்ச்சிக்கான ஒன்பதாவது காரணத்தை இயேசு இவ்வாறு சொல்லி முடித்தார்: ‘மகிழ்ந்து, களிகூருங்கள்; . . . உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.’ (மத்தேயு 5:12) உண்மையற்ற இஸ்ரவேலர்களை எச்சரிப்பதற்காக யெகோவா அனுப்பிய தீர்க்கதரிசிகளுக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை, பெரும்பாலும் துன்புறுத்தவே செய்தார்கள். (எரேமியா 7:25, 26) அப்போஸ்தலன் பவுல் இதை உறுதிப்படுத்தி இவ்வாறு எழுதினார்: ‘பின்னும் நான் என்ன சொல்லுவேன்? தீர்க்கதரிசிகளைக் குறித்து நான் விவரஞ்சொல்ல வேண்டுமானால் காலம் போதாது. அவர்கள் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அனுபவித்தார்கள்.’—எபிரெயர் 11:32-38.
11 கெட்ட அரசனான ஆகாப் மற்றும் அவனுடைய மனைவி யேசபேலின் காலத்தில் யெகோவாவின் தீர்க்கதரிசிகள் பலர் பட்டயத்துக்கு இரையானார்கள். (1 இராஜாக்கள் 18:4, 13; 19:10) எரேமியா தீர்க்கதரிசி தொழுமரத்தில் மாட்டப்பட்டார், பிற்பாடு தண்ணீரற்ற துரவிலே போடப்பட்டார். (எரேமியா 20:1, 2, NW; 38:6) தானியேல் தீர்க்கதரிசி சிங்கங்களின் கெபியில் போடப்பட்டார். (தானியேல் 6:16, 17) முதல் நூற்றாண்டுக்கு முன்னிருந்த இந்தத் தீர்க்கதரிசிகள் எல்லாரும் யெகோவாவின் தூய வணக்கத்தை ஆதரித்ததாலேயே துன்புறுத்தப்பட்டார்கள். அநேக தீர்க்கதரிசிகள் யூத மதத் தலைவர்களாலும் துன்புறுத்தப்பட்டார்கள். ஆகவேதான், வேதபாரகரையும் பரிசேயரையும் ‘தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரர்’ என இயேசு அழைத்தார்.—மத்தேயு 23:31.
12. யெகோவாவின் சாட்சிகளாகிய நாம், பூர்வகால தீர்க்கதரிசிகளைப் போல துன்புறுத்தப்படுவதை ஏன் பாக்கியமாக கருதுகிறோம்?
12 ராஜ்ய நற்செய்தியை வைராக்கியமாக பிரசங்கிப்பதால், யெகோவாவின் சாட்சிகளான நாமும் இன்று அடிக்கடி துன்புறுத்தப்படுகிறோம். “கட்டாயப்படுத்தி மதம் மாற்றுபவர்கள்” என விரோதிகள் நம்மை குற்றம் சாட்டுகிறார்கள்; ஆனால், நமக்கு முன்னிருந்த யெகோவாவின் உண்மை வணக்கத்தாரும் இதுபோலவே குற்றம் சாட்டப்பட்டார்கள் என்பது நமக்கு தெரியும். (எரேமியா 11:21; 20:8, 11) பூர்வகால உண்மையுள்ள தீர்க்கதரிசிகள் துன்பம் அனுபவித்த அதே காரணத்துக்காக நாமும் துன்பம் அனுபவிப்பதை பாக்கியமாக கருதுகிறோம். சீஷனான யாக்கோபு இவ்வாறு எழுதினார்: ‘சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள். இதோ, பொறுமையாயிருக்கிறவர்களை மகிழ்ச்சியுள்ளவர்கள் என்கிறோமே!’—யாக்கோபு 5:10, 11.
மகிழ்ச்சியாய் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்
13. (அ) துன்புறுத்தலால் நாம் ஏன் சோர்ந்துவிடுவதில்லை? (ஆ) உறுதியாய் நிலைத்திருக்க எது நமக்கு உதவுகிறது, இது எதற்கு சான்றளிக்கிறது?
13 துன்புறுத்தலால் நாம் சோர்ந்துவிடுவதில்லை, மாறாக தீர்க்கதரிசிகள், ஆரம்பகால கிறிஸ்தவர்கள், கிறிஸ்து இயேசு ஆகியோரின் அடிச்சுவடுகளைத்தான் பின்பற்றுகிறோம் என்பதை அறிந்து ஆறுதலடைகிறோம். (1 பேதுரு 2:21) வேத வசனங்களிலிருந்தும் மிகுதியாக மனநிறைவடைகிறோம்; உதாரணத்திற்கு அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் வார்த்தைகள் நமக்கு மனநிறைவளிக்கின்றன: ‘பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக் குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல் இருங்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் மகிழ்ச்சியுள்ளவர்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவி உங்கள் மேல் தங்கியிருக்கிறது.’ (1 பேதுரு 4:12, 14) யெகோவாவின் ஆவி நம்மீது தங்கியிருப்பதாலும், நம்மை பலப்படுத்துவதாலுமே துன்புறுத்தலின் கீழ் நம்மால் உறுதியாய் நிலைத்திருக்க முடிகிறது என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்திருக்கிறோம். பரிசுத்த ஆவியின் ஆதரவுதானே நம்மீது யெகோவாவின் ஆசீர்வாதம் இருக்கிறது என்பதற்கு சான்றளிக்கிறது.—சங்கீதம் 5:12; பிலிப்பியர் 1:27-29.
14. நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுகையில் நாம் மகிழ்ச்சியடைவதற்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?
14 நீதியினிமித்தம் வருகிற எதிர்ப்பும் துன்புறுத்தலும் நம்மை மகிழ்ச்சியுள்ளவர்களாக்க மற்றொரு காரணமும் இருக்கிறது; நாம் தேவபக்தியுள்ள உண்மை கிறிஸ்தவர்களாக வாழ்வதை அது நிரூபிக்கிறது என்பதே அந்தக் காரணம். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.” (2 தீமோத்தேயு 3:12) சோதனையிலும் நாம் உத்தமத்தைக் காத்துக்கொள்வது, சாத்தானின் சவாலுக்கு, அதாவது யெகோவாவின் சிருஷ்டிகள் யாவும் சுயநலத்திற்காகவே அவருக்குச் சேவை செய்கிறார்கள் என்ற சவாலுக்குக் கூடுதலான பதிலடி கொடுக்கிறதென அறிந்து நாம் எல்லையில்லா மகிழ்ச்சியடைகிறோம். (யோபு 1:9-11; 2:3, 4) யெகோவாவின் நீதியுள்ள பேரரசுரிமையை நியாயநிரூபணம் செய்வதில், நமக்கு மிகச் சிறிய பங்கிருந்தாலும் அதைக் குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம்.—நீதிமொழிகள் 27:11.
வெகுமதிக்காக சந்தோஷத்தில் துள்ளிக்குதியுங்கள்
15, 16. (அ) ‘மகிழ்ந்து சந்தோஷத்தில் துள்ளிக்குதிப்பதற்கான’ என்ன காரணத்தை இயேசு கொடுத்தார்? (ஆ) அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பரலோகத்தில் என்ன வெகுமதி வைக்கப்பட்டுள்ளது, அவர்களது தோழர்களான ‘வேறே ஆடுகளுக்கும்’ எவ்வாறு வெகுமதி அளிக்கப்படுகிறது?
15 பூர்வகால தீர்க்கதரிசிகளைப் போல தீங்கு செய்யப்படுகையிலும் துன்புறுத்தப்படுகையிலும் மகிழ்ச்சியாயிருப்பதற்கு இன்னுமொரு காரணத்தை இயேசு கொடுத்தார். மகிழ்ச்சிக்கான ஒன்பதாவது காரணத்தின் முடிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘மகிழ்ந்து சந்தோஷத்தில் துள்ளிக்குதியுங்கள்; ஏனென்றால் பரலோகத்தில் உங்கள் வெகுமதி பெரிதாயிருக்கிறது.’ (மத்தேயு 5:12, NW) அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ [அதாவது, பரிசு] நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்.” (ரோமர் 6:23) ஆம், ஜீவனே ‘பெரிய வெகுமதி,’ அதை நம்மால் சம்பாதிக்க முடியாது. அது ஓர் இலவச பரிசு. அந்த வெகுமதி ‘பரலோகத்தில்’ இருக்கிறது என இயேசு சொன்னார், ஏனெனில் அது யெகோவாவிடமிருந்து வருகிறது.
16 அபிஷேகம் பண்ணப்பட்டோர் “ஜீவகிரீடத்தைப்” பெறுகிறார்கள், அதாவது, கிறிஸ்துவுடன் பரலோகத்தில் அழியாத வாழ்க்கையைப் பெறுகிறார்கள். (யாக்கோபு 1:12, 17) வேறே ஆடுகளோ’ பூமிக்குரிய பரதீஸில் நித்திய ஜீவனை அனுபவிக்கும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். (யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 21:3-5) இந்த இரு வகுப்பாருமே தங்கள் ‘வெகுமதியை’ சுய சம்பாத்தியத்தால் பெற்றுக்கொள்வதில்லை. அபிஷேகம் பண்ணப்பட்டோரும் ‘வேறே ஆடுகளும்’ தங்கள் வெகுமதியை யெகோவாவுடைய ‘பெரிதான கிருபையால்’ பெற்றுக்கொள்கிறார்கள்; ஆகவே, “வாக்குக்கடங்காத தெய்வ ஈவுக்காகக் [அதாவது, இலவச பரிசுக்காக] கடவுளுக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லும்படி இது அப்போஸ்தலன் பவுலைத் தூண்டியது.—2 கொரிந்தியர் 9:14, 15, தி.மொ.
17. துன்புறுத்தப்படுகையில் நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்கவும், ‘சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கவும்’ முடியும்?
17 கிறிஸ்தவர்கள் சிலர் நீரோ மன்னரால் கொடூரமாக துன்புறுத்தப்பட இருந்தனர்; ஆகவே அவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம். . . . அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.” அவர் மேலும் சொன்னதாவது: “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்.” (ரோமர் 5:3-5; 12:12) நமக்குப் பரலோக நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமிக்குரிய நம்பிக்கை இருந்தாலும் சரி, சோதனையின் கீழ் உண்மையுடன் நிலைத்திருப்பதற்கு நாம் பெறப்போகிற வெகுமதி நமக்கு கிடைக்கும் வேறெதைக் காட்டிலும் மிக மிக உயர்ந்ததாக இருக்கும். நம் ராஜா இயேசு கிறிஸ்துவின் ஆட்சியில் நம்முடைய அன்புத் தகப்பனான யெகோவாவை என்றென்றும் சேவிக்கவும் துதிக்கவும் போகிறோம் என்ற எதிர்பார்ப்பு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. எனவே, அடையாளப்பூர்வமாக நாம் ‘சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறோம்.’
18. முடிவு நெருங்கிவருகையில், தேசங்களைக் குறித்து எதை எதிர்பார்க்கலாம், யெகோவா என்ன செய்வார்?
18 சில நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள், துன்புறுத்தப்பட்டும் வருகிறார்கள். இந்த ஒழுங்குமுறையின் முடிவைக் குறித்த தீர்க்கதரிசனத்தில் உண்மைக் கிறிஸ்தவர்களை இயேசு இவ்வாறு எச்சரித்தார்: ‘என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.’ (மத்தேயு 24:9) முடிவு நெருங்க நெருங்க, யெகோவாவின் மக்களுக்கு விரோதமாக பகைமையைக் காட்டும்படி தேசங்களை சாத்தான் தூண்டிவிடுவான். (எசேக்கியேல் 38:10-12, 14-16) அதுவே யெகோவா நடவடிக்கை எடுப்பதற்கான சமயமாகும். “நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் [“யெகோவா,” NW] என்று அறிந்துகொள்வார்கள்” என அவர் சொல்லியிருக்கிறார். (எசேக்கியேல் 38:23) இவ்வாறு தமது மகத்தான பெயரை யெகோவா பரிசுத்தப்படுத்துவார், துன்புறுத்தலிலிருந்து தம் மக்களையும் விடுவிப்பார். ஆகவே, ‘சோதனையை சகிக்கிற மனுஷன் மகிழ்ச்சியுள்ளவன்.’—யாக்கோபு 1:12.
19. ‘யெகோவாவின் [மகா] நாளுக்காக’ காத்திருக்கும் வேளையில் நாம் என்ன செய்ய வேண்டும்?
19 ‘யெகோவாவின் [மகா] நாள்’ மிக வேகமாக நெருங்கி வந்துகொண்டிருக்கையில், கிறிஸ்துவின் பெயருக்காக ‘அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியால்’ நாம் மகிழ்ந்து களிகூருவோமாக. (2 பேதுரு 3:10-13; அப்போஸ்தலர் 5:41) யெகோவாவின் நீதியுள்ள புதிய உலகில் நம் வெகுமதிக்காக காத்திருக்கும் வேளையில் ஆரம்பகால கிறிஸ்தவர்களைப் போல ‘இடைவிடாமல் உபதேசம்பண்ணி, கிறிஸ்துவையும்’ அவருடைய ராஜ்ய அரசாங்கத்தையும் பற்றிய நற்செய்தியைப் ‘பிரசங்கித்து’ வருவோமாக.—அப்போஸ்தலர் 5:42; யாக்கோபு 5:11.
மறுபார்வைக்காக
• நீதியினிமித்தம் துன்பப்படுதல் என்றால் என்ன?
• ஆரம்பகால கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டபோது எவ்வாறு பிரதிபலித்தார்கள்?
• பூர்வகால தீர்க்கதரிசிகளைப் போல யெகோவாவின் சாட்சிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று ஏன் சொல்லலாம்?
• துன்புறுத்தப்படுகையில் நாம் ஏன் ‘மகிழ்ந்து சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கலாம்’?
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
‘ஜனங்கள் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தினால் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருப்பீர்கள்’
[படத்திற்கான நன்றி]
சிறையிலிருப்போர்: Chicago Herald-American