‘மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறவர்’ யார்?
நமது கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய யெகோவாவே மெய்த் தேவன். அவரே சிருஷ்டிகர், தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பவர். பைபிளை வாசித்து அதில் நம்பிக்கை வைப்பவர்கள், மேற்காணும் கேள்விக்கு இப்படித்தான் பதிலளிப்பார்கள். சொல்லப்போனால், இயேசு கிறிஸ்துவும்கூட யெகோவாவிடம் இவ்வாறு சொன்னார்: ‘ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.’—யோவான் 17:3.
இருந்தாலும், சர்ச்சுக்கு செல்லும் அநேகர் இக்கட்டுரையின் தலைப்பில் உள்ள சொற்றொடருக்கு வித்தியாசமான விளக்கம் தருகிறார்கள். அந்தச் சொற்றொடர் இயேசு கிறிஸ்துவை குறிப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அது 1 யோவான் 5:20-லிருந்து எடுக்கப்பட்டது; அதன் ஒரு பகுதி இவ்வாறு சொல்கிறது: ‘அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள் நாம் இருக்கிறோம். இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார்.’
இயேசு கிறிஸ்துவே ‘சத்தியமுள்ளவர்’ என்று இதுபோன்ற பல பைபிள் மொழிபெயர்ப்புகள் கூறுகின்றன. எனவே, திரித்துவ கோட்பாட்டை நம்புகிறவர்கள், ‘மெய் தேவனும் நித்திய ஜீவனுமாயிருப்பவர்’ இயேசுவே என அடித்துக் கூறுகிறார்கள். ஆனால், இந்தக் கருத்து மற்ற வேத வசனங்களோடு முரண்படுகிறது. அப்படியென்றால், இந்தக் கருத்து எப்படி வந்தது? கிரேக்க இலக்கணத்தை தவறாக புரிந்துகொண்டதன் அடிப்படையில் செய்யப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்பே இதற்கு காரணம். மூல கிரேக்கில், முந்தைய வாக்கியத்தின் முடிவில் சொல்லப்படுகிற நபர் இயேசு கிறிஸ்து. எனவே, அடுத்த வாக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள ‘இவரே’ என்பது இயேசுவைத்தான் குறிக்க வேண்டும் என்று திரித்துவ கோட்பாட்டை நம்புவோர் முடிவு செய்கிறார்கள். ஆனால், நம்பகமான கல்விமான்கள் அநேகர்கூட இந்தத் திரித்துவ கருத்தை ஏற்பதில்லை. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிஞர் பி. எஃப். வெஸ்காட் கொடுக்கிற விளக்கத்தின்படி, ‘மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமானவர்’ என்ற சொற்றொடர் இயேசுவை அல்ல, ஆனால் இயேசுவின் பிதாவைக் குறிக்க வேண்டும் என்பதே நியாயமான முடிவு. அப்போஸ்தலன் யோவானின் மனதிலும் இதுதான் இருந்தது என்பது தெளிவாக இருக்கிறது. ஜெர்மானிய இறையியலாளர், எரிக் ஹாப்ட் இவ்வாறு எழுதினார்: ‘“இவரே” என்ற சொற்றொடர், இயேசுவைக் குறிக்கிறதா அல்லது கடவுளைக் குறிக்கிறதா என்பதைத் தீர்மானிக்க விக்கிரகங்களுக்கு எதிராக 21-ம் வசனத்தில் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிப்பு நமக்கு உதவுகிறது. ஒரே மெய்க் கடவுளுக்கான அத்தாட்சியைத்தான் அந்த வசனம் அளிக்கிறது, கிறிஸ்துவே கடவுள் என்பதற்கான அத்தாட்சியை அல்ல என்று முடிவுசெய்வது அதிக நியாயமாக தோன்றுகிறது.’
ரோமின் பான்டிஃபிக்கல் பிப்லிக்கல் இன்ஸ்டிட்யூட் வெளியிட்ட கிரேக்க புதிய ஏற்பாட்டின் ஓர் இலக்கண உறுப்பாராய்வு (ஆங்கிலம்) என்ற பிரசுரம்கூட இவ்வாறு குறிப்பிடுகிறது: “18-20 [வசனங்களின்] உச்சக்கட்டமாக, ‘இவரே’ என்பது புறமதக் கடவுட்களிலிருந்து (வசனம் 21) முற்றிலும் வேறுபட்ட மெய்க் கடவுளையே குறிக்க வேண்டும்.”
கிரேக்கில், “இது” அல்லது “இவர்” என்பது அதற்கு முன் காணப்படும் சொற்றொடரிலுள்ள எழுவாயை எப்போதுமே குறிப்பதில்லை. இதற்கு ஓர் உதாரணத்தை அப்போஸ்தலர் 4:10, 11-ல் பார்க்கிறோம். லூக்கா இவ்வாறு சொல்கிறார்: ‘உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறான். . . . வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.’ தெளிவாகவே, 11-ம் வசனத்தில் சொல்லப்பட்ட “அவரே” என்பது சுகப்படுத்தப்பட்ட அந்த மனிதனைக் குறிப்பிடுவதில்லை. “அவரே” என்பது நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவைத்தான் குறிக்கிறது; அவர் தாமே கிறிஸ்தவ சபைக்கு ‘மூலைக் கல்லாக’ இருக்கிறார்.—எபேசியர் 2:20; 1 பேதுரு 2:4-8.
இந்த வசனங்கள் எல்லாம், கிரேக்க கல்விமான் டேனியல் வாலஸ் கூறியதை உறுதிப்படுத்துகின்றன. கிரேக்க மொழியில் சுட்டுப்பெயர்களை பயன்படுத்தும்போது, “எழுத்தாளரின் மனதிலுள்ள எழுவாய், சுட்டுப்பெயருக்கு முன்பு காணப்படும் சொற்றொடரிலுள்ள எழுவாயாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை.”
‘சத்தியமுள்ளவர்’
அப்போஸ்தலனாகிய யோவான் மனதில் வைத்து எழுதியபடி, இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய யெகோவாவே ‘சத்தியமுள்ளவர்.’ அவரே மெய்க் கடவுள், சிருஷ்டிகர். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது.” (1 கொரிந்தியர் 8:6; ஏசாயா 42:8) 1 யோவான் 5:20-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘சத்தியமுள்ளவர்’ யெகோவாவே என்பதற்கு மற்றொரு காரணம் அவரே சத்தியத்தின் ஊற்றுமூலர் என்பதாகும். யெகோவாவை “சத்தியபரர்” என சங்கீதக்காரன் அழைத்ததற்கு காரணம், தாம் செய்யும் எல்லா காரியங்களிலும் அவர் உண்மையுள்ளவர், அவர் பொய் சொல்லாதவர். (சங்கீதம் 31:5; யாத்திராகமம் 34:6; தீத்து 1:3) தம் பரலோகத் தகப்பனைக் குறித்து சொல்கையில், “உம்முடைய வசனமே சத்தியம்” என குமாரன் சொன்னார். தம்முடைய போதகத்தைப் பற்றி சொல்கையில், “என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது” என இயேசு குறிப்பிட்டார்.—யோவான் 7:16; 17:17.
யெகோவா “நித்திய ஜீவனுமாயிருக்கிறார்.” அவர் உயிரின் ஊற்றுமூலர், கிறிஸ்து மூலம் இதை ஒரு கிருபை வரமாக மனிதருக்கு தருபவர். (சங்கீதம் 36:9; ரோமர் 6:23) கடவுள், ‘தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் [அதாவது, பரிசு] அளிக்கிறவர்’ என அப்போஸ்தலன் பவுல் சொன்னது குறிப்பிடத்தக்க விஷயம். (எபிரெயர் 11:6) மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்புவதன் மூலம் தம் குமாரனுக்கு கடவுள் பரிசளித்தார்; முழு இருதயத்தோடு தம்மை சேவிப்போர் அனைவருக்குமே அவர் நித்திய ஜீவன் என்ற பரிசை அளிப்பார்.—அப்போஸ்தலர் 26:23; 2 கொரிந்தியர் 1:9.
ஆகவே, நாம் என்ன முடிவுக்கு வரவேண்டும்? யெகோவாவே ‘மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார்.’ தம்முடைய சிருஷ்டிகளிடமிருந்து முழுமையான வணக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கு பாத்திரர் அவர் மட்டுமே.—வெளிப்படுத்துதல் 4:11.