உத்தமத்தையும் உறுதியையும் காப்போர்—அன்றும் இன்றும்
விஸ்வா என்ற சிறிய நகரம் போலந்து நாட்டின் தெற்குப் பகுதியிலுள்ளது; இது ஸ்லோவாகியா மற்றும் செக் குடியரசைத் தொட்டவாறு அதன் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. நீங்கள் இதுவரை விஸ்வாவைப் பற்றி கேள்விப்படாதிருக்கலாம்; ஆனால் உண்மைக் கிறிஸ்தவர்களின் மனதைக் கவரும் ஒரு சரித்திரம் அதற்கு இருக்கிறது. யெகோவாவின் வணக்கத்திற்கு காட்டப்பட்ட உத்தமத்திற்கும் வைராக்கியத்திற்கும் முத்திரையாக அமைவதே அந்த சரித்திரம். அதெப்படி?
விஸ்வா ஓர் அழகிய மலைப்பிரதேசம். அங்குள்ள மலைத்தொடரின் பிரமிப்பூட்டும் காட்சி காண்போரை அசத்துகிறது. சீறி பாய்ந்தோடும் ஓடைகளும் இரண்டு சிற்றாறுகளும் விஸ்டுலா நதியில் சங்கமம் ஆகின்றன. அந்நதி மலைக்காடுகள் வழியாகவும் பள்ளத்தாக்குகள் வழியாகவும் வளைந்து நெளிந்து ஓடுகிறது. விஸ்வா பிரசித்தி பெற்ற மருத்துவ மையமாக, கோடை விடுமுறை வாசஸ்தலமாக, குளிர்கால வாழிடமாக திகழ்கிறது. அங்குள்ள சிநேகபான்மையான மக்களும் தனித்தன்மை வாய்ந்த சீதோஷண நிலையுமே இதற்குக் காரணமாகும்.
1590-களில் முதன்முதலில் மக்கள் அங்கு குடியேறிய சமயத்திலேயே அதற்கு இப்பெயர் வந்ததாக தெரிகிறது. மரம் அறுக்கும் இயந்திரம் ஒன்று நிறுவப்பட்டது. விரைவிலேயே அந்த மலையின் வெட்டவெளிகளில் மக்கள் குடியேற ஆரம்பித்தார்கள். ஆடுமாடுகளை வளர்த்து நிலத்தைப் பயிர் செய்தார்கள். மத சம்பந்தமாக ஏற்பட்ட திடீர் மாற்றங்களில் இந்த எளிய மக்கள் சிக்கித் தவித்தார்கள். மார்ட்டின் லூத்தர் தொடங்கி வைத்த மதச் சீர்திருத்தங்கள் அங்குள்ள ஜனங்கள் மீது ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியதால், அங்குள்ள லூத்தரன் மதப்பிரிவு “தேசிய மதம்” என்ற அந்தஸ்தை 1545-ல் பெற்றது என்பதாக ஆராய்ச்சியாளர் ஆன்ஜே ஆட்செக் கூறினார். இருந்தாலும், முப்பது வருடங்களாக நடைபெற்ற போரும் அதை தொடர்ந்து வந்த சமய சீர்திருத்த எதிர் இயக்கமும் நிலைமையை தலைகீழாக்கின. ஆன்ஜே தொடர்ந்து சொன்னார்: “1654-ல் புராட்டஸ்டன்டினரின் எல்லா சர்ச் கட்டடங்களும் கையகப்படுத்தப்பட்டன; அவர்களுடைய மத ஆராதனைக் கூட்டங்கள் தடை செய்யப்பட்டன; பைபிள்களும் மற்ற மத புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.” இருப்பினும், உள்ளூர் வாசிகளில் அநேகர் லூத்தரன் மதப்பிரிவைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.
பைபிள் சத்தியத்தின் ஆரம்ப விதைகள்
சந்தோஷத்திற்குரிய விஷயம் என்னவென்றால், அதைவிட முக்கியமான மத சீர்த்திருத்தம் ஒன்று ஏற்படவிருந்தது. 1928-ல் பைபிள் மாணாக்கர்கள், அதாவது யெகோவாவின் சாட்சிகள் இரண்டு பேர் பைபிள் சத்தியத்தின் ஆரம்ப விதைகளை அங்கு விதைத்தனர். அடுத்த வருடம், யான் காமாலா என்ற சாட்சி ‘ஃபோனோகிராப்’ கருவியோடு விஸ்வாவுக்கு சென்றிருந்தார். அதில் பதிவு செய்யப்பட்டிருந்த வேதாகம பேச்சுகளை ஒலிபரப்பினார். பின்பு அவர் அருகிலுள்ள பள்ளத்தாக்கிற்குச் சென்றபோது ஆன்ஜே ராஷ்கா என்பவரை சந்தித்தார். ராஷ்கா ராஜ்ய செய்திக்கு நன்கு செவிசாய்த்தார்; அவர் மேட்டுப்பகுதியில் வாழ்ந்து வந்தார்; குள்ளமான தோற்றமும் உறுதியான கட்டுடலும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் மனமும் கொண்டவர். ராஷ்கா உடனே தனது பைபிளை திறந்து ‘ஃபோனோகிராப்’ பேச்சுகளில் சொல்லப்பட்ட குறிப்புகளை தன் பைபிளை வைத்து ஒத்துப்பார்த்தார். அதற்குப்பின் அவர் இவ்வாறு ஆச்சரியத்துடன் சொன்னார்: “சகோதரரே, நான் ஒரு வழியாக உண்மையை கண்டுபிடித்துவிட்டேன்! நான் முதல் உலகப் போரில் ஈடுபட்டிருந்த சமயத்திலிருந்தே அநேக கேள்விகளுக்கு பதில்களைத் தேடிக்கொண்டிருந்தேன்!”
உற்சாகம் பொங்கினவராய், ராஷ்கா தனது நண்பர்களாகிய யர்ஷே மற்றும் ஆன்ஜே பில்ச் என்பவர்களிடம் காமாலாவை அழைத்துச் சென்றார். பிரான்சு நாட்டில் பைபிள் சத்தியத்தை கற்றுக்கொண்ட ஆன்ஜே டிர்னா, கடவுளுடைய செய்தியை ஆழமாக புரிந்துகொள்ள இவர்களுக்கு உதவினார். விரைவிலேயே அவர்கள் முழுக்காட்டுதல் பெற்றனர். 1930-களின் மத்திபத்தில் விஸ்வாவிலிருந்த பைபிள் மாணாக்கர்களின் இந்தச் சிறு தொகுதிக்கு உதவ, அக்கம்பக்கத்து பட்டணங்களில் இருந்து சகோதரர்கள் சென்றிருந்தனர். இதன் பலன்கள் மலைக்க வைத்தன.
ஆர்வமுடைய புதியவர்கள் ஏராளமாக வர ஆரம்பித்தது ஆச்சரியமூட்டியது. உள்ளூரிலிருந்த லூத்தரன் குடும்பங்களுக்கு தங்கள் வீடுகளில் பைபிளை படிக்கும் பழக்கம் இருந்தது. எனவே, எரிநரகம் மற்றும் திரித்துவ கோட்பாடு தவறு என்பதற்கு நம்பவைக்கும் வேதாகம குறிப்புகளை பார்த்தவுடன், அவர்களால் உண்மை எது பொய் எது என்பதை தெளிவாக கண்டுகொள்ள முடிந்தது. பொய் மத போதனைகளை விட்டுவிட அநேக குடும்பங்கள் தீர்மானித்தன. அதனால், விஸ்வாவிலிருந்த சபை கிடுகிடுவென வளர்ந்தது; 1939-க்குள் சுமார் 140 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சபையாக ஆனது. இருப்பினும், ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்றால், சபையிலிருந்தவர்களில் அநேகர் முழுக்காட்டுதல் பெறவில்லை. “முழுக்காட்டப்படாத இந்தப் பிரஸ்தாபிகள் யெகோவாவின் பக்கம் தங்களுடைய நிலைநிற்கையை எடுக்கவில்லை என்று சொல்ல முடியாது” என அப்போது வாழ்ந்த சாட்சியான ஹெலனா சொல்கிறார். மேலும், “வெகு விரைவிலேயே எதிர்ப்பட்ட விசுவாச பரீட்சைகளில் அவர்கள் தங்களுடைய உத்தமத்தை நிரூபித்தார்கள்” என்றும் சொல்கிறார்.
பிள்ளைகளைப் பற்றி என்ன? தங்களுடைய பெற்றோர் சத்தியத்தை கண்டுபிடித்ததை பிள்ளைகள் உணர்ந்தார்கள். ஃப்ரான்சீசேக் ப்ரான்ஸ் இவ்வாறு விவரிக்கிறார்: “சத்தியம் இதுதான் என்பதை அப்பா புரிந்து கொண்டவுடன், அதை என் மனதிலும் அண்ணன் மனதிலும் ஆழமாக பதியவைக்க ஆரம்பித்தார். அப்போது எனக்கு எட்டு வயசு, என் அண்ணனுக்கு பத்து வயசு. ‘கடவுள் யார்? அவருடைய பெயர் என்ன? இயேசு கிறிஸ்துவைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?’ போன்ற எளிய கேள்விகளை அப்பா எங்களிடம் கேட்பார். அதற்கான பதில்களை பைபிள் வசன ஆதாரத்தோடு நாங்கள் எழுத வேண்டும்.” மற்றொரு சாட்சி இவ்வாறு சொல்கிறார்: “என்னுடைய அப்பா அம்மா ராஜ்ய செய்தியை மனதார ஏற்றுக்கொண்டு 1940-ல் லூத்தரன் சர்ச்சை விட்டு வெளிவந்ததால் பள்ளியில் எனக்கு எதிர்ப்புகள் வந்தன; உதைகளும் வாங்கினேன். என்னுடைய மனதில் பைபிள் நியமங்களை ஆழமாக விதைத்ததற்காக என் பெற்றோருக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏனெனில் அந்தக் கடினமான காலங்களைத் தாண்டிவர அது எனக்கு பெரிதும் உதவியது.”
சோதனையின்கீழ் விசுவாசம்
இரண்டாம் உலகப் போரில், நாசிக்கள் அந்த பிராந்தியத்தை கைப்பற்றினர். யெகோவாவின் சாட்சிகளை பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர். முதலில் பெரியவர்களிடம், குறிப்பாக அப்பாமார்களிடம், ஜெர்மன் நாட்டவரைக் குறிக்கும் பட்டியலில் கையெழுத்திட்டு சில சலுகைகளை பெற்றுக்கொள்ள உற்சாகப்படுத்தினர். நாசிக்களுக்கு ஆதரவளிக்க சாட்சிகள் ஒப்புக்கொள்ளவே இல்லை. ராணுவத்தில் சேரும் வயதிலிருந்த சகோதரர்களும் சத்தியத்தில் அக்கறை காட்டியவர்களும் சந்தித்த தர்மசங்கடமான பிரச்சினை இதுதான்: ஒன்று ராணுவத்தில் சேர வேண்டும் அல்லது உறுதியான நடுநிலைமையை காத்துக்கொண்டு அதனால் வரும் கடும் தண்டனையைப் பெற வேண்டும். 1943-ல் கெஸ்டப்போ எனப்பட்ட இரகசிய போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஆன்ஜே ஷால்பொ இவ்வாறு விளக்குகிறார்: “ராணுவ சேவையை மறுப்பவர்கள் அநேகமாக ஆஷ்விட்ஸ் சித்திரவதை முகாமுக்கே அனுப்பப்படுவார்கள். நான் அப்போது முழுக்காட்டுதல்கூட எடுத்திருக்கவில்லை. இருந்தாலும், மத்தேயு 10:28, 29-ல் உள்ள இயேசுவின் உறுதிமொழியை அறிந்திருந்தேன். யெகோவாவின் மீதுள்ள விசுவாசத்தை முன்னிட்டு நான் மரித்தாலும், என்னை மறுபடியும் உயிர்த்தெழுப்ப அவரால் முடியும் என்ற அசையாத நம்பிக்கை எனக்கிருந்தது.”
1942-களின் ஆரம்பத்தில், விஸ்வாவிலிருந்து 17 சகோதரர்களை நாசிக்கள் கைது செய்தனர். அதில் 15 பேர் மூன்றே மாதங்களுக்குள் ஆஷ்விட்ஸில் இறந்து போனார்கள். இது விஸ்வாவிலிருந்த மற்ற சாட்சிகள் மீது என்ன பாதிப்பை ஏற்படுத்தியது? தங்களுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுப்பதற்கு பதிலாக யெகோவாவை உறுதியாகப் பற்றிக்கொண்டு அவருடன் அண்டி இருக்கவே இது அவர்களை உற்சாகப்படுத்தியது! அடுத்த ஆறு மாதங்களில், விஸ்வாவிலிருந்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து கைதானவர்களுடைய எண்ணிக்கையும் வெகு விரைவில் அதிகரித்தது. மொத்தத்தில் 83 சகோதரர்களும், ஏன் அக்கறை காட்டியவர்களும் பிள்ளைகளும்கூட ஹிட்லரின் சர்வநாச படலத்திற்கு இரையானார்கள். அதில் ஐம்பத்து மூன்று பேர் சித்திரவதை முகாம்களுக்கு (பெரும்பாலும் ஆஷ்விட்ஸ்) அல்லது போலந்து, ஜெர்மனி, மற்றும் பொஹிமியாவின் சுரங்கங்களிலிருந்த கட்டாய உழைப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
உத்தமத்தோடும் உறுதியோடும்
ஆஷ்விட்ஸிலிருந்த சாட்சிகளிடம், உடனே விடுதலை அடைவதற்கான வாய்ப்பைக் காட்டி நாசிக்கள் வசீகரிக்கப் பார்த்தார்கள். எஸ்எஸ் காவலர் ஒருவர் ஒரு சகோதரரிடம் இவ்வாறு சொன்னார்: “பைபிள் மாணாக்கர்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று வெறுமனே ஒரு பேப்பரில் கையெழுத்து போட்டால் போதும், நீ விடுதலை ஆகி வீட்டிற்குப் போகலாம்.” அநேக தடவை இந்த வாய்ப்பு நீட்டப்பட்டது. இருப்பினும் யெகோவா மீதான தன் பற்றுறுதியை அந்த சகோதரர் விட்டுக்கொடுக்கவில்லை. அதனால் அடி-உதை, கேலி ஆகியவற்றுக்கு ஆளானார். மேலும், ஜெர்மனியிலுள்ள ஆஷ்விட்ஸிலும் மிட்டல்பாவு டொராவிலும் அடிமையாக உழைத்தார். தன்னுடைய விடுதலைக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு, அவர் இருந்த முகாம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலின்போது மயிரிழையில் உயிர் தப்பினார்.
சமீபத்தில் காலமான பாவல் ஷால்பொ என்ற சாட்சி ஒருமுறை இவ்வாறு சொல்லியிருந்தார்: “கெஸ்டப்போ போலீஸார் விசாரணை செய்த சமயத்தில், நான் ஏன் ஜெர்மனி நாட்டு ராணுவத்தில் சேருவதற்கும் ‘ஹெய்ல் ஹிட்லர்’ என்று சொல்வதற்கும் மறுப்பு தெரிவிக்கிறேன் என்பதை திரும்பத் திரும்ப என்னிடம் கேட்டார்கள்.” அரசியலில் நடுநிலைமை வைப்பதற்கான காரணங்களை பைபிளிலிருந்து அவர் விளக்கினார்; பிறகு, அவர் ஆயுத தொழிற்சாலையில் வேலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. “அந்த வேலையை ஏற்றுக்கொள்ள என் மனசாட்சி இடங்கொடுக்கவில்லை, அதனால் சுரங்கத்தில் வேலை செய்ய என்னை அனுப்பிவிட்டார்கள்” என்றும் அவர் சொன்னார். இருப்பினும் அவர் உண்மையோடு நிலைத்திருந்தார்.
கைதாகாமல் இருந்த பெண்களும் பிள்ளைகளும் ஆஷ்விட்ஸில் இருந்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை அனுப்பினார்கள். அச்சமயத்தில் சிறுவனாக இருந்த ஒரு சகோதரர் இப்போது இவ்வாறு சொல்கிறார்: “கோடைகாலத்தில் காடுகளிலிருந்து கிரான்பெரி எனப்படும் பெரி பழங்களை பறித்துவந்து பண்டமாற்றாக கோதுமையை வாங்கிக் கொள்வோம். சகோதரிகள் சிறிய ரொட்டி துண்டுகளை செய்து பன்றிக் கொழுப்பில் ஊறவைப்பார்கள். பிறகு இந்த ரொட்டி துண்டுகளை கைதான உடன் விசுவாசிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பிவைப்போம்.”
விஸ்வாவிலிருந்து கைதான சாட்சிகளில் பெரியவர்கள் மட்டும் மொத்தம் 53 பேர் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டு கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் முப்பத்தெட்டு பேர் உயிரிழந்தனர்.
இளைய சமுதாயம் காட்சிக்கு வருகிறது
யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளும் நாசிக்களின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டனர். பொஹிமியாவில் இருந்த தற்காலிக முகாம்களுக்கு தங்கள் தாய்மாருடன் இருக்குமாறு சில பிள்ளைகள் அனுப்பப்பட்டனர். மற்றவர்களோ அவர்களுடைய பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு லோட்ஜ் நகரில் இருந்த சிறுவர் முகாமுக்கு அனுப்பப்பட்டனர். அது பிள்ளைகளை படுமோசமாக நடத்தின முகாம்.
பிள்ளைப் பருவத்தில் அங்கிருந்த மூன்று பேர் இப்போது அதை நினைவுபடுத்தி சொல்வதாவது: “லோட்ஜுக்கு கொண்டுசெல்ல எங்களில் ஐந்து முதல் ஒன்பது வயதுக்குட்பட்ட பத்து பிள்ளைகளை ஜெர்மானியர்கள் முதலில் பிடித்துக்கொண்டார்கள். ஜெபிப்பதன் மூலமும் பைபிள் விஷயங்களை பேசுவதன் மூலமும் நாங்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டோம். அந்தச் சூழ்நிலையை சகித்துக்கொள்வது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை.” 1945-ல் இந்த எல்லா பிள்ளைகளும் வீடு திரும்பினர். அவர்கள் உயிரோடு இருந்தாலும், எலும்பும் தோலுமாகவும் அதிர்ச்சி அடைந்தவர்களாகவும் காணப்பட்டார்கள். இருந்தாலும், எந்தவொரு சோதனையும் அவர்களுடைய உத்தமத்தை குலைக்க முடியவில்லை.
அதன்பின் நடந்தது என்ன?
இரண்டாம் உலகப் போர் எனும் கொந்தளிப்பு அமர்ந்தது. விஸ்வாவிலிருந்த சாட்சிகள் இன்னமும் விசுவாசத்தில் பலமுள்ளவர்களாகவே இருந்தனர்; வைராக்கியத்தோடும் திடதீர்மானத்தோடும் தங்கள் ஊழியத்தை மீண்டும் தொடர தயாராக இருந்தனர். பிரசங்கிப்பதற்கும் பைபிள் பிரசுரங்களை விநியோகிப்பதற்கும், அங்கிருந்து 40 கிலோமீட்டருக்கு அப்பால் வரை வசிக்கும் ஜனங்களை சகோதரர்கள் சந்தித்தார்கள். “விரைவிலேயே எங்கள் பட்டணத்தில் மூன்று சபைகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன” என்று யான் கஷாக் சொல்கிறார். இருப்பினும், மத சுதந்திரம் ரொம்ப காலத்துக்கு நீடிக்கவில்லை.
நாசிக்களின் ஆட்சிப் பீடத்தை கைப்பற்றிய கம்யூனிஸ்ட் ஆட்சி, 1950-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை போலந்து நாட்டில் தடை செய்தது. எனவே அங்கிருந்த சகோதரர்கள் ஊழியம் செய்ய புதுப்புது வழிகளை கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. சில சமயங்களில், கால்நடைகள் அல்லது தானியங்கள் வாங்கும் சாக்கில் ஜனங்களுடைய வீட்டிற்கு சென்று அவர்களிடம் சகோதரர்கள் பேசினர். கிறிஸ்தவ கூட்டங்கள் பெரும்பாலும் இரவில், சிறு தொகுதிகளாக நடத்தப்பட்டன. அப்படியிருந்தாலும், யெகோவாவின் வணக்கத்தாரில் அநேகரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். அயல்நாட்டு துப்பறியும் இலாகாவிற்கு சேவை செய்வதாக ஓர் ஆதாரமற்ற குற்றச்சாட்டை அவர்கள் மீது சுமத்தினர். “உன் விசுவாசத்தை ஹிட்லரால் முறியடிக்க முடியவில்லை, ஆனால் நாங்கள் முறியடித்துக் காட்டுறோம் பார்” என ஏளனமாக சொல்லி அதிகாரிகள் சிலர் பாவல் பில்ச் என்ற சகோதரரை மிரட்டினர். ஐந்து வருட சிறை தண்டனையை அனுபவித்தபோதிலும், யெகோவாவுக்கு அவர் உண்மையுடன் நிலைத்திருந்தார். இளம் சாட்சிகள் சிலர், சோஷியலிஸ பத்திரத்தில் கையெழுத்திட மறுத்தபோது பள்ளிகளிலிருந்தும் வேலைகளிலிருந்தும் நீக்கப்பட்டனர்.
யெகோவா தொடர்ந்து அவர்களோடு இருந்தார்
1989-ல் அரசியல் வட்டாரத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. அதனால் போலந்திலிருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது. விஸ்வாவில் யெகோவாவின் வணக்கத்தாராக உறுதியோடு நிலைத்திருந்தவர்கள் தங்கள் ஊழிய வேலையை தீவிரப்படுத்தினர். பயனியர்கள் மற்றும் முழுநேர ஊழியர்களுடைய எண்ணிக்கையிலிருந்து இதை தெரிந்துகொள்ளலாம். அங்கு சுமார் 100 சகோதர சகோதரிகள் பயனியர் சேவை செய்தனர். அதனால், அந்தப் பட்டணம் ‘பயனியர் ஃபாக்டரி’ என்று செல்லமாக அழைக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.
கடந்த கால ஊழியர்களுக்கு கடவுள் அளித்த ஆதரவைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால், அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.” (சங்கீதம் 124:2, 3) நம்முடைய காலங்களில், மதப்பற்றின்மையும் ஒழுக்கங்கெட்ட உலக பாங்குகளுமே பொது ஜனங்களிடம் பரவலாக காணப்படுகின்றன. அதன் மத்தியிலும், விஸ்வாவிலிருந்த யெகோவாவின் வணக்கத்தார் தங்களுடைய உத்தமத்தைக் காத்துக்கொள்ள முயன்றனர்; அதற்காக நிறைவாய் ஆசீர்வதிக்கப்பட்டனர். அங்கு வாழும் சாட்சிகளுடைய சந்ததியாரால், அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் கூற்று உண்மையென உறுதியுடன் கூற முடியும்: “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?”—ரோமர் 8:31.
[பக்கம் 26-ன் படம்]
எமீல்யா கஷாக் தன்னுடைய பிள்ளைகள் ஹெலனா, எமீல்யா, யான் ஆகியோரோடு பொஹிமியாவில் உள்ள தற்காலிக முகாமுக்கு அனுப்பப்பட்டார்
[பக்கம் 26-ன் படம்]
ராணுவ சேவையை மறுத்ததற்காக பாவல் ஷால்பொ, சுரங்கத்தில் வேலை செய்ய அனுப்பப்பட்டார்
[பக்கம் 27-ன் படம்]
சகோதரர்கள் ஆஷ்விட்ஸுக்கு அனுப்பப்பட்டு அங்கு மரித்தபோதிலும் விஸ்வாவில் ஊழியம் தடைபடாமல் முன்னேறியது
[பக்கம் 28-ன் படம்]
பாவல் பில்சும் யான் போலக்கும் லோட்ஜில் இருந்த இளைஞர் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
பெரி பழங்கள் மற்றும் பூக்கள்: © R.M. Kosinscy / www.kosinscy.pl