உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 9/15 பக். 24-பக். 27 பாரா. 15
  • உபாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உபாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ‘உன் கண்கள் கண்டவற்றை மறவாதே’
  • (உபாகமம் 1:1–4:49)
  • யெகோவாவை நேசித்து அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியுங்கள்
  • (உபாகமம் 5:1–26:19)
  • ‘ஜீவனைத் தெரிந்துகொள்ளுங்கள்’
  • (உபாகமம் 27:1–34:12)
  • நமக்கு மிகவும் மதிப்புள்ள புத்தகம்
  • பைபிள் புத்தக எண் 5—உபாகமம்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • யெகோவாவின் வழிகளை அறிதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • பைபிள் புத்தக எண் 4—எண்ணாகமம்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • நீங்கள் யெகோவாவை மறந்துவிடக் கூடாது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 9/15 பக். 24-பக். 27 பாரா. 15

யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது

உபாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

வருடம் பொ.ச.மு. 1473. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை யெகோவா விடுவித்து இப்போது நாற்பது ஆண்டுகள் கடந்து விட்டன. வனாந்தரத்தில் இத்தனை ஆண்டுகள் அலைந்து திரிந்த பின்னும் தங்களுக்கென ஒரு தேசமில்லாத ஜனங்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். ஆனால், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் எல்லையை ஒருவழியாக அடைந்துவிடுகிறார்கள். அந்தத் தேசத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளும்போது என்ன நடக்கப் போகிறது? என்னென்ன பிரச்சினைகளை எதிர்ப்படுவார்கள், அவற்றை எவ்வாறு சமாளிக்க வேண்டும்?

இஸ்ரவேலர் யோர்தான் நதியைக் கடந்து கானான் தேசத்திற்குள் செல்வதற்கு முன்பாக, தங்களுக்கு முன் இருக்கும் பிரமாண்டமான வேலைக்கு அவர்கள் அனைவரையும் மோசே தயார்படுத்துகிறார். எப்படி? உற்சாகத்தையும், அறிவுரையையும், நினைப்பூட்டுதலையும், எச்சரிக்கையையும் அளிக்கும் பல பேச்சுகள் வாயிலாக தயார்படுத்துகிறார். யெகோவா தேவன் தனிப்பட்ட பக்தியை கேட்பவர் என்பதையும் சுற்றியுள்ள தேசத்தாரின் வழிகளை இஸ்ரவேலர் பின்பற்றக் கூடாது என்பதையும் நினைப்பூட்டுகிறார். இந்தப் பேச்சுகளே பைபிளிலுள்ள உபாகமம் என்ற புத்தகத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. அவற்றில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளே இன்று நமக்கும் தேவைப்படுகின்றன; ஏனென்றால் யெகோவாவுக்கு தனிப்பட்ட பக்தியை அளிப்பது சவாலாக இருக்கும் ஓர் உலகில்தான் நாமும் வாழ்கிறோம்.​—⁠எபிரெயர் 4:12.

இப்புத்தகத்தின் கடைசி அதிகாரத்தை தவிர மற்றெல்லா அதிகாரங்களையும் மோசே எழுதினார். உபாகம புத்தகம் இரண்டு மாதங்களுக்கும் சற்று அதிகமான காலப்பகுதியை உள்ளடக்குகிறது.a (உபாகமம் 1:4; யோசுவா 4:19) யெகோவா தேவனை முழு இருதயத்தோடு நேசிப்பதற்கும் அவரை உண்மையோடு சேவிப்பதற்கும் அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனை எப்படி உதவுகிறதென நாம் இப்போது பார்க்கலாம்.

‘உன் கண்கள் கண்டவற்றை மறவாதே’

(உபாகமம் 1:1–4:49)

முதல் பேச்சில், வனாந்தரத்தில் நடந்த சில சம்பவங்களைப் பற்றி மோசே விவரிக்கிறார்; முக்கியமாக, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை சொந்தமாக்கிக் கொள்வதற்கு தயாராக இருக்கும் இஸ்ரவேலருக்கு அவை பயனுள்ளதாக இருக்கும். நியாயாதிபதிகள் நியமிக்கப்பட்டதைப் பற்றி அப்பேச்சில் அவர் சொன்னது, தம்முடைய மக்கள் அன்பான முறையில் கவனித்துக் கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களை யெகோவா ஒழுங்குபடுத்துகிறார் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தியிருக்க வேண்டும். பத்து வேவுகாரர்கள் சொன்ன தவறான அறிக்கையினால் முந்தின சந்ததியார் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் கால் பதிக்க முடியாமல் போனதைப் பற்றியும் மோசே விவரிக்கிறார். இப்போது அந்த தேசம் அவர்கள் கண்களுக்கு முன்னால் இருக்க, மோசே சொல்வதை கேட்டுக்கொண்டிருப்போர் மீது இந்த எச்சரிப்பூட்டும் உதாரணம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை சிந்தித்துப் பாருங்கள்.

யோர்தான் நதியின் அக்கரையில் படையெடுத்து செல்ல இஸ்ரவேல் ஜனங்கள் தயாராக இருக்கும் வேளையில், அதை கடப்பதற்கு முன்பு வரை யெகோவா அளித்திருந்த வெற்றிகளை நினைவுபடுத்தி பார்த்தது அவர்களுக்கு தைரியத்தை அளித்திருக்கும். அவர்கள் கைப்பற்றவிருந்த அந்த தேசமெங்கும் விக்கிரகாராதனை பிரபலமாக இருந்தது. ஆகவே, விக்கிரக வழிபாட்டைக் குறித்து மோசே கடும் எச்சரிப்பு கொடுப்பது எவ்வளவு பொருத்தமானது!

வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:

2:4-6, 9, 19, 24, 31-35; 3:1-6​—⁠இஸ்ரவேலர் யோர்தானுக்கு கிழக்கேயுள்ள சிலரை மட்டும் அடியோடு ஒழித்துக்கட்டி மற்றவர்களை ஏன் விட்டுவிட்டார்கள்? ஏசாவின் குமாரர்களிடம் எந்த வம்புக்கும் போகக்கூடாது என இஸ்ரவேலருக்கு யெகோவா கட்டளையிட்டிருந்தார். ஏன்? ஏனெனில் அவர்கள் யாக்கோபின் சகோதரனுடைய சந்ததியார். அதேபோல் மோவாபியர், அம்மோனியர் விஷயத்தில் வீணாக தலையிடவோ அவர்களுக்கு எதிராக போரிடவோ கூடாது என்றும் இஸ்ரவேலருக்கு கட்டளையிடப்பட்டிருந்தது; ஏனென்றால் அவர்கள் ஆபிரகாமின் உறவினனாகிய லோத்தின் சந்ததியார். என்றாலும், எமோரிய ராஜாக்களான சீகோனும் ஓகும் தங்கள் வசமிருந்த தேசத்தின் மீது உரிமை கொண்டாட முடியாது. காரணம், அவர்களுக்கும் இஸ்ரவேலருக்கும் இடையே எந்த உறவுமுறையும் கிடையாது. ஆகவேதான், தன்னுடைய தேசத்தின் வழியாக இஸ்ரவேலர் கடந்து செல்லாதபடி சீகோன் தடுத்தபோதும், அவர்களோடு போரிடுவதற்கு ஓக் வந்தபோதும் அந்த ராஜாக்களுடைய பட்டணங்களில் யாரையும் விட்டு வைக்காமல் பூண்டோடு அழித்துவிடும்படி இஸ்ரவேலருக்கு யெகோவா கட்டளையிட்டார்.

4:15-20, 23, 24​—⁠உருவங்களை உண்டாக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அழகிற்காக பொருட்களின் சொரூபங்களை உருவாக்கக் கூடாது என்று அர்த்தமா? இல்லை. வழிபாட்டிற்காக​—⁠‘தொழுது சேவிப்பதற்காக’ உருவங்களை உண்டாக்குவதே இங்கு தடை செய்யப்பட்டது. அழகிற்காக சிற்பங்களை செதுக்குவதையோ ஓவியங்களை வரைவதையோ பைபிள் தடை செய்வதில்லை.​—⁠1 இராஜாக்கள் 7:18, 25.

நமக்குப் பாடம்

1:2(NW),19. காதேஸ்பர்னேயா என்ற இடம் “ஓரேபிலிருந்து [சீனாய் மலையைச் சுற்றியுள்ள மலைப்பாங்கான இந்த இடத்தில் வைத்துத்தான் பத்து கட்டளைகள் கொடுக்கப்பட்டன] சேயீர் மலை வழியாக பதினொரு நாள் பயணத் தொலைவில்” இருந்தபோதிலும் வனாந்தரத்தில் இஸ்ரவேலர் சுமார் 38 வருஷம் சுற்றித் திரிந்தார்கள். யெகோவா தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனதால் எத்தகைய கஷ்டங்களை அவர்கள் அனுபவிக்க வேண்டியதாயிற்று!​—⁠எண்ணாகமம் 14:26-34.

1:16, 17. நியாயம் விசாரிப்பது சம்பந்தமாக கடவுளின் தராதரங்கள் அன்றும் இன்றும் ஒன்றுபோல்தான் இருக்கின்றன. நியாய விசாரணைக் குழுவில் சேவை செய்யும் பொறுப்புள்ளவர்கள் பாரபட்சம் காட்டக் கூடாது, அல்லது மனுஷருக்கு பயந்து நியாயத்தை புரட்டிப் போடக்கூடாது.

4:10. ‘தங்கள் கண்கள் கண்ட காரியங்களை மறவாமல்’ இருப்பது இஸ்ரவேலரின் வெற்றிக்கு மிகவும் அவசியமாக இருந்தது. வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ள புதிய உலகம் நெருங்க நெருங்க, நாமும்கூட யெகோவாவின் வார்த்தையை ஊக்கமாக படித்து அவருடைய அற்புத செயல்களை நம் கண் முன்னால் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

யெகோவாவை நேசித்து அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியுங்கள்

(உபாகமம் 5:1–26:19)

மோசே தன்னுடைய இரண்டாவது பேச்சில், சீனாய் மலையிலே நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டதைப் பற்றி சொல்கிறார். பத்து கட்டளைகளையும் திரும்பவுமாக எடுத்துரைக்கிறார். முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டிய ஏழு ஜாதியாரை குறிப்பிட்டு சொல்கிறார். வனாந்தரத்தில் கற்றுக்கொண்ட ஒரு முக்கிய பாடம் இஸ்ரவேலருக்கு நினைப்பூட்டப்படுகிறது. அதாவது, “மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்ற விஷயம் நினைப்பூட்டப்படுகிறது. அவர்கள் தங்களுடைய புதிய சூழ்நிலையில் ‘கற்பனைகளை எல்லாம் கைக்கொள்ள’ வேண்டும்.​—⁠உபாகமம் 8:3; 11:9.

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் இஸ்ரவேலர் குடியேறும்போது, அவர்களுக்கு வழிபாடு சம்பந்தப்பட்ட சட்டங்கள் மட்டுமல்ல நியாய விசாரணை, நிர்வாகம், யுத்தம், சமூக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட சட்டங்களும் தேவைப்படும். இந்தச் சட்டங்களை மோசே மீண்டும் எடுத்துரைத்து, யெகோவாவை நேசித்து அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:

8:3, 4​—⁠இஸ்ரவேலர் வனாந்தரத்தில் பயணித்தபோது எந்த அர்த்தத்தில் அவர்களுடைய உடை பழையதாய்ப் போகவும் இல்லை, கால் வீங்கவும் இல்லை? மன்னாவை உணவாக தினமும் கொடுத்து வந்ததுபோல, இதுவும் ஓர் அற்புத ஏற்பாடாக இருந்தது. எகிப்தைவிட்டு புறப்படும்போது பயன்படுத்திய அதே உடைகளையும் காலணிகளையும்தான் இஸ்ரவேலர் பயண காலம் முழுக்க பயன்படுத்தினார்கள். எப்படியெனில் பெரியவர்கள் இறந்துபோன பிறகு அவர்களது உடைகளையும் காலணிகளையும் அவர்களுடைய பிள்ளைகள் பயன்படுத்தியிருக்கலாம். இஸ்ரவேலரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதை வனாந்தரத்தில் அவர்களுடைய பயணத்திற்கு முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு காட்டுவதால் ஏற்கெனவே பயன்படுத்தி வந்த உடைகளும் காலணிகளும் போதுமானதாக இருந்திருக்க வேண்டும்.​—⁠எண்ணாகமம் 2:32; 26:51.

14:21​—⁠இஸ்ரவேலர் தாங்கள் சாப்பிடக் கூடாத இரத்தம் நீக்கப்படாத, இறந்த மிருகத்தை பரதேசிக்கோ அந்நியனுக்கோ ஏன் விற்றுவிடலாம்? பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘பரதேசி’ என்ற வார்த்தை இஸ்ரவேலர் அல்லாதவராய் இருந்து மதம் மாறிய ஒருவரை குறிக்கலாம்; அல்லது தேசத்தின் அடிப்படை சட்டங்களுக்கு இசைய வாழ்ந்து அதே சமயத்தில் யெகோவாவை வணங்காத ஒருவரை குறிக்கலாம். ஆகவே, மதம் மாறாத ஒரு அந்நியனோ, பரதேசியோ நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லாததால் இரத்தம் நீக்கப்படாத இறந்த மிருகங்களை அவர்கள் பல காரியங்களுக்காக பயன்படுத்தக் கூடும். அப்படிப்பட்ட மிருகங்களை அவர்களிடம் கொடுப்பதற்கோ விற்பதற்கோ இஸ்ரவேலர் அனுமதிக்கப்பட்டார்கள். மறுபட்சத்தில், மதம் மாறிய ஒருவர் நியாயப்பிரமாணச் சட்டத்திற்கு கட்டுப்பட்டிருக்கிறார். லேவியராகமம் 17:10-⁠ல் குறிப்பிட்டுள்ளபடி, அவர் மிருகத்தின் இரத்தத்தைப் புசிக்கக் கூடாது.

24:6​—⁠‘திரிகையின் அடிக்கல்லையோ மேற்கல்லையோ அடகு வாங்குவது’ ஏன் “ஜீவனை” அடகு வாங்குவது போல் இருந்தது? திரிகையின் அடிக்கல்லும் அதின் மேற்கல்லும் ஒருவரின் ‘ஜீவனுக்கு,’ அதாவது பிழைப்புக்கு அடையாளமாக இருந்தன. இவற்றில் ஏதாவதொன்றை அடகு வாங்குவது ஒரு குடும்பத்திலுள்ள அனைவருக்கும் உணவளிக்கும் ஒன்றை அபகரிப்பதாக இருக்கும்.

25:9​—⁠சகோதரனுடைய மனைவியை மணம் செய்துகொள்ள மறுப்பவனுடைய பாதரட்சையைக் கழற்றி அவன் முகத்திலே துப்புவதன் அர்த்தம் என்ன? ‘மீட்கும் உரிமை சம்பந்தமான பூர்வகால வழக்கத்தின்படி ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி மற்றவனுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது.’ (ரூத் 4:7, NW) சகோதரனுடைய மனைவியை மணம் செய்துகொள்ள மறுத்தவனுடைய பாதரட்சையைக் கழற்றியதானது, அவன் தன்னுடைய ஸ்தானத்தையும் இறந்துபோன தன் சகோதரனுக்கு வாரிசு உருவாக்கிக் கொடுக்கும் உரிமையையும் ஒதுக்கித் தள்ளியதை உறுதிப்படுத்தியது. அது இழிவானதாக கருதப்பட்டது. (உபாகமம் 25:10) முகத்தில் துப்புவது அவனுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயலாகும்.​—⁠எண்ணாகமம் 12:14.

நமக்குப் பாடம்:

6:6-9. நியாயப்பிரமாண சட்டம் சம்பந்தமாக இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட கட்டளையைப் போல, நாமும் கடவுளுடைய கற்பனைகளை மனப்பாடமாக அறிந்திருக்க வேண்டும், எல்லா சமயத்திலும் அவற்றை நினைவுகூர வேண்டும், பிள்ளைகளின் மனதில் அவற்றை பதிய வைக்க வேண்டும். அவற்றை நாம் ‘கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்ள’ வேண்டும்; அதாவது நம் கைகளால் அடையாளம் காட்டப்படும் செயல்கள் மூலம் யெகோவாவுக்கு கீழ்ப்படிதலைக் காட்ட வேண்டும். ‘கண்களுக்கு நடுவாக இருக்கும் நெற்றிப்பட்டம்’ (NW) போல நம் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியும்படி இருக்க வேண்டும்.

6:16. உண்மையற்ற இஸ்ரவேலர் மாசாவில் தண்ணீருக்காக முறுமுறுத்து யெகோவாவை பரீட்சை பார்த்தது போல நாம் ஒருபோதும் செய்யாதிருப்போமாக.​—⁠யாத்திராகமம் 17:1-7.

8:11-18. பொருளாசை யெகோவாவை மறந்துவிடச் செய்யும்.

9:4-6. சுயநீதியை நாம் தவிர்க்க வேண்டும்.

13:6. யெகோவாவை வணங்குவதிலிருந்து நம்மை எவரும் திசைத்திருப்பிவிட அனுமதிக்கக் கூடாது.

14:1. ஒருவர் தன்னையே கீறிக்கொள்வது, அதாவது வெட்டிக்கொள்வது சரீரத்தை அவமதிப்பதைக் காட்டுகிறது. அவ்வாறு செய்வது ஒருவேளை பொய் வணக்கத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும். (1 இராஜாக்கள் 18:25-28) நமக்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கை இருப்பதால், மரித்தவர்களுக்காக இவ்வாறு மிதமீறிய விதத்தில் துக்கத்தை வெளிக்காட்டுவது பொருத்தமற்றது.

20:5-7; 24:5. முக்கியமான வேலை இருந்தாலும் பிரத்தியேக சூழ்நிலைகளில் இருப்பவர்களுக்கு சலுகை அளிக்க வேண்டும்.

22:23-27. ஒரு பெண் கற்பழிக்கப்படும் சூழ்நிலையில் இருக்கும்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்கு மிகச் சிறந்த வழி கூக்குரலிடுவதாகும்.

‘ஜீவனைத் தெரிந்துகொள்ளுங்கள்’

(உபாகமம் 27:1–34:12)

மோசே தன்னுடைய மூன்றாவது பேச்சில், இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்த பிறகு நியாயப்பிரமாணத்தை பெரிய கற்களில் எழுத வேண்டும் என்பதையும் கீழ்ப்படியாதவர்களுக்கு சாபத்தையும் கீழ்ப்படிகிறவர்களுக்கு ஆசீர்வாதங்களையும் உரைக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறார். யெகோவாவுக்கும் இஸ்ரவேலருக்கும் இடையிலான உடன்படிக்கை புதுப்பிக்கப்படுவதோடு நான்காம் பேச்சு ஆரம்பமாகிறது. கீழ்ப்படியாமையைக் குறித்து மோசே மீண்டும் எச்சரிக்கிறார், அதோடு ‘ஜீவனைத் தெரிந்துகொள்ளும் படியும்’ ஜனங்களை உற்சாகப்படுத்துகிறார்.​—⁠உபாகமம் 30:19.

மோசே இந்த நான்கு பேச்சுகளை கொடுப்பதோடு, தலைமை ஸ்தானம் மாறப்போவதைக் குறித்து சொல்கிறார், ஒரு அருமையான பாடலையும் இஸ்ரவேலருக்கு கற்றுக்கொடுக்கிறார். அப்பாடல் யெகோவாவுக்கு துதி சேர்ப்பதோடு, துரோகத்தினால் வரும் துயரங்களைக் குறித்தும் எச்சரிக்கிறது. எல்லா கோத்திரத்தாரையும் ஆசீர்வதித்த பிறகு மோசே 120-⁠ம் வயதில் மரித்து அடக்கம் செய்யப்படுகிறார். அவருக்காக 30 நாட்கள் துக்கம் கொண்டாடப்படுகிறது; இது உபாகமம் புத்தகத்திலுள்ள சம்பவங்களின் காலப்பகுதியில் கிட்டத்தட்ட பாதியாகும்.

வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:

32:13, 14​—⁠இஸ்ரவேலர் எந்தக் கொழுப்பையும் சாப்பிடக் கூடாதென தடைசெய்யப்பட்டிருக்க, ‘ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பை’ அவர்கள் சாப்பிடுவது எதை அர்த்தப்படுத்துகிறது? கொழுப்பு என்ற வார்த்தை இங்கு அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது, அதோடு மந்தையில் மிகச் சிறந்ததை அது குறிக்கிறது. அதே வசனம், ‘கொழுமையான கோதுமையையும், இரத்தம் போன்ற திராட்சரசத்தையும்’ பற்றி சொல்வதுதானே கொழுப்பு என்ற வார்த்தையும் அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என காட்டுகிறது.

33:1-29​—⁠இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கையில் சிமியோனின் பெயரை மட்டும் மோசே ஏன் குறிப்பிடவில்லை? ஏனென்றால் சிமியோனும் லேவியும் ‘மூர்க்கத்தனமான’ காரியங்களை செய்திருந்தார்கள், அவர்களுடைய கோபம் ‘உக்கிரமாக’ இருந்தது. (ஆதியாகமம் 34:13-31; 49:5-7) மற்ற கோத்திரத்தாருக்கு கிடைத்த அதேயளவு சுதந்திர வீதம் இவர்களுக்கு கிடைக்கவில்லை. லேவிக்கு 48 பட்டணங்கள் கிடைத்தன; சிமியோனுக்கோ யூதாவின் பிராந்தியத்தில் சுதந்திர வீதம் கொடுக்கப்பட்டது. (யோசுவா 19:9; 21:41, 42) ஆகவேதான், சிமியோனின் பெயரைக் குறிப்பிட்டு மோசே ஆசீர்வதிக்கவில்லை. இருந்தாலும், மொத்தத்தில் இஸ்ரவேலரை ஆசீர்வதிக்கையில் சிமியோனும் அதில் உட்பட்டிருந்தார்.

நமக்குப் பாடம்:

31:12. கூட்டங்களின்போது பிள்ளைகள் பெரியவர்களுடன் உட்கார்ந்து, கவனித்து கேட்டு கற்றுக்கொள்ள முயல வேண்டும்.

32:4. யெகோவாவின் செயல்கள் எல்லாமே பரிபூரணமானவை; தமது நீதி, ஞானம், அன்பு, வல்லமை ஆகிய பண்புகளை பரிபூரண சமநிலையோடு வெளிப்படுத்துகிறார்.

நமக்கு மிகவும் மதிப்புள்ள புத்தகம்

உபாகம புத்தகம் யெகோவாவை ‘ஒரே யெகோவா’ என குறிப்பிடுகிறது. (உபாகமம் 6:4) கடவுளோடு பிரத்தியேக உறவு வைத்திருந்த ஒரு ஜனத்தைப் பற்றி இப்புத்தகம் சொல்கிறது. விக்கிரகாராதனைக்கு எதிராக இப்புத்தகம் எச்சரிக்கிறது, மெய்க் கடவுளுக்கு தனிப்பட்ட பக்தி காட்டுவதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

நிச்சயமாகவே, உபாகம புத்தகம் நமக்கு மிகவும் மதிப்புள்ள ஒரு புத்தகம்! இன்று நாம் நியாயப்பிரமாண சட்டத்தின் கீழ் இல்லாவிட்டாலும், இதிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்; ‘யெகோவாவிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழுப் பலத்தோடும் அன்புகூருவதற்கு’ இது நமக்கு உதவும்.​—⁠உபாகமம் 6:5.

[அடிக்குறிப்பு]

a மோசேயின் மரணத்தைப் பற்றிய விவரங்கள் அடங்கிய கடைசி அதிகாரத்தை யோசுவா அல்லது பிரதான ஆசாரியனாகிய எலெயாசார் எழுதியிருக்கலாம்.

[பக்கம் 24-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

சேயீர்

காதேஸ் பர்னேயா

சீனாய் மலை (ஓரேப்)

சிவந்த சமுத்திரம்

[படத்திற்கான நன்றி]

Based on maps copyrighted by Pictorial Archive (Near Eastern History) Est. and Survey of Israel

[பக்கம் 24-ன் படம்]

மோசே கொடுத்த பேச்சுகளே உபாகம புத்தகத்தின் பெரும் பகுதியாகும்

[பக்கம் 26-ன் படம்]

யெகோவா மன்னாவை அளித்தது என்ன பாடத்தைக் கற்பிக்கிறது?

[பக்கம் 26-ன் படம்]

திரிகையின் அடிக்கல்லையோ மேற்கல்லையோ அடகு வாங்குவது ‘ஜீவனை’ அடகு வாங்குவது போல் இருந்தது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்