மெக்சிகோவின் சுதேசிகள் நற்செய்தியை கேட்கின்றனர்
அது நவம்பர் 10, 2002. மெக்சிகோ நாட்டின் சுதேசிகளாகிய மிச்சி தொகுதியினர், கெட்சால்டெடிப்பெகிலுள்ள சான் மிக்யுலில் கூடிவந்தனர். ஆக்ஸகா நகரின் கிழக்கிலுள்ள அழகிய பட்டணம் இது. யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாட்டிற்கு இந்த தொகுதியினர் அங்கு ஆஜராகியிருந்தனர். அன்றைய காலை நிகழ்ச்சிநிரலின் சிறப்பம்சமாக பைபிள் நாடகம் இருந்தது.
பைபிள் நாடகத்தின் முதல் வார்த்தைகளை ஒலிப்பெருக்கியில் கேட்டவுடன், கூடிவந்திருந்தோர் திகைப்படைந்தனர். ஆரவார கரவொலி எழுப்பி, அநேகர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இந்த திகைப்புக்கு காரணம் அந்த நாடகம் மிச்சி மொழியில் அளிக்கப்பட்டதுதான்! நாடகம் முடிந்தவுடன், எதிர்பாராமல் கிடைத்த ஆசீர்வாதத்திற்கு அநேகர் ஆழ்ந்த போற்றுதலை வெளிப்படுத்தினர். “முதல்முறையா, என்னால நாடகத்தை புரிஞ்சிக்க முடிஞ்சுது. அது என் மனசை ஆழமா தொட்டது” என ஒரு சகோதரி சொன்னார். “என்னுடைய சொந்த மொழியில நாடகத்த கேட்க யெகோவா எனக்கு அனுக்கிரகம் செய்திருக்கார். இனி நான் செத்தாலும் மனநிறைவோடு சாவேன்” என்று மற்றொரு சகோதரி நெஞ்சுருகினார்.
மெக்சிகோவில் வாழும் சுதேசிகளுக்கு ராஜ்ய செய்தி எட்ட வேண்டும் என்பதற்காக அந்நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் எடுத்த ஊக்கந்தளரா முயற்சியின் பலனே அன்று அரங்கேறிய அந்த நாடகம்.—மத்தேயு 24:14; 28:19, 20.
யெகோவா ஜெபங்களுக்கு செவிகொடுத்தார்
மெக்சிகோவில் 60,00,000-க்கும் மேற்பட்ட சுதேசிகள் இருக்கின்றனர்—ஒரு தனி தேசம் என்று சொல்லுமளவுக்கு பெரிய ஜனத்தொகைதான்! அதுமட்டுமா, 62 பாஷைகளாலும் பல கலாச்சாரங்களாலும் ஆன ஒரு தேசம் அது. அவற்றில் 15 பாஷைகளை எடுத்துக்கொண்டால், ஒவ்வொன்றையும் 1,00,000 பேர் பேசுகிறார்கள். ஆனால், 10,00,000-க்கும் மேற்பட்ட சுதேசிகளுக்கு மெக்சிகோவின் அரசு மொழியான ஸ்பானிய மொழியை பேசத் தெரியாது. ஸ்பானிய மொழி பேசத் தெரிந்த அநேகரால், தங்களுடைய சொந்த மொழியில் மிக வேகமாக பைபிள் சத்தியத்தை கற்றுக்கொள்ள முடிகிறது. (அப்போஸ்தலர் 2:6; 22:2) சிலர், பைபிளை படித்து வருடக்கணக்காக கூட்டங்களுக்கு தவறாமல் வந்திருக்கிறபோதிலும், சத்தியத்தைப் பற்றிய புரிந்துகொள்ளுதல் அவர்களுக்கு அவ்வளவாக இல்லை. ஆகையால் தங்கள் தாய் மொழியிலேயே சத்தியத்தின் செய்தி கிடைக்க வேண்டுமென கொஞ்ச நாட்களாகவே அவர்கள் ஜெபம் செய்து வந்திருந்தனர்.
இந்த சவாலை சந்திப்பதற்கு, மெக்சிகோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் 1999 முதற்கொண்டு சுதேசி மொழிகளில் கூட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தன. மொழிபெயர்ப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டன. 2000-ம் ஆண்டிற்குள், மாவட்ட மாநாட்டின் நாடகம் மாயா மொழியிலும் பின்னர் மற்ற பல மொழிகளிலும் அரங்கேற்றப்பட்டது.
அடுத்தபடியாக, யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் படிப்பு பிரசுரங்களை மொழிபெயர்க்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. முதலாவதாக, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! என்ற சிற்றேடு வாவெ, மாயா, மாசாடீகோ, டோடோனாக், செல்டால் மற்றும் சோட்சில் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. பிற்பாடு, இன்னுமநேக பிரசுரங்கள் வெளியிடப்பட்டன; மாயா மொழியில் நம் ராஜ்ய ஊழியம் மாதாமாதம் பிரசுரிக்கப்பட்டது. சில பிரசுரங்கள் ஆடியோ கேசட்டுகளிலும் பதிவுசெய்யப்பட்டன. சுதேசிகளுக்கு தங்கள் சொந்த மொழிகளில் எழுத படிக்க கற்றுக்கொடுப்பதற்காக வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் சிரத்தையுடன் முயலுங்கள் என்ற ஆங்கில சிற்றேடு உள்ளூர் தேவைகளுக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது. தற்போது 15 சுதேசி மொழிகளில் பைபிள் பிரசுரங்கள் தயாரிக்கப்படுகின்றன, இன்னும் பல பிரசுரங்கள் வெளிவரவிருக்கின்றன.
“முடிந்த எல்லா முயற்சிகளையும்” எடுத்தல்
மொழிபெயர்ப்பு வேலை சுலபமாக இருக்கவில்லை. ஒரு காரணம், மெக்சிகோவின் சுதேசி மொழிகளில் உலகப்பிரகாரமான இலக்கியங்கள் குறைவாகவே இருப்பதுதான். அநேக சந்தர்ப்பங்களில் அகராதிகளை கண்டுபிடிப்பதே பெரும் பாடாகிவிடுகிறது. அதுமட்டுமல்ல, சில மொழிகளில் கிளை மொழிகள்கூட உள்ளன. உதாரணத்திற்கு, சாபோடெக் மொழியில் மட்டுமே குறைந்தபட்சம் ஐந்து கிளை மொழிகள் உள்ளன. இந்தக் கிளை மொழிகளை பேசுவோர் வெவ்வேறு இடங்களில் வசிக்கிறார்கள், ஒரு கிளை மொழியினர் பேசுவது மற்றொரு கிளை மொழியினருக்கு புரிந்துகொள்ள முடிவதில்லை, அந்தளவுக்கு அவை ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன.
கூடுதலாக, ஒரு மொழிக்கென்று திட்டவட்டமான நியதிகள் இல்லாதபோது, மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுக்கென்று குறிப்பிட்ட சில நியதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இது அதிக ஆராய்ச்சியையும் கலந்தாலோசிப்பையும் தேவைப்படுத்தும். அதனால்தான் வாவெ மொழிபெயர்ப்புக் குழுவிலிருக்கும் எலிடா என்பவள் உணர்ந்தது போலவே அநேகர் ஆரம்பத்தில் உணர்ந்திருக்கின்றனர்; அவள் சொன்னதாவது: “மெக்சிகோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகத்தின் மொழிபெயர்ப்பு வேலைக்கு என்னை அழைத்தபோது, சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் பயம் ஒரு பக்கம் இருந்தது.”
மொழிபெயர்ப்பாளர்கள் கம்ப்யூட்டரை திறம்பட உபயோகிப்பதற்கும், அட்டவணையிடுவதற்கும், மொழிபெயர்ப்பு நுணுக்கங்களை பயன்படுத்துவதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும். சொல்லப்போனால், இது அவர்களுக்கு சவாலான வேலையாகத்தான் இருந்திருக்கிறது. இதைப் பற்றி அவர்கள் எப்படி உணருகிறார்கள்? மாயா மொழிபெயர்ப்புக் குழுவிலுள்ள க்ளோரியா பதிலளிக்கையில்: “என்னோட தாய் மொழியான மாயா மொழியில, பைபிள் பிரசுரங்களை மொழிபெயர்க்கும்போது கிடைக்கிற சந்தோஷத்த விவரிக்க வார்த்தைகளே இல்ல.” மொழிபெயர்ப்பு இலாகா கண்காணி மொழிபெயர்ப்பாளர்களை கூர்ந்து கவனிக்கையில்: “தங்களுடைய சொந்த மொழிகளில் பைபிள் பிரசுரங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவர்களுக்கு அவ்வளவு பலமாக இருக்கிறது, அதனால் இந்த சவால்மிக்க வேலையை செய்ய தங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் அவர்கள் எடுக்கிறார்கள்” என்று சொல்கிறார். அவர்களுடைய முயற்சிக்கு ஏதாவது பலன் கிடைத்திருக்கிறதா?
“யெகோவாவே, உமக்கு நன்றி!”
சுதேசிகளுக்காக செய்யப்படும் வேலையை யெகோவா ஆசீர்வதித்திருப்பது தெளிவாக தெரிகிறது. ஆம், கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் அசெம்பிளிகளுக்கும் ஆஜராவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. உதாரணத்திற்கு, 2001-ல் இயேசு கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பை அனுசரிக்க மிச்சி மொழி பேசும் யெகோவாவின் சாட்சிகள் 223 பேர் கூடிவந்திருந்தனர். ஆனால், ஆஜரானோரின் மொத்த எண்ணிக்கை 1,674—சாட்சிகளின் எண்ணிக்கையைவிட ஏழரை மடங்கு அதிகம்!
சத்தியத்தை ஏற்றுக்கொண்ட சிலரால் இப்பொழுது அதை ஆரம்பத்திலிருந்து நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. மாயா மொழியில் கூட்டங்கள் நடத்தப்படுவதற்கு முன்னர் தனக்கு இருந்த மனநிலையை மெர்னா நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்: “மூன்று மாத கால பைபிள் படிப்புக்கு பிறகு நான் முழுக்காட்டப்பட்டேன். முழுக்காட்டப்பட வேண்டுமென்பது எனக்குத் தெரியும், ஆனால் பைபிள் சத்தியங்களைப் பற்றி எந்தளவுக்கு தெரிந்திருக்க வேண்டுமோ அந்தளவுக்கு எனக்கு தெரியாதிருந்ததை நான் ஒத்துக்கொள்கிறேன். காரணம், என்னுடைய தாய் மொழி மாயா, ஆகவே ஸ்பானிய மொழி எனக்கு அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. அதனால் சத்தியத்தின் உண்மையான கருத்தை புரிந்துகொள்ள எனக்கு கொஞ்ச காலம் எடுத்தது.” இப்பொழுது, அவரும் அவருடைய கணவரும் மாயா மொழிபெயர்ப்புக் குழுவில் சந்தோஷமாக சேவை செய்து வருகின்றனர்.
தங்களுடைய சொந்த மொழிகளில் பிரசுரங்களை பெற்றுக்கொள்வதில், சபைகளில் உள்ள அனைவருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி. கூட்டங்களுக்கு வர ஆரம்பித்திருந்த ஒரு பெண்மணி, சோட்சில் மொழியில் புதிதாக வெளிவந்த பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! என்ற சிற்றேட்டை பெற்றவுடன், அதை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு “யெகோவாவே, உமக்கு நன்றி!” என்று உணர்ச்சி பொங்க கூறினார். பைபிளை படிக்கும் அநேகர் முழுக்காட்டுதலை நோக்கி அசுர வேகத்தில் முன்னேறுகின்றனர்; செயலற்ற பிரஸ்தாபிகள் மீண்டும் செயல்படுகின்றனர்; சபைகளில் அநேக சகோதரர்கள் பொறுப்புகளை ஏற்க தாங்கள் தகுதியுள்ளவர்களாக ஆகி வருவதை உணர்கின்றனர் என்றெல்லாம் அறிக்கைகள் காட்டுகின்றன. வெளி ஊழியத்தில் சிலர் அதிக ஆர்வத்துடன் தங்கள் சொந்த மொழியில் பத்திரிகைகளை ஏற்றுக்கொண்டு அதை படிக்கின்றனர்.
ஒருசமயம், பைபிள் படிப்பு நடத்துவதற்காக ஒரு சகோதரி சென்றிருந்தபோது, அந்த மாணாக்கர் வீட்டில் இல்லை. மாணாக்கரின் கணவர் கதவருகே வந்தபோது, சகோதரி அவரிடம் ஒரு சிற்றேட்டை அளித்தார். அவரோ “இதெல்லாம் எனக்கு வேண்டாம்” என்று பதிலளித்தார். இந்த சிற்றேடு உங்கள் மொழியில் உள்ளது என்று டோடோனாக் மொழியில் சகோதரி சொன்னவுடனே, அவர் ஒரு பெஞ்சை இழுத்துப்போட்டு உட்கார்ந்துவிட்டார். அந்த சிற்றேட்டிலிருந்து சகோதரி வாசித்துக் காட்டுகையில், அவர், “ஆமாமா, நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான்” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இப்பொழுது அவர் கூட்டங்களுக்கும் செல்கிறார்.
யுகாட்டன் நாட்டிலுள்ள ஒரு யெகோவாவின் சாட்சியின் கணவர் சத்தியத்தை கடுமையாக எதிர்த்து வந்தார். கூட்டம் முடிந்து அந்த சகோதரி வீட்டிற்கு வரும்போது சில சமயங்களில் அடிக்கவும் செய்தார். மாயா மொழியில் கூட்டங்கள் நடைபெற ஆரம்பித்தவுடன், தன் கணவரை கூட்டத்திற்கு அழைக்க சகோதரி தீர்மானித்தார். கூட்டத்திற்கு வந்த அவர் அதை மகிழ்ந்து அனுபவித்தார். இப்போது ஒழுங்காக கூட்டங்களுக்கு வருகிறார், பைபிளை படிக்கிறார், அதுமட்டுமல்ல, தன் மனைவியை அடிப்பதுகூட இல்லை.
தான் இதுவரை ஜெபம் செய்ததே கிடையாது என்று டோடோனாக் மொழி பேசும் ஒருவர் இரண்டு யெகோவாவின் சாட்சிகளிடம் சொன்னார். ஏனென்றால் கடவுள் ஸ்பானிய மொழி ஜெபங்களுக்கு மட்டும்தான் செவிகொடுக்கிறார் என்று கத்தோலிக்க பாதிரி அவரிடம் சொல்லியிருந்தாராம். இன்னும் சொல்லப்போனால், டோடோனாக் நாட்டவருக்காக ஜெபம் செய்ய தனக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றும் அந்தப் பாதிரி சொல்லியிருந்தாராம். எல்லா மொழி ஜெபங்களையும் கடவுள் கேட்கிறார் என்பதை சாட்சிகள் விளக்கி, டோடோனாக் மொழி சிற்றேட்டை அவருக்கு அளித்தபோது, அதை அவர் மிகுந்த சந்தோஷத்தோடு பெற்றுக்கொண்டார்.—2 நாளாகமம் 6:32, 33; சங்கீதம் 65:2.
“குவால்ட்சென் டக்கடோவா”
இந்த வளர்ச்சிகளைப் பார்த்து குதூகலித்துப்போன அநேக ராஜ்ய பிரஸ்தாபிகள், ஏதாவதொரு சுதேசி மொழியை கற்க அல்லது அம்மொழியைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள பெரும் முயற்சி எடுக்கிறார்கள். இதைத்தான் ஒரு வட்டாரக் கண்காணி செய்து வருகிறார். இவர் பியூப்லா நகரிலுள்ள ஐந்து சபைகளில்—நாவாட்டல் மொழி சபைகளில்—சேவை செய்கிறார். அவர் விவரிக்கையில்: “பொதுவாக கூட்டங்களின்போது தூங்கிவிடுகிற பிள்ளைகளும்கூட, நாவாட்டல் மொழியில் நான் பேச்சுகளைக் கொடுக்கும்போது உன்னிப்பாக கவனிக்கிறார்கள். ஒரு கூட்டம் முடிந்தவுடன், நாலு வயசு குட்டிப்பையன் என்னிடம் ஓடிவந்து, ‘குவால்ட்சென் டக்கடோவா’ (நீங்க நல்லா பேசுறீங்க) என்று சொன்னான். அதை கேட்டவுடன், என்னுடைய முயற்சி வீண்போகல என்ற உணர்வு ஏற்பட்டது.”
ஆம், சுதேசி மொழி பேசும் பிராந்தியம் நிஜமாகவே ‘அறுப்புக்கு விளைந்திருக்கிறது,’ அந்த அறுப்பு வேலையில் பங்கு கொள்கிற அனைவருக்குமே அதிக உற்சாகம் பிறக்கிறது. (யோவான் 4:35) மொழிபெயர்ப்புக் குழுக்களை ஒழுங்கமைக்கும் வேலை பார்த்த ரோபர்டோ பின்வரும் வார்த்தைகளில் சுருக்கமாக கூறுகிறார்: “சத்தியத்தை தங்கள் சொந்த மொழிகளில் கேட்டு அதை புரிந்துகொண்ட சகோதர சகோதரிகளின் முகங்களில் ஆனந்தக் கண்ணீர் வடிந்ததை பார்த்தேன், அந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. அதை நினைக்கும்போது தொண்டை அடைக்கிறது.” நல்மனமுள்ள இத்தகைய மக்கள் ராஜ்யத்திற்காக நிலைநிற்கை எடுக்க உதவுவது யெகோவாவின் இருதயத்தையும் மகிழ்விக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.—நீதிமொழிகள் 27:11.
[பக்கம் 10, 11-ன் பெட்டி]
சில மொழிபெயர்ப்பாளர்களை சந்தியுங்கள்
● “எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் என் பெற்றோர்தான் எனக்கு சத்தியத்தை சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால், என்னுடைய 11 வயதில் அப்பா சபையை விட்டுப் போய்விட்டார், வருத்தமாக இருந்தது. இரண்டு வருஷத்துக்கு பிறகு, அம்மாவும் எங்களை கைவிட்டுவிட்டார். ஐந்து பிள்ளைகளில் நான்தான் மூத்தவள்; அதனால், அம்மாவுடைய எல்லா பொறுப்புகளும் என் தலைமேல் விழுந்தது. அந்த சமயத்தில் நான் ஸ்கூலில்தான் படித்துக் கொண்டிருந்தேன்.
“சபையிலுள்ள சகோதர சகோதரிகளின் அன்பான ஆதரவு எங்களுக்கு கிடைத்ததென்றாலும், வாழ்க்கையை ஓட்டுவது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ‘எனக்கு ஏன் இப்படி நடக்குது? நான் சின்ன பொண்ணுதானே!’ என்று பல சமயம் யோசித்திருக்கிறேன். யெகோவா தேவனுடைய உதவியால் மட்டும்தான் என்னால் சமாளிக்க முடிந்தது. உயர்நிலை பள்ளிப் படிப்பு முடித்தவுடன், நான் ஒரு முழு நேர ஊழியராக ஆனேன். அது எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது. நாவாட்டல் மொழிபெயர்ப்புக் குழு உருவானவுடன், அதில் வேலை செய்யும்படி என்னையும் அழைத்தார்கள்.
“அப்பா இப்போது திரும்ப சபைக்கு வந்துவிட்டார். தம்பி தங்கைகளும் யெகோவாவை சேவித்து வருகிறார்கள். யெகோவாவுக்கு உண்மையுடன் நிலைத்து நின்றது வீண்போகவில்லை. என்னுடைய குடும்பத்தை அவர் அளவுக்கதிகமாக ஆசீர்வதித்திருக்கிறார்.”—அலிஸ்யா.
● “உயிர் எப்படி தோன்றியது என்ற தலைப்பில், பள்ளியில் என்னோடு படிக்கும் ஒரு யெகோவாவின் சாட்சி பேச்சு கொடுத்தாள். அந்த வகுப்பை நான் மிஸ் பண்ணிவிட்டதால், எக்ஸாமில் என்ன செய்வேனோ என்று கவலைப்பட்டேன்; அதனால் அந்த தலைப்பை பற்றி எனக்கு விளக்குமாறு அவளிடம் கேட்டேன். ஜனங்கள் ஏன் மரிக்கிறார்கள் என்பதை குறித்து நான் அடிக்கடி யோசித்ததுண்டு. அவள் எனக்கு படைப்பு புத்தகத்தைa தந்து பைபிள் படிப்பையும் நடத்த முன்வந்தாள், நான் ஏற்றுக்கொண்டேன். படைப்பாளரின் நோக்கமும் அன்பும் என்னை நெகிழ வைத்தன.
“பள்ளிப் படிப்பை முடித்தவுடன், ஸ்பானிய மொழியையும் சோட்சில் மொழியையும் கற்றுக்கொடுக்கிற டீச்சர் வேலை கிடைத்தது. ஆனால் அதற்கு நீண்ட தூரம் இடம் மாறி செல்ல வேண்டியிருந்தது; வார இறுதி நாட்களில் எக்ஸ்ட்ரா கிளாஸ் எடுக்க வேண்டியிருந்தது; கூட்டங்களைக்கூட தவற விட வேண்டியிருந்தது. அதற்கு பதிலாக கொத்தனாராக வேலை செய்தேன். யெகோவாவின் சாட்சியாக இல்லாத அப்பா என் தீர்மானத்தை அறவே வெறுத்தார். பின்னர், ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்து கொண்டிருந்தபோது, சோட்சில் மொழியில் பைபிள் பிரசுரங்களை மொழிபெயர்க்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் சேர்ந்து சேவை செய்ய தூண்டப்பட்டேன்.
“சகோதர சகோதரிகள் தங்களுடைய சொந்த மொழியில் பைபிள் பிரசுரங்களை வைத்திருக்கும்போது தாங்கள் நேசிக்கப்படுவதையும் மதிக்கப்படுவதையும் உணருகிறார்கள். இதைப் பார்ப்பது எனக்கு ரொம்பவே மனநிறைவாக இருக்கிறது. இந்த வேலையை செய்வதால் என்னை ஒரு பெரிய பாக்கியசாலி என்றே கருதுகிறேன்.”—யும்பர்டோ.
● “எனக்கு ஆறு வயதாக இருக்கையில், அம்மா எங்களை விட்டுவிட்டு போய் விட்டார். என்னுடைய டீனேஜ் வயதில், அப்பா யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிக்க ஆரம்பித்தார். ஒரு நாள் சகோதரி ஒருவர் ‘உனக்கு பைபிள் படிப்பு நடத்தட்டுமா’ என்று என்னிடம் கேட்டார்; அந்தப் படிப்பில் இளைஞர்களுக்குரிய ஆலோசனைகளும் உண்டு என்று சொன்னார். தாயில்லாத இளம் பெண்ணான எனக்கு என்ன தேவையோ அது அப்படியே கிடைத்தது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. 15 வயதில் முழுக்காட்டப்பட்டேன்.
“1999-ல் என் அப்பாவுடைய நிலத்தை அடைவதற்காக சில துஷ்டர்கள் அவரை கொன்று போட்டார்கள். நிலைகுலைந்து போய் விட்டேன். கடுமையான மனச்சோர்வில் மூழ்கிய நான், இனிமேலும் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்தேன். ஆனாலும் பலத்திற்காக யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருந்தேன். வட்டாரக் கண்காணியும் அவருடைய மனைவியும் என்னை ரொம்பவும் உற்சாகப்படுத்தினார்கள். சீக்கிரத்திலேயே ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன்.
“டோடோனாக் மொழியில் வெறும் 20 நிமிட பேச்சை கேட்பதற்காக, சிலர் ஆறு மணி நேரம் நடந்து வந்ததை ஒரு சமயம் நான் பார்த்தேன். அதுவும், மற்ற பேச்சுகளெல்லாம் அவர்களுக்கு புரியாத ஸ்பானிய மொழியில்தான் இருந்தது. அதனால், பைபிள் பிரசுரங்களை டோடோனாக் மொழியில் மொழிபெயர்க்க என்னை அழைத்தபோது சந்தோஷத்தில் அப்படியே திக்குமுக்காடிப் போனேன்.
“யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் சேவை செய்வதுதான் என் கனவு என்று அப்பாவிடம் நான் அடிக்கடி சொன்னதுண்டு. அதற்கு அவர், ‘உன்ன மாதிரி கல்யாணமாகாத சின்ன பொண்ணுங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கறது ரொம்ப கஷ்டம்’ என்பார். அவர் உயிர்த்தெழுந்து வரும்போது, என் கனவு நிஜமானதையும், தாய் மொழியிலேயே நான் பைபிள் பிரசுரங்களை மொழிபெயர்த்ததையும் பற்றி தெரிந்துகொள்ளும்போது அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார்!”—எடித்.
[அடிக்குறிப்பு]
a உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? புத்தகம் 1985-ல் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 9-ன் படம்]
மொழிபெயர்க்க கடினமாக உள்ள ஒரு வார்த்தையை சோட்சில் மொழிபெயர்ப்புக் குழுவின் அங்கத்தினர்கள் கலந்தாராய்கின்றனர்