கர்த்தருடைய இராப்போஜனம் ஆசரிப்பது எப்படி?
கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்பைக் குறித்து விளக்கும்போது, கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதுகிறார்: “நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அதைப் பிட்டு; நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம் பண்ணின பின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து; இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும் போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.”—1 கொரிந்தியர் 11:23-26.
இயேசுவை கழுவேற்றும்படி ரோமர்களை வற்புறுத்திய யூத மதத் தலைவர்களிடம் யூதாஸ் காரியோத்து அவரை ‘காட்டிக் கொடுக்கவிருந்த அன்று இராத்திரியில்’ அவர் இராப்போஜன ஆசரிப்பை ஆரம்பித்து வைத்ததாக பவுல் சொல்கிறார். அந்தப் போஜனம் பொ.ச. 33, மார்ச் 31-ம் தேதி வியாழக்கிழமை இரவில் நடைபெற்றது. ஏப்ரல் 1-ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகலில் வாதனையின் கழுமரத்தில் இயேசு உயிர் நீத்தார். யூத நாட்காட்டியின்படி, ஒரு நாளானது மாலையில் தொடங்கி அடுத்த நாள் மாலையில் முடிவடைந்தது, ஆகவே கர்த்தருடைய இராப்போஜனமும் இயேசு கிறிஸ்துவின் மரணமும் அதே நாளில் நடந்தது, அதாவது பொ.ச. 33, நிசான் 14-ல் நடந்தது.
அப்பத்தையும் திராட்சரசத்தையும் புசிப்பவர்கள் இயேசுவை நினைவுகூரும் வண்ணம் ‘இதை தொடர்ந்து செய்ய’ (NW) வேண்டியிருந்தது. மற்றொரு மொழிபெயர்ப்பின்படி, இயேசு இவ்வாறு கூறினார்: “என் நினைவாக இதைச் செய்யுங்கள்.” (1 கொரிந்தியர் 11:24, த ஜெருசலேம் பைபிள்) கர்த்தருடைய இராப்போஜனம் கிறிஸ்துவின் நினைவு ஆசரிப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
ஏன் இயேசுவின் மரணத்தை நினைவுகூர வேண்டும்?
இந்த மரணத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதில்தான் பதிலே இருக்கிறது. யெகோவாவின் அரசுரிமைக்கு பிரதான ஆதரவாளராக இயேசு மரித்தார். இதன் மூலம், சுயநல ஆதாயத்திற்காகவே கடவுளை மனிதர் வணங்குகிறார்கள் என குற்றம் சாட்டிய சாத்தானை ஒரு பொய்யனாக நிரூபித்தார். (யோபு 2:1-5; நீதிமொழிகள் 27:11) ஒரு பரிபூரண மனிதராக தமது மரணத்தின் மூலம் ‘அநேகரை மீட்கும்பொருளாக [இயேசு] தம்முடைய ஜீவனையும் கொடுத்தார்.’ (மத்தேயு 20:28) கடவுளுக்கு விரோதமாக ஆதாம் பாவம் செய்தபோது, பரிபூரண வாழ்க்கையையும் என்றென்றும் வாழும் நம்பிக்கையையும் இழந்தான். ஆனால், “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் [மனிதவர்க்க] உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) ஆகவே, “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்.”—ரோமர் 6:23.
இயேசு கிறிஸ்துவின் மரணம் இரண்டு மிகப் பெரிய அன்பின் வெளிக்காட்டுதல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது; அதாவது யெகோவா தமது குமாரனையே மனிதகுலத்திற்காக ஈந்ததன் மூலம் காண்பித்த பேரன்புடனும், இயேசு தமது மானிட உயிரை மனமுவந்து கொடுத்ததன் மூலம் மனிதகுலத்திற்காக காண்பித்த சுயதியாக அன்புடனும் சம்பந்தப்பட்டுள்ளது. இயேசுவின் நினைவு ஆசரிப்பு இந்த இரு அன்பின் வெளிக்காட்டுதல்களை சிறப்பித்துக் காட்டுகிறது. இந்த அன்பை பெறுகிறவர்கள் நாமே என்பதால் அதற்காக நமது நன்றியுணர்வை காண்பிக்க வேண்டும் அல்லவா? இதைக் காண்பிப்பதற்கு ஒரு வழி, கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்பில் கலந்துகொள்வதாகும்.
அப்பம் மற்றும் திராட்சரசத்தின் முக்கியத்துவம்
கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆரம்பித்து வைத்தபோது, அப்பத்தையும் திராட்சரசத்தையும் அடையாள சின்னங்களாக இயேசு பயன்படுத்தினார். இயேசு அப்பத்தை எடுத்து, ‘ஸ்தோத்திரம் பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது [அப்பம்] உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது [“சரீரத்தைக் குறிக்கிறது,” NW]” என்றார். (1 கொரிந்தியர் 11:24) எல்லாரும் சாப்பிடுவதற்காக அப்பத்தைப் பிட்டு கொடுக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் அது ஓரளவு மொருமொருப்பாக இருந்தது; புளிப்பு, அதாவது ஈஸ்ட் சேர்க்கப்படாத மாவில் தண்ணீர் ஊற்றி பிசைந்து செய்யப்பட்டதாகவும் இருந்தது. பைபிளில், புளிப்பு என்பது பாவத்திற்கு அடையாளமாக சொல்லப்படுகிறது. (மத்தேயு 16:11, 12; 1 கொரிந்தியர் 5:6, 7) இயேசு பாவமில்லாதவராக இருந்தார். ஆகவே, அவருடைய பரிபூரண உடல் மனிதகுலத்திற்குப் பொருத்தமான கிரய பலியாக இருந்தது. (1 யோவான் 2:1, 2) புளிப்பில்லாத அந்த அப்பம் கிறிஸ்துவின் பாவமற்ற உடலை குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுவது எவ்வளவு பொருத்தமானது!
கலப்படமற்ற சிகப்பு திராட்சரசமிருந்த பாத்திரத்தை எடுத்து அதற்கும் ஸ்தோத்திரம் சொல்லி, ‘இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையைக் குறிக்கிறது’ என்றார். (1 கொரிந்தியர் 11:25, NW) அந்தப் பாத்திரத்திலிருந்த சிகப்பு திராட்சரசம் இயேசுவின் இரத்தத்தைக் குறிக்கிறது. இஸ்ரவேலர் பலிசெலுத்திய காளைகள் மற்றும் ஆட்டுக்கடாக்களின் இரத்தம், பொ.ச.மு. 1513-ல் அவர்களுடன் யெகோவா செய்துகொண்ட நியாயப்பிரமாண உடன்படிக்கையை உறுதிப்படுத்தியது; அது போலவே, மரணத்தின் மூலம் இயேசு சிந்திய இரத்தமும் ஒரு புதிய உடன்படிக்கையை உறுதிப்படுத்தியது.
யார் புசிக்க வேண்டும்?
நினைவு ஆசரிப்பு சின்னங்களைப் புசிக்க தகுதியானவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வதற்கு, புதிய உடன்படிக்கை என்றால் என்ன, அதில் உட்பட்டுள்ளவர்கள் யார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன். . . . நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். . . . நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.”—எரேமியா 31:31-34.
யெகோவா தேவனுடன் விசேஷ உறவுக்குள் வருவதை புதிய உடன்படிக்கை சாத்தியமாக்குகிறது. இந்த உடன்படிக்கையின் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகுதியினர் அவருடைய ஜனமாக ஆகிறார்கள். அவரும் அவர்களுடைய கடவுளாக ஆகிறார். யெகோவாவின் சட்டம் அவர்களுக்குள், அதாவது அவர்களுடைய இருதயத்திற்குள் எழுதப்படுகிறது; இதன் மூலம் விருத்தசேதனம் செய்யப்படாத யூதரல்லாதவர்களும்கூட கடவுளுடன் புதிய உடன்படிக்கைக்குள் வர முடியும். (ரோமர் 2:29) ‘புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்தெடுக்கும்’ கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி பைபிள் எழுத்தாளரான லூக்கா எழுதுகிறார். (அப்போஸ்தலர் 15:14) 1 பேதுரு 2:10-ன்படி, ‘முன்னே அவர்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறார்கள்.’ அவர்களை ‘தேவனுடைய இஸ்ரவேலர்,’ அதாவது ஆவிக்குரிய இஸ்ரவேலர் என பைபிள் குறிப்பிடுகிறது. (கலாத்தியர் 6:16; 2 கொரிந்தியர் 1:21) அப்படியானால், இந்தப் புதிய உடன்படிக்கை, யெகோவா தேவனுக்கும் ஆவிக்குரிய இஸ்ரவேலருக்கும் இடையே செய்யப்படும் ஓர் உடன்படிக்கையாகும்.
கடைசி இரவன்று இயேசு தாமேயும் தமது சீஷர்களுடன் வேறொரு உடன்படிக்கையை செய்தார். “என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினது போல், நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.” (லூக்கா 22:29) இதுவே ராஜ்ய உடன்படிக்கை. ராஜ்ய உடன்படிக்கைக்குள் கொண்டுவரப்பட்ட அபூரண மனிதர்களின் எண்ணிக்கை 1,44,000. இவர்கள் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, கிறிஸ்துவுடன் ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் ஆளுகை செய்வார்கள். (வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1-4) ஆகவே, யெகோவா தேவனுடன் புதிய உடன்படிக்கைக்குள் இருப்பவர்கள் இயேசு கிறிஸ்துவுடன் ராஜ்ய உடன்படிக்கைக்குள்ளும் இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே கர்த்தருடைய இராப்போஜனத்தின் சமயத்தில் அந்த அடையாளச் சின்னங்களைப் புசிக்கும் தகுதியுடையவர்கள்.
நினைவு ஆசரிப்புச் சின்னங்களைப் புசிக்கும் உரிமையுடையவர்கள் தாங்கள் கடவுளுடன் தனிச்சிறப்புமிக்க ஓர் உறவுக்குள் இருக்கிறார்கள் என்றும் கிறிஸ்துவுக்கு உடன் வாரிசுகளாக இருக்கிறார்கள் என்றும் எப்படி தெரிந்து கொள்கிறார்கள்? பவுல் விளக்குகிறார்: “நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று [பரிசுத்த] ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே [வாரிசுகளுமாமே]; தேவனுடைய சுதந்தரரும் [வாரிசுகளும்], கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே [வாரிசுகளுமாமே]; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.”—ரோமர் 8:16, 17.
கடவுள் தமது பரிசுத்த ஆவியால், அதாவது செயல் நடப்பிக்கும் சக்தியால், கிறிஸ்துவின் உடன் வாரிசுகளை அபிஷேகம் பண்ணுகிறார். தாங்கள் ராஜ்ய வாரிசுகள் என்பதை இது அவர்களுக்கு உறுதிப்படுத்துகிறது. மேலும் பரலோக நம்பிக்கையை அவர்களில் உருவாக்குகிறது. பரலோக வாழ்க்கையைப் பற்றி பைபிள் சொல்கிற அனைத்தையும் இவர்கள் தங்களுக்குப் பொருத்துகிறார்கள். அதோடு, பூமிக்குரிய வாழ்க்கையையும் மனித உறவுகள் உட்பட, பூமிக்குரிய பந்தங்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்ய மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். பூமிக்குரிய பரதீஸில் வாழ்க்கை அருமையாக இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறபோதிலும், இது அவர்களுடைய நம்பிக்கை இல்லை. (லூக்கா 23:43) பொய் மத கருத்துக்களின் காரணமாக அல்ல, ஆனால் கடவுளுடைய ஆவி செயல்படுவதன் காரணமாக பரலோகத்திற்குச் செல்லும் உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது, ஆகவே நினைவு ஆசரிப்பு சின்னங்களை அவர்கள் புசிப்பது தகுந்ததே.
ஒருவர் புதிய உடன்படிக்கையிலும் ராஜ்ய உடன்படிக்கையிலும் தான் இருக்கிறாரா இல்லையா என்பதைக் குறித்து முழு நிச்சயத்துடன் இல்லை என வைத்துக்கொள்ளுங்கள். கிறிஸ்துவுக்கு உடன் வாரிசு என கடவுளுடைய பரிசுத்த ஆவியும்கூட அவரிடம் சாட்சி பகரவில்லையென்றால் என்ன செய்வது? அப்படியானால், அவர் நினைவு ஆசரிப்பு சின்னங்களைப் புசிப்பது தவறு. பரலோக அரசரும் ஆசாரியருமாக இருப்பதற்கு தான் அழைக்கப்படாதிருக்கும் பட்சத்தில் அப்படி அழைக்கப்பட்டவரைப் போல் வேண்டுமென்றே ஒருவர் தன்னை பிரதிநிதித்துவம் செய்தால், நிச்சயமாகவே அதில் கடவுள் பிரியப்பட மாட்டார்.—ரோமர் 9:16; வெளிப்படுத்துதல் 22:5.
அதை எப்பொழுதெல்லாம் ஆசரிக்க வேண்டும்?
இயேசுவின் மரணத்தை வாராவாரம் நினைவுகூர வேண்டுமா அல்லது அனுதினமும் நினைவுகூர வேண்டுமா? பஸ்கா பண்டிகையின் நாளில் இராப்போஜனத்தை கிறிஸ்து ஆரம்பித்து வைத்தார், அதேநாளில் அவர் அநியாயமாக கொலையும் செய்யப்பட்டார். பஸ்கா பண்டிகை வருடத்திற்கு ஒருமுறை நிசான் 14-ம் தேதி கொண்டாடப்பட்டது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர் மீட்கப்பட்டதை நினைவுகூருவதற்காக அது கொண்டாடப்பட்டது. (யாத்திராகமம் 12:6, 14; லேவியராகமம் 23:5) ஆகவே “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து”வின் மரண நாளை வருடத்திற்கு ஒருமுறையே நினைவுகூர வேண்டும், வாரத்திற்கு ஒருமுறையோ அனுதினமுமோ அல்ல. (1 கொரிந்தியர் 5:7) கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய இராப்போஜனத்தை இயேசு செய்து காட்டிய முறையில் ஆசரிக்கிறார்கள்.
அப்படியானால், “நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” என்று பவுல் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் என்ன? (1 கொரிந்தியர் 11:26) “எப்போதெல்லாம்” அல்லது “ஒவ்வொரு சமயமும்” என்று பொருள்படும் வார்த்தையையே பவுல் இதில் பயன்படுத்தினார். எனவே, இந்த அடையாளச் சின்னங்களை அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் புசிக்கும்போதெல்லாம் அவர்கள் இயேசுவின் கிரய பலியில் தங்களுடைய விசுவாசத்தை அறிவிக்கிறார்கள் என சொன்னார்.
அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் மரணத்தை ‘அவருடைய வருகை மட்டும்’ நினைவுகூருவார்கள். இயேசு தமது ‘பிரசன்னத்தின்போது’ அபிஷேகம் செய்யப்பட்டவர்களை உயிர்த்தெழுப்பி பரலோகத்தில் ஆவி வாழ்க்கைக்கு எடுத்துக்கொள்வதற்கு வரும்வரை இந்த ஆசரிப்பு தொடரும். (1 தெசலோனிக்கேயர் 4:14-17, NW) “நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்” என உண்மையுள்ள 11 அப்போஸ்தலர்களிடம் கிறிஸ்து சொன்ன வார்த்தைகளோடு இது ஒத்திருக்கிறது.—யோவான் 14:3.
உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
இயேசுவின் கிரய பலியில் நன்மையடைந்து பூமியில் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கு நினைவு ஆசரிப்புச் சின்னங்களைப் புசிப்பது அவசியமா? இல்லை. கடவுள் பயமுள்ள ஆட்களாகிய நோவா, ஆபிரகாம், சாராள், ஈசாக்கு, ரெபெக்காள், யோசேப்பு, மோசே, தாவீது போன்றோர் பூமியில் உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, இந்த அடையாளச் சின்னங்களைப் புசிப்பார்கள் என்று பைபிளில் எங்கும் சொல்லப்படவில்லை. என்றாலும், அவர்களும் பூமியில் முடிவில்லா வாழ்வை விரும்புகிற மற்றெல்லாரும் கடவுள் மீதும் கிறிஸ்து மீதும் யெகோவாவின் ஏற்பாடான இயேசுவின் கிரய பலி மீதும் விசுவாசம் வைக்க வேண்டும். (யோவான் 3:36; 14:1) நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கு, நீங்களும் இத்தகைய விசுவாசத்தை வைக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை அனுசரிக்கப்படும் கிறிஸ்துவின் நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்வது அந்த மாபெரும் பலியை உங்களுக்கு நினைப்பூட்டும், அதோடு அதன் மீது உங்களது நன்றியுணர்வையும் பெருகச் செய்யும்.
“நீங்கள் [அபிஷேகம் செய்யப்பட்ட சக ஊழியர்கள்] பாவஞ் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ் செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்” என்று சொன்னபோது அப்போஸ்தலன் யோவான் இயேசுவின் கிரய பலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் காட்டினார். (1 யோவான் 2:1, 2) இயேசுவின் பலி தங்களுடைய பாவங்களை நிவர்த்தி செய்வதற்கு ஈடாக அளிக்கப்பட்ட பலி என அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் சொல்வது பொருத்தமானதே. ஆனால் அது முழு உலகத்தின் பாவங்களுக்கும்கூட ஒரு பலியாக இருக்கிறது, இதன் காரணமாக கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு நித்திய ஜீவன் சாத்தியமாகிறது!
ஏப்ரல் 4, 2004-ல் இயேசுவின் மரணத்தை நினைவுகூருவதற்கு நீங்களும் ஆஜராயிருப்பீர்களா? உலகமெங்கும் யெகோவாவின் சாட்சிகள் கூடிவரும் இடங்களில் இந்த ஆசரிப்பு நடைபெறும். நீங்கள் ஆஜரானால், மிக முக்கியமான பைபிள் சொற்பொழிவை கேட்டு பயனடைவீர்கள். நமக்காக யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் எவ்வளவு செய்திருக்கிறார்கள் என்பது அப்போது உங்களுக்கு நினைப்பூட்டப்படும். கடவுள் மீதும் கிறிஸ்து மீதும் அவருடைய கிரய பலியின் மீதும் ஆழ்ந்த மரியாதை வைத்திருப்பவர்கள் மத்தியில் கூடிவருவது ஆன்மீக ரீதியிலும் உங்களுக்கு பயனளிக்கும். கடவுள் காட்டும் தகுதியற்ற தயவைப் பெற்று நித்திய ஜீவனை அடைய வேண்டுமென்ற உங்களுடைய ஆசையையும் இது பலப்படுத்தும். இதில் ஆஜராவதை எதுவும் தடை செய்ய அனுமதிக்காதீர்கள். நமது பரலோக தகப்பனாகிய யெகோவா தேவனை கனப்படுத்துகிற, பிரியப்படுத்துகிற இந்த ஆசரிப்பில்—இதயத்தை உந்துவிக்கும் இந்த ஆசரிப்பில்—கலந்துகொள்வீர்களாக.
[பக்கம் 5-ன் படம்]
இயேசுவின் மரணம் இரண்டு மாபெரும் அன்பின் வெளிக்காட்டுதல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது
[பக்கம் 6-ன் படம்]
புளிப்பில்லா அப்பமும் திராட்சரசமும் இயேசுவின் பாவமற்ற சரீரத்திற்கும் சிந்தப்பட்ட அவருடைய இரத்தத்திற்கும் பொருத்தமான சின்னங்கள்