சாயங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் தொன்மையான பொருட்கள்
போர்க்களம் சென்ற மகன் எப்போது திரும்பி வருவான் என்று கானானிய படைத் தளபதியான சிசெராவின் தாய் வழிமீது விழி வைத்துக் காத்திருந்தாள். கைப்பற்றிய இடங்களிலிருந்து தன் மகன் என்னென்ன அரிய பொருட்களையெல்லாம் கொள்ளைப் பொருளாக கொண்டு வருவானென்று கனவு காணவும் ஆரம்பித்தாள். ‘கொள்ளையிட்ட பல வர்ணமான ஆடைகள், பல வர்ணமான சித்திரத் தையலாடைகள், கொள்ளையிட்டவர்களின் [ஆண்களின்] கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திரத் தையலுள்ள பல வர்ணமான ஆடை’ போன்றவற்றை அவள் ஆவலோடு எதிர்பார்த்தாள். (நியாயாதிபதிகள் 5:30) மனிதன் எப்போதும் அழகை ரசிக்கிறான்; அழகுக்கு அழகு சேர்க்கும் பொருட்களில் முக்கியமானது வர்ணமாகும். எனவே, துணிமணிகளுக்கும் வீட்டுச் சாமான்களுக்கும் வர்ணத்தை சேர்க்க வேண்டுமென்ற விருப்பம் பூர்வ காலங்களிலிருந்தே இருந்து வந்ததில் ஆச்சரியமில்லை. அந்த விருப்பத்திலிருந்து உதயமானதுதான் சாயத்தொழில்.
சாயமேற்றுவது ஒரு கலை; சாயப் பொருளைப் பயன்படுத்தி நூல், துணி அல்லது வேறு ஏதாவது பொருளுக்கு குறிப்பிட்ட நிறம் ஏற்றுவதே அந்தக் கலை. நெசவுத் தொழில் எப்போது ஆரம்பமானதோ அப்போதே சாயத்தொழிலும் ஆரம்பமானது என சொல்லலாம். ஆபிரகாம் வாழ்ந்த காலத்திற்கு முன்பே மக்கள் சாயமேற்றுவதைப் பற்றி அறிந்திருந்தார்கள், அதை பழக்கமாக செய்தும் வந்தார்கள். ஆம், கூடாரத்திற்காகவும் ஆசாரியரின் வஸ்திரங்களுக்காகவும் இஸ்ரவேலர்கள் இளநீல நூல், சிவப்புத் துணி, இரத்தாம்பர கம்பளி நூல் போன்றவற்றை பயன்படுத்தினார்கள். (யாத்திராகமம், அதிகாரங்கள் 25-28, 35, 38, 39-ஐக் காண்க.) பூர்வ காலங்களில் சாயமேற்றும் வேலை பெரும்பாலும் வீடுகளில் மட்டுமே வழக்கமாக நடைபெற்றது, ஆனால் காலம் செல்லச் செல்ல, அது வர்த்தக ரீதியாக பல்வேறு இடங்களில் செய்யப்படலாயிற்று. கண்ணைப் பறிக்கும் நிறங்களில் சாயமேற்றப்பட்ட பொருட்களுக்கு பூர்வ எகிப்தியர்கள் பெயர் பெற்றிருந்தார்கள். எசேக்கியேல் 27:7-ல் பின்வருமாறு நாம் வாசிக்கிறோம்: “எகிப்திலிருந்து வந்த சித்திரத் தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாயிருந்தது; எலீசா தீவுகளின் இளநீலமும் இரத்தாம்பரமும் உன் விதானமாயிருந்தது.” எகிப்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, தீரு பட்டணமும் மற்ற பெனிக்கே பட்டணங்களும் சாயத் தொழிலுக்கு மையமாக விளங்கின. ஆனால், சாயங்கள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன?
பண்டைய முறைகள்
சாயமேற்றும் முறைகள் இடத்துக்கு இடம் மாறுபட்டன. சில சமயம், சாயமானது நூலில் ஏற்றப்பட்டது, மற்ற சமயங்களில், நெய்யப்பட்ட துணி மீது ஏற்றப்பட்டது. சாயம் வெளுத்துப் போகாமல் இருப்பதற்காக, நூலை விலையுயர்ந்த சாயத்தில் இருமுறை முக்கி எடுத்தார்களாம்; சாயத்தொட்டியில் ஒருமுறை முக்கி பிழிந்த பிறகு, மறுபடியும் அதில் ஊற வைத்தார்களாம். பிற்பாடு, அந்த நூலை வெளியே எடுத்து காய வைத்தார்களாம்.
ஒவ்வொரு ரகத் துணிக்கும் ஒவ்வொரு விதமாக சாயம் ஏற்றப்பட வேண்டியிருந்தது. சில சமயங்களில்—சொல்லப்போனால் வெகு அரிதாக—சாயப்பொருளானது நூலிழையோடு இயல்பாக ஒன்றுகலந்தது. ஆனால், அப்படி ஒன்றுகலவாதபோது, நூலிழையையும் சாயத்தையும் நன்கு ஒன்றிவிடச் செய்யும் மார்டென்ட் என்ற ஒருவித பொருளை பயன்படுத்தி முதலில் அந்தத் துணியை பதனப்படுத்துவது அவசியமானது. மார்டென்ட்டாக பயன்படுவதற்கு, ஒரு பொருள் சாயப்பொருளோடு மட்டுமாவது ஒன்றிவிட வேண்டும்; அப்போதுதான் அது நீரில் கரையாத ஒரு நிறமாக உருவெடுக்கும். எகிப்தியர்கள் சாயமேற்றுகையில் மார்டென்டுகளைப் பயன்படுத்தியதை கண்டுபிடிப்புகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. உதாரணமாக, அவர்கள் பயன்படுத்திய சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய மூன்று நிறங்களை சாயமேற்றுவதற்கு ஆர்சனிக், இரும்பு, தகரம் ஆகியவற்றின் ஆக்ஸைடுகளை உபயோகிக்க வேண்டியிருந்தது என சொல்லப்படுகிறது.
மிருகங்களின் தோல்கள் சாயமேற்றப்படுவதற்கு முன், அவை முதலில் பதனிடப்பட்டன. சமீபத்தில்கூட, சிரியாவில் ஆட்டுக்கடாவின் தோல்கள் சுமக் என்ற பொருளால் முதலில் பதனிடப்பட்ட பிறகுதான் சாயமேற்றப்பட்டன. சாயம் காய்ந்த பிறகு, அந்தத் தோல்கள் மீது எண்ணெய் தடவப்பட்டு, தேய்க்கப்பட்டு, பின்னர் மெருகேற்றப்பட்டன. அரேபிய நாடோடிகள் பயன்படுத்திய ஷூக்களிலும் வேறு பல தோல் பொருட்களிலும் இவ்வாறே சிவப்பு சாயமேற்றப்பட்டிருந்தது; இது கூடாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட ‘செந்நிறமாகப் பதனிட்ட ஆட்டுக்கடாத் தோல்களை’ நமக்கு நினைப்பூட்டுகிறது.—யாத்திராகமம் [விடுதலைப் பயணம்] 25:5, பொது மொழிபெயர்ப்பு.
சாயமேற்றப்பட்ட பொருட்களைப் பற்றிய ஆர்வமூட்டும் ஒரு பதிவு, அசீரிய ராஜாவான மூன்றாம் திகிலாத் பிலேசரின் கல்வெட்டில் காணப்படுகிறது. பாலஸ்தீனாவுக்கும் சிரியாவுக்கும் எதிராக தான் படையெடுத்துச் சென்றதைப் பற்றி சொல்லிய பிறகு, தீரு பட்டணத்து ராஜாவான ஈராம் என்பவரிடமிருந்தும் மற்ற ராஜாக்களிடமிருந்தும் தான் கப்பமாக பெற்றவற்றைப் பற்றி அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். “பல்வர்ணத் தொங்கல்களையுடைய நூலாடைகள், . . . நீலநிற கம்பள நூல், இரத்தாம்பர கம்பள நூல், . . . அதோடு ஊதா நிறத்தில் சாயமேற்றப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் பதனிட்ட தோல்கள், (மற்றும்) நீலநிறத்தில் சாயமேற்றப்பட்ட, அகன்று விரிந்த காட்டுப் பறவைகளின் இறக்கைகள்” போன்றவை கப்பமாக செலுத்தப்பட்டன.—ஏன்சியன்ட் நியர் ஈஸ்டர்ன் டெக்ஸ்ட்ஸ், ஆசிரியர் ஜெ. ப்ரிட்ச்சர்ட், 1974, பக். 282, 283.
சாயங்கள்—எங்கிருந்து கிடைத்தன?
சாயங்கள் வெவ்வேறு மூலங்களிலிருந்து கிடைத்தன. பாலஸ்தீனாவில், மஞ்சள் சாயம் வாதுமை இலைகளிலிருந்தும், மாதுளைத் தோலின் பொடியிலிருந்தும் தயாரிக்கப்பட்டது; என்றாலும், பெனிக்கேயர்கள் மஞ்சளிலிருந்தும், குசும்பச் செடியிலிருந்தும் அதை தயாரித்தார்கள். எபிரெயர்கள், கருப்பு சாயத்தை மாதுளை மரப்பட்டையிலிருந்தும், சிவப்பு சாயத்தை மஞ்சிட்டி செடியின் (Rubia tinctorum) வேர்களிலிருந்தும் தயாரித்தார்கள். எகிப்திலிருந்தோ சிரியாவிலிருந்தோ பாலஸ்தீனாவுக்கு கொண்டு வரப்பட்ட அவுரிச் செடிகள் (Indigofera tinctoria) நீல சாயம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டன. கம்பள நூலில் ஊதா நிறத்தை ஏற்றுவதற்கான ஒரு முறையில், அந்த நூலை திராட்சை ரசத்தில் ஓர் இரவு முழுவதும் ஊற வைத்த பின்பு, மஞ்சிட்டிப் பொடி அதன் மீது தூவப்பட்டது.
காக்ஸிடே இனத்தை (Coccus ilicis) சேர்ந்த ஒருவகை ஒட்டுண்ணிப் பூச்சியிலிருந்தே—நமக்கு தெரிந்த சாயப்பொருளின் மூலங்களிலேயே இது மிக மிகப் பழமையானது—காக்கஸ் ஸ்கார்லட் (சிவப்பு) மற்றும் க்ரிம்ஸன் (கருஞ்சிவப்பு) நிற சாயங்கள் தயாரிக்கப்பட்டன. செர்ரி விதையளவு இருக்கிற அந்த காக்ஸிடே இன பெண் பூச்சி பார்ப்பதற்கு பெரி பழத்தைப் போலிருப்பதால், கிரேக்கர்கள் அதை காக்கஸ் என்று பெயரிட்டார்கள்; காக்கஸ் என்பதற்கு “பெரி பழம்” என்று அர்த்தம். அந்த ஒட்டுண்ணியின் அரேபிய பெயரானது கிர்மிஸ் அல்லது கெர்மிஸ் என்பதாகும்; அதிலிருந்துதான் “க்ரிம்ஸன்” என்ற ஆங்கிலப் பெயர் பிறந்திருக்கிறது. இந்த ஒட்டுண்ணி மத்திய கிழக்கு நாடுகளெங்கும் காணப்படுகிறது. அதன் முட்டைகளில் மட்டும்தான் ஊதா-சிவப்பு நிற சாயப்பொருள் இருக்கிறது; அதில் நிறைய கிர்மிஸிக் அமிலம் உள்ளது. இறக்கைகளில்லாத இந்தப் பெண் பூச்சி ‘நிறைமாத கர்ப்பிணியாக’ ஏப்ரல் மாத இறுதியின்போது, கிர்மிஸ் கருவாலி மரத்தின் (Quercus coccifera) குச்சிகளிலோ அல்லது சில சமயங்களில் அதன் இலைகளிலோ, தன் நீண்ட மூக்கின் உதவியுடன் ஒட்டிக்கொள்கிறது. இந்தப் பூச்சிகள் பிற்பாடு சேகரிக்கப்பட்டு, காய வைக்கப்படுகின்றன, அதன்பின் அவற்றை தண்ணீரில் கொதிக்க வைப்பதன் மூலம் விலையுயர்ந்த செந்நிற சாயம் தயாரிக்கப்படுகிறது. இந்த சிவப்பு சாயம்தான் இஸ்ரவேலின் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த தட்டுமுட்டு சாமான்களுக்கும், பிரதான ஆசாரியருடைய வஸ்திரங்களுக்கும் பெருமளவு பயன்படுத்தப்பட்டது.
நீல சாயம் ஒரு வகை சிப்பி மீனிலிருந்து (நீல நிற மஸ்ஸலிலிருந்து) பெறப்பட்டதாம். ஊதா சாயம் முரெக்ஸ் ட்ரன்க்குலஸ் (Murex trunculus) மற்றும் முரெக்ஸ் ப்ரன்டாரிஸ் (Murex brandaris) போன்ற சிப்பி மீன்களிலிருந்து பெறப்பட்டது. இந்த உயிரிகளுடைய கழுத்தில் சிறிய சுரப்பி ஒன்றிருக்கிறது; அதில் ஒரே ஒரு துளி திரவம் உள்ளது; அந்தத் திரவத்திற்கு பெயர் ஃப்ளவர். ஆரம்பத்தில் இந்தத் திரவம் பார்ப்பதற்கும் தொடுவதற்கும் க்ரீம் போல் வழுவழுப்பாக இருக்கும், ஆனால் காற்றும் வெளிச்சமும் அதன் மீது படுகையில், அது மெதுமெதுவே அடர்ந்த கத்தரிப்பூ நிறத்திற்கு அல்லது சிவப்பு கலந்த ஊதா நிறத்திற்கு மாறிவிடுகிறது. இந்தச் சிப்பி மீன்கள் மத்தியதரைக்கடல் கரையோரங்களில் காணப்படுகின்றன; ஒவ்வொரு இடத்திலிருந்து எடுக்கப்படுகிற சிப்பி மீன்களிலிருந்தும் வெவ்வேறு ‘ஷேடுகளில்’ சாயங்கள் கிடைக்கின்றன. அந்தக் காலத்தில், பெரிய சைஸ் சிப்பி மீன்கள் தனித்தனியாக உடைக்கப்பட்டு, அவற்றிலிருந்து அந்த அரிய திரவம் கவனமாக எடுக்கப்பட்டது, ஆனால் சிறிய சைஸ் சிப்பி மீன்கள் உரலில் ஒன்றாகப் போட்டு இடிக்கப்பட்டன.
இந்தச் சிப்பி மீன்கள் ஒவ்வொன்றிலிருந்தும் சிறிதளவு மட்டுமே திரவம் கிடைத்தது, எனவே பெருமளவு திரவத்தை சேகரிப்பதற்கு அதிக செலவானது. ஆகையால், இந்தச் சாயம் விலையுயர்ந்த ஒன்றானது; இதன் காரணமாக இரத்தாம்பர ஆடைகளை செல்வசீமான்களால் அல்லது உயர் பதவியிலிருந்தவர்களால் மட்டுமே விலைகொடுத்து வாங்க முடிந்தது. ஆகாஸ்வேரு ராஜா தன்னை உயர் பதவியில் அமர்த்தியபோது, மொர்தெகாய் “இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரமும், பெரிய பொன்முடியும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாய் ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டான்.” (எஸ்தர் 8:15) லூக்கா 16-ம் அதிகாரம் 19-லிருந்து 31 வசனங்கள் வரையாக உள்ள இயேசுவின் உவமையில் சொல்லப்படுகிற ‘ஐசுவரியவானும்கூட’ “இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்து கொண்டிருந்தான்.”
தீருவின் இரத்தாம்பரம்
ஒருவித கருஞ்சிவப்பு நிற சாயத்திற்கு பூர்வ தீரு பட்டணம் பிரபலமானது; அது தீருவின் இரத்தாம்பரம் அல்லது ராஜ இரத்தாம்பரம் என்று அழைக்கப்பட்டது. இரு தடவை சாயமேற்றும் ஒரு முறையை தீரு பட்டணத்தார் பின்பற்றினார்கள் என சொல்லப்பட்டாலும், இந்த நிற சாயத்தை பெறுவதற்கு என்ன முறையை அவர்கள் கையாண்டார்கள் என்பது இன்று வரை பரம ரகசியமாகவே இருக்கிறது. முரெக்ஸ் ட்ரன்க்குலஸ் என்ற சிப்பியின் ஓடுகள் குவியல் குவியலாக தீருவின் கடற்கரையோரங்களிலும் சீதோனின் சுற்றுவட்டாரமெங்கும் காணப்படுவதால், முரெக்ஸ் மற்றும் புர்ப்புரா (Purpura) என்ற சிப்பி வகைகளிலிருந்தே சாயப்பொருள் பெறப்பட்டதென்பது தெளிவாகிறது. பெனிக்கேயை சேர்ந்த தீரு பட்டணத்தில் இரத்தாம்பர வஸ்திரங்களும், வண்ண வண்ண ஆடைகளும் இருப்பதாக யெகோவா வர்ணிக்கிறார்; அத்தகைய பொருட்கள் அங்கு வியாபாரம் செய்யப்பட்டதாகவும் அவர் விவரிக்கிறார்.—எசேக்கியேல் 27:2, 7, 24.
ஆம், சிசெராவின் தாய் மட்டுமல்ல, வேறு பல பெண்களும்—அன்றிருந்த ஆண்களும்கூட—கண்ணைப் பறிக்கும் அழகிய வண்ணத் துணிமணிகளையும் வீட்டுச் சாமான்களையும் கட்டாயம் விரும்பியிருப்பார்கள். சாயமேற்றுவது இன்றைய நாளிலும்கூட நிச்சயமாகவே அழகுக்கு அழகு சேர்த்து, கண்களுக்கு குளிர்ச்சியூட்டுகிறது.