யெகோவா நமது அன்றாட தேவைகளுக்கு வழிசெய்கிறார்
‘கவலைப்படுவதையும் சந்தேகப்படுவதையும் நிறுத்துங்கள்; ஏனென்றால் . . . உங்களுடைய தேவைகளை உங்கள் பிதா அறிந்திருக்கிறார்.’—லூக்கா 12:29, 30, NW.
1. யெகோவா எவ்வாறு உயிரினங்களுக்கு உணவளிக்கிறார்?
சிட்டுக்குருவியோ வேறொரு பறவையோ மண்ணில் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறீர்களா? வெறும் மண்ணிலும் தூசியிலும் அதற்கு என்ன உணவு கிடைத்துவிடப் போகிறதென நீங்கள் யோசித்திருக்கலாம். யெகோவா பறவைகளுக்கு உணவளிக்கும் விதத்திலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்பதை இயேசு தமது மலைப்பிரசங்கத்தில் காட்டினார். “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?” என்று அவர் சொன்னார். (மத்தேயு 6:26) யெகோவா தமது சிருஷ்டிகள் அனைத்திற்கும் அற்புதமான விதங்களில் உணவளிக்கிறார்.—சங்கீதம் 104:14, 21; 147:9.
2, 3. அன்றாட ஆகாரத்திற்காக ஜெபிக்கும்படி இயேசு கற்பித்ததிலிருந்து ஆவிக்குரிய விதத்தில் என்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம்?
2 அப்படியென்றால், “அன்றன்று வேண்டிய எங்கள் ஆகாரத்தை இன்றும் எங்களுக்குத் தாரும்” என்ற வேண்டுகோளை இயேசு ஏன் தமது மாதிரி ஜெபத்தில் குறிப்பிட்டார்? (மத்தேயு 6:11, திருத்திய மொழிபெயர்ப்பு) இந்த எளிய வேண்டுகோளிலிருந்து ஆவிக்குரிய விதத்தில் கருத்தாழமிக்க பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். முதலாவதாக, யெகோவாவே நமக்குத் தேவையான எல்லாவற்றையும் அளிப்பவர் என்பதை அது நமக்கு நினைப்பூட்டுகிறது. (சங்கீதம் 145:15, 16) மனிதர்கள் விதைக்கலாம், பயிரிடலாம், ஆனால் கடவுளால் மட்டுமே—சொல்லர்த்தமாகவும் சரி ஆவிக்குரிய விதத்திலும் சரி—விளையச் செய்ய முடியும். (1 கொரிந்தியர் 3:7) நாம் புசிப்பவையும் குடிப்பவையும் கடவுள் தந்திருக்கும் பரிசுகள். (அப்போஸ்தலர் 14:17) அன்றாட தேவைகளைத் தருமாறு நாம் அவரிடம் கேட்பது, அந்தத் தேவைகளை நாம் அலட்சியமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதைக் காட்டும். அதேசமயத்தில், அவரிடம் கேட்டுவிட்டதால் வேலை செய்ய வேண்டிய பொறுப்பு இனி நமக்கு இல்லை என்று நினைத்துவிட முடியாது; அதுவும் வேலை செய்ய முடிகிற நிலையில் இருக்கையில் அவ்வாறு நினைத்துவிட முடியாது.—எபேசியர் 4:28; 2 தெசலோனிக்கேயர் 3:10.
3 இரண்டாவதாக, ‘அன்றன்று வேண்டிய ஆகாரத்தை’ கேட்பது, எதிர்காலத்தைக் குறித்து அளவுக்கு மீறி கவலைப்படக்கூடாது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இயேசு கூடுதலாக இப்படி சொன்னார்: “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.” (மத்தேயு 6:31-34) ‘அன்றன்று வேண்டிய ஆகாரத்திற்காக’ செய்யப்படும் ஜெபம், “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தி”க்குரிய எளிய வாழ்க்கை மீது கவனத்தை ஒருமுகப்படுத்த உதவுகிறது.—1 தீமோத்தேயு 6:6-8.
அன்றாடம் தேவைப்படும் ஆவிக்குரிய உணவு
4. இயேசுவின் வாழ்க்கையிலும் இஸ்ரவேலரின் வாழ்க்கையிலும் நடந்த என்ன சம்பவங்கள் ஆவிக்குரிய உணவை உட்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன?
4 அன்றாட ஆகாரத்திற்காக நாம் செய்யும் ஜெபம், அன்றாட ஆவிக்குரிய உணவும் நமக்கு தேவை என்பதைக்கூட நினைப்பூட்ட வேண்டும். பல நாள் உபவாசித்த பிறகு இயேசு மிகவும் பசியாக இருந்தார்; அந்த சந்தர்ப்பத்திலும், கல்லுகளை அப்பமாக்கும்படி சாத்தான் சோதித்தபோது இயேசு இணங்கவில்லை. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என சொன்னார். (மத்தேயு 4:4) தீர்க்கதரிசியாகிய மோசே சொன்னதைத்தான் இங்கே இயேசு மேற்கோள் காட்டினார். மோசே இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொல்லியிருந்தார்: “அவர் [யெகோவா] உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.” (உபாகமம் 8:3) யெகோவா இஸ்ரவேலருக்கு மன்னாவை வழங்கிய விதம், அவர்களுக்கு உணவளித்தது மட்டுமல்லாமல் ஆவிக்குரிய பாடங்களையும் புகட்டியது. அதில் ஒரு பாடம்: அவர்கள் ‘ஒவ்வொரு நாளுக்கு வேண்டிய மன்னாவை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ள’ வேண்டியிருந்தது. அதைவிட அதிகமாக அவர்கள் சேகரித்தால் அது புழுத்துப்போய் நாற்றமெடுக்குமென சொல்லப்பட்டது. (யாத்திராகமம் 16:4, 20) இருந்தாலும் ஓய்வுநாளுக்குரியதையும் சேர்த்து அதற்கு முந்தைய ஆறாம் நாளில் அவர்கள் சேகரித்து வைக்க வேண்டியிருந்தது; அப்போதோ அது கெட்டுப்போகவில்லை. (யாத்திராகமம் 16:5, 23, 24) ஆகவே அந்த மன்னா கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை இஸ்ரவேலர் மனதில் பதிய வைத்தது; அதோடு, அப்பத்தின் மீது மட்டுமல்ல ஆனால் ‘யெகோவாவுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையின்’ மீதும் அவர்களுடைய வாழ்க்கை சார்ந்திருந்ததை அது உணர்த்தியது.
5. நமக்கு அன்றாடம் தேவைப்படும் ஆவிக்குரிய உணவை யெகோவா எவ்வாறு தருகிறார்?
5 அதேபோல் நாமும், யெகோவா தமது குமாரன் மூலம் அளிக்கும் ஆவிக்குரிய உணவை தினமும் உட்கொள்ள வேண்டும். விசுவாச குடும்பத்தாருக்கு ‘ஏற்ற வேளையிலே உணவளிக்க’ இயேசு ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை’ நியமித்திருக்கிறார். (மத்தேயு 24:45, NW) அந்த உண்மையுள்ள அடிமை வகுப்பார், பைபிள் படிப்புக்கு உதவும் புத்தகங்களின் வடிவில் அபரிமிதமான ஆவிக்குரிய உணவை வழங்குவதோடு தினமும் பைபிளை வாசிக்குமாறு நம்மை உற்சாகப்படுத்துகிறார்கள். (யோசுவா 1:8; சங்கீதம் 1:1-3) இயேசுவைப் போலவே நாமும், யெகோவாவின் சித்தத்தைப் பற்றி கற்றுக்கொள்ளவும் அதைச் செய்யவும் தினம்தினம் முயற்சி எடுத்தால் ஆவிக்குரிய பலத்தை பெறுவோம்.—யோவான் 4:34.
பாவங்களை மன்னித்தல்
6. எந்தக் கடன்களுக்கு நாம் மன்னிப்பு கேட்க வேண்டும், நாம் என்ன செய்தால் அவற்றை ரத்துசெய்ய யெகோவா மனமுள்ளவராக இருக்கிறார்?
6 மாதிரி ஜெபத்தின் அடுத்த வேண்டுகோள் இது: “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.” (மத்தேயு 6:12) இங்கே பணம் சம்பந்தமான கடனைப் பற்றி இயேசு பேசிக்கொண்டிருக்கவில்லை. நம் பாவங்களுக்கான மன்னிப்பைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். லூக்காவின் பதிவுப்படி மாதிரி ஜெபத்தின் இந்த வேண்டுகோள் இவ்வாறு வாசிக்கிறது: “எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே.” (லூக்கா 11:4) ஆகவே நாம் பாவம் செய்யும்போது ஒரு கருத்தில் யெகோவாவிற்கு கடன்படுவது போல் இருக்கிறது. ஆனால் நாம் உண்மையிலேயே மனந்திருந்தி, ‘முழுமையாக திரும்பி,’ கிறிஸ்துவின் மீட்கும் பலியிலுள்ள விசுவாசத்தின் அடிப்படையில் நம் அன்பான கடவுளிடம் மன்னிப்பு கேட்கும்போது அந்தக் கடனை ‘துடைத்தழிக்க,’ அதாவது ரத்துசெய்ய அவர் மனமுள்ளவராக இருக்கிறார்.—அப்போஸ்தலர் 3:19, NW; 10:43; 1 தீமோத்தேயு 2:5, 6.
7. நாம் ஏன் தினமும் ஜெபத்தில் கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்?
7 இன்னொரு நோக்குநிலையிலிருந்து பார்க்கையில், நாம் யெகோவாவின் நீதியுள்ள தராதரங்களை எட்டத் தவறும்போது பாவம் செய்கிறோம். பாவத்தை சுதந்தரித்திருப்பதால் நாம் அனைவருமே சொல்லிலும் செயலிலும் சிந்தையிலும் தவறு செய்கிறோம் அல்லது செய்ய வேண்டியதை செய்யத் தவறிவிடுகிறோம். (பிரசங்கி 7:20; ரோமர் 3:23; யாக்கோபு 3:2; 4:17) ஆகவே நாம் தினமும் அறிந்தோ அறியாமலோ செய்யும் பாவங்களுக்காக அன்றாட ஜெபத்தில் மன்னிப்பு கேட்பது அவசியம்.—சங்கீதம் 19:12; 40:12.
8. மன்னிப்பிற்காக ஜெபிக்கையில் நாம் என்ன செய்ய வேண்டும், அதனால் என்ன நன்மை கிடைக்கும்?
8 நேர்மையான சுய பரிசோதனை செய்து, மனந்திரும்பி, ஜெபத்தில் பாவத்தை அறிக்கை செய்து, அதன் பிறகு கிறிஸ்து சிந்திய ரத்தத்தின் மீட்கும் வல்லமையில் உள்ள விசுவாசத்தின் அடிப்படையில் நம்மை மன்னிக்குமாறு கடவுளிடம் கேட்க வேண்டும். (1 யோவான் 1:7-9) நாம் மனப்பூர்வமாக ஜெபம் செய்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு, மன்னிப்பு கேட்பதோடு “மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும்” வேண்டும். (அப்போஸ்தலர் 26:20) அப்போதுதான், யெகோவா நம் பாவங்களை உடனடியாக மன்னிப்பார் என்று எதிர்பார்க்க முடியும். (சங்கீதம் 86:5; 103:8-14) அதன் பலனாக ஈடிணையற்ற மன சமாதானத்தை, அதாவது ‘எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை’ அனுபவிப்போம்; அது ‘[நம்] இருதயங்களையும் [நம்] சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.’ (பிலிப்பியர் 4:7) ஆனால், நம் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இயேசுவின் மாதிரி ஜெபம் நமக்குக் கற்பிக்கிறது.
மன்னிப்பைப் பெற, நாம் மன்னிக்க வேண்டும்
9, 10. (அ) மாதிரி ஜெபத்தின் ஒரு பகுதிக்கு இயேசு என்ன விளக்கமளித்தார், இது எதை வலியுறுத்தியது? (ஆ) நாம் மன்னிக்க வேண்டியதன் அவசியத்தை இயேசு எவ்வாறு உவமையின் மூலம் விளக்கினார்?
9 ஆர்வத்திற்குரிய விதமாக, மாதிரி ஜெபத்தில், “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்ற வேண்டுகோளுக்கு மட்டும்தான் இயேசு கூடுதலாக விளக்கம் தந்தார். ஜெபத்தை முடித்த பிறகு அவர் இவ்வாறு சொன்னார்: “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரம பிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.” (மத்தேயு 6:14, 15) இவ்வாறு, நாம் மற்றவர்களை மன்னிக்கத் தயாராக இருந்தால்தான் யெகோவா நம்மை மன்னிப்பார் என்பதை இயேசு மிகத் தெளிவாகக் காட்டினார்.—மாற்கு 11:25.
10 இன்னொரு சந்தர்ப்பத்தில், யெகோவாவிடம் நாம் மன்னிப்பை எதிர்பார்த்தால் நாமும் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்பதை உணர்த்த இயேசு ஒரு உவமையை சொன்னார். அடிமை தன்னிடம் வாங்கியிருந்த மிகப் பெரிய கடனை ஒரு ராஜா ரத்து செய்துவிட்டார். ஆனால் அந்த அடிமையோ, இன்னொரு அடிமை தன்னிடம் வாங்கியிருந்த மிகச் சிறிய கடனை ரத்து செய்ய மறுத்துவிட்டான். ஆகவே ராஜாவால் கடுமையாக தண்டிக்கப்பட்டான். “நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்” என்று இயேசு சொல்லி முடித்தார். (மத்தேயு 18:23-35) பாடம் மிகத் தெளிவாக இருக்கிறது: யெகோவா நம் ஒவ்வொருவருக்கும் ரத்து செய்திருக்கும் பாவக் கடன், நமக்கு எதிராக மற்றவர்கள் செய்திருக்கும் எப்படிப்பட்ட பாவத்தையும்விட மிகப் பெரியது. அதோடு யெகோவா நம்மை தினமும் மன்னிக்கிறார். அப்படியென்றால் மற்றவர்கள் நமக்கு எதிராக எப்போதாவது செய்யும் பாவத்தை நம்மால் கண்டிப்பாக மன்னிக்க முடியும்.
11. யெகோவாவிடம் நாம் மன்னிப்பை எதிர்பார்த்தால் அப்போஸ்தலன் பவுல் தந்திருக்கும் எந்த அறிவுரையைப் பின்பற்றுவோம், அதனால் என்ன நன்மைகள் விளையும்?
11 “ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபேசியர் 4:32) கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் மன்னிக்கும்போது அவர்களிடையே சமாதானம் தழைக்கிறது. பவுல் இவ்வாறும் எழுதினார்: “நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து [“யெகோவா,” NW] உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.” (கொலோசெயர் 3:12-14) இவை அனைத்தும், “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்று இயேசு கற்றுக்கொடுத்த வேண்டுகோளில் அடங்கிவிடுகின்றன.
சோதனையிலிருந்து பாதுகாப்பு
12, 13. (அ) மாதிரி ஜெபத்திலுள்ள அடுத்த வேண்டுகோளுடைய அர்த்தம் எதுவாக இருக்க முடியாது? (ஆ) மிகப் பெரிய சோதனைக்காரன் யார், சோதனைக்குட்படப் பண்ணாதிருக்குமாறு நாம் ஜெபிப்பதன் அர்த்தம் என்ன?
12 ‘எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாதீர்’ என்பதே இயேசுவின் மாதிரி ஜெபத்திலுள்ள அடுத்த வேண்டுகோள். (மத்தேயு 6:13) நம்மை சோதிக்க வேண்டாமென்று யெகோவாவிடம் கேட்கும்படியா இயேசு சொன்னார்? அவர் அப்படி சொல்லியிருக்க முடியாது; ஏனென்றால், “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல” என்று கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் சீஷராகிய யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 1:13) மேலும், “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே” என்று சங்கீதக்காரன் எழுதினார். (சங்கீதம் 130:3) நாம் செய்யும் தவறுகளை கண்டுபிடிப்பதிலேயே யெகோவா எப்போதும் குறியாக இருப்பதில்லை, நம்மை இடறிவிழச் செய்யவும் அவர் கண்டிப்பாக முயலுவதில்லை. அப்படியென்றால், மாதிரி ஜெபத்தின் இந்த வரிக்கு அர்த்தம் என்ன?
13 நம்மை இடறிவிழச் செய்ய, அதாவது தந்திரமான செயல்களால் விழச் செய்ய, ஏன், விழுங்கிவிடக்கூட முயலுவது பிசாசாகிய சாத்தானே. (எபேசியர் 6:11) அவன்தான் மிகப் பெரிய சோதனைக்காரன். (1 தெசலோனிக்கேயர் 3:5) சோதனைக்குட்படப் பண்ணாதிருக்குமாறு நாம் ஜெபிப்பதன் மூலம், சோதனையின்போது இடறிவிழ நம்மை அனுமதிக்காதிருக்கும்படியே நாம் யெகோவாவிடம் கேட்கிறோம். “சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு,” அதாவது சோதனைகளுக்கு அடிபணிந்து விடாதபடிக்கு உதவுமாறு அவரிடம் கேட்கிறோம். (2 கொரிந்தியர் 2:11) யெகோவாவின் பேரரசுரிமையை எல்லாவற்றிலும் மதித்துணருபவர்களுக்கு வழங்கப்படும் ஆவிக்குரிய பாதுகாப்பை நாமும் பெற்று ‘உன்னதமானவரின் மறைவிலிருக்க’ வேண்டுமென்றுதான் ஜெபிக்கிறோம்.—சங்கீதம் 91:1-3.
14. சோதனையின்போது நாம் யெகோவாவை சார்ந்திருந்தால் அவர் நம்மை கைவிட மாட்டார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் எவ்வாறு உறுதியளிக்கிறார்?
14 அதுவே ஜெபங்களிலும் செயல்களிலும் நாம் வெளிக்காட்டும் உள்ளப்பூர்வமான ஆர்வமாக இருந்தால், யெகோவா ஒருபோதும் நம்மை கைவிட மாட்டார் என்பதில் நிச்சயமாக இருக்கலாம். அப்போஸ்தலனாகிய பவுல் இந்த உறுதியை நமக்கு அளிக்கிறார்: “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.”—1 கொரிந்தியர் 10:13.
“தீயவனிடமிருந்து எங்களை விடுவியும்”
15. தீயவனிடமிருந்து விடுவிக்க வேண்டுமென ஜெபிப்பது இன்று ஏன் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு முக்கியம்?
15 கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மிக நம்பகமான கைப்பிரதிகளின்படி, இயேசுவின் மாதிரி ஜெபம் இந்த வார்த்தைகளோடு முடிவடைகிறது: “தீயவனிடமிருந்து எங்களை விடுவியும்.”a (மத்தேயு 6:13, NW) இந்த முடிவு காலத்தில் சாத்தானிடம் சிக்குவதிலிருந்து பாதுகாப்பைப் பெறுவது முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அவசியம். சாத்தானும் அவனுடைய பேய்களும், “தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய” அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோருடனும் அவர்களுடைய கூட்டாளிகளாகிய ‘திரள் கூட்டத்தாருடனும்’ யுத்தம் செய்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9; 12:9, 17) “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்தினார். (1 பேதுரு 5:8, 9) நம்முடைய பிரசங்க வேலையை நிறுத்த சாத்தான் விரும்புகிறான்; ஆகவே பூமியிலுள்ள தன் ஏஜென்ட்டுகளின் மூலம்—மத, வர்த்தக, அல்லது அரசியல் ஏஜென்ட்டுகள் எவற்றின் மூலமும்—நம்மை பயமுறுத்த முயலுகிறான். ஆனால் நாம் உறுதியாக இருந்தால் யெகோவா நம்மை காப்பாற்றுவார். “ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” என்று சீஷனாகிய யாக்கோபு எழுதினார்.—யாக்கோபு 4:7.
16. சோதனையை எதிர்ப்படும் தமது ஊழியர்களுக்கு உதவ யெகோவா யாரை பயன்படுத்துகிறார்?
16 யெகோவா, தமது குமாரன் சோதிக்கப்படுவதற்கு அனுமதித்தார். ஆனால் பாதுகாப்பிற்காக கடவுளுடைய வார்த்தையை பயன்படுத்தி பிசாசை இயேசு எதிர்த்தார்; அதன் பிறகு, இயேசுவை பலப்படுத்த தேவதூதர்களை யெகோவா அனுப்பினார். (மத்தேயு 4:1-11) அதேபோல் நாமும் விசுவாசத்தோடு ஜெபம் செய்து யெகோவாவை நம் அடைக்கலமாக்கினால், அவர் தமது தூதர்கள் மூலம் நமக்கு உதவுவார். (சங்கீதம் 34:7; 91:9-11) “கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதினார்.—2 பேதுரு 2:9.
முழுமையான விடுதலை அருகில்
17. இயேசு தமது மாதிரி ஜெபத்தில் எவ்வாறு காரியங்களை அதனதன் இடத்தில் சரியாக வைக்கிறார்?
17 இயேசு தமது மாதிரி ஜெபத்தில், காரியங்களை அதனதன் இடத்தில் சரியாக வைக்கிறார். யெகோவாவின் உன்னதமான பரிசுத்தப் பெயர் புனிதப்படுத்தப்படுவதே நம் முக்கிய அக்கறையாக இருக்க வேண்டும். இது மேசியானிய ராஜ்யத்தின் மூலமாகவே நிறைவேறும் என்பதால், மனிதனின் அபூரண ராஜ்யங்கள், அதாவது அரசாங்கங்கள் அனைத்தையும் அழிப்பதற்கு அந்த ராஜ்யம் வர வேண்டுமென நாம் ஜெபிக்கிறோம்; கடவுளுடைய சித்தம் பரலோகத்தில் முழுமையாக செய்யப்படுவதைப் போலவே பூமியில் செய்யப்படுவதற்காகவும் அந்த ராஜ்யம் வர வேண்டுமென ஜெபிக்கிறோம். பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை பெறும் நம் நம்பிக்கை, யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுத்தப்படுவதன் பேரிலும் அவரது நீதியுள்ள பேரரசுரிமை சர்வலோகமெங்கும் ஏற்றுக்கொள்ளப்படுவதன் பேரிலும் சார்ந்திருக்கிறது. முக்கியமான இந்த எல்லா காரியங்களுக்காகவும் ஜெபித்த பிறகு, நம் அன்றாட தேவைகளைத் தரும்படியும், பாவங்களை மன்னிக்கும்படியும், சோதனையிலிருந்தும் தீயவனான பிசாசாகிய சாத்தானின் தந்திரங்களிலிருந்தும் விடுவிக்கும்படியும் நாம் ஜெபிக்கலாம்.
18, 19. ஊக்கம் தளராமல் நம் நம்பிக்கையை ‘முடிவுபரியந்தம் உறுதியாய்’ காத்துக்கொள்ள இயேசுவின் மாதிரி ஜெபம் எவ்வாறு உதவுகிறது?
18 தீயவனிடமிருந்தும் அவனது சீர்கெட்ட உலகத்திலிருந்தும் நாம் முழுமையான விடுதலை பெறும் காலம் அருகில் வந்துவிட்டது. பூமியின் மீது, முக்கியமாக யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் மீது ‘மிகுந்த கோபத்தைக்’ காட்ட தனக்குக் “கொஞ்சக்கால மாத்திரம்” உண்டென்று சாத்தான் நன்கு அறிந்திருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:12, 17) “உலகத்தின் முடிவு” சம்பந்தமான கூட்டு அடையாளத்தில் பரபரப்பூட்டும் சில சம்பவங்களை இயேசு முன்னறிவித்தார்; அவற்றில் சில இனிதான் நடக்கப் போகின்றன. (மத்தேயு 24:3, 29-31) அவை சம்பவிப்பதை நாம் பார்க்கும்போது, விடுதலைக்கான நம்பிக்கை மேலும் பிரகாசமாகும். “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்” என்று இயேசு சொன்னார்.—லூக்கா 21:25-28.
19 இயேசு தம் சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்த சுருக்கமான மாதிரி ஜெபம், முடிவு நெருங்கும் இந்த சமயத்தில் நாம் எவற்றிற்காக ஜெபிக்கலாம் என்பதன் பேரில் நம்பத்தகுந்த வழிகாட்டுதலைத் தருகிறது. கடைசிவரை, ஆவிக்குரிய ரீதியிலும் சரி பொருளாதார ரீதியிலும் சரி, நம் அன்றாட தேவைகளை யெகோவா தொடர்ந்து அளிப்பார் என்று நம்பிக்கையோடு இருப்போமாக. ஊக்கமாக ஜெபிப்பது, ‘ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்க’ நமக்கு உதவும்.—எபிரெயர் 3:14; 1 பேதுரு 4:7, NW.
[அடிக்குறிப்பு]
a தமிழ் யூனியன் பைபிள் போன்ற சில பழைய பைபிள்கள் “ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்” என்ற துதியோடு மாதிரி ஜெபத்தை முடிக்கின்றன. “இந்த வரி . . . மிக நம்பகமான [கைப்பிரதிகளில்] இல்லை” என த ஜெரோம் பிப்ளிக்கல் கமென்ட்டரி குறிப்பிடுகிறது.
மறுபார்வை
• ‘அன்றன்று வேண்டிய ஆகாரத்தை’ தரும்படி கேட்பதன் அர்த்தம் என்ன?
• “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்ற வேண்டுகோளை விளக்குக.
• சோதனைக்குட்படப் பண்ணாதிருக்கும்படி யெகோவாவிடம் கேட்பதன் அர்த்தம் என்ன?
• “தீயவனிடமிருந்து எங்களை விடுவியும்” என்று நாம் ஏன் ஜெபிக்க வேண்டும்?
[பக்கம் 15-ன் படங்கள்]
மற்றவர்களை மன்னித்தால்தான் நாம் மன்னிப்பைப் பெற முடியும்
[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]
Lydekker