சாவோடோமிலும் பிரின்சிப்பிலும் நற்செய்தி பலன் தருகிறது
சாவோ டோம், பிரின்சிப் என்ற பெயர்கள் பெரும்பாலோருடைய காதுகளுக்கே ஒருவேளை எட்டியிருக்காது. பொதுவாக சுற்றுலாத்தல வழிகாட்டி நூல்களில் இத்தீவுகளைப் பற்றிய விளம்பரங்கள் இடம்பெறுவதில்லை. ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரை அருகே கினி வளைகுடாவில் வீற்றிருக்கும் இத்தீவுகளை உலக வரைபடத்தில் பார்த்தால் சிறு புள்ளிகள் போல்தான் காட்சியளிக்கும். சாவோ டோம் கிட்டத்தட்ட பூமத்திய ரேகையின் மீதும், பிரின்சிப் அதற்கு சற்று வடகிழக்கேயும் அமைந்துள்ளன. இத்தீவுகளில் பெய்யும் மழையும், நிலவும் ஈரப்பதமான சீதோஷ்ணமும் பசுமைப்புரட்சி செய்யும் மழைக்காடுகளை படைத்துள்ளன. 2,000 மீட்டருக்கும் மேல் கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் மலைச் சரிவுகளை இந்த மழைக்காடுகள் போர்த்தியுள்ளன.
நீலக் கடற்கரையும் வரிசையாய் அணிவகுத்து நிற்கும் பனைமர வகைகளும் இந்த வெப்பமண்டல தீவுகளை அலங்கரிக்கின்றன. இத்தீவு வாசிகள் சிநேகப்பான்மையானவர்கள், பாசமிக்கவர்கள். இவர்களுடைய பூர்வீகம் ஆப்பிரிக்காவும் ஐரோப்பாவும் கலந்த கலவை; அதனால் இவர்களுடைய கலாச்சாரம் இனியதோர் கதம்ப கலாச்சாரமாக விளங்குகிறது. இங்கு வாழும் 1,70,000 பேரும் முக்கியமாக கொக்கோவை ஏற்றுமதி செய்யும் வேலையில் ஈடுபடுகிறார்கள், அல்லது விவசாயத்திலோ மீன்பிடிக்கும் தொழிலிலோ ஈடுபடுகிறார்கள். ஆனால், சமீப ஆண்டுகளில் அன்றாட வயிற்றுப்பாட்டிற்கே திண்டாடுகிற நிலை இங்கு ஏற்பட்டிருக்கிறது.
என்றாலும், 20-ம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இத்தீவுகளிலுள்ள பெரும்பாலான மக்களின் வாழ்க்கைக்கு ஒளிதீபமாய் அமைந்தது. ஜூன் 1993-ல் சாவோ டோம் மற்றும் பிரின்சிப் அரசாங்கம் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளித்தது. கஷ்டங்கள் நிறைந்த அவர்களுடைய சரித்திர ஏடுகளின் அத்தியாயம் அத்துடன் முடிவடைந்தது.
நெருக்கடியின் மத்தியில் விதை விதைக்கப்பட்டது
1950-களின் உதயத்தில்தான் முதன்முதலாக யெகோவாவின் சாட்சி ஒருவர் இத்தீவுகளில் காலடி எடுத்து வைத்ததாக தெரிகிறது. அந்த ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் போர்ச்சுகீசிய குடியிருப்புகளைச் சேர்ந்த சிறைக் கைதிகள், இத்தீவுகளிலிருந்த கட்டாய உழைப்பு முகாம்களில் வேலை செய்வதற்காக அனுப்பப்பட்டிருந்தார்கள். முதன்முதலில் அங்கு சென்ற யெகோவாவின் சாட்சி ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு பயனியர், அதாவது முழுநேர ஊழியர். அவர் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கித்ததற்காக மொசம்பிக்கிலிருந்து இங்கு நாடுகடத்தப்பட்டார். தன்னந்தனியாக இருந்த இந்த ஒரே யெகோவாவின் சாட்சி சுறுசுறுப்பாக பிரசங்கித்ததால் ஆறே மாதங்களுக்குள் 13 பேர் நற்செய்தியை பிரசங்கிக்க ஆரம்பித்தனர். பிற்பாடு, இன்னும் சில யெகோவாவின் சாட்சிகளும் அவ்வாறே அங்கோலாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு இங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் கைதிகளாக இருந்த சமயத்தில் இங்குள்ள ஜனங்களிடம் நற்செய்தியை சொல்வதற்கு தங்களுக்கு கிடைத்த எல்லா சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டனர்.
1966-ல் சாவோ டோமிலுள்ள கட்டாய உழைப்பு முகாமில் வேலை செய்துகொண்டிருந்த சகோதரர்கள் அனைவரும் ஆப்பிரிக்காவுக்கே திரும்பினர். மீதமுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகள் ஒரு சிறு தொகுதியாக தைரியமாய் பிரசங்க வேலையைத் தொடர்ந்தனர். ஒன்றுகூடி பைபிளை படித்ததற்காக அவர்கள் துன்புறுத்தப்பட்டனர், அடிக்கப்பட்டனர், சிறையிலிடப்பட்டனர்; அவர்களை வந்து சந்திப்பதற்கோ உற்சாகப்படுத்துவதற்கோ யாருமில்லை. 1975-ல் போர்ச்சுகல் நாட்டவரிடமிருந்து இத்தீவுகள் சுதந்திரம் பெற்றன; அதோடு அங்கு போடப்பட்ட ராஜ்ய சத்தியம் எனும் விதைகள் படிப்படியாக பலன் தர ஆரம்பித்தன.
விரிவாக்கமும் கட்டுமானமும்
1993-ல் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்த அந்த மாதத்தில் அங்கிருந்த ராஜ்ய பிரஸ்தாபிகளின் உச்சநிலை எண்ணிக்கை 100. அதே ஆண்டில் போர்ச்சுகலிலிருந்து விசேஷ பயனியர்கள் இங்கு வந்தனர். போர்ச்சுகீசிய கிரியோல் மொழியை கற்றுக்கொள்வதற்கு முயற்சி எடுத்ததன் பலனாக இங்குள்ள மக்களின் பிரியத்தை சம்பாதித்தனர். அடுத்தபடியாக ராஜ்ய மன்றத்தை கட்டுவதற்கு நிலம் வாங்க முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இந்தத் தேவையை அறிந்ததும், மாரியா என்ற சகோதரி உதவிக்கு வந்தார். சிறிய வீடு கட்டப்பட்டிருந்த தனது நிலத்தில் பாதியை நன்கொடையாக வழங்கினார். பெரிய ராஜ்ய மன்றம் ஒன்றைக் கட்ட அது போதுமானதாக இருந்தது. அவருக்கு வாரிசு என யாருமே இல்லாததால், நிலம் வாங்கி விற்கும் பேராசை பிடித்தவர்கள் அந்த இடத்தின் மீது ஒரு கண் வைத்திருந்தார்கள்; ஆனால் அதை மாரியா அறியவில்லை. ஒரு நாள் பிரபல தொழிலதிபர் ஒருவர் மாரியாவிடம் பேசுவதற்கு வந்தார்.
“உங்களைப் பற்றி நான் ஒரு விஷயத்தை கேள்விப்பட்டேன், ஆனால் அது என்னவோ உங்களுக்கு நல்லதென எனக்குப் படவில்லை” என அவர் எச்சரித்தார். “உங்களுடைய நிலத்தை நன்கொடையாய் கொடுத்துவிட்டதாக கேள்விப்பட்டேன். இந்த நிலம் நகர்ப்புறத்தில் இருப்பதால் நல்ல விலைக்கு போகும் என்று உங்களுக்கு தெரியாதா?”
“இந்த நிலத்தை உங்களுக்கு கொடுத்திருந்தால், நீங்கள் எனக்கு எவ்வளவு பணம் தந்திருப்பீர்கள்?” என மாரியா கேட்டார். அவர் பதில் சொல்லாமல் நின்றபோது மாரியா இவ்வாறு சொன்னார்: “இந்த உலகத்திலுள்ள பணம் அனைத்தையும் நீங்கள் கொடுத்திருந்தாலும் போதுமானதாய் இருந்திருக்காது; ஏனென்றால் பணம் கொடுத்து உயிரை சம்பாதிக்க முடியாதே.”
“உங்களுக்குத்தான் பிள்ளைகள் இல்லையே?” என அவர் கேட்டார்.
சம்பாஷணையை முடிக்கும் வகையில், “இந்த நிலம் யெகோவாவுக்கு உரியது. அதைப் பல வருஷங்களுக்கு இரவலாக அவர் எனக்கு கொடுத்திருந்தார், அதை நான் இப்போது அவருக்கு திருப்பிக் கொடுத்திருக்கிறேன். என்றென்றும் வாழும் வாழ்க்கைக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என சொல்லிவிட்டு, “நித்திய ஜீவனை உங்களால் தர முடியுமா?” என அவரிடம் கேட்டார். அவர் மறுபேச்சின்றி நடையைக் கட்டினார்.
அதற்கு பிறகு என்ன நடந்தது? போர்ச்சுகலிலிருந்து வந்த தகுதிபெற்ற சகோதரர்களின் உதவியால் பிரமாதமான இரண்டு மாடி கட்டடம் அந்த இடத்தில் கட்டப்பட்டது. அதில் ஒரு கீழ்த்தளமும், விஸ்தாரமான ஒரு ராஜ்ய மன்றமும், தங்கும் அறைகளும் உள்ளன. மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் பயனியர்களுக்கும் பள்ளிகளை நடத்துவதற்கான வகுப்பறைகளும் அதில் இருக்கின்றன. இப்போது இரு சபைகள் அங்கு கூட்டங்களை நடத்துகின்றன. இவ்வாறு, இந்த தலைநகர் பகுதியில் மெய் வணக்கத்திற்குரிய கல்வி மையமாக அது சிறந்து விளங்குகிறது.
மெசாஷி என்ற நகரில் வைராக்கியமான 60 பிரஸ்தாபிகளைக் கொண்ட ஒரு சபை இருந்தது. ஒரு வாழை தோட்டத்தில் அமைந்திருந்த தற்காலிக ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்ததால், ஒரு நல்ல ராஜ்ய மன்றம் அவசரமாக தேவைப்பட்டது. இந்த விஷயம் அந்த நகரின் ஆட்சி அலுவலகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது. பரிவுள்ள அதிகாரிகள் முக்கிய வீதியில் ஒரு நல்ல நிலத்தை கொடுத்தார்கள். துரித கட்டுமான முறையை பயன்படுத்தி, போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த சகோதரர்களின் உதவியால் இரண்டு மாதங்களில் ஒரு சிறந்த ராஜ்ய மன்றம் கட்டப்பட்டது. அதைப் பார்த்த உள்ளூர் ஜனங்களுக்கு அவர்களுடைய கண்களையே அவர்களால் நம்ப முடியவில்லை. அந்த நகரத்திலேயே ஒரு கட்டுமான திட்டத்தில் ஈடுபட்டிருந்த சுவீடன் நாட்டுப் பொறியியலாளர் ஒருவர், சகோதர சகோதரிகள் வேலை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து மலைத்துப் போனார். “மெசாஷியிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் துரித கட்டுமான முறையை பயன்படுத்துகிறார்களே! ஆச்சரியமாக இருக்கிறது. நம்முடைய கட்டட வேலையையும் இப்படித்தான் ஒழுங்கமைக்க வேண்டும்” என அவர் சொன்னார். அந்த ராஜ்ய மன்றம் ஜூன் 12, 1999-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதற்கு 232 பேர் வந்திருந்தனர். மெசாஷி நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் முக்கிய கட்டடமாக அது ஆனது.
வரலாற்று சிறப்புமிக்க ஒரு மாநாடு
ஜனவரி 1994-ல் நடந்த “தெய்வீக போதனை” என்ற மூன்று நாள் மாநாடு சாவோ டோமிலும் பிரின்சிப்பிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க சம்பவமாக திகழ்ந்தது. அதுதான் அத்தீவுகளில் நடந்த முதல் மாநாடு. அது அந்த நாட்டிலுள்ள மிகவும் அருமையான ஒரு ஏ/சி கலையரங்கில் நடத்தப்பட்டது. அங்கிருந்த 116 ராஜ்ய பிரஸ்தாபிகள், அந்த மாநாட்டுக்கு கூடிவந்த 405 பேரைக் கண்டபோதும், முதன்முறையாக பைபிள் நாடகத்தைப் பார்த்தபோதும், புதிய வெளியீடுகளை பெற்றபோதும் எந்தளவு மகிழ்ந்திருப்பார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அங்குள்ள ஒரு வெப்பமண்டல கடற்கரை பகுதியில் 20 பேர் முழுக்காட்டப்பட்டார்கள்.
மாநாட்டு பிரதிநிதிகள் அணிந்திருந்த பேட்ஜ்கள் புதுமையாக இருந்ததால் அவை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன. போர்ச்சுகல் மற்றும் அங்கோலாவிலிருந்து 25 பேர் ஆஜராகியிருந்ததால் அது ஒரு சர்வதேச மாநாடு போல் இருந்தது. கனிவான கிறிஸ்தவ அன்பின் பிணைப்பு விரைவில் மேலிட்டது; கடைசியில் அவர்கள் பிரியாவிடை பெறும் சமயம் வந்தபோது அநேகர் கண்ணீர் விட்டனர்.—யோவான் 13:35.
நேஷனல் ரேடியோவைச் சேர்ந்த இதழாசிரியர்கள் மாநாட்டுக் கண்காணியை பேட்டி கண்டனர். அத்துடன், அந்த மாநாட்டில் கொடுக்கப்பட்ட பல பேச்சுக்களிலிருந்து சில பகுதிகளையும் அவர்கள் ஒலிபரப்பினர். அது உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்க சம்பவமாக இருந்தது; அதோடு, வெகுகாலமாகவே தனித்து விடப்பட்டிருந்த இந்த உண்மையுள்ள யெகோவாவின் சாட்சிகள், யெகோவாவின் காணக்கூடிய அமைப்புடன் நெருங்கி வருவதற்கும் அது உதவியது.
யெகோவாவுக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் பலன் கொடுத்தல்
ராஜ்ய நற்செய்தி பலன் தருகையில், அது யெகோவாவுக்கு புகழையும் கனத்தையும் சேர்க்கும் சிறந்த நடத்தையில் விளைவடைகிறது. (தீத்து 2:10) வாராந்தர பைபிள் படிப்பில் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஒரு வாலிப பெண்ணுக்கு அதிக திருப்தி அளித்தன. ஆனால், சபைக் கூட்டங்களுக்கு செல்வதை அவளுடைய அப்பா தடுத்தார். கிறிஸ்தவ கூட்டங்களின் முக்கியத்துவத்தையும், கூட்டங்களுக்கு செல்ல தான் விரும்புவதையும் பற்றி அப்பாவிடம் மரியாதையுடன் எடுத்துச் சொன்னாள்; ஆனால் அவர் சிறிதும் மசியாமல் உடனடியாக அவளை வீட்டை விட்டு வெளியேற்றினார். மற்ற வாலிப பிள்ளைகளைப் போல அவளும் ஒருவனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிடுவாள் என்றே அவர் நினைத்தார். ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக தன்னுடைய மகள் ஒரு கற்புள்ள கிறிஸ்தவப் பெண்ணாக சிறந்த வாழ்க்கை நடத்துவதை அறிந்தபோது அவளை மறுபடியும் வீட்டில் சேர்த்துக்கொண்டு, யெகோவாவை சேவிக்க முழு சுதந்திரம் கொடுத்தார்.
மற்றொரு உதாரணம், ஓர் இசைக் குழுவின் தலைவரைப் பற்றியது. தன்னுடைய ஒழுக்கங்கெட்ட வாழ்க்கைப் பாணியில் அவருக்கு விரக்தி ஏற்பட்டது. அவர் வாழ்க்கையின் நோக்கத்தை தேடி அலைந்தபோது யெகோவாவின் சாட்சிகள் அவரை சந்தித்தனர். பைபிளிலுள்ள ஒழுக்க தராதரங்களுக்கு இசைய அவர் வாழ ஆரம்பித்தபோது, ஊரே அவரைப் பற்றி பேசியது. எல்லா கெட்ட சகவாசங்களையும் ஒழிப்பது அவசியம் என்பதை அவர் விரைவில் உணர்ந்தார். (1 கொரிந்தியர் 15:33) அடுத்த முக்கிய படியாக, யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதற்கு அடையாளமாக முழுக்காட்டுதலும் பெற்றார்.
ஓர் இளைஞர் அணி, உண்மை மதத்தை தேடிக் கண்டுபிடிக்கும் படலத்தில் இறங்கியது. அந்த அணியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு சுவிசேஷ குழுக்களின் பாஸ்டர்களிடம் சம்பாஷித்தனர். இதனால் முன்பைவிட அதிக குழப்பமும் ஏமாற்றமும்தான் மிஞ்சியது. கடைசியில், அவர்கள் ஊர்சுற்றித் திரியும் ரௌடிகளாக மாறிவிட்டனர், இதனால் மதம் என்ற பேச்செடுத்தாலே கேலியும் கிண்டலும் செய்ய ஆரம்பித்துவிடுவர்.
ஒரு நாள், மிஷனரியாக இருக்கும் யெகோவாவின் சாட்சி ஒருவர் பைபிள் படிப்பு நடத்துவதற்காக சென்றபோது, அந்த இளைஞர்கள் இருந்த இடத்தின் வழியாக வந்தார். அவர்கள் இந்த மிஷனரியிடம் சில கேள்விகளை கேட்பதற்காக வீட்டின் கொல்லைப்புறத்திற்கு அழைத்து சென்றனர். அவரை ஒரு சிறிய ஸ்டூலில் உட்கார வைத்து ஆத்துமா, எரிநரகம், பரலோக வாழ்க்கை, உலக முடிவு போன்ற பல விஷயங்களின் பேரில் கேள்வி மேல் கேள்விகளை சரமாரியாகக் கேட்க ஆரம்பித்தனர். அந்த அணியின் தலைவன் தந்த பைபிளிலிருந்தே அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் இந்த யெகோவாவின் சாட்சி பதிலளித்தார். ஒரு மணிநேரத்திற்கு பிறகு, லா என்ற பெயருடைய அந்த தலைவன் இவ்வாறு சொன்னான்: “நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும்படி உங்களை அழைத்தபோது, மற்ற மதத்தவரிடம் நடந்துகொள்வது போலவே உங்களிடமும் கேலி கிண்டல் செய்து அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருந்தோம். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாராலும் பதில் சொல்ல முடியாதென்றே நினைத்தோம். ஆனால் நீங்களோ சரியான விடைகளை கொடுத்தீர்கள், அதுவும் பைபிளிலிருந்தே கொடுத்தீர்கள்! பைபிளைப் பற்றி நான் எப்படி நிறைய கற்றுக்கொள்வது? கொஞ்சம் சொல்லுங்களேன்.” லாவுடன் ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, விரைவில் அவர் கூட்டங்களுக்கு வரத் தொடங்கினார். அதன் பிறகு சீக்கிரத்தில் அவர் தன் அணியிலிருந்து விலகி, ரௌடித்தனமான வாழ்க்கைப் பாணியை விட்டொழித்தார். ஒரு வருடத்திற்குள் யெகோவாவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதலும் பெற்றார். இப்போது ஓர் உதவி ஊழியராக சேவை செய்கிறார்.
சட்டப்பூர்வமாக மணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வது அத்தீவில் வேரூன்றிப்போன ஒரு பழக்கம். பல ஜோடிகள் இப்படி மணம் செய்யாமல் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர், அவர்களுக்கு பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்த விஷயத்தில் கடவுளின் நோக்குநிலையை ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு சிரமம்தான். இக்கட்டான இந்தச் சூழ்நிலையை சமாளிக்க கடவுளுடைய வார்த்தை ஒருவருக்கு எப்படி உதவியது என்பதை கவனிப்பது நம் மனதை நெகிழ வைக்கும்.—2 கொரிந்தியர் 10:4-6; எபிரெயர் 4:12.
ஆன்டான்யூ என்பவர் தன் திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொண்டார். மக்காச்சோள அறுவடைக்குப் பின்பு அதைச் செய்ய அவர் திட்டமிட்டார்; ஏனெனில் திருமண விருந்து வைக்க அவரிடம் அப்போதுதான் கொஞ்சம் பணம் இருக்கும். அறுவடைக்கு முந்தின இரவில் அவருடைய பயிரை திருடர்கள் களவாடிக் கொண்டுபோய் விட்டனர். ஆகவே அடுத்த வருட அறுவடை வரும்வரை காத்திருக்க தீர்மானித்தார், ஆனால் மறுபடியும் அதேவிதமாக திருட்டுப் போனது. தன்னுடைய திருமணத்திற்கு பணம் திரட்டும் முயற்சி மீண்டும் ஒருமுறை தோல்வியடையவே, தனக்கு உண்மையில் எதிரியாக இருப்பவன் யார் என்பதை ஆன்டான்யூ புரிந்துகொண்டார். “சாத்தானுடைய விளையாட்டெல்லாம் இனி என்னிடம் பலிக்காது. விருந்து நடக்குமோ நடக்காதோ ஒன்றரை மாதத்திற்குள் எங்கள் கல்யாணம் நடக்கும்” என்று முடிவெடுத்தார். அதே போல, அவர்களது திருமணம் இனிதே நடந்தது; இதில் ஆச்சரியம் என்னவென்றால், திருமண விருந்துக்கு வேண்டிய கோழிகள், வாத்துகள், ஓர் ஆடு எல்லாவற்றையும் நண்பர்களே கொடுத்தனர். தங்களுடைய திருமணத்தை பதிவு செய்த பின்பு, ஆன்டான்யூவும் மனைவியும் ஆறு பிள்ளைகளும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றனர்.
பிரின்சிப் தீவில்
சமீப ஆண்டுகளில், சாவோ டோமிலிருந்து வட்டாரக் கண்காணியும் பயனியர்களும் பிரின்சிப் தீவிலுள்ள 6,000 குடிகளை இடையிடையே சென்று சந்திக்கிறார்கள். இத்தீவு வாசிகள் உபசரிக்கும் குணமுள்ளவர்கள், யெகோவாவின் சாட்சிகள் சொல்வதை ஆர்வமாக கேட்பவர்கள். துண்டுப்பிரதியைப் பெற்ற ஒருவர், அந்தப் பயனியர்களோடு சேர்ந்து தானும் இன்னும் அதிக துண்டுப்பிரதிகளை விநியோகிக்க விரும்பினார்; ஆகவே, அடுத்த நாள் அவர்களுடைய வரவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் வந்ததும் தன் விருப்பத்தை சொன்னார்; அதற்கு அந்தப் பயனியர்கள் அது தங்களுடைய வேலை என்பதை அவரிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்கவில்லை. வீட்டுக்காரர்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்தி, செவிகொடுத்து கேட்கும்படி சொல்வதற்கு தானும் அவர்களுடன் வீடு வீடாக செல்ல வேண்டும் என பிடிவாதமாக சொன்னார். கடைசியில் ஒருவழியாக, அவர்கள் செய்துவந்த முக்கியமான வேலையை பாராட்டிய பின் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.
1998-ல் சாவோ டோமிலிருந்து இரண்டு பயனியர்கள் பிரின்சிப்பிற்கு மாறிச் சென்றார்கள், சீக்கிரத்தில் 17 பைபிள் படிப்புகளை அவர்கள் நடத்த ஆரம்பித்தார்கள். பிரசங்கிக்கும் வேலை தொடர்ந்து விரிவடைந்தது, கொஞ்ச காலத்திற்குள்ளாகவே சபை புத்தகப் படிப்புக்கு சராசரியாக 16 பேரும், பொதுப் பேச்சுக்கு 30-க்கு அதிகமானோரும் வர ஆரம்பித்தனர். கூட்டம் நடத்தும் இடத்திற்கான தேவை குறித்து அந்நகரின் ஆட்சி அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது; மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், ராஜ்ய மன்றம் கட்டுவதற்கு நிலம் வழங்கப்பட்டது. ஒரு சிறிய ராஜ்ய மன்றத்தையும் அதோடு சேர்ந்து இரு விசேஷ பயனியர்கள் தங்குவதற்கான அறைகளையும் கட்டுவதற்கு சாவோ டோமிலிருந்து சகோதரர்கள் முன்வந்தார்கள்.
தொலை தூரத்திலுள்ள இத்தீவுகளில் நற்செய்தி பரவி, அதிக பலன்களை தருகிறது என்பதில் சந்தேகமில்லை. (கொலோசெயர் 1:6) ஜனவரி 1990-ல் சாவோ டோமிலும் பிரின்சிப்பிலும் 46 பிரஸ்தாபிகள் இருந்தனர். 2002 ஊழிய ஆண்டின்போது, ராஜ்ய அறிவிப்பாளர்கள் 388 என்ற உச்சநிலை எண்ணிக்கையை எட்டினர்! பிரஸ்தாபிகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுநேர ஊழியம் செய்கின்றனர்; சுமார் 1,400 பைபிள் படிப்புகள் நடத்தப்படுகின்றன. 2001-ல் நடந்த நினைவு ஆசரிப்புக்கு ஒருபோதும் இருந்திராத உச்சநிலையாக 1,907 பேர் வந்திருந்தனர். ஆம், இந்த வெப்பமண்டல தீவுகளில் யெகோவாவின் வசனம் படுவேகமாக பரவி வருகிறது.—2 தெசலோனிக்கேயர் 3:1.
[பக்கம் 12-ன் பெட்டி/படம்]
பிரபல வானொலி ஒலிபரப்புகள்
இத்தீவுகளில் வசிப்போர் மிகவும் விரும்பி படிக்கும் ஒரு புத்தகம் இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள்.a நேஷனல் ரேடியோ, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இப்புத்தகத்தின் தலைப்பில் 15 நிமிட நிகழ்ச்சியை ஒலிபரப்புகிறது. “இளைஞர்களே, உண்மையான அன்பா அல்லது மோகமா என்பதை எப்படி அறிந்துகொள்வீர்கள்?” என ஒலிபரப்பாளர் கேட்ட பிறகு அப்புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வாசிப்பது நேயர்களின் ஆர்வத்தை எவ்வளவாய்க் கிளறுகிறது! (அதிகாரம் 31-ஐ காண்க.) குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்b என்ற புத்தகத்திலிருந்தும் சில குறிப்பிட்ட பாகங்கள் இதைப் போலவே ஒலிபரப்பப்படுகின்றன.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 9-ன் படம்]
1994-ல் சாவோ டோமில் முதன் முதலாக கட்டப்பட்ட ராஜ்ய மன்றம்
[பக்கம் 10-ன் படங்கள்]
1. மெசாஷியில் துரித முறையைப் பயன்படுத்தி கட்டப்பட்ட ராஜ்ய மன்றம்
2. வரலாற்று புகழ்பெற்ற மாவட்ட மாநாடு இந்தக் கலையரங்கில் நடைபெற்றது
3. மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற இருப்பவர்கள் முகமலர நிற்கிறார்கள்
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
கோளம்: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.