கேள்விகள் பல—திருப்திகரமான பதில்களோ சில
நவம்பர் 1, 1755, புனிதர்கள் தினத்தன்று காலை வேளையில் இராட்சத பூமியதிர்ச்சி ஒன்று லிஸ்பன் நகரை ஆக்ரோஷமாக உலுக்கியது. அப்போது நகரவாசிகளில் பெரும்பாலோர் ஆலயத்தில் அமர்ந்திருந்தார்கள். கட்டிடங்கள் ஆயிரக்கணக்கில் அப்பளம் போல நொறுங்கி விழுந்தன, மக்களோ பல்லாயிரக்கணக்கில் மடிந்தார்கள்.
இந்த சோக நிகழ்ச்சிக்குப் பிறகு, பிரெஞ்சு எழுத்தாளர் வோல்டையர் தனது போயம் சுயர் லா டேசாஸ்ட்ரா டா லிஸ்பன் (லிஸ்பன் பேரழிவைப் பற்றிய கவிதை [ஆங்கிலம்]) என்ற நூலை வெளியிட்டார்; மக்களுடைய பாவங்களுக்காக வழங்கப்படும் தெய்வத் தண்டனையே இந்தப் பேரழிவு என்ற வாதத்தை அவர் தள்ளுபடி செய்தார். இத்தகைய பேரழிவுகள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவை அல்லது விளக்க முடியாதவை என்று கூறி, இவ்வாறு எழுதினார்:
ஊமையாக நிற்கிறது இயற்கை, அவளை கேள்வி கேட்கிறோம் வீணாக;
மனித குலத்திடம் பேசுகிற ஓர் இறைவன் வேண்டும் நமக்காக.
ஆனால் கடவுளைப் பற்றி முதன்முதல் கேள்விகள் எழுப்பியது வோல்டையர் அல்ல. சோக சம்பவங்களும் பேரழிவுகளும் ஆண்டாண்டு காலமாக மனிதருடைய மனங்களில் கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, முற்பிதாவாகிய யோபு பிள்ளைச் செல்வங்களை இழந்து, கொடிய வியாதியால் அவதியுற்ற சமயத்தில் இவ்வாறு கேட்டார்: “உறுதுயர் உற்றோர்க்கு [கடவுள்] ஒளி தருவானேன்? உள்ளம் கசந்தோர்க்கு உயிர் கொடுப்பானேன்?” (யோபு 3:20, பொது மொழிபெயர்ப்பு) துன்பமும் அநீதியும் தலைவிரித்தாடுகையில் அன்புள்ளம் நிறைந்தவரும் நல்லவருமான கடவுளால் எப்படி உறங்கிக் கொண்டிருக்க முடிகிறது என இன்றைக்கு அநேகர் யோசிக்கின்றனர்.
பஞ்சம், போர், வியாதி, மற்றும் மரணத்தை நிஜ வாழ்வில் சந்திக்கும்போது, மனிதகுலத்தின் மீது அக்கறை கொண்ட படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதையே அநேகர் அடியோடு மறுத்துவிடுகின்றனர். நாத்திக தத்துவஞானி ஒருவர் இவ்வாறு கூறினார்: “கடவுள் என்ற ஒருத்தர் இருந்தால், ஏன் இன்றைக்கு பிஞ்சுக் குழந்தைகளெல்லாம் அவதிப்படுகிறார்கள்?” இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் நடந்த நாசி படுகொலை போன்ற பயங்கர சோக நிகழ்வுகளால் இதைப் போன்ற முடிவுக்கே அநேகர் வந்திருக்கின்றனர். யூத எழுத்தாளர் ஒருவர் செய்தி மடலில் இவ்வாறு குறிப்பிட்டதை கவனியுங்கள்: “ஆஷ்விட்ஸில் படுகொலை நடந்ததற்கான காரணத்தை ஒரே வரியில் சொன்னால், மானிட விவகாரங்களில் தலையிடுவதற்கு கடவுள் என்ற ஒருவர் இல்லை.” பெரும்பான்மையர் கத்தோலிக்கராக உள்ள பிரான்சில் 1997-ல் ஒரு சுற்றாய்வு நடத்தப்பட்டது; 1994-ல் ருவாண்டாவில் நடந்தது போன்ற இனப் படுகொலைகளைப் பார்த்து, கடவுள் என ஒருவர் இருக்கிறாரா என்பதையே சுமார் 40 சதவீத மக்கள் சந்தேகித்ததாக அந்த ஆய்வு காட்டியது.
விசுவாசத்திற்கு பெரும் முட்டுக்கட்டையா?
துன்பங்கள் நேரிடுவதை கடவுள் ஏன் குறுக்கிட்டு தடுப்பதில்லை? இந்தக் கேள்வி அநேகருடைய “விசுவாசத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக” இருக்கிறது என கத்தோலிக்க சரித்திர பதிவாளர் ஒருவர் சொல்கிறார். அவர் இவ்வாறு கேட்கிறார்: “கோடிக்கணக்கான அப்பாவி மக்கள் செத்து மடிகையில், முழு இனங்கள் படுகொலை செய்யப்படுகையில், ஒன்றுமே செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற கடவுள் மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?”
அதைப் போலவே, லா கிரவா என்ற கத்தோலிக்க செய்தித்தாள் அதன் தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறது: “சரித்திரத்தில் நிகழ்ந்த சோக சம்பவங்களாக இருந்தாலும்சரி, தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட சோக சம்பவங்களாக இருந்தாலும்சரி, இயற்கை பேரழிவுகளாக இருந்தாலும்சரி, மாஃபியா தாக்குதல்களாக இருந்தாலும்சரி, அல்லது அன்பானவருடைய மரணமாக இருந்தாலும்சரி, இந்த ஒவ்வொரு விஷயத்திலும், பீதியுற்ற கண்கள் வானத்தைத்தான் ஏறெடுத்துப் பார்க்கின்றன. கடவுள் எங்கே? அவர்கள் விடை கேட்கின்றனர். அவர் கல்நெஞ்சக்காரர் தானே? அவர் எங்கேயும் இல்லைதானே?”
போப் இரண்டாம் ஜான் பால் 1984-ல் எழுதிய சால்வீஃபீக்கே டோலோரிஸ் என்ற அப்போஸ்தல கடிதத்தில் இந்த விவாதத்தை அலசினார். அவர் இவ்வாறு எழுதினார்: “ஒருபுறத்தில், இவ்வுலகம் கடவுள் இருப்பதையும், அவருடைய ஞானத்தையும், வல்லமையையும், மகத்துவத்தையும் மனிதருடைய கண்களுக்கு புலப்பட வைக்கிறது; மறுபுறத்திலோ, துன்பமும் துயரமும் அவருடைய குணாதிசயங்களை சில சமயங்களில் ஒரேயடியாகவே மறைப்பதாக தோன்றுகிறது, முக்கியமாக கணக்குவழக்கில்லா நியாயமற்ற சோக நாடகங்கள் அன்றாடம் அரங்கேறும்போதும், எண்ணற்ற தவறுகளுக்கு தக்க தண்டனையின்றிப் போகும்போதும் அவ்வாறு தோன்ற வைக்கிறது.”
அன்புள்ளம் நிறைந்த எல்லாம்-வல்ல கடவுள் ஒருவர் இருக்கிறாரென பைபிள் சொல்வதும், எங்கும் துன்பங்கள் நடப்பதும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகிறதா? தனிப்பட்டவருடைய வாழ்விலோ சமுதாய அளவிலோ ஏற்படும் அவலங்களை தடுப்பதற்கு அவர் தலையிடுகிறாரா? நமக்காக இன்று அவர் ஏதாவது செய்கிறாரா? இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க, வோல்டையர் வார்த்தைகளில் சொன்னால், “மனித குலத்துடன் பேசுகிற ஓர் இறைவன்” இருக்கிறாரா? பதில் தெரிந்துகொள்ள தயவுசெய்து அடுத்த கட்டுரையை வாசியுங்கள்.
[பக்கம் 3-ன் படங்கள்]
1755-ல் லிஸ்பனில் ஏற்பட்ட அழிவு, அதைப் போன்ற சம்பவங்கள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவை என்ற முடிவுக்கு வர வோல்டையரை உந்துவித்தது
[படங்களுக்கான நன்றி]
வோல்டையர்: From the book Great Men and Famous Women; லிஸ்பன்: J.P. Le Bas, Praça da Patriarcal depois do terramoto de 1755. ஃபோட்டோ: Museu da Cidade/Lisboa
[பக்கம் 4-ன் படம்]
ருவாண்டாவில் நடந்ததைப் போன்ற இனப் படுகொலைகளைக் கண்டு கடவுள் இருப்பதையே அநேகர் சந்தேகிக்கின்றனர்
[படத்திற்கான நன்றி]
AFP PHOTO