உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w03 6/15 பக். 17-22
  • மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பிரசங்கித்து, சீஷராக்குவதில்
  • குடும்பத்தில்
  • கிறிஸ்தவ சபையில்
  • எல்லாரிடமும் நல்லதையே பார்ப்பது
  • நல்மனம்—அதை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • தொடர்ந்து நற்குணத்தைக் காட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • கடவுளுடைய நற்குணத்தின் பரப்பெல்லை அதிசயமானது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • “அவருக்குத்தான் எவ்வளவு நல்ல மனது!”
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
w03 6/15 பக். 17-22

மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள்

“என் கடவுளே, என்னிடமுள்ள நல்லதுக்காக என்னை நினைத்தருளும்.”​—⁠நெகேமியா 13:⁠31, Nw.

1. யெகோவா எவ்வாறு அனைவரிடமும் நற்குணத்தை வெளிக்காட்டுகிறார்?

அநேக நாட்கள் மப்பும்மந்தாரமுமாக இருந்த பின் கதிரவன் முகம் காட்டும்போது ஆஹா என்றிருக்கும். ஒருவித உற்சாகமும் துடிப்பும் வந்துவிடும். அதேபோல் கொளுத்தும் வெயிலிலும் புழுக்கத்திலும் பல நாட்கள் அவதிப்பட்ட பின் மழை தூறும்போது, அல்லது சோவென்று கொட்டும்போது, அடடா, மனமெல்லாம் குளுகுளு என்றாகிவிடும் அல்லவா? அன்பான படைப்பாளராகிய யெகோவா, இந்தப் பூமியின் வளிமண்டலத்தில் வானிலை என்ற அருமையான பரிசை நமக்கு அளித்திருக்கிறார். கடவுளுடைய தாராள குணத்திற்கு கவனத்தைத் திருப்பி இயேசு இவ்வாறு சொன்னார்: “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” (மத்தேயு 5:43-45) ஆம், யெகோவா அனைவரிடமும் நற்குணத்தை வெளிக்காட்டுகிறார். அவரது ஊழியர்கள் மற்றவர்களிடம் நல்லதையே பார்ப்பதன் மூலம் அவரை பின்பற்ற கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.

2. (அ) எதன் அடிப்படையில் யெகோவா நற்குணத்தை வெளிக்காட்டுகிறார்? (ஆ) தமது தாராள குணத்திற்கு நாம் பிரதிபலிக்கும் விதத்தை யெகோவா எவ்வாறு கண்டறிகிறார்?

2 எதன் அடிப்படையில் யெகோவா நற்குணத்தை வெளிக்காட்டுகிறார்? ஆதாம் பாவம் செய்தது முதற்கொண்டே, மனிதர்களிடம் நல்லதைக் காண யெகோவா தவறவில்லை. (சங்கீதம் 130:3, 4) கீழ்ப்படிதலைக் காட்டும் மனிதர்களுக்கு பரதீஸில் வாழ்வளிப்பதே அவரது நோக்கம். (எபேசியர் 1:9, 10) வாக்குப்பண்ணப்பட்ட வித்துவின் மூலம் பாவத்திலிருந்தும் அபூரணத்திலிருந்தும் விடுவிக்கப்படும் எதிர்பார்ப்பை அவரது தகுதியற்ற தயவினால் பெற்றிருக்கிறோம். (ஆதியாகமம் 3:15; ரோமர் 5:12, 15) மீட்கும்பொருள் ஏற்பாட்டை ஏற்றுக்கொள்வது, இறுதியில் பரிபூரணத்தை அடைய வழிவகுக்கும். யெகோவா இப்போது நம் ஒவ்வொருவரையும் கவனிக்கிறார்; தமது தாராள குணத்திற்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்கிறோம் என்பதையும் இன்னும் பல காரியங்களையும் கண்டறிகிறார். (1 யோவான் 3:16) அவரது நற்குணத்திற்கு போற்றுதலைக் காட்ட நாம் செய்யும் எல்லாவற்றையும் அவர் பார்க்கிறார். “உங்கள் கிரியையையும், . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்.​—⁠எபிரெயர் 6:⁠10.

3. எந்தக் கேள்விக்கு நாம் கவனம் செலுத்துவது தகுந்தது?

3 ஆக, நாம் எப்படி யெகோவாவைப் போல் மற்றவர்களிடம் நல்லதையே பார்க்கலாம்? வாழ்க்கையின் நான்கு அம்சங்களில் இதை எவ்வாறு செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்; (1) கிறிஸ்தவ ஊழியம், (2) குடும்பம், (3) சபை, (4) மற்றவர்களிடம் உள்ள உறவு ஆகியவையே அந்த நான்கு அம்சங்கள்.

பிரசங்கித்து, சீஷராக்குவதில்

4. கிறிஸ்தவ ஊழியத்தில் பங்கெடுப்பது மற்றவர்களிடம் நல்லதைக் காண்பதற்கான வழியென எப்படி சொல்லலாம்?

4 கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமை சம்பந்தமாக சீஷர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது ‘நிலமே உலகம்’ என்று இயேசு விளக்கினார். கிறிஸ்துவின் இன்றைய சீஷர்களாக, நாம் இந்த உண்மையை உணர்ந்தே ஊழியத்தில் ஈடுபடுகிறோம். (மத்தேயு 13:36-38; 28:19, 20) நம் விசுவாசத்தை யாவரறிய அறிக்கையிடுவது வெளி ஊழியத்தில் உட்பட்டிருக்கிறது. வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் தெரு ஊழியத்திலும் யெகோவாவின் சாட்சிகள் பிரசித்தி பெற்றவர்களாக இருக்கும் உண்மைதானே, ராஜ்ய செய்தியைக் கேட்க தகுதியுள்ளவர்கள் அனைவரையும் தேடிக் கண்டுபிடிப்பதில் நாம் மும்முரம் காட்டுவதற்கு அத்தாட்சியாகும். சொல்லப்போனால், “நீங்கள் எந்த நகரத்திற்கு அல்லது கிராமத்திற்கு சென்றாலும், அங்கே தகுதியுள்ளவர்கள் யார் என்று தேடிக் கண்டுபிடியுங்கள்” என இயேசு அறிவுரை கூறினார்.​—⁠மத்தேயு 10:11, NW; அப்போஸ்தலர் 17:17; 20:⁠20.

5, 6. நாம் ஏன் தளர்ந்துவிடாமல் மறுபடியும் மறுபடியுமாக மக்களை அவர்களது வீடுகளில் சந்திக்கிறோம்?

5 நாம் அழைப்பின்றி மக்களை சந்திக்க செல்லும்போது நம் செய்தியில் அவர்கள் எந்தளவுக்கு ஆர்வம் காட்டுகிறார்கள் என கவனிக்கிறோம். சிலசமயம் வீட்டிலுள்ள ஒருவர் நாம் சொல்வதைக் காதுகொடுத்து கேட்பார், ஆனால் இன்னொருவர் “எங்களுக்கு இதுலயெல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல, போங்க போங்க” என்று உள்ளிருந்துகொண்டே குரல்கொடுக்கலாம். அதனால் பேச்சை அத்துடன் முடித்துக்கொண்டு வர வேண்டியதாகிறது. ஒருவர் ஆர்வம் காட்டாததால் அல்லது எதிர்ப்பதால் இன்னொருவர் செய்தியைக் கேட்க முடியாமல் போவது நம் மனதிற்கு எத்தனை வருத்தமாக இருக்கிறது! அப்படியென்றால் தொடர்ந்து எல்லாரிடமும் நல்லதையே பார்க்க நாம் என்ன செய்யலாம்?

6 அந்தப் பிராந்தியத்தில் மறுபடியும் பிரசங்கிக்கச் செல்லும்போது, உரையாடலைத் தொடரவிடாமல் தடுத்த அதே நபரிடம் நேரடியாக பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கலாம். முதல் சந்திப்பில் நடந்ததை நினைத்துப் பார்ப்பது, தயாரித்துச் செல்ல உதவும். எதிர்ப்பு தெரிவித்தவர் ஒருவேளை நல்ல உள்நோக்கத்தோடு அப்படி செய்திருக்கலாம்; ராஜ்ய செய்தியை கேட்டுக் கொண்டிருந்தவரை பாதுகாப்பதாக நினைத்து அப்படி செய்திருக்கலாம். நம்மைப் பற்றி தவறான செய்திகளை கேள்விப்பட்டதால் அவர் மனதில் தப்பெண்ணங்கள் வளர்ந்திருக்கலாம். ஆனாலும் அதே வீட்டில் ராஜ்ய நற்செய்தியை அறிவித்து தப்பெண்ணங்களை சாதுரியமாக சரிசெய்யும் முயற்சியில் நாம் தளர்ந்துவிடுவதில்லை. கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற அனைவருக்குமே உதவ நாம் விரும்புகிறோம். அந்த அறிவைப் பெறும்போது யெகோவா ஒருவரை தம்மிடமாக இழுத்துக்கொள்ளலாம்.​—⁠யோவான் 6:44; 1 தீமோத்தேயு 2:⁠4.

7. நம்பிக்கையான மனப்பான்மையோடு மக்களை சந்திக்க நமக்கு எது உதவும்?

7 குடும்பத்தில் எழக்கூடிய எதிர்ப்பைப் பற்றியும் இயேசு தம் சீஷர்களுக்கு அறிவுரை வழங்கினார். “மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்” என்று அவர் சொன்னார் அல்லவா? “ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே” என்றும் அவர் குறிப்பிட்டார். (மத்தேயு 10:35, 36) இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் மனப்பான்மைகளும் மாறுகின்றன. திடீரென நோய்வாய்ப்படும்போது, சொந்தபந்தத்தை இழக்கும்போது, பேரழிவு தாக்கும்போது, உணர்ச்சியில் புண்பட்டு துடிக்கும்போது என பல சந்தர்ப்பங்களில் நம் செய்திக்கு மக்கள் காட்டும் பிரதிபலிப்பு மாறிவிடுகிறது. நமக்கு நம்பிக்கையற்ற மனப்பான்மை இருந்தால், அதாவது நம் செய்தியில் மக்கள் எப்போதுமே ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்று நினைத்தால், அவர்களிடம் நல்லதையே பார்க்கிறோம் என்று சொல்ல முடியுமா? வேறொரு சந்தர்ப்பத்தில் உற்சாகத்தோடு அவர்களை மறுபடியும் போய் ஏன் சந்திக்கக் கூடாது? அப்போது அவர்கள் நடந்துகொள்ளும் விதம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கலாம். சிலசமயங்களில், நாம் என்ன சொல்கிறோம் என்பது மட்டுமல்ல, அதை எப்படி சொல்கிறோம் என்பதும் அவர்களது பிரதிபலிப்பை பாதிக்கிறது. பிரசங்கம் செய்வதற்கு முன் ஊக்கமாக ஜெபிப்பது நம்பிக்கையான மனப்பான்மையை நமக்கு நிச்சயம் தரும்; அதோடு, மனங்கவரும் விதத்தில் ராஜ்ய செய்தியை அனைவருக்கும் அறிவிக்க உதவும்.​—⁠கொலோசெயர் 4:6; 1 தெசலோனிக்கேயர் 5:⁠17.

8. கிறிஸ்தவர்கள் சத்தியத்தில் இல்லாத குடும்பத்தினரில் நல்லதையே காணும்போது என்ன ஏற்படலாம்?

8 சில சபைகளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அநேகர் யெகோவாவை சேவிக்கிறார்கள். பொதுவாக இது போன்ற குடும்பத்தில் மூத்தவர்கள், மணத்துணை உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் நல்லுறவை காத்துக்கொள்வதில் உறுதியாக இருந்ததாலேயே இளையவர்களின் மனம் மாறியிருக்கிறது; அவர்கள் மதிப்பும் மரியாதையும் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். கிறிஸ்தவ மனைவிமார் பலர் அப்போஸ்தலன் பேதுருவின் அறிவுரைக்கு இசைய நடந்ததால் கணவன்மாரை “போதனையின்றி” ஆதாயப்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது.​—⁠1 பேதுரு 3:1, 2.

குடும்பத்தில்

9, 10. யாக்கோபும் யோசேப்பும் எவ்வாறு தங்கள் குடும்பத்தினரில் நல்லதையே பார்த்தார்கள்?

9 குடும்பத்தில் உள்ளவர்களை இணைப்பது பந்த பாசம்; இந்த அம்சத்திலும் நாம் மற்றவர்களிடம் நல்லதையே காண வேண்டும். யாக்கோபு தன் குமாரர்களை நடத்திய விதம் நமக்கு பாடமாக அமைகிறது. அவர் முக்கியமாக யோசேப்பின் மீது உயிரையே வைத்திருந்ததாக பைபிளில் ஆதியாகமம் 37-⁠ம் அதிகாரம், 3, 4 வசனங்கள் காட்டுகின்றன. இதைக் கண்டு யோசேப்பின் சகோதரர்கள் பொறாமைப்பட்டார்கள். ஆகவே யோசேப்பை கொலை செய்யக்கூட திட்டம் தீட்டினார்கள். ஆனால் பல வருடங்களுக்குப் பிற்பாடு யாக்கோபும் யோசேப்பும் காட்டிய மனப்பான்மையை கவனியுங்கள். இருவருமே தங்கள் குடும்பத்தினரிடம் நல்லதைப் பார்த்தார்கள்.

10 பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட எகிப்தில் உணவு நிர்வாகியாக யோசேப்பு பணியாற்றியபோது தன் சகோதரர்களை வரவேற்றார். தான் யார் என்று உடனடியாக சொல்லாதபோதிலும் அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்படியும் வயதான தகப்பனுக்கு உணவை எடுத்துச் செல்லும்படியும் பார்த்துக்கொண்டார். ஆம், யோசேப்பு அவர்களுடைய வெறுப்புக்கு ஆளானபோதிலும், அவர்களுடைய நலனுக்காக செயல்பட்டார். (ஆதியாகமம் 41:53–42:8; 45:23) அதேபோல் யாக்கோபும் மரணப் படுக்கையில் இருந்தபோது தன் குமாரர்கள் எல்லாருக்கும் தீர்க்கதரிசன ஆசீர்வாதங்களை வழங்கினார். தவறான செயல்களால் அவர்கள் சில நல்பாக்கியங்களை இழந்தார்கள் என்றாலும் தேசத்தில் தங்களுக்குரிய பங்கை ஒருவரும் பெறாமல் போகவில்லை. (ஆதியாகமம் 49:3-28) நிலையான அன்பை யாக்கோபு எவ்வளவு அருமையாக வெளிக்காட்டினார்!

11, 12. (அ) குடும்பத்தினரிடம் நல்லதையே பார்ப்பதன் முக்கியத்துவத்தை என்ன தீர்க்கதரிசன முன்மாதிரி எடுத்துக்காட்டுகிறது? (ஆ) ஊதாரி மகன் பற்றிய இயேசுவின் உவமையில் வரும் தகப்பனிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

11 விசுவாசமற்ற இஸ்ரவேலரை யெகோவா நீடிய பொறுமையோடு கையாண்ட விதம், அவர் எவ்வாறு மக்களிடம் நல்லதையே பார்க்கிறார் என்பதை இன்னும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஓசியா தீர்க்கதரிசியின் குடும்ப சூழலை உதாரணம் காட்டி, யெகோவா தம் நிலையான அன்பைப் பற்றி குறிப்பிட்டார். ஓசியாவின் மனைவி கோமேர் பல முறை விபச்சாரத்தில் ஈடுபட்டாள். இருந்தபோதிலும் யெகோவா ஓசியாவிற்கு இவ்வாறு ஆலோசனை கொடுத்தார்: “அந்நிய தேவர்களை மதித்து, திராட்சரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் புத்திரர்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை நேசித்துக்கொள்.” (ஓசியா 3:1) ஏன் இந்த ஆலோசனை? இஸ்ரவேல் ஒரு தேசமாக தம்மை விட்டு விலகியிருந்தபோதும் அதிலிருந்த தனிநபர்கள் தம் பொறுமைக்கு சாதகமாக பிரதிபலிப்பார்கள் என்பது யெகோவாவிற்கு தெரிந்திருந்தது. “அதற்குப் பிறகு, இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரையும் [“யெகோவாவையும்,” NW] தங்கள் அரசனாகிய தாவீதையும் தேடி வருவார்கள்; இறுதி நாள்களில் ஆண்டவரையும் அவர்தம் நன்மைகளையும் நாடி நடுக்கத்தோடு வருவார்கள்” என ஓசியா அறிவித்தார். (ஓசியா [ஓசேயா] 3:5, பொது மொழிபெயர்ப்பு) குடும்பப் பிரச்சினைகளை சந்திக்கும்போது சிந்தித்துப் பார்ப்பதற்கு நிச்சயமாகவே இது அருமையான உதாரணம். குடும்பத்திலுள்ள மற்றவர்களிடம் தொடர்ந்து நல்லதையே பார்ப்பது, பொறுமைக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பதையாவது காட்டும்.

12 ஊதாரி மகன் பற்றிய இயேசுவின் உவமை, நம் குடும்பத்தினரிடம் எவ்வாறு நல்லதையே பார்க்கலாம் என்பதை மேலும் தெளிவுபடுத்துகிறது. இளைய மகன் ஊதாரித்தனமாக வாழ்வதை விட்டுவிட்டு வீடு திரும்பினான். தகப்பன் அவனை இரக்கத்தோடு நடத்தினார். ஆனால் ஒருபோதும் வீட்டை விட்டுப் போகாத மூத்த மகனின் புகாரைக் கேட்டு தகப்பன் என்ன சொன்னார்? “மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது” என்றார். இதை கோபத்தோடு அவர் சொல்லாமல் தன் அன்பை உறுதிப்படுத்தும் விதத்திலேயே சொன்னார். பிறகு, “உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற் போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே” என்றார். அதேவிதமாக நாமும் மற்றவர்களிடம் தொடர்ந்து நல்லதையே பார்க்கலாம்.​—⁠லூக்கா 15:11-32.

கிறிஸ்தவ சபையில்

13, 14. கிறிஸ்தவ சபையில் அன்பு என்னும் ராஜரிக பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதற்கான ஒரு வழி எது?

13 கிறிஸ்தவர்களாக நாம் அன்பு என்னும் ராஜரிக பிரமாணத்தைக் கடைப்பிடிக்க முயலுகிறோம். (யாக்கோபு 2:1-9) சபையில் வித்தியாசமான பொருளாதார நிலையில் இருப்பவர்களை நாம் ஏற்றுக்கொள்ளலாம் என்பது உண்மைதான். ஆனால் இனம், கலாச்சாரம், மதம் ஆகிய பின்னணிகளின் அடிப்படையில் ‘வேறுபாடுகள்’ (NW) காட்டுகிறோமா? அப்படியென்றால் யாக்கோபின் அறிவுரையை நாம் எப்படி கேட்டு நடக்கலாம்?

14 கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வரும் அனைவரையும் வரவேற்பதன் மூலம் நாம் பெருந்தன்மையைக் காட்டுகிறோம். ராஜ்ய மன்றத்திற்கு வரும் புதியவர்களிடம் நாமே முதலில் போய் பேசும்போது, அவர்களுடைய ஆரம்ப பயமும் கூச்சமும் பறந்துவிடும். சொல்லப்போனால், முதன்முதலில் கிறிஸ்தவ கூட்டத்திற்கு வந்த சிலர் இப்படி சொல்லியிருக்கிறார்கள்: “எல்லாருமே கலகலப்பாகப் பழகினார்கள். ஏற்கெனவே பரிச்சயமானவர்கள்போல் என்னிடம் நடந்துகொண்டார்கள். புது இடம் என்ற கூச்சமே போய்விட்டது.”

15. முதியவர்களிடம் அக்கறை காட்ட சபையிலுள்ள இளையவர்களுக்கு எப்படி உதவலாம்?

15 சில சபைகளில், கூட்டம் முடிந்தவுடன் இளைஞர்கள் ராஜ்ய மன்றத்திற்கு உள்ளேயோ வெளியேயோ ஒரு ஓரமாக போய் தனியாக பேசிக் கொண்டிருப்பார்கள்; முதியவர்களோடு ஒட்டாமல் அவர்களுக்கென்று ஒரு வட்டத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள். இப்படிப்பட்ட போக்கை தவிர்க்க என்ன நடவடிக்கை எடுப்பது நல்லது? முதலாவதாக, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வீட்டில் பயிற்றுவிக்கலாம்; கூட்டங்களுக்கு அவர்களைத் தயார்படுத்தலாம். (நீதிமொழிகள் 22:6) கூட்டங்களுக்குத் தேவையான பிரசுரங்களை எல்லாருக்காகவும் ரெடியாக எடுத்து வைக்கிற வேலையை பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம். அதுமட்டுமல்ல, ராஜ்ய மன்றத்திற்கு செல்லும்போது வயதான, பலவீனமான சகோதர சகோதரிகளிடம் சில வார்த்தைகள் பேசும்படி அவர்களை உற்சாகப்படுத்தலாம். அப்படிப்பட்டவர்களிடம் அர்த்தமுள்ள விஷயங்களை பேசுவது பிள்ளைகளுக்கு மனதிருப்தியைத் தரும்.

16, 17. வயதில் மூத்த சகோதர சகோதரிகள் சபையிலுள்ள இளையவர்களிடம் எவ்வாறு நல்லதையே பார்க்கலாம்?

16 வயதில் மூத்த சகோதர சகோதரிகளும் சபையிலுள்ள இளையவர்களிடம் அக்கறை காட்ட வேண்டும். (பிலிப்பியர் 2:4) தாங்களாகவே போய் அவர்களிடம் பேசி உற்சாகப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். பொதுவாக கூட்டத்தில் சிறந்த குறிப்புகள் சொல்லப்படுகின்றன. ஆகவே கூட்டத்தை ரசித்து மகிழ்ந்தார்களா என்று இளையவர்களிடம் கேட்கலாம்; ஏதேனும் குறிப்புகள் மனதைக் கவர்ந்தனவா, அவற்றைக் கடைப்பிடிக்க முடியுமா என்றெல்லாம்கூட கேட்கலாம். இளையவர்கள் சபையில் இன்றியமையாத பாகம் வகிக்கிறார்கள்; ஆகவே கூட்டங்களின்போது கூர்ந்து கவனிப்பதற்காகவும் பதில்கள் சொல்வதற்காகவும் அவர்களை பாராட்ட வேண்டும். அவர்கள் ஏதேனும் பேச்சுக்கள் கொடுக்கும்போதும் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டும். சபையில் பெரியவர்களோடு அவர்கள் பழகும் விதமும் வீட்டில் சின்னச் சின்ன வேலைகளை செய்யும் விதமும், பிற்காலத்தில் பெரிய பொறுப்புகளை நல்ல விதமாக நிறைவேற்றுவார்கள் என்பதைக் காட்டும்.​—⁠லூக்கா 16:⁠10.

17 பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், இளையவர்கள் சிலர் அதிக முன்னேற்றம் செய்கிறார்கள். ஆவிக்குரிய பண்புகளை அபிவிருத்தி செய்வதால் இன்னும் முக்கியமான நியமிப்புகளுக்குத் தகுதி பெறுகிறார்கள். பொறுப்புகள் கிடைக்கையில் சிறுபிள்ளைத்தனமாக நடப்பதை தவிர்க்க முடியும். (2 தீமோத்தேயு 2:22) அப்படிப்பட்ட பொறுப்புகள், உதவி ஊழியராவதற்கு முயலும் சகோதரர்களின் ‘தகுதியை சோதித்தறிய’ உதவும். (1 தீமோத்தேயு 3:10, NW) அவர்கள் கூட்டங்களில் நன்கு பங்குகொள்வதும், ஊழியத்தில் வைராக்கியமாக ஈடுபடுவதும், சபையிலுள்ள எல்லாரிடமும் அக்கறை காட்டுவதும், இன்னும் பொறுப்புகள் கொடுத்தால் திறம்பட கையாள முடியுமா என்பதை தீர்மானிக்க மூப்பர்களுக்கு உதவும்.

எல்லாரிடமும் நல்லதையே பார்ப்பது

18. நியாயம் விசாரிக்கையில் என்ன தவறை தவிர்க்க வேண்டும், ஏன்?

18 “நியாயத்தீர்ப்பு வழங்கும்போது பட்சபாதம் காட்டுவது நல்லதல்ல” என நீதிமொழிகள் 24:23 (NW) சொல்கிறது. சபையில் நியாய விசாரணையின்போது மூப்பர்கள் பட்சபாதம் காட்டாதிருப்பதே பரத்திலிருந்து வருகிற ஞானத்தின் அழகு. “பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது” என யாக்கோபு கூறினார். (யாக்கோபு 3:17) மற்றவர்களிடம் நல்லதைப் பார்க்கும்போது தனிப்பட்ட உறவுகளால் அல்லது உணர்ச்சிகளால் தங்கள் நியாயத்தீர்ப்பு பாதிக்கப்படாதபடி மூப்பர்கள் கட்டாயம் கவனமாயிருக்க வேண்டும். “தேவ சபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் [அல்லது, “தேவனைப் போன்றவர்களின்”; இப்பதம் மனித நியாயாதிபதிகளை அர்த்தப்படுத்துகிறது] நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச் செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள்” என்று சங்கீதக்காரன் ஆசாப் எழுதினார். (சங்கீதம் 82:1, 2) அதன்படி, நண்பர் அல்லது உறவினர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பட்சபாதம் காட்டுவதை கிறிஸ்தவ மூப்பர்கள் அறவே வெறுத்து ஒதுக்குகிறார்கள். இவ்வாறு சபையின் ஐக்கியத்தைக் காத்து, யெகோவாவின் பரிசுத்த ஆவி தடையின்றி செயல்பட வழிசெய்கிறார்கள்.​—⁠1 தெசலோனிக்கேயர் 5:⁠23.

19. நாம் எந்த விதங்களில் மற்றவர்களிடம் நல்லதையே பார்க்கலாம்?

19 நம் சகோதர சகோதரிகளிடம் நல்லதையே பார்க்கும்போது பவுலின் மனப்பான்மையைப் பின்பற்றுகிறோம். தெசலோனிக்கே சபைக்கு அவர் பின்வருமாறு எழுதியபோது அப்படிப்பட்ட மனப்பான்மையைக் காட்டினார்: “நாங்கள் கட்டளையிடுகிறவைகளை நீங்கள் செய்துவருகிறீர்களென்றும், இனிமேலும் செய்வீர்களென்றும், உங்களைக் குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறோம்.” (2 தெசலோனிக்கேயர் 3:4) மற்றவர்களிடம் நாம் நல்லதைப் பார்க்கும்போது அவர்களது குற்றங்குறைகளை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட அதிகமாய் தூண்டப்படுவோம். குறைகூறும் மனப்பான்மையை முற்றிலும் தவிர்த்து, எந்தெந்த விஷயங்களுக்காக நம் சகோதரர்களை பாராட்டலாம் என சிந்திக்க ஆரம்பிப்போம். “மேற்பார்வையாளர்களிடம் எதிர்பார்க்கப்படுவது அவர்கள் விசுவாசமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதே” என பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 4:2, NW) சபையில் மேற்பார்வையிடும் பொறுப்பில் இருப்பவர்கள் மட்டுமல்ல எல்லா கிறிஸ்தவ சகோதர சகோதரிகளும் காட்டும் விசுவாசம் நம்மை அவர்களிடம் கவர்ந்திழுக்கிறது. நாம் அவர்களிடம் நெருங்கிச் செல்கிறோம், இவ்வாறு கிறிஸ்தவ நட்பின் பிணைப்பை பலப்படுத்துகிறோம். தன் காலத்தில் வாழ்ந்த சகோதரர்களை பவுல் நோக்கிய விதமாகவே நாமும் நம் கிறிஸ்தவ சகோதரர்களை நோக்குகிறோம். அவர்களை ‘தேவனுடைய ராஜ்யத்தின் உடன் வேலையாட்களாகவும்’ ‘பக்கபலமாகவும்’ கருதுகிறோம். (கொலோசெயர் 4:11, NW) இவ்வாறு யெகோவாவின் மனப்பான்மையை நாமும் காட்டுகிறோம்.

20. மற்றவர்களிடம் நல்லதையே பார்ப்பதால் என்ன ஆசீர்வாதங்களைப் பெறுவோம்?

20 நெகேமியா சொன்ன விதமாகவே, “என் கடவுளே, என்னிடமுள்ள நல்லதுக்காக என்னை நினைத்தருளும்” என்று நாமும் சொல்கிறோம். (நெகேமியா 13:31, NW) யெகோவா மக்களிடம் நல்லதையே பார்க்கிறார் என்பதை அறிவதில்தான் எத்தனை சந்தோஷம்! (1 இராஜாக்கள் 14:13) நாமும் மற்றவர்களிடம் நல்லதையே பார்ப்போமாக. அப்படி செய்தால் மீட்கப்படுவோம், வெகு விரைவில் வரவிருக்கும் புதிய உலகில் நித்திய ஜீவனையும் பெறுவோம்.​—⁠சங்கீதம் 130:3-8.

எப்படி பதிலளிப்பீர்கள்?

• எதன் அடிப்படையில் யெகோவா எல்லாரிடமும் நற்குணத்தை வெளிக்காட்டுகிறார்?

• நாம் பின்வரும் அம்சங்களில் எவ்வாறு மற்றவர்களிடம் நல்லதையே பார்க்கலாம்:

• ஊழியத்தில்?

• குடும்பத்தில்?

• சபையில்?

• மற்றவர்களிடம் உள்ள உறவில்?

[பக்கம் 18-ன் படம்]

தன் சகோதரர்கள் வெறுப்பு காட்டியிருந்தபோதும் யோசேப்பு அவர்களிடம் நல்லதையே பார்த்தார்

[பக்கம் 19-ன் படம்]

எல்லாருக்கும் உதவ நாம் எடுக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு ஒரு தடை இல்லை

[பக்கம் 20-ன் படம்]

தன் குமாரர்கள் கெட்ட செயல்கள் செய்திருந்தபோதும் அவர்கள் அனைவரையுமே யாக்கோபு ஆசீர்வதித்தார்

[பக்கம் 21-ன் படம்]

கிறிஸ்தவ கூட்டங்களில் அனைவரையும் வரவேற்க வேண்டும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்