கொரியாவில் ஒரு பிரத்தியேக மொழியினரிடத்தில் ஊழியம் செய்தல்
ஆர்வம் பொங்க ஒரு தொகுதியினர் 1997-ம் ஆண்டு கோடையில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாட்டுக்கு வந்திருந்தனர்; ஆனால் இவர்கள் மௌனிகள். காது கேளாதோருக்காக கொரியாவில் நடத்தப்பட்ட முதல் மாநாடுதான் அது. உச்சநிலை எண்ணிக்கையாக 1,174 பேர் வந்திருந்தார்கள். பேச்சுகள், பேட்டிகள், நாடகம் என அனைத்து நிகழ்ச்சிகளும் கொரிய சைகை மொழியில் நடைபெற்றன. மாநாட்டு மன்றத்தில் அமர்ந்திருந்த அனைவரும் பார்ப்பதற்கு வசதியாக அந்நிகழ்ச்சிகள் புரொஜக்டரின் உதவியுடன் பெரிய திரையில் காட்டப்பட்டன. எண்ணிறந்த வாலண்டியர்கள் பல ஆண்டுகளாக அயராது உழைத்ததால் விளைந்த உச்சக்கட்ட பலனே அது.
இந்தப் பூமி பரதீஸாக மாறும் காலம் வரும்போது, “காது கேளாதோரின் செவிகள் கேட்கும்.” (ஏசாயா 35:5, பொது மொழிபெயர்ப்பு) அந்தப் பரதீஸில் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதற்கு காது கேளாதோர் உட்பட அனைவருமே முதலாவது ஆவிக்குரிய பரதீஸுக்குள் செல்ல வேண்டும்; அதாவது கடவுளுடைய சந்தோஷமுள்ள மக்கள் அனுபவிக்கும் செழுமையான ஆவிக்குரிய நிலைக்குள் வர வேண்டும். அவர்கள் யெகோவாவால் போதிக்கப்பட்டவர்களாய், அவருக்கு ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாக ஆக வேண்டும்.—மீகா 4:1-4.
சிறிய ஆரம்பம்
1960-களில் காது கேளாதவர்களிடம் ஓரளவு பிரசங்கிக்கப்பட்டது. ஆனால், 1970-களில்தான் அவர்களில் சிலர் கொரியாவின் தலைநகரான சியோலில் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்கள். விரைவாக எழுதத் தெரிந்த ஒரு கிறிஸ்தவ சகோதரர், பைபிள் வசனங்கள் உட்பட பேச்சுகளின் முக்கிய குறிப்புகளை எழுதுவதற்கு கரும்பலகையை பயன்படுத்தினார்.
1971-ல் டாஜானில் உள்ள ஒரு யெகோவாவின் சாட்சி, காது கேளாத தன் மகனுக்கும் அவனுடைய காது கேளாத நண்பர்களுக்கும் ராஜ்ய செய்தியை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். இந்தச் சிறிய தொகுதியிலிருந்து வந்த அநேக வைராக்கியமுள்ள சாட்சிகளே இன்று சைகை மொழி வட்டாரத்தில் தூண்களைப் போல் இருக்கிறார்கள்.—சகரியா 4:10.
மனப்பூர்வமாக தங்களை அளிக்கும் இளைஞர்கள்
காது கேளாதோர் யெகோவாவையும் இயேசுவையும் பற்றிய அறிவைப் பெற்று ஜீவ பாதையில் நடக்க வேண்டுமென்றால் மற்ற வாலண்டியர்கள் பெருமளவு முயற்சி செய்வது அவசியம். (யோவான் 17:3) இதற்காகவே, யெகோவாவின் சாட்சிகள் பலர் சைகை மொழியைக் கற்றிருக்கிறார்கள்; அதனால் சிறந்த அனுபவங்களையும் அறுவடை செய்திருக்கிறார்கள்.
பார்க் இன்-சன் என்ற 15 வயது இளைஞர் சைகை மொழி கற்றுக்கொள்வதை தன் இலட்சியமாக்கினார். அதை அடைய, ஒரு தொழிற்சாலையில் அப்ரென்டிஸ்ட்டாக வேலையில் சேர்ந்தார். அங்கு காது கேளாத 20 பேர் வேலை செய்தார்கள். சைகை மொழியையும் காது கேளாதவர்கள் சிந்திக்கும் விதத்தையும் கற்றுக்கொள்வதற்காக எட்டு மாதங்கள் அவர்களோடு சேர்ந்து நெருக்கமாக வேலை செய்தார். மறுவருடத்தில், அவர் ஓர் ஒழுங்கான பயனியர், அதாவது முழுநேர ராஜ்ய அறிவிப்பாளர் ஆனார். பைபிள் சத்தியத்திடம் ஆர்வம் காட்டிய காது கேளாத ஒரு தொகுதியினருக்கு சத்தியத்தை கற்றுக்கொடுத்தார். கொஞ்ச பேரே இருந்த அந்தத் தொகுதி படுவேகமாக வளர்ந்தது, சீக்கிரத்தில் 35-க்கும் அதிகமானோர் ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தனர்.—சங்கீதம் 110:3.
அதற்கு பின்னர், சியோலில் முதன்முதலாக சைகை மொழி பேசுபவர்களுக்கென கிறிஸ்தவ கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. வேகமாக வளர்ந்து வந்த அந்தத் தொகுதியில் சகோதரர் பார்க் இன்-சன் விசேஷித்த பயனியராக சேவை செய்தார். அதற்குள் அவருக்கு சைகை மொழி அத்துப்படியாயிற்று. காது கேளாத 28 பேருக்கு அவர் பைபிள் படிப்புகளை நடத்திய மாதங்களும் உண்டு. இவர்களில் பலர் நன்கு முன்னேறி யெகோவாவின் சாட்சிகளாயினர்.
அத்தனை சுறுசுறுப்பாக மனமுவந்து ஊழியம் செய்ததால், சியோலில் முதல் சைகை மொழி சபை அக்டோபர், 1976-ல் உருவானது. அந்த சபையில் 40 பிரஸ்தாபிகளும் இரண்டு ஒழுங்கான பயனியர்களும் இருந்தார்கள். இது கொரியாவின் பிற நகரங்களிலும் இந்த ஊழியத்தை முடுக்கி விட்டது. நற்செய்தியிடம் தணியா தாகம் கொண்ட காது கேளாதோர் பலர் இருக்கிறார்கள், சாட்சிகள் தங்களை சந்திக்க வர மாட்டார்களா என அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
காது கேளாதோர் மத்தியில் ஊழியம்
காது கேளாதோரை எப்படி தேடிக் கண்டுபிடித்தார்கள் என நீங்கள் யோசிக்கலாம். ஒருவர் மற்றொருவரை அறிமுகம் செய்து வைப்பதன் மூலம் நிறைய பேரை கண்டுபிடித்தார்கள். உள்ளூர் அரிசி கடைக்காரர்களிடம் கேட்டதில், அவர்களும் காது கேளாதோரின் பெயர்களையும் விலாசங்களையும் கொடுத்தார்கள். இந்தத் தகவல்களைப் பெறுவதற்கு சில அரசாங்க அலுவலகங்களும் உதவின. பிராந்தியம் எங்குமுள்ள காது கேளாதோர் குடியிருக்கும் இடங்களைக் கண்டுபிடிக்க ஊக்கமாக முயற்சி எடுத்ததன் பலனாக பிற்பாடு சைகை மொழி பேசும் நான்கு சபைகள் உருவாயின. சைகை மொழியை கற்றுக்கொள்ளும்படி கிறிஸ்தவ இளைஞர் பலர் உற்சாகப்படுத்தப்பட்டார்கள்.
யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம், சைகை மொழியை கற்றிருக்கிற விசேஷித்த பயனியர்களை இந்தச் சபைகளில் சேவை செய்ய நியமித்தது. சமீபத்தில், ஊழியப் பயிற்சி பள்ளியில் பட்டம் பெற்றவர்கள் இந்தச் சபைகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்; இவர்கள் சபையினரை ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் சமாளிக்க வேண்டிய சில பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிராந்தியத்தில் ஊழியம் செய்வதற்கு காது கேளாதோரின் கலாச்சார பின்னணியை புரிந்துகொள்ள முயல்வது அவசியம். சிந்தனையிலும் செயலிலும் அவர்கள் கொஞ்சமும் ஒளிவுமறைவில்லாதவர்கள். இது சிலருக்கு அதிர்ச்சி அளிக்கிறது, ஆகவே மனஸ்தாபங்கள் எழலாம். அதோடு, காது கேளாதோருக்கு யெகோவாவின் சாட்சிகள் பைபிள் படிப்பு நடத்துகையில், அவர்களுடைய மௌன மொழியில் அவர்கள் இன்னும் புலமை பெறுவதற்கு உதவி செய்வது அவசியம்; அவர்களுடைய வாசிப்பு மற்றும் படிப்பு திட்டத்தை இன்னும் மேம்படுத்த உற்சாகப்படுத்துவதும் அவசியம்.
காது கேளாதவர்கள் தங்களுடைய அன்றாட காரியங்களில் எதிர்ப்படும் பிரச்சினைகள் பிறருக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. அரசாங்க அலுவலகங்களில், மருத்துவமனைகளில், அத்தோடு சாதாரண கொடுக்கல் வாங்கலில்கூட “உரையாடுவது” அவர்களுக்கு பெரும் பாடாகிவிடுகிறது. பக்கத்து சபைகளில் உள்ளவர்கள் அன்புடன் உதவிக்கரம் நீட்டியிருப்பதால், காது கேளாதவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ சபையில் உண்மையான சகோதரத்துவத்தை அனுபவித்து மகிழ்ந்திருக்கிறார்கள்.—யோவான் 13:34, 35.
சந்தர்ப்ப சாட்சியால் பலன்கள்
கொரியாவின் முக்கிய தென்னக துறைமுகப் பட்டணம்தான் பூசான். அங்கே ஒரு யெகோவாவின் சாட்சி காது கேளாத இருவரை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் ஒரு துண்டு காகிதத்தில், “பரதீஸ் என்றால் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். நித்திய வாழ்க்கையைப் பற்றி சொல்லும் வேத வசனங்களை அறிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்” என எழுதிக் காட்டினார்கள். யெகோவாவின் சாட்சியான அந்த சகோதரர் அவர்களுடைய விலாசத்தை குறித்துக்கொண்டு அவர்களை மீண்டும் சந்திக்க ஏற்பாடு செய்தார். அவர் மீண்டும் சென்றபோது, ராஜ்ய செய்தியைக் கேட்பதற்காக ஒரு ரூம் நிறைய காது கேளாத ஆட்கள் காத்திருப்பதைக் கண்டார். இதுவே சைகை மொழியை கற்றுக்கொள்ள அவரைத் தூண்டுவித்தது. விரைவிலேயே பூசானில் சைகை மொழி சபை உருவானது.
அந்தச் சபையிலுள்ள ஒரு சகோதரர் சைகை மொழியில் உரையாடிக்கொண்டிருந்த காது கேளாத இருவரைப் பார்த்ததும் அவர்களை அணுகினார். அவர்கள் அப்போதுதான் ஒரு மத கூட்டத்துக்கு போய் வந்திருப்பதை அவர் அறிந்தார். அன்றைய தினமே மதியம் இரண்டு மணிக்கு ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டத்திற்கு வரும்படி அவர்களை அழைத்தார். அவர்களும் வந்தார்கள், பைபிள் படிப்பும் அவர்களுக்கு ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு கொஞ்ச காலத்திற்குள், அங்கு நடந்த மாவட்ட மாநாட்டிற்கு அவர்கள் இருவரும் காது கேளாத தங்கள் நண்பர்கள் 20 பேரை கூட்டிக் கொண்டு வந்தார்கள். அந்தத் தொகுதியினரில் பலர் யெகோவாவுக்கு தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். இருவர் மூப்பர்களாகவும் ஒருவர் உதவி ஊழியராகவும் சைகை மொழி சபைகளில் சேவை செய்கிறார்கள்.
மனவுறுதிக்கு பலன்
காது கேளாதோரில் சிலர் சைகை மொழி சபைகளுக்கு வெகு தொலைவில் குடியிருக்கிறார்கள். ஆகவே, ஆவிக்குரிய போஷாக்கை அவர்களுக்கு தவறாமல் பைபிளிலிருந்து அளிக்க பெரும்பாலும் அதிக முயற்சியும் மனவுறுதியும் தேவைப்படுகிறது. உதாரணமாக, 31 வயதுக்காரர் ஒரு தீவின் கரையோரப் பகுதியில் மீன் பிடிக்கும் வேலையை செய்து தன் வாழ்க்கையை நடத்தி வந்தார். அவருடைய தம்பியை யெகோவாவின் சாட்சிகள் சந்தித்திருக்கிறார்கள். தன் தம்பி சொல்லி பைபிளின் செய்தியை அவர் அறிந்து கொண்டார். ஆன்மீக தாகத்தை தணித்துக்கொள்ள, காதுகேளாத இந்த மீனவர் 16 கிலோமீட்டர் தூரம் படகில் பயணித்து கொரியாவின் தெற்கு கரையோரத்திலுள்ள டாங்யங் என்ற நகரத்திற்கு வந்தார். மாசான் நகரில் சைகை மொழி சபையிலுள்ள விசேஷ பயனியர் ஒருவரை சந்திப்பதற்காகவே அவர் இவ்வளவு தூரம் பயணித்தார். காது கேளாத அந்த மீனவருக்கு பைபிள் படிப்பு நடத்துவதற்காக இந்த விசேஷ பயனியர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் 65 கிலோமீட்டர் தூரம் பிரயாணம் செய்தார்.
மாசான் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு இந்தக் காது கேளாத பைபிள் மாணாக்கர் 16 கிலோமீட்டர் படகிலும், பின்பு 65 கிலோமீட்டர் பஸ்ஸிலும் பயணிக்க வேண்டியிருந்தது. அவருடைய மனவுறுதிக்கு பலன் கிடைத்தது. சில மாதங்களுக்குள்ளாகவே, அவர் சைகை மொழியில் தேர்ச்சியடைந்து இன்னும் அநேக கொரிய எழுத்துக்களை கற்றுக்கொண்டார்; மிக முக்கியமாக யெகோவாவோடு உறவை வளர்த்துக்கொள்வதற்கான ஒரே வழியையும் கற்றுக்கொண்டார். கூட்டங்களுக்கு வருவதும் தவறாமல் சாட்சி கொடுப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துகொண்டதும் சைகை மொழி சபையிருக்கும் பிராந்தியத்திற்கு குடிமாறினார். அது சுலபமாக இருந்ததா? இல்லவே இல்லை. ஒரு மாதத்திற்கு 3,800 டாலர் வரை சம்பாத்தியம் தந்த மீன்பிடிக்கும் வேலையை அவர் விட்டுவிட வேண்டியிருந்தது, ஆனால் அவரது மனவுறுதிக்கு பலன் கிடைத்தது. சத்தியத்தில் முன்னேறிய பின்பு அவர் முழுக்காட்டுதல் பெற்றார். இப்போது தன் குடும்பத்தாரோடு யெகோவாவை மகிழ்ச்சியுடன் சேவிக்கிறார்.
காது கேளாதோருக்கு மொழிபெயர்த்தல்
ராஜ்யத்தின் நற்செய்தி பெரும்பாலும் வாய் வார்த்தைகளில் அறிவிக்கப்படுகிறது. என்றாலும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து திருத்தமாக செய்தியை அறிவிப்பதற்கு அதைவிட நிலையான வடிவில் பைபிளை போதிப்பது முக்கியம். அதற்காகவே, முதல் நூற்றாண்டில் அனுபவமுள்ள மூப்பர்கள் புத்தகங்களையும் நிருபங்களையும் எழுதினர். (அப்போஸ்தலர் 15:22-31; எபேசியர் 3:5; கொலோசெயர் 1:2; 4:16) இன்று புத்தகங்கள், இன்னும் பல கிறிஸ்தவ பிரசுரங்கள் வாயிலாக ஆவிக்குரிய உணவு ஏராளமாக அளிக்கப்பட்டு வருகிறது. இவை பல்வேறு சைகை மொழிகள் உட்பட நூற்றுக்கணக்கான மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. கொரிய சைகை மொழியில் மொழிபெயர்ப்பதற்கு கிளை அலுவலகத்தில் சைகை மொழி மொழிபெயர்ப்பு துறை உள்ளது. வீடியோ துறை, சைகை மொழி வீடியோக்களை தயார் செய்கிறது. இந்த வீடியோக்கள், கொரியா எங்குமுள்ள சைகை மொழி சபைகளில் நற்செய்தியை அறிவிக்கும் காது கேளாதோருக்கும் ஆர்வம் காட்டுவோருக்கும் ஆன்மீக உணவை அளிக்கின்றன.
சைகை மொழி பேசுவதில் அநேகர் கெட்டிக்காரர்களாகி விட்டார்கள், வீடியோக்களை தயாரிப்பதிலும் அநேகர் உதவியிருக்கிறார்கள். இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும், பொதுவாக காது கேளாதோரின் பிள்ளைகளே சிறந்த மொழிபெயர்ப்பாளர்களாக திகழ்கிறார்கள். அவர்கள் பிறந்தது முதற்கொண்டே சைகை மொழியை கற்றவர்கள். இவர்கள் சைகையை திருத்தமாக காட்டுகிறார்கள். அதோடு, அத்தகைய சைகைகளாலும் முகபாவனைகளாலும் அந்த விஷயத்திற்கு இருதயப்பூர்வமாக அர்த்தமளித்து அதை வலியுறுத்திக் காட்டுகிறார்கள். இவ்வாறு மனதிலும் இருதயத்திலும் பதிய வைக்கிறார்கள்.
ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, இப்போது கொரியாவில் சைகை மொழியில் மாநாடுகளும் அசெம்பிளிகளும் தவறாமல் நடைபெறுகின்றன. இவற்றை நடத்துவதற்கு அதிக உழைப்பு, செலவு, முயற்சி ஆகியவை தேவைப்படுகின்றன. என்றாலும், இவற்றில் கலந்துகொள்பவர்கள் இந்த ஏற்பாட்டுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு உடனே சென்று விடாமல் அங்கு வந்துள்ள சகோதர சகோதரிகளோடு அருமையான கூட்டுறவை அனுபவிக்கிறார்கள், தங்களுக்கு கிடைத்த சிறந்த ஆன்மீக உணவைப் பற்றி மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் “பேசிக்கொள்கிறார்கள்.” இந்த பிரத்தியேக தொகுதியினரிடத்தில் ஊழியம் செய்வதால் கிடைக்கும் ஆன்மீக ஆசீர்வாதங்களை கருத்தில் கொள்கையில் அதற்காக எத்தனை சிரமப்பட்டாலும் அது தகுந்ததே.
[பக்கம் 10-ன் படம்]
கொரியாவில் தயாரிக்கப்பட்ட சைகை மொழி வீடியோக்கள்:
“கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?,”
“ஆவிக்குரிய ஆஸ்தியை மதித்தல்,”
“நம்மை எச்சரிக்கும் உதாரணங்கள்,”
“யெகோவாவின் அதிகாரத்திற்கு மரியாதை காட்டுங்கள்”
[பக்கம் 10-ன் படங்கள்]
கீழே கடிகார சுற்றில்: கொரியா கிளை அலுவலகத்தில் சைகை மொழி வீடியோ தயாரிக்கப்படுகிறது; தேவராஜ்ய பதங்களுக்கு சைகைகளை உருவாக்குகிறார்கள்; சைகை மொழி மொழிபெயர்ப்பு குழு; வீடியோ தயாரிக்கையில் சைகை காட்டுபவருக்கு உதவுகிறார்கள்