மெய்யான ஆறுதல் எங்கே கிடைக்கும்?
“நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவ[ன்] . . . சகல உபத்திரவங்களிலேயும் . . . எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்.”—2 கொரிந்தியர் 1:3, 4.
1. என்னென்ன சூழ்நிலைகளில் மக்களுக்கு அதிக ஆறுதல் தேவைப்படலாம்?
வியாதியால் கஷ்டப்படுகிறவர்கள் வாழ்க்கையே இருண்டுவிட்டதாக நினைக்கலாம். பூமியதிர்ச்சி, புயல், பஞ்சம் ஆகியவற்றில் சிக்கிய ஜனங்கள் நிர்க்கதியாக நிற்கலாம். போரினால் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரியவர்கள் இறக்கலாம், வீடுகள் தரைமட்டமாகலாம், அல்லது வீடுவாசல் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போக நேரிடலாம். அநீதி இழைக்கப்படுகையில் நீதி கேட்டு எங்கே போவது என தெரியாமல் ஜனங்கள் தத்தளிக்கலாம். இத்தகைய சோகங்களில் மூழ்கியவர்களுக்கு ஆறுதல் அவசியம். ஆனால் அது எங்கே கிடைக்கும்?
2. யெகோவா அளிக்கும் ஆறுதல் ஏன் நிகரற்றது?
2 சிலர் தனிநபர்களாக அல்லது அமைப்பாக ஆறுதல் அளிக்க முயலுகின்றனர். அவர்களுடைய ஆறுதலான வார்த்தைகள் மனதுக்கு இதமளிக்கின்றன. உடனடி தேவைகளை கவனித்துக் கொள்ள நிவாரணப் பணிகள் உதவுகின்றன. ஆனால் மெய்க் கடவுளாகிய யெகோவாவினால் மட்டுமே எல்லா பாதிப்புகளையும், இனி எப்போதுமே ஏற்படாதபடி முழுமையாக சரிசெய்ய முடியும். அவரைப் பற்றி பைபிள் பின்வருமாறு சொல்கிறது: “நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்.” (2 கொரிந்தியர் 1:3, 4) யெகோவா நமக்கு எப்படி ஆறுதல் அளிக்கிறார்?
பிரச்சினைகளின் ஆணிவேரை அடியோடு அகற்றுதல்
3. கடவுள் அளிக்கும் ஆறுதல் எப்படி மனிதனுடைய பிரச்சினையின் ஆணிவேரை அடியோடு அகற்றும்?
3 ஆதாமின் பாவம் மனித குலத்திற்கு அபூரணத்தை ஆஸ்தியாக அளித்திருக்கிறது. இது கணக்குவழக்கற்ற பிரச்சினைகளை உண்டுபண்ணி, மரணத்திற்கு இட்டு செல்கிறது. (ரோமர் 5:12) பிசாசாகிய சாத்தான் “உலகத்தின் அதிபதி”யாக இருப்பது நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. (யோவான் 12:31; 1 யோவான் 5:19) மனிதனின் மகிழ்ச்சியற்ற நிலைமையைக் கண்டு யெகோவா வெறுமனே வருத்தப்பட்டுவிட்டு சும்மா இருந்துவிடவில்லை. நமக்கு விடுதலையை அளிக்க அவர் தம்முடைய ஒரேபேறான குமாரனை கிரயபலியாக அனுப்பி வைத்தார், அவருடைய குமாரனில் விசுவாசம் வைத்தால் ஆதாமிய பாவத்தின் பாதிப்புகளிலிருந்து நாம் விடுதலை பெறலாம் என யெகோவா சொன்னார். (யோவான் 3:16; 1 யோவான் 4:10) வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும் பெற்றிருக்கும் இயேசு கிறிஸ்து, சாத்தானையும் அவனுடைய பொல்லாத ஒழுங்குமுறையையும் அழிக்கப் போவதைப் பற்றிகூட கடவுள் முன்னுரைத்தார்.—மத்தேயு 28:18; 1 யோவான் 3:8; வெளிப்படுத்துதல் 6:2; 20:10.
4. (அ) யெகோவாவின் வாக்குறுதிகளில் நம் நம்பிக்கையைப் பலப்படுத்துவதற்காக அவர் எதை அளித்திருக்கிறார்? (ஆ) அந்த விடுதலை எப்போது வரும் என்பதைப் புரிந்துகொள்ள யெகோவா எப்படி உதவுகிறார்?
4 கடவுள் தாம் முன்னறிவிப்பவை எல்லாம் நடந்தேறும் என்பதற்கு ஏராளமான ஆதாரங்களை பைபிளில் பதிவு செய்திருப்பதன் மூலம் தம்முடைய வாக்குறுதிகளில் நம் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறார். (யோசுவா 23:14) மனித கண்ணோட்டத்தில் அசாத்தியமாக தோன்றிய காரியங்களை சாத்தியமாக்கி தம் ஊழியர்களைக் காப்பாற்றிய விதத்தைப் பற்றியும் அதில் பதிவு செய்திருக்கிறார். (யாத்திராகமம் 14:4-31; 2 இராஜாக்கள் 18:13–19:37) மரித்தவர்களை உயிரோடு எழுப்புவது உட்பட “சகல நோய்களையும் நீக்”கப்போகும் தம் நோக்கத்தை இயேசு கிறிஸ்துவின் மூலம் யெகோவா செயலில் காட்டினார். (மத்தேயு 9:35; 11:3-6) அந்நோக்கம் எப்போது நிறைவேறும்? இக்கேள்விக்கு பதிலளிக்கும் விதத்தில், கடவுளுடைய புதிய வானமும் புதிய பூமியும் வருவதற்கு முன்னான காலமாகிய இந்த உலகின் கடைசி காலத்தைப் பற்றிய விவரிப்பு பைபிளில் கொடுக்கப்பட்டுள்ளது. இயேசு சொன்ன அந்த விவரிப்பு நம் காலத்திற்கு சரியாக பொருந்துகிறது.—மத்தேயு 24:3-14; 2 தீமோத்தேயு 3:1-5.
கஷ்டப்படுவோருக்கு ஆறுதல்
5. பூர்வ இஸ்ரவேலருக்கு ஆறுதலளிக்கையில் யெகோவா எதனிடம் அவர்களுடைய கவனத்தைத் திருப்பினார்?
5 பூர்வ இஸ்ரவேலருடன் யெகோவா நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கையில், கஷ்ட காலத்தில் அவர்களுக்கு எப்படி ஆறுதலளித்தார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. தாம் எப்படிப்பட்டவர் என்பதை அவர்களுக்கு நினைவூட்டினார். இது அவருடைய வாக்குறுதிகளில் அவர்களுடைய நம்பிக்கையைப் பலப்படுத்தியது. உயிருள்ள மெய்க் கடவுளாகிய யெகோவாவுக்கும், விக்கிரகங்களுக்கும்—தங்களையும் தங்கள் வணக்கத்தாரையும் காத்துக்கொள்ள வழியற்ற விக்கிரகங்களுக்கும்—இடையே காணப்படும் வேறுபாடுகளை தெள்ளத் தெளிவாக சித்தரித்துக் காட்டும்படி தம் தீர்க்கதரிசிகளை யெகோவா ஏவினார். (ஏசாயா 41:10; 46:1; எரேமியா 10:2-15) “என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்” என ஏசாயா தீர்க்கதரிசியிடம் யெகோவா குறிப்பிடுகையில், ஒரே மெய்க் கடவுளாகிய தாம் மட்டுமே உயர்ந்தவர் என்பதை வலியுறுத்த தம் கைவண்ணமாகிய படைப்பில் காணப்படும் உதாரணங்களையும் விளக்கங்களையும் பயன்படுத்தும்படி அவரை தூண்டினார்.—ஏசாயா 40:1-31.
6. எப்போது விடுதலை கிடைக்கும் என்பது சம்பந்தமாக சில சமயங்களில் என்ன அடையாளங்களை யெகோவா அளித்தார்?
6 சில சமயங்களில், யெகோவா எப்போது தம்முடைய மக்களை விடுவிக்கப் போகிறார், உடனடியாகவா அல்லது தாமதமாகவா என்பதை திட்டவட்டமாக சொல்வதன் மூலம் ஆறுதலளித்தார். ஒடுக்கப்பட்டிருந்த இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலை பெறுவதற்கான நேரம் நெருங்கியபோது, “இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரப்பண்ணுவேன்; அதற்குப்பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போகவிடுவான்” என சொன்னார். (யாத்திராகமம் 11:1) யோசபாத் ராஜாவின் காலத்தில் மூன்று தேசங்கள் ஒன்றாக சேர்ந்து யூதாவின் மீது படையெடுத்து வந்தபோது யெகோவா அவர்கள் சார்பாக “நாளை,” அதாவது மறுநாள் நடவடிக்கை எடுக்கப் போவதாக சொன்னார். (2 நாளாகமம் 20:1-4, 14-17) மறுபட்சத்தில் பாபிலோனிலிருந்து அவர்கள் விடுதலை செய்யப்படவிருப்பதைப் பற்றி சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஏசாயாவின் மூலம் பதிவு செய்து வைத்தார்; விடுதலைக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு எரேமியாவின் மூலம் மேலுமான விவரங்களை அளித்தார். விடுதலையின் நாள் நெருங்க நெருங்க அந்தத் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் கடவுளுடைய ஊழியர்களுக்கு எந்தளவுக்கு உற்சாகத்தின் ஊற்றுமூலமாய் திகழ்ந்திருக்கும்!—ஏசாயா 44:26–45:4; எரேமியா 25:11-14.
7. விடுதலை பற்றிய வாக்குறுதிகளில் பெரும்பாலும் எதுவும் இருந்தது, இது இஸ்ரவேலில் இருந்த விசுவாசமுள்ளவர்களை எப்படி பாதித்தது?
7 கடவுளுடைய ஜனங்களுக்கு ஆறுதலளித்த பெரும்பாலான வாக்குறுதிகளில் மேசியாவைப் பற்றிய தகவல் இருந்தது குறிப்பிடத்தக்கது. (ஏசாயா 53:1-12) வழி வழியாக, விசுவாசமுள்ளவர்கள் எண்ணற்ற சோதனைகளை சந்தித்தபோது இது அவர்களுக்கு நம்பிக்கையளித்தது. லூக்கா 2:25-ல் இப்படி வாசிக்கிறோம்: “அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் [அல்லது, தேற்றுதல்; உண்மையில், மேசியாவின் வருகையை அர்த்தப்படுத்துகிறது] வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்த ஆவி இருந்த[து].” வேத வசனங்களில் மேசியாவைப் பற்றி சொல்லப்பட்டிருப்பதை சிமியோன் அறிந்திருந்தார், அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறும் காலத்தை அவர் எதிர்நோக்கியிருந்தது அதற்கேற்ப வாழும்படி செய்தது. அவையெல்லாம் எப்படி நடந்தேறும் என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை, முன்னறிவிக்கப்பட்ட அந்த இரட்சிப்பு மெய்ம்மையாகும் வரை அவர் உயிரோடில்லை; ஆனாலும் கடவுள் ‘ஏற்பாடு செய்துள்ள மீட்பை’ அடையாளம் கண்டுகொண்ட போது அவர் அகமகிழ்ந்தார்.—லூக்கா 2:30, 31, பொது மொழிபெயர்ப்பு.
கிறிஸ்து அளித்த ஆறுதல்
8. அநேகர் தங்களுக்கு அவசியமென நினைத்த உதவியை, இயேசு அளித்த உதவியோடு எப்படி ஒப்பிடலாம்?
8 இயேசு கிறிஸ்து பூமியில் ஊழியம் செய்கையில் ஜனங்கள் தங்களுக்கு அவசியம் என்று நினைத்த உதவியை அவர் எப்போதும் அளிக்கவில்லை. சிலர் ரோம பேரரசின் ஆதிக்கத்திலிருந்து தங்களை மேசியா விடுவிக்க வேண்டுமென ஏங்கினார்கள். ஆனால் இயேசு புரட்சியை ஆதரிக்கவில்லை; “இராயனுடையதை இராயனுக்கு . . . செலுத்துங்கள்” என அவர்களுக்குச் சொன்னார். (மத்தேயு 22:21) ஓர் அரசாங்கத்தின் பிடியிலிருந்த ஜனங்களை விடுதலை செய்வது மட்டுமே கடவுளுடைய நோக்கமாக இருக்கவில்லை. ஜனங்கள் இயேசுவை ராஜாவாக்க விரும்பினார்கள், ஆனால் அவர், “அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க” போவதாக சொன்னார். (மத்தேயு 20:28; யோவான் 6:15) அவர் ராஜாவாக அரசாளுவதற்கான சமயம் அப்போது வரவில்லை; அதுமட்டுமின்றி, அந்த அதிகாரத்தை திருப்தியற்ற அந்த ஜனத்தாரிடமிருந்து அல்ல, யெகோவாவிடமிருந்து பெற்றுக்கொள்ளவிருந்தார்.
9. (அ) இயேசு பிரசங்கித்த ஆறுதலின் செய்தி என்ன? (ஆ) ஜனங்களின் அன்றாட பிரச்சினைகளோடு நற்செய்தி சம்பந்தப்பட்டிருந்ததை இயேசு எப்படி காட்டினார்? (இ) இயேசுவின் ஊழியம் எதற்கு அஸ்திவாரமாய் அமைந்தது?
9 “கடவுளின் ராஜ்ய நற்செய்தி”யில் இயேசு அளித்த ஆறுதல் அடங்கியிருந்தது. சென்ற இடமெல்லாம் இயேசு இந்த செய்தியையே பிரசங்கித்தார். (லூக்கா 4:43, திருத்திய மொழிபெயர்ப்பு) மேசியானிய ராஜாவாக மனித குலத்திற்கு தாம் செய்யப் போவதை செயலில் காட்டுவதன் மூலம் இந்தச் செய்தி மக்களின் அன்றாட பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டிருப்பதை வலியுறுத்தினார். குருடருக்கு கண் பார்வை அளித்தார், ஊமையர்களை பேச வைத்தார் (மத்தேயு 12:22; மாற்கு 10:51), ஊனமடைந்தவர்களை சுகப்படுத்தினார் (மாற்கு 2:3-12), அருவருக்கத்தக்க வியாதியால் பீடிக்கப்பட்ட சக இஸ்ரவேலர்களை குணப்படுத்தினார் (லூக்கா 5:12, 13), கடும் நோய்வாய்ப்பட்டவர்களின் நோயைத் தீர்த்து வைத்தார் (மாற்கு 5:25-29); இதையெல்லாம் செய்வதன் மூலம் துன்பப்படுகிறவர்களுக்கு உயிர் வாழ்வதற்கான புதிய காரணத்தை அளித்தார். இறந்த பிள்ளைகளை உயிரோடு எழுப்புவதன் மூலம் துக்கத்தில் துடித்த குடும்பத்தாரின் துயர் துடைத்தார். (லூக்கா 7:11-15; 8:49-56) பயங்கரமாக பொங்கியெழுந்த புயற்காற்றை அடக்கினார், பெரும் திரளானோருக்கு உணவளித்து அவர்களுடைய பசியாற்றினார்; இப்படி செய்ய தமக்கு சக்தியிருப்பதை செயலில் காட்டினார். (மாற்கு 4:37-41; 8:2-9) மேலும், பிரச்சினைகளை திறமையாக சமாளிக்கவும் மேசியாவின் நீதியான ஆட்சியின் நம்பிக்கையை மனதில் நிரப்பவும் உதவுகிற வாழ்க்கையின் நியதிகளை இயேசு கற்பித்தார். இவ்வாறு தம் ஊழியத்தைத் தொடருகையில் விசுவாசத்துடன் செவிசாய்த்தவர்களுக்கு அவர் ஆறுதலளித்தார்; அதுமட்டுமின்றி, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மக்களுக்கு உற்சாகம் அளிப்பதற்கு தேவையான அஸ்திவாரத்தையும் அப்போதே அமைத்தார்.
10. இயேசுவின் பலியால் எது சாத்தியமானது?
10 இயேசு தம் மனித உயிரை பலியாக செலுத்தி, பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட்டு 60-க்கும் அதிக வருடங்களுக்குப் பிறகு தேவ ஆவியின் ஏவுதலால் அப்போஸ்தலன் யோவான் இப்படி எழுதினார்: “என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.” (1 யோவான் 2:1, 2) இயேசுவின் பரிபூரண பலியின் பலனாக நாம் அளவிலா ஆறுதலைப் பெற்றிருக்கிறோம். அத்தோடு நம் பாவங்களுக்கு மன்னிப்பு, சுத்தமான மனசாட்சி, கடவுளுடன் அங்கீகரிக்கப்பட்ட உறவு, நித்திய ஜீவனின் எதிர்பார்ப்பு ஆகியவை நமக்குக் கிடைக்கும் என அறிந்திருக்கிறோம்.—யோவான் 14:6; ரோமர் 6:23; எபிரெயர் 9:24-28; 1 பேதுரு 3:21.
பரிசுத்த ஆவி—ஓர் ஆறுதல்
11. தம்முடைய மரணத்திற்கு முன்பு ஆறுதலளிக்கும் எந்தவொரு ஏற்பாட்டைப் பற்றி இயேசு வாக்குறுதியளித்தார்?
11 இயேசு தம் உயிரை பலியாக அளிப்பதற்கு முந்தின மாலைப்பொழுதில், சீஷர்களுக்கு ஆறுதலளிக்க தம் பரலோக தகப்பன் செய்திருக்கும் மற்றொரு ஏற்பாட்டைப் பற்றி குறிப்பிட்டார். “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை [“உதவியாளனை,” NW] [ஆறுதலளிப்பவர்; கிரேக்கு, பாராக்லிட்டாஸ்] அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” என்றார். “பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” என அவர்களுக்கு இயேசு உறுதியளித்தார். (யோவான் 14:16, 17, 26) உண்மையில் அந்தப் பரிசுத்த ஆவி எப்படி அவர்களுக்கு ஆறுதலளித்தது?
12. இயேசுவின் சீஷர்கள் காரியங்களை நினைவுபடுத்திக் கொள்வதற்கு பரிசுத்த ஆவி உதவியது அநேகருக்கு எப்படி ஆறுதலளித்தது?
12 அப்போஸ்தலர்கள் பெருமளவு போதனையை இயேசுவிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள். உண்மையில் அது அவர்களுக்கு மறக்க முடியாத அனுபவம்; ஆனால் அவர் சொன்னதையெல்லாம் அவர்கள் மறக்காமல் நினைவில் வைத்திருப்பார்களா? ஞாபக மறதியால் முக்கியமான போதனைகளை மறந்துவிட வாய்ப்பிருந்ததா? ‘அவர் சொன்ன எல்லாவற்றையும் [பரிசுத்த ஆவி] அவர்களுக்கு நினைப்பூட்டும்’ என இயேசு உறுதியளித்தார். எனவே இயேசு இறந்து சுமார் எட்டு வருடங்கள் கழித்து மத்தேயுவால் முதல் சுவிசேஷத்தை எழுத முடிந்தது; அதில் மனதிற்கு இதமளிக்கும் இயேசுவின் மலைப் பிரசங்கத்தையும், ராஜ்யம் சம்பந்தமாக அவர் சொன்ன எண்ணற்ற உவமைகளையும், அவருடைய பிரசன்னத்தின் அடையாளம் பற்றிய விவரமான கலந்தாலோசிப்பையும் எழுதி வைக்க முடிந்தது. 50-க்கும் அதிக ஆண்டுகளுக்குப் பிறகு, இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசி சில நாட்களில் நடந்த சம்பவங்களைப் பற்றிய விரிவான விவரங்களின் நம்பகமான பதிவை அப்போஸ்தலன் யோவானால் எழுத முடிந்தது. தேவ ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட இந்த பதிவுகள் இன்றும் எவ்வளவு உற்சாகமளிக்கின்றன!
13. ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு பரிசுத்த ஆவி எப்படி ஆசானாக இருந்தது?
13 பரிசுத்த ஆவி இயேசுவின் வார்த்தைகளை சீஷர்களுக்கு வெறுமனே நினைவுபடுத்தாமல், கடவுளுடைய நோக்கத்தை முழுமையாக புரிந்துகொள்ளும்படி கற்பிக்கவும் வழிநடத்தவும் செய்தது. இயேசு தம் சீஷர்களுடன் இருந்தபோது சொன்ன அநேக விஷயங்களை அவர்களால் அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை. எனினும் பின்னர், கடவுளுடைய நோக்கத்தின் படிப்படியான நிறைவேற்றங்களை பற்றிய விளக்கங்களை யோவான், பேதுரு, யாக்கோபு, யூதா, பவுல் ஆகியோர் எழுதும்படி பரிசுத்த ஆவி வழிநடத்தியது. இவ்வாறு, ஆசானாக பரிசுத்த ஆவி செயல்படுவதன் மூலம் சீஷர்களை கடவுள் வழிநடத்துகிறார் என்பதற்கு முக்கிய ஆதாரத்தை அவர்களுக்கு அளித்தது.
14. பரிசுத்த ஆவி என்னென்ன வழிகளில் யெகோவாவின் ஜனங்களுக்கு உதவியது?
14 கடவுள் இனி மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலரை அல்ல, ஆனால் கிறிஸ்தவ சபையை ஆதரிக்கப் போகிறார் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவும் பரிசுத்த ஆவியின் அற்புதமான வரங்கள் அவர்களுக்கு உதவியது. (எபிரெயர் 2:4) தனி நபர்கள் வெளிக்காட்டிய அந்த ஆவியின் கனி, உண்மையில் இயேசுவின் சீஷர்கள் யார் என்பதை அடையாளம் கண்டுகொள்வதிலும் முக்கிய அம்சமாக அமைந்தது. (யோவான் 13:35; கலாத்தியர் 5:22-24) அந்தச் சபையார் துணிவும் தைரியமுமிக்க சாட்சிகளாக திகழும்படி அவர்களை பரிசுத்த ஆவி பலப்படுத்தியது.—அப்போஸ்தலர் 4:31.
பெரும் அழுத்தத்தை சமாளிக்க உதவி
15. (அ) அன்றும் இன்றும் கிறிஸ்தவர்கள் எதிர்ப்படும் அழுத்தங்கள் யாவை? (ஆ) உற்சாகம் அளிப்பவருக்கும்கூட சில சமயங்களில் உற்சாகம் தேவைப்படுவது ஏன்?
15 யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் உண்மை பற்றுறுதிமிக்க அனைவரும் ஏதோவொரு விதத்தில் துன்புறுத்துதலை எதிர்ப்படலாம். (2 தீமோத்தேயு 3:12) எனினும் அநேக கிறிஸ்தவர்கள் தாங்க முடியாதளவுக்கு அழுத்தங்களை அனுபவித்திருக்கிறார்கள். நவீன காலங்களில் சிலர் கலக கும்பல்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள், சித்திரவதை முகாம்கள், சிறைச்சாலைகள், கடின உழைப்பாளி முகாம்கள் ஆகியவற்றில் மனிதநேயமற்ற சூழலில் அவஸ்தைப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கங்களே கொடூரமாக துன்புறுத்த ஆரம்பித்திருக்கின்றன அல்லது சட்டவிரோதமான கும்பல்களின் அடாவடிச் செயல்களை கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றன. மேலும் கிறிஸ்தவர்கள் தீராத நோய்களால் அவதிப்படுகிறார்கள் அல்லது படுமோசமான குடும்ப பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க அநேக சக கிறிஸ்தவர்களுக்கு உதவுகிற முதிர்ச்சி வாய்ந்த ஒரு கிறிஸ்தவரும் கஷ்டத்தை சந்திக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உற்சாகம் அளிப்பவருக்கும்கூட உற்சாகம் தேவைப்படலாம்.
16. தாவீது பெரும் அழுத்தத்திலிருக்கையில் அவருக்கு எப்படி உதவி கிடைத்தது?
16 தாவீதைக் கொல்வதற்காக சவுல் ராஜா தேடியலைந்த சந்தர்ப்பத்தில் உதவிக்காக தாவீது கடவுளை நாடினார்; ‘தேவனே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்,’ “உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்” என கெஞ்சினார். (சங்கீதம் 54:2, 4; 57:1) தாவீதுக்கு உதவி கிடைத்ததா? ஆம், கிடைத்தது. அந்தச் சமயத்தில் தாவீதை வழிநடத்த காத் என்னும் தீர்க்கதரிசியையும், அபியத்தார் என்னும் ஆசாரியனையும் கடவுள் பயன்படுத்தினார்; இளம் தாவீதைப் பலப்படுத்த சவுலின் குமாரனாகிய யோனத்தானையும் அவர் பயன்படுத்தினார். (1 சாமுவேல் 22:1, 5; 23:9-13, 16-18) தேசத்தின் மேல் பெலிஸ்தர் படையெடுத்து வருவதற்கும் யெகோவா அனுமதித்தார், இவ்வாறு சவுலின் கவனத்தைத் திசைதிருப்பி தாவீதைத் தேடி அவர் போகாதிருக்கும்படி செய்தார்.—1 சாமுவேல் 23:27, 28.
17. பெரும் அழுத்தத்திலிருக்கையில் இயேசு யாருடைய உதவியை நாடினார்?
17 பூமியில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை முடியவிருந்த சமயத்தில் பெரும் துன்பத்தை அவரும் எதிர்ப்பட்டார். தம் நடத்தை தம்முடைய பரலோக தகப்பனின் பெயரை எப்படி பாதிக்கும், அதனால் மனித குலத்தின் எதிர்காலம் என்னவாகும் என்பதை அவர் முழுமையாக அறிந்திருந்தார். அவர் உருக்கமாக ஜெபித்தார், ‘மிகவும் வியாகுலப்பட்டார்.’ அந்த கஷ்ட நேரத்தில் தேவைப்பட்ட ஆதரவை இயேசு பெறும்படி கடவுள் பார்த்துக்கொண்டார்.—லூக்கா 22:41-44.
18. கடும் துன்புறுத்துதலை சந்தித்த ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு எத்தகைய ஆறுதலை கடவுள் அளித்தார்?
18 முதல் நூற்றாண்டு சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்பு கடும் துன்புறுத்துதலை கிறிஸ்தவர்கள் எதிர்ப்பட்டார்கள்; அது அந்தளவுக்குக் கடுமையாக இருந்ததால் அப்போஸ்தலர்கள் தவிர மற்றெல்லாரும் எருசலேமிலிருந்து சிதறிப்போனார்கள். ஆண்களும் பெண்களும் அவர்களுடைய வீடுகளிலிருந்து தரதரவென இழுத்து வரப்பட்டார்கள். அவர்களுக்கு எத்தகைய ஆறுதலை கடவுள் அளித்தார்? அவர்களுக்கு “அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம்,” பரலோகத்தில் கிறிஸ்துவுடன் இருக்கும் நித்திய ஆஸ்தி உண்டென தம்முடைய வார்த்தையிலிருந்து உறுதியளித்தார். (எபிரெயர் 10:34; எபேசியர் 1:18, 19, 21) அவர்கள் தொடர்ந்து ஊழியம் செய்கையில் கடவுளுடைய ஆவி தங்களுடன் இருப்பதற்கான ஆதாரத்தை கண்ணாரக் கண்டார்கள், அவர்கள் பெற்ற அனுபவங்கள் மேலும் மகிழ்ச்சியை அளித்தன.—மத்தேயு 5:11, 12; அப்போஸ்தலர் 8:1-40.
19. பவுல் கடும் துன்புறுத்துதலை அனுபவித்த போதிலும் கடவுள் அளித்த ஆறுதலைக் குறித்து எப்படி உணர்ந்தார்?
19 ஒருகாலத்தில் மற்றவர்களை மோசமாக துன்புறுத்தி வந்த சவுலே (பவுல்) கிறிஸ்தவரானதால் அவரும் துன்புறுத்துதலை சந்தித்தார். சீப்புரு தீவில் மாயவித்தைக்காரன் ஒருவன் பொய் பித்தலாட்டங்களினால் பவுலின் ஊழியத்திற்கு இடைஞ்சலாக இருந்தான். கலாத்தியாவில் ஒரு கூட்டத்தினர் பவுலை கல்லெறிந்து, அவர் இறந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு போய்விட்டார்கள். (அப்போஸ்தலர் 13:8-10; 14:19) மக்கெதோனியாவில் பவுல் தடியடி பட்டார். (அப்போஸ்தலர் 16:22, 23) எபேசுவில் கலகக் கும்பலின் வன்முறை செயல்களுக்குப் பின்பு அவர் இப்படி எழுதினார்: “பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று. . . . மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.” (2 கொரிந்தியர் 1:8, 9) ஆனால் அதே கடிதத்தில், இந்தக் கட்டுரையின் 2-வது பாராவில் மேற்கோள் காட்டப்பட்ட ஆறுதலான வார்த்தைகளை பவுல் எழுதினார்.—2 கொரிந்தியர் 1:3, 4.
20. அடுத்த கட்டுரையில் எதைக் கலந்தாராய்வோம்?
20 நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு அத்தகைய ஆறுதலை அளிக்கலாம்? திடீரென ஒரு பேரழிவு பலரைத் தாக்கும்போதோ தனிப்பட்ட விதமாக துன்புறுத்துதலை அனுபவிக்கும்போதோ இன்று அநேகருக்கு தேவை ஆறுதல். இப்படி இரண்டு விதமாக கஷ்டப்படுபவர்களுக்கும் எவ்வாறு ஆறுதலளிக்கலாம் என்பதை அடுத்த கட்டுரையில் கலந்தாராய்வோம்.
பதிலளிக்க முடியுமா?
• கடவுள் அளிக்கும் ஆறுதல் ஏன் பெரும் மதிப்புமிக்கது?
• கிறிஸ்து என்ன ஆறுதலளித்தார்?
• பரிசுத்த ஆவி ஆறுதலளிப்பது எப்படி நிரூபிக்கப்பட்டிருக்கிறது?
• தம்முடைய ஊழியர்கள் பெரும் அழுத்தத்தை சந்திக்கையில் கடவுள் அவர்களுக்கு ஆறுதலளித்ததற்கு உதாரணங்களைக் கொடுங்கள்.
[பக்கம் 15-ன் படங்கள்]
தம் ஜனங்களை விடுதலை செய்வதன் மூலம் யெகோவா ஆறுதல் அளித்ததை பைபிள் விவரிக்கிறது
[பக்கம் 16-ன் படங்கள்]
இயேசு போதிப்பதாலும், சுகப்படுத்துவதாலும், இறந்தோரை உயிர்த்தெழுப்புவதாலும் ஆறுதலளித்தார்
[பக்கம் 18-ன் படங்கள்]
கடவுளுடைய உதவியை இயேசு பெற்றார்