பிரசங்கித்தல் நெஞ்சைவிட்டு நீங்காத அனுபவம்
“ஆதவனின் ஆக்ரோஷ கதிர்கள் மண்ணைப் பொசுக்கின. பயணம் செய்த நீண்ட மலைப்பாதையோ முடிவுறா பாதை போல் போய்க்கொண்டே இருந்தது. ஏகப்பட்ட கஷ்டங்களை சமாளித்து, சேர வேண்டிய இடத்தை ஒருவழியாக போய் சேர்ந்தோம். அது தொலைதூரத்திலுள்ள ஒரு கிராமம். முதல் வீட்டின் கதவைத் தட்டினோம், அவ்வீட்டார் இருகரம் நீட்டி எங்களை வரவேற்றார்கள், அப்போது எங்களைத் துவண்டு போக செய்திருந்த சோர்வெல்லாம் பஞ்சாய் பறந்தது, மகிழ்ச்சி எங்களைத் தழுவியது. சாயங்காலத்துக்குள் எங்கள் கையிலிருந்த பிரசுரங்கள் எல்லாம் காலி. அநேக பைபிள் படிப்புகளை ஆரம்பித்திருந்தோம். ஜனங்கள் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள். விடை பெற நேரம் வந்தது, கட்டாயம் மீண்டும் வருவதாக சொல்லிவிட்டு நடையைக் கட்டினோம்.”
மெக்சிகோவில் பயனியர்களாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகுதியினர் மத்தியில் இப்படிப்பட்ட அனுபவங்கள் வெகு சகஜம். “பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என இயேசு கிறிஸ்து தம் சீஷர்களுக்குக் கொடுத்த பொறுப்பை நிறைவேற்றுவதில் இவர்கள் ஊக்கமாக இருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 1:8) சபைகளுக்கு நியமிக்கப்படாத பிராந்தியங்களில் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தி கிரமப்படி பிரசங்கிக்கப்படுவதில்லை. மெக்சிகோவிலுள்ள இப்பிராந்தியங்களில் ஊழியம் செய்ய பயனியர் மார்க்கம் என்ற பெயரில் விசேஷ பிரசங்க ஊழியம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அவை பொதுவாக ஒதுக்குப்புறத்தில் உள்ள பிராந்தியங்கள் அல்லது போவதற்கே வெகு சிரமமாக உள்ள பிராந்தியங்கள். பெரிய பிராந்தியத்தை உடைய ஒதுக்குப்புறமான சபைகளுக்கும் ஊழியத்தில் உதவி அளிக்கப்பட்டிருக்கிறது.
பயனியர் மார்க்கத்திற்காக நாட்டின் எந்தெந்தப் பகுதிகள் பயன்படுத்தப்படும் என்பதைத் தீர்மானிக்க யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் பிராந்தியத்தின் தேவைகளை தீர ஆராய்கிறது.a அதன் பிறகு அந்தப் பிராந்தியங்களில் ஊழியம் செய்ய விசேஷ பயனியர்கள் அடங்கிய குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. மேடுபள்ளம் நிறைந்த கரடுமுரடான பாதையில் பயணிக்க பொருத்தமான வாகனங்களும் அப்பயனியர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. அந்த வாகனங்களே புத்தக கிடங்குகளாக ஆகின்றன, தேவைப்படுகையில் படுக்கையறைகளாகவும் மாறுகின்றன.
உடனடியாக உதவிக்கரம் நீட்டுதல்
1996 அக்டோபர் முதல் இந்த ஊழியத்தில் விசேஷ பயனியர்களுடன் சேர்ந்து கொள்ளும்படி நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பிற பிரஸ்தாபிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தேவை அதிகமுள்ள இடத்தில் ஊழியம் செய்ய மனமுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளும் ஒழுங்கான பயனியர்களும் இந்த விசேஷ ஊழியத்தில் பல்வேறு கட்டங்களில் பங்கெடுக்க முன்வந்தார்கள். சிலர், அந்தப் பிராந்தியத்தில் பெருமளவு ஊழியம் செய்வதற்கும் ஆர்வம் காட்டுவோருக்கு உதவுவதற்கும் வசதியாக அந்த மார்க்கத்திலிருந்த சபைகளுக்கு நியமிக்கப்பட்டார்கள். அநேக இளம் பிரஸ்தாபிகளும் பயனியர்களும் இந்த அழைப்பை ஏற்க முன்வந்தார்கள்; அருமையான அனுபவங்களால் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.
உதாரணத்திற்கு ஆபீமாயில் என்ற இளம் கிறிஸ்தவரை எடுத்துக்கொள்ளுங்கள். இவருக்கு மொபைல் போன் கம்பெனியில் கை நிறைய சம்பாத்தியம். ஒதுக்குப்புறமான பகுதிகளில் செய்யும் இந்தப் பிரசங்க ஊழியத்தில் கலந்துகொள்ள இவர் தீர்மானித்தார். இவர் வேலையை ராஜினாமா செய்துவிடுவார் என்பதை அறிந்த அதிகாரிகள் இவருக்கு பதவி உயர்வு கொடுத்து, சம்பளத்தை உயர்த்தவும் தயாரானார்கள். கிடைப்பதற்கு அரிய இந்த வாய்ப்பை உதறிவிட்டுப் போவது படுமுட்டாள்தனம் என்று சொல்லி சக தொழிலாளிகள் இவரைத் தொல்லைப்படுத்த ஆரம்பித்தார்கள். எனினும் மூன்று மாதங்கள் இந்த விசேஷ பிரசங்க ஊழியத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பதில் ஆபீமாயில் உறுதியாக இருந்தார். இவர் ஊழியத்தில் அனுபவித்த மகிழ்ச்சிக்குப் பிறகு ராஜ்ய பிரஸ்தாபிகள் அதிகம் தேவைப்பட்ட அந்த ஒதுக்குப்புறமான சபையிலேயே நிரந்தரமாக தங்கிவிட தீர்மானித்திருக்கிறார். இப்போது இவர் ஓரளவு சம்பாதிக்கிறார், தன் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்ள கற்றிருக்கிறார்.
க்யூலீசாவின் அனுபவத்தைக் கேளுங்கள்; அவள் தனக்கு நியமிக்கப்பட்டிருந்த பிராந்தியத்திற்கு செல்ல 22 மணிநேரம் பயணிக்க வேண்டியிருந்தது. அந்தப் பயணத்தின் இறுதிக் கட்டத்தில், தான் பிடிக்க வேண்டிய கடைசி பஸ்ஸை தவறவிட்டுவிட்டாள். எனினும் பணியாட்களை வேலைக்கு அழைத்துப் போய் கொண்டுவந்து விடும் ‘பிக்கப் டிரக்’ ஒன்று வந்தது. க்யூலீசா ஒருவழியாக தைரியத்தைத் திரட்டிக்கொண்டு அதில் தன்னையும் ஏற்றிச் செல்லுமாறு கேட்டாள். அதிலிருந்த எல்லாருமே ஆண்கள் என்பதால் அவளுக்கு பயமாகத்தான் இருந்தது. அவள் ஓர் இளைஞருக்கு சாட்சி கொடுக்க ஆரம்பித்தபோதுதான் தெரிந்தது அவரும் ஒரு யெகோவாவின் சாட்சி என்று! “அதுமட்டுமா, ஆச்சரியத்திலும் ஆச்சரியம், அந்த டிரக் டிரைவர் நான் போக வேண்டியிருந்த சபையின் மூப்பர்!” என க்யூலீசா சொல்கிறாள்.
வயதானவர்களின் ஆதரவுக்கரம்
எனினும் இந்த விசேஷ ஊழியம் இளைஞர்களுக்கு மட்டுமே உரியதல்ல. ஆத்தேலா என்ற வயதான சகோதரிக்கு அதிக நேரம் ஊழியம் செய்ய தீராத ஆசை. இந்த விசேஷ பிரசங்க ஊழியம் அவர்களுடைய ஆசையை தீர்த்துக்கொள்ள வாய்ப்பளித்தது. அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்: “அப்படி ஊழியம் செய்தது எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட முடியுமா என்றுகூட சபை மூப்பர்களைக் கேட்டுப் பார்த்தேன். இந்த வயசான காலத்திலும் யெகோவா என்னை பயன்படுத்தி வருவதை பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு.”
அதைப் போலவே, யெகோவாவுக்கான போற்றுதலும், சக மனிதருக்கான அன்பும் இந்த ஊழியத்தில் கலந்துகொள்ளும்படி 60 வயதான மார்டாவைத் தூண்டியது. பிராந்தியம் அதிக தூரமாகவும் பாதை கரடுமுரடாகவும் இருந்ததால் தன் தொகுதியிலிருந்த பயனியர்களால் அங்குள்ள எல்லாரையும் சந்திக்க முடியவில்லை என்பதை அறிந்து, அவர்கள் பயன்படுத்துவதற்கு இந்த சகோதரி ஒரு கார் வாங்கி கொடுத்தார். இதனால் பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களில் பிரசங்கிக்கவும் பைபிள் சத்தியங்களை அநேகருடன் பகிர்ந்துகொள்ளவும் முடிந்தது.
மனதுக்கு இதமான பலன்கள்
‘சீஷர்களை உண்டுபண்ணுவதே’ இந்த விசேஷ பிரசங்க ஊழியத்தில் பங்கெடுத்தவர்களின் இலக்கு. அதில் அவர்களுக்கு அபார வெற்றி கிடைத்தது எனலாம். ஒதுக்குப்புறமான பகுதியில் இருந்தவர்கள் உயிர் காக்கும் சத்தியங்களை பைபிளிலிருந்து அறிந்துகொண்டார்கள். (மத்தேயு 28:19, 20) அங்கே அநேக பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றை அந்தப் பகுதியிலிருக்கும் பிரஸ்தாபிகள் அல்லது அப்பிராந்தியத்தில் தங்கியுள்ள ஊழியர்கள் தொடர்ந்து நடத்துகிறார்கள். இதனால் சில இடங்களில் பிரஸ்தாபிகளின் தொகுதிகளை ஏற்பாடு செய்ய முடிந்தது, இன்னும் சில இடங்களில் சின்னஞ்சிறிய சபைகள் உருவாயின.
மாக்டாலேனோவும் அவருடைய தோழர்களும் தங்களுக்கு நியமிக்கப்பட்ட ஒதுக்குப்புறமான பிராந்தியத்தில் ஊழியம் செய்வதற்கு பொதுப் போக்குவரத்தில் பயணித்தார்கள். வழியில் டிரைவரிடம் பிரசங்கித்தார்கள். “கடந்த வாரம், அந்த டிரைவர் வீட்டில் இல்லாதபோது சில சாட்சிகள் அவருடைய வீட்டாரை சந்தித்ததைப் பற்றி அவர் எங்களிடம் சொன்னார். அவர் வீடு திரும்பியதும் அவருடைய குடும்பத்தார் தாங்கள் கேட்டவற்றை அப்படியே அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் பக்கத்தில் வசிப்பவர்கள் அல்லவென்றும், இந்த விசேஷ பிரசங்க ஊழியத்தில் பங்கெடுக்க சொந்த செலவில் நாட்டின் பல பாகங்களிலிருந்து வந்திருக்கிறோமென்றும் சொன்னோம். அதைக் கேட்டு நெகிழ்ந்து போன அந்த டிரைவர், அந்த வாரமே சாட்சிகளுடன் குடும்பமாக பைபிள் படிக்க ஒப்புக்கொண்டார். அதோடு அவர் எங்களிடம் பயண கட்டணமும் வசூலிக்கவில்லை, இவ்வாறு ஊழியத்திற்கு ஆதரவு காட்டினார்.”
சீயாபாஸ் மலையிலுள்ள பழங்குடியினரின் பிரதிபலிப்பைப் பார்த்தும் மாக்டாலேனோ அசந்துபோனார். “பிரஸ்பிட்டேரியன் சர்ச்சை சேர்ந்த 26 இளைஞர்களிடம் நானும் என் மனைவியும் ராஜ்ய செய்தியை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் சொல்வதை அவர்கள் எல்லாரும் 30 நிமிஷம் கவனமாக கேட்டார்கள். நாங்கள் சொல்வதை பைபிளைத் திறந்தும் பார்த்தார்கள், இதனால் யெகோவாவின் நோக்கங்களைப் பற்றி அவர்களுக்கு முழுமையாக சாட்சி கொடுக்க முடிந்தது. அங்கிருந்த நிறைய பேர் ஸெல்டால் மொழியில் பைபிள்கள் வைத்திருந்தார்கள்.” அநேகர் பைபிள் படிக்க ஆரம்பித்து, முன்னேற்றம் செய்தார்கள்.
எதிர்ப்பு தணிந்தது
சீயாபாஸிலுள்ள ஓர் இனத்தாரில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் பைபிள் செய்தியை அறிவிக்க யாருமே அங்குப் போகவில்லை. அந்தக் கிராமத்தில் போய் பிரசங்கிப்பதற்கு சாட்சிகளில் சிலர் பயப்படுவதை டேரேஸா என்ற முழுநேர ஊழியர் கவனித்தார். “ஆனால் அந்த ஜனங்கள் காதுகொடுத்துக் கேட்க மனமுள்ளவர்களாக இருந்ததைப் பார்த்து எல்லாருக்கும் ஆச்சரியமாகிவிட்டது. நாங்கள் ஊழியத்தை முடித்தோமோ இல்லையோ, மடை திறந்தது போல் வானத்திலிருந்து மழை கொட்ட ஆரம்பித்தது. ஒதுங்க இடந்தேடி ஒரு வீட்டுப் பக்கம் போனோம்; சேபாஸ்டியான் என்ற அந்த வீட்டுக்காரர் உபசரிக்கும் குணம் படைத்தவர். மழையில் நனையாதிருக்க வீட்டிற்குள் வரும்படி அழைத்தார். உள்ளே போனதும் சாட்சிகள் யாராவது அவர் வீட்டிற்கு வந்திருந்தார்களா என விசாரித்தேன். அவர் இல்லை என்றதும் அவருக்கு சாட்சி கொடுத்து, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பை ஆரம்பித்தேன்.b நாங்கள் புறப்படுகையில் மீண்டும் வந்து பைபிளை கற்றுக்கொடுக்குமாறு கண்களில் நீர் ததும்ப அவர் எங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.”
பிரசங்கிப்பதற்கு சீயாபாஸுக்குச் சென்ற பயனியர்களின் மற்றொரு தொகுதியினர் இவ்வாறு அறிக்கை செய்தார்கள்: “யெகோவாவின் உதவியால் எங்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. முதல் வாரத்தில் 27 பைபிள் படிப்புகளை ஆரம்பித்தோம்; இரண்டாவது வாரத்தில், பைபிள்—உங்கள் வாழ்க்கையில் அதன் சக்தி (ஆங்கிலம்) என்ற வீடியோவை பார்ப்பதற்கு நாங்கள் ஆட்களை அழைத்தோம். அதற்கு அறுபது பேர் வந்திருந்தார்கள். அது எல்லாருக்கும் ரொம்ப பிடித்துவிட்டது. கடைசியில் ஒரு தொகுதியாக அவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்துவதைக் குறித்து திட்டமிட்டோம். என்ன ஆச்சரியம், இந்த கிராமத்தில் இரண்டு பைபிள் படிப்பு தொகுதிகள் உருவாயின.
“எங்களுக்கு நியமிக்கப்பட்ட பிராந்தியங்களில் ஊழியம் செய்து முடித்த பிறகு ஆர்வம் காட்டியவர்களைப் பலப்படுத்துவதற்கும் புதிதாக துவங்கப்பட்ட பைபிள் படிப்பு தொகுதிகள் எப்படி செயல்படுகின்றன என்பதை அறிவதற்கும் அந்தக் கிராமத்துக்கு மறுபடியும் போனோம். பொதுப் பேச்சிற்கும் காவற்கோபுர படிப்புக்கும் வரும்படி அந்த கிராமத்தாரை அழைத்தோம். ஆனால் கூட்டம் நடத்த பெரிய இடமேதும் இல்லாதிருந்தது. தொகுதியாக படிப்பு நடத்த தன் வீட்டைக் கொடுத்திருந்த ஒருவர் தன் வீட்டின் கொல்லைப் புறத்திலுள்ள இடத்தைக் காட்டி, ‘இங்கே நீங்கள் கூட்டங்களை நடத்தலாம்’ என்றார்.”
அந்த வார இறுதியில் வந்திருந்த விசேஷ பயனியர்களும் ஆர்வம் காட்டியவர்களும் சேர்ந்து, கூட்டங்கள் நடத்துவதற்கு ஏற்றபடி கொல்லைப் புறத்தை சீர்படுத்தினார்கள். முதல் கூட்டத்திற்கு 103 பேர் வந்திருந்தார்கள். அந்தக் கிராமத்தில் இன்று 40 பைபிள் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
“தித்திக்கும் அனுபவம்”
பிரசங்க ஊழியம் மணி மணியான பலன்களை அள்ளித் தந்ததோடு அதில் பங்கெடுத்த அனைவருமே தனிப்பட்ட விதத்தில் பெருமளவு பயனடைந்தார்கள். இந்த விசேஷ பிரசங்க ஊழியத்தில் பங்கெடுத்த மாரீயா என்ற இளம் பயனியர் தன் உணர்ச்சிகளை இப்படியாக வெளிப்படுத்துகிறாள்: “இரண்டு காரணங்களின் நிமித்தம் இதை தித்திக்கும் அனுபவம் என்பேன். ஊழியத்தில் என் சந்தோஷம் அதிகரித்தது, யெகோவாவுடன் என் உறவு இன்னும் நெருக்கமானது. ஒருமுறை நாங்கள் மலைமீது ஏறுகையில் மிகவும் சோர்ந்துவிட்டோம். யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபித்த பின்பு, ‘யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைவார்கள்’ என ஏசாயா 40:29-31-ல் சொல்லப்பட்ட வார்த்தைகளின் நிஜத்தை ருசித்துப் பார்த்தோம். அந்த இடத்திற்கு போய்ச் சேர்ந்தோம், அன்புடன் எங்களை ஏற்றுக்கொண்டு உபசரித்தவர்களுக்கு பைபிள் படிப்புகளை நடத்தினோம்.”
கிலௌடியா என்ற 17 வயது இளம் பயனியர் இவ்வாறு சொல்கிறாள்: “இந்த ஊழியத்தில் ஏராளமான பலன்களைப் பெற்றேன். ஊழியத்தில் திறமையாக பிரசங்கிக்க கற்றுக்கொண்டேன், அதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆவிக்குரிய இலக்குகளை வைப்பதற்கும் அது உதவி செய்திருக்கிறது. ஆவிக்குரிய விதமாகவும் முதிர்ச்சியடைந்திருக்கிறேன். வீட்டில் எனக்கு எல்லாமே அம்மாதான் செய்ய வேண்டும். ஆனால் இப்போது, அனுபவ பாடம் படித்திருப்பதால் எனக்கு அதிக பொறுப்பு வந்திருக்கிறது. உதாரணமாக, சாப்பிடுகிற விஷயத்தில் அது பிடிக்கும், இது பிடிக்காது என விருப்பு வெறுப்பு நிறைய இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் வெவ்வேறு சூழ்நிலைகளை அனுசரிக்க பழகிவிட்டதால் சாப்பாட்டை குறை சொல்வதே கிடையாது. இந்த விசேஷ ஊழியம் அருமையான நட்புறவை வளர்த்துக்கொள்ள வழிதிறந்திருக்கிறது. எங்களிடம் இருப்பதை எல்லாருடனும் பகிர்ந்துகொள்கிறோம், ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்கிறோம்.”
ஆனந்தமான அறுவடை
இந்த விசேஷ முயற்சியால் கிடைத்த பலன்கள் என்ன? 2002-ம் ஆண்டின் ஆரம்பத்திற்குள் சுமார் 28,300 பயனியர்கள் இந்த பயனியர் மார்க்கத்தில் பங்கெடுத்தார்கள். அவர்கள் 1,40,000-க்கும் அதிக பைபிள் படிப்புகளை நடத்தினார்கள்; பிரசங்க ஊழியத்தில் 20 லட்சத்திற்கும் அதிக மணிநேரத்தை செலவிட்டார்கள். பைபிள் சத்தியத்தை ஜனங்கள் கற்றுக்கொள்ள உதவுவதற்காக சுமார் 1,21,000 புத்தகங்களையும் கிட்டத்தட்ட 7,30,000 பத்திரிகைகளையும் விநியோகித்தார்கள். சில பயனியர்களைப் பொறுத்தவரை 20 அல்லது அதற்கும் அதிகமான பைபிள் படிப்புகளை நடத்துவது சர்வசாதாரண விஷயம்.
பைபிள் செய்தியை அறிவிக்க பெரும் முயற்சி எடுத்ததால் பயனடைந்த அந்த மக்களும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறார்கள். வறுமையில் வாடினாலும் தாங்கள் கொடுக்கும் நன்கொடைகளைப் பிரஸ்தாபிகள் பெற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென அநேகர் பிடிவாதம் பிடிக்கிறார்கள். பணக் கஷ்டத்திலிருக்கும் 70 வயது பெண்மணி, பயனியர்கள் தன்னை சந்திக்க வரும்போதெல்லாம் ஏதாவது கொடுக்கிறார். அதை பயனியர்கள் வாங்க மறுத்தால் அழுதேவிடுகிறார். கைக்கும் வாய்க்கும் போதாத நிலையிலிருக்கும் ஒரு குடும்பத்தார் முழுநேர ஊழியர்களுக்காகவே தங்கள் கோழி சில முட்டைகளை இட்டிருப்பதாக சொல்லி அவற்றை எடுத்துப் போகும்படி வற்புறுத்துகிறார்கள்.
அதைவிட முக்கியமாக, நல்ல உள்ளம் படைத்த இவர்கள் ஆன்மீக காரியங்களுக்கு மெய்யான போற்றுதலைக் காட்டுகிறார்கள். உதாரணமாக, கிறிஸ்தவ கூட்டங்கள் எதையும் தவறவிடக் கூடாது என்பதற்காக ஓர் இளம் பெண் தன்னந்தனியாக மூன்றரை மணிநேரம் நடந்து வருகிறாள். ஆர்வமுள்ள வயதான ஒரு பெண்மணியோ வட்டாரக் கண்காணியின் சந்திப்பின்போது பைபிள் போதனைகளைக் கேட்பதற்காக தனக்குள்ள மூட்டு வேதனையையும் பொருட்படுத்தாமல் இரண்டு மணிநேரம் பிரயாணப்பட்டு வந்தார். படிப்பறிவில்லாதவர்கள் சிலர் பைபிள் போதனையிலிருந்து அதிக பலனடைவதற்காக எழுத, படிக்க கற்றுக்கொள்ள ஆசைப்பட்டார்கள். அவர்களது முயற்சிகளுக்கு அற்புதமான பலன் கிடைத்தது.
அப்போஸ்தலன் பவுல் கண்ட தரிசனத்தைப் பற்றி அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் லூக்கா இவ்வாறு விவரிக்கிறார்: ‘மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்து நின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று வேண்டிக்கொண்டான்.’ பவுல் அந்த அழைப்பை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டார். இன்றும் மெக்ஸிகோவிலுள்ள ஒதுக்குப்புறங்களில் பிரசங்கிக்க முன்வருவதன் மூலம் அநேகர் அதே மனநிலையைக் காட்டியிருக்கிறார்கள்; இவ்வாறு, “பூமியின் கடைசிபரியந்தமும்” நற்செய்தியை அறிவிக்கும் வேலையில் பங்களித்திருக்கிறார்கள்.—அப்போஸ்தலர் 1:8; 16:9, 10.
[அடிக்குறிப்புகள்]
a சமீப காலத்தில் மெக்சிகோவின் மொத்த பிராந்தியத்தில் 8 சதவீதத்திற்கும் அதிகமானவற்றில் யெகோவாவின் சாட்சிகளின் சபைகளால் கிரமப்படி ஊழியம் செய்ய முடியவில்லை. அப்படிப் பார்த்தால், அவ்வளவாக ஊழியம் செய்யப்படாத ஒதுக்குப்புறமான பகுதிகளில் 82,00,000-க்கும் அதிகமானோர் வசிக்கிறார்கள்.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 9-ன் படம்]
மெக்சிகோவிலுள்ள அநேக சாட்சிகள் விசேஷ பிரசங்க ஊழியத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள்