உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w03 3/1 பக். 30-31
  • யெகோவா “தாராளமாக” மன்னிக்கிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா “தாராளமாக” மன்னிக்கிறார்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
w03 3/1 பக். 30-31

யெகோவா “தாராளமாக” மன்னிக்கிறார்

மன்னிப்பு என்றால் புண்படுத்தியவருடைய குற்றத்தைப் பொறுத்துப் போதல்; அவர் செய்த தப்பிதத்திற்காக மனக்கசப்பு அடையாதிருத்தல், பதிலுக்குப் பதில் செய்வதை விட்டுவிடுதல்.

இஸ்ரவேல் தேசத்தாருக்கு கடவுள் கொடுத்த நியாயப்பிரமாண சட்டத்தின்படி, கடவுளுக்கு அல்லது சகமனிதனுக்கு விரோதமாக தீங்கு செய்தவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமானால், முதலில் அந்தத் தவறுக்கு அவர் ஈடுகட்ட வேண்டும்; பிற்பாடு, பெரும்பாலும், யெகோவாவுக்கு இரத்த பலி செலுத்த வேண்டும். (லேவியராகமம் 5:5–6:7) ஆகவே, “நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” என்று சொல்லி அதிலுள்ள நியமத்தை பவுல் குறிப்பிட்டார். (எபிரெயர் 9:22) ஆனால் மிருக பலிகளின் இரத்தம் பாவங்களை நீக்குவதில்லை, பரிபூரண, சுத்தமான மனசாட்சியை தருவதில்லை. (எபிரெயர் 10:1-4; 9:9, 13, 14) மாறாக, இயேசு கிறிஸ்துவின் கிரய பலியின் அடிப்படையில், முன்னறிவிக்கப்பட்ட புதிய உடன்படிக்கை உண்மையான மன்னிப்பை சாத்தியமாக்கியது. (எரேமியா 31:33, 34; மத்தேயு 26:28; 1 கொரிந்தியர் 11:25; எபேசியர் 1:7) இயேசு பூமியில் இருந்தபோதே, திமிர்வாதக்காரனை சுகப்படுத்துவதன் மூலம் பாவங்களை மன்னிக்க தனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்திக் காண்பித்தார்.​—⁠மத்தேயு 9:2-7.

யெகோவா “தாராளமாக” மன்னிக்கிறார் என்பதை கெட்ட குமாரனைப் பற்றிய உவமை காட்டுகிறது; மேலும், தனக்கு 10,000 தாலந்து (6,00,00,000 தினாரி, அல்லது சுமார் 200,00,00,000 ரூபாய்) கடன்பட்ட அடிமையை அரசன் மன்னித்ததையும் ஆனால் அந்த அடிமையோ நூறு தினாரி (சுமார் 3,500 ரூபாய்) கடன்பட்ட சக அடிமையை மன்னிக்க மனதில்லாதிருந்ததையும் பற்றிய உவமையும் இதைக் காட்டுகிறது. (ஏசாயா 55:7, NW; லூக்கா 15:11-32; மத்தேயு 18:23-35) இருந்தாலும், யெகோவா உணர்ச்சிவசப்பட்டு மன்னிக்கிறவரல்ல, அவர் தீய செயல்களுக்கு தண்டனை அளிக்காமல் விடுவதில்லை. (சங்கீதம் 99:8) விசுவாசதுரோகத்தை யெகோவா மன்னிக்கவே மாட்டார் என இஸ்ரவேலரை யோசுவா எச்சரித்தார்.​—⁠யோசுவா 24:19, 20; ஒப்பிடுக: ஏசாயா 2:6-9.

கடவுளுடைய மன்னிப்பை நாடுவதற்கும் அதைப் பெறுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு அவர் ஒரு வரையறை வைத்திருக்கிறார். ஒருவர் தன்னுடைய பாவத்தை ஒப்புக்கொள்ள வேண்டும், அது கடவுளுக்கு விரோதமான குற்றம் என்பதை உணர வேண்டும், அதை முழுமையாக அறிக்கை செய்ய வேண்டும், செய்த தவறுக்காக உள்ளப்பூர்வமாக வருந்த வேண்டும், அத்தகைய போக்கிலிருந்து அல்லது பழக்கத்திலிருந்து மீண்டு வருவதில் மனவுறுதியோடு இருக்க வேண்டும். (சங்கீதம் 32:5; 51:4; 1 யோவான் 1:8, 9; 2 கொரிந்தியர் 7:8-11) தவறை சரிசெய்ய அல்லது இழப்புக்கு ஈடுகட்ட தன்னால் இயன்றதை செய்ய வேண்டும். (மத்தேயு 5:23, 24) அதன் பிறகு கடவுளிடம் ஜெபித்து, கிறிஸ்துவின் கிரய பலியின் அடிப்படையில் மன்னிப்புக்காக மன்றாட வேண்டும்.​—⁠எபேசியர் 1:7.

மேலும், ஒருவர் மற்றவரை புண்படுத்திவிடுகையில், அது எத்தனை தடவை என்றாலும், அதை மன்னிப்பது கிறிஸ்தவ கடமை. (லூக்கா 17:3, 4; எபேசியர் 4:32; கொலோசெயர் 3:13) மற்றவர்களை மன்னிக்க மறுக்கிறவர்களுக்கு கடவுள் மன்னிப்பு வழங்குவதில்லை. (மத்தேயு 6:14, 15) என்றாலும், வினைமையான பாவத்தின் நிமித்தமாக “அந்த பொல்லாதவனை” கிறிஸ்தவ சபையிலிருந்து புறம்பாக்க வேண்டியதாயிருந்தாலும், அவர் உண்மையிலேயே மனந்திரும்பினால், ஏற்ற சமயத்தில் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும். அப்போது சபையிலுள்ள அனைவரும் அவருக்கு தங்களுடைய அன்பை காட்டலாம். (1 கொரிந்தியர் 5:13; 2 கொரிந்தியர் 2:6-11) ஆனால் மனந்திரும்பாமல் தீய எண்ணத்துடன் வேண்டுமென்றே பாவம் செய்கிறவர்களை கிறிஸ்தவர்கள் மன்னிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் கடவுளுக்கு சத்துருக்களாக இருக்கிறார்கள்.​—⁠எபிரெயர் 10:26-31; சங்கீதம் 139:21, 22.

கடவுளுடைய மன்னிப்பை பெற தனிப்பட்டவர்கள் சார்பாகவும், முழு சபையின் சார்பாகவும்கூட ஜெபிப்பது சரியானதே. இஸ்ரவேல் தேசத்தார் சார்பாக மோசே ஜெபித்தார், அத்தேசத்தின் பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்பிற்காக மன்றாடியபோது யெகோவா அவருடைய ஜெபத்தைக் கேட்டார். (எண்ணாகமம் 14:19, 20) மேலும், ஜனங்கள் பாவம் செய்து தங்களுடைய தவறான பாதையிலிருந்து மனந்திரும்பி வரும்போது அவர்களுடைய பாவங்களை மன்னிக்கும்படி ஆலய பிரதிஷ்டையின் போது யெகோவாவிடம் சாலொமோன் ஜெபித்தார். (1 இராஜாக்கள் 8:30, 33-40, 46-52) எருசலேமில் மீண்டும் குடியேறிய யூதர்களின் பாவங்களை எல்லாருடைய சார்பாகவும் அனைவர் முன்பாகவும் எஸ்றா அறிக்கையிட்டார். அவருடைய இருதயப்பூர்வமான ஜெபமும் புத்திமதியும் நல்ல பலனைத் தந்தன; அதனால் யெகோவாவின் மன்னிப்பை பெற ஜனங்கள் நடவடிக்கை எடுத்தார்கள். (எஸ்றா 9:13–10:4, 10-19, 44; NW) ஆவிக்குரிய விதத்தில் வியாதிப்பட்டிருப்பவர்கள் தங்களுக்காக ஜெபிப்பதற்கு சபையின் மூப்பர்களை அழைக்கும்படி யாக்கோபு உற்சாகப்படுத்தினார். அவ்வாறு செய்யும்போது, “அவன் பாவஞ் செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்” என்று கூறினார். (யாக்கோபு 5:14-16) என்றபோதிலும், “மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு,” அதாவது பரிசுத்த ஆவிக்கு விரோதமான பாவமுண்டு, வேண்டுமென்றே செய்யும் பாவமும் உண்டு, அதற்கு மன்னிப்பு இல்லை. இப்படிப்பட்ட பாவங்களை செய்கிறவர்களுக்காக ஒரு கிறிஸ்தவன் ஜெபம் செய்யக் கூடாது.​—⁠1 யோவான் 5:16; மத்தேயு 12:31; எபிரெயர் 10:26, 27.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்