“எனக்குத் தேவையான எல்லாவற்றையும் கண்டேன்”
உலகெங்கிலும் 12 கோடிக்கும் அதிகமானோர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள், ஒரு கோடி முதல் இரண்டு கோடி வரையிலான ஆட்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. மன உளைச்சலால் அவதிப்படுவோர் எப்படி உதவி பெறலாம்? மருத்துவ சிகிச்சை வேதனையை சற்று தணிக்கலாம், ஆனால் உணர்ச்சி ரீதியிலான ஆதரவும் முக்கியம். அதோடு, இப்படிப்பட்டவர்களில் சிலர், யெகோவாவின் சாட்சிகள் வெளியிடும் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களிலிருந்தும் நடைமுறையான உதவியைப் பெற்றிருக்கிறார்கள். பிரான்சிலுள்ள ஒருவரிடமிருந்து பெற்ற கடிதம் அதைத்தான் காட்டுகிறது.
“இனி வாழ்ந்து என்ன பிரயோஜனம் என்று கொஞ்ச நாட்களுக்கு முன்பு யோசிக்க ஆரம்பித்தேன். என்னை சாகவிடும் ஆண்டவரே என கடவுளிடம் ஜெபித்தேன். உள்ளுக்குள் செத்துவிட்டதைப் போலவே உணர்ந்தேன். வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் ஊக்கமாக மன்றாடினேன். 2002 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகத்தை வாசிக்கத் தீர்மானித்தேன்; மூன்றே நாட்களில் அதை வாசித்து முடித்தேன். அது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது, அது மட்டுமல்ல, என்னுடைய விசுவாசத்தையும் பலப்படுத்தியது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
“காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலிருந்து கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன், எனக்கு ஒரே ஆச்சரியம்! இந்தப் பத்திரிகைகளை 15 வருடங்களாக தவறாமல் படித்து வந்திருக்கிறேன், இந்தக் கட்டுரைகள் எவ்வளவு ஊக்கமூட்டுபவையாக, அக்கறையூட்டுபவையாக இருக்கின்றன என்பதை ஒருநாளும் உணரவே இல்லையே. இன்றைக்கு ரொம்ப அரிதாக காணப்படும் ஒரு பண்பாகிய அன்பு அவற்றில் ததும்புகிறது. அதில் எனக்குத் தேவையான எல்லாவற்றையும் கண்டேன்.”
‘நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு [யெகோவா] சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்’ என பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 34:18) ‘நொறுங்குண்ட இருதயமுள்ளவர்கள்’ அல்லது ‘நருங்குண்ட ஆவியுள்ளவர்கள்’ அனைவரும் பைபிளிலிருந்து உற்சாகத்தையும் எதிர்கால நம்பிக்கையையும் பெறலாம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆறுதலின் ஊற்றாக விளங்கும் தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்ட பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களிலிருந்து ஜனங்கள் பயனடைய யெகோவாவின் சாட்சிகள் அவற்றை விநியோகிக்கிறார்கள்.