மாறிவரும் சூழ்நிலைகளை ஞானமாக பயன்படுத்துங்கள்
பம், யான், ட்ரிஸ், ஆட்டோ—இந்த நான்கு கிறிஸ்தவ மூப்பர்களும் நெதர்லாந்தில் வசித்து வருகிறார்கள். பல அம்சங்களில் இவர்களுக்கிடையில் ஒற்றுமை இருக்கிறது. இந்த நான்கு பேரும் திருமணமாகி, பிள்ளைகள் பெற்றவர்கள். அதோடு, இவர்கள் சில வருடங்களுக்கு முன்புவரை நல்ல வேலை பார்த்து வசதியாக வாழ்ந்து வந்தவர்கள். என்றாலும், இவர்கள் அனைவரும் தங்கள் வேலையை விட்டுவிட்டு, கடவுளுடைய ராஜ்யத்தை ஆதரிக்கும் வேலையில் ஈடுபட தங்கள் முழு நேரத்தையும் சக்தியையும் செலவிட ஆரம்பித்தார்கள். இந்த மாற்றத்தை செய்ய அவர்களுக்கு எது உதவியது? மாறிவரும் சூழ்நிலைகளை அவர்கள் ஞானமாக பயன்படுத்தினார்கள்.
மாறிவரும் சூழ்நிலைகள் காலப்போக்கில் நம்மையும் பாதிக்கலாம். திருமணம் செய்வது, பிள்ளைகளை பெற்றெடுப்பது அல்லது வயதான பெற்றோரை கவனிப்பது என ஏகப்பட்ட மாற்றங்கள் நம்மீது பொறுப்புகளுக்கு மேல் பொறுப்புகளை குவிக்கின்றன. என்றாலும், சில மாற்றங்கள் கிறிஸ்தவ ஊழியத்தில் நாம் இன்னும் அதிகமாக ஈடுபடுவதற்கு அதிக சுதந்தரத்தை அளிக்கின்றன. (மத்தேயு 9:37, 38) உதாரணமாக, ‘இறக்கை முளைத்த’ நம் பிள்ளைகள் வீட்டை விட்டு ‘பறந்து விட்ட’ பிறகு அல்லது நாம் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நாம் அதிக சுதந்தரத்தை அனுபவிக்கலாம்.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்முடைய சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் கிறிஸ்தவர்கள் சிலர் தங்கள் சூழ்நிலைகளை தாங்களே மாற்றியதால் வெற்றி கண்டுள்ளனர். இதனால் அவர்கள் ஊழியத்தில் அதிக மணி நேரம் செலவிட முடிந்திருக்கிறது. இதைத்தான் பம், யான், ட்ரிஸ், ஆட்டோ ஆகியவர்கள் செய்தனர். எப்படி?
பிள்ளைகள் வீட்டை விட்டு செல்கையில்
பம் ஒரு மருந்து கம்பெனியில் கணக்கராக வேலை பார்த்தார். அவரும் அவரது மனைவி ஆனியும் தங்கள் இரண்டு மகள்களுடன் அடிக்கடி துணைப் பயனியர் சேவை செய்தனர். பம்மும் ஆனியும் மற்ற பயனியர்களுடன் சாவகாசமாக பொழுதை கழிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்தனர். “வேறுவிதமான கூட்டுறவால் வரும் பிரச்சினைகளிலிருந்து இது எங்களை பாதுகாத்தது” என அவர்கள் சொல்கிறார்கள். பெற்றோரின் நல்ல முன்மாதிரி இந்த இரண்டு பிள்ளைகளையும் தூண்டியதால் பள்ளிப் படிப்பை முடித்ததும் அவர்கள் ஒழுங்கான பயனியர்களாக ஆனார்கள்.
பிள்ளைகள் வீட்டை விட்டு சென்ற பிறகு சூழ்நிலைகள் மாறின. இப்போது தங்களுக்கு அதிக சுதந்தரமும் பண வசதியும் இருப்பதை பம்மும் ஆனியும் உணர்ந்தனர்; அதை சாதகமாக பயன்படுத்தி ஒருவேளை அவர்கள் விருப்பமான இடங்களுக்கு சென்றிருக்கலாம் அல்லது ஓய்வு நேரத்தை வேறு வழிகளில் ஜாலியாக செலவிட்டிருக்கலாம். ஆனால், இந்தத் தம்பதியினரோ சூழ்நிலையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை பயன்படுத்தி கிறிஸ்தவ ஊழியத்தில் அதிகமாக ஈடுபட தீர்மானித்தனர். ஆகவே, தன் வார வேலை நாட்களில் ஒரு நாளைக் குறைக்க அனுமதி தரும்படி முதலாளியிடம் பம் கேட்டார். பிற்பாடு, வேலையை காலை 7 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2 மணிக்கு முடிப்பதற்கும் பம் ஏற்பாடு செய்தார். இப்படி அவர் தன் வேலையை குறைத்துக் கொண்டதால் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. இருந்தாலும், அவர்கள் அதில் வெற்றி கண்டார்கள்; 1991-ல் பம் தன் மனைவியுடன் ஒழுங்கான பயனியர் சேவையில் சேர்ந்துகொண்டார்.
அதன்பின், யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டு மன்றத்தின் துணை பராமரிப்பாளராக இருக்கும்படி பம் அழைக்கப்பட்டார். இதனால், 30 வருடங்கள் வசதியாக வாழ்ந்து வந்த வீட்டைவிட்டு மாநாட்டு மன்ற வளாகத்திலிருக்கும் அப்பார்ட்மென்டுக்கு இவர்கள் மாறிச் செல்ல வேண்டியிருந்தது. அது அவர்களுக்கு கஷ்டமாக இருந்ததா? வீட்டு ஞாபகம் வரும்போதெல்லாம், ‘நான் என்ன லோத்தின் மனைவியா?’ என்று என்னையே கேட்டுக்கொள்வேன் என ஆனி கூறுகிறார். ஆம், அவர் ‘பின்னிட்டுப் பார்க்க’ மறுத்தார்.—ஆதியாகமம் 19:26; லூக்கா 17:32.
தாங்கள் எடுத்த தீர்மானம் அநேக ஆசீர்வாதங்களுக்கு வழி வகுத்திருப்பதை பம்மும் ஆனியும் உணருகிறார்கள். அநேக ஆசீர்வாதங்களோடுகூட, அவர்கள் மாநாட்டு மன்றத்தில் தங்கள் சேவையை அனுபவித்து மகிழ்கிறார்கள், மாவட்ட மாநாடுகளை நடத்துவதற்கு மன்றத்தை தயார்படுத்துகிறார்கள், அந்த மன்றங்களில் பேச்சுகளை கொடுக்கும் வட்டார கண்காணிகளுடன் (பயண கண்காணிகளுடன்) கூட்டுறவை வைத்துக்கொள்கிறார்கள். அவ்வப்போது உதவி வட்டார கண்காணியாக பம் சேவை செய்கையில் மற்ற சபைகளையும் சந்திக்கிறார்கள்.
தங்களுடைய சேவையை அதிகமாக செய்வதில் வெற்றிகாண எது இந்தத் தம்பதியினருக்கு உதவியது? “உங்களுடைய வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்படும்போது, அந்தப் புதிய சூழ்நிலைகளை முடிந்தளவு ஞானமாக பயன்படுத்த நீங்கள் தீர்மானிக்க வேண்டும்” என பம் கூறுகிறார்.
வாழ்க்கையை எளிமையாக்குதல்
யானுக்கும் அவருடைய மனைவி வாட்டுக்கும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். பம் மற்றும் அவருடைய குடும்பத்தாரைப் போல யானும் தன்னுடைய சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றத்தை ஞானமாக பயன்படுத்தினார். பல வருடங்களாகவே அவர் வங்கியில் கைநிறைய சம்பாதிக்கும் வேலையில் இருந்தார். தன் குடும்பத்துக்கு சொகுசான வாழ்க்கையையும் அமைத்துக் கொடுத்தார். ஆனாலும் ஊழியத்தில் அதிகத்தை செய்ய வேண்டும் என்ற ஆசை அவருக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது. “காலம் செல்ல செல்ல சத்தியத்தின் பேரிலான என் போற்றுதல் அதிகமானது, யெகோவா மீதுள்ள அன்பும் பெருகியது” என அவர் கூறுகிறார். அதனால், 1986-ல் யான் தன் சூழ்நிலைகளில் மாற்றங்களை செய்தார். “அலுவலகத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டபோது அதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தி, குறைந்தளவு நேரம் மட்டும் வேலை செய்ய ஆரம்பித்தேன். என்னுடன் வேலை பார்த்தவர்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் என்னை டிவூடா என கூப்பிட ஆரம்பித்தார்கள்; ஏனெனில் நான் டின்ஸ்டாக் [செவ்வாய்க்கிழமை], வூன்ஸ்டாக் [புதன்கிழமை] டான்டர்டாக் [வியாழக்கிழமை] என வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை பார்த்தேன். என் சம்பளத்தில் 40% குறைந்தது. எங்கள் வீட்டை விற்று, ஒரு படகு வீட்டை வாங்கினோம்; இதன் மூலம் ராஜ்ய பிரஸ்தாபிகள் எங்கு அதிகம் தேவைப்பட்டார்களோ அங்கு சென்று எங்களால் சேவை செய்ய முடிந்தது. வேலையிலிருந்து விருப்ப ஓய்வுபெறும் ஏற்பாடு இருந்ததால் பிற்பாடு அதையும் சாதகமாக பயன்படுத்திக்கொண்டேன்; என்னுடைய வருமானம் இன்னும் 20% குறைந்தது, ஆனாலும் 1993-ல் என்னால் ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பிக்க முடிந்தது.”
இன்று, யான் மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவின் (HLC) அங்கத்தினராக இருக்கிறார், மாநாட்டு கண்காணியாகவும் தொடர்ந்து சேவை செய்திருக்கிறார். வாட், தன் உடல்நிலை மோசமாக இருந்தாலும் அவ்வப்போது துணைப் பயனியர் சேவை செய்கிறார். மூன்று பிள்ளைகளுக்கும் திருமணமாகி அவர்களும் தங்கள் துணைவர்களோடு சேர்ந்து வைராக்கியமாக ராஜ்யத்தை பிரசங்கிக்கும் ஊழியர்களாக இருக்கிறார்கள்.
குறைந்த வருமானத்தில் குடும்பத்தை சமாளிக்க யானுக்கும் வாட்டுக்கும் எப்படி முடிந்தது? “கைநிறைய பணம் இருந்த காலத்திலும்கூட பொருள் சம்பந்தப்பட்ட காரியங்கள்மீது அதிக ஆசை வைக்காதபடிக்கு நாங்கள் ஜாக்கிரதையாக இருந்தோம்” என்று யான் சொல்கிறார். “இப்போது எங்களுக்கு தேவையான ஒன்றை நினைத்த மாத்திரத்தில் வாங்க முடிவதில்லை; அதற்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கிறது, இது எங்களுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும், அதை ஈடுசெய்யும் அளவுக்கு எக்கச்சக்கமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் சிலாக்கியங்களையும் நாங்கள் பெற்றிருக்கிறோம்.”
யான் மற்றும் வாட்டைப் போலவே ட்ரிஸும் அவரது மனைவி யென்னியும் ராஜ்ய அக்கறைகளுக்கு அதிக நேரத்தை செலவிடுவதற்காக தங்கள் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்ள முடிவு செய்தனர். ட்ரிஸும் யென்னியும் குழந்தை பாக்கியம் பெறும்வரை பயனியர்களாக சேவை செய்தனர். அதற்குப்பின் குடும்பத்தை கவனிப்பதற்காக ட்ரிஸ் ஒரு பெரிய நிறுவனத்தில் நிர்வாகியாக வேலை பார்த்தார். முதலாளிகள் அவருடைய வேலையைப் பாராட்டி, அவருக்கு பதவி உயர்வு அளித்தார்கள். ஆனால், ட்ரிஸ் அந்தப் பதவி உயர்வை ஏற்றுக்கொள்ளவில்லை; ஏனென்றால் அந்த வேலைக்கு சம்மதித்தால் கிறிஸ்தவ நடவடிக்கைகளுக்கு நேரம் கிடைக்காமல் போய்விடுமே.
குடும்பத்தையும் கவனித்து அதோடு யென்னியின் சுகவீனமான தாயையும் கவனிப்பது இந்த தம்பதியினரின் பெரும்பாலான நேரத்தையும் சக்தியையும் பிழிந்தெடுத்தது. இருந்தாலும், பயனியர் சேவையிடம் ஆர்வத்தை தொடர்ந்து வளர்த்து வந்தார்கள். பயனியர் செய்வதற்கு அவர்களுக்கு எது உதவியது? “பயனியர்களை எங்கள் வீட்டில் குடி வைத்திருந்தோம், எங்கள்கூட வந்து சாப்பிடுவதற்கும் அவர்களை அழைத்தோம், வட்டார கண்காணிகளை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம்” என யென்னி விளக்கம் கொடுக்கிறார். “நாங்கள் எங்கள் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொண்டோம், கடன் தொல்லையை தவிர்த்தோம். பிற்காலத்தில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக பெரிய பெரிய பிஸினஸில் அகல கால் வைப்பதையும் தவிர்த்தோம்; வீடு வாசல் எதுவும் வாங்க வேண்டாமென்றுகூட தீர்மானித்தோம்” என்று ட்ரிஸ் சொல்கிறார்.
ராஜ்யம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும்படி சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ள தீர்மானித்ததால் ட்ரிஸுக்கும் யென்னிக்கும் நல்ல பலன்கள் கிடைத்தன. அவர்களுடைய இரண்டு மகன்களும் இப்போது மூப்பர்களாக சேவை செய்கிறார்கள்; ஒரு மகன் தன் மனைவியுடன் சேர்ந்து பயனியர் வேலையையும் செய்கிறார். ட்ரிஸும் யென்னியும் விசேஷித்த பயனியர்களாக சேவை செய்தார்கள்; பிற்பாடு வட்டார வேலையில் ட்ரிஸுடன் கூடவே யென்னியும் சென்றார். இப்போது அவர்கள் பெத்தேலில் வாலண்டியர்களாக சேவை செய்கிறார்கள்; ட்ரிஸ் அங்குள்ள கிளை அலுவலக குழுவின் அங்கத்தினராக சேவை செய்கிறார்.
பணியிலிருந்து விருப்ப ஓய்வு
ட்ரிஸ், யென்னியைப் போலவே ஆட்டோவும் அவரது மனைவி ஜூடியும் தங்கள் இரண்டு கண்மணிகளை பெற்றெடுப்பதற்கு முன்பு பயனியர் சேவை செய்து வந்தார்கள். ஜூடியின் வயிற்றில் முதல் பிள்ளை உண்டானதுமே, ஆட்டோ ஒரு டீச்சர் வேலையை தேடிக்கொண்டார்.
பிள்ளைகள் வளர்ந்து வந்த சமயத்தில், ஆட்டோவும் ஜூடியும் பயனியர்களை அடிக்கடி விருந்துக்கு அழைப்பது வழக்கம்; முழுநேர ஊழியர்கள் அனுபவிக்கும் சந்தோஷத்தை தங்களுடைய பிள்ளைகள் பார்க்கட்டும் என்பதற்காக அவ்வாறு அழைத்தனர். அதன் விளைவாக, அவர்களுடைய மூத்த மகள் பயனியர் அணியில் சேர்ந்தார். பிற்பாடு, கிலியட் ஸ்கூலிலும் கலந்துகொண்டார். இப்போது அவருடைய கணவரோடு சேர்ந்து ஆப்பிரிக்க தேசத்தில் மிஷனரியாக சேவை செய்கிறார். அவர்களுடைய இளைய மகள் 1987-ல் பயனியர் சேவையை ஆரம்பித்தார், ஜூடியும் மகளோடு பயனியர் சேவையில் சேர்ந்து கொண்டார்.
சூழ்நிலைகள் மாறியதால் ஆட்டோவுக்கு ஸ்கூலில் கொஞ்ச நேரம் வேலை பார்த்தாலே போதுமானதாக இருந்தது; மீந்திருந்த நேரத்தில் பயனியர் சேவையில் ஈடுபட்டார். கடைசியில் தன் வேலையே வேண்டாம் என்று விட்டுவிட்டார். இன்று, அவர் பயணக் கண்காணியாக வேலை செய்கிறார். டீச்சரான அவர், தன் போதனா திறமையை ஆவிக்குரிய விதமாக சபைகளை பலப்படுத்துவதற்கு பயன்படுத்துகிறார்.
உலகப்பிரகாரமான வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவோருக்கு ஆட்டோ என்ன ஆலோசனை கொடுக்கிறார்? “நீங்கள் ஓய்வு பெறும்போது ஓரிரு வருடங்களுக்கு எதிலும் ஈடுபடாமல் சும்மா இருக்கலாம் என்று முடிவு செய்யாதீர்கள். அது அப்படியே பழக்கமாகிவிடும். சீக்கிரத்தில் பயனியர் வேலையைப் பற்றி சுத்தமாக மறந்தேபோய் விடுவீர்கள். அதற்கு பதிலாக சபை மற்றும் ஊழிய வேலைகளில் சுறுசுறுப்புடன் உடனடியாக ஈடுபட துவங்குங்கள்.”
வாழ்க்கை அனுபவத்தை ஞானமாக பயன்படுத்துதல்
பம், யான், ட்ரிஸ், ஆட்டோ ஆகிய சகோதரர்களுக்கு இளமையின் துடிப்பும் சக்தியும் இப்போது இல்லை என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் முதிர்ச்சியிலும், அனுபவத்திலும், ஞானத்திலும் சிகரமாக விளங்குகிறார்கள். (நீதிமொழிகள் 20:29) ஒரு தகப்பனின் நிலை என்ன என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள், தங்கள் மனைவிமாருடன் வேலை செய்வதன் மூலம் ஒரு தாய்க்கு என்னென்ன கடமைகள் இருக்கின்றன என்பதையும் அறிந்திருக்கிறார்கள். தங்களுடைய மனைவிமாருடன் சேர்ந்து குடும்ப பிரச்சினைகளை சமாளித்திருக்கிறார்கள், பிள்ளைகளுக்கு தேவராஜ்ய இலக்குகளை முன்வைத்திருக்கிறார்கள். “ஒரு வட்டார கண்காணியாக குடும்ப விவகாரங்களைக் குறித்து ஆலோசனை கொடுப்பதற்கு, குடும்பஸ்தனாக எனக்கிருந்த அனுபவம்தான் கைகொடுத்தது” என ஆட்டோ கூறுகிறார். ட்ரிஸ், பல இளைஞர்கள் வேலை செய்யும் பெத்தேல் குடும்பத்திற்கு ஒரு மதிப்புள்ள சொத்தாக திகழ்கிறார். அதற்கு காரணம், ஓர் அப்பாவாக இருந்ததால் அவருக்குக் கிடைத்த அனுபவமே.
ஆம், சபைகளின் பலதரப்பட்ட தேவைகளை கவனிப்பதற்கு தங்களுடைய சொந்த அனுபவம் அந்த சகோதரர்களுக்கு கைகொடுக்கிறது. உண்மையில், அவர்களுடைய சொந்த அனுபவமே அவர்கள் பயன்படுத்திய ஏதுக்களை கூர்மைப்படுத்தியிருக்கிறது; அதனால் தங்கள் சக்தியை சிறந்த நன்மைகளைப் பெறும் வழியில் பயன்படுத்துகிறார்கள். (பிரசங்கி 10:10) சொல்லப்போனால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், சரீர பலமுள்ள ஆனால் அனுபவத்தில் குறைவுபட்ட மற்றவர்களைவிட பெரும்பாலும் அதிகத்தை அவர்களால் செய்ய முடிகிறது.
அந்த சகோதரர்களும் அவர்களுடைய மனைவிமாரும், யெகோவாவின் ஜனங்கள் மத்தியிலுள்ள இளைஞர்களுக்கு மாதிரிகளாக திகழ்கிறார்கள். இவர்களைப் போன்ற தம்பதியினர் அனுபவித்த பலவித சவால்களும் ஆசீர்வாதங்களும் நம் பிரசுரங்களில் வெளிவந்துள்ளன; அவற்றை இளைஞர்கள் பார்க்கிறார்கள். முதிர் வயதானபோதிலும் கடினமான ஒரு நியமிப்பைக் கேட்டு வாங்கிக்கொண்ட காலேப்பை போன்ற அதே மனநிலையை வெளிப்படுத்தும் ஆண்களையும் பெண்களையும் காண்பது உற்சாகத்தை அளிக்கிறது.—யோசுவா 14:10-12.
அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தம்பதிகளின் விசுவாசத்தையும் செயல்களையும் உங்களால் பின்பற்ற முடியுமா? சத்தியமே அவர்களுடைய வாழ்க்கையின் மையமாக இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பயனியர் சேவை செய்யும் வாஞ்சையை அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்த்தார்கள். “யெகோவா மீதும் அவருடைய அமைப்பு மீதும் அன்பு காட்டுவதில் மாதிரிகளாக இருப்பதன் மூலமும், சிறந்த கூட்டுறவுக்காக ஏற்பாடுகள் செய்வதன் மூலமும், பிள்ளைகள் தங்களுடைய சொந்தக் காலில் நிற்பதற்கு கற்றுக்கொடுப்பதன் மூலமும்” அவர்கள் இதை செய்ததாக யான் குறிப்பிடுகிறார். வேலையிலும் விளையாட்டிலும்கூட குடும்பமாக ஈடுபட்டு மகிழ்ந்தார்கள். “விடுமுறை சமயங்களில் எப்போதுமே காலையில் குடும்பமாக பிரசங்க வேலைக்கு சென்றோம், மதியான வேளையில் நாங்கள் ஒன்றாக பொழுதுபோக்குகளில் ஈடுபட்டோம்” என பம் சொல்கிறார்.
அதோடு, இந்த கிறிஸ்தவர்கள் எதையும் முன்கூட்டியே திட்டமிட்டனர்; அதனால்தான் சூழ்நிலைகள் மாறியபோது அந்தப் புதிய சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொள்வதற்கு தயாராக இருந்தனர். அவர்கள் இலக்குகளை வைத்ததோடு, அதன் சம்பந்தமாக தீர்மானங்களையும் எடுத்ததால், இலக்குகளை வெகு சீக்கிரத்தில் அடைய முடிந்தது. அவர்கள் உலகப்பிரகாரமான வேலையில் குறைந்தளவு நேரம் செலவிட வழிகளைத் தேடினர், குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தவும் மனமுள்ளவர்களாக இருந்தனர். (பிலிப்பியர் 1:10, NW) மனைவிமார் அவர்களுடைய கணவர்களுக்கு முழு ஆதரவையும் கொடுத்தனர். “பெரிதும் அநுகூலமுமான கதவு”க்குள் பிரவேசிக்க வேண்டும் என்ற பலமான ஆசை கணவன் மனைவியாக அவர்கள் இரு சாராருக்குமே இருந்தது; அதன் பலனாக யெகோவாவிடமிருந்து அபரிமிதமான ஆசீர்வாதங்களை அனுபவிக்கின்றனர்.—1 கொரிந்தியர் 16:9; நீதிமொழிகள் 10:22.
ஊழியத்தில் அவ்வாறு அதிகமாக ஈடுபட உங்களுக்கும் ஆசை இருக்கிறதா? அப்படியானால், மாறிவரும் சூழ்நிலைகளை ஞானமாக பயன்படுத்துவதே அதற்கு முக்கிய வழியாக இருக்கலாம்.
[பக்கம் 20-ன் படம்]
மாநாட்டு மன்றத்தை கவனிக்கும் பம்மும் ஆனியும்
[பக்கம் 20-ன் படம்]
பிரசங்க வேலையில் யானும் வாட்டும்
[பக்கம் 21-ன் படம்]
பெத்தேல் சேவையில் ட்ரிஸும் யென்னியும்
[பக்கம் 21-ன் படம்]
அடுத்த சபையை சந்திக்க தயாராகும் ஆட்டோவும் ஜூடியும்