“வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்” மகிழ்ச்சிமிக்க மாநாடு
ஒழுக்கம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் காணப்படும் குழப்பங்கள் உலகையே உலுக்குகின்றன. இந்தக் கொந்தளிப்புகளின் மத்தியிலும் யெகோவாவின் சாட்சிகள் “வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்” என்ற தலைப்பில் நடைபெற்ற மூன்று நாள் மாவட்ட மாநாடுகளுக்காக அமைதலுடன் கூடிவந்தார்கள். மே 2002 முதற்கொண்டு இந்த மாநாடுகள் உலகெங்கும் நடைபெற்றன.
இந்த மாநாடுகள் உண்மையிலேயே மகிழ்ச்சியை அள்ளித் தந்தன. பைபிள் அடிப்படையில் அமைந்த, உற்சாகத்தை வாரி வழங்கிய இந்நிகழ்ச்சிகளை சுருக்கமாக கலந்தாராய்வோம்.
முதலாம் நாள் —இயேசுவின் வைராக்கியத்தை வலியுறுத்தியது
மாநாட்டின் முதலாம் நாளுக்குரிய பொருள் “நமது கர்த்தராகிய இயேசுவின் வைராக்கியத்தைப் பின்பற்றுங்கள்” என்பதே. (யோவான் 2:17) “ராஜ்யத்தை அறிவிப்போராக ஒன்றுகூடி வருவதில் களிகூருங்கள்” என்ற பேச்சு கொடுக்கப்பட்டது; அது, கடவுளுடைய மக்களின் மாநாடுகளில் மகுடமாக திகழும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளுமாறு வருகை தந்தோருக்கு அன்புடன் அழைப்பு விடுத்தது. (உபாகமம் 16:15) அந்தப் பேச்சிற்குப் பின்பு நற்செய்தியை வைராக்கியத்துடன் பிரசங்கிப்போர் அளித்த பேட்டிகள் இடம்பெற்றன.
“யெகோவாவில் மிகுந்த மனமகிழ்ச்சியாய் இருங்கள்” என்ற பேச்சு சங்கீதம் 37:1-11 வரையான வசனங்களை தனித்தனியே கலந்தாலோசித்தது. துன்மார்க்கன் வெற்றி பெறுவதைப் போல் தோன்றுவதைப் பார்த்து நாம் ‘எரிச்சலடையாதிருக்கும்படி’ தூண்டுவித்தது. பொல்லாதவர்கள் நம்மைப் பற்றி தவறாக பேசினாலும் உண்மையில் விசுவாசமுள்ள மக்கள் யாரென உரிய நேரத்தில் யெகோவா தெளிவுபடுத்துவார். “நன்றியுணர்வை காட்டுங்கள்” என்ற பேச்சு கடவுளுக்கு நம் நன்றியை காட்டும் விதத்தை கலந்தாலோசித்தது. கிறிஸ்தவர்கள் அனைவரும் யெகோவாவுக்கு ‘ஸ்தோத்திர பலியை’ செலுத்த வேண்டும். (எபிரெயர் 13:15) ஆனால், யெகோவாவின் சேவைக்கென நாம் எந்தளவுக்கு நேரம் ஒதுக்குகிறோம் என்பது நம் போற்றுதலையும் சூழ்நிலைமைகளையும் பொறுத்திருக்கிறது.
“வைராக்கியத்தால் தூண்டப்பட்டு ராஜ்யத்தை அறிவிப்போர்” என்பதே முக்கிய பேச்சின் தலைப்பு. இயேசு கிறிஸ்து வைராக்கியத்திற்கு நிகரற்ற முன்மாதிரியாக திகழ்வதை அது சுட்டிக் காட்டியது. பரலோக ராஜ்யம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்ட பிறகு அந்த நற்செய்தியை அறிவிக்க உண்மை கிறிஸ்தவர்களுக்கு வைராக்கியம் தேவைப்பட்டது. அ.ஐ.மா., ஒஹாயோவிலுள்ள சீடர் பாயின்ட்டில் 1922-ல் நடைபெற்ற மாநாட்டைப் பற்றி பேச்சாளர் குறிப்பிட்ட பின்னர், “ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள்” என்ற வரலாற்று சிறப்புமிக்க அந்த அழைப்பை நமக்கு நினைவூட்டினார்! காலப்போக்கில் ராஜ்யம் சம்பந்தப்பட்ட அருமையான சத்தியங்களை சகல ஜனங்களுக்கும் அறிவிப்பதற்கு கடவுளுடைய உண்மை ஊழியர்களின் வைராக்கியமே அவர்களைத் தூண்டுவித்தது.
“யெகோவா நம்மோடு இருப்பதை அறிந்திருப்பதால் பயப்படாதிருங்கள்” என்ற தலைப்பில் முதலாம் நாள் பிற்பகல் கொடுக்கப்பட்ட பேச்சு கடவுளுடைய மக்கள் சாத்தானின் விசேஷித்த குறியிலக்காக இருப்பதை சுட்டிக்காட்டியது. எனினும் எத்தகைய எதிர்ப்புகளை நாம் சந்தித்தாலும், விசுவாசத்திற்கு முன்மாதிரியாக திகழும் பைபிள் உதாரணங்களையும் நவீன கால உதாரணங்களையும் குறித்து சிந்திப்பது, பயமின்றி சோதனைகளையும் பரீட்சைகளையும் எதிர்ப்பட நமக்குத் தைரியத்தை தருகிறது.—ஏசாயா 41:10.
“மீகா தீர்க்கதரிசனம் யெகோவாவின் பெயரில் நடக்க நம்மை பலப்படுத்துகிறது” என்ற தலைப்பில் மூன்று பேர் கொடுத்த தொடர்பேச்சு, நிகழ்ச்சியில் அடுத்ததாக இடம்பெற்றது. முதலாம் பேச்சாளர், மீகாவின் காலத்தில் நிலவிய ஒழுக்க சீர்குலைவு, மத சம்பந்தப்பட்ட விசுவாச துரோகம், பொருளாசை ஆகியவற்றை நம்முடைய நாளில் நடப்பவற்றோடு ஒப்பிட்டுப் பேசினார். “கீழ்ப்படிதலுள்ள இருதயத்துடன் நம் நடத்தை பரிசுத்தமாகவும், நம் வாழ்க்கை தேவபக்தியுள்ள செயல்களால் நிறைந்ததாகவும் இருக்கிறதென உறுதிப்படுத்திக் கொண்டு, யெகோவாவின் நாள் நிச்சயமாய் வரும் என்பதை மறக்காமல் இருக்கையில், நம் எதிர்கால நம்பிக்கை வீண்போகாது” என அவர் குறிப்பிட்டார்.—2 பேதுரு 3:11, 12.
யூதாவின் தலைவர்களை மீகா கண்டனம் செய்ததை அந்தத் தொடர்பேச்சின் இரண்டாம் பேச்சாளர் எடுத்துரைத்தார். அவர்கள் ஏழை எளியவர்களையும் கேட்க நாதியில்லாதவர்களையும் சுரண்டிப் பிழைத்தார்கள். எனினும் உண்மை வணக்கமே வெற்றி சிறக்கும் என்பதையும் மீகா முன்னறிவித்தார். (மீகா 4:1-5) யெகோவாவின் பரிசுத்த ஆவியால் பலப்படுத்தப்பட்டவர்களாக, புத்துயிரளிக்கும் இந்த நம்பிக்கையின் செய்தியை அறிவிக்க நாம் தீர்மானமாயிருக்கிறோம். ஆனால் சுகவீனமோ வேறு ஏதாவது குறைபாடோ நம்மை அதிகம் செய்யவிடாமல் தடுப்பதாக உணருகையில் நமக்கு எப்படிப்பட்ட மனநிலை தேவை? “யெகோவா நம்மிடம் கேட்பவை நியாயமானவை, செய்ய முடிந்தவை” என மூன்றாம் பேச்சாளர் சொன்னார். பின்னர் அவர் மீகா 6:8-லுள்ள பல்வேறு அம்சங்களைக் கலந்தாலோசித்தார். அந்த வசனம் சொல்வதாவது: “நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.”
உலகின் ஒழுக்க சீர்குலைவு கிறிஸ்தவர்களையும் பாதிக்க வாய்ப்பிருப்பதால், “உங்கள் இருதயத்தைப் பாதுகாப்பதன்மூலம் ஒழுக்க தூய்மையைக் காத்துக்கொள்ளுங்கள்” என்ற பேச்சிலிருந்து நாம் அனைவருமே பயனடைந்தோம். உதாரணமாக, ஒழுக்க ரீதியில் தூய்மையுள்ளவர்களாக இருப்பது மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு உதவும். முறைகேடான பாலியல் நடத்தையில் ஈடுபடுவதைப் பற்றி கிறிஸ்தவர்களாகிய நாம் மனதளவிலும் நினைக்கக் கூடாது.—1 கொரிந்தியர் 6:18.
“ஏமாற்று வேலைக்கு எதிராக காத்துக்கொள்ளுங்கள்” என்ற பேச்சில், திரித்துக் கூறப்படும் உண்மைகளையும், அரைகுறை உண்மைகளையும், அப்பட்டமான பொய்களையும் விசுவாச துரோகிகள் பரப்புகையில் அவற்றை விஷம் போல் கருதுவது ஞானமான செயல் என சொல்லப்பட்டது. (கொலோசெயர் 2:8) அதைப் போலவே, எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் நம் மாம்சப்பிரகாரமான ஆசைகளை திருப்தி செய்துகொள்ளலாம் என்று நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது எனவும் அது எச்சரிப்பூட்டியது.
“ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள்” என்பதே முதலாம் நாளின் கடைசி பேச்சின் தலைப்பு. உலக நிலைமைகள் நாளுக்கு நாள் படுமோசமாகி வருகையில் யெகோவா தம்முடைய நீதியுள்ள புதிய உலகை சீக்கிரத்தில் கொண்டு வருவார் என்பதை அறிவது எத்தனை ஆறுதலளிப்பதாய் உள்ளது! அவ்வுலகில் யார் குடியிருப்பார்கள்? யெகோவாவை வணங்குகிறவர்கள் மட்டுமே குடியிருப்பார்கள். இந்த இலக்கை அடைவதில் நமக்கும், நம் பிள்ளைகளுக்கும், நம் பைபிள் மாணாக்கர்களுக்கும் உதவியளிக்க ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் என்ற புதிய புத்தகத்தை பேச்சாளர் வெளியிட்டார். அதைப் பெற்றுக்கொண்ட போது எந்தளவுக்கு குதூகலித்தோம்!
இரண்டாம் நாள் —நன்மை செய்வதில் வைராக்கியமாக இருப்பதை வலியுறுத்தியது
“நன்மை செய்வதில் வைராக்கியமாக இருங்கள்” என்பதே மாநாட்டின் இரண்டாம் நாளின் பொருள். (1 பேதுரு 3:13) முதலாவது பேச்சாளர் அந்நாளுக்குரிய தினவசனத்தை கலந்தாலோசித்தார். தவறாமல் பயனுள்ள விதத்தில் தினவசனத்தை சிந்திப்பது நாம் இன்னுமதிக வைராக்கியத்தோடிருக்க உதவுமென கோடிட்டுக் காட்டினார்.
அதன் பின்னர், “தங்கள் ஊழியத்தை மேன்மைப்படுத்தும் ராஜ்ய அறிவிப்பாளர்கள்” என்ற தொடர்பேச்சு கொடுக்கப்பட்டது. கடவுளுடைய வார்த்தையை சரியாகக் கையாளுவதை முதல் பேச்சு வலியுறுத்தியது. (2 தீமோத்தேயு 2:15, NW) திறம்பட்ட விதத்தில் பைபிளைப் பயன்படுத்துகையில் அது மக்களுடைய வாழ்க்கையில் ‘வல்லமை’ செலுத்த வழி திறக்கிறது. (எபிரெயர் 4:12) பைபிளிடம் ஜனங்களுடைய கவனத்தைத் திருப்பி, நம்ப வைக்கும் விதத்தில் நியாயங்காட்டிப் பேச வேண்டும். மேலும், ஆர்வம் காட்டுபவர்களை மீண்டும் மீண்டும் போய் சந்திக்கும்படி அந்த தொடர்பேச்சின் இரண்டாம் பகுதி தூண்டுவித்தது. (1 கொரிந்தியர் 3:6) ஆர்வம் காட்டிய அனைவரையுமே உடனடியாக போய் சந்திப்பதற்கு தயாரிப்பும் தைரியமும் தேவைப்படுகிறது. நாம் ஊழியத்தில் சந்திக்கும் ஒவ்வொருவரையும் வருங்கால சீஷராக கருதும்படி மூன்றாவது பேச்சு சிபாரிசு செய்தது; முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பு ஏற்பாட்டை பற்றி சொல்வது அவர்கள் சீஷர்களாவதற்கு வழியைத் திறக்கலாம்; இப்படி உதவுவது நமக்கு மகிழ்ச்சியைத் தரும் என அப்பேச்சு காட்டியது.
“ஏன் ‘இடைவிடாமல் ஜெபம் பண்ண வேண்டும்’” என்பது அடுத்த பேச்சின் தலைப்பாகும். வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கடவுளுடைய வழிநடத்துதலை நாடும்படி கிறிஸ்தவர்களுக்குப் பைபிள் புத்திசொல்கிறது. தனிப்பட்ட ஜெபத்திற்கு நாம் நேரத்தை ஒதுக்குவது அவசியம். மேலும், யெகோவாவின் பதிலை நாம் தெளிவாக அறிந்துகொள்வதற்கு முன்பு, அதற்காக தொடர்ந்து ஜெபிக்க அவர் நம்மை கொஞ்ச காலத்திற்கு அனுமதிக்கலாம்; எனவே ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருப்பது அவசியம்.—யாக்கோபு 4:8.
“ஆவிக்குரிய உரையாடல் கட்டியெழுப்புகிறது” என்ற பேச்சு, நமக்கும் மற்றவர்களுக்கும் பயனளிக்கும் விதத்தில் பேச்சுத் திறன் எனும் பரிசை பயன்படுத்தும்படி நம்மைத் தூண்டுவித்தது. (பிலிப்பியர் 4:8) அதற்காக, கணவனும் மனைவியும் பிள்ளைகளும் தினமும் கொஞ்சமாவது ஆவிக்குரிய விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். அதற்காக குடும்பங்கள் தினமும் ஒருமுறையாவது சேர்ந்து சாப்பிட வேண்டும், அது உற்சாகமான உரையாடலுக்கு வாய்ப்பளிக்கிறது.
“ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டுதலும் எப்படி இரட்சிப்புக்கு வழிநடத்துகின்றன” என்ற இருதயத்தைத் தொடும் பேச்சுடன் காலை நிகழ்ச்சி முடிவடைந்தது. முழுக்காட்டுதல் பெற வந்திருந்தவர்கள் அறிவைப் பெற்று, விசுவாசித்து, மனந்திரும்பி, தவறான காரியங்களை விட்டு விலகி குணப்பட்டு, தங்களைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருந்தாலும், முழுக்காட்டுதலுக்குப் பிறகு அவர்கள் தொடர்ந்து ஆவிக்குரிய விதத்தில் வளரவும், தங்கள் வைராக்கியத்தையும் நல்நடக்கையையும் காத்துக்கொள்ளவும் வேண்டுமென்று பேச்சாளர் குறிப்பிட்டார்.—பிலிப்பியர் 2:14, 15.
“அடக்கமாயிருங்கள், கண்ணை தெளிவாக வைத்திருங்கள்” என்ற தலைப்பிலிருந்த பிற்பகல் பேச்சில் இரண்டு முக்கிய குறிப்புகள் வலியுறுத்தப்பட்டன. நம் வரையறைகளையும் கடவுளுக்கு முன்பாக நம் நிலையையும் பற்றி எதார்த்தமாய் உணர்ந்து கொள்வதே அடக்கமாக இருப்பதன் அர்த்தம். நம் கண்களை ‘தெளிவாக வைத்துக் கொள்ள,’ அதாவது பொருள் சம்பந்தப்பட்ட காரியங்களிடம் அல்ல, ஆனால் கடவுளுடைய ராஜ்யத்திடம் கவனத்தை ஒருமுகப்படுத்த அடக்கம் நமக்கு உதவுகிறது. இவ்வாறு செய்கையில் நாம் கவலைப்பட மாட்டோம், ஏனெனில் நம் தேவைகளை யெகோவா பார்த்துக்கொள்வார்.—மத்தேயு 6:22-24, 33, 34.
‘துயர வேளையில் யெகோவாவை முழுமையாக நம்புவது’ ஏன் அவசியம் என்பதை அடுத்த பேச்சாளர் காட்டினார். சொந்த பலவீனங்கள், பண சம்பந்தப்பட்ட அல்லது உடல்நல பிரச்சினைகள் போன்றவற்றை நாம் எவ்வாறு வெற்றிகரமாக சமாளிக்கலாம்? நடைமுறை ஞானத்தை தரும்படி யெகோவாவிடம் கேட்கலாம், மற்றவர்களின் உதவியை நாடலாம். பயத்திற்கோ அவநம்பிக்கைக்கோ இடங்கொடுக்காமல் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலம் அவர்மீதுள்ள நம் நம்பிக்கையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.—ரோமர் 8:35-39.
மாநாட்டின் கடைசி தொடர்பேச்சின் தலைப்பு “பல்வேறு சோதனைகளால் நம் விசுவாசத்தின் தரம் பரீட்சிக்கப்படுதல்” என்பது. அதன் முதல் பேச்சு, உண்மை கிறிஸ்தவர்கள் அனைவரும் துன்புறுத்துதலை எதிர்ப்படுகிறார்கள் என நமக்கு நினைவூட்டியது. இது மற்றவர்களுக்கு சாட்சி அளிக்கிறது, நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது, நம் உண்மைத்தன்மையை கடவுளுக்கு வெளிக்காட்ட நமக்கு வாய்ப்பளிக்கிறது. தேவையின்றி நம் உயிரை அபாயத்துக்கு உட்படுத்தாவிட்டாலும், துன்புறுத்துதலை தவிர்ப்பதற்காக நாம் ஒருபோதும் வேதப்பூர்வமற்ற வழிகளை நாடுவதில்லை.—1 பேதுரு 3:16.
இந்தத் தொடர்பேச்சின் இரண்டாவது பேச்சாளர் நடுநிலைமை பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் போர் ஒழிப்பு கோட்பாட்டாளர்களாக இல்லை, ஆனால் தங்கள் முதன்மையான பற்றுறுதி கடவுளுக்கே உரியது என்பதை அறிந்திருந்தார்கள். அதைப் போலவே இன்று யெகோவாவின் சாட்சிகள், ‘நீங்கள் உலகத்தாரல்ல’ என்ற நியமத்தை உறுதியாக பின்பற்றுகிறார்கள். (யோவான் 15:19) நாம் நடுநிலைமை வகிப்பதால் சோதனைகள் திடீரென தலைதூக்கலாம்; எனவே இது சம்பந்தப்பட்ட வழிகாட்டுக் குறிப்புகளை பைபிளிலிருந்து கலந்தாலோசிக்க குடும்பங்கள் நேரத்தை ஒதுக்க திட்டமிட வேண்டும். நம்மை கொல்ல வேண்டும் என்பது சாத்தானுடைய நோக்கம் அல்ல, ஆனால் நம்மீது பிரச்சினைகளைக் குவித்து நம்மை அவிசுவாசிகளாக மாற்ற வேண்டுமென்பதே அவனுடைய நோக்கமென இந்தத் தொடர்பேச்சின் மூன்றாவது பேச்சாளர் குறிப்பிட்டார். கேலிப் பேச்சு, ஒழுக்கக்கேட்டில் ஈடுபட வற்புறுத்துதல், மனவேதனை, சுகவீனங்கள் ஆகியவற்றை விசுவாசத்தோடு சகிப்பதன் மூலம் யெகோவாவுக்குத் துதி சேர்க்கிறோம்.
“யெகோவாவிடம் நெருங்கிச் செல்லுங்கள்” என்ற அன்பான அழைப்பே அந்த நாளின் முடிவான பேச்சின் தலைப்பு. யெகோவாவின் பிரதான பண்புகளைப் புரிந்துகொள்வது அவரிடம் நம்மை ஈர்க்கிறது. தம்முடைய ஜனங்களை பாதுகாக்க, முக்கியமாக ஆவிக்குரிய விதத்தில் பாதுகாக்க, அவர் தம்முடைய எல்லையில்லா வல்லமையைப் பயன்படுத்துகிறார். அவருடைய நீதி கடுமையானதல்ல, ஆனால் நீதியான காரியங்களை செய்யும் எவருக்கும் முடிவில்லா வாழ்க்கையை அளிக்க அந்த நீதியே அவரைத் தூண்டுவிக்கிறது. பைபிளை எழுத அபூரண மனிதர்களை கடவுள் பயன்படுத்திய விதம் அவருடைய ஞானத்துக்கு அத்தாட்சி அளிக்கிறது. வெகுவாய் கவர்ந்திழுக்கும் பண்பு அவருடைய அன்பு; இயேசு கிறிஸ்துவின் மூலம் மனிதர்கள் இரட்சிப்பை பெறுவதற்கு வழியை ஏற்படுத்தும்படி அன்பே அவரைத் தூண்டுவித்தது. (யோவான் 3:16) யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற தலைப்புடைய, மனதிற்கு இதமளிக்கும் புதிய புத்தகத்தின் வெளியீட்டை அறிவித்து பேச்சாளர் அப்பேச்சை நிறைவு செய்தார்.
மூன்றாம் நாள்—நற்கிரியைகளை செய்வதற்கான வைராக்கியத்தின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தியது
“நற்கிரியைகளை செய்வதில் வைராக்கியமான ஜனம்” என்பதே மாநாட்டின் மூன்றாம் நாளுக்கான பொருள். (தீத்து 2:14) தினவசனத்தை ஒரு குடும்பம் கலந்தாலோசிப்பதோடு காலை நிகழ்ச்சி ஆரம்பமானது. “யெகோவாவில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா?” என்பதே அடுத்த பேச்சு. தேசங்கள் தங்கள் புத்தியிலும் பலத்திலுமே பெரிதும் சார்ந்திருப்பதால் தங்கள் நம்பிக்கையை தவறான இடத்தில் வைத்திருக்கின்றன. ஆனால் யெகோவாவின் ஊழியர்களோ, துயர காலங்களிலும் தைரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவரையே நம்பியிருக்கிறார்கள்.—சங்கீதம் 46:1-3, 7-11.
“இளைஞர்களே—யெகோவாவின் அமைப்போடு எதிர்காலத்திற்காக திட்டமிடுங்கள்” என்ற பேச்சு, இளைஞர்கள் எப்படி உண்மையிலேயே வாழ்க்கையில் மிகச் சிறந்ததை பெறலாம் என்ற கேள்விக்குப் பதிலளித்தது. அதிக பணம் சம்பாதிப்பது, பொருட்களை வாங்கிக் குவிப்பது, பெரிய அந்தஸ்தைப் பெறுவது ஆகியவற்றால் வாழ்க்கை சிறப்பாகி விடாது. வாலிப வயதிலேயே தம்மை நினைக்கும்படி இளைஞர்களுக்கு நம் சிருஷ்டிகர் அன்புடன் அழைப்பு விடுக்கிறார். இளம் வயதில் கிறிஸ்தவ ஊழியத்தில் மும்முரமாக ஈடுபட்ட சிலரை பேச்சாளர் பேட்டி கண்டார்; அதில் அவர்கள் அனுபவித்த சந்தோஷத்தை நம்மால் உணர முடிந்தது. இளைஞர்களே—வாழ்க்கையில் உங்கள் இலட்சியம் என்ன? என்ற புதிய துண்டுப்பிரதியைப் பெற்றுக்கொண்டது எத்தனை பயனளித்தது! யெகோவாவின் அமைப்பில் நித்திய எதிர்காலத்திற்கான அஸ்திவாரத்தை அமைக்க இளம் சாட்சிகளுக்கு உதவும் விதத்தில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
“துன்ப காலங்களில் உறுதியாக நிலைத்திருங்கள்” என்ற தலைப்பில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பைபிள் நாடகமே அடுத்து இடம்பெற்ற நிகழ்ச்சி. எரேமியாவின் நீண்ட கால ஊழியம், அவரது இளவயது முதல், அவர் வைராக்கியமாக தீர்க்கதரிசனம் உரைத்த எருசலேமின் அழிவு வரை சுருக்கமாக சித்தரித்துக் காட்டப்பட்டது. அந்த நியமிப்பை ஏற்றுக்கொள்ள தான் தகுதியற்றவரென அவர் உணர்ந்தார், ஆனால் எதிர்ப்பின் மத்தியிலும் அதை செவ்வனே செய்து முடித்தார், யெகோவா அவரை காப்பாற்றினார்.—எரேமியா 1:8, 18, 19.
நாடகத்திற்குப் பிறகு, “எரேமியாவை போலிருங்கள்—கடவுளுடைய வார்த்தையை தைரியமாய் அறிவியுங்கள்” என்ற பேச்சு கொடுக்கப்பட்டது. இன்றைய ராஜ்ய அறிவிப்பாளர்கள் பெரும்பாலும் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கும் தீங்கு விளைவிக்கும் பிரச்சாரத்திற்கும் ஆளாகிறார்கள். (சங்கீதம் 109:1-3) எனினும் எரேமியாவைப் போல் யெகோவாவின் வார்த்தையில் சந்தோஷத்தைக் கண்டடைகையில் சோர்வை சமாளிக்கலாம். நமக்கு விரோதமாகப் போரிடுகிறவர்கள் நம்மை வெல்ல முடியாது என்ற உறுதி நமக்கிருக்கிறது.
‘இந்த உலகத்தின் காட்சி கடந்துபோகிறதே’ என்ற பொதுப் பேச்சு உண்மையிலேயே காலத்துக்கேற்ற பேச்சு. குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நம் காலத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இத்தகைய நிலைமைகளுக்கு மத்தியில் “சமாதானமும் சவுக்கியமும்” என்ற குரலைக் கேட்கும்போது கடவுளுடைய பயங்கரமான நியாயத்தீர்ப்பின் நாள் சமீபித்து வருகிறதென பைபிள் முன்னறிவித்தது. (1 தெசலோனிக்கேயர் 5:3) இது, யுத்தம், குற்றச்செயல், வன்முறை, ஏன் வியாதியையும் நீக்கி அற்புதமான மாற்றங்களுக்கு வழியைத் திறக்கும். ஆகவே, இந்த உலகத்தை நம்புவதற்கு பதிலாக தேவ பக்தியை நாடுவதற்கும், பரிசுத்த நடக்கையைக் காத்துக்கொள்வதற்கும் நேரம் இதுவே.
அந்த வாரத்துக்குரிய காவற்கோபுர சுருக்கத்துக்குப் பின்பு “வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போராக நற்கிரியைகளில் பெருகுங்கள்” என்ற தலைப்பில் மாநாட்டின் முடிவான பேச்சு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி எப்படி நம்மை ஆவிக்குரிய விதமாக தூண்டி, யெகோவாவை சார்ந்திருக்கும்படி உற்சாகப்படுத்தியது என்று பேச்சாளர் குறிப்பிட்டார். முடிவாக, சுத்தத்தோடும், அன்போடும், வைராக்கியத்தோடும் ராஜ்யத்தை அறிவிப்போராக இருக்க நாம் தூண்டுவிக்கப்பட்டோம்.—1 பேதுரு 2:12.
“வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்” மாவட்ட மாநாட்டில் பெற்ற ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் குறித்து, நெகேமியாவின் நாட்களில் இருந்த யெகோவாவின் ஊழியர்களைப் போல் நிச்சயமாகவே உள்ளத்தில் மகிழ்ச்சி ததும்ப வீடு திரும்பினோம். (நெகேமியா 8:12) இந்த அருமையான மாநாடு உங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்து, வைராக்கியமான ராஜ்ய அறிவிப்பாளராக உறுதியுடன் நிலைப்பதற்கு திடதீர்மானம் எடுக்க செய்ததல்லவா?
[பக்கம் 23-ன் பெட்டி/படம்]
படிப்புக்குப் புதிய புத்தகம்!
மாநாட்டின் முதலாம் நாளின் முடிவில் ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்டபோது வந்திருந்தோர் அனைவரும் ஆனந்தமடைந்தனர். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தில் பைபிள் படிப்பை படித்து முடித்த நபர்களுடன் படிப்பதற்காக இப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது; ‘நித்திய ஜீவனைப் பெறுவதற்கு சரியான மனச்சாய்வுடையவர்களின்’ விசுவாசத்தை இது நிச்சயம் பலப்படுத்தும்.—அப்போஸ்தலர் 13:48, NW.
[படத்திற்கான நன்றி]
அட்டைப்படம்: U.S. Navy photo
[பக்கம் 24-ன் பெட்டி/படங்கள்]
கடவுளிடம் நெருங்கி வர உதவி
மாநாட்டின் இரண்டாம் நாளின் கடைசி பேச்சாளர் யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தக வெளியீட்டை அறிவித்தார். அந்தப் புத்தகத்தில் யெகோவாவின் முக்கிய பண்புகளான வல்லமை, நீதி, ஞானம், அன்பு ஆகியவற்றை விவரிக்கும் நான்கு பகுதிகள் உள்ளன. அந்த ஒவ்வொரு பகுதியிலும் ஓர் அதிகாரம் கடவுளுடைய பண்புகளை இயேசு கிறிஸ்து தெள்ளத் தெளிவாக வெளிக்காட்டிய விதத்திற்கு உதாரணங்களை அளிக்கிறது. நாமும் நம் பைபிள் மாணாக்கர்களும் யெகோவா தேவனுடன் நெருக்கமான, பலமான உறவை வளர்த்துக்கொள்வதற்கு உதவுவதே இப்புதிய புத்தகத்தின் பிரதான நோக்கமாகும்.
[பக்கம் 26-ன் பெட்டி/படங்கள்]
இளைஞர்களுக்கு ஆவிக்குரிய வழிநடத்துதல்
மாநாட்டின் மூன்றாம் நாளின் சிறப்பு அம்சம் இளைஞர்களே—வாழ்க்கையில் உங்கள் இலட்சியம் என்ன? என்ற விசேஷித்த துண்டுப்பிரதியின் வெளியீடாகும். தங்கள் எதிர்காலம் சம்பந்தமாக சரியான தீர்மானங்களை எடுக்க இளம் சாட்சிகளுக்கு உதவும் விதத்தில் இது தயாரிக்கப்பட்டுள்ளது; யெகோவாவின் சேவையில் நிரந்தரமான வாழ்க்கை பணியைத் தேர்ந்தெடுக்க இப்புதிய துண்டுப்பிரதி பைபிள்பூர்வ புத்திமதியைத் தருகிறது.